பைபிள் படிப்பில் வசனங்களைத் திறம்படப் பயன்படுத்துங்கள்
1. பைபிள் படிப்புகளை நடத்தும்போது நாம் ஏன் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
1 நாம் ஏன் பைபிள் படிப்புகளை நடத்துகிறோம்? மாணாக்கர்கள் பைபிள் போதனைகளைப் புரிந்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து ‘சீடர்களாய்’ ஆக அவர்களுக்கு உதவுவதற்காகவே. (மத். 28:19, 20; 1 தெ. 2:13) அதனால், வசனங்களை அடிப்படையாகக் கொண்டே பைபிள் படிப்பை நடத்த வேண்டும். முதலில், வசனங்களை அவர்களுடைய பைபிளிலிருந்தே எப்படி எடுப்பது என்பதை மாணாக்கர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கலாம்.
2. எந்தெந்த வசனங்களை வாசித்துக் கலந்தாலோசிப்பது என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்?
2 வாசிக்க வேண்டிய வசனங்களைத் தேர்ந்தெடுங்கள்: படிப்பிற்காகத் தயாரிக்கையில், கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் சிந்திக்கப் போகிற விஷயத்திற்கு எப்படிப் பொருந்தும் என்பதைப் பாருங்கள்; படிப்பின்போது எந்தெந்த வசனங்களை வாசித்துக் கலந்தாலோசிப்பீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். பொதுவாக, நம்முடைய நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிற வசனங்களை வாசிப்பது நல்லது. சூழமைவைப் புரிந்துகொள்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு மாணாக்கரின் தேவைகளையும் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு வசனங்களைத் தேர்ந்தெடுங்கள்.
3. கேள்விகள் கேட்பதால் என்ன பயன், அதை எப்படிச் செய்யலாம்?
3 கேள்விகளைப் பயன்படுத்துங்கள்: பைபிள் வசனங்களை, நீங்கள் விளக்குவதற்குப் பதிலாக மாணாக்கரை விளக்கச் சொல்லுங்கள். இதற்கு, கேள்விகளைத் திறமையாகப் பயன்படுத்துங்கள். ஒரு வசனம் என்ன கற்பிக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிந்தால், அது பாராவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை எப்படி ஆதரிக்கிறது என அவரிடம் கேளுங்கள். அப்படியில்லையென்றால், இன்னும் சற்றுக் குறிப்பான கேள்வியை அல்லது சிறுசிறு கேள்விகளைக் கேளுங்கள்; அப்படிக் கேட்பது அந்த மாணாக்கர் சரியான தீர்மானத்திற்கு வர உதவும்.
4. ஒரு வசனத்தை எந்தளவுக்கு விளக்க வேண்டும்?
4 எளிமையாக நடத்துங்கள்: அம்பு எய்வதில் திறமைசாலியான ஒருவருக்கு, குறிதவறாமல் இலக்கை நோக்கி எய்ய ஒரேவொரு அம்பு போதுமானது. அதைப் போலவே, திறமை வாய்ந்த போதனையாளருக்கு ஒரு குறிப்பை விளக்கச் சில வார்த்தைகளே போதுமானது. பாராவிலுள்ள ஒவ்வொரு வசனத்தையும் எடுத்துக்கொண்டு அதிலுள்ள எல்லா அம்சங்களையும் விளக்குவதைத் தவிருங்கள். எதைப் பற்றிச் சிந்திக்கிறீர்களோ அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தேவையான குறிப்பைச் சொன்னாலே போதும். சில சமயங்களில், ஒரு வசனத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதை விளக்குவதற்கு நம்முடைய பிரசுரங்களில் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம்.—2 தீ. 2:15.
5, 6. கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிக்க மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம், ஆனால் என்ன செய்யக் கூடாது?
5 எப்படிக் கடைப்பிடிக்கலாம் எனக் காட்டுங்கள்: பொருத்தமான சந்தர்ப்பங்களில், பைபிள் வசனங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாமென மாணாக்கருக்குக் காட்டுங்கள். உதாரணமாக, எபிரெயர் 10:24, 25-ஐச் சிந்திக்கையில் ஏதாவதொரு சபைக் கூட்டத்தைப் பற்றி விளக்கி, அதற்கு வருமாறு அவரை அழையுங்கள்; ஆனால் வற்புறுத்தாதீர்கள். யெகோவாவை மகிழ்விக்க மாணாக்கர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தையே அவரை உந்துவிக்கட்டும்.—எபி. 4:12.
6 சீடராக்கும் வேலையில் வசனங்களைத் திறம்படப் பயன்படுத்தினோம் என்றால், “விசுவாசித்துக் கீழ்ப்படிய” மாணாக்கருக்கு உதவுவோம்.—ரோ. 16:26.