வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
நவம்பர் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 105
‘அவர் தன் ஒப்பந்தத்தை என்றென்றும் நினைத்துப் பார்க்கிறார்’
புதிய உலகம் வரும் என்பதில் நம் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்திக்கொள்ளலாம்?
11 பைபிள் காலங்களில் யெகோவா அவருடைய மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதெல்லாம் நடக்காத விஷயங்கள்போல் மனிதர்களுக்குத் தெரிந்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வயதான காலத்தில் ஒரு மகன் பிறப்பான் என்று யெகோவா சொன்னார். (ஆதி. 17:15-17) அதுமட்டுமல்ல, ஆபிரகாமுடைய சந்ததிக்கு கானான் தேசத்தைக் கொடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால், ஆபிரகாமுடைய சந்ததியான இஸ்ரவேலர்கள் எகிப்தில் வருஷக்கணக்காக அடிமைகளாக இருந்தார்கள். அதனால், யெகோவாவின் வாக்குறுதி நிறைவேறாது என்று அப்போது அவர்கள் நினைத்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா சொன்ன மாதிரியே நடந்தது. அதற்குப் பிறகு, வயதான எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அவர் சொன்னார். கன்னிப்பெண்ணாக இருந்த மரியாள் வயிற்றில் தன்னுடைய மகனே பிறப்பார் என்றும் சொன்னார். அது நடந்தபோது, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் யெகோவா கொடுத்திருந்த இன்னொரு வாக்குறுதியும் நிறைவேறியது!—ஆதி. 3:15.
12 சொன்னதையெல்லாம் யெகோவா எப்படி நிறைவேற்றியிருக்கிறார் என்று நாம் யோசித்துப் பார்க்கும்போது, அவருக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். புதிய உலகத்தைப் பற்றி அவர் கொடுத்திருக்கும் வாக்குறுதியில் நம் விசுவாசம் பலமாகும். (யோசுவா 23:14-ஐயும், ஏசாயா 55:10, 11-ஐயும் வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, புதிய உலகம் வெறும் கற்பனையோ கனவோ அல்ல, அது கண்டிப்பாக வரும் என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கும் நம்மால் உதவ முடியும். புதிய வானத்தையும் புதிய பூமியையும் பற்றிச் சொல்லும்போது, “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை” என்று யெகோவாவே சொல்லியிருக்கிறார்.—வெளி. 21:1, 5.
it-2-E பக். 1201 பாரா 2
வார்த்தை
யெகோவாவுடைய வார்த்தை நம்பகமானது. அவர் வாக்கு தவறியதே இல்லை. (உபா 9:5; சங் 105:42-45) தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற எந்தப் படைப்பையும் அவரால் பயன்படுத்த முடியும். (சங் 103:20; 148:8) தன்னுடைய வார்த்தை ‘என்றென்றும் நிலைத்திருக்கும்’ என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார்; தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றாமல் தன்னுடைய வார்த்தை தன்னிடம் திரும்பவே திரும்பாது என்று யெகோவா சொல்கிறார்.—ஏசா 40:8; 55:10, 11; 1பே 1:25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w86-E 11/1 பக். 19 பாரா 15
இளைஞர்களே—குடும்பத்தில் சந்தோஷம் மலர நீங்கள் என்ன செய்யலாம்?
15 “[யோசேப்புடைய] கால்களில் விலங்கு போடப்பட்டது. அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது. யெகோவா தந்த வாக்குறுதி நிறைவேறும்வரை, அவருடைய வார்த்தைதான் யோசேப்பைப் புடமிட்டது.” (சங்கீதம் 105:17-19) யெகோவாவுடைய ‘வார்த்தையில்,’ அதாவது அவருடைய வாக்குறுதியில், யோசேப்புக்கு நம்பிக்கை இருந்தது. அதனால், அது நிறைவேறும்வரை 13 வருஷம் யோசேப்பு ஒரு அடிமையாகவும் கைதியாகவும் கஷ்டங்களைச் சகித்திருந்தார். இது அவரைப் புடமிட்டது. பொறுமை, மனத்தாழ்மை, யெகோவாவோடு நெருக்கமான நட்பு, கடினமான நியமிப்பை செய்துமுடிப்பதற்கான மனவுறுதி போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவியது. நெருப்பில் புடமிடப்பட்ட சுத்தமான தங்கமாக யோசேப்பு ஆனார். முன்பைவிட இப்போது யெகோவாவின் பார்வையில் ஜொலிக்க ஆரம்பித்தார். பிறகு, யெகோவா அவரைப் பெரிய அளவில் பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 41:14, 38-41, 46; 42:6, 9.
நவம்பர் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 106
“தங்கள் மீட்பரான கடவுளை மறந்துவிட்டார்கள்”
“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”
13 கடவுளுடைய வல்லமை பிரமாண்டமான விதத்தில் வெளிப்படுத்தப்பட்டதைப் பார்த்து, இஸ்ரவேலர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அதனால் மோசே, மலைமீது ஏறிப்போய் அவர்கள் சார்பாக யெகோவாவிடம் பேசினார். (யாத். 20:18-21) ஆனால், ரொம்ப நாட்கள் ஆகியும் மோசே கீழே வரவில்லை. தங்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாமல், வனாந்தரத்தில் அவர்கள் திக்குத்தெரியாமல் நிற்பதுபோல தோன்றியது. இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? கடவுளைவிட மனிதத் தலைவரான மோசேயை அவர்கள் அதிகம் சார்ந்திருந்ததாகத் தெரிகிறது! அதனால், அவர்கள் பதறிப்போய் ஆரோனிடம், “எகிப்திலிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. எங்களை வழிநடத்துவதற்கு ஒரு தெய்வத்தைச் செய்துகொடுங்கள்” என்று சொன்னார்கள்.—யாத். 32:1, 2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—மூன்றாம், நான்காம் பகுதிகள்
106:36, 37. இந்த வசனங்கள், விக்கிரகங்களை வணங்குவதை பேய்களுக்கு பலியிடுவதோடு சம்பந்தப்படுத்துகின்றன. அப்படியானால், விக்கிரகத்தைப் பயன்படுத்துகிற ஒருவர் பேய்களின் தொல்லைக்கு ஆளாகலாம் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான், “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக” என பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—1 யோவான் 5:21.
நவம்பர் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 107-108
“யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்”
சபை யெகோவாவைத் துதிப்பதாக
2 சபை என்பது வெறுமனே ஆட்கள் ஒன்றுகூடி வருவதற்கான ஏற்பாடல்ல. அதாவது, ஒரேவிதமான பின்னணியைச் சேர்ந்தவர்களோ, ஒரேவிதமான விளையாட்டு அல்லது பொழுதுபோக்கில் ஆர்வமுடையவர்களோ ஒன்றுகூடிவருகிற மனமகிழ் மன்றம் அல்ல. மாறாக, அது யெகோவா தேவனைத் துதிப்பதற்காகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும். சபை அந்த நோக்கத்திற்காகவே பல காலமாகப் பயன்படுத்தப்பட்டதாக சங்கீத புத்தகம் சொல்கிறது. “மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்” என்று சங்கீதம் 35:18 குறிப்பிடுகிறது. அவ்வாறே, சங்கீதம் 107:31, 32, “[மக்கள்] கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக” என்று ஊக்கப்படுத்துகிறது.
யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்!
4 யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க, நாம் நிறைய முயற்சி செய்ய வேண்டும். முதலில், யெகோவா நம் ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் ஆசீர்வதித்து இருக்கிறார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அடுத்ததாக, யெகோவா நம்மை ஆசீர்வதித்ததில் இருந்து அவர் நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சங்கீதக்காரரும் அதைத்தான் செய்தார். யெகோவா அவருக்கு செய்த எல்லா நல்ல விஷயங்களையும் நினைத்துப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்.—சங்கீதம் 40:5-ஐயும்; 107:43-ஐயும் வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 420 பாரா 4
மோவாப்
தாவீது ஆட்சி செய்த காலத்தில் இஸ்ரவேலுக்கும் மோவாபுக்கும் போர் நடந்தது. தாவீதின் படை, மோவாபைத் தோற்கடித்தது. மூன்றில் இரண்டு பங்கு மோவாபியர்கள் கொல்லப்பட்டார்கள். (2சா 8:2, 11, 12; 1நா 18:2, 11) அதோடு, இந்தப் போரில் யோய்தாவின் மகன் பெனாயா “அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார்.” (2சா 23:20; 1நா 11:22) 400 வருஷங்களுக்கு முன்பு பிலேயாம் சொன்ன தீர்க்கதரிசனம் இந்த மாபெரும் வெற்றி மூலமாக நிறைவேறியது. (எண் 24:17) கடவுள் தன்னுடைய “பாதங்களைக் கழுவுகிற பாத்திரம்” என்று மோவாபைப் பற்றி சங்கீதக்காரர் சொன்னார். ஒருவேளை மோவாபுக்கு எதிரான போரில் கிடைத்த இந்த வெற்றியை மனதில் வைத்து அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.—சங் 60:8; 108:9.
நவம்பர் 25–டிசம்பர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 109-112
நம் ராஜா இயேசுவுக்கு ஆதரவு கொடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—ஐந்தாம் பகுதி
110:1, 2—‘[தாவீதின்] ஆண்டவரான’ இயேசு கிறிஸ்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கையில் என்ன செய்தார்? இயேசு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு, 1914-ல் அரசராக ஆட்சியைத் தொடங்கும்வரை தேவனுடைய வலதுபாரிசத்தில் காத்திருந்தார். அந்தச் சமயத்தில், தம்மைப் பின்பற்றிய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்மீது அவர் ஆட்சிசெய்தார்; பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் அவர்களை வழிநடத்தினார். அதுமட்டுமல்ல, தம்முடைய ராஜ்யத்தில் தம்முடன் ஆட்சி செய்வதற்காக அவர்களைத் தயார்படுத்தினார்.—மத்தேயு 24:14; 28:18-20; லூக்கா 22:28-30.
தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெறார்!
3 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டு யெகோவாவின் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அநேக தேசங்களில் வெற்றிகரமாக முழங்கப்படுவதை தடுப்பதற்கு கெட்ட மனம் படைத்தவர்கள் முயற்சித்திருக்கின்றனர். நம்முடைய பிரதான எதிராளியாகிய பிசாசு, “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரி”கிறான். இவனே நமக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடுகிறான். (1 பேதுரு 5:8) “புறஜாதியாரின் காலம்” 1914-ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, யெகோவா தம்முடைய குமாரனாகிய இயேசுவை பூமியின் புதிய அரசராக நியமித்து, “சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்” என்பதாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார். (லூக்கா 21:24; சங்கீதம் 110:2) கிறிஸ்து தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தி, சாத்தானை பரலோகத்திலிருந்து வெளியேற்றி, பூமியின் சுற்றுப்புறத்தில் தள்ளினார். தனக்கு இன்னும் கொஞ்சம் காலம்தான் இருக்கிறது என்பதை உணர்ந்த பிசாசு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களிடமும் அவர்களுடைய தோழர்களிடமும் மூர்க்கமாக சீறி எழுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 17) கடவுளுக்கு எதிராக தொடர்ந்து போர் செய்யும் இப்படிப்பட்ட எதிரிகள் நடத்திய தாக்குதலின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கின்றன?
முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள்
உங்கள் வரத்தை பயன்படுத்துமாறு சொல்லப்படும் அறிவுரை, முன்முயற்சி எடுக்க வேண்டியதை உணர்த்துகிறது. மற்றவர்களோடு சேர்ந்து வெளி ஊழியம் செய்ய முன்முயற்சி எடுக்கிறீர்களா? உங்கள் சபையிலுள்ள புதியவர்களுக்கு, இளையவர்களுக்கு, அல்லது தளர்ச்சி அடைந்தவர்களுக்கு உதவ வழிதேடுகிறீர்களா? ராஜ்ய மன்றத்தை சுத்தப்படுத்த அல்லது மாநாடுகளிலும் அசெம்பிளிகளிலும் வாலண்டியர்களாக பல்வேறு விதங்களில் பணிபுரிய முன்வருகிறீர்களா? அவ்வப்போது துணைப் பயனியராக ஊழியம் செய்ய முடியுமா? ஒழுங்கான பயனியராக சேவை செய்ய அல்லது தேவை அதிகம் இருக்கும் சபையில் சேவை செய்ய உங்களால் முடியுமா? நீங்கள் ஒரு சகோதரர் என்றால், உதவி ஊழியராக அல்லது மூப்பராக ஆவதற்கான வேதப்பூர்வ தகுதிகளைப் பெற முயலுகிறீர்களா? உதவியளிக்கவும் பொறுப்பை ஏற்கவும் மனப்பூர்வமாக முன்வருவது உங்கள் வளர்ச்சியின் அடையாளமாகும்.—சங். 110:3, NW.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 524 பாரா 2
ஒப்பந்தம்
மெல்கிசேதேக்கைப் போல் குருவாக சேவை செய்வதற்கான ஒப்பந்தம். சங்கீதம் 110:4-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல் இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக் மாதிரி குருவாகச் சேவை செய்வதற்கு யெகோவா அவரோடு ஒரு ஒப்பந்தம் செய்தார். இயேசு தன்னுடைய சீஷர்களோடு அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் செய்தபோது இந்த ஒப்பந்தத்தைப் பற்றி சொன்னதாகத் தெரிகிறது. (லூ 22:29) இந்த ஒப்பந்தத்தின்படி, மெல்கிசேதேக்கைப் போல இயேசு குருவாக இருப்பார். மெல்கிசேதேக் குருவாகவும் ராஜாவாகவும் இருந்தது பூமியில். ஆனால், இயேசு குருவாகவும் ராஜாவாகவும் இருக்கப்போவது பரலோகத்தில். (எபி 6:20; 7:26, 28; 8:1) யெகோவாவின் வழிநடத்துதலின் கீழ், அவர் என்றென்றும் குருவாகவும் ராஜாவாகவும் இருப்பார். அதனால், இந்த ஒப்பந்தம் என்றும் செயலில் இருக்கும்.—எபி 7:3.
டிசம்பர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 113-118
நாம் யெகோவாவுக்கு என்ன கைமாறு செய்வோம்?
அன்பிலே வளருங்கள்
13 நாம் யெகோவாவிடம் அன்பு காட்டுவது முதன்மையான கடமை என்பது இயேசுவின் வார்த்தைகளில் தெளிவாயுள்ளது. எனினும், யெகோவாவிடம் முழுமையாய் அன்பு காட்டுபவர்களாகவே நாம் பிறக்கவில்லை. அது நாம் வளர்க்க வேண்டிய ஒன்று. அவரைப் பற்றி நாம் முதன்முதல் கேட்ட சங்கதிகள் அவரிடம் நம்மை கவர்ந்திழுத்தன. அவர் மனிதகுலத்திற்காக இந்தப் பூமியை எவ்வாறு உருவாக்கினார் என்பதை மெல்ல மெல்ல கற்றறிந்தோம். (ஆதியாகமம் 2:5-23) மனிதகுலத்தை அவர் கையாண்ட விதத்தைப் பற்றி கற்றறிந்தோம். மனிதர் மத்தியில் பாவம் முதன்முதலில் காலடி எடுத்து வைத்ததையும், அவர்களை அவர் புறக்கணித்து விடாதிருந்ததையும், நம்மை மீட்பதற்கு வழிவகைகளை செய்ததையும் கற்றறிந்தோம். (ஆதியாகமம் 3:1-5, 15) உண்மையுள்ளவர்களை தயவாய் நடத்தினார். முடிவில், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக, தம்முடைய ஒரே பேறான குமாரனை அருளினார். (யோவான் 3:16, 36) படிப்படியாக இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டபோது யெகோவாவிடம் நம் போற்றுதல் அதிகரித்தது. (ஏசாயா 25:1) யெகோவாவின் அன்பான பராமரிப்பே அவரை நேசிக்கும்படி தன்னை தூண்டியதாக தாவீது ராஜா சொன்னார். (சங்கீதம் 116:1-9) இன்று, யெகோவா நம்மை பராமரிக்கிறார், வழிநடத்துகிறார், பலப்படுத்துகிறார், உற்சாகமூட்டுகிறார். அவரைப் பற்றி கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள அவரிடம் நம் அன்பும் பெருகும்.—சங்கீதம் 31:23; செப்பனியா 3:17; ரோமர் 8:28.
w09 7/15 பக். 29 பாரா. 4-5
நன்றிபொங்க ஏற்றுக்கொள்ளுங்கள் இதயம்பொங்க கொடுத்திடுங்கள்
“யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?” என்று சங்கீதக்காரன் யோசித்தார். (சங். 116:12, NW) என்ன நன்மைகளை அவர் பெற்றிருந்தார்? அவர் “இக்கட்டையும் சஞ்சலத்தையும்” சுமந்து தவித்த காலத்தில் யெகோவா அவருக்கு உதவியிருந்தார். அதோடு, அவரை ‘மரணத்திலிருந்து காப்பாற்றியிருந்தார்.’ அதனால், யெகோவாவுக்கு “கைமாறு” செய்ய அவர் ஆசைப்பட்டார். அதை அவர் எப்படிச் செய்ய நினைத்தார்? ‘நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை . . . நிறைவேற்றுவேன்’ என்று அவர் சொன்னார். (சங். 116:3, 4, 8, 10-14; NW) உள்ளப்பூர்வமாக யெகோவாவிடம் செய்திருந்த எல்லாப் பொருத்தனைகளையும், அவருக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் உறுதிபூண்டார்.
சங்கீதக்காரனைப் போலவே நீங்களும் கடவுளுக்குக் கைமாறு செய்யலாம். எப்படி? கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் இசைவாக எப்போதும் வாழ்வதன் மூலம். ஆகவே, உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா என்றும், அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடு எல்லாக் காரியங்களையும் செய்கிறீர்களா என்றும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். (பிர. 12:13; கலா. 5:16-18) உண்மையைச் சொன்னால், யெகோவா உங்களுக்குச் செய்திருக்கிற எல்லாக் காரியங்களுக்கும் உங்களால் கைமாறு செய்யவே முடியாது. என்றாலும், முழு இருதயத்தோடு அவருடைய சேவைக்காக உங்களையே கொடுத்தீர்களென்றால், அது ‘அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும்.’ (நீதி. 27:11) இப்படி உங்களையே கொடுத்து யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
லேவியராகமப் புத்தகம் சொல்லித்தரும் பாடங்கள்
9 இரண்டாவது பாடம்: நம் உள்ளத்தில் நன்றி பொங்குவதால் நாம் யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம். இஸ்ரவேலர்களுடைய உண்மை வழிபாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாக இருந்த சமாதான பலிகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது, நம்மால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “நன்றி தெரிவிக்கும்” பலியாக இஸ்ரவேலர்கள் சமாதான பலிகளைச் செலுத்தினார்கள் என்று லேவியராகமப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம். (லேவி. 7:11-13, 16-18) கட்டாயத்தினால் அல்ல, சொந்த விருப்பத்தால்தான் இஸ்ரவேலர்கள் அந்தப் பலிகளைச் செலுத்தினார்கள். யெகோவாமீது இருந்த அன்பால் மனப்பூர்வமாக அவற்றைச் செலுத்தினார்கள். பலி செலுத்தப்பட்ட மிருகத்தின் இறைச்சியை, பலி செலுத்திய இஸ்ரவேலரும் அவருடைய குடும்பத்தாரும் குருமார்களும் சாப்பிட்டார்கள். ஆனால், அந்த இறைச்சியின் சில பாகங்கள் யெகோவாவுக்கு மட்டும் கொடுக்கப்பட்டன. எந்தெந்த பாகங்கள் அப்படிக் கொடுக்கப்பட்டன?
10 மூன்றாவது பாடம்: யெகோவாமீது இருக்கிற அன்பால், அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கிறோம். மிருகங்களுடைய கொழுப்பைத்தான் மிகச் சிறந்த பாகமாக யெகோவா கருதினார். சிறுநீரகங்களையும் இன்னும் சில முக்கியமான பாகங்களையும்கூட அவர் மதிப்புள்ளதாகக் கருதினார். (லேவியராகமம் 3:6, 12, 14-16-ஐ வாசியுங்கள்.) அதனால், அந்தச் சிறந்த பாகங்களையும் கொழுப்பையும் இஸ்ரவேலர்கள் மனதாரச் செலுத்தியபோது, யெகோவா ரொம்பச் சந்தோஷப்பட்டார். யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான ஆசை தங்களுக்கு இருந்ததை அந்த இஸ்ரவேலர்கள் காட்டினார்கள். அதேபோல்தான் இயேசுவும்! யெகோவாமீது இருந்த அன்பால், முழு மூச்சோடு அவருக்குச் சேவை செய்தார்; அப்படிச் செய்ததன் மூலம் மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்தார். (யோவா. 14:31) கடவுளுடைய விருப்பத்தைச் செய்வது இயேசுவுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. கடவுளுடைய சட்டங்களை அவர் நெஞ்சார நேசித்தார். (சங். 40:8) இயேசு மனப்பூர்வமாகத் தனக்குச் சேவை செய்ததைப் பார்த்து யெகோவா மனம் குளிர்ந்து போயிருப்பார், இல்லையா?
11 நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையும் அந்தச் சமாதான பலிகள் போன்றதுதான்! ஏனென்றால், அவர்மேல் இருக்கும் அன்பால் நாமாகவே விருப்பப்பட்டுத்தான் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுவதால், மிகச் சிறந்ததை அவருக்குக் கொடுக்கிறோம். தன்மீதும் தன்னுடைய கட்டளைகள்மீதும் இருக்கிற அளவற்ற அன்பால், லட்சக்கணக்கான பேர் தனக்குச் சேவை செய்வதைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டுமல்ல, ஏன் செய்கிறோம் என்பதையும் அவர் பார்க்கிறார், அதை உயர்வாக மதிக்கிறார். இதைத் தெரிந்துகொள்வது நம் மனதுக்கு இதமாக இருக்கிறது. உங்களுக்கு வயதாகிவிட்டதா? முன்புபோல் செய்ய முடியவில்லையே என்று நினைத்து கவலைப்படுகிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். யெகோவாவுக்கு கொஞ்சம் மட்டுமே செய்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கிற அன்புதான் உங்களால் முடிந்ததைச் செய்ய உங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்பதையும் யெகோவா பார்க்கிறார். உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது’ என்று கடவுளுடைய சக்தியின் உதவியால் சங்கீதக்காரன் எழுதினார். (சங். 116:15) தம்மை உண்மையாய் வணங்கும் ஒவ்வொருவரின் உயிரையும் யெகோவா பொக்கிஷமாய்க் கருதுகிறார். ஆனால், இந்த வசனம் தனிநபரின் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை.
ஒரு கிறிஸ்தவர் மரணம்வரை யெகோவாவை உண்மையாக வணங்கி வந்திருந்தாலும்கூட அவருக்காக நடத்தப்படும் இரங்கல் கூட்டத்தில் சங்கீதம் 116:15-ஐ அவருக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஏன்? ஏனென்றால், அந்த வசனத்திற்கு ஆழமான அர்த்தம் இருக்கிறது. தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் உயிரைக் கடவுள் பொக்கிஷமாய்க் கருதுவதால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது.—சங்கீதம் 72:14-யும் 116:8-யும் பாருங்கள்.
தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட யெகோவா அனுமதிக்க மாட்டார் எனச் சங்கீதம் 116:15 உறுதியளிக்கிறது. நம்முடைய நவீன நாளைய சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால்... பல பயங்கரமான சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் நாம் சகித்து வந்திருப்பது தெரியும். நாம் முற்றிலுமாக அழிக்கப்பட யெகோவா ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதற்கு இது பலத்த அத்தாட்சி.
டிசம்பர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 119:1-56
“இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?”
w87-E 11/1 பக். 18 பாரா 10
ஒவ்வொரு விஷயத்திலும் சுத்தமாக இருக்கிறீர்களா?
10 பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதால் ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் கண்டிக்கப்படுகிறார்கள் அல்லது சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். பாலியல் முறைகேட்டை, ஒருவன் தன் ‘உடலுக்கு எதிராக செய்கிற பாவம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18; எபேசியர் 5:5) பெரும்பாலும், “[கடவுளுடைய] வார்த்தையின்படி நடக்க ஜாக்கிரதையாக” இல்லாமல் போவதால்தான் தவறு செய்துவிடுகிறார்கள். (சங்கீதம் 119:9) எப்படி? நிறைய பேர் ஒழுக்க விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுமுறை சமயங்களில் ஓரம்கட்டி விடுகிறார்கள். சகோதர சகோதரிகளோடு கூட்டுறவுகொள்வதை விட்டுவிட்டு, உலக மக்களோடு நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். சிலர், அப்படிப்பட்ட ஆட்களோடு சேர்ந்து கடவுளுக்குப் பிடிக்காத விஷயங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். வேறு சிலர், கூடவேலை செய்கிறவர்களோடு நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுதான் ஒரு மூப்பருக்கும் நடந்தது. அவர் திருமணமானவர். கூடவேலை செய்யும் ஒரு பெண்ணோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தார். பிறகு, அவளோடு சேர்ந்து வாழவும் ஆரம்பித்துவிட்டார். அதனால், அவர் சபையிலிருந்து நீக்கப்பட்டார். “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா?—1 கொரிந்தியர் 15:33.
‘உம்முடைய நினைப்பூட்டுதல்களை நேசிக்கிறேன்’
யெகோவா தம் மக்களுக்கு நினைப்பூட்டுதல்களைக் கொடுக்கிறார். இந்த நெருக்கடியான காலங்களில் எதிர்ப்படும் அழுத்தங்களைச் சமாளிக்க அதன் மூலம் அவர் உதவுகிறார். நாம் தனிப்பட்ட விதத்தில் பைபிள் வாசிக்கும்போதோ, சபை கூட்டங்களில் கொடுக்கப்படும் பேச்சுக்களை அல்லது பதில்களைக் கேட்கும்போதோ சில நினைப்பூட்டுதல்களைப் பெற்றுக்கொள்கிறோம். இப்படி நாம் வாசிக்கிற அல்லது கேட்கிற விஷயங்கள் பெரும்பாலும் புதியவை அல்ல. இது போன்ற விஷயங்களை நாம் ஏற்கெனவே கேட்டிருப்போம். இருந்தாலும், நாம் அவற்றை மறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே, யெகோவாவுடைய நோக்கங்கள், சட்டங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை நாம் எப்போதும் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். அவருடைய நினைப்பூட்டுதல்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவருடைய விருப்பத்துக்கு இசைவான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு நம்மைத் தூண்டுவித்த காரணங்களை மறந்துவிடாதிருக்க அவை உதவுகின்றன; இவ்வாறு நமக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. இதனால், யெகோவாவிடம் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “உம்முடைய நினைப்பூட்டுதல்களை நான் நேசிக்கிறேன்.”—சங்கீதம் 119:24, NW.
வீணானவற்றைப் பார்க்காதபடி கண்களைத் திருப்பிக்கொள்ளுங்கள்!
2 என்றாலும், சிலசமயங்களில் நம்முடைய கண்கள் மூலமாக நாம் ஆபத்தை விலைக்கு வாங்கிவிடலாம். நம்முடைய பார்வைக்கும் மனதிற்கும் இடையே உள்ள தொடர்பு மிகமிக நெருக்கமானதாக இருப்பதால், நாம் பார்க்கிற காரியங்கள் நம் இருதயத்தில் ஆசையைத் துளிர்விடச் செய்யலாம் அல்லது அது வெறியாக மாறிவிடச் செய்யலாம். பிசாசாகிய சாத்தானால் ஆளப்படுகிற ஒழுக்கங்கெட்ட உலகத்தில், காமவெறிபிடித்த உலகத்தில் நாம் வாழ்கிறோம்; ஒழுக்கக்கேடு எனும் சகதியில் நம்மை விழவைக்கிற படங்களும் விளம்பரங்களும் தினம்தினம் நம் கண்முன் வந்து குவிகின்றன; அவற்றை ஒரு கணம் பார்த்தால்கூட நாம் அந்தச் சகதியில் சிக்கிவிடலாம். (1 யோ. 5:19) ஆகவே, “வீணானவற்றைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்பிவிடுங்கள்; உங்கள் வழியில் என்னை நடத்தி, பாதுகாத்திடுங்கள்” என்று சங்கீதக்காரன் கடவுளை நோக்கிக் கெஞ்சியதில் ஆச்சரியமில்லை.—சங். 119:37, NW.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் வசனத்தில் நம்பிக்கை வையுங்கள்
2 கடவுளுடைய வசனம், அதாவது செய்தி, எவ்வளவு மதிப்புமிக்கது என்பதே சங்கீதம் 119-ல் இழையோடும் முக்கிய குறிப்பு. ஞாபகத்தில் வைப்பதற்கு வசதியாக, எழுத்தாளர் இப்பாடலை அகரவரிசையில் எழுதியிருக்கலாம். இதிலுள்ள 176 வசனங்களும் எபிரெய எழுத்துக்களின் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. மூல எபிரெயுவில், இந்தச் சங்கீதத்தின் ஒவ்வொரு 22 செய்யுள்களிலும் உள்ள 8 வரிகளும் அதே எழுத்தில் ஆரம்பிக்கின்றன. இந்தச் சங்கீதம் கடவுளுடைய வசனத்தையும் வேதத்தையும் சாட்சிகளையும் வழிகளையும் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கற்பனைகளையும் நியாயங்களையும் வாக்கையும் பற்றி குறிப்பிடுகிறது. இந்தக் கட்டுரையிலும் இதற்குப்பின் வரும் கட்டுரையிலும், எபிரெய பைபிள் வாசகத்தின் திருத்தமான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் 119-ம் சங்கீதம் ஆராயப்படும். யெகோவாவின் கடந்தகால மற்றும் தற்கால ஊழியர்களுடைய அனுபவங்களைத் தியானிப்பது ஏவுதலால் எழுதப்பட்ட இச்சங்கீதத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள உதவிசெய்ய வேண்டும். கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் மீது நமது நன்றியுணர்வையும் பெருகச் செய்ய வேண்டும்.
டிசம்பர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 119:57-120
கஷ்டங்களைச் சகிப்பது எப்படி?
‘உமது சட்டத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’
2 “கடவுளுடைய சட்டம் எப்படி ஆறுதலையும் தேறுதலையும் அந்தச் சங்கீதக்காரனுக்கு அளித்தது?” என்று நீங்கள் யோசிக்கலாம். யெகோவா, தன்மேல் அக்கறையாயிருக்கிறார் என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்; அதுவே அவருக்கு ஆறுதல் அளித்தது. கடவுள் அன்புடன் கொடுத்த சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளை அவர் நன்கு அறிந்திருந்தார். இதனால், விரோதிகளிடமிருந்து வந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் அவரால் சந்தோஷமாக இருக்க முடிந்தது. யெகோவா தன்னை தயவுடன் நடத்தியதை அவர் புரிந்துகொண்டார். அதுமட்டுமின்றி, கடவுளுடைய சட்டத்தின் வழிநடத்துதலைப் பின்பற்றியதால் தன் விரோதிகளைவிட ஞானமுள்ளவராக ஆனார். அதனால் தன் உயிரையும்கூட பாதுகாத்துக்கொள்ள அவரால் முடிந்தது. அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்ததால் சமாதானத்தையும் நல்மனசாட்சியையும் பெற்றார்.—சங்கீதம் 119:1, 9, 65, 93, 98, 165.
யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்களா?
3 பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனுக்கு கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் அருமையானவையாக இருந்தன: “உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை. தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.” (சங்கீதம் 119:60, 61, பொ.மொ.) யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் துன்புறுத்துதலைச் சகிக்க நமக்கு உதவி செய்கின்றன. ஏனென்றால், சத்துருக்கள் நம்மை இறுக்கி கட்டும் கயிறுகளை நம்முடைய பரலோகத் தகப்பன் அறுத்து எறிந்துவிடுவார் என்ற திடநம்பிக்கை நமக்கு இருக்கிறது. ராஜ்ய பிரசங்க ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு அத்தகைய இடையூறுகளிலிருந்து ஏற்ற காலத்தில் நம்மை அவர் விடுதலை செய்கிறார்.—மாற்கு 13:10.
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—ஐந்தாம் பகுதி
119:71—உபத்திரவப்படுவது எந்த விதத்தில் நல்லது? கஷ்டம் வருகையில், யெகோவாவை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கும் அதிக ஊக்கமாய் ஜெபம் செய்வதற்கும் நன்கு கருத்தூன்றி பைபிளை வாசிப்பதற்கும் அதன்படி நடப்பதற்கும் நாம் கற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, கஷ்டம் வரும்போது நாம் நடந்துகொள்ளும் விதம் நம்முடைய குறைபாடுகளை வெளிப்படுத்துவதால், அவற்றைச் சரிசெய்யவும் முடியும். உபத்திரவம் நம்மை சீர்படுத்த அனுமதித்தால் அதைக் கண்டு நாம் விரக்தியடைய மாட்டோம்.
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
3 நமக்குத் தேவையான ஆறுதல், முக்கியமாக, நம் கரிசனையுள்ள அப்பாவான யெகோவாவிடமிருந்துதான் வருகிறது. (2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.) அனுதாபம் காட்டுவதில் அவர்தான் தலைசிறந்த முன்மாதிரி! “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்” என்று தன்னுடைய மக்களுக்கு அவர் வாக்குக் கொடுக்கிறார்.—ஏசா. 51:12; சங். 119:50, 52, 76.
5 யெகோவா நமக்கு உதவுவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அதனால், நாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்; நம் வேதனையையும் துக்கத்தையும் அவரிடம் மனம் திறந்து சொல்ல வேண்டும். யெகோவா நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்... நமக்குத் தேவையான ஆறுதலைத் தருகிறார்... என்பதைத் தெரிந்துவைத்திருப்பது நம் மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! ஆனால், அவர் நமக்கு எப்படி ஆறுதல் தருகிறார்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—ஐந்தாம் பகுதி
119:96—‘சகல சம்பூரணத்திற்கும் எல்லை’ என்பதன் அர்த்தம் என்ன? இங்கு சங்கீதக்காரன் பரிபூரணத்தைப் பற்றிய மனிதனின் கண்ணோட்டத்தைக் குறிப்பிடுகிறார். ஏனெனில், பரிபூரணத்தைக் குறித்த மனிதனின் கருத்துக்கு எல்லை உண்டு என்பது ஒருவேளை அவருடைய மனதில் இருந்திருக்கலாம். ஆனால், கடவுளுடைய கற்பனைக்கோ அதாவது, கட்டளைக்கோ எல்லையே கிடையாது. அதன் ஆலோசனைகள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்துகின்றன.
டிசம்பர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 119:121-176
வலியப் போய் வலியை வாங்காதீர்கள்
கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்!
5 கடவுளுடைய சட்டங்கள் நமக்கு உதவ வேண்டுமென்றால், அவற்றை வெறுமனே படித்தாலோ அவற்றைத் தெரிந்துவைத்திருந்தாலோ மட்டும் போதாது. அவற்றை நாம் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும். “கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆமோ. 5:15) இதை எப்படிச் செய்வது? யெகோவா ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறாரோ அதேபோல் நாமும் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்களுக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்று வைத்துக்கொள்வோம். அதற்காக டாக்டரிடம் போகிறீர்கள். நீங்கள் சத்தான உணவைச் சாப்பிட வேண்டுமென்றும், இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றும், வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும் அவர் சொல்கிறார். நீங்களும் அதன்படி செய்கிறீர்கள். அப்போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. இப்போது அந்த டாக்டரின் அறிவுரையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
6 அதேபோல், பாவத்தால் வரும் மோசமான விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் கடவுள் நமக்குச் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, பொய் சொல்வதை... ஏமாற்றுவதை... ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதை... வன்முறையில் இறங்குவதை... அல்லது பேய்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதை... தவிர்க்க வேண்டுமென்று பைபிள் கற்பிக்கிறது. (நீதிமொழிகள் 6:16-19-ஐ வாசியுங்கள்; வெளி. 21:8) பைபிள் கற்பிக்கிறபடி நடந்துகொள்ளும்போது, அதாவது யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, நமக்கு அருமையான பலன்கள் கிடைக்கின்றன. அந்தப் பலன்களை அனுபவிக்கும்போது, அவர்மீதும் அவருடைய சட்டங்கள்மீதும் நமக்கு அன்பு அதிகமாகிறது.
w93-E 4/15 பக். 17 பாரா 12
இளைஞர்களே—எதன் பின்னால் போகிறீர்கள்?
12 கெட்ட காரியங்களை வெறுப்பதற்கும், அதை அருவருப்பதற்கும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (சங்கீதம் 97:10) ஆனால், ஒரு கெட்ட விஷயம் நமக்குப் பிடித்திருந்தால் அதை எப்படி வெறுக்க முடியும்? பின்விளைவுகளை யோசித்தால் முடியும்! “ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான். பாவத்துக்காக விதைக்கிறவன் தன் பாவத்தால் அழிவை அறுவடை செய்வான்.” (கலாத்தியர் 6:7, 8) ஏதாவது தப்பு செய்ய ஆசை முளைக்கும்போது, அந்த செயல் யெகோவாவுடைய மனதை எவ்வளவு வேதனைப்படுத்தும் என்று முதலில் யோசியுங்கள். (சங்கீதம் 78:41-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) முறைதவறிய கர்ப்பம் அல்லது எய்ட்ஸ் மாதிரியான மோசமான நோய்கள் வர வாய்ப்பிருப்பதை யோசித்துப் பாருங்கள். மனதளவில் நீங்கள் எப்படி பாதிக்கப்படுவீர்கள் என்பதையும் உங்கள் சுயமரியாதை எப்படி பறிபோகும் என்பதையும் யோசித்துப் பாருங்கள். அதோடு, திருமண உறவிலும் பிரச்சினைகள் வரலாம். இதுபோன்ற பின்விளைவுகள் ரொம்ப காலத்துக்கு நீடித்திருக்கலாம். சபையில் உங்கள் பொறுப்புகளை இழப்பது மட்டுமல்ல சபையிலிருந்தே நீங்கள் நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. (1 கொரிந்தியர் 5:9-13) பின்விளைவுகளை யோசித்துப் பார்ப்பது கெட்டதை வெறுக்க உங்களுக்கு உதவும். அற்ப சந்தோஷத்துக்காக எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும், பாருங்கள்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுடைய வார்த்தை சத்தியம் என்பதை உறுதியாக நம்புங்கள்
2 ஆனால், ‘யெகோவா சத்தியத்தின் கடவுள்’ என்று அவருடைய மக்களான நாம் உறுதியாக நம்புகிறோம். அவர் எப்போதுமே நமக்கு நல்லதுதான் செய்ய ஆசைப்படுகிறார் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். (சங். 31:5; ஏசா. 48:17) பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்று நாம் முழுமையாக நம்புகிறோம். ஏனென்றால், “சத்தியம்தான் [கடவுளுடைய] வார்த்தையின் சாராம்சம்” என்று நமக்கு நன்றாகத் தெரியும். (சங்கீதம் 119:160-ஐ வாசியுங்கள்.) ஒரு பைபிள் அறிஞர் இதைப் பற்றி எழுதியபோது, “கடவுள் சொல்லியிருக்கிற எதுவுமே பொய் கிடையாது, அது எதுவுமே நிறைவேறாமலும் போகாது. கடவுளுடைய மக்கள் அவரை நம்புகிறார்கள். அதனால், அவர் சொல்லியிருப்பதையும் அவர்கள் நம்பலாம்” என்று எழுதினார். அதை நாமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
டிசம்பர் 30–ஜனவரி 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 120-126
கண்ணீரோடு விதைத்தார்கள், சந்தோஷத்தோடு அறுத்தார்கள்
தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
10 சீஷர்களுக்குரிய நுகத்தை நாம் ஏற்றுக்கொள்கையில், சாத்தானுக்கு எதிராக போராடுகிறோம். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என யாக்கோபு 4:7 வாக்குறுதி தருகிறது. ஆனால் அது சுலபம் என்பதை இது குறிப்பதில்லை. கடவுளை சேவிக்க கணிசமான முயற்சி தேவை. (லூக்கா 13:24) இருந்தாலும் சங்கீதம் 126:5-ல் பைபிள் இவ்வாறு வாக்குறுதி தருகிறது: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” ஆம், நன்றியில்லாத ஒரு கடவுளை நாம் சேவிப்பதில்லை. அவர் ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’; தம்மை மகிமைப்படுத்துகிறவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார்.—எபிரெயர் 11:6.
உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள்
17 ஒருவேளை, உங்களுடைய பாசத்துக்குரிய யாராவது ஒருவர் இறந்துபோயிருக்கலாம். அதை நினைத்து நீங்கள் துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில், நேரமெடுத்து பைபிளில் இருக்கிற உயிர்த்தெழுதல் பதிவுகளைப் படியுங்கள். ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டதை நினைத்து நீங்கள் துவண்டுபோயிருக்கலாம். அப்போது, யெகோவாவின் கண்டிப்பு என்றைக்குமே சரியாகத்தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்புவதற்காக, நன்றாக ஆராய்ச்சி செய்து படியுங்கள். இப்படி உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சரி, அவற்றை உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளாகப் பாருங்கள். மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். சகோதர சகோதரிகளிடம் எப்போதும் நெருக்கமாக இருங்கள். (நீதி. 18:1) நடந்ததை நினைத்து உங்களுக்கு அழுகை அழுகையாக வந்தாலும் சகித்திருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யுங்கள். (சங். 126:5, 6) கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்தில் கலந்துகொள்வது, பைபிள் படிப்பது என எதையும் விட்டுவிடாதீர்கள். யெகோவா உங்களுக்காக வைத்திருக்கிற அருமையான ஆசீர்வாதங்களை எப்போதுமே நினைத்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதைப் பார்க்க பார்க்க அவர்மேல் இருக்கிற விசுவாசம் உங்களுக்கு அதிகமாகும்.
w01 7/15 பக். 18-19 பாரா. 13-14
அறுவடை வேலையில் முன்னேறுங்கள்!
13 கடவுளுடைய அறுவடைக்காரர்களுக்கு, முக்கியமாய் துன்புறுத்துதலை சகிப்பவர்களுக்கு, சங்கீதம் 126:5, 6-லுள்ள இந்த வார்த்தைகள் பெரும் ஆறுதலை அளிக்கின்றன: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” விதைப்பையும் அறுப்பையும் பற்றிய சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள், பூர்வ பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மீதிபேரிடம் யெகோவா காட்டிய கரிசனையையும், அவருடைய ஆசீர்வாதத்தையும் விளக்குகின்றன. அவர்கள் தங்கள் விடுதலையைக் குறித்து பெரிதும் மகிழ்ந்தனர், ஆனால் நாடு கடத்தப்பட்டிருந்த அந்த 70 ஆண்டு காலத்தில் பயிரிடப்படாமல் பாழாய்க் கிடந்த நிலத்தில் மீண்டும் விதை விதைக்கையில் அவர்கள் அழுதிருக்கலாம். எனினும், சோர்ந்துவிடாமல் தங்கள் விதைப்பிலும் கட்டுமான பணியிலும் ஈடுபட்டவர்கள் தங்கள் உழைப்பின் பலனையும், மனத்திருப்தியையும் அனுபவித்து மகிழ்ந்தனர்.
14 சோதனையை எதிர்ப்படுகையில் அல்லது நாமோ நம் சக விசுவாசிகளோ நீதியினிமித்தம் துன்பப்படுகையில் ஒருவேளை கண்ணீர் சிந்தலாம். (1 பேதுரு 3:14) நம்முடைய அறுவடை வேலையைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் நமக்கு கடினமாக இருக்கலாம், ஏனெனில் ஊழியத்தில் நாம் பட்ட பிரயாசத்திற்கு பலன் என சொல்லிக்கொள்ள நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து விதை விதைத்து, நீர் பாய்ச்சி வந்தால், நாம் எதிர்பாராத அளவுக்கு கடவுள் வளரச் செய்வார். (1 கொரிந்தியர் 3:6) பைபிள்களையும் பைபிள் பிரசுரங்களையும் நாம் விநியோகிப்பதால் கிடைக்கும் பலன்களில் இது நன்கு சித்தரித்துக் காட்டப்படுகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
காக்கும் வல்லமை—‘கடவுள் நம் அடைக்கலம்’
15 முதலில் சரீர பாதுகாப்பை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் வணக்கத்தாராக, ஒரு தொகுதியாக நாம் அப்படிப்பட்ட பாதுகாப்பை எதிர்பார்க்கலாம். அது இல்லையேல் நாம் சாத்தானுக்கு எளிதாக இரையாகிவிடுவோம். இதை சற்று சிந்தித்துப் பாருங்கள்: ‘இந்த உலகத்தை ஆளுகிறவனாகிய’ சாத்தான் உண்மை வணக்கத்தை அடியோடு அழிக்க துடிக்கிறான். (யோவான் 12:31; வெளிப்படுத்துதல் 12:17) பூமியிலுள்ள மிக பலம்படைத்த அரசாங்கங்களில் சில நம் பிரசங்க வேலையை தடைசெய்து, நம்மை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட முயன்றிருக்கின்றன. இருந்தாலும், யெகோவாவின் மக்கள் உறுதியாக நிலைத்திருந்து, பிரசங்க வேலையை தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர்! வல்லமையான தேசங்களால், சிறியதாகவும் தற்காப்பற்றதாகவும் தோன்றும் இந்த கிறிஸ்தவ தொகுதியினரின் நடவடிக்கையை ஏன் தடுத்து நிறுத்த முடியாமல் போயிருக்கிறது? ஏனெனில் யெகோவா தமது வல்லமைமிக்க சிறகுகளை பரப்பி நம்மை பாதுகாத்திருக்கிறார்!—சங்கீதம் 17:7, 8.