“மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாட்டிற்கு உலகளாவிய விளம்பரம்
பிரஸ்தாபிகள் அனைவரும் விசேஷ கைப்பிரதியை விநியோகிப்பர்
1 இந்த ஆண்டிற்கான மாவட்ட மாநாடு சுமார் 155 தேசங்களில் நடைபெற இருக்கிறது; அதை விளம்பரப்படுத்துவதற்காக உலகெங்கும் விசேஷ கைப்பிரதி ஒன்று விநியோகிக்கப்படும். ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து ஆகிய நாடுகளில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின்போது நடத்தப்பட உள்ள விசேஷ மாநாட்டுக்கும் அவ்வாறே விளம்பரம் செய்யப்படும்.
2 அந்த மாநாடு, பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்போவதாகக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியைச் சிறப்பித்துக் காட்டும்; நாம் கடைசி நாட்களின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்துவருவதால், அந்த மாநாட்டில் சொல்லப்படும் செய்தி நல்மனமுள்ளவர்களின் இருதயத்தை மிகவும் கவரும். மேலும், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைக் குறித்து அவர்களைச் சிந்திக்க வைக்கும். ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிற அப்படிப்பட்ட செய்தியைக் கேட்கும் வாய்ப்பை கோடிக்கணக்கானவர்கள் பெற வேண்டும்; அதற்காக உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 98,000-க்கும் அதிகமான சபைகள் அந்த மாநாடுகளை விளம்பரப்படுத்தும்படி ஊக்குவிக்கப்படுகின்றன.
3 போதியளவு கைப்பிரதிகள் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்; பொதுவாக பிரஸ்தாபிகள் ஒவ்வொருவருக்கும் 15 பிரதிகள்வரை கொடுக்கப்படும். ஆனால் மாநாட்டு நகரிலுள்ள பிரஸ்தாபிகள் ஒவ்வொருவருக்கும் 30 பிரதிகள்வரை கொடுக்கப்படும். மீதமானவற்றை சபையிலுள்ள பயனியர்கள் விநியோகிப்பார்கள். மாநாடு துவங்குவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே கைப்பிரதிகளை அந்தந்த சபை பிரஸ்தாபிகள் விநியோகிக்க ஆரம்பிப்பார்கள். அப்படிச் செய்யும்போது, சபை பிராந்தியம் முழுவதிலும் விநியோகிக்க முடியாவிட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் அவற்றை விநியோகித்துவிட முடியும்.
4 மாநாடு நடைபெறும் தேதிகளையும் மாநாட்டு மன்ற விலாசத்தையும், ஸ்டாம்ப் குத்தியோ கையில் எழுதியோ பிரஸ்தாபிகள் கொடுக்கலாம்; அதற்கு இந்தக் கைப்பிரதியின் பின்பக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடியவரை, வீட்டுக்காரர்களிடம் இதை நேரடியாகக் கொடுக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது. வீட்டில் ஆட்கள் இல்லையென்றால், விவேகமாக கதவுக்குப் பக்கத்தில் ஒரு கைப்பிரதியை விட்டு வரலாம். மாநாட்டு நகரில் வசிக்காத பிரஸ்தாபிகள், இந்தக் கைப்பிரதியைக் கொடுத்து தங்கள் மறுசந்திப்பு ஆட்களையும் பைபிள் படிப்பு மாணாக்கர்களையும் அழைக்கலாம். அத்துடன், மாநாட்டிற்குப் பயணிக்கையிலும் இதைப் பயன்படுத்தலாம். அந்த மூன்று வாரங்களின்போது கைப்பிரதிகள் அனைத்தையும் கொடுத்துவிட ஊக்கமாக முயற்சி எடுக்க வேண்டும்.
5 “மீட்பு விரைவில்!” மாநாட்டை விளம்பரப்படுத்துவதற்கு உலகளவில் எடுக்கப்படும் விசேஷ முயற்சியின் பலனாக பிரமாண்டமான அளவில் சாட்சி கொடுக்கப்படுமென்று நாங்கள் உறுதியாய் நம்புகிறோம். இந்த உலகளாவிய விநியோகிப்பில் ஈடுபட நீங்கள் எடுக்கும் தனிப்பட்ட முயற்சியை யெகோவா அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக.