உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/14 பக். 3-6
  • உங்களால் பயனியர் செய்ய முடியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களால் பயனியர் செய்ய முடியுமா?
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • துணை தலைப்புகள்
  • கேள்வி 1: “எல்லாராலயும் பயனியர் செய்ய முடியாதுனு சிலர் சொல்றாங்க. என்னால செய்ய முடியுமா?”
  • கேள்வி 2: பயனியர் சேவை செஞ்சா பணக்கஷ்டம் வராதா?
  • கேள்வி 3: “நான் ஏன் இளம் வயசுலயே பயனியர் செய்யணும்?”
  • கேள்வி 4: “எல்லா மாசமும் 70 மணிநேரம் எடுக்கணுமே! எடுக்க முடியலனா என்ன செய்றது?”
  • கேள்வி 5: “நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன், எதையாவது சாதிக்கணும்னு ஆசைப்படுறேன். பயனியர் செஞ்சா இந்த சந்தோஷம் கிடைக்குமா?”
  • கேள்வி 6: “பயனியர் செஞ்சாதான் முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும்னு பைபிள் சொல்லலையே! அப்படினா ஏன் பயனியர் செய்யணும்?”
  • கேள்வி 7: “மூப்பர்கள் எப்படி உதவி செய்யலாம்?”
  • கேள்வி 8: “நான் பயனியர் ஆகறதுக்கு என்ன செய்யணும்?”
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 11/14 பக். 3-6

உங்களால் பயனியர் செய்ய முடியுமா?

1 “பயனியர் செய்றதுல கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலயுமே கிடைக்காது. பயனியர் செய்றதவிட சிறந்தது வேற எதுவுமே இல்ல.” இதை யார் சொன்னது தெரியுமா? பல வருடங்களாக முழுநேர ஊழியம் செய்கிற ஒரு பயனியர் சொன்னார். நிறைய யெகோவாவின் சாட்சிகள் இதைப்போல் சந்தோஷமாக பயனியர் சேவை செய்கிறார்கள். நீங்கள் ஒரு ஒழுங்கான பயனியராக ஆக முடியுமா? நாம் எல்லாருமே யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்ய தீர்மானம் எடுத்திருக்கிறோம். அதனால், அவருடைய அரசாங்கத்தை பற்றி சொல்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோமா என்று யோசித்து பார்க்க வேண்டும். பயனியர் சேவையை பற்றி நிறைய பேருடைய மனதில் இருக்கிற கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையில் பதில் தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி 1: “எல்லாராலயும் பயனியர் செய்ய முடியாதுனு சிலர் சொல்றாங்க. என்னால செய்ய முடியுமா?”

2 உங்களால் பயனியர் செய்ய முடியுமா முடியாதா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால், எல்லாருடைய சூழ்நிலையும் ஒரே மாதிரி இருக்காது. சிலரால் மாதம் 70 மணிநேரம் ஊழியம் செய்ய முடியாது. அதனால், அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள்; வாய்ப்பு கிடைக்கும்போது துணைப் பயனியர் செய்கிறார்கள். இப்படி சுறுசுறுப்பாக ஊழியம் செய்வதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். (கலா. 6:9) இவர்களால் முழுநேர ஊழியம் செய்ய முடியாவிட்டாலும் சபையில் இருக்கிற மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள்

3 ஆனால், நிறைய சகோதர சகோதரிகள் ஒழுங்கான பயனியர் செய்கிறார்கள். அதற்காக அவர்களுடைய வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். உங்களால் பயனியர் செய்ய முடியுமா? சிலர் பள்ளி படிப்பை முடித்திருப்பார்கள்; சிலருக்கு பிள்ளைகளை கவனிக்க வேண்டிய வேலை இருக்காது; சிலருடைய வீட்டில் கணவன் மட்டும் வேலைக்கு போனால் போதும்; சிலருக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைத்திருக்கும்; இவர்கள் எல்லாரும் பயனியர் செய்வதை பற்றி யோசித்து பார்க்கலாம்!

4 நாம் சுயநலமாக வாழ வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான்; ஊழியத்தை முக்கியமாக நினைக்கக் கூடாது என்றும் ஆசைப்படுகிறான். ஆனால், நாம் இந்த உலகத்தில் இருக்கிற விஷயங்கள்மேல் ஆசைப்படாமல் இருந்தால் யெகோவாவுடைய சேவையை செய்வதற்கு அவர் நமக்கு உதவி செய்வார். பயனியர் செய்வதற்காக உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய முடிந்தால், தாராளமாக செய்யலாம்!

கேள்வி 2: பயனியர் சேவை செஞ்சா பணக்கஷ்டம் வராதா?

5 நிறைய நாடுகளில், குடும்பத்தின் தேவையை கவனிப்பதற்காக நாள் முழுக்க வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருந்தாலும், நிறைய பேர் பயனியர் செய்கிறார்கள். யெகோவா அவர்கள் எல்லாருடைய தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார். தியாகம் செய்கிற மனப்பான்மையும், யெகோவாவின்மேல் நம்பிக்கையும் இருந்தால் பயனியர் செய்யலாம். (மத். 17:20) யெகோவாவை “தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது” என்று சங்கீதம் 34:10 சொல்கிறது. யெகோவா நம்மை நிச்சயம் பார்த்துக்கொள்வார் என்று நம்ப வேண்டும். பயனியர் செய்கிற எல்லாரையும் அவர் நன்றாக கவனித்துக்கொள்வார். (சங். 37:25) அதற்காக பயனியர்கள், பணத்திற்கு மற்றவர்களை எதிர்பார்ப்பது இல்லை. 2 தெசலோனிக்கேயர் 3:8, 10-லும் 1 தீமோத்தேயு 5:8-லும் இருக்கிறதுபோல் செய்கிறார்கள்.

6 ஒரு கோபுரத்தை கட்ட நினைக்கிறவன் “முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டு” பார்க்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (லூக்கா 14:28) அதேபோல், பயனியர் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு நன்றாக யோசித்து பார்க்க வேண்டும். பல வருடங்களாக பயனியர் செய்கிறவர்களிடம் பேசுங்கள். யெகோவா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று கேளுங்கள். உங்கள் வட்டார கண்காணி நிறைய வருடங்கள் பயனியர் செய்திருப்பார். அவரிடம் கேட்டால், உங்களுக்கு நிறைய ஆலோசனை கிடைக்கும்.

7 இந்த உலகத்தில் இருக்கிறவர்கள், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஒருவேளை, நமக்கும் அந்த ஆசை வரலாம். இருந்தாலும், பயனியர் செய்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது என்று புரிந்துகொண்டால் திருப்தியாக வாழலாம். (1 தீ. 6:8) பயனியர்கள் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். தேவையில்லாத வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டு செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. பைபிளை பற்றி மற்றவர்களுக்கு சொல்வதால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அதற்காக, எப்போதும் ஊழியம் ஊழியம் என்று, துறவியைப்போல் வாழ்வதில்லை.

8 நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம், சீக்கிரத்தில் உலகத்துக்கு முடிவு வரப்போகிறது. இதை நாம் புரிந்துகொண்டால் பயனியர் செய்வதற்காக எதையும் தியாகம் செய்வோம். யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்; உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு பணம் தேவை என்று யோசித்து பாருங்கள். ஒருவேளை, இப்போதே உங்களால் பயனியர் செய்ய முடியும். பயனியர் செய்வதற்காக சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். அப்படி செய்யும்போது யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.—சங். 145:16.

கேள்வி 3: “நான் ஏன் இளம் வயசுலயே பயனியர் செய்யணும்?”

9 நீங்கள் பள்ளி படிப்பை முடிக்கும்போது, நிறைய விஷயங்களை யோசிப்பீர்கள். உங்கள் எதிர்காலம் சந்தோஷமாக, திருப்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். நல்ல காலேஜில் படித்து பெரிய வேலைக்கு போகச் சொல்லி ஆசிரியர்களும் மற்றவர்களும் கட்டாயப்படுத்தலாம். யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். (பிர. 12:1) சில வருடங்களுக்கு பிறகு, கல்யாணம் செய்ய வேண்டும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். நீங்கள் என்ன செய்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்?

10 இளம் வயதில் நீங்கள் எடுக்கிற தீர்மானத்தில்தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையே இருக்கிறது. நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்வதாக வாக்கு கொடுத்தீர்கள். (எபி. 10:7) அப்படி சேவை செய்வதற்கு, தொடர்ந்து சில மாதங்கள் துணைப் பயனியர் செய்யுங்கள். அதில் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்று நீங்களே புரிந்துகொள்வீர்கள். அதற்கு பிறகு, உங்களால் ஒழுங்கான பயனியர் செய்ய முடியுமா என்று யோசித்து பாருங்கள். படிப்பை முடித்த பிறகு முழுநேர வேலைக்கு போகாமல், முழுநேர ஊழியம் செய்ய முடியுமா என்று யோசித்து பாருங்கள். ஏனென்றால், ‘இளம் வயசுலயே பயனியர் செய்யாம போயிட்டோமே’ என்று நிறைய பயனியர்கள் கவலைப்படுகிறார்கள்.

11 கல்யாணம் செய்யாமலேயே முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்து பாருங்கள். பயனியர் செய்தால் பொறுப்புள்ள, அனுபவமுள்ள, கடவுள் பயமுள்ள நபராக மாறிவிடுவீர்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு கல்யாணம் செய்யலாம் என்று நினைத்தால்கூட, இந்த பயனியர் சேவை உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களை போலவே பயனியர் செய்ய ஆசைப்படும் ஒருவரை கல்யாணம் செய்யலாம் என்று நினைப்பீர்கள். இப்படி, பயனியர் செய்த நிறைய கணவன்-மனைவி வாட்டார கண்காணியாக, மிஷனரியாக சேவை செய்கிறார்கள். இதைவிட திருப்தியான வாழ்க்கை வேற ஏதாவது இருக்க முடியுமா!

12 எந்தவொரு படிப்பும் வேலையும் சொல்லித்தராத விஷயங்களை, பயனியர் சேவை செய்யும்போது கற்றுக்கொள்ள முடியும். ஒரு விஷயத்தை எப்படி ஒழுங்காக செய்வது, திட்டமிட்டு செய்வது என்று கற்றுக்கொள்ள முடியும். யெகோவாவையே நம்பி இருக்கவும் மற்றவர்களிடம் நன்றாக நடந்துகொள்ளவும் பயனியர் சேவை உதவும். பொறுப்புள்ள நபராக ஆக முடியும்; பொறுமை, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள முடியும்.

13 நாம் வாழும் மோசமான காலத்தில், எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், யெகோவா சொன்ன விஷயங்கள் மட்டும் நிச்சயமாக நடக்கும். அதனால், இப்போதே முழுநேர ஊழியம் செய்வதை பற்றி நன்றாக யோசித்து பாருங்கள். அதில் கிடைக்கும் பலன்களை பற்றியும் யோசித்து பாருங்கள். அப்படி செய்தால், ‘படிப்பு-வேலையை எல்லாம் விட்டுட்டு பயனியர் செய்றனே’ என்று ஒருநாளும் கவலைப்பட மாட்டீர்கள்.

கேள்வி 4: “எல்லா மாசமும் 70 மணிநேரம் எடுக்கணுமே! எடுக்க முடியலனா என்ன செய்றது?”

14 ‘வருடத்திற்கு 840 மணிநேரம் எடுக்க, தேவையான மாற்றங்களை எல்லாம் செய்துவிட்டீர்களா?’ என்று ஒழுங்கான பயனியர் விண்ணப்பத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 1/2 மணிநேரம் எடுத்தாலே போதும். அதனால், உங்கள் வேலைகளை நன்றாக திட்டமிட்டு, ஒழுங்காக செய்யுங்கள். போகப்போக உங்களுக்கு இது சுலபமாக இருக்கும்.

15 ‘எதிர்பாராத வேளைகளில் அசம்பாவிதங்கள்’ ஏற்படும் என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:11, NW) சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடலாம், எதிர்பார்க்காத நேரத்தில் ஏதாவது நடக்கலாம்; அதனால் மணிநேரம் எடுக்க முடியாமல் போய்விடலாம். ஊழிய ஆண்டின் ஆரம்பத்திலேயே, மணிநேரம் குறைந்துவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் அதிகமாக ஊழியம் செய்து மணிநேரம் எடுத்துவிடலாம் (ஊழிய ஆண்டு செப்டம்பரில் ஆரம்பித்து ஆகஸ்டில் முடியும்). ஆனால், ஊழிய ஆண்டின் முடிவில் மணிநேரம் குறைந்துவிட்டால் என்ன செய்வது?

16 மாதக்கணக்காக உடல்நிலை சரியில்லாமல் போனால் அல்லது வேறு ஏதாவது பிரச்சினை வந்தால் மணிநேரம் எடுக்க முடியாமல் போய்விடலாம். அப்போது, சபை ஊழியக் குழுவில் இருக்கிற ஒரு மூப்பரிடம் உங்கள் பிரச்சினையை பற்றி சொல்லுங்கள். விட்டுப்போன மணிநேரத்தை பற்றி கவலைப்படாமல், நீங்கள் தொடர்ந்து ஊழியம் செய்யலாம் என்று ஊழியக் குழு முடிவெடுக்கலாம். அதற்கான காரணத்தை, உங்கள் பிரஸ்தாபி அட்டையில் சபை செயலர் எழுதிவிடுவார். உங்களுடைய உடல்நிலையையும் சூழ்நிலையையும் பார்த்து ஊழியக் குழு இப்படி முடிவெடுக்கலாம்.

17 அனுபவமுள்ள பயனியர்கள், ஊழிய ஆண்டின் ஆரம்பத்திலேயே நிறைய மணிநேரங்களை எடுத்துவிடுகிறார்கள். பயனியர் சேவையை முக்கியமாக நினைப்பதால் முக்கியம் இல்லாத வேலைகளை அவர்கள் செய்வதில்லை. ஆனால், சிலர் சரியாக திட்டமிடாததால் மணிநேரத்தை எடுக்க முடியாமல் போய்விடலாம். அதுபோன்ற சமயத்தில், விட்டுப்போன மணிநேரத்தை எடுப்பது உங்கள் பொறுப்புதான். உடல்நிலை சரியில்லாத பயனியர்களுக்கு ஊழியக் குழு ஏதாவது செய்வதுபோல் உங்களுக்கும் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

18 சில சமயத்தில் நம் சூழ்நிலை மாறலாம். வியாதி, குடும்ப பொறுப்பு, அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தொடர்ந்து பயனியர் செய்வது கஷ்டமாகிவிடலாம். அப்போது, ஒழுங்கான பயனியர் சேவை செய்வதை கொஞ்ச நாளைக்கு நிறுத்திவிட்டு, உங்களால் முடிந்தபோது துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம். சூழ்நிலை காரணமாக தொடர்ந்து மணிநேரம் எடுக்க முடியவில்லை என்றால், ஒழுங்கான பயனியர் சேவை செய்ய முடியாது.

கேள்வி 5: “நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன், எதையாவது சாதிக்கணும்னு ஆசைப்படுறேன். பயனியர் செஞ்சா இந்த சந்தோஷம் கிடைக்குமா?”

19 யெகோவாவுடைய நண்பராக இருப்பதும், அவர் கொடுக்கிற வேலையை முழு மனதோடு செய்வதும்தான் உண்மையான சந்தோஷத்தை தரும். இயேசு தனக்குமுன் “வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக” கஷ்டங்களை எல்லாம் சகித்தார். (எபி. 12:2) கடவுளுக்கு பிடித்ததை அவர் சந்தோஷமாக செய்தார். (சங். 40:8) நாமும் யெகோவாவுக்கு சேவை செய்வதை முக்கியமாக நினைத்தால், சந்தோஷமாக வாழலாம். நம் வாழ்க்கையில் சரியானதை செய்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கும். புதிய உலகத்தை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதுதான் உண்மையான சந்தோஷம்.—அப். 20:35.

20 முதல் பாராவில் பார்த்த பயனியர் சொல்கிறார்: “நம்மகிட்ட பைபிளை படிச்சவங்க, யெகோவாவுக்கு சேவை செய்றதை பார்க்கிறது எவ்ளோ சந்தோஷமா இருக்கு! யெகோவாவுக்கு பிடிச்சதை செய்றதுக்கு வாழ்க்கையில அவங்க நிறைய மாற்றங்கள் செய்றாங்க. பைபிள் படிக்கிறதாலதான் அவங்களால இதையெல்லாம் செய்ய முடியிதுனு புரிஞ்சிக்கிட்டேன், இதனால என்னோட விசுவாசமும் பலப்பட்டிருக்கு.” (காவற்கோபுரம் 1997, அக்டோபர் 15, பக்கங்கள் 18-23-ஐ பாருங்கள்.) வேலை, படிப்பு, அந்தஸ்தில் கிடைக்கிற சந்தோஷம் எதுவும் நிரந்தரம் இல்லை. பயனியர் செய்வதில் கிடைக்கிற சந்தோஷம்தான் நிரந்தரமானது!

கேள்வி 6: “பயனியர் செஞ்சாதான் முடிவில்லா வாழ்க்கை கிடைக்கும்னு பைபிள் சொல்லலையே! அப்படினா ஏன் பயனியர் செய்யணும்?”

21 பயனியர் செய்யலாமா வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுடைய சூழ்நிலை என்னவென்று யெகோவாவுக்குதான் தெரியும். (ரோ. 14:4) நீங்கள் ‘முழு மனதோடும் முழு பலத்தோடும்’ யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (மாற். 12:30; கலா. 6:4, 5) நீங்கள் வேண்டா வெறுப்பாக சேவை செய்யாமல், சந்தோஷமாக சேவை செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (2 கொ. 9:7; கொலோ. 3:23) யெகோவாமேலும் மக்கள்மேலும் அன்பு இருந்தால், பயனியர் செய்ய முயற்சி எடுப்போம்.—மத். 9:36-38; மாற். 12:30, 31.

கேள்வி 7: “மூப்பர்கள் எப்படி உதவி செய்யலாம்?”

22 சபையில் இருக்கிற எல்லா மூப்பர்களும், முக்கியமாக ஊழியக் குழுவில் இருக்கிற மூப்பர்கள் பயனியர்கள்மேல் தனி அக்கறை காட்டுகிறார்கள். “பயனியர்கள் திறமையா ஊழியம் செய்றாங்களா? மறுசந்திப்பு செய்றதுல, பைபிள் படிப்பு எடுக்கிறதுல அவங்களுக்கு உதவி தேவையா? எல்லாரோடையும் ஒற்றுமையா சமாதானமா இருக்காங்களா? (ரோ. 14:19) திட்டமிட்டு ஊழியம் செய்றதுக்கு அவங்களுக்கு ஏதாவது உதவி தேவையா? பைபிளையும் மத்த பிரசுரங்களையும் படிக்கிறாங்களா? கூட்டங்கள்ல நல்லா பதில் சொல்றாங்களா?” இந்தக் கேள்விகளை எல்லாம் மூப்பர்கள் யோசித்து பார்க்க வேண்டும். பயனியர்களிடம் மூப்பர்கள் எப்போதும் அக்கறையாக பேச வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென தெரியும்.

23 பயனியர்கள் சபையில் நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்களா என்று மூப்பர்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் மணிநேரத்தை சரியா எடுக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். ஏதோ பிரச்சினையால் ஒன்று-இரண்டு மாதத்திற்கு மணிநேரம் குறைந்துவிடலாம். உடனே மூப்பர்கள் அவர்களிடம், “மணிநேரம் எடுக்க முடியலனா பயனியர் செய்றதை நிறுத்திடுங்க” என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று பார்க்க வேண்டும்; மூப்பர்கள் உடனே உதவி செய்யவில்லை என்றால், ஒரு பயனியரால் தொடர்ந்து மணிநேரங்களை எடுக்க முடியாமல் போய்விடலாம், கடைசியில் பயனியர் செய்வதையே நிறுத்திவிடுவார்கள்.

24 பயனியர்களுடைய மணிநேரம் ரொம்ப குறைந்துவிட்டால் மூப்பர்கள் அதை பற்றி அவர்களிடம் பேச வேண்டும். ஊழிய ஆண்டு முடிவதற்குள் மணிநேரங்களை எடுக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏதோ ஒரு பிரச்சினையால் சிலருக்கு மணிநேரங்களை எடுக்க முடியாமல் போயிருக்கலாம். அவர்களுடைய சூழ்நிலையை பார்த்து, விட்டுப்போன மணிநேரங்களை கணக்கில் எடுக்காமல், தொடர்ந்து பயனியர் செய்யும்படி மூப்பர்கள் அவர்களிடம் சொல்லலாம். இதை பற்றி அவர்களுடைய பிரஸ்தாபி அட்டையில் மூப்பர்கள் எழுதி வைப்பார்கள். அடுத்து வர மாதங்களில் 70 மணிநேரம் எடுப்பதற்கு மூப்பர்கள் உற்சாகப்படுத்தலாம். ஒருவேளை சிலருக்கு, தொடர்ந்து மணிநேரங்களை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அந்த மாதிரி நேரத்தில், பயனியர் செய்வதை இப்போதைக்கு நிறுத்தும்படி மூப்பர்கள் ஆலோசனை கொடுக்கலாம். அதற்கு பிறகு அதை பற்றி கிளை அலுவலகத்திற்கு எழுதி அனுப்புவார்கள்.

கேள்வி 8: “நான் பயனியர் ஆகறதுக்கு என்ன செய்யணும்?”

25 ஒழுங்கான பயனியர் செய்வதற்கு, ஞானஸ்நானம் எடுத்து 6 மாதமாவது ஆகியிருக்க வேண்டும், கூட்டங்களுக்குத் தொடர்ந்து வர வேண்டும், சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய வேண்டும். ஒரு வருடத்திற்கு 840 மணிநேரம் ஊழியம் செய்ய தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும், நல்ல பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். (od பக். 113-14) எப்படி முன்மாதிரியாக இருக்கலாம்?

26 முன்மாதிரியாக இருக்கிறவர்கள் எல்லா விஷயத்திலும் சுத்தமாக இருப்பார்கள்; பேச்சிலும் நடத்தையிலும்கூட சுத்தமாக இருப்பார்கள். சபையிலும் மற்ற இடத்திலும் பைபிள் சொல்வதுபோல் செய்வார்கள். யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்வார்கள். அன்பாக, சாந்தமாக, பொறுமையாக நடந்துகொள்வார்கள். ஊழியத்தை முக்கியமாக நினைப்பார்கள். ஊழியத்தில் பைபிள் வசனங்களை காட்டி நன்றாக பேசுவார்கள், தவறாமல் மறுசந்திப்பு செய்வார்கள், பைபிள் படிப்புகளை எடுப்பார்கள். மூப்பர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சபையின் ஊழிய ஏற்பாடுகளுக்கு கீழ்ப்படிவார்கள்.

27 சபை நீக்கம் செய்யப்பட்டு, மறுபடியும் சபைக்குள் வந்தவர் ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒழுங்கான பயனியர் அல்லது துணைப் பயனியர் சேவை செய்ய முடியும். நீதி விசாரனை குழுவில் இருக்கிற மூப்பர்களால் கண்டிக்கப்பட்ட ஒருவரும் ஒரு வருடத்திற்கு பிறகுதான் பயனியர் செய்ய முடியும். ஆனால், அவருக்கு ஏதாவது தடை போட்டிருந்தால், அந்த தடை நீங்கும் வரை அவரால் பயனியர் செய்ய முடியாது.

28 பல மாதத்திற்கு துணைப் பயனியர் சேவை செய்தால்தான் ஒழுங்கான பயனியராக ஆக முடியுமா? இல்லை! இருந்தாலும், துணைப் பயனியர் செய்தால் ஒழுங்கான பயனியர் சேவை செய்வது சுலபமாக இருக்கும். ஒழுங்கான பயனியர் சேவைக்கு விண்ணப்பிக்கிறவர்கள் மாதத்திற்கு 70 மணிநேரமும், வருடத்திற்கு 840 மணிநேரமும் எடுக்க முடியுமா என்று மூப்பர்கள் யோசித்து பார்ப்பார்கள்.

29 ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பத்தை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் பிரஸ்தாபி கொடுக்க வேண்டும். உடனே, சபையின் ஊழிய குழு அதை பற்றி பேச வேண்டும். ஊழியக் குழுவில் இருக்கிற ஒரு மூப்பர் ஊரில் இல்லை என்றால் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு ஒரு மூப்பர் அந்த விண்ணப்பத்தைப் பார்க்கலாம். சபையின் ஊழியக் குழு, அந்த விண்ணப்பத்தை கிளை அலுவலகத்துக்கு சிபாரிசு செய்வதற்கு முன் மற்ற மூப்பர்களிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும். ஒருவேளை மற்ற மூப்பர்களுக்கு அந்த பிரஸ்தாபியை பற்றி ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால், அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்வார்கள்.

30 கடந்த 6 மாதத்தில் அந்த பிரஸ்தாபி எவ்வளவு மணிநேரம் ஊழியம் செய்திருக்கிறார் என்று ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பத்தில் மூப்பர்கள் குறிப்பிட வேண்டும். வெறும் 6 மாதத்தின் சராசரி மணிநேரங்களை வைத்து அவரால் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய முடியும் என்று மூப்பர்களால் தீர்மானிக்க முடியாது. அதில் ஒன்று-இரண்டு மாதங்களின் மணிநேரம் மட்டும் அதிகமாக இருக்கலாம். அப்படியென்றால், அந்த பிரஸ்தாபி ஒருசில மாதங்கள் அதிக முயற்சி எடுத்து ஊழியம் செய்திருக்கிறார் என்று அர்த்தம். இந்த நல்ல விஷயத்தையும் மூப்பர்கள் யோசித்து பார்க்க வேண்டும். அந்த பிரஸ்தாபி வேறு எந்த விஷயத்திலாவது முன்னேற வேண்டியிருக்கிறதா என்று மூப்பர்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை ஊழியத்தில் நன்றாக பேசுவதில், மறுசந்திப்பு செய்வதில், பைபிள் படிப்பு எடுப்பதில் அவர் முன்னேற வேண்டியிருக்கலாம். மூப்பர்கள் அதை பற்றி அவரிடம் பேச வேண்டும். பயனியர் ஆவதற்கு முன் அந்த விஷயங்களில் முன்னேற்றம் செய்யும்படி சொல்ல வேண்டும். அவரை ஒழுங்கான பயனியராக சிபாரிசு செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை, அவர் எந்தெந்த விஷயங்களில் முன்னேற வேண்டும் என்று அந்தப் பிரஸ்தாபியிடம் மூப்பர்கள் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு பிறகு, அவருடைய விண்ணப்பத்தை சிபாரிசு செய்ய மூப்பர்கள் முடிவு செய்தால் அதே விண்ணப்பத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அவர்கள் பயனியர் செய்ய ஆரம்பிக்கிற மாதத்தை மட்டும் மாற்றி அனுப்ப வேண்டும்.

31 நீங்கள் பயனியர் செய்வதற்கு, இந்தக் கட்டுரையில் இருக்கிற விஷயங்கள் கண்டிப்பாக உதவும். அதற்கு உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்ய முடியுமா? வாரத்தில் 17 மணிநேரம் எடுக்க என்ன செய்ய வேண்டுமென யோசித்து பாருங்கள்; ஒரு அட்டவணை போடுங்கள். யெகோவாமேல் முழு நம்பிக்கை வையுங்கள்; சந்தோஷமாக பயனியர் செய்யுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிகமாக யெகோவா ‘உங்களை ஆசீர்வதிப்பார்.’—மல். 3:10.

32 “உங்களால் பயனியர் செய்ய முடியுமா?” முடியும் என்று நினைத்தால், எப்போது ஆரம்பிக்கலாமென உடனே யோசித்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்