கைப்பிரதிகளை நன்கு பயன்படுத்துங்கள்
1 ராஜ்ய மன்ற விலாசத்தையும் கூட்டங்களின் சரியான நேரத்தையும் சமுதாயத்தில் வாழும் மக்களுக்கு அறிவிப்பதில் சபை கைப்பிரதிகள் மிகவும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரதியைக் கொடுப்பது நல்லது. இந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு சபையும் நிறைய கைப்பிரதிகளைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். கூட்டம் நடக்கும் இடத்தையோ கூட்ட நேரங்களையோ ஒரு சபை மாற்றப் போவதாக இருந்தால், புதிய கூட்ட நேரங்களை குறிப்பிடும் கைப்பிரதிகள் எப்போதும் கையில் இருக்கும்படிக்கு, மாற்றம் அமலுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய கைப்பிரதிகளுக்காக ஆர்டர் செய்ய வேண்டும். இதற்கு கைப்பிரதி விண்ணப்ப நமூனாவை உபயோகிக்க வேண்டும். கைப்பிரதிகள், 1,000-
க்கு 40.00 ரூபாய் என்ற விலைக்கு அனுப்பப்படுகின்றன; அவற்றை 1,000 என்ற கணக்கில் மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும். உங்களுக்கு கைப்பிரதி கிடைத்த பின்பு, அவற்றை எவ்வாறு மிக பிரயோஜனமான விதத்தில் உபயோகிக்கலாம்?
2 தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, சம்பாஷணையைத் துவங்குவதற்கு, ஒருவருக்குக் கைப்பிரதி ஒன்றைக் கொடுப்பதை பலன்தரத்தக்க முறையாக அநேக பிரஸ்தாபிகள் கண்டிருக்கின்றனர். கூட்டத்திற்கான அட்டவணையையோ அல்லது மறுபக்கத்திலுள்ள செய்தியையோ சுட்டிக்காட்டுவது, நம்முடைய வேலையையும் அதன் நோக்கத்தையும் குறித்து கலந்தாலோசிக்க வழியைத் திறந்து வைக்கிறது. பெற்றோர்கள், தங்கள் இளம் பிள்ளைகளை, வீடுகளில் கைப்பிரதியைக் கொடுக்கும்படி செய்வதன்மூலம் அவர்களையும் ஊழியத்தில் ஈடுபடுத்தலாம். கடிதம் எழுதுவதன்மூலம் சாட்சி பகரும் வேலையில் பங்கு கொள்ளும் பிரஸ்தாபிகள், தங்கள் கடிதத்தோடே ஒரு கைப்பிரதியையும் இணைத்து அனுப்புவதன் மூலம் அவரையும் கூட்டங்களுக்கு வரும்படி அழைக்கலாம். பூட்டிய வீடுகள் இருந்தால் கைப்பிரதிகளை விட்டுவரலாம்; ஆனால், கவனமாக யார் கண்ணிலும் படாமல் அவற்றை விட்டுவர முடிந்தால் அவ்வாறு செய்யலாம்.
3 நேர்மை இருதயமுள்ள மக்களை சத்தியத்தினிடமாக வழிநடத்துவதற்கு கைப்பிரதிகள் கருவிகளாக செயல்பட்டிருக்கின்றன. பைபிளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு பெண்ணின் நீண்ட கால ஆசையை நிறைவேற்ற ஒரு கைப்பிரதி உதவியதாக ஓர் அனுபவம் சொல்கிறது. அவர் ஓர் இரவு முழுவதும் கடவுளிடம் ஜெபித்த பிறகு, காலையில் ஒரு சாட்சி தம்பதியினர் அவருடைய வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினார். கதவு துளையின் வழியாக பார்த்தபின் தனக்குக் கதவைத் திறக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். கதவின் கீழாக ஒரு கைப்பிரதியை அந்தச் சாட்சிகள் உள்ளே தள்ளிவிட்டனர். “உங்கள் பைபிளை அறிந்துகொள்ளுங்கள்” என அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் அதைப் பார்த்ததும் கதவைத் திறந்தார். உடனடியாக ஒரு படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அவர் முழுக்காட்டப்பட்டார். கடவுளுடைய ஆவியின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுவிடாமல் நம்முடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுகையில், தவறாமல் கைப்பிரதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்வோமாக.—
பிப்ரவரி 1994, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 1-ஐக் காண்க.