நடுவதும் நீர்ப்பாய்ச்சுவதும்—சீஷர்களை உண்டுபண்ணுவதற்கான படிகள்
1 “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார்.” (1 கொரி. 3:6) இவ்வாறு அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் சீஷர்களை உண்டுபண்ணும் வழிமுறையில் மூன்று அடிப்படை படிகளை அடையாளங் காட்டினார். முதல் இரண்டு படிகள், நடுவதும் நீர்ப்பாய்ச்சுவதும், ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட கடவுளுடைய ஊழியர்களின் மீது சார்ந்திருக்கும் ஒரு சிலாக்கியத்தையும் உத்தரவாதத்தையும் உட்படுத்துகிறது.
வெளிப்படையாகவும், வீட்டுக்கு வீடாகவும், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதையும், மற்ற வழிகளிலும் பிரசங்கிப்பதை இது தேவைப்படுத்துகிறது. இயேசு கட்டளையிட்ட எல்லா காரியங்களையும் கடைப்பிடிப்பதற்கு ஜனங்களுக்கு படிப்படியாக கற்பிப்பதையும் இது உட்படுத்துகிறது. (மத். 28:19, 20) இந்த இரண்டு படிகளில் பின்குறிப்பிடப்பட்டிருப்பதை, அக்கறை காண்பிப்பவர்கள் பேரில் மறுசந்திப்புகள் செய்வதன் மூலமும், பைபிள் கலந்தாலோசிப்புகளில் அவர்களை ஈடுபடுத்தி, அவர்களோடு பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலமும் மட்டுமே நிறைவேற்ற முடியும். நீங்கள் உங்களை ஓர் உண்மையான உடன் வேலையாளாக நிரூபிக்கிறீர்களா, சத்திய விதைகளை நடுவதன் மூலமும், அதன் பின் தேவையான நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் பண்படுத்துதலோடு பின்தொடர்வதன் மூலமும் யெகோவாவோடு ஒத்துழைக்கிறீர்களா?—1 கொரி. 3:9.
ஆற்றலையும் தேவையையும் கண்டுணருங்கள்
3 1990-ஆம் ஊழிய ஆண்டின் போது, இந்தியாவில் நாம் ஏறக்குறைய 4,14,000 புத்தகங்களையும், சிறுபுத்தகங்களையும் ஏறக்குறைய 8,94,000 பத்திரிகைகளையும் விநியோகித்தோம்! ஞாபகார்த்த தினத்தன்று 28,000-ற்கும் அதிகமான ஆட்களையும் நாம் கொண்டிருந்தோம், இது வருடத்துக்கு 9,725 என்ற சராசரி பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட அதிக உயர்ந்த எண்ணிக்கை. நம்முடைய வேலையில் நடுவது என்ற அம்சத்தில் பிரசுர விநியோகிப்பு முக்கியமான பாகத்தை வகிக்கிறது. இவ்வாறு விதைக்கப்பட்ட சத்திய விதைகள் புதிய சீஷர்களை உண்டுபண்ணுவதற்கான பேராற்றலைக் கொண்டிருக்கிறது, ஆனால் நாம் கடவுளின் உடன் வேலையாட்களாக, இந்த ஜனங்களிடம் மறுசந்திப்பு செய்து, பைபிள் பொருள்களில் அவர்களுடைய அக்கறையை வளர்க்க உந்தப்படுகிறோமா? இந்தியாவில் சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 0.4 பைபிள் படிப்புகளை கொண்டிருக்கின்றனர். வெறுமென சத்திய விதைகளை விதைக்கும் முதற்படிக்கு மேலாகச் சென்று படிப்படியாக முன்னேறிச் செல்லும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு ஒவ்வொரு பிரஸ்தாபியும் தன் சொந்த உத்தரவாதத்தை அதிக திருத்தமாக மதிப்பிட்டால், இந்தச் சராசரி அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சிலர் பல்வேறு குறைபாடுகளின் காரணமாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வீட்டு பைபிள் படிப்புகளை நடத்த முடியாமல் இருக்கலாம், ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைமைகளை விமர்சித்துப் பார்ப்பது நல்லது.
4 சில இடங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை காண்பது அக்கறையூட்டுவதாய் இருக்கிறது. சபைகள் பலனளிக்கும் பிராந்தியத்தை கொண்டிருக்கின்றன, மேலும் அவைகள் சராசரியாக ஒரு பிரஸ்தாபிக்கு ஒன்று முதல் இரண்டு பைபிள் படிப்புகள் என்று அறிக்கை செய்கின்றன. புதிய சீஷர்களில் அதிகரிப்பு, நடத்தப்படும் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையோடு சரிசமமாயிருக்கிறது. பிரஸ்தாபிகளின் சராசரி எண்ணிக்கையோடு, 1991 வருடாந்தர புத்தகத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ள பல்வேறு தேசங்களின் பைபிள் படிப்புகள் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதை காணலாம்.
5 பைபிள் படிப்பை நடத்துவதற்கு நம்முடைய நோக்கம் நாம் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்திக்கு பிரதிபலிக்கும் ஜனங்களிடமாக நமக்கிருக்கும் அன்பாக இருக்க வேண்டும். ஜனங்களுக்கான யெகோவாவின் அன்பான அக்கறையை நாம் உண்மை மனதோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர்களுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை போற்ற வேண்டும். (1 பேதுரு 2:2) சொல்லர்த்தமான செடிகள் வளருவதற்கு தண்ணீர் தேவைப்படுவது போல, ராஜ்ய செய்தியில் முதலில் அக்கறை காண்பிக்கும் ஜனங்கள், வீட்டு பைபிள் படிப்புகள் மூலமாக கடவுளுடைய அமைப்புக்கு ஒழுங்காக வழிநடத்தப்பட்டாலொழிய அவர்கள் வழக்கமாக கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பிக்க மாட்டார்கள்.
6 நம்முடைய பங்கில் கீழ்ப்படிதலும் இதில் வருகிறது. சத்தியத்தின் பக்கமாக இருப்பவர்கள் தம்முடைய குரலுக்கு செவிகொடுப்பர் என்று இயேசு சொன்னார். (யோவான் 18:37) அவர் தம் சீஷர்களை பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் கட்டளையிட்டார், அந்த வேலையை செய்து முடிப்பதற்கு அவர் அவர்களை ஆயத்தஞ் செய்தார். ஒரு போதகராக அவருடைய முதன்மையான உதாரணத்தின் மூலமும், ஜனங்களுக்கான அவருடைய ஆழ்ந்த அக்கறையின் மூலமும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாம் பின்பற்றுவதற்கு இயேசு மாதிரியை வைத்தார். (லூக். 6:40; யோவன் 13:13; 14:12) நம்முடைய முயற்சிகள் நமக்கும், நாம் கற்பிப்பவர்களின் இரட்சிப்புக்கும் உதவியளிக்கக்கூடும்.—1 தீமோ. 4:16.
பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான உதவிகள்
7 தன்னுடைய வேலையை பூரணமாக செய்து முடிக்க ஒரு திறமையான கலை தொழிலாளன் தன்னுடைய கையிருப்பில் இருக்கும் பல்வேறு வகையான கருவிகளிலிருந்து தன்னுடைய கருவிகளை தேர்ந்தெடுக்கிறான். போதகர்களாக, வித்தியாசமான பின்னணிகளையும், நோக்குநிலைகளையும் உடைய ஜனங்களின் இருதயத்தை எட்டுவதற்கு நமக்கு உதவ கருவிகளாக அமைக்கப்பட்டிருக்கும் புரோஷுர்கள் மற்றும் துண்டுப்பிரதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான பிரசுரங்களை நாம் கையிருப்பில் கொண்டிருக்கிறோம்.
8 பைபிள் கலந்தாலோசிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு துண்டுப்பிரதிகளையும் புரோஷுர்களையும் உபயோகித்து சில பிரஸ்தாபிகள் நல்ல விளைவுகளை அனுபவித்திருக்கின்றனர். உதாரணமாக, சமாதானமான ஒரு புதிய உலகில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதி, இந்த அதிசயமான நம்பிக்கையை விவரித்துக் கூறுவதற்கு 20-க்கும் மேற்பட்ட வித்தியாசமான வசனங்களை குறிப்பிடவோ அல்லது மேற்கோள் காட்டவோ செய்கிறது. கிளர்ச்சியூட்டும் அநேக பைபிள் கலந்தாலோசிப்புகளை வளர்ப்பதற்கு இந்த வசனங்கள் உபயோகிக்கப்படலாம். கண்ணைகவரும் விதத்திலும், எளிமையான விதத்திலும் இருக்கும் நம்முடைய புரோஷுர்கள், அடிப்படையான பைபிள் சத்தியங்களோடு ஜனங்களை அறிமுகமாக்கும், மேலுமதிகமாக சோதித்துப் பார்ப்பதற்கு அவர்களைத் தூண்டும்.
9 பார்வை இழந்தவர்கள் அல்லது குறைந்த கல்வியுடையவர்கள் யாராவது உங்களுக்கு தெரியுமா? பூமியில் வாழ்க்கையை என்றென்றுமாக மகிழ்வுடன் அனுபவியுங்கள்! புரோஷுரை உபயோகித்து அப்படிப்பட்ட ஒருவரோடு படிப்படியான பைபிள் கலந்தாலோசிப்பை நிலைநாட்ட நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? எதிர்காலத்துக்கான கடவுளுடைய வாக்குகளைப் பற்றி கற்றறிவதில் வீட்டுக்காரரை திறமையான விதத்தில் உட்படுத்தும் ஆரம்ப பாராக்களை உடைய “இதோ!” புரோஷுர் மற்றொரு சிறந்த கருவியாகும். 1982-ல் வெளியிடப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் நிச்சயமாகவே திறம்பட்டது, அப்போதிலிருந்து முழுக்காட்டப்பட்ட 17,00,000-ற்கும் அதிகமான ஆட்களில் பெரும் சதவிகிதத்தினருக்கு அது உதவி செய்திருக்கிறது.
அக்கறை காட்டுபவர்களிடமாக உத்தரவாதத்தோடு செயல்படுதல்
10 உங்களுடைய சபை பிரஸ்தாபி பதிவு அட்டையை எடுத்து பார்ப்பதை நீங்கள் பயனுள்ளதாக காண்பீர்கள். கடந்த 12 மாதங்களின் போது நீங்கள் அளித்த புத்தகங்கள், சிறு புத்தகங்கள் (புரோஷுர்கள் உட்பட) பத்திரிகைகளின் எண்ணிக்கையை குறித்துக் கொள்ளுங்கள். அந்த அளிப்புகள் அதோடு முடிந்துவிட்டதா? அல்லது நடுவது என்ற படியை நீங்கள் தாண்டிச் சென்றீர்களா? நம்முடைய பிரசுரங்களில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்கு போதுமான அளவு அக்கறை காண்பித்த நபர்களில், எத்தனை பேரை நீங்கள் உடனடியாக மறுபடியும் சந்தித்தீர்கள்? நீங்கள் விதைத்த விதை முளைத்திருக்கிறதா என்பதைக் காண நீங்கள் திரும்பி சென்றீர்களா? தேவையான தண்ணீரோடு தொடர்ந்து சென்று, பின்பு அதை வளர வைப்பதற்கு யெகோவாவிடம் ஜெபித்தீர்களா?—அப். 16:14 மற்றும் 2 தெச. 3:1-ஐயும் ஒப்பிடுங்கள்.
11 நீங்கள் திறமையற்றவர்களாக உணருவதால் ஒருவேளை நீங்கள் மறுசந்திப்புகள் செய்யாமலோ அல்லது ஒரு பைபிள் படிப்பு நடத்தாமலோ இருக்கலாம். இது திறமை இல்லாததன் காரணமாக இல்லாமல் அதிகமாக உங்களுடைய மனநிலையின் காரணமாகவே இருக்கலாம். போதிய அளவுக்கு ஆயத்தப்படுத்தாமலும் தகுதியாக்காமலும் யெகோவா தமது ஜனங்களை ஒரு வேலை செய்யும்படி வெளியே அனுப்பினதில்லை. அவருடைய பரிசுத்த வார்த்தை மற்றும் அமைப்பின் மூலம் “ஒவ்வொரு நற்கிரியையும்” செய்வதற்கு அவர் நம்மை தயாரிக்கிறார். (2 தீமோ. 3:16, 17, NW; 2 கொரி. 3:5, 6) பரிசுத்த ஆவி, அச்சடிக்கப்பட்ட பக்கம், வாய் மொழியாக போதனை, மேடையிலிருந்து நடிப்புகள், நமக்கு உதவி செய்ய தயாராயிருக்கும் திறமையான பக்தியுள்ள ஊழியர்களின் உயிருள்ள உதாரணங்கள் ஆகியவற்றின் மூலம், நமக்குத் தேவையானதை அவர் நமக்கு கொடுக்கிறார். ஒரு பைபிள் படிப்பை நடத்துவதற்கு உலகப்பிரகாரமான உயர்கல்வி நமக்குத் தேவையில்லை. யெகோவாவின் அமைப்பின் மூலமாய் கொடுக்கப்படும் உயர்தர ஆவிக்குரிய கல்விக்கு பிரதிபலிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.—அப். 4:13-ஐ ஒப்பிடுக.
12 நம் ராஜ்ய ஊழியம், தேவராஜ் ஊழியப்பள்ளி, ஊழியக் கூட்டங்கள் மேலும் போதனையின் மற்ற அம்சங்கள், ஆகியவற்றில் கொடுக்கப்பட்டிருப்பதை தனிப்பட்ட விதமாக பொருத்துவது அவசியமாயிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு ஒளிவுமறைவின்றி இவ்வாறு சொன்னார்: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது.” (எபி. 5:12) ஒரு தொழிலில் பல வருடங்களாக வேலை செய்பவர் தன்னுடைய கருவிகளை உபயோகிப்பதில் ஓரளவு திறமையைப் பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் உண்மையான அக்கறையை காண்பித்து, ஊக்கமான முயற்சி செய்யும் போது பைபிள் கலந்தாலோசிப்புகளை எவ்வாறு செய்வது என்பதை கற்றறிவதில் முன்னேற்றம் தெளிவாகத் தெரியும்.—நீதி. 12:24; 22:29.
13 ராஜ்ய செய்தியில் அக்கறை காண்பிப்பவர்களை திரும்பிச் சென்று சந்தித்து இன்னுமதிகமான பைபிள் பொருள்களை கலந்தாலோசிப்பதில் நேரமும் முயற்சியும் செலவழிக்கப்படுகிறது. ஆனால் நாம் சத்தியத்தில் இருப்பது, யெகோவாவின் அன்பு மற்றும் தகுதியற்ற தயவின் வெளிக்காட்டாயிருக்கிறது என்பதை நாம் போற்ற வேண்டும். சத்தியத்தை நமக்கு பல மணி நேரங்களாக பொறுமையுடன் கற்றுக்கொடுத்த யாரோ ஒருவர் மூலம் இது நமக்கு காண்பிக்கப்பட்டது. அதுபோலவே, தேவையான நேரத்தை வாங்குவதற்கு அன்பு நம்மை கட்டாயப்படுத்த வேண்டும், அதைச் சீஷர்களை உண்டுபண்ணும் அதிமுக்கியமான வேலைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.—2 கொரி. 5:14, 15; எபே. 5:15, 16.
14 மாலை நேர ஊழியத்துக்கு ஏற்பாடுகளைச் செய்ய அநேக சபைகள் சங்கத்தின் ஆலோசனையை கடைப்பிடித்திருக்கின்றன. அக்கறை காண்பித்தவர்களிடம் மறுசந்திப்புகளைச் செய்வதற்கு மாலை நேர ஆரம்ப மணிநேரங்கள் பொதுவாக ஒரு நல்ல நேரமாயிருக்கிறது. திறம்பட்ட மறுசந்திப்புகள் செய்வதற்கும், பைபிள் கலந்தாலோசிப்புகளை ஆரம்பிப்பதற்கும் சாட்சி கொடுத்த தனிப்பட்ட நபர்களைப் பற்றிய பொருத்தமான தகவலை உடைய ஒரு வீட்டுக்கு–வீடு பதிவுச்சீட்டு இன்றியமையாததாய் இருக்கிறது. இப்படிப்பட்ட பதிவுச்சீட்டுகளை ஒரு புத்தகத்திலோ அல்லது ஒரு பைபிளிலோ செருகி வைத்துவிட்டு, அவைகளை மறந்துவிடாதீர்கள். அநேக வாரங்களுக்கு பின்பு, நீங்கள் அந்தச் சுற்றுவட்டாரத்துக்கு வரும்வரை மறுசந்திப்பு செய்ய மறந்துவிட்டால், சாத்தானுடைய பிரதிநிதியால் சந்திக்கும்படி அவர் விடப்படுவார். அந்த நபரின் இருதயத்தில் விதைக்கப்பட்டிருப்பவற்றை அவர்கள் பறித்தெடுப்பதில் சந்தோஷப்படுவர். (லூக். 8:12) தாமதமின்றி திரும்பிச் செல்வதன் மூலம் நீங்கள் சாத்தானின் சூழ்ச்சிமுறைகளை குலைத்து விடுவீர்களா? உங்கள் உத்தரவாதத்தை உணர்ந்து உங்கள் சிலாக்கியத்தைப் போற்றுவீர்களேயானால், கூடுமானவரை தாமதமின்றி நீங்கள் மறுபடியும் போவீர்கள்.—1 கொரி. 9:16, 23.
ஒரு பைபிள் படிப்பை எவ்வாறு ஆரம்பிப்பது
15 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது கடினமான சிக்கலான செயற்படுமுறையை உட்படுத்துவதில்லை. அவர்களோடு ஒரு வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்கு உங்களுடைய நேரடியான அளிப்பை சில ஜனங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளலாம். என்றபோதிலும், அநேக பிரஸ்தாபிகள் படிப்பு என்று குறிப்பிடாமல், ஆனால் அதை அடைவதற்கு பைபிள் கலந்தாலோசிப்பை வழிநடத்துகின்றனர்.
16 ஜனங்களிடமாக அன்பும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பமும் தேவையாயிருக்கிறது. நல்ல தயாரிப்பும்கூட அவசியமாயிருக்கிறது. அந்த நபரோடு நீங்கள் ஏற்கெனவே கலந்தாலோசித்திருக்கும் குறிப்புகளை விமர்சித்து, பைபிள் கலந்தாலோசிப்பை இன்னும் கூடுதலாக்குவதில் நீங்கள் எடுக்கப்போகும் அணுகுமுறையை தீர்மானிப்பதையும் இது உட்படுத்த வேண்டும். உங்களுடைய குறிப்புகளின் பொதுவான போக்கை மனதில் வையுங்கள். முன்னமே கலந்தாலோசித்த பொருளின் பேரில் சில கூடுதலான வசனங்களை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா? அந்த நபர் வைத்திருக்கும் புத்தகத்தையோ அல்லது துண்டுப்பிரதியையோ நீங்கள் திறந்து ஆரம்ப பாராக்களில் சிவற்றை அவரோடு சிந்திப்பீர்களா? அவர் அக்கறை காட்டியிருக்கும் ஒரு பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆரம்பத்தில் 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். காண்பிக்கப்படும் அக்கறையின் ஆழத்தைப் பொறுத்து நேரம் படிப்படியாக அதிகரிக்கப்படலாம். எவ்வாறு தொடர்வது, எவ்வளவு நேரம் இருப்பது என்பதை உங்களுடைய நல்ல நிதானிப்பு கண்டுணர உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
17 சீஷர்களை உண்டுபண்ணுவதில் படிப்படியாக முன்னேறுகிற படிகளை நீங்கள் எடுப்பதற்கு உங்களுக்கு உதவ ஏராளமான உதவியளிக்கும் ஆலோசனைகள் பல வருடங்களாக கொடுக்கப்பட்டு வருகின்றன. “பைபிள் மாணாக்கர்களை யெகோவாவின் அமைப்புக்கு வழிநடத்துதல்”, “திறம்பட்ட பைபிள் படிப்புகளின் மூலம் இருதயங்களை எட்டுங்கள்” என்ற தலைப்புள்ள உதவியளிக்கும் கட்டுரைகளை ஒரு தொடரின் பாகமாக நம் ராஜ்ய ஊழியம் நவம்பர், டிசம்பர் 1990 இதழ்கள் கொண்டிருந்தன. 1987, மார்ச் மாத நம் ராஜ்ய ஊழியம் “வீட்டு பைபிள் படிப்புகளுக்காக தயாரிப்பதும் நடத்துவதும்” என்ற கட்டுரையைக் கொண்டிருந்தது. “பைபிள் படிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் இன்டெக்ஸ்-ஐ விரைவாக பார்ப்பது கூடுதலான உதவியளிக்கும் தகவலுக்கு உங்களை வழிநடத்தும்.
18 ஒரு படிப்பை எவ்வாறு நடத்துவது என்பதற்கு எடுத்துக்காட்டாக, சபை புத்தகப் படிப்பில் என்ன செய்யப்படுகிறது என்பதை கவனமாகப் பாருங்கள். ஒரு வீட்டு பைபிள் படிப்பில் சிந்திப்பதற்கு பொருளின் அளவு முன்பாகவே நியமிக்கப்படுவதில்லை. மாணாக்கரின் புரிந்துகொள்ளும் திறன், தேவைகள் இவைகளுக்கு ஏற்றபடி பொருளை சிந்திப்பதன் வேகத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஊழிய கண்காணியும், மற்ற அனுபவமிக்க பிரஸ்தாபிகளும் பயனியர்களும் உங்களோடு சென்று திறம்பட்ட பைபிள் படிப்புகளை நடத்துவதன் பேரில் நடைமுறையான ஆலோசனைகளை அளிக்க சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பர்.
19 ஜனங்களுக்கு உதவி செய்வதற்கான நம்முடைய முயற்சிகளில் யெகோவா முக்கிய பங்கை வகிக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், நாம் படிப்பதற்கு யாராவது ஒருவரை கண்டுபிடிப்பதைப் பற்றி மட்டும் ஜெபிக்காமல், நாம் கண்டுபிடித்திருக்கும் அக்கறையுள்ள ஆட்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் நாம் ஜெபிக்க வேண்டும். நம்முடைய மனநிலையும் உணர்ச்சிகளும் அகிரிப்பா ராஜாவுக்கு சாட்சி கொடுக்கும் போது அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இருந்ததைப் போன்றே இருக்க வேண்டும்: “நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறைய மாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப் போலகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (அப். 26:29) அது குறுகிய காலம் எடுத்தாலும் சரி அல்லது தனிப்பட்ட உதவி அளிக்கும் காலப் பகுதி அதிகமாக நீண்டிருந்தாலும் சரி பவுல் தனக்கு செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆக வேண்டும் என்று விரும்பினார்.
20 பைபிள் படிப்புகளை நடத்துவது “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை முழுமையாய் பிரசங்கம் பண்ணும்படி” நம்மைச் செய்விக்கிறது. (அப். 20:24) இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்திற்கும் சொல்ல முடியாத எண்ணிக்கையானோர் இன்னும் திருப்பப்படலாம். (அப். 26:18) ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் ஊழியராகிய நீங்கள் சத்திய விதைகளை நடுவதன் மூலமும், பைபிள் கலந்தாலோசிப்புகள் மற்றும் ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்புகளின் மூலமும் தேவையான நீர்ப்பாய்ச்சுவதோடு பின்தொடர்வதன் மூலமும் உங்கள் பாகத்தை செய்யவேண்டும். நீங்கள் இவ்வாறு ஜனங்கள் சீஷர்களாக ஆவதை காணும் பெரிதான சந்தோஷத்தை அடைவீர்கள். மேலும் அவர்கள் உங்களோடு சேர்ந்து இன்னும் மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக ஆவதற்கு உதவி செய்வர்.