வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
ஜனவரி 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 32-33
கவலையில் வாடுகிறவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள்
it-1-E பக். 710
எலிகூ
எலிகூ பாரபட்சம் காட்டவில்லை, யாரையும் போலியாக புகழவும் இல்லை. யோபுவையும் தன்னையும் சர்வ வல்லமையுள்ள கடவுள் மண்ணில் இருந்துதான் படைத்தார் என்பதை எலிகூ புரிந்துவைத்திருந்தார். யோபுவை பயமுறுத்துகிற விதமாக பேச வேண்டும் என்று எலிகூ நினைக்கவில்லை, அதற்கு பதிலாக உண்மையான நண்பனைப் போல நடத்தினார், அவரைப் பெயர் சொல்லி அழைத்தார். இதைத்தான் எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோப்பார் செய்ய தவறினார்கள்.—யோபு 32:21, 22; 33:1, 6.
யெகோவாவைப்போல் பலவீனரைத் தாங்குங்கள்
8 நம்முடைய அன்பான சகோதர சகோதரிகள் பிரச்சினைகளின் காரணமாகச் சோர்ந்துபோயிருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒருவேளை வியாதியால் அவதிப்படலாம், சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோடு போராடிக்கொண்டிருக்கலாம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு வந்தால் மற்றவர்கள் நம்மைப் புரிந்து நடக்க வேண்டும் என்றுதானே எதிர்பார்ப்போம்? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்குமுன், இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த ஆலோசனை நமக்கும் பொருந்தும். அடிமைகளாக அவர்கள் எகிப்தில் பல கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள். அதனால், கஷ்டத்தில் தவிக்கும் சொந்த சகோதரர்களிடம் ‘இருதயத்தை கடினமாக்கக்கூடாது’ என்று யெகோவா தெளிவாகச் சொல்லியிருந்தார். பலவீனரை அவர்கள் தாங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.—உபா. 15:7, 11; லேவி. 25:35-38.
9 கஷ்டத்தில் இருப்பவர்களிடம் நாம் ஆறுதலாகப் பேச வேண்டும். அவர்களைக் குற்றப்படுத்தவோ சந்தேகப்படவோ கூடாது. (யோபு 33:6, 7; மத். 7:1) ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: சாலை விபத்தில் அடிபட்ட ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டுவந்தால், என்ன செய்வார்கள்? உடனடியாகச் சிகிச்சை கொடுப்பார்கள். அதை விட்டுவிட்டு, விபத்திற்கு யார் காரணம் என்று ஆராய மாட்டார்கள். அதுபோலவே, பிரச்சினைகளின் காரணமாக யாராவது சோர்ந்துபோயிருந்தால், முதலில் அவர்களுக்கு ஆன்மீக ரீதியில் ‘சிகிச்சை’ அளிப்பதுதான் முக்கியம்.—1 தெசலோனிக்கேயர் 5:14-ஐ வாசியுங்கள்.
10 ஒருவர் என்ன கஷ்டங்களை எதிர்ப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அவரைப் பலவீனராக நினைக்க மாட்டோம். அநேக சகோதரிகள் குடும்பத்தாருடைய எதிர்ப்பின் மத்தியிலும் பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறார்கள். பார்ப்பதற்கு ஆன்மீக விதத்தில் பலவீனமாக தெரிந்தாலும் அவர்கள் விசுவாசத்தில் பலமுள்ளவர்கள். பிள்ளைகளோடு தவறாமல் கூட்டங்களுக்கு வரும் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கும்போது அவர்களுடைய விசுவாசத்தையும் மன உறுதியையும் எவ்வளவாய் போற்றுகிறோம்! விசுவாசத்தில் உறுதியாக இருக்கும் நம் இளைஞர்களைப் பாருங்கள்! ஒவ்வொரு நாளும் சக மாணவர்களிடமிருந்து வரும் தொல்லைகள் மத்தியிலும் இவர்கள் சகித்திருக்கிறார்கள். இவர்களைப்போல் அநேகர் சாதகமற்ற சூழ்நிலையிலும் யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள். பார்க்க பலவீனமாக இருந்தாலும், இவர்கள் “விசுவாசத்தில் செல்வந்தர்களாக” இருக்கலாம்.—யாக் 2:5.
பேசுவதற்கென்று ஒரு நேரம் இருக்கிறதா?
17 யோபுவைப் பார்க்க வந்த நான்காவது நபர், ஆபிரகாமின் சொந்தக்காரரான எலிகூ! யோபுவும் மற்ற மூன்று ஆண்களும் பேசியதை அவர் கவனித்தார். யோபுவுக்கு அன்பான, அதேசமயத்தில் நேரடியான ஆலோசனை கொடுத்ததிலிருந்து அவர்கள் பேசியதை எலிகூ கவனமாகக் கேட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. யோபு தன்னுடைய யோசனைகளைச் சரி செய்வதற்கு அந்த ஆலோசனைகள் உதவின. (யோபு 33:1, 6, 17) தன்னையோ மற்ற மனிதர்களையோ அல்ல, யெகோவாவை உயர்த்த வேண்டும் என்பதுதான் எலிகூவின் முக்கிய விருப்பமாக இருந்தது. (யோபு 32:21, 22; 37:23, 24) அமைதியாக இருந்து மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது என்பதை எலிகூவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். (யாக். 1:19) அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது, நம்மை அல்ல யெகோவாவை மகிமைப்படுத்துவதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
18 எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற விஷயத்தில் பைபிள் அறிவுரைகளின்படி நடக்கும்போது, பேச்சு என்ற வரத்தை நாம் மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். “சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்” என்று எழுதும்படி ஞானியான சாலொமோன் ராஜாவை யெகோவா தூண்டினார். (நீதி. 25:11) மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்கும்போதும், நன்றாக யோசித்துப் பேசும்போதும் நம்முடைய வார்த்தைகள் தங்க ஆப்பிள் பழங்களைப் போல இருக்கும். அதாவது, மதிப்புள்ளவையாகவும் அழகானவையாகவும் இருக்கும். அப்போது, நாம் கொஞ்சம் பேசினாலும் சரி, நிறைய பேசினாலும் சரி, நம்முடைய பேச்சு மற்றவர்களைப் பலப்படுத்தும். யெகோவாவும் நம்மைப் பார்த்து பெருமைப்படுவார். (நீதி. 23:15; எபே. 4:29) யெகோவா கொடுத்திருக்கும் பேச்சுத் திறன் என்ற வரத்துக்கு நன்றி காட்ட இதைவிட சிறந்த வழி வேறெதாவது இருக்க முடியுமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்
10 நம்முடைய தோற்றத்தைக் குறித்து அக்கறையாக இருப்பது நல்லதுதான். அதற்காக நாம் வயதாகிவிட்டதற்கான அடையாளங்களை அழிக்க அரும்பாடுபடத் தேவையில்லை. அந்த அடையாளங்கள் முதிர்ச்சிக்கும், கண்ணியத்திற்கும், அகத்தின் அழகிற்கும் அத்தாட்சிகள்! உதாரணத்திற்கு, “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 16:31) நம்முடைய புறத்தோற்றமல்ல அகத்தோற்றம்தான் யெகோவாவின் கண்களுக்கு அழகானது; நமக்கும் அதே கண்ணோட்டம் இருக்க வேண்டும். (1 பேதுரு 3:3, 4-ஐ வாசியுங்கள்.) எனவே, புற அழகைக் கொஞ்சம் மெருகூட்டுவதற்காக தேவையில்லாத, ஆபத்தான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதோ மருத்துவ முறைகளை நாடுவதோ ஞானமாக இருக்குமா? ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே’ உண்மையான அழகுக்கு அஸ்திவாரம்! வயதுக்கும் ஆரோக்கியத்திற்கும் அப்பாற்பட்டதுதான் உண்மையான அழகு! ஆம், அகத்தின் அழகே முகத்தில் பளிச்சிடும். (நெ. 8:10) தொலைந்துபோன பூரண ஆரோக்கியமும் இளமையின் வனப்பும் புதிய உலகத்தில்தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். (யோபு 33:25; ஏசா. 33:24) அந்நாள் வரும்வரை, ஆரோக்கியம் சம்பந்தமாக நாம் ஞானமான தீர்மானங்களை எடுக்க வேண்டும், யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்க வேண்டும்; அப்படிச் செய்தோமானால், வாழ்க்கையை ருசிப்போம், ஆரோக்கியத்தைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்பட மாட்டோம்.—1 தீ. 4:8.
ஜனவரி 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 34-35
நல்லவர்களுக்கு கெட்டது நடப்பதாக தோன்றினால்...
wp19.1 பக். 8 பாரா 2
கடவுள் எப்படிப்பட்டவர்?
கடவுள் எப்போதுமே சரியானதைத்தான் செய்கிறார். சொல்லப்போனால், “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.” (யோபு 34:10) அவர் எப்போதும் நீதியான தீர்ப்புகளைத்தான் கொடுக்கிறார். அதனால்தான், “நீங்கள் மக்களுக்கு நியாயமான தீர்ப்பைக் கொடுப்பீர்கள்” என்று பைபிள் எழுத்தாளர் ஒருவர் யெகோவாவிடம் சொன்னார். (சங்கீதம் 67:4) ‘யெகோவா இதயத்தைப் பார்க்கிறார்.’ அதனால், வெளிவேஷம் போட்டு அவரை ஏமாற்ற யாராலும் முடியாது. உண்மை என்னவென்று அவரால் எப்போதுமே கண்டுபிடிக்க முடியும்; அதனால், அவர் தவறான தீர்ப்புகளைக் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. (1 சாமுவேல் 16:7) அதுமட்டுமல்ல, இந்த உலகத்தில் நடக்கிற எல்லா அநியாயங்களும் ஊழல்களும் அவருக்குத் தெரியும். அதனால், சீக்கிரத்தில் “பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 2:22.
கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?
5 பொல்லாத ஜனங்களை யெகோவா என்ன செய்வார்? பொல்லாதவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு யெகோவா இப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார். (ஏசா. 55:7) தனிப்பட்ட நபர்களுக்கு இன்னும் தீர்ப்புக் கொடுக்கப்படவில்லை, இந்த உலகத்துக்குத்தான் தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்வரை இந்த நபர்கள் தங்களை மாற்றிக்கொள்ளாமல், இந்த உலகத்தைத் தொடர்ந்து ஆதரித்தால் என்ன ஆகும்? பொல்லாதவர்கள் எல்லாரையும் இந்தப் பூமியிலிருந்து ஒழிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 37:10-ஐ வாசியுங்கள்.) இன்று நிறைய பேர், தாங்கள் செய்யும் தவறுகளை எப்படி மூடிமறைப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்; பெரும்பாலும், அவர்கள் தண்டிக்கப்படுவதே இல்லை. (யோபு 21:7, 9) ஆனால், “மனுஷன் செய்வதையெல்லாம் கடவுள் கவனிக்கிறார். அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அவர் பார்க்கிறார். தப்பு செய்கிறவர்கள் எங்கேயும் ஒளிந்துகொள்ள முடியாது. எப்பேர்ப்பட்ட இருட்டிலும் மறைந்துகொள்ள முடியாது” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 34:21, 22) அதனால், பொல்லாதவர்கள் யெகோவாவிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களாலும் யெகோவாவை ஏமாற்ற முடியாது. அர்மகெதோனுக்குப் பிறகு, எங்கே தேடினாலும் பொல்லாதவர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்பட்டிருப்பார்கள்!—சங். 37:12-15.
இயேசுவை முன்னிட்டு நீங்கள் தடுமாற்றம் அடைகிறீர்களா?
19 இதே பிரச்சினை இன்றும் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. அரசியலில் நாம் நடுநிலையோடு இருப்பதால் நிறைய பேர் நம்மை ஏற்றுக்கொள்வது இல்லை. நாம் ஓட்டு போட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அப்படி நாம் போட்டால் யெகோவாவை ஒதுக்கிவிட்டு ஒரு மனிதனை நம்முடைய தலைவராக ஏற்றுக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். (1 சா. 8:4-7) அதோடு, பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நாம் கட்ட வேண்டும் என்றும், வேறு விதமான பொது சேவைகளைச் செய்ய வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள். உலகத்தில் இருக்கிற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்குமா என்று பார்ப்பதை விட்டுவிட்டு ஊழிய வேலைக்கு நாம் முதலிடம் கொடுப்பதாக நம்மைக் குறை சொல்கிறார்கள்.
20 நாம் தடுமாற்றம் அடையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (மத்தேயு 7:21-23-ஐ வாசியுங்கள்.) இயேசு கொடுத்த வேலையைச் செய்வதுதான் நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். (மத். 28:19, 20) அரசியலிலோ, இந்த உலக விவகாரத்திலோ நம்முடைய கவனம் திசைதிரும்பிவிடக் கூடாது. மக்களை நாம் நேசிக்கிறோம், அவர்களுடைய பிரச்சினைகள் சரியாக வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும், யெகோவாவுடன் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு உதவுவதும்தான் நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மை.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்கள் மனப்பூர்வமான சேவை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கட்டும்!
3 யோபுவும் அந்த 3 பேரும் பேசிக்கொண்டிருந்ததை எலிகூ கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடித்ததும், “நீங்கள் நீதிமானாக இருப்பதால் அவருக்கு என்ன லாபம்? நேர்மையாக இருப்பதால் அவருக்கு என்ன பிரயோஜனம்?” என்று யோபுவிடம் கேட்டார். (யோபு 35:7) யெகோவாவுக்காக நாம் செய்யும் சேவை வீண் என்றுதான் எலிகூவும் சொன்னாரா? இல்லை. யெகோவா அவர்கள் 2 பேரையும் திருத்தியது போல, எலிகூவைத் திருத்தவில்லை. ஏனென்றால், எலிகூ அப்படிச் சொன்னதன் மூலம், வேறொரு விஷயத்தை அர்த்தப்படுத்தினார். அதாவது, யெகோவா நம் வணக்கத்தைச் சார்ந்தில்லை என்பதை அர்த்தப்படுத்தினார். யெகோவா நிறைவானவர், நம்மிடமிருந்து அவருக்கு எதுவும் தேவையில்லை! நம் செயல்களால், யெகோவாவை இன்னும் பணக்காரராகவோ, பலமானவராகவோ ஆக்க முடியாது. சொல்லப்போனால், நம்மிடம் இருக்கும் எந்தவொரு நல்ல குணமும், திறமையும் அவரிடமிருந்து வந்ததுதான்! அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதை அவர் கவனிக்கிறார்.
ஜனவரி 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 36-37
என்றென்றும் வாழலாம் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியை நீங்கள் ஏன் நம்பலாம்?
கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?
கடவுளுடைய வாழ்நாள்: கடவுள் “என்றென்றைக்கும்” வாழ்கிறவர் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 90:2) அதாவது, அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. கடவுள் ‘எத்தனை காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை [மனிதர்களால்] அறிய முடியாது.’—யோபு 36:26, ஈஸி டு ரீட் வர்ஷன்.
இதை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை? கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டால் சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்கும். (யோவான் 17:3) ‘கடவுளுக்கு அழிவே இல்லை.’ அவரால் மட்டும்தான், நமக்கு மரணமே இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க முடியும்.—1 தீமோத்தேயு 1:17.
கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?
6 சூரியனிலிருந்து பூமி கனகச்சிதமான தூரத்தில் இருப்பதால், நீர் திரவநிலையிலேயே இருக்கிறது. ஒருவேளை, பூமி இன்னும் கொஞ்சம் சூரியனுக்குப் பக்கத்திலிருந்தால் என்ன நடக்கும்? பூமியில் இருக்கிற நீர் முழுவதும் கொதித்து ஆவியாகிவிடும். இந்தப் பூமி வெப்ப உலையாகிவிடும்; உயிரினங்கள் வாழ முடியாத பொட்டல்காடாகிவிடும். ஒருவேளை சூரியனைவிட்டு இன்னும் கொஞ்சம் தள்ளியிருந்தால்? பூமியில் இருக்கிற நீர் முழுவதும் உறைந்துவிடும்; முழு பூமியும் பனிப் பிரதேசமாகிவிடும். ஆனால், யெகோவா கச்சிதமான இடத்தில் பூமியை வைத்திருக்கிறார். அதனால், நீர் சுழற்சியின் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. கடல்நீரையும் பூமியின் மேற்பரப்பில் இருக்கிற நீரையும் சூரியன் சூடாக்கி, ஆவியாக்குகிறது. பிறகு, மேகங்களை உருவாக்குகிறது. ஒரு வருஷத்துக்கு எவ்வளவு நீரை ஆவியாக்குகிறது தெரியுமா? இந்தப் பூமியின் எல்லா ஏரிகளிலும் இருக்கிற நீரைவிட பல மடங்கு அதிகமான நீரை ஆவியாக்குகிறது! இந்த நீர், மழையாகவோ பனியாகவோ பூமியில் பொழிவதற்கு முன், கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு வளிமண்டலத்தில் இருக்கிறது. கடைசியில், மறுபடியும் கடலுக்கு அல்லது மற்ற நீர்நிலைகளுக்குத் திரும்புகிறது. இப்படி, நீர் சுழற்சி தொடர்ந்து நடக்கிறது. இந்த அற்புதமான, உயிர்காக்கிற நீர் சுழற்சி எதை நிரூபிக்கிறது? யெகோவா ஞானமானவர், அபார வல்லமை படைத்தவர் என்பதை நிரூபிக்கிறது.—யோபு 36:27, 28; பிர. 1:7.
உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
16 என்றென்றும் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசு. அந்த வாழ்க்கைக்காகத்தான் நாம் ஆசையோடு காத்திருக்கிறோம். அந்த நாள் நிச்சயம் வரும்! இந்த நம்பிக்கை நங்கூரம் போல இருக்கிறது. சோதனைகள் வந்தாலும், துன்புறுத்தல் வந்தாலும், சாவே வந்தாலும்கூட உறுதியாக இருக்க அது நமக்கு உதவுகிறது. நம்முடைய நம்பிக்கை ஒரு தலைக்கவசம் போலவும் இருக்கிறது. அது நம் யோசனைகளைப் பாதுகாக்கிறது. அதனால், கெட்டதை வெறுக்கவும் நல்லதைச் செய்யவும் நம்மால் முடிகிறது. பைபிள் தரும் நம்பிக்கை, கடவுளிடம் நெருங்கிப்போக நமக்கு உதவுகிறது. நம்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளவும் உதவுகிறது. நம் நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கையும் ரொம்பப் பிரகாசமாக இருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 492
தகவல்தொடர்பு
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தேசங்களில், தகவல்களைப் பரிமாறுவதற்கு நிறைய வழிகளைப் பயன்படுத்தினார்கள். உள்ளூர் செய்திகளும் வேறு நாடுகளில் நடந்த சம்பவங்களும் ஒருவர் மூலமாக இன்னொருவரிடம் தெரிவிக்கப்பட்டன. (2 சா. 3:17, 19; யோபு 37:20) பொதுவாக, கூட்டமாக பயணம் செய்கிறவர்கள் உணவும், தண்ணீரும், மற்ற பொருள்களும் வாங்குவதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்திய இடங்களிலும் பயணத்தின் இடையே இருந்த எல்லா ஊர்களிலும் தூர தேசத்திலிருந்த தகவல்களைத் தெரிவித்தார்கள். பாலஸ்தீனா தேசம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவே இருந்ததால், பயணிகள் அதன் வழியாகத்தான் போய்வருவார்கள். அதனால், அங்கே குடியிருந்தவர்களால் மற்ற தேசங்களில் நடந்த முக்கியமான சம்பவங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக, ஒரு ஊரின் சந்தையில், உள்ளூர் தகவல்களையும் வேறு நாடுகளில் நடந்த சம்பவங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஜனவரி 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 38-39
படைப்புகளை கூர்ந்து கவனிக்க நேரம் ஒதுக்குகிறீர்களா?
யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறீர்களா?
7 பூமியை யெகோவா படைக்கும்போது, அவர் அதற்கு ‘அளவுகள் குறித்ததாகவும்’ ‘அஸ்திவாரம் போட்டதாகவும்’ ‘மூலைக்கல் வைத்ததாகவும்’ பைபிள் சொல்கிறது. (யோபு 38:5, 6) தான் படைத்ததெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அவர் நேரமும் எடுத்துக்கொண்டார். (ஆதி. 1:10, 12) எல்லாப் படைப்புகளையும் அவர் படிப்படியாகப் படைத்ததை பார்த்தபோது தேவதூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அவர்கள் பயங்கரமாக சந்தோஷப்பட்டிருப்பார்கள், இல்லையா? ஒரு கட்டத்தில், அவர்கள் ‘சந்தோஷ ஆரவாரம் செய்தார்கள்.’ (யோபு 38:7) இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? எல்லாவற்றையும் படைப்பதற்கு யெகோவாவுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆனது. ஆனாலும், அது எல்லாமே ரொம்ப அருமையாக இருந்தது. அதனால், அவர் ரொம்ப யோசித்து படைத்த எல்லாவற்றையும் பார்த்து, “மிகவும் நன்றாக இருந்தன” என்று சொன்னார்.—ஆதி. 1:31.
உயிர்த்தெழுதல்—கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும், பொறுமையையும் வெளிக்காட்டுகிறது
2 முதலில், தன்னுடைய மகன் இயேசுவை யெகோவா படைத்தார். பிறகு, அவர் மூலம் புத்திக்கூர்மையுள்ள கோடிக்கணக்கான தேவதூதர்களையும் மற்ற ‘எல்லாவற்றையும். . . படைத்தார்.’ (கொலோ. 1:16) தன்னுடைய பரலோகத் தந்தையோடு சேர்ந்து வேலை செய்வதில் இயேசு ரொம்ப சந்தோஷப்பட்டார். (நீதி. 8:30) யெகோவாவும், அவருடைய கைதேர்ந்த கலைஞனான இயேசுவும், வானத்தையும் பூமியையும் படைத்தபோது தேவதூதர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பூமியையும், பூமியில் இருக்கும் ஒவ்வொன்றையும், கடைசியாக மனிதர்களையும் யெகோவா படைத்தபோது அவர்கள் எல்லாரும் ‘சந்தோஷ ஆரவாரம் செய்திருப்பார்கள்’ என்பதில் சந்தேகம் இல்லை. (யோபு 38:7; நீதி. 8:31) இந்த ஒவ்வொரு படைப்பிலும் யெகோவாவின் அன்பும் ஞானமும் பளிச்சென்று தெரிந்தது.—சங். 104:24; ரோ. 1:20.
படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்
8 யெகோவாவை தாராளமாக நம்பலாம். யெகோவாமேல் யோபு வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகமாக்க யெகோவா அவருக்கு உதவி செய்தார். (யோபு 32:2; 40:6-8) யோபுவிடம் பேசியபோது கடவுள், தான் படைத்திருக்கிற நட்சத்திரங்கள், மின்னல், மேகங்களைப் பற்றியெல்லாம் சொன்னார். காட்டு எருது, குதிரை போன்ற மிருகங்களைப் பற்றியும் பேசினார். (யோபு 38:32-35; 39:9 ,19 ,20) இந்தப் படைப்புகள் எல்லாம் யெகோவாவுக்கு இருக்கிற சக்தியை மட்டுமல்ல, அவருக்கு எவ்வளவு அன்பும் ஞானமும் இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. இதைப் பற்றி யெகோவா அவரிடம் பேசியதுதான், இதுவரை இல்லாத அளவுக்கு யெகோவாமேல் நம்பிக்கை வைக்க யோபுவுக்கு உதவியது. (யோபு 42:1-6) அதேபோல் நாமும் படைப்புகளை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் யெகோவாவுடைய ஞானத்துக்கு எல்லையே இல்லை, அவருக்கு நம்மை விட பல மடங்கு அதிக சக்தி இருக்கிறது என்று புரிந்துகொள்வோம். நம்முடைய எல்லா கஷ்டத்திற்கும் அவரால் முடிவு கொண்டு வர முடியும். கண்டிப்பாகக் கொண்டும் வருவார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது, நாம் அவர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கை பலமாகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுடைய சட்டங்கள் நம்முடைய நன்மைக்கே
4 படைப்பாளராக இருப்பதால், யெகோவாவே சட்டங்களை ஏற்படுத்த முழு உரிமையும் உடையவர். (வெளிப்படுத்துதல் 4:11) “கர்த்தர் [யெகோவா] நம்முடைய நியாயப்பிரமாணிகர்” என ஏசாயா தீர்க்கதரிசி கூறினார். (ஏசாயா 33:22) உயிருள்ள, உயிரற்ற படைப்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை சட்டங்களை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். (யோபு 38:4-38; 39:1-12; சங்கீதம் 104:5-19) மனிதனை கடவுள் படைத்ததால் அவன் அவரது இயற்கை சட்டத்துக்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். சுயமாக சிந்திக்கும் திறமையுடன் சுதந்திர ஜீவியாக படைக்கப்பட்டான்; என்றாலும், கடவுளுடைய தார்மீக, ஆன்மீக சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கையிலேயே மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறான்.—ரோமர் 12:1; 1 கொரிந்தியர் 2:14-16.
5 யெகோவாவின் இயற்பியல் சட்டங்களை மீற முடியாது என்பது நமக்குத் தெரியும். (எரேமியா 33:20, 21) ஒரு நபர் புவியீர்ப்பு போன்ற இயற்பியல் சட்டங்களை மீறுகையில் அதன் பலனை நிச்சயம் அனுபவிக்கிறார். அதேவிதமாகவே கடவுளுடைய ஒழுக்க சட்டங்களும் மாற்ற முடியாதவை, அவற்றிலிருந்து தந்திரமாக தப்பவும் முடியாது, அவற்றை மீறிவிட்டு தண்டனைக்கு தப்பிவிடலாம் என தப்புக்கணக்கு போடவும் முடியாது. அவருடைய இயற்கை சட்டங்களைப் போலவே இவையும் கட்டாயமாக செயல்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றைப் போல் இவற்றிற்கு உடனடி விளைவுகள் ஏற்படாதிருக்கலாம். “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7; 1 தீமோத்தேயு 5:24.
ஜனவரி 29–பிப்ரவரி 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யோபு 40-42
யோபுவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
‘யெகோவாவுடைய சிந்தையை அறிந்தவன் யார்?’
4 நாம் கடவுளுடைய செயல்களைத் தியானித்துப் பார்க்கும்போது மனித நெறிகளின்படி அவரை நியாயந்தீர்க்கும் மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும். இந்த மனப்பான்மையை யெகோவா இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்: “நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்.” (சங். [திருப்பாடல்கள்] 50:21, பொ.மொ.) இது, 175-க்கும் மேலான வருடங்களுக்கு முன்பு பைபிள் அறிஞர் ஒருவர் பின்வருமாறு சொன்னதற்கு ஒப்பாக இருக்கிறது: “மனிதர் தங்களுடைய நெறிகளின்படி கடவுளை நியாயந்தீர்க்கும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும், தாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களுக்குக் கடவுளும் கட்டுப்பட்டிருக்கிறார் என நினைக்கிறார்கள்.”
5 யெகோவா இப்படிப்பட்டவர்தான் என்று நம்முடைய நெறிகளின்படியும் விருப்பங்களின்படியும் முடிவுகட்டிவிடாதவாறு கவனமாயிருக்க வேண்டும். இது ஏன் முக்கியம்? நம்முடைய கண்ணோட்டம் குறுகியதாக இருப்பதால் பைபிளைப் படிக்கும்போது யெகோவாவின் செயல்களில் சில நமக்குத் தவறாகத் தெரியலாம். பூர்வ இஸ்ரவேலருக்கும் இதுபோன்ற சிந்தை இருந்ததால் யெகோவாவின் வழிகளைக் குறித்துத் தவறான முடிவுக்கு வந்தார்கள். அவர்களிடம் யெகோவா என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.”—எசே. 18:25.
6 நம்முடைய நெறிகளின்படி யெகோவாவை நியாயந்தீர்க்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய வழி, நம்முடைய கண்ணோட்டம் குறுகியது என்பதையும் சில சமயங்களில் அது தவறாக இருக்கும் என்பதையும் அறிந்துகொள்வதாகும். யோபு இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் துன்பத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் தன்னைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். முக்கிய விவாதங்களைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டார். என்றாலும், தன்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள அவருக்கு யெகோவா அன்போடு உதவினார். அவரிடம் 70-க்கும் அதிகமான கேள்விகளைக் கேட்டார்; ஒரு கேள்விக்குக்கூட அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதன் மூலம், அவருடைய புரிந்துகொள்ளும் திறன் வரம்புக்குட்பட்டதாய் இருந்ததை யெகோவா அவருக்கு வலியுறுத்தினார். உடனே மனத்தாழ்மையோடு தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் மாற்றிக்கொண்டார்.—யோபு 42:1-6-ஐ வாசியுங்கள்.
மிக முக்கியமான விஷயத்தைப் பற்றியே யோசியுங்கள்!
12 கஷ்டங்களை அனுபவித்த யோபுவிடம் யெகோவா கரிசனை இல்லாமல் பேசிவிட்டார் என்று சொல்லலாமா? இல்லை. யோபுகூட அப்படி நினைக்கவில்லை. யெகோவாவின் அறிவுரை எவ்வளவு மதிப்பானவை என்பதை யோபு புரிந்துகொண்டார். அதனால்தான், “நான் சொன்னதையெல்லாம் திரும்ப வாங்கிக்கொள்கிறேன். மண்ணிலும் சாம்பலிலும் உட்கார்ந்து வருத்தப்படுகிறேன்” என்று சொன்னார். (யோபு 42:1-6) அதற்கு முன்பே, யோபு தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள எலிகூ என்ற ஒரு இளம் மனிதர் உதவினார். (யோபு 32:5-10) யெகோவாவின் அன்பான அறிவுரைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, யோபு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அதனால், யோபுவின் உண்மைத்தன்மையை நினைத்து தான் சந்தோஷப்படுவதாக யெகோவா மற்றவர்களிடம் சொன்னார்.—யோபு 42:7, 8.
‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்’
17 யெகோவாவின் ஊழியர்களில் யோபு மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பேர் பயங்கரமான கஷ்டங்கள் மத்தியிலும் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தான் ‘திரண்ட மேகம் போன்ற சாட்சிகள்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபி. 12:1) அவர்கள் எல்லாருக்கும் பயங்கரமான சோதனைகள் வந்தன. ஆனாலும், தங்களுடைய கடைசி மூச்சுவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். (எபி. 11:36-40) அவர்களுடைய சகிப்புத்தன்மையும் கடின உழைப்பும் வீணாகிவிட்டதா? கண்டிப்பாக இல்லை. கடவுளுடைய வாக்குறுதிகளெல்லாம் நிறைவேறுவதைத் தங்களுடைய வாழ்நாளில் அவர்கள் பார்க்கவில்லைதான். ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கையாகவே இருந்தார்கள். யெகோவாவின் அங்கீகாரம் தங்களுக்கு இருந்ததை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அதனால், அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்று நம்பினார்கள். (எபி. 11:4, 5) அவர்களுடைய உதாரணம், யெகோவாமேல் நாம் தொடர்ந்து நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.
18 உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகின்றன. (2 தீ. 3:13) யெகோவாவின் மக்களைச் சோதிப்பதை சாத்தான் நிறுத்தவே இல்லை. நமக்கு முன்னால் என்ன சவால்கள் காத்திருந்தாலும் சரி, யெகோவாவுக்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். “உயிருள்ள கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்பதை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். (1 தீ. 4:10) யெகோவா யோபுவை ஆசீர்வதித்ததைப் பற்றி யோசித்துப் பாருங்கள். “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என அது காட்டுகிறது, இல்லையா? (யாக். 5:11) நாமும் யெகோவாவுக்குக் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். “அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார்” என்றும் உறுதியாக நம்ப வேண்டும்.—எபிரெயர் 11:6-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 808
கேலிகிண்டல்
நீதிமானாக இருந்த யோபு, கேலிகிண்டலுக்கு ஆளானாலும், உத்தமமாக நடந்தார். அவர் ஒரு தவறான எண்ணத்தை வளர்த்துக்கொண்டார், தவறாக பேசிவிட்டார். அதற்காக அவர் திருத்தப்பட்டார். “யோபுவைப் போலக் கேலிப்பேச்சை அமைதியாகக் கேட்கிறவர்கள் யாராவது இருக்க முடியுமா?” என்று எலிகூ அவரைப் பற்றிச் சொன்னார். (யோபு 34:7 ) தன்னை நியாயப்படுத்துவதிலேயே யோபு அதிகமாக குறியாக இருந்தார். அதனால், கடவுளை விட தன்னை நீதிமானாக நினைத்துக்கொண்டார். (யோபு 35:2; 36:24) தன்னுடைய மூன்று நண்பர்களின் கேலிப்பேச்சை, கடவுளுக்கு எதிராக பேசியதாக பார்க்காமல் தனக்கு எதிராக பேசியதாகவே பார்த்தார். அவருடைய நண்பர்கள் கடவுளுக்கு எதிராகத்தான் பேசினார்கள் என்பதை கடவுள் யோபுவுக்கு பின்பு புரியவைத்தார். (யோபு 42:7) அதுபோலவே , இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது சாமுவேலிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “அவர்கள் உன்னை ஒதுக்கித்தள்ளவில்லை, அவர்களுடைய ராஜாவாகிய என்னைத்தான் ஒதுக்கித்தள்ளியிருக்கிறார்கள்.” (1 சா. 8:7) இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா தேசத்து மக்களும் உங்களை வெறுப்பார்கள்.” (மத். 24:9) இந்த விஷயத்தை நாம் மனதில் வைத்தால், நம்மை யாராவது கேலிகிண்டல் செய்யும்போது, அதை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும், சகித்திருப்பதற்கான பலனையும் அவர் அனுபவிப்பார். —லூக். 6:22, 23.
பிப்ரவரி 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 1-4
யெகோவாவுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுங்கள்
“எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன்”
8 நாம் சொல்லும் செய்தியை மக்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்களா? நிறைய பேர் ஏற்றுக்கொள்வதில்லை. (சங்கீதம் 2:1-3-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், தேசங்கள் கொந்தளிக்கின்றன. யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. நாம் சொல்லும் செய்தியை ‘நல்ல செய்தியாக’ பார்ப்பதும் இல்லை. சில அரசாங்கங்கள் ஊழிய வேலையைத் தடை செய்திருக்கின்றன. இன்றைக்கு உலகத் தலைவர்கள் நிறைய பேர் கடவுளை வணங்குவதாக சொல்லிக்கொண்டாலும், தங்களுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனமில்லை. இயேசுவின் காலத்திலிருந்த ராஜாக்களைப் போலத்தான் இந்த உலகத் தலைவர்களும் இருக்கிறார்கள். இயேசுவின் சீஷர்களை எதிர்ப்பதன் மூலம் இயேசுவையே இவர்கள் எதிர்க்கிறார்கள்.—அப். 4:25-28.
நீங்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருப்பீர்களா?
11 பொருளாசை. பணம், பொருள் சேர்ப்பதிலேயே நாம் ஆர்வமாக இருந்தால் யெகோவாவின் பக்கம் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு 1970-களில் மலாவியில் நிறைய சாட்சிகள் அரசியல் கட்சியில் சேராததால் தங்கள் சொத்துசுகங்களை விட்டுவிட்டு அகதிகளாக போக வேண்டியிருந்தது. ஆனால் சிலருக்கு அது கஷ்டமாக இருந்தது. அதைப் பற்றி சகோதரி ரூத் இப்படி சொல்கிறார்: “எங்ககூட அகதிகளா வந்த சில சகோதரர்கள் அரசியல் கட்சியில அப்புறம் சேர்ந்துகிட்டாங்க. அகதிகள் முகாம்ல எந்த வசதியும் இல்லாம வாழ்றது அவங்களுக்கு கஷ்டமா இருந்தது. அதனால அவங்க திரும்பவும் சொந்த வீட்டுக்கே போயிட்டாங்க.” கடவுளுடைய மக்களில் நிறையப் பேர் இப்படி நடந்துகொள்வதில்லை. பணக் கஷ்டம் வந்தாலும் சரி அவர்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் சரி, அவர்கள் எப்போதும் யெகோவாவின் பக்கம் இருக்கிறார்கள்.—எபி. 10:34.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 425
பதர்
பார்லி, கோதுமை போன்ற தானியங்களில், மேலிருக்கும் மெல்லிய தோல் அல்லது உமி. பைபிளில் பதர் என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், பண்டைய காலங்களில் போரடிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது என்பதை இது காட்டுகிறது. அறுவடைக்கு பின்பு, தானியத்தை மட்டுமே உபயோகிக்க முடியும், உமியை எதற்கும் பயன்படுத்த முடியாது. அதனால், அது வீணானவற்றை... வேண்டாதவற்றை... நல்லதிலிருந்து பிரிக்கப்பட வேண்டியவற்றை... குப்பையாக அகற்றப்பட வேண்டியவற்றை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
பதரடிக்கும்போது தானியத்திலிருந்து பதர் தனியாக பிரிந்துவிடும். பின்பு புடைக்கும்போது, பதர் கனமில்லாததால் தூசியைப் போல் காற்றில் பறந்துபோய்விடும். விசுவாசதுரோகிகளை... பொல்லாதவர்களை... எதிர்க்கும் தேசங்களை யெகோவா எப்படித் தனியாக பிரித்து அகற்றிவிடுவார் என்பதை இது தெளிவாக காட்டுகிறது. (யோபு 21:18; சங். 1:4; 35:5; ஏசா. 17:13; 29:5; 41:15; ஓசி. 13:3) கடவுளுடைய அரசாங்கம் அதன் எதிரிகளை தூள் தூளாக நொறுக்கிவிடும், அவர்கள் களத்துமேட்டிலிருந்து காற்றில் அடித்துச்செல்லப்படும் பதரைப் போல ஆகிவிடுவார்கள்.—தானி. 2:35.
பதர் திரும்பவும் காற்றில் பறந்துவந்து, தானியங்களில் கலந்துவிடாமல் இருப்பதற்காக அதைச் சேகரித்து எரித்துவிடுவார்கள். அதுபோலவே, பொய் மதத்தில் இருக்கிறவர்களுக்கு வரவிருக்கும் அழிவைப் பற்றி யோவான் ஸ்நானகர் முன்னறிவித்தார். போரடிப்பவரான இயேசு கிறிஸ்து, தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பார் என்றும், “பதரையோ அணைக்க முடியாத நெருப்பில் சுட்டெரிப்பார்” என்றும் அவர் சொன்னார்.—மத். 3:7-12; லூக். 3:17.
பிப்ரவரி 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 5-7
மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருங்கள்
பைபிளிலிருந்து பலம் பெறுவது எப்படி?
7 அப்சலோம், தன்னுடைய அப்பாவான தாவீது ராஜாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தான். தாவீதின் ஆட்சியைத் தட்டிப் பறிப்பதற்கு சதி வேலைகளில் ஈடுபட்டான். உங்களுடைய நண்பரோ குடும்பத்தில் இருப்பவரோ உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார்களா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்கு எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.—2 சா. 15:5-14, 31; 18:6-14.
8 (1) ஜெபம் செய்யுங்கள். இந்தப் பதிவை மனதில் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் உங்களைத் தவறாக நடத்தியதால் நீங்கள் எந்தளவுக்கு வேதனைப்படுகிறீர்கள் என்பதை யெகோவாவிடம் சொல்லுங்கள். (சங். 6:6-9) உங்கள் மனதுக்குள் இருக்கிற உணர்ச்சிப் போராட்டங்கள் எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லிவிடுங்கள். இந்தக் கஷ்டமான சூழ்நிலையைச் சமாளிப்பதற்குத் தேவையான நியமங்களைக் கண்டுபிடிக்க உதவச் சொல்லி அவரிடம் கேளுங்கள்.
உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்
3 யெகோவாவின் மக்கள், கிறிஸ்துவைப் போன்ற அன்பைக் காட்டுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உங்கள் விசுவாசம் என்ற வீட்டைக் கட்டுவதற்கு அது மட்டுமே அஸ்திவாரமாக இருக்கக் கூடாது. ஏன்? ஒருவேளை, ஒரு மூப்பரோ பயனியரோ அல்லது வேறொரு சகோதரரோ சகோதரியோ மோசமான பாவத்தைச் செய்துவிடலாம். அல்லது, ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைப் புண்படுத்திவிடலாம். சிலசமயங்களில், நம்மிடம் சத்தியம் இல்லை என்று சொல்லிக்கொண்டு சிலர் விசுவாசதுரோகிகளாக மாறிவிடலாம். உங்கள் விசுவாசத்துக்கு அன்பு மட்டுமே அஸ்திவாரமாக இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன ஆகலாம்? இதையெல்லாம் பார்த்து நீங்கள் நிலைதடுமாறி, யெகோவாவைவிட்டே போய்விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதிலிருந்து என்ன பாடம்? உங்கள் விசுவாசம் என்ற வீட்டை, யெகோவாவுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கிற பந்தத்தின் அடிப்படையில் கட்டாமல், வெறுமனே மற்றவர்கள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்து கட்டினால், அது ஆட்டம்கண்டுவிடும். விசுவாசம் என்ற வீட்டை, உணர்ச்சிகள் என்ற மென்மையான பொருள்களை வைத்துக் கட்டாதீர்கள்! பைபிளில் இருக்கிற உண்மைகள் என்ற பலமான பொருள்களை வைத்துக் கட்டுங்கள்!! யெகோவாவைப் பற்றிய உண்மைகள் பைபிளில் இருக்கின்றன என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.—ரோ. 12:2.
4 சிலர் சத்தியத்தை “சந்தோஷமாக” ஏற்றுக்கொள்வார்கள் என்றும், ஆனால் சோதனைகள் தாக்கும்போது அவர்களுடைய விசுவாசம் வாடி வதங்கிவிடும் என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 13:3-6, 20, 21-ஐ வாசியுங்கள்.) ஏன் இப்படி நடக்கலாம்? கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்குச் சோதனைகளும் கஷ்டங்களும் வரும் என்பது அவர்களுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம். (மத். 16:24) இல்லையென்றால், கிறிஸ்தவ வாழ்க்கையை அவர்கள் ‘ரோஜா படுக்கை’ என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதில் முட்களும் இருக்கும் என்பது அவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்த மோசமான உலகத்தில் நாம் வாழ்வதால், பிரச்சினைகள் நம்மைத் தாக்கும் என்பதுதான் யதார்த்தம். சூழ்நிலைகள் மாறலாம், அதனால் நம்முடைய சந்தோஷம் கொஞ்சம் குறைந்துவிடலாம்!—சங். 6:6; பிர. 9:11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 995
கல்லறை
ரோமர் 3:13-ல் அப்போஸ்தலன் பவுல், சங்கீதம் 5:9-ஐ மேற்கோள் காட்டினார். அதில் பொல்லாதவர்களுடைய “தொண்டை ஒரு திறந்த கல்லறை” போல இருப்பதாக சொன்னார். திறந்த கல்லறை பிணங்களாலும் அழுகிப்போனவற்றாலும் நிரப்பப்பட்டிருக்கும். அதுபோலவே, பொல்லாதவர்களுடைய தொண்டையிலிருந்து வரும் பேச்சும் விஷத்தன்மையுள்ளதாக படுமோசமானதாக இருக்கிறது.—மத். 15:18-20-ஐ ஒப்பிடுங்கள்.
பிப்ரவரி 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 8-10
‘யெகோவாவே, உங்களை புகழ்வேன்’!
யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள்
6 அற்புதமான வீட்டைக் கொடுத்திருக்கிறார். ஆதாமைப் படைப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பே மனிதர்களுக்காக அவர் பூமியைத் தயார்படுத்தினார். (யோபு 38:4-6; எரே. 10:12) மனிதன் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எக்கச்சக்கமான விஷயங்களைப் பார்த்து பார்த்து அவர் படைத்தார். (சங். 104:14, 15, 24) சில சமயங்களில், நேரமெடுத்து அவர் படைத்ததை எல்லாம் யோசித்துப்பார்த்தார், அவையெல்லாம் ‘நன்றாக இருந்தன.’ (ஆதி. 1:10, 12, 31) அதுமட்டுமல்ல, பூமியில் அவர் படைத்திருக்கிற எல்லாவற்றின் மேலும் மனிதனுக்கு ‘அதிகாரத்தைக் கொடுத்ததன்’ மூலமாகவும் அவனைக் கௌரவப்படுத்தினார். (சங். 8:6) அவருடைய அற்புதமான படைப்புகளை மனிதன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதும், அதிலிருந்து மனிதனுக்கு என்றென்றும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்பதும்தான் அவருடைய விருப்பம். இதை நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? இதற்காக நீங்கள் அவருக்குத் தவறாமல் நன்றி சொல்கிறீர்களா?
கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா?
10 பேச்சுத்திறன் என்ற பரிசுக்கு நன்றி காட்டுவதற்கு ஒரு வழி இருக்கிறது. பரிணாமக் கோட்பாட்டை நாம் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை என்று கேட்பவர்களிடம், கடவுளை நாம் ஏன் நம்புகிறோம் என்பதைப் பற்றி விளக்குவதுதான் அது! (சங். 9:1; 1 பே. 3:15) இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், இந்தப் பூமியும் அதிலிருப்பவையும் தானாகத் தோன்றின என நாம் நம்ப வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், நாம் என்ன செய்யலாம்? பைபிளையும் இந்தக் கட்டுரையில் பார்த்த விஷயங்களையும் வைத்து நாம் அவர்களிடம் பேசலாம். அதோடு, நாம் சொல்வதைக் கேட்க விரும்புபவர்களிடம், யெகோவாதான் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று நாம் நம்புவதற்கான காரணத்தை விளக்கலாம்.—சங். 102:25; ஏசா. 40:25, 26.
பேச்சில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்களா?
13 மனதிலிருந்து பாடுங்கள். நாம் யெகோவாவைப் புகழ்வதற்காகத்தான் முக்கியமாகக் கூட்டங்களில் பாட்டு பாடுகிறோம். சாரா என்ற சகோதரி, தனக்கு அவ்வளவாகப் பாட வராது என்று நினைத்தார். ஆனாலும், யெகோவாவைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். அதனால், கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போது அதில் வருகிற பாடல்களைப் பாடிப் பழகினார். இப்படிச் செய்வதால், பாடல் வரிகள் கூட்டத்தில் கலந்துபேசப்படும் மற்ற விஷயங்களோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. “இப்படி பாட்டுல இருக்கிற வரிகளுக்கு நான் கவனம் செலுத்துறப்போ, நான் நல்லா பாடுறேனா இல்லையாங்கறத பத்தியெல்லாம் யோசிக்கிறதில்ல” என்று அவர் சொல்கிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘யெகோவா . . . மிகுந்த வல்லமையுள்ளவர்’
கடவுளுடைய பரிசுத்த ஆவி எண்ணற்ற விதங்களில் செயல்படுகிறது. யெகோவா தம் மனதிலுள்ள எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் அதை பயன்படுத்த முடியும். ஆகவே பைபிளில் அது பொருத்தமாகவே கடவுளுடைய ‘விரல்,’ அவரது ‘வல்லமையுள்ள கரம்,’ அல்லது அவரது ‘நீட்டப்பட்ட புயம்’ (NW) என அடையாளப்பூர்வமாக குறிப்பிடப்படுகிறது. (லூக்கா 11:20; உபாகமம் 5:15; சங்கீதம் 8:3) ஒரு மனிதன் தன் கையை பயன்படுத்தி, வெவ்வேறு அளவில் பலமும் திறனும் தேவைப்படும் பலதரப்பட்ட வேலைகளை செய்ய முடியும்; அதேபோல், கடவுள் எவ்விதமான தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் தமது ஆவியை பயன்படுத்த முடியும்; மிக நுண்ணிய அணுவை படைப்பதற்கும் சரி, செங்கடலை பிளப்பதற்கும் சரி, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அந்நிய பாஷைகளில் பேச வைப்பதற்கும் சரி அதையே அவர் பயன்படுத்தினார்.
பிப்ரவரி 26–மார்ச் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 11-15
சமாதானம் நிறைந்த புதிய உலகத்தில் நீங்கள் வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
11:3—நிர்மூலமாகிற அஸ்திபாரங்கள் யாவை? சட்டம், நீதி, ஒழுங்கு இவையே இந்த அஸ்திபாரங்கள். மனித சமுதாயம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இவையாவும் ஒழுங்கற்றுப் போகையில், சமுதாயம் சீர்குலைகிறது, நீதியும் மறைந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் “நீதிமான்” கடவுளை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும்.—சங்கீதம் 11:4-7.
wp16.3 பக். 13
வன்முறை இல்லாத உலகம் வருமா?
வன்முறையை கடவுள் சீக்கிரத்தில் நீக்குவார் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. ‘தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்படும் நாளில்,’ வன்முறையில் ஈடுபடுகிறவர்களைக் கடவுள் அழிப்பார். (1 பேதுரு 3:5-7) அப்படிப்பட்ட ஆட்கள் இனிமேல் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுக்க முடியாது. கடவுள் குறுக்கிட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை நாம் எப்படி உறுதியாக நம்பலாம்?
“வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 11:5, NW) சமாதானத்தையும் நீதியையும் படைப்பாளர் விரும்புகிறார். (சங்கீதம் 33:5; 37:28) அதனால்தான், மூர்க்கத்தனமான ஆட்களை அவர் எப்போதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்.
நீங்கள் பொறுமையோடு காத்திருப்பீர்களா?
15 தாவீது ஏன் பொறுமையோடு காத்திருந்தார்? “எத்தனை நாளைக்குத்தான்” என்று ஐந்து முறை அவர் கேட்ட அதே சங்கீதத்தில்தான் அதற்கான பதில் இருக்கிறது. “நீங்கள் மாறாத அன்பு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் தருகிற மீட்பினால் என் இதயம் சந்தோஷப்படும். யெகோவா என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருப்பதால் அவரைப் புகழ்ந்து பாடுவேன்” என்று அவர் சொன்னார். (சங். 13:5, 6) யெகோவா தன்னை நேசித்தார் என்றும், எப்போதுமே தனக்கு உண்மையாக இருப்பார் என்றும் தாவீதுக்குத் தெரிந்திருந்தது. அவ்வளவு காலமாக யெகோவா எப்படியெல்லாம் தனக்கு உதவி செய்திருந்தார் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். அதோடு, பிரச்சினைகளை யெகோவா சரிசெய்யப்போகும் காலத்துக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். யெகோவாவின் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்பது வீண்போகாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது
16 பாதுகாப்பு. கடைசியாக, ஏசாயா 11:6-9-ல் வர்ணிக்கப்பட்டுள்ள மனதைத் தொடும் விஷயங்கள் முழுமையாக நிறைவேறும். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் பூமியில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் பயமில்லாமல் போக முடியும். மனிதர்களும் சரி, மிருகங்களும் சரி, யாரும் யாருக்குமே பயப்பட வேண்டியிருக்காது. இந்த முழு பூமியும் உங்களுடைய வீடாக ஆகப்போகும் காலத்தைக் கற்பனை செய்துபாருங்கள். அப்போது ஆறுகளிலும், ஏரிகளிலும், கடலிலும் நீச்சலடிக்கலாம்; மலைகளில் ஏறலாம்; புல்வெளிகளில் சுற்றித்திரியலாம். ராத்திரி நேரத்தில் பயப்படாமல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அதுமட்டுமல்ல, எசேக்கியேல் 34:25-லுள்ள வார்த்தைகள் நிறைவேறும்போது, கடவுளுடைய மக்கள் “வனாந்தரத்தில் பத்திரமாகத் தங்குவார்கள், காடுகளில் நிம்மதியாகப் படுத்துக்கொள்வார்கள்.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீங்கள் மாறிவிட்டீர்களா?
12 இன்று உலகிலுள்ள அநேகர் பவுல் குறிப்பிட்ட ஆட்களைப் போலவே இருக்கிறார்கள். ‘நீதிநெறிகளின்படி வாழ்வதெல்லாம் அந்தக் காலம், இப்படித்தான் வாழ வேண்டுமென வற்புறுத்த யாருக்கும் உரிமை இல்லை’ என அவர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை அவர்களுடைய விருப்பப்படி செய்யவே ஊக்கப்படுத்துகிறார்கள். எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் அதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதாகவும் அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். கடவுள் பக்தியுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள்கூட தங்களுக்குச் சரியெனப் படுவதைச் செய்யவே விரும்புகிறார்கள்; கடவுள் சொல்கிறபடி நடக்க வேண்டியதில்லை என நினைக்கிறார்கள். (சங். 14:1) இந்த மனப்பான்மை கிறிஸ்தவர்களையும் தொற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. கவனமாக இல்லையென்றால், கடவுளுடைய அமைப்பு தரும் அறிவுரைகளுக்கு நம் காதை அடைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, சபையின் ஏற்பாடுகளுக்கு ஒத்துப்போக மாட்டோம், நமக்கு ஏதாவது விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றிக் குறைகூற ஆரம்பிப்போம். பொழுதுபோக்கு, இன்டர்நெட், உயர்கல்வி போன்ற விஷயங்களில் கொடுக்கப்படும் வேதப்பூர்வ ஆலோசனையை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.