முகவரி பெற்று முன்பின் தெரியாதவர்களைப் பார்க்கச் சென்றதுண்டா?
தற்போது நீங்கள் ஒரு நபருக்கு பைபிள் படிப்பை நடத்திவருகிறீர்களென்றால், அந்த மாணாக்கருடைய நண்பர்கள், உறவினர்கள், பழக்கமானவர்கள் என யாருக்காவது பைபிளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறதா என்று அவரிடமே நீங்கள் கேட்டுப் பார்க்கலாம், அல்லவா? அப்போது அநேகருடைய பெயரையும் முகவரியையும் அவர் உங்களிடம் தரலாம். அந்த முகவரியில் அவர்களைப் போய்ப் பார்த்து பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லலாம்; அந்த மாணாக்கரின் பெயரைக்கூட (மாணாக்கர் அனுமதித்தால்) குறிப்பிடலாம். உதாரணமாக, “நாங்கள் நடத்திவரும் இலவச பைபிள் படிப்புத் திட்டத்தில் [மாணாக்கரின் பெயர்] கலந்துகொண்டு ஆர்வமாக பைபிளைப் படித்து வருகிறார்; உங்களுக்கும் அது பிரயோஜனமாக இருக்குமென்று அவர் நினைத்ததால் உங்களைச் சந்திக்குமாறு என்னிடம் சொன்னார்” என்று அறிமுகம் செய்துகொள்ளலாம்; பின்னர், படிப்பு நடத்தப்படும் முறையை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து சுருக்கமாகச் செய்து காட்டுங்கள்.
மாணாக்கர் ஒருவர் நன்கு முன்னேற்றம் செய்துவந்தால், ஆர்வமுள்ள அவருடைய நண்பர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும்கூட இந்த பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்வதற்கு அவரை ஊக்கப்படுத்தலாம். தன்னோடு பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும்படிகூட அவர்களை அவர் அழைக்கலாம். அது வசதிப்படவில்லையென்றால், நீங்கள் போய் அவர்களைச் சந்திப்பதற்கு அவர் ஏற்பாடு செய்யலாம். இப்படிச் செய்வது, தான் கற்றுவரும் விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லும்படி அந்த மாணாக்கருக்கு ஊக்கமளிக்கும்.
நீங்கள் மறுசந்திப்பு செய்துவரும் ஆட்களும்கூட இதுபோன்ற நபர்களின் முகவரிகளை உங்களுக்குத் தரலாம்; அவர்களே இன்னும் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாதபோதிலும் வேறு நபர்களுடைய முகவரிகளை அவர்கள் தரலாம். அத்தகையோரிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுக்கும்போதே, “இந்தப் புத்தகத்தை வாசிக்கப் பிரியப்படுகிற வேறு யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று நீங்கள் கேட்கலாம்.
மக்கள் நற்செய்தியைக் கேட்பதற்கும் அதை ஏற்றுக்கொள்வதற்கும் நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். ஏனெனில், காலம் குறுகியதாய் இருக்கிறது. இவ்வாறு, முகவரி பெற்று முன்பின் தெரியாதவர்களை நீங்கள் பார்க்கச் சென்றதுண்டா?