வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
நவம்பர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 யோவான் 1-5
“இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்”
இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுங்கள்
13 உலகத்திலுள்ள எல்லாக் காரியங்களுமே தவறானதல்ல என்பதாக சிலர் நினைக்கலாம். அது உண்மையாக இருந்தாலும், இந்த உலகமும் அதன் வசீகரங்களும் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து நம்மை எளிதாகத் திசைத்திருப்பி விடலாம். இந்த உலகம் தருகிற எதுவுமே கடவுளிடம் நெருங்கிச் செல்ல உதவுபவை அல்ல. ஆகவே, உலக காரியங்களில் அன்புகூர ஆரம்பித்தால், ஒருவேளை அவை தீங்கற்றவையாக இருந்தாலும்கூட நாம் ஆபத்தான பாதையில் போகிறோம் என்று அர்த்தம். (1 தீமோத்தேயு 6:9, 10) இன்னும் சொல்லப்போனால், உலகத்திலுள்ள பெரும்பாலான காரியங்கள் முற்றிலும் தீயவையே, அவை நம்மை பாழாக்கிவிடும். வன்முறை, பொருளாசை, பாலியல் ஒழுக்கக்கேடு ஆகியவற்றைச் சிறப்பித்துக்காட்டுகிற திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து பார்ப்போமானால் அவை நமக்குத் தவறானவையாகவே தோன்றாது, பிற்பாடு அவை நம் மனதில் சபலத்தை ஏற்படுத்திவிடும். வசதியாக வாழ்வதில், அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டுவோருடன் நாம் சகவாசம் வைத்துக்கொண்டால் நாமும் அந்தக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விடுவோம்.—மத்தேயு 6:24; 1 கொரிந்தியர் 15:33.
நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்
18 ‘இந்த உலகத்திலுள்ள காரியங்களை’ எதிர்ப்பதற்கு உதவும் மற்றொரு வழி யோவானின் இந்த வார்த்தைகளை நினைவில் வைப்பது: “இந்த உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.” (1 யோ. 2:17) சாத்தானுடைய உலகம் அழியவே அழியாது என தோன்றலாம். ஆனால், அது நிச்சயம் ஒரு நாள் அழியப்போகிறது. சாத்தானுடைய உலகம் தருகிற எதுவும் நிலையானது அல்ல. இதை நினைவில் வைத்தால் அவனுடைய வஞ்சக வலையில் விழ மாட்டோம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை
14 ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவதன் அவசியத்தைப் பற்றி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் நிறைய நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்” என்பதே இரண்டாவது தலைசிறந்த கட்டளை என்று இயேசு சொன்னார். (மத். 22:39) இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு இந்த அன்பை “ராஜ சட்டம்” என்று அழைத்தார். (யாக். 2:8) அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “அன்புக் கண்மணிகளே, நான் உங்களுக்கு எழுதுவது ஒரு புதிய கட்டளை அல்ல, ஆரம்பத்திலிருந்து நீங்கள் பெற்ற பழைய கட்டளைதான்.” (1 யோ. 2:7, 8) யோவான் எதை “பழைய கட்டளை” என்று சொன்னார்? அன்பு காட்டுவது பற்றிய கட்டளையையே சொன்னார். பல பத்தாண்டுகளுக்கு முன்பே இயேசு இந்தக் கட்டளையைக் கொடுத்திருந்ததால்தான் “ஆரம்பத்திலிருந்து நீங்கள் பெற்ற பழைய” கட்டளை என்று யோவான் குறிப்பிட்டார். அதேசமயம் இதை “புதிய கட்டளை” என்றும் சொன்னார்; அதாவது, புதிய சூழ்நிலைகளைச் சீடர்கள் எதிர்ப்படும்போது சுயதியாக அன்பைக் காட்ட வேண்டியிருக்கும் என்றார். சக மனிதர்மீது அன்பு காட்டுவதைத் தடுக்கும் சுயநல மனப்பான்மை இந்த உலகத்தில் பரவலாகக் காணப்படுகிறது; இயேசுவின் சீடர்களான நாம் மேலே சொல்லப்பட்ட எச்சரிப்புக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
it-1-E 862 ¶5
மன்னிப்பு
மற்றவர்களை மன்னிக்கும்படி கடவுளிடம் ஜெபம் செய்வதில் தவறு இல்லை. முழு சபையையும் மன்னிக்கும்படிகூட நாம் அவரிடம் கேட்கலாம். உதாரணத்துக்கு, மோசே இஸ்ரவேல் தேசத்தாரின் பாவத்தை ஒத்துக்கொண்டு அவர்களுக்காகக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டார். அவர் கேட்டுக்கொண்டபடியே யெகோவா அவர்களை மன்னித்தார். (எண் 14:19, 20) சாலொமோனும் ஆலயத்தை அர்ப்பணித்தபோது கடவுளுடைய மக்களுக்காக ஜெபம் செய்தார்; அவர்கள் பாவம் செய்த பிறகு மனம் திருந்தினால் அவர்களை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கேட்டார். (1ரா 8:30, 33-40, 46-52) அதேபோல், தாய்நாட்டுக்குத் திரும்பிய யூதர்களின் சார்பாக, எஸ்றா அவர்களுடைய பாவங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அவர் மனதார ஜெபம் செய்ததாலும் அறிவுரை சொன்னதாலும், மக்கள் மனம் திருந்தினார்கள். யெகோவாவின் மன்னிப்பைப் பெறுவதற்காக அவர்கள் செய்ய வேண்டியிருந்ததைச் செய்தார்கள். (எஸ்றா 9:13–10:4, 10-19, 44) ஆன்மீக விதத்தில் வியாதியாக இருக்கிறவர் சபையில் இருக்கும் மூப்பர்களை வரவழைக்க வேண்டுமென்று யாக்கோபு சொன்னார். மூப்பர்கள் அவருக்காக ஜெபம் செய்வார்கள், “அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை [யெகோவா] மன்னிப்பார்” என்று சொன்னார். (யாக் 5:14-16) ஆனால், ‘மரணத்துக்கு வழிநடத்துகிற பாவத்துக்கு,’ அதாவது கடவுளுடைய சக்திக்கு எதிராகச் செய்யப்படும் பாவத்துக்கு, வேண்டுமென்றே தொடர்ந்து செய்யப்படும் பாவத்துக்கு, மன்னிப்பே இல்லை. அப்படிப்பட்ட பாவத்தைச் செய்கிறவர்களுக்காக நாம் ஜெபம் செய்யக் கூடாது.—1யோ 5:16; மத் 12:31; எபி 10:26, 27.
நவம்பர் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 யோவான் 1–யூதா
“சத்தியத்தில் நிலைத்திருக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்”
‘கர்த்தரின் வல்லமையில் பலப்படுங்கள்’
8 சாத்தானின் தந்திரங்கள் நமக்கு தெரியாதவை அல்ல; ஏனெனில் அவன் பயன்படுத்தும் முக்கியமான சூழ்ச்சி முறைகளை பைபிள் அம்பலப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 2:11) நீதிமானாயிருந்த யோபுவுக்கு எதிராக அவன் பயன்படுத்திய சூழ்ச்சி முறைகளாவன: கடும் பொருளாதார பிரச்சினைகள், அன்பானவர்களின் மரணம், குடும்பத்தில் எதிர்ப்பு, உடல் உபாதைகள், போலி நண்பர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை. யோபு மிகவும் மனமொடிந்து போய், கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக நினைத்தார். (யோபு 10:1, 2) இன்று இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சாத்தான் நேரடியாக தாக்காத போதிலும் இப்படிப்பட்ட இன்னல்கள் அநேக கிறிஸ்தவர்களை பாதிக்கத்தான் செய்கின்றன; அதோடு தனக்கு சாதகமாக இவற்றை பிசாசால் பயன்படுத்த முடியும்.
9 இந்த முடிவின் காலத்தில் ஆன்மீக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. ஆன்மீக இலக்குகளை ஒதுக்கித்தள்ளி பொருளாதார நாட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். முறைகேடான செக்ஸை மனதுக்கு வேதனை தரும் ஒன்றாக அல்ல, ஆனால் இன்பம் தரும் ஒன்றாகவே மீடியாக்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன. அநேகர் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” ஆகியிருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5) ‘விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடவில்லை’ என்றால் இவ்விதமான சிந்தை நம் ஆன்மீக சமநிலைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.—யூதா 3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 279
அன்பின் விருந்துகள்
இந்த விருந்துகளைப் பற்றி பைபிள் விளக்குவதில்லை. அவை எவ்வளவு அடிக்கடி ஏற்பாடு செய்யப்பட்டன என்பதைப் பற்றியும் சொல்வதில்லை. (யூ 12) எஜமானர் இயேசு கிறிஸ்துவோ அவருடைய அப்போஸ்தலர்களோ அவற்றைக் கட்டளையாகக் கொடுக்கவில்லை. அதனால், அவற்றைக் கட்டாயமாக அல்லது நிரந்தரமாக ஏற்பாடு செய்ய வேண்டுமென யாரும் நினைக்க வேண்டியதில்லை. அந்த விருந்துகளை வசதியான கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்ததாகவும், ஏழ்மையில் இருந்த சகோதர சகோதரிகளை அந்த விருந்துகளுக்கு அழைத்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். தாய் தகப்பன் இல்லாதவர்கள், விதவைகள், பணக்காரர்கள், ஏழைகள் என எல்லாருமே ஒன்றுசேர்ந்து அன்போடும் பாசத்தோடும் விருந்து சாப்பிட்டதாகச் சொல்லப்படுகிறது.
it-2-E 816
பாறை
ஸ்பைலாஸ் என்ற கிரேக்க வார்த்தை, தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் பாறையை அல்லது பாறைத்தொடரைக் குறிப்பதாகத் தெரிகிறது. கெட்ட எண்ணத்தோடு கிறிஸ்தவ சபையில் நுழைந்திருந்த சில ஆட்களைக் குறிப்பதற்காக யூதா அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கும் பாறைகள் கப்பல்களுக்கு ஆபத்தாக இருப்பதுபோல், அந்த ஆட்கள் சபையில் இருந்த மற்றவர்களுக்கு ஆபத்தாக இருந்தார்கள். “அன்பின் விருந்துகளில் உங்களோடு உணவு சாப்பிடுகிற அவர்கள், தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கிற பாறைகள்” என்று யூதா சொன்னார்.—யூ 12.
wp17.1 12 ¶1
‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
ஏனோக்கு எதைப் பற்றி தீர்க்கதரிசனம் சொன்னார்? பைபிளில் இப்படி வாசிக்கிறோம்: “இதோ! யெகோவா தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார். கடவுள்பக்தி இல்லாத எல்லாரும் கடவுள்பக்தி இல்லாத விதத்தில் செய்த கடவுள்பக்தி இல்லாத எல்லா செயல்களுக்காகவும், கடவுள்பக்தி இல்லாத பாவிகள் தனக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சுக்காகவும் அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்க வந்தார்.” (யூதா 14, 15) இந்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருப்பதை கடவுள் ஏற்கெனவே நிறைவேற்றிவிட்டதுபோல் ஏனோக்கு சொல்லியிருக்கிறார். இவருக்கு பிறகு வந்த நிறைய தீர்க்கதரிசிகள்கூட இதுபோல தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கடவுள் சொன்னது நிச்சயமாக நடக்கும் என்று ஏனோக்கு உறுதியாக நம்பியதால் அது நடந்துவிட்டதுபோல அவர் சொன்னார்.—ஏசாயா 46:10.
wp17.1 12 ¶3
‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
ஏனோக்குக்கு இருந்த அதே விசுவாசம் நமக்கும் இருந்தால் இன்று இருக்கும் உலகத்தை யெகோவா பார்க்கும் விதமாக நாமும் பார்ப்போம். இன்று இருக்கும் மக்களும் ஏனோக்கு காலத்தில் வாழ்ந்த மக்களைப் போலவே இருக்கிறார்கள். அதனால் அந்த எச்சரிப்பு செய்தி இன்று இருக்கும் மக்களுக்கும் பொருந்தும். ஏனோக்கு சொன்னது போலவே அந்தத் தேவபக்தியற்ற மக்களை நோவாவின் காலத்தில், பெருவெள்ளத்தினால் யெகோவா அழித்தார். கடவுள்பக்தியற்ற மக்களை யெகோவா அப்போது அழித்தது போலவே எதிர்காலத்திலும் அழிப்பார். (மத்தேயு 24:38, 39; 2 பேதுரு 2:4-6) அவர்களை அழிப்பதற்கு கடவுள் அவருடைய பரிசுத்த தூதர்களோடு தயாராக காத்திருக்கிறார். அதனால் ஏனோக்கு சொன்ன செய்திக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்ல வேண்டும். ஆனால், நம்முடைய சொந்தக்காரர்களும், நண்பர்களும் அந்தச் செய்தியை கேட்காமல் போகலாம். நாம் தனியாக இருப்பது போல் உணரலாம். ஏனோக்கை யெகோவா எப்படி கைவிடவில்லையோ அதேபோல் இன்றும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களை கைவிட மாட்டார்.
நவம்பர் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 1-3
“உன் செயல்களை . . . நான் அறிந்திருக்கிறேன்”
எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டுகிறீர்கள்?
8 அப்படிப்பட்ட மனப்பான்மையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் ‘வலது கையில் ஏழு நட்சத்திரங்கள் இருப்பதாக’ பைபிள் சொல்வதை நினைவில் வைக்க வேண்டும். இந்த “நட்சத்திரங்கள்” பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்களைக் குறிப்பதாக இருந்தாலும், சபைகளிலுள்ள எல்லா மூப்பர்களையும் குறிக்கின்றன. இந்த ‘நட்சத்திரங்களை’ இயேசு தாம் விரும்புகிறபடியெல்லாம் வழிநடத்த முடியும். (வெளி. 1:16, 20) அவர் கிறிஸ்தவ சபைக்குத் தலைவராக இருப்பதால் மூப்பர்களுக்கிடையே நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்திருக்கிறார். ‘தீ ஜுவாலையைப் போன்ற’ கண்கள் இயேசுவுக்கு இருப்பதால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே, மூப்பர்களில் ஒருவர் தவறு செய்யும்போது தமக்கே உரிய வழியில், தமக்கே உரிய நேரத்தில் அதை அவர் சரிசெய்வார். (வெளி. 1:14) இதற்கிடையே, அவருடைய வலது கையிலுள்ள மூப்பர்களுக்கு நாம் தொடர்ந்து மரியாதை காட்ட வேண்டும். இதைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்களைக் காத்து வருகிறார்கள்; ஆகவே, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்; அப்போது, அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்யாமல் சந்தோஷத்தோடு செய்வார்கள்; அவர்கள் இதைத் துக்கத்தோடு செய்தால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்.”—எபி. 13:17.
மீட்பு பெறுவதற்காக யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார்
11 ஆசியா மைனரிலுள்ள ஏழு சபைகளையும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்து கண்காணித்ததாக வெளிப்படுத்துதல் 2-ஆம், 3-ஆம் அதிகாரங்களில் உள்ள தரிசனம் குறிப்பிடுகிறது. பொதுவாக அந்தச் சபைகள் எப்படி இருந்தன என்பதை மட்டுமல்ல, அவற்றில் என்ன குறைகள் இருந்தன என்பதையும் கிறிஸ்து கவனித்தார். அவற்றிலிருந்த தனி நபர்கள் சிலரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதோடு, ஒவ்வொரு சபைக்கும் தேவைப்பட்ட ஆலோசனையை வழங்கினார். அவற்றிற்குரிய பாராட்டையும் தெரிவித்தார். இந்தத் தரிசனத்திலிருந்து நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? அந்த ஏழு சபைகள்... 1914-க்குப் பிறகு வாழ்ந்த/வாழ்கிற பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கின்றன. அந்தச் சபைகளுக்கு கிறிஸ்து கொடுத்த ஆலோசனை... முக்கியமாய்ப் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்காகக் கொடுக்கப்பட்டாலும், இன்று உலகெங்குமுள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளுக்குமே அது பொருந்தும். எனவே, இன்று தமது மகன் மூலம் யெகோவா தம் மக்களை வழிநடத்துகிறார் என்று உறுதியாய்ச் சொல்லலாம். அவருடைய வழிநடத்துதலிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுங்கள்
20 கடவுளுடைய அமைப்பு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; அதோடு சேர்ந்து நாமும் முன்னேற வேண்டுமென்றால், ‘சபைக்கு கிறிஸ்துவை தலைவராக’ கடவுள் நியமித்திருக்கிறார் என்பதையும் அவருடைய பணியையும் புரிந்துகொள்வது அவசியம். (எபேசியர் 5:22, 23) ஏசாயா 55:4-ல் சொல்லப்பட்ட குறிப்புக்கு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்: ‘இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் நான் [யெகோவா] ஏற்படுத்தினேன்.’ எவ்வாறு தலைமை ஏற்று நடத்துவது என்பது இயேசுவிற்கு தெரிந்த விஷயமே. அவருடைய மந்தையைப் பற்றியும் அவை செய்யும் பணிகளைப் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும். அவர் ஆசியா மைனரில் இருந்த ஏழு சபைகளை ஆய்வு செய்தபோது ஐந்து முறை, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்” என்று சொன்னார். (வெளிப்படுத்துதல் 2:2, 19; 3:1, 8, 15) யெகோவா எவ்வாறு நம் தேவைகளை அறிந்திருக்கிறாரோ அதேவிதமாகவே இயேசுவும் அறிந்திருக்கிறார். பரமண்டல ஜெபத்தை சொல்லிக் கொடுப்பதற்கு முன் இயேசு சொன்னதாவது, கடவுளாகிய “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”—மத்தேயு 6:8-13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது
10 செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பது. அடுத்ததாக, கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் எல்லாரும் ஒரு சம்பவத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். அது அவர்களுடைய வேதனையை இன்னும் அதிகமாக்கும். “மனிதகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களில் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்” என்று இயேசு சொன்னார். (மாற். 13:26) அந்தக் காட்சி, இயேசு தீர்ப்பளிக்க வந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும். அந்தத் தீர்ப்பைப் பற்றிய கூடுதலான விவரங்களை, கடைசி நாட்களைப் பற்றிய அதே தீர்க்கதரிசனத்தில் இயேசு சொன்னார். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம். (மத்தேயு 25:31-33, 46-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு ஆதரவு கொடுப்பவர்கள் ‘செம்மறியாடுகளாக’ தீர்ப்பளிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய ‘விடுதலை நெருங்கிவிட்டது’ என்பதை அறிந்து தங்கள் ‘தலைகளை உயர்த்துவார்கள்.’ (லூக். 21:28) ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகள் ‘வெள்ளாடுகளாக’ தீர்ப்பளிக்கப்படுவார்கள். தாங்கள் ‘நிரந்தரமாக அழிக்கப்படப்போவதை’ நினைத்து “நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.”—மத். 24:30; வெளி. 1:7.
w09 1/15 31 ¶1
வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
2:7—‘தேவனுடைய பரதீஸ்’ என்றால் என்ன? இந்த வார்த்தைகள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடம் சொல்லப்படுவதால், இது பரதீஸ் போன்றிருக்கும் பரலோகத்தையே, அதாவது கடவுளுடைய சமூகத்தையே குறிக்க வேண்டும். அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ளோர் ‘ஜீவ விருட்சத்திலிருந்து’ உண்ணும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்கள் சாவாமை வரத்தைப் பெறுவார்கள்.—1 கொ. 15:53.
நவம்பர் 25–டிசம்பர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 4-6
“நான்கு குதிரைவீரர்களின் சவாரி”
wp17.3 4 ¶3
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்யும் அந்த வீரர் யார்? அதே வெளிப்படுத்துதல் புத்தகம் அதற்கான பதிலைத் தருகிறது. இந்தக் குதிரைவீரரை “கடவுளுடைய வார்த்தை” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 19:11-13) கடவுளின் சார்பாகப் பேசுவதால் இயேசுவுக்குத்தான் வார்த்தை என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. (யோவான் 1:1, 14) “ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்” என்று அவர் அழைக்கப்படுகிறார். அவர் ‘நம்பகமானவராகவும் உண்மையானவராகவும்’ இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 19:11, 16) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ராஜாவாகவும் மாவீரராகவும் செயல்படும் அதிகாரம் இயேசுவுக்கு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அதிகாரத்தை அவர் நிச்சயம் தவறாகப் பயன்படுத்த மாட்டார்.
wp17.3 4 ¶5
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
இந்தக் குதிரைவீரர்கள் எப்போது அவர்களுடைய சவாரியை ஆரம்பித்தார்கள்? முதல் குதிரைவீரரான இயேசு, கிரீடம் சூட்டப்பட்ட உடனேயே தன்னுடைய சவாரியை ஆரம்பித்தார். (வெளிப்படுத்துதல் 6:2) அவர் எப்போது பரலோகத்தில் ராஜாவாக கிரீடம் சூட்டப்பட்டார்? அவர் இறந்து, பரலோகத்துக்குப் போய் கொஞ்சக் காலம் காத்திருந்தார். பிறகுதான் அவர் ராஜாவாக ஆனார். (எபிரெயர் 10:12, 13) அவர் காத்திருக்கும் காலப்பகுதி எப்போது முடிவுக்கு வரும் என்பதையும், அவருடைய ஆட்சி பரலோகத்தில் எப்போது ஆரம்பிக்கும் என்பதையும் தன் சீஷர்கள் புரிந்துகொள்ள இயேசு சில அடையாளங்களைச் சொல்லியிருந்தார். பரலோகத்தில் தன்னுடைய ஆட்சியை அவர் ஆரம்பிக்கும்போது பூமியில் நிலைமைகள் எப்போதையும்விட படுமோசமாக ஆகும் என்று அவர் சொல்லியிருந்தார். அதாவது போர், பஞ்சம், கொள்ளைநோய் போன்றவை வரும் என்று சொல்லியிருந்தார். (மத்தேயு 24:3, 7; லூக்கா 21:10, 11) 1914-ல் முதல் உலகப் போர் ஆரம்பித்த பிறகுதான், உலக நிலைமைகள் ரொம்ப மோசமாயின. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ‘கடைசி நாட்கள்’ ஆரம்பித்துவிட்டது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—2 தீமோத்தேயு 3:1-5.
wp17.3 5 ¶2
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
இந்தக் குதிரைவீரன் போருக்குப் படமாக இருக்கிறான். அவன் ஏதோ சில தேசங்களிலிருந்து மட்டுமல்ல, முழு பூமியிலிருந்தும் சமாதானத்தை எடுத்துப்போடுகிறான். 1914-ல்தான், சரித்திரத்திலேயே முதல்முறையாக உலகப் போர் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது உலகப் போர் நடந்தது. முதல் உலகப் போரைவிட இது மோசமாக இருந்தது. 1914-லிருந்து போராலும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களாலும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துபோயிருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. அவற்றால் பலர் படுகாயமும் அடைந்திருக்கிறார்கள்.
wp17.3 5 ¶4-5
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
“ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது. பின்பு, நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, ‘ஒரு தினாரியுவுக்கு ஒரு படி கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு [அதாவது, ஒரு தினாரியுவுக்கு] மூன்று படி பார்லி; ஒலிவ எண்ணெயையும் திராட்சமதுவையும் தீர்த்துவிடாதே’ என்று சொன்னது.”—வெளிப்படுத்துதல் 6:5, 6.
இந்தக் குதிரைவீரன் பஞ்சத்தை அடையாளப்படுத்துகிறான். உணவுத் தட்டுப்பாடு எந்தளவு இருக்கும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது. முதல் நூற்றாண்டில், ஒருநாள் முழுக்க வேலை செய்தால்தான் ஒரு தினாரியு கிடைக்கும். அந்த ஒரு தினாரியுவுக்கு ஒருபடி (0.7 கிலோ) கோதுமைதான் கிடைக்கும் என்று இந்தத் தரிசனம் சொல்கிறது. (மத்தேயு 20:2) அதோடு, கோதுமையைவிட மலிவாக கிடைக்கும் பார்லி, ஒரு தினாரியுவுக்கு மூன்றுபடிதான் (2.1 கிலோ) கிடைக்கும் என்றும் சொல்கிறது. அப்படியிருக்கும்போது, ஒரு பெரிய குடும்பத்திலிருக்கும் எல்லாருக்கும் எப்படி உணவு கிடைக்கும்? அந்தத் தரிசனத்தில் வேறென்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். அடிப்படை உணவான ஒலிவ எண்ணெயையும் திராட்சமதுவையும் “தீர்த்துவிடாதே” என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உணவையே பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
wp17.3 5, 8 ¶8-10
நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?
கொள்ளைநோயாலும் வேறு காரணத்தாலும் வரக்கூடிய மரணத்துக்கு இந்தக் குதிரைவீரன் படமாக இருக்கிறான். 1914-க்குப் பிறகு பல கோடி மக்கள் ஸ்பானிஷ் ஃப்ளூவால் இறந்துபோனார்கள். கிட்டத்தட்ட 50 கோடி மக்கள், அதாவது அன்றைய ஜனத்தொகையில் மூன்று பேரில் ஒருவர், இந்த வியாதியால் பாதிக்கப்பட்டார்கள்.
அதுமட்டுமல்ல, 20-ஆம் நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் சின்னம்மையால் (smallpox) இறந்துபோயிருக்கிறார்கள் என்று நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். மருத்துவ துறை எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற நோய்களுக்கு இன்றும் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
போரோ பஞ்சமோ கொள்ளைநோயோ எதுவாக இருந்தாலும் சரி, அதன் விளைவு மரணம்தான். இவற்றுக்குப் பலியான எல்லாரையும் கல்லறை விழுங்கிவிடுகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை
8 பூர்வ வாசஸ்தலத்தில் சேவை செய்வதற்கு ஆசாரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை யோவான் அறிந்திருந்தார். எனவே அவர் அடுத்து விவரிப்பதைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்திருக்கக்கூடும்: “அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன் முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 4:4) ஆம், ஆசாரியர்களுக்குப் பதிலாக, 24 மூப்பர்கள் அங்கே சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு அரசர்களைப் போன்று முடிசூட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூப்பர்கள் யார்? அவர்கள் கிறிஸ்தவ சபையின் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை, உயிர்த்தெழுப்பப்பட்டு, அவர்களுக்கு யெகோவா வாக்களித்திருந்த பரலோக ஸ்தானத்தில் இருக்கின்றனர். அது நமக்கு எவ்வாறு தெரியும்?
யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை
19 இந்த ஜீவன்கள் எதற்குப் படமாக இருக்கின்றன? மற்றொரு தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலினால் அறிவிக்கப்பட்ட ஒரு தரிசனம் விடையைக் காண்பதற்கு நமக்கு உதவுகிறது. எசேக்கியேல், யெகோவா பரம ரதத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அதோடு யோவானால் விவரிக்கப்பட்டதைப் போன்ற அதே இயல்புகளைக் கொண்டிருக்கிற ஜீவன்களும் உடன் சென்றன. (எசேக்கியேல் 1:5-11, 22-28) பிறகு, எசேக்கியேல் ரத சிங்காசனம், அதோடு ஜீவன்கள் உடன்செல்வதை மீண்டும் கண்டார். இருப்பினும், இந்தச் சமயத்தில், ஜீவன்களை கேருபீன்கள் என்பதாகக் குறிப்பிட்டார். (எசேக்கியேல் 10:9-15) யோவான் பார்க்கிற நான்கு ஜீவன்கள் தேவனுடைய அநேக கேருபீன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்—அவருடைய ஆவி அமைப்பில் உயர்ந்த நிலையிலுள்ள சிருஷ்டிகள். பூர்வ ஆசரிப்புக்கூடார ஏற்பாட்டில், யெகோவாவின் சிங்காசனத்தைப் பிரதிநிதித்துவம் செய்த உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனத்தின் மீது இரண்டு தங்க கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்ததனால், யெகோவாவின் முன்னிலையில் அவ்வளவு அருகாமையில் கேருபீன்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்கையில் யோவான் இதை அசாதாரணமாக நினைத்திருக்க மாட்டார். இந்தக் கேருபீன்களுக்கு இடையில் இருந்து, யெகோவாவின் சத்தம் தேசத்திற்கு கட்டளைகளைக் கொடுத்தது.—யாத்திராகமம் 25:22; சங்கீதம் 80:1.
‘இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கம்’
5 பொதுவாக, சிங்கம் தைரியத்திற்கு ஒப்பிடப்படுகிறது. ஒரு பெரிய ஆண் சிங்கத்தின் முன் நேருக்குநேர் நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்திருந்தால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நின்றே அதைப் பார்த்திருப்பீர்கள், ஒருவேளை மிருகக்காட்சி சாலையில் ஒரு வேலிக்குப் பின்னால் நின்றே பார்த்திருப்பீர்கள். அதுவும்கூட குலைநடுங்க வைக்கும் அனுபவமே! வலிமைமிக்க இந்தக் கம்பீரமான மிருகத்தின் முகத்தை நீங்கள் பார்க்கும்போது, அதுவும் உங்களையே உற்றுப் பார்க்கிறது. அது உங்களைப் பார்த்து பயந்து ஓடுவதாக உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது. “சிங்கம் எல்லா மிருகங்களைவிடவும் மிகவும் பலம் பொருந்தியது. அது எதைக் கண்டும் ஓடுவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 30:30, ஈஸி டு ரீட் வர்ஷன்) கிறிஸ்து சிங்கம் போன்ற தைரியம் உடையவர்.
6 சிங்கம் போன்ற தைரியத்தை இயேசு மூன்று விதங்களில் காட்டினார்: சத்தியத்தின் சார்பாக நின்றபோது, நியாயத்தை நிலைநாட்டியபோது, எதிர்ப்பை எதிர்கொண்டபோது. அதை இப்போது பார்ப்போம். அதோடு, நாம் எல்லாரும்—இயல்பாகவே தைரியசாலிகளாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி—இந்த விஷயத்தில் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம் என்றும் பார்ப்போம்.