உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwbr19 அக்டோபர் பக். 1-6
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
  • வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2019)
  • துணை தலைப்புகள்
  • அக்டோபர் 7-13
  • அக்டோபர் 14-20
  • அக்டோபர் 21-27
  • அக்டோபர் 28–நவம்பர் 3
வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள்—பயிற்சி புத்தகம் (2019)
mwbr19 அக்டோபர் பக். 1-6

வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்

அக்டோபர் 7-13

பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாக்கோபு 3-5

“கடவுள் தருகிற ஞானத்தை செயலில் காட்டுங்கள்”

cl 221-222 ¶9-10

‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா?

9 “முதலாவது கற்புள்ளது.” கற்புடன் இருப்பது என்பது வெளிப்புறத்தில் மாத்திரமல்ல உட்புறத்திலும் களங்கமின்றி தூய்மையாக இருப்பதைக் குறிக்கிறது. ஞானத்தை இருதயத்தோடு பைபிள் இணைத்துப் பேசுகிறது, ஆனால் பொல்லாத சிந்தனைகளால், ஆசைகளால், எண்ணங்களால் களங்கமான இருதயத்திற்குள் பரம ஞானம் நுழைய முடியாது. (நீதிமொழிகள் 2:10; மத்தேயு 15:19, 20) என்றபோதிலும், நம்முடைய இருதயம் கற்புள்ளதாக இருந்தால்—அதாவது, அபூரண மனிதரின் திறனுக்கு எட்டியவரை கற்புள்ளதாக இருந்தால்—“தீமையை விட்டுவிலகி நன்மை செய்”வோம். (சங்கீதம் 37:27; நீதிமொழிகள் 3:7) கற்பை ஞானத்தின் முதல் குணமாக பட்டியலிட்டிருப்பது பொருத்தமாக இல்லையா? சொல்லப்போனால், நாம் ஒழுக்க ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் சுத்தமாக இல்லையென்றால், பரத்திலிருந்து வருகிற மற்ற குணங்களை எப்படி பிரதிபலிக்க முடியும்?

10 “பின்பு சமாதானமுள்ளது.” பரம ஞானம் சமாதானத்தை நாடுவதற்கு நம்மை தூண்டுகிறது, அது கடவுளுடைய ஆவியின் கனியில் ஒன்றாகும். (கலாத்தியர் 5:22) யெகோவாவின் ஜனங்களை ஒன்றுபடுத்தும் ‘சமாதானத்தின் கட்டை’ குலைக்காமலிருக்க நாம் கடும் முயற்சி செய்கிறோம். (எபேசியர் 4:3) சமாதானம் குலைக்கப்படும்போது அதை திரும்ப நிலைநாட்டுவதற்கும் நாம் ஊக்கமாய் போராடுகிறோம். இது ஏன் முக்கியம்? பைபிள் இவ்வாறு கூறுகிறது: “[“தொடர்ந்து,” NW] சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.” (2 கொரிந்தியர் 13:11) ஆகவே, நாம் தொடர்ந்து சமாதானமாய் வாழும்வரை, சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பார். சக கிறிஸ்தவர்களை நாம் நடத்தும் விதம் யெகோவாவுடன் உள்ள நம்முடைய உறவை நேரடியாக பாதிக்கிறது. நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதை எவ்வாறு நிரூபிக்கலாம்? ஓர் உதாரணத்தை கவனியுங்கள்.

cl 223-224 ¶12

‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா?

12 “நியாயத்தன்மையுள்ளது.” நியாயத்தன்மையுடன் நடந்துகொள்வது என்றால் என்ன? யாக்கோபு 3:17-ல் “நியாயத்தன்மையுள்ளது” என்பதற்குரிய மூல கிரேக்க பதத்தை துல்லியமாக மொழிபெயர்ப்பது கடினம் என கல்விமான்கள் சொல்கிறார்கள். “மென்மை,” “பொறுத்துக்கொள்ளுதல்,” “கரிசனை காட்டுதல்” போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் “வளைந்துகொடுத்தல்” என்பதாகும். பரத்திலிருந்து வரும் ஞானத்தின் இந்த அம்சத்தை நாம் எவ்வாறு வெளிக்காட்டலாம்?

cl 224-225 ¶14-15

‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா?

14 “கீழ்ப்படிய தயாராக உள்ளது.” “கீழ்ப்படிய தயாராக உள்ளது” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வேறெங்கும் பயன்படுத்தப்படவில்லை. இந்த வார்த்தை “பெரும்பாலும் இராணுவத்தில் கண்டிப்புடன் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் ஒன்று” என அறிஞர் ஒருவர் கூறுகிறார். “இணங்க வைப்பதற்கு எளிதான,” “அடிபணிகிற” என்ற கருத்தை இது தருகிறது. பரத்திலிருந்து வரும் ஞானத்தின்படி நடப்பவர் பைபிள் என்ன சொல்கிறதோ அதற்கு உடனடியாக அடிபணிகிறார். ஒரு முடிவெடுத்த பிறகு, உண்மைகள் எடுத்துச் சொல்லப்பட்டாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்றிருப்பவர் அல்ல. மாறாக, அவர் தவறான நிலைநிற்கை எடுத்திருப்பதாக அல்லது தவறான முடிவுக்கு வந்திருப்பதாக தெளிவான வேதப்பூர்வ அத்தாட்சியோடு அவரிடம் காட்டப்படுகையில் உடனடியாக தன்னை மாற்றிக்கொள்கிறார். இப்படிப்பட்டவரென நீங்களும் பெயரெடுத்திருக்கிறீர்களா?

“இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தது”

15 “இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தது.” பரத்திலிருந்து வரும் ஞானத்தின் ஓர் இன்றியமையாத அம்சம் இரக்கம்; ஏனென்றால் இத்தகைய ஞானம் ‘இரக்கம் நிறைந்தது’ என சொல்லப்படுகிறது. ‘இரக்கமும்’ ‘நற்கனிகளும்’ ஒருசேர குறிப்பிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். இது பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் பைபிளில் இரக்கம் என்பது பெரும்பாலும் மற்றவர்கள் மீது காட்டும் ஆழ்ந்த அக்கறையையும், அன்பான செயல்களைப் பிறப்பிக்கும் பரிவையும் குறிக்கிறது. இரக்கம் என்பது “ஒருவருடைய மோசமான சூழ்நிலையைக் கண்டு வருத்தப்படுவது, மேலும் அதற்காக ஏதாவது செய்ய முயற்சிப்பது” என ஒரு புத்தகம் வரையறுக்கிறது. ஆகவே, தெய்வீக ஞானம் என்பது கனிவற்ற, உணர்ச்சியற்ற, அல்லது வெறுமனே அறிவாற்றல் சார்ந்த ஒன்றல்ல. மாறாக, கனிவானது, இருதயப்பூர்வமானது, உணர்ச்சிகளை மதிப்பது. நாம் இரக்கம் நிறைந்தவர்கள் என எப்படி காட்டலாம்?

cl 226-227 ¶18-19

‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறீர்களா?

18 “பாரபட்சமற்றது.” தெய்வீக ஞானம் இன தப்பெண்ணத்தையும் தேசிய பெருமையையும் தவிர்ப்பதற்கு உதவுகிறது. நாம் இத்தகைய ஞானத்தால் வழிநடத்தப்படுவோமாகில், பாரபட்சத்திற்கு இடமளிக்கும் எந்தவொரு மனச்சாய்வையும் நம் இருதயத்திலிருந்து வேரோடு களைய கடினமாக முயலுவோம். (யாக்கோபு 2:9) கல்வித் தகுதி, பொருளாதார அந்தஸ்து, அல்லது சபை பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களுக்கு சலுகை காண்பிக்க மாட்டோம். சக வணக்கத்தார் எவரையும், அவர்கள் எவ்வளவு தாழ்வானவர்களாக தோன்றினாலும், நாம் இழிவாக கருத மாட்டோம். இப்படிப்பட்டவர்களை யெகோவா தம்முடைய அன்புக்கு உரியவர்களாக கருதினால், நாமும் அவர்களை நம்முடைய அன்புக்கு உரியவர்களாக கருத வேண்டும்.

19 ‘மாயமற்றது.’ ‘மாயக்காரன்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு நடிகரை” குறிக்கலாம். பூர்வ காலங்களில், கிரேக்க மற்றும் ரோம நடிகர்கள் நடிக்கும்போது பெரிய முகமூடிகளை அணிந்து கொண்டார்கள். ஆகவே, ‘மாயக்காரன்’ என்பதற்குரிய கிரேக்க வார்த்தை பாசாங்கு செய்பவரை, அல்லது ஏமாற்றுக்காரரை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. தெய்வீக ஞானத்தின் இந்த அம்சம் சக வணக்கத்தாரை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை மட்டுமல்ல, அவர்களை எப்படி கருதுகிறோம் என்பதையும் பாதிக்க வேண்டும்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08 11/15 20 ¶6

யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

4:5—எந்த வேதவாக்கியத்தை யாக்கோபு இங்கே மேற்கோளாகக் கூறுகிறார்? குறிப்பிட்ட எந்தவொரு வசனத்தையும் யாக்கோபு இங்கே மேற்கோளாகக் கூறவில்லை. என்றாலும், கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்ட இந்த வார்த்தைகள், ஆதியாகமம் 6:5; 8:21; நீதிமொழிகள் 21:10; கலாத்தியர் 5:17 ஆகிய வசனங்களிலுள்ள பொதுவான கருத்தின் அடிப்படையில் கூறப்பட்டிருக்கலாம்.

w97 11/15 20-21 ¶8

விசுவாசம் நம்மை பொறுமையோடும் ஜெபசிந்தையோடும் இருக்கும்படி செய்கிறது

8 உடன் விசுவாசிக்கு விரோதமாகப் பேசுவது பாவமாக இருக்கிறது. (யாக்கோபு 4:11, 12, தி.மொ.) எனினும், உடன் விசுவாசிகளைப் பற்றி குற்றங்குறை கூறுவோராக சிலர் உள்ளனர். ஒருவேளை அது, அவர்களுடைய சொந்த சுயநீதிக்குரிய மனப்பான்மையின் விளைவாக இருக்கலாம்; அல்லது மற்றவர்களைத் தாழ்த்துவதன் மூலம் தங்களைத்தாமே உயர்த்திக்கொள்ள அவர்கள் விரும்புவதாக இருக்கலாம். (சங்கீதம் 50:20; நீதிமொழிகள் 3:29) ‘விரோதமாகப் பேசுவது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதன் கிரேக்க பதம், பகைமையை அர்த்தப்படுத்துகிறது, மற்றும் மிகைப்படுத்தப்பட்ட அல்லது பொய்யாக குற்றம்சாட்டுவதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. இது, ஒரு சகோதரனை தவறாக நியாயம் தீர்ப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. இது, கடவுளுடைய ‘நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி, நியாயப்பிரமாணத்திற்குத் தீர்ப்புச்செய்வதாக’ இருப்பது எவ்வாறு? வேதபாரகரும் பரிசேயரும் “தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு,” தங்கள் சொந்த தராதரங்களின்படி தீர்ப்பு செய்தார்கள். (மாற்கு 7:1-13) அவ்வாறே, யெகோவா கண்டனம் செய்யாத ஒரு சகோதரனை நாம் கண்டனம் செய்தால், கடவுளுடைய ‘பிரமாணத்தைத் தீர்ப்புச்செய்வோராகவும்’ அது குறைபாடுள்ளதென, பாவத்தன்மையுடன் மறைமுகமாகக் குறிப்பிடுவோராகவும் இருப்போம் அல்லவா? நம்முடைய சகோதரன்பேரில் அநியாயமாய்க் குற்றங்குறை கூறுவதால், அன்பின் பிரமாணத்தை நிறைவேற்றாதவர்களாக நாம் இருப்போம்.—ரோமர் 13:8-10.

பேச்சு

w10-E 9/1 23-24

பாவங்களை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறாரா?

பாவங்களை யாரிடம் ஒத்துக்கொள்ள வேண்டும்?

கடவுள், தனக்கு விரோதமாகச் செய்யப்பட்ட பாவங்களை மன்னிக்கிற அதிகாரத்தை மனிதர்களுக்குக் கொடுக்கவில்லை. அந்த அதிகாரம் அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. “நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார். ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 யோவான் 1:9) இருந்தாலும், அப்படிப்பட்ட பாவங்களை யாரிடம் ஒத்துக்கொள்ள வேண்டும்?

கடவுளால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும் என்பதால், அவரிடம்தான் பாவங்களை ஒத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தாவீது செய்தார். ஆனாலும், எதன் அடிப்படையில் கடவுள் ஒருவரை மன்னிப்பார்? “மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும், யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 3:19) ஒருவர் தான் செய்தது பாவம் என்பதை ஏற்றுக்கொண்டு, அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதோடு, தவறான பாதையைவிட்டு விலகத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும். தவறான பாதையை விட்டுவிலகுவது பெரும்பாலும் ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஓர் ஏற்பாடு இருக்கிறது.

“உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள், அப்போது குணமாவீர்கள்” என்று சீஷராகிய யாக்கோபு சொன்னதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். “நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது” என்றும் அவர் சொன்னார். (யாக்கோபு 5:16) இந்த ‘நீதிமான்’ யார்? இதே அதிகாரத்தின் 14-வது வசனத்தில் யாக்கோபு குறிப்பிட்ட ‘சபை மூப்பர்களில்’ ஒருவர் இந்த நீதிமானாக இருக்கலாம். ஆன்மீக விஷயங்களில் முதிர்ச்சியுள்ளவர்கள், அதாவது மூப்பர்கள், கிறிஸ்தவ சபையில் இருக்கிறார்கள். கடவுளுடைய மன்னிப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு உதவி செய்வதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ‘மூப்பர்களால்’ யாருடைய பாவத்தையும் மன்னிக்க முடியாது. ஏனென்றால், கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்பட்ட பாவத்தை மன்னிக்கிற அதிகாரம் எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும், படுமோசமான பாவத்தைச் செய்த ஒருவரைக் கண்டித்து சரிப்படுத்துவதற்குத் தேவையான ஆன்மீகத் தகுதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. அந்தப் பாவம் எந்தளவு படுமோசமானது என்பதையும், மனம் திருந்த வேண்டியது அவசியம் என்பதையும் பாவம் செய்தவர் புரிந்துகொள்ள அவர்கள் உதவுவார்கள்.—கலாத்தியர் 6:1.

பாவங்களை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்?

ஒருவர் செய்த பாவம் படுமோசமானதாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, கடவுளோடும் மற்றவர்களோடும் அவருக்கு இருந்த பந்தம் இப்போது பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால், அவருடைய மனம் குறுகுறுக்கலாம், வேதனைப்படலாம். அதற்குக் காரணம், படைப்பாளர் நமக்குக் கொடுத்த மனசாட்சி. (ரோமர் 2:14, 15) சரி, பாவம் செய்தவர் இப்போது என்ன செய்ய வேண்டும்?

யாக்கோபு புத்தகத்தில் உற்சாகமூட்டும் இந்த வார்த்தைகள் இருக்கின்றன: “உங்களில் எவனாவது வியாதியாக இருக்கிறானா? அப்படியானால், சபையில் இருக்கிற மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும். அவர்கள் யெகோவாவின் பெயரில் அவனுக்கு எண்ணெய் பூசி அவனுக்காக ஜெபம் செய்யட்டும். விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.”—யாக்கோபு 5:14, 15.

இங்கேயும், மூப்பர்கள்தான் மந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒருவர் என்ன பாவம் செய்தார் என்று கேட்டுக்கொள்வதோடு அவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. பாவம் செய்தவர் ஆன்மீக ரீதியில் வியாதியாக இருப்பதால், அவரை ‘குணமாக்க’ வேறு சிலவற்றையும் அவர்கள் செய்ய வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை யாக்கோபு குறிப்பிடுகிறார்.

முதல் விஷயம், ‘எண்ணெய் பூசுவது.’ இது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிற குணமாக்கும் சக்தியைக் குறிக்கிறது. “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. அது . . . இதயத்தில் இருக்கிற எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியும் சக்தி கொண்டது” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபிரெயர் 4:12) ஒருவருடைய மனதுக்குள்ளும் இதயத்துக்குள்ளும் கடவுளுடைய வார்த்தை ஊடுருவிப் போகிறது. மூப்பர்கள் பைபிளை நன்றாகப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள அந்த நபருக்கு உதவி செய்வார்கள். அதோடு, கடவுளுக்கு முன்னால் தன்னைச் சரிப்படுத்திக்கொள்வதற்கு என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதையும் காட்டுவார்கள்.

இரண்டாவது விஷயம், “விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம்.” மூப்பர்கள் செய்கிற ஜெபங்களைக் கேட்டு, நீதி செய்யும் விதத்தை கடவுள் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது உண்மைதான். ஆனாலும், இந்த ஜெபங்களைக் கடவுள் முக்கியமானவையாகக் கருதுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் பாவங்களை மன்னிக்க அவர் ஆர்வமாக இருக்கிறார். (1 யோவான் 2:2) உண்மையிலேயே மனம் திருந்தி, அப்படி ‘மனம் திருந்தியதைச் செயலில் காட்டுகிறவருக்கு’ உதவி செய்ய கடவுள் தயாராக இருக்கிறார்.—அப்போஸ்தலர் 26:20.

மற்றவர்களுக்கு விரோதமாகச் செய்த பாவமோ, கடவுளுக்கு விரோதமாகச் செய்த பாவமோ, எந்தப் பாவத்தையும் ஒத்துக்கொள்வதற்கான மிக முக்கியமான காரணம்... கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதுதான். நல்ல மனசாட்சியோடு கடவுளை வணங்க விரும்பினால், மற்றவர்களோடு இருக்கிற பிரச்சினைகளை முதலில் சரிசெய்து அவர்களோடு சமாதானமாக வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 5:23, 24) “ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது. ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்” என்று நீதிமொழிகள் 28:13 சொல்கிறது. யெகோவா தேவனுக்கு முன்னால் நம்மைத் தாழ்த்திக்கொண்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவருடைய தயவு நமக்குக் கிடைக்கும். சரியான நேரத்தில் அவர் நம்மை உயர்த்துவார்.—1 பேதுரு 5:6.

அக்டோபர் 14-20

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 பேதுரு 1-2

‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’

w17.02 9 ¶5

மீட்புவிலை தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”

5 யெகோவாவுடைய பெயரை நேசிக்கிறோம் என்பதை நாமும் நம்முடைய நடத்தையின் மூலம் காட்டலாம். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:15, 16-ஐ வாசியுங்கள்.) அதாவது, நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், முழு இதயத்தோடு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். நாம் துன்புறுத்தப்பட்டாலும், யெகோவாவுடைய சட்டங்களின்படி வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம்; இதன் மூலம், யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறோம். (மத். 5:14-16) அவர் கொடுத்திருக்கும் சட்டங்கள் நம்முடைய நன்மைக்குத்தான் என்பதையும், சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும் நிரூபிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நாம் தவறு செய்துவிடுகிறோம். பிறகு, உண்மையிலேயே மனம் திருந்துகிறோம், யெகோவாவுடைய பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச் செய்யாமல் இருக்கிறோம்.—சங். 79:9.

lvs 77 ¶6

பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

6 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று யெகோவா நம்மிடம் சொல்கிறார். (1 பேதுரு 1:14-16; 2 பேதுரு 3:11) நம்முடைய வணக்கம் பரிசுத்தமாக, அதாவது தூய்மையாக, இருந்தால்தான் யெகோவா அதை ஏற்றுக்கொள்வார். (உபாகமம் 15:21) நாம் யெகோவா வெறுக்கிற விஷயங்களில் ஈடுபட்டால், அதாவது ஒழுக்கக்கேடான, வன்முறையான அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டால், அவருக்கு நாம் செலுத்தும் வணக்கம் சுத்தமானதாக இருக்காது. (ரோமர் 6:12-14; 8:13) அப்படிப்பட்ட விஷயங்கள் அடங்கிய பொழுதுபோக்குகளை நாம் அனுபவிப்பதையும் யெகோவா வெறுக்கிறார். அது நம் வணக்கத்தை அசுத்தமானதாக ஆக்கிவிடும். அந்த வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரோடு நமக்கிருக்கும் பந்தமும் ரொம்பவே பாதிக்கப்படும்.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08 11/15 21 ¶10

யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

1:10-12. பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவ சபையாரைக் குறித்துக் கடவுளுடைய பூர்வ கால தீர்க்கதரிசிகள் எழுதிய ஆழமான ஆன்மீகச் சத்தியங்களை உன்னிப்பாய்க் கவனித்து, அவற்றைப் புரிந்துகொள்ளத் தேவதூதர்கள் ஆசைப்பட்டார்கள். என்றாலும், யெகோவா கிறிஸ்தவ சபையின் மூலமாக விஷயங்களைத் தெரிவிக்கத் துவங்கியபோதுதான் இவை தெளிவாயின. (எபே. 3:10) நாமும் தேவதூதர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, “தேவனுடைய ஆழங்களை” ஆராய்வதற்குக் கடினமாய் முயற்சி எடுக்க வேண்டும், அல்லவா?—1 கொ. 2:10.

it-2 565 ¶3

கண்காணி

உன்னத கண்காணி. ஒன்று பேதுரு 2:25-ல், “வழிதவறித் திரிகிற ஆடுகளை” போல இருக்கிறவர்களைப் பற்றி பேதுரு எழுதினார். ஏசாயா 53:6-ஐ இங்கே அவர் மேற்கோள் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. 1 பேதுரு 2:25-ன் பிற்பகுதியில், “இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்” என்று எழுதினார். இந்த வசனத்தில், யெகோவா தேவனைப் பற்றித்தான் பேதுரு குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், பேதுரு இந்தக் கடிதத்தை கிறிஸ்து இயேசுவிடமிருந்து விலகிப் போன ஆட்களுக்கு எழுதவில்லை. அதற்குப் பதிலாக, அவர் மூலமாக மகத்தான மேய்ப்பரான யெகோவா தேவனிடம் திரும்பி வந்தவர்களுக்குத்தான் எழுதினார். (சங் 23:1; 80:1; எரே 23:3; எசே 34:12) யெகோவா ஒரு கண்காணியாகவும் இருக்கிறார், அதாவது அவர் எல்லாரையும் சோதித்துப் பார்க்கிறவராக இருக்கிறார். (சங் 17:3) ஒருவேளை, கடவுள் சோதித்துப் பார்த்த (கிரேக்கில், எபிஸ்கோபி) பிறகு, தண்டனைத் தீர்ப்பு கொடுக்கத் தீர்மானிக்கலாம். உதாரணத்துக்கு, முதல் நூற்றாண்டில் இருந்த எருசலேம், “சோதனையிடப்படும்” காலத்தை பகுத்தறியாததால் (கிரேக்கில், எபிஸ்கோபெஸ்) கடவுளின் தண்டனைத் தீர்ப்பைப் பெற்றது. (லூ 19:43, 44, அடிக்குறிப்பு) அல்லது, கடவுள் சோதித்துப் பார்த்த பிறகு, சாதகமான தீர்ப்பையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்கத் தீர்மானிக்கலாம். அப்படி நல்ல பலன்களைப் பெறுகிறவர்கள் கடவுள் “சோதனையிடும்” (கிரேக்கில், எபிஸ்கோபெஸ்) நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.—1பே 2:12.

அக்டோபர் 21-27

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 பேதுரு 3-5

“எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது”

w13 11/15 3 ¶1

“ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”

“பொழுது விடியும் அதிகாலை நேரத்தில் தூங்காமல் கண்விழித்திருப்பது ரொம்பக் கஷ்டம்” என்று இரவுநேர வேலையைப் பார்த்த ஒருவர் சொல்கிறார். இரவு முழுக்க கண்விழித்து வேலை பார்க்கும் எல்லோருமே இதை நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள். இன்றைய கிறிஸ்தவர்கள்கூட ஆன்மீக ரீதியில் கண்விழித்திருக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், சாத்தானின் இந்த இருண்ட உலகம் அதன் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. (ரோ. 13:12) இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது! எனவே, நாம் ‘தெளிந்த புத்தியுடன் இருப்பதும்,’ ‘ஜெபம் செய்ய விழிப்புடன் இருப்பதும்’ மிக மிக முக்கியம்.—1 பே. 4:7.

w99 4/15 22 ¶3

ஆவிக்குரிய பலவீனத்தைக் கண்டுணர்ந்து களைவது எப்படி?

முடிவாக, அப்போஸ்தலன் பேதுருவின் இந்த அன்பான அறிவுரையை உறுதியாக மனதில் வையுங்கள்: “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:7, 8) மற்றவர்களுடைய மற்றும் நம்முடைய அபூரணங்கள், நம்முடைய இதயங்களிலும் மனங்களிலும் நுழைந்து முட்டுக்கட்டைகளாக அல்லது இடையூறுகளாக ஆகும்படி விடுவது வெகு எளிது. இந்த பலவீனத்தை சாத்தான் நன்றாக அறிந்திருக்கிறான். “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற பழமொழிக்கு ஏற்ப பிரிவினையை உண்டாக்கி வெல்வது அவனுடைய வஞ்சக சூழ்ச்சிகளில் ஒன்று. ஆகையால், ஊக்கமான அன்பால் அத்தகைய பாவங்களை உடனடியாக மூடிப்போட்டு நாம் ‘பிசாசுக்கு இடங்கொடாமல்’ இருக்க வேண்டும்.—எபேசியர் 4:25-27.

w18.03 14-15 ¶2-3

சந்தோஷமாக உபசரிப்பது—ரொம்ப முக்கியம்!

2 ‘ஒருவரை ஒருவர் உபசரிக்கும்படி,’ சகோதர சகோதரிகளை பேதுரு உற்சாகப்படுத்தினார். (1 பே. 4:9) “உபசரித்தல்” என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு, “அன்னியர்கள்மேல் அன்பு காட்டுவது அல்லது அவர்களுக்குத் தயவு காட்டுவது” என்று அர்த்தம். ஆனால், நன்றாகப் பழக்கப்பட்ட, ஒன்றாகச் சேர்ந்து வேலைகளைச் செய்கிற சகோதர சகோதரிகளிடம்தான் “ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” என்று பேதுரு சொன்னார். உபசரிப்பது அவர்களுக்கு எப்படி உதவும்?

3 உபசரிக்கும்போது ஒருவரோடு ஒருவர் நட்பாகப் பழக முடியும். உங்களை யாராவது வீட்டுக்கு அழைத்தபோது, அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவழித்த அனுபவம் இருக்கிறதா? அதோடு, நீங்கள் மற்றவர்களை அழைத்தபோது, அவர்களோடு நட்பாகப் பழகும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்திருக்கும். நம் சகோதர சகோதரிகளோடு நட்பாகப் பழகுவதற்கு ஒரு சிறந்த வழி, அவர்களை உபசரிப்பது! பேதுரு வாழ்ந்த காலத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டே போனதால், கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒருவர் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டியிருந்தது. இந்தக் “கடைசி நாட்களில்” நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.—2 தீ. 3:1.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w13 6/15 23

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இயேசு, “காவலிலுள்ள தேவதூதர்களிடம் போய்ப் பிரசங்கித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 3:19) இதன் அர்த்தம் என்ன?

▪ “முற்காலத்தில் நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்த நாட்களிலே, கடவுள் நீடிய பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தபோது கீழ்ப்படியாமல் போயிருந்தவர்கள்” என்று அந்தத் தேவதூதர்களைப் பற்றிப் பேதுரு சொல்கிறார். (1 பே. 3:20) சாத்தானோடு சேர்ந்து கலகம் செய்த தேவதூதர்களைப் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். “ஆரம்பத்தில் தங்களுக்கிருந்த ஸ்தானத்தைக் காத்துக்கொள்ளாமல் தங்களுக்கு ஏற்ற குடியிருப்பை விட்டுவிட்டதால்” கடவுள் “அவர்களை மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார்” என்று அந்தத் தேவதூதர்களைப் பற்றி யூதா சொல்கிறார்.—யூ. 6.

நோவாவின் நாட்களில் அவர்கள் எப்படிக் கீழ்ப்படியாமல் போனார்கள்? ஜலப்பிரளயத்துக்கு முன் அந்தப் பொல்லாத தேவதூதர்கள் மனித உருவெடுத்தார்கள்; இது கடவுளுடைய நோக்கத்திற்கு எதிரான செயல். (ஆதி. 6:2, 4) அதோடு, பெண்களுடன் அவர்கள் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டது இயற்கைக்கு மாறான செயல். அந்த நோக்கத்தோடு கடவுள் அவர்களைப் படைக்கவே இல்லை. (ஆதி. 5:2) அந்தப் பொல்லாத, கீழ்ப்படியாத தேவதூதர்கள் கடவுள் குறித்த காலத்தில் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். ஆனால், இப்போதோ யூதா சொல்வது போல் அவர்கள் ‘காரிருளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்,’ அதாவது, ஆன்மீகச் சிறையில் இருக்கிறார்கள்.

அப்படியென்றால், “காவலிலுள்ள தேவதூதர்களிடம்” இயேசு எப்போது, எப்படி பிரசங்கித்தார்? ‘பரலோகத்திற்குரிய உடலில் உயிர்ப்பிக்கப்பட்ட’ பிறகு இயேசு இதைச் செய்ததாக பேதுரு எழுதுகிறார். (1 பே. 3:18, 19) “பிரசங்கித்தார்” என்று இறந்தகாலத்தில் எழுதியிருக்கிறார். அப்படியானால், இயேசு தாம் உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு, ஆனால் பேதுரு முதல் கடிதத்தை எழுதுவதற்கு முன்பு, பிரசங்கித்திருக்க வேண்டும். அந்தப் பொல்லாத தூதர்களுக்கு எதிராக கடவுள் நிர்ணயித்த முற்றிலும் நியாயமான தண்டனைத் தீர்ப்பை இயேசு அறிவித்தார். அது நம்பிக்கை அளிக்கும் செய்தி அல்ல, தண்டனைத் தீர்ப்பின் செய்தி. (யோனா 1:1, 2) இயேசு இறுதி மூச்சுவிடும்வரை உண்மையோடு விசுவாசத்தைக் கைவிடாமல் இருந்ததால், யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி, பிசாசுக்கு அவர்மேல் அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்தார். அதனால்தான் இந்தக் கண்டனத்தீர்ப்பை இயேசுவால் சொல்ல முடிந்தது.—யோவா. 14:30; 16:8-11.

இயேசு, எதிர்காலத்தில் சாத்தானையும் அவனைச் சேர்ந்த தூதர்களையும் கட்டி அதலபாதாளத்தில் தள்ளிவிடுவார். (லூக். 8:30, 31; வெளி. 20:1-3) அதுவரை இந்தக் கீழ்ப்படியாத தூதர்கள் ஆன்மீக ரீதியில் காரிருளில் கிடப்பார்கள். அவர்களுக்கு அழிவு நிச்சயம்!—வெளி. 20:7-10.

w08 11/15 21 ¶8

யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

4:6—“மரித்தோரான” யாருக்கு “சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது”? இவர்கள், ‘அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்கள்’; அதாவது, நற்செய்தியைக் கேட்பதற்கு முன்பு ஆன்மீக ரீதியில் மரித்திருந்தவர்கள். (எபே. 2:1) என்றாலும், நற்செய்தியில் விசுவாசம் வைத்த பிறகு இவர்கள் ஆன்மீக ரீதியில் ‘உயிர் பிழைத்தார்கள்.’

அக்டோபர் 28–நவம்பர் 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 பேதுரு 1-3

‘யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்திருங்கள்’

w06 12/15 27 ¶11

யெகோவா “நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”

11 என்றாலும், யெகோவா “சீக்கிரத்திலே” நியாயம் செய்வார் என்று இயேசு உறுதியளித்ததன் அர்த்தம் என்ன? ‘[யெகோவா] நீடிய பொறுமையுள்ளவராயிருந்தாலும்’ உரிய காலத்தில் வேகமாக நியாயம் செய்வார் என்று கடவுளுடைய வார்த்தை காண்பிக்கிறது. (லூக்கா 18:7, 8; 2 பேதுரு 3:9, 10) நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்தபோது, பொல்லாத ஜனங்கள் உடனடியாக அழிக்கப்பட்டனர். அதேபோல, லோத்துவின் காலத்திலும் வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்தபோது, பொல்லாதவர்கள் அழிந்துபோயினர். “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்” என்று இயேசு கூறினார். (லூக்கா 17:27-30) மறுபடியும், பொல்லாத ஜனங்கள்மீது “அழிவு சடிதியாய்” வரும். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3) நியாயமாக சாத்தானுடைய உலகம் இருக்க வேண்டியதற்கு ஒரு நாள்கூட அதிகமாக நீடிக்க யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பதில் நாம் முழு நிச்சயமாய் இருக்கலாம்.

w06 12/15 19 ¶18

‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது’

18 தேவனுடைய நாளை’ எப்போதும் மனதில் வைத்திருக்கும்படி அப்போஸ்தலன் பேதுரு நமக்கு அறிவுறுத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை! இதை எவ்வாறு செய்யலாம்? ‘பரிசுத்த நடக்கையையும் தேவபக்தியையும்’ வெளிக்காட்டுகிற செயல்களில் ஈடுபடுவது ஒரு வழியாகும். (2 பேதுரு 3:11, 12) இவற்றில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது ‘யெகோவாவின் நாளை’ ஆவலோடு எதிர்பார்க்க நமக்கு உதவும். யெகோவாவின் நாள் வரும்வரையாக மீதமுள்ள நேரத்தை நம்மால் வேகப்படுத்த முடியாது. என்றாலும், அந்நாளுக்காக நாம் காத்திருக்கையில், நாம் கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டால் நேரம் அதிக வேகமாக கடந்து செல்வதுபோல் தோன்றும்.—1 கொரிந்தியர் 15:58.

புதையல்களைத் தோண்டி எடுங்கள்

w08 11/15 22 ¶2

யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

1:19—“விடிவெள்ளி” என அழைக்கப்படுவது யார், அவர் உதிப்பது எப்போது, இது நிகழ்ந்துவிட்டதென நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்? ராஜ்ய அதிகாரத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவே “விடிவெள்ளி” என அழைக்கப்படுகிறார். (வெளி. 22:16) ஒரு புதிய நாள் பிறந்துவிட்டதை அறிவிக்கிற விடிவெள்ளியாய், 1914-ல் எல்லாச் சிருஷ்டிகளுக்கும் முன்பாக மேசியானிய ராஜாவாக அவர் உதித்தார். இயேசுவின் மறுரூபக் காட்சி, அவரது மகிமைக்கும் ராஜ்ய அதிகாரத்திற்கும் ஒரு முற்காட்சியாக இருந்தது; அது, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை நம்பகமானது என்பதை உறுதிப்படுத்தியது. (மாற். 9:1-3) அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைக்குக் கவனம் செலுத்துவது நம் இருதயத்திற்கு அறிவொளியூட்டுவதால், விடிவெள்ளி உதித்துவிட்டதை நாம் புரிந்துகொள்கிறோம்.

w08 11/15 22 ¶3

யாக்கோபு மற்றும் பேதுரு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்

2:4—‘நரகம் [“டார்ட்டரஸ்,” NW]’ என்பது என்ன? கலகம் செய்த தூதர்கள் எப்போது அங்கே தள்ளப்பட்டார்கள்? டார்ட்டரஸ் என்பது, சிறைபடுத்தப்படுவதைப் போன்ற ஒரு நிலையாகும். மனிதர்கள் அந்நிலைக்குத் தள்ளப்படுவதில்லை; கெட்ட தூதர்களே தள்ளப்படுகிறார்கள். அது, கடவுளுடைய ஒளிமயமான நோக்கங்கள் சம்பந்தமாக மனதில் இருளடைந்த நிலையாகும். டார்ட்டரஸில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய எந்த நம்பிக்கையும் இருக்காது. நோவாவின் காலத்தில் கீழ்ப்படியாத தூதர்களை டார்ட்டரஸில் கடவுள் தள்ளினார்; அவர்கள் அழிக்கப்படும் வரையில் அந்தத் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே இருப்பார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்