வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
செப்டம்பர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 79-81
யெகோவாவின் மகிமையான பெயரை நேசியுங்கள்
மீட்புவிலை தகப்பனிடமிருந்து கிடைத்த “மிகச் சிறந்த அன்பளிப்பு”
5 யெகோவாவுடைய பெயரை நேசிக்கிறோம் என்பதை நாமும் நம்முடைய நடத்தையின் மூலம் காட்டலாம். நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 1:15, 16-ஐ வாசியுங்கள்.) அதாவது, நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், முழு இதயத்தோடு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். நாம் துன்புறுத்தப்பட்டாலும், யெகோவாவுடைய சட்டங்களின்படி வாழ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம்; இதன் மூலம், யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறோம். (மத். 5:14-16) அவர் கொடுத்திருக்கும் சட்டங்கள் நம்முடைய நன்மைக்குத்தான் என்பதையும், சாத்தான் ஒரு பொய்யன் என்பதையும் நிரூபிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நாம் தவறு செய்துவிடுகிறோம். பிறகு, உண்மையிலேயே மனம் திருந்துகிறோம், யெகோவாவுடைய பெயரைக் கெடுக்கும் விஷயங்களைச் செய்யாமல் இருக்கிறோம்.—சங். 79:9.
ரோமர் 10:13—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்’
பைபிளில், ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வது’ என்பது கடவுளுடைய பெயரைத் தெரிந்து வைத்திருப்பதையும் அதை வணக்கத்தில் பயன்படுத்துவதையும் மட்டுமே குறிப்பதில்லை. (சங்கீதம் 116:12-14) கடவுள்மேல் நம்பிக்கை வைப்பதையும் உதவிக்காக அவரை சார்ந்திருப்பதையும்கூட அது குறிக்கிறது.—சங்கீதம் 20:7; 99:6.
இயேசு கிறிஸ்து கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்த ஜெபத்தின் முதல் வரிகளே, “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்பதுதான். (மத்தேயு 6:9) முடிவில்லாமல் வாழ்வதற்கு நாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும் என்றெல்லாம்கூட இயேசு சொன்னார்.—யோவான் 17:3, 6, 26.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 111
யோசேப்பு
யோசேப்பின் பெயருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாக்கோபின் மகன்களிலேயே யோசேப்பு ஒரு முக்கியமான நபராக இருந்தார். அதனால்தான் இஸ்ரவேலில் இருக்கும் கோத்திரங்களை ஒட்டுமொத்தமாகக் குறிப்பதற்கு (சங் 80:1) அல்லது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைக் குறிப்பதற்கு சிலசமயங்களில் அவருடைய பெயர் பயன்படுத்தப்பட்டது. சில பைபிள் தீர்க்கதரிசனங்களில்கூட அவருடைய பெயரைப் பார்க்க முடிகிறது.—எசே 47:13; 48:32, 35; 37:15-26; ஒப 18; சக 10:6; வெளி 7:8.
செப்டம்பர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 82-84
உங்களுக்குக் கிடைத்திருக்கிற பொறுப்புகளுக்காக நன்றியோடு இருங்கள்
wp16.6-E பக். 8 பாரா. 2-3
பறவைகள் கற்றுத்தரும் பாடங்கள்
தகைவிலான் குருவியைப் பற்றி எருசலேமில் இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். கட்டிடங்களின் ஓரத்தில், கூடு கட்டுவது அந்த பறவைகளின் வழக்கம். சாலோமோன் கட்டிய ஆலயத்தில்கூட இந்தக் குருவிகள் கூடு கட்டியது. ஆலய கட்டிடத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தன்னுடைய குஞ்சுகளைப் பாதுகாப்பாக வளர்க்கலாம் என்று அவற்றிக்குத் தோன்றியிருக்கலாம்.
சங்கீதம் 84-ஐ எழுதியவர் கோராகுவின் மகன்களில் ஒருவர். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை, ஒரு வாரத்துக்கு மட்டும்தான் அவர் ஆலயத்தில் சேவை செய்வார். அந்த சமயத்தில், தகைவிலான் குருவி கூடுகளை அவர் ஆலயத்தில் கவனித்தார். தகைவிலான் குருவிகளால் எப்படி வருஷம் முழுவதும் யெகோவாவின் வீட்டில் இருக்க முடிந்ததோ, அதே மாதிரி அவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால்தான், “பரலோகப் படைகளின் யெகோவாவே, உங்களுடைய மகத்தான கூடாரத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்! யெகோவாவின் பிரகாரங்களுக்குப் போக என் ஜீவன் தவிக்கிறது. அங்கு போக நான் ஏங்கித் தவிக்கிறேன். . . . பரலோகப் படைகளின் யெகோவாவே, என் ராஜாவே, என் கடவுளே, உங்களுடைய மகத்தான பலிபீடத்தின் பக்கத்திலே பறவைக்குக்கூட வீடு கிடைக்கிறதே! தகைவிலான் குருவிக்குக்கூட தன் குஞ்சுகளோடு தங்குவதற்குக் கூடு கிடைக்கிறதே!” என்று சொன்னார். (சங் 84:1-3) அவருக்கு இருந்த அதே ஆசை நமக்கும் இருக்கிறதா? நாமும் நம் பிள்ளைகளோடு சேர்ந்து சபையில் கடவுளுடைய மக்களோடு நேரம் செலவு செய்ய ஏங்குகிறோமா?—சங் 26:8, 12.
நியாயமான எதிர்பார்ப்புகளால் மகிழ்ச்சி காண . . .
வயதாகும்போது அல்லது நோய்வாய்ப்படும்போது நம்மால் யெகோவாவுக்கு அதிகமாகச் சேவைசெய்ய முடியாமல் போகலாம். நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், பிள்ளைகளைக் கவனிப்பதிலேயே உங்கள் நேரமும் சக்தியும் கரைந்துவிடுவதால், தனிப்பட்ட படிப்பிற்கு சரிவரக் கவனம் செலுத்த முடியவில்லை என்றோ கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பலன் பெற முடியவில்லை என்றோ கவலைப்படலாம். சில சமயங்களில், செய்ய முடியாததை நினைத்து அதிகமாகக் கவலைப்பட்டு, செய்ய முடிந்ததைச் செய்யாமல் விட்டுவிடுகிறோமா?
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த லேவியர் ஒருவர் தனக்கிருந்த நிறைவேறாத ஆசையை வெளிப்படுத்தினார். வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆலயத்தில் சேவை செய்வதற்கான ஒரு விசேஷ வாய்ப்பு அவருக்கு இருந்தது. என்றாலும், பலிபீடத்தின் அருகில் என்றைக்கும் தங்கியிருக்க வேண்டும் என்ற உன்னத ஆசையை அவர் வெளிப்படுத்தினார். (சங். 84:1-3) தனது ஆசை நிறைவேறாமல் போனாலும் திருப்தியோடு இருக்க உண்மையுள்ள இந்த லேவியருக்கு எது உதவியது? ஆலயப் பிராகாரங்களில் செலவழிக்கும் ஒரேவொரு நாள்கூட மிகவும் மதிப்புள்ளது என்பதை அவர் உணர்ந்துகொண்டதுதான். (சங். 84:4, 5, 10) அதேபோல, நம்மால் முடியாததை நினைத்துக் கவலைப்படுவதைவிட, நம்மால் எவற்றைச் செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு நன்றியோடு இருக்க வேண்டும்.
யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார்!
12 நீங்கள் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் எவ்வளவு அவதிப்படுகிறீர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் உங்களுக்குத் துளிகூட சந்தேகம் வேண்டாம்! உங்கள் சூழ்நிலையைச் சரியான விதத்தில் பார்ப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேளுங்கள். பிறகு, அவர் உங்களுக்காக பைபிளில் பதிவு செய்திருக்கும் நல்ல வார்த்தைகளைப் படியுங்கள். முக்கியமாக, தன்னுடைய ஊழியர்களை யெகோவா உயர்வாகப் பார்ப்பதைக் காட்டுகிற பதிவுகளைப் படியுங்கள். இப்படிச் செய்யும்போது, தனக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்கள்மீது யெகோவா எவ்வளவு அன்பு காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.—சங். 84:11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 816
அப்பா இல்லாத பிள்ளைகள்
இஸ்ரவேல் மக்கள் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தம் வைத்திருந்த சமயங்களில் அப்பா இல்லாத பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். (சங் 82:3; 94:6; ஏசா 1:17, 23; எரே 7:5-7; 22:3; எசே 22:7; சக 7:9-11; மல் 3:5) அப்பா இல்லாத பிள்ளைகளை யாராவது கொடுமைபடுத்தினால் அவர்கள்மீது யெகோவாவின் சாபம் இருந்தது. (உபா 27:19; ஏசா 10:1, 2) அப்படிப்பட்ட பிள்ளைகள்மேல் யெகோவா எப்போதும் அக்கறை வைத்திருந்தார். (நீதி 23:10, 11; சங் 10:14; 68:5; உபா 10:17, 18; ஓசி 14:3; சங் 146:9; எரே 49:11) அப்பா-அம்மாவை இழந்த பிள்ளைகள்மீது உண்மையான அன்பையும் கரிசனையையும் காட்டுவது உண்மை கிறிஸ்தவர்களுக்கான ஒரு அடையாளமாக இருக்கிறது.—யாக் 1:27.
செப்டம்பர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 85-87
சகித்திருக்க ஜெபம் உதவி செய்யும்
யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கிறீர்களா?
10 கடவுளின் மகிமையைப் பிரதிபலிப்பதற்கு நாம் ‘ஜெபத்தில் உறுதியாயிருக்கவும்’ வேண்டும். (ரோ. 12:12) யெகோவாவுக்குப் பிடித்தமான வகையில் அவருக்குச் சேவை செய்ய உதவி கேட்டு ஜெபம் செய்யலாம், அப்படிச் செய்யவும் வேண்டும். கடவுளுடைய சக்தியைத் தரும்படி... அதிக விசுவாசத்தைத் தரும்படி... சோதனைகளைச் சமாளிக்க பலம் தரும்படி... கேட்டு நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்த’ உதவி கேட்டும் நாம் ஜெபம் செய்யலாம். (2 தீ. 2:15; மத். 6:13; லூக். 11:13; 17:5) ஒரு பிள்ளை தன் அப்பாவை எப்போதும் சார்ந்திருப்பதுபோல, நாமும் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவை எப்போதும் சார்ந்திருக்க வேண்டும். யெகோவாவுக்காக இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்குப் பலம் தரும்படி நாம் கேட்டால் அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார். நாம் அவரைத் தொல்லைப்படுத்துவதாக ஒருபோதும் நினைக்கக் கூடாது! மாறாக, நம்முடைய ஜெபங்களில் அவரைத் துதிப்போமாக; அவருக்கு நன்றிசெலுத்துவோமாக; சோதனைகள் வரும்போது நம்மை வழிநடத்தும்படி அவரைக் கேட்போமாக. அவருடைய புனிதமான பெயருக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் அவருக்குச் சேவை செய்ய உதவும்படி கேட்போமாக.—சங். 86:12; யாக். 1:5-7.
யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்?
17 சங்கீதம் 86:6, 7-ஐ வாசியுங்கள். யெகோவா தன் ஜெபங்களைக் கேட்டுப் பதில் கொடுத்தார் என்பதில் தாவீதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நீங்களும் அதே நம்பிக்கையோடு இருக்கலாம். இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த உதாரணங்கள் எதைக் காட்டுகின்றன? யெகோவா நமக்கு ஞானத்தைத் தருவார்... சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுப்பார்... சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி உதவி செய்வார்... தன்னை வணங்காதவர்களைப் பயன்படுத்திக்கூட நமக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்.
18 யெகோவா நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார் என்று சொல்ல முடியாதுதான். ஆனால், அவர் கண்டிப்பாகப் பதில் கொடுப்பார் என்று நமக்குத் தெரியும். நமக்கு எப்போது என்ன தேவையோ அப்போது அதை அவர் கொடுப்பார். அதனால், யெகோவா உங்களைப் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இப்போது மட்டுமல்ல, வரப்போகும் புதிய உலகத்திலும் ‘எல்லா உயிர்களின் ஆசைகளையும் திருப்திப்படுத்துவார்’ என்பதில் நம்பிக்கையோடு இருங்கள்.—சங். 145:16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1058 பாரா 5
இதயம்
“முழு இதயத்தோடு” சேவை செய்வது. அடையாள அர்த்தத்தில், ஒருவருடைய இதயம் பிளவுபட்டிருக்க அல்லது இரண்டுபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. (சங் 86:11) அப்படிப்பட்ட ஒரு நபர் யெகோவாவுக்கு அரை மனதாக சேவை செய்துகொண்டு இருக்கலாம். (சங் 119:113; வெளி 3:16) மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று சொல்லலாம், அல்லது ஒரே சமயத்தில் இரண்டு எஜமானுக்கு சேவை செய்ய முயற்சி செய்யலாம்.—1நா 12:33; சங் 12:2.
செப்டம்பர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 88-89
யெகோவாவுடைய ஆட்சியே சிறந்தது
யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!
5 ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருப்பதற்கான இன்னொரு காரணத்தைக் கவனியுங்கள். யெகோவா தன்னுடைய அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துகிறார்; அவருடைய நியாயம் பரிபூரணமானது! “யெகோவாவாகிய நான் மாறாத அன்பையும் நியாயத்தையும் நீதியையும் காட்டுகிற கடவுள் . . . இவற்றை நான் விரும்புகிறேன்” என்று யெகோவா சொல்கிறார். (எரே. 9:24) எது சரி என்று தீர்மானிக்க யெகோவாவுக்கு மனித சட்டங்கள் அவசியம் இல்லை. ஏனென்றால், எது சரி என்பதற்கான தராதரத்தை நிர்ணயிப்பதே அவர்தான். தன் பரிபூரணமான நியாயத்தின் அடிப்படையில் யெகோவா மனிதர்களுக்குச் சட்டங்களைத் தந்திருக்கிறார். “நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன” என்று சங்கீதக்காரன் சொன்னார். அதனால், யெகோவாவுடைய எல்லா சட்டங்களும், நியமங்களும், தீர்மானங்களும் சரியாகத்தான் இருக்கும். (சங். 89:14; 119:128) யெகோவா நியாயமற்ற விதத்தில் ஆட்சி செய்கிறார் என்று சாத்தான் சொல்கிறான். ஆனால், நியாயமான ஒரு உலகத்தை அவனால் இதுவரை கொண்டுவர முடியவில்லை.
யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!
10 யெகோவா கடுமையாக ஆட்சி செய்வதில்லை. அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் உணருகிறார்கள். (2 கொ. 3:17) “மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன. பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன” என்று யெகோவாவைப் பற்றி தாவீது சொன்னார். (1 நா. 16:7, 27) “உங்களை ஆனந்தமாகப் புகழ்கிறவர்கள் சந்தோஷமானவர்கள். யெகோவாவே, உங்களுடைய முகத்தின் ஒளியில் அவர்கள் நடக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய பெயரை நினைத்து நாளெல்லாம் சந்தோஷப்படுகிறார்கள். உங்களுடைய நீதியால் உயர்வு அடைந்திருக்கிறார்கள்” என்று சங்கீதக்காரனாகிய ஏத்தான் எழுதினார்.—சங். 89:15, 16.
11 யெகோவா நல்லவர் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க யோசிக்க, அவர்தான் சிறந்த ஆட்சியாளர் என்பது நமக்குப் புரியும். “வேறு எந்தவொரு இடத்திலும் ஆயிரம் நாட்கள் இருப்பதைவிட, உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள் இருப்பது மேல்!” என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே நாமும் உணருவோம். (சங். 84:10) எது நமக்குச் சந்தோஷத்தைத் தரும் என்று நம்மை வடிவமைத்தவரும் நம் படைப்பாளருமான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நம் தேவைக்கும் அதிகமாகவே அவர் நமக்குத் தருகிறார். யெகோவா சொல்வதைச் செய்யும்போது, நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்; அளவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்போம். அவர் சொல்வதைச் செய்வதற்கு நாம் ஒருவேளை தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தால்கூட, நம்மால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.—ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்.
கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
14 தாவீதிடம் யெகோவா ஒரு வாக்குக் கொடுத்தார். அதைத்தான் தாவீதோடு செய்த ஒப்பந்தம் என்று சொல்கிறோம். (2 சாமுவேல் 7:12, 16-ஐ வாசியுங்கள்.) தாவீது எருசலேமின் ராஜாவாக இருந்தபோது யெகோவா இந்த ஒப்பந்தத்தைச் செய்தார். மேசியா தாவீதுடைய வம்சத்தில்தான் வருவார் என்று வாக்குக் கொடுத்தார். (லூக். 1:30-33) கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் ‘உரிமையுள்ளவர்’ தாவீதின் சந்ததியில்தான் வருவார் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது. (எசே. 21:25-27) தாவீதுடைய சிங்காசனம் ‘என்றென்றைக்கும் உறுதியாக’ இருக்கும்; தாவீதுடைய சந்ததியில் வருபவர் ‘என்றென்றைக்கும் இருப்பார்; அவர் சிங்காசனம் சூரியனைப்போல நிலைநிற்கும்.’ இயேசு ஆட்சி செய்யும்போது இந்த வார்த்தைகள் நிறைவேறும். (சங். 89:34-37) இயேசு எப்போதுமே நீதியாக ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சியில் ஒருநாளும் அநீதி இருக்காது. அந்த ஆட்சியால் வரும் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் இருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“நீர் ஒருவரே உண்மைப் பற்றுறுதிமிக்கவர்”
4 எபிரெய வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, “உண்மைப் பற்றுறுதி” என்பது ஒரு பொருளோடு தன்னை அன்புடன் இணைத்துக்கொண்டு, அந்தப் பொருளோடு தொடர்புடைய அதன் நோக்கம் நிறைவேறும்வரை அதைவிட்டு விலகாதிருக்கும் தயவு ஆகும். உண்மைத் தன்மையைவிட அதிகம் இதில் உட்பட்டுள்ளது. ஏனென்றால் வெறுமனே கடமைக்காக ஒருவர் உண்மைத் தன்மையுடன் இருக்கலாம். மாறாக, உண்மைப் பற்றுறுதி என்பது அன்பில் வேரூன்றப்பட்டது. மேலும், “உண்மைத் தன்மை” என்ற வார்த்தையை ஜடப்பொருட்களுக்கும் பயன்படுத்த முடியும். உதாரணமாக, இரவில் சந்திரன் தவறாமல் காட்சியளிப்பதால், ‘வானத்திலுள்ள உண்மையுள்ள சாட்சி’ என அதை சங்கீதக்காரன் அழைத்தார். (சங்கீதம் 89:37) ஆனால் சந்திரன் உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பதாக வர்ணிக்க முடியாது. ஏன்? ஏனென்றால் உண்மைப் பற்றுறுதி என்பது அன்பின் வெளிக்காட்டு—ஜடப்பொருட்களால் காண்பிக்க முடியாத ஒன்று.
5 வேதப்பூர்வ கருத்தில், உண்மைப் பற்றுறுதி என்பது கனிவானது. இந்தப் பண்பை வெளிக்காட்டுவது, அதைக் காட்டுகிறவருக்கும் அது காட்டப்படுகிறவருக்கும் இடையே ஓர் உறவு நிலவுவதை சுட்டிக் காண்பிக்கிறது. இத்தகைய உண்மைப் பற்றுறுதி மாறாதது. இது காற்றின் போக்கிற்கு ஏற்ப நிலையில்லாமல் திசை மாறிச் செல்லும் அலைகளைப் போன்றதல்ல. மாறாக, உண்மைப் பற்றுறுதிக்கு, அல்லது உண்மைப் பற்றுறுதிமிக்க அன்புக்கு இமாலய தடைகளைக்கூட சமாளிக்கும் ஸ்திரத்தன்மையும் பலமும் இருக்கிறது.
செப்டம்பர் 30–அக்டோபர் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 90-91
என்றென்றும் வாழ யெகோவாவை நம்புங்கள்
wp19.3 பக். 5 பாரா. 4-6
சாவில்லாத வாழ்வைத் தேடி
முதுமையைத் தடுக்க பல சிகிச்சைமுறைகள் இருந்தாலும், இப்போது வாழ்வதைவிட அதிக காலத்துக்கு மனிதர்களால் வாழ முடியாது என்று நிறைய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 19-வது நூற்றாண்டிலிருந்து, மனிதர்களின் சராசரி வாழ்நாள் காலம் அதிகரித்துக்கொண்டே வந்திருப்பது உண்மைதான். ஆனால் இதற்கு முக்கியக் காரணம், சுகாதாரம், தொற்றுநோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவைதான். மனிதர்களுடைய வாழ்நாள் காலம் இதற்குமேல் அதிகமாவதற்கு அவ்வளவாக வாய்ப்பில்லை என்று சில மரபியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பு, பைபிள் எழுத்தாளர்களில் ஒருவரான மோசே இப்படிச் சொன்னார்: “எங்களுடைய ஆயுள் 70 வருஷம், நிறைய தெம்பு இருந்தால் 80 வருஷம். ஆனால், அவை துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன. அவை வேகமாக ஓடிவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகிறோம்.” (சங்கீதம் 90:10) வாழ்நாள் காலத்தைக் கூட்ட மனிதர்கள் என்னதான் முயற்சி செய்தாலும், இன்றும் நம் நிலைமை மோசே சொன்னது போலத்தான் இருக்கிறது.
ஆனால், சில உயிரினங்கள் 200 வருஷங்களுக்கு மேல் வாழ்கின்றன! ராட்சஸ செக்கோயா போன்ற மரங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு வாழ்கின்றன! அப்படியென்றால், நாம் ஏன் வெறும் 70, 80 வருஷத்துக்கு மட்டும் வாழ்கிறோம் என்ற கேள்வி நம் மனதைக் குடைகிறது, இல்லையா?
wp19.1 பக். 5, பெட்டி
கடவுளுடைய பெயர் என்ன? கடவுளைப் படைத்தது யார்?
நிறைய பேர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். உங்கள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடுகிறதா? ‘இந்த உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் ஒருத்தர் படைச்சிருக்காருன்னா, அவர யாரு படைச்சது?’ என்று யோசிக்கிறீர்களா?
இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் இருந்ததாக விஞ்ஞானிகள் பொதுவாக ஒத்துக்கொள்கிறார்கள். பைபிளும் இதைத்தான் சொல்கிறது. அதிலுள்ள முதல் வசனமே, “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று சொல்கிறது.—ஆதியாகமம் 1:1.
இந்தப் பிரபஞ்சம் தானாக உருவாகியிருக்க முடியாது. ஏதோவொன்று உருவாக வேண்டுமென்றால் அதை உருவாக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும். இல்லையென்றால் நம்மைச் சுற்றி எந்தப் படைப்புகளும் இருந்திருக்காது, நாமும் இருந்திருக்க மாட்டோம். அப்படியென்றால், எல்லாவற்றையும் படைத்த ஒருவர் இருக்கிறார்! அவருடைய சக்திக்கு அளவே இல்லை. அவருடைய பெயர்தான் யெகோவா.—யோவான் 4:24.
“மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே, பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு முன்பிருந்தே, என்றென்றும் கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 90:2) அதனால், கடவுளை யாரும் படைக்கவில்லை, அவர் என்றென்றும் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர்தான் ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் படைத்தார்.—வெளிப்படுத்துதல் 4:11.
யெகோவாவின் அன்பு பயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும்
16 நம் உயிரை நாம் முக்கியமாக நினைக்கிறோம் என்று சாத்தானுக்குத் தெரியும். ஆனால், நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாம் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்போம் என்று அவன் சொல்கிறான். (யோபு 2:4, 5) சொல்லப்போனால், யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தைக்கூட நாம் இழக்கத் தயாராக இருப்போம் என்று சொல்கிறான். அவன் சொல்வது பொய். இருந்தாலும், சாத்தான்தான் ‘மரணத்துக்கு வழிவகுக்கிறவன்.’ (எபி. 2:14, 15) அதனால், நமக்கு இயல்பாக இருக்கிற மரண பயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான். சில சமயம், நம்முடைய நம்பிக்கையை விடவில்லை என்றால் நம்மைக் கொலை செய்யப்போவதாக சாத்தானுடைய ஆட்கள் நம்மை மிரட்டுகிறார்கள். மற்ற சமயங்களில், ஒருவேளை நம் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, கடவுளுடைய பேச்சை மீறி நடக்க சாத்தான் நம்மைத் தூண்டலாம். உதாரணத்துக்கு, இரத்தம் ஏற்றச் சொல்லி டாக்டர்களோ சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோ நம்மை வற்புறுத்தலாம். இல்லையென்றால், பைபிளுக்கு எதிரான ஒரு மருத்துவ சிகிச்சையை எடுக்கச் சொல்லி யாராவது நம்மைத் தூண்டலாம்.
17 சாக வேண்டும் என்று நாம் யாருமே விரும்புவது இல்லைதான். ஒருவேளை நாம் இறந்துவிட்டாலும், யெகோவா நம்மேல் அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டார் என்று நமக்குத் தெரியும். (ரோமர் 8:37-39-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்கள் இறந்தாலும் அவருடைய நினைவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். (லூக். 20:37, 38) மறுபடியும் அவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார். (யோபு 14:15) நமக்கு ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் மகனுடைய உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16) அவர் நம்மேல் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், வியாதியின் காரணமாக அல்லது துன்புறுத்தல் காரணமாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நாம் இருக்கும்போது யெகோவாவைவிட்டு விலகிப் போகவே கூடாது. அதற்குப் பதிலாக, ஆறுதலுக்காகவும் ஞானத்துக்காகவும் பலத்துக்காகவும் அவரையே நம்பியிருக்கலாம். அதைத்தான் வேலரியும் அவருடைய கணவரும் செய்தார்கள்.—சங். 41:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
wp17.5 பக். 5
உங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருக்கிறாரா?
ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. இயேசு ஒரு சமயம் இப்படிச் சொன்னார்: “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:10) ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருப்பதாக இயேசு இங்கே குறிப்பிட்டாரா? இல்லை! தன் சீஷர்கள் ஒவ்வொருவர் மீதும் தேவதூதர்களுக்கு அதிக அக்கறை இருப்பதாகத்தான் குறிப்பிட்டார். இருந்தாலும், தேவதூதர்கள் தங்களைப் பாதுகாப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் எந்தவொரு ஆபத்தான செயலிலோ ஞானமற்ற செயலிலோ துணிச்சலாக ஈடுபடுவது கிடையாது.
அப்படியென்றால், தேவதூதர்கள் மனிதர்களுக்கு உதவ மாட்டார்கள் என்று அர்த்தமா? இல்லை! (சங்கீதம் 91:11) தேவதூதரைப் பயன்படுத்தி கடவுள் தங்களைப் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் சிலர் உறுதியாக நம்புகிறார்கள். ஆரம்பக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கென்னத் என்பவரும் இப்படித்தான் உணருகிறார். அவர் அப்படி உணருவது சரி என்று நம்மால் அடித்து சொல்லிவிட முடியாவிட்டாலும், அவர் அப்படி உணருவது சரியாகக்கூட இருக்கலாம்! பிரசங்க வேலையில், தேவதூதர்கள் தங்களுக்கு உதவுகிறார்கள் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிறைய அத்தாட்சிகளைப் பார்க்கிறார்கள். தேவதூதர்கள், பார்க்க முடியாத உருவத்தில் இருப்பதால், ஒவ்வொரு நபருக்கும் உதவி செய்வதற்காக கடவுள் அவர்களை எந்தளவு பயன்படுத்துகிறார் என்பதை நம்மால் சொல்ல முடியாது. ஆனாலும், சர்வவல்லமையுள்ள கடவுள் நமக்குச் செய்யும் உதவிக்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்!—கொலோசெயர் 3:15; யாக்கோபு 1:17, 18.
அக்டோபர் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 92-95
யெகோவாவை வணங்கினால் நம் வாழ்க்கை உண்மையிலேயே ரொம்ப அழகாக இருக்கும்!
இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?
5 யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்புக்கும், அவர் நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றி காட்டுவதற்காகத்தான் நாம் ஆன்மீக இலக்குகளை வைக்கிறோம்; இதுதான், ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கான மிக முக்கியக் காரணம். சங்கீதப் புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “யெகோவாவே, உங்களுக்கு நன்றி சொல்வது நல்லது . . . யெகோவாவே, உங்கள் செயல்களால் என்னைப் பூரித்துப்போக வைத்தீர்கள். உங்கள் கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பார்த்து நான் சந்தோஷ ஆரவாரம் செய்கிறேன்.” (சங். 92:1, 4) யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர் உங்களுக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார், அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவி செய்திருக்கிறார். பைபிளையும் சபையையும் கொடுத்திருக்கிறார். அதோடு, பூஞ்சோலையில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார். ஆன்மீக இலக்குகளை வைப்பதன் மூலம், இவற்றுக்கெல்லாம் நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காட்டலாம். யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போக இந்த இலக்குகள் உங்களுக்கு உதவும்.
உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்?
8 தங்களுடைய பிள்ளைகள் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஓர் அன்பான அப்பா அம்மா எப்படி ஆசைப்படுவார்களோ, அதேபோல்தான் யெகோவாவும் ஆசைப்படுகிறார். (ஏசா. 48:17, 18) அதனால், ஒழுக்க விஷயங்களைப் பற்றியும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும் நமக்குச் சொல்லித்தருகிறார். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல் பார்ப்பதற்கும் அவருடைய தராதரங்களின்படி வாழ்வதற்கும் நமக்கு வாய்ப்புக் கொடுக்கிறார். இது நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, நம்மை இன்னும் ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறது; நல்ல தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. (சங். 92:5; நீதி. 2:1-5; ஏசா. 55:9) நமக்கென்று சொந்த விருப்பங்கள் இருந்தாலும், சந்தோஷத்தைத் தரும் தீர்மானங்களை நாம் எடுப்போம். (சங். 1:2, 3) யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்கக் கற்றுக்கொண்டால் நிறைய விதங்களில் நாம் பிரயோஜனமடையலாம்.
யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார்!
18 நமக்கு வயதானாலும் யெகோவா நம்மைத் தொடர்ந்து பயன்படுத்துவார் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். (சங். 92:12-15) நம்மிடம் திறமைகள் இல்லை என்றோ, நாம் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை என்றோ நாம் நினைக்கலாம். ஆனால், தன்னுடைய சேவையில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா பெரிதாக நினைக்கிறார் என்று இயேசு சொன்னார். (லூக். 21:2-4) அதனால், உங்களால் என்ன செய்ய முடியுமோ அவற்றைப் பற்றியே யோசியுங்கள். உதாரணத்துக்கு, யெகோவாவைப் பற்றி உங்களால் பேச முடியும். சகோதரர்களுக்காக ஜெபம் செய்ய முடியும். யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும். நீங்கள் எவ்வளவு சாதிக்கிறீர்கள் என்பதை வைத்து அல்ல, அவருக்குக் கீழ்ப்படிய எந்தளவு ஆசைப்படுகிறீர்கள் என்பதை வைத்தே அவர் உங்களைத் தன்னுடைய சக வேலையாளாக நினைக்கிறார்.—1 கொ. 3:5-9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘ஆ! தேவனுடைய ஞானத்தின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!’
18 யெகோவாவின் ஞானம் தனித்தன்மை பெற்றது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் தெரிவித்த விதத்தைக் கவனியுங்கள்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!” என்றார். (ரோமர் 11:33) “ஆ!” என்று சொல்லி ஆரம்பிப்பதன் மூலம் பவுல் ஆழ்ந்த உணர்ச்சியை வெளிக்காட்டினார்—இந்த சந்தர்ப்பத்தில் மிகுந்த பயபக்தியையும் பிரமிப்பையும் வெளிக்காட்டினார். “ஆழம்” என்பதற்கு அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை, “பாதாளம்” என்பதற்கான வார்த்தையோடு நெருங்கிய தொடர்புடையது. ஆகவே அவரது வார்த்தைகள் தத்ரூபமான காட்சியை மனக்கண் முன் நிறுத்துகின்றன. யெகோவாவின் ஞானத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், ஆழம் காண முடியாத அதலபாதாளத்திற்குள் எட்டிப் பார்ப்பதைப் போன்று இருக்கும்; எப்பேர்ப்பட்ட ஆழமான பள்ளம், எத்தகைய அகண்ட பள்ளம், ஒருபோதும் அதன் அளவை கிரகிக்கவே முடியாது; அப்படியிருக்க, அதை விவரிப்பது அல்லது நுணுக்கமான வரைபடமாக வரைவது என்ற பேச்சிற்கே இடமில்லை. (சங்கீதம் 92:5) நமக்கு பணிவை கற்பிக்கும் உண்மையல்லவா இது?
அக்டோபர் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 96-99
‘நல்ல செய்தியை அறிவியுங்கள்’!
w11-E 3/1 பக். 6 பாரா. 1-2
நல்ல செய்தி என்றால் என்ன?
எதிர்காலத்தில், இந்த முழு உலகத்தையும் நீதியாக ஆட்சி செய்யப்போகிற அரசாங்கத்தைப் பற்றி எல்லாரிடமும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். அதுதான் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி.’ “நல்ல செய்தி” என்ற வார்த்தை, பைபிளில் வித்தியாசமான விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “மீட்பைப் பற்றிய நல்ல செய்தி,” (சங்கீதம் 96:2) “கடவுளுடைய நல்ல செய்தி,” (ரோமர் 15:16) “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தி” என்றெல்லாம் அது சொல்கிறது.—மாற்கு 1:1.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இயேசு சொன்ன சத்தியங்களையும் சீஷர்கள் எழுதி வைத்த உண்மைகளையும்தான் இந்த நல்ல செய்தி குறிக்கிறது. பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு இயேசு தன் சீஷர்களிடம் இப்படி சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) உண்மை கிறிஸ்தவர்கள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது மட்டுமல்லாமல் சீஷராக்கும் வேலையையும் ரொம்ப சுறுசுறுப்பாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.
brwp120901
நியாயத்தீர்ப்பு நாளில் என்ன நடக்கும்?
வலது பக்கத்தில் இருக்கும் படம் காட்டுகிறபடி, நியாயத்தீர்ப்பு நாளில் கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பு நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நல்லது செய்தவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள் என்றும், கெட்டது செய்தவர்கள் நரகத்தில் வாட்டி வதைக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆனால், மக்களை அநீதியிலிருந்து காப்பாற்றுவதுதான் நியாயத்தீர்ப்பு நாளின் நோக்கம் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 96:13) இயேசுவைத்தான் நீதிபதியாகக் கடவுள் நியமித்திருக்கிறார். இயேசு மனிதர்களுக்கு நீதி வழங்குவார்.—ஏசாயா 11:1-5-ஐயும் அப்போஸ்தலர் 17:31-ஐயும் வாசியுங்கள்.
சமாதானம்—ஆயிரம் ஆண்டுகளுக்கும் . . . அதற்கு அப்பாலும் . . .
18 முதல் தம்பதியர் சாத்தானின் பேச்சைக் கேட்டு யெகோவாவின் பேரரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்தபோது அந்த ஐக்கியம் முறிந்தது. என்றாலும், இழந்த சமாதானத்தையும் ஐக்கியத்தையும் மீட்டெடுக்க மேசியானிய அரசாங்கம் 1914 முதற்கொண்டு படிப்படியாக நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறது. (எபே. 1:9, 10) இப்போது ‘காணப்படாதவையாக’ இருக்கிற காரியங்கள் ஆயிர வருட ஆட்சியின்போது நிஜமானவையாகிவிடும். பிறகு ‘முடிவு’ வரும். அதாவது, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின் என்ன நடக்கும்? இயேசுவுக்கு ‘பரலோகத்திலும் பூமியிலும் . . . எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருந்தாலும்,’ யெகோவாவின் சிம்மாசனத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்குத் துளிகூட இல்லை. அவர் தாழ்மையுடன் “கடவுளும் தகப்பனுமானவரிடமே ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்.” ஆம், தமக்கு அளிக்கப்பட்ட விசேஷப் பொறுப்பையும் அதிகாரத்தையும் “கடவுளுடைய மகிமைக்கே” அவர் எப்போதும் பயன்படுத்துவார்.—மத். 28:18; பிலி. 2:9-11.
19 அந்தச் சமயத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பரிபூரணமாக இருப்பார்கள். இயேசுவைப் போலவே யெகோவாவின் பேரரசாட்சியைத் தாழ்மையுடன் மனதார ஏற்றுக்கொள்வார்கள். இப்படி ஏற்றுக்கொண்டிருப்பதை நிரூபித்துக் காட்ட இறுதிப் பரீட்சையில் வாய்ப்பளிக்கப்படுவார்கள். (வெளி. 20:7-10) அதன் பிறகு, கலகக்கார மனிதர்களும் தூதர்களும் சுவடுதெரியாமல் நீக்கப்படுவார்கள். அது சந்தோஷமான நாளாக, கொண்டாட வேண்டிய நாளாக இருக்கும்! விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக இருக்கிற’ யெகோவாவை ஆனந்தமாய்ப் போற்றிப் புகழுவார்கள்.—சங்கீதம் 99:1-3-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 994
பாடல்
“புதிய பாடல்,” “புதிய பாட்டு” என்ற வார்த்தைகளை சங்கீத புத்தகத்திலும் பைபிளில் இன்னும் சில புத்தகங்களிலும் பார்க்க முடிகிறது. (சங் 33:3; 40:3; 96:1; 98:1; 144:9; 149:1; ஏசா 42:10; வெளி 5:9; 14:3) இந்த வசனங்களுடைய சூழமைவை வைத்துப் பார்க்கும்போது, உன்னத பேரரசராக யெகோவா தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தை செய்யும்போது இந்தப் பாடல் பெரும்பாலும் பாடப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. யெகோவா செய்யும் விஷயங்களைப் பற்றியும், அந்த விஷயங்கள் பரலோகத்திலும் பூமியிலும் கொண்டுவரப் போகிற மாற்றங்களைப் பற்றியும் இந்தப் பாடல் விவரிக்கிறது.—சங் 96:11-13; 98:9; ஏசா 42:10, 13.
அக்டோபர் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 100-102
யெகோவாவுடைய மாறாத அன்புக்கு நன்றியோடு இருங்கள்
ஞானஸ்நானம் எடுக்க எப்படித் தயாராகலாம்?
18 உங்களிடம் இருப்பதிலேயே ரொம்ப அருமையான, அழகான குணம் யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புதான். (நீதிமொழிகள் 3:3-6-ஐ வாசியுங்கள்.) யெகோவாமேல் நீங்கள் கொள்ளை அன்பு வைத்தால் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும், நீங்கள் அதைச் சமாளித்துவிடுவீர்கள். யெகோவா அவரை வணங்குகிறவர்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்று பைபிள் அடிக்கடி சொல்கிறது. அப்படியென்றால், அவர்களை விட்டுப் போகவும் மாட்டார், அவர்கள்மேல் அன்பு காட்டுவதை நிறுத்தவும் மாட்டார். (சங். 100:5) கடவுள் தன்னைப் போலவேதான் உங்களையும் படைத்திருக்கிறார். (ஆதி. 1:26) அவர் காட்டுகிற அன்பை உங்களாலும் காட்ட முடியுமா?
19 நன்றி காட்டுவதிலிருந்து ஆரம்பியுங்கள். (1 தெ. 5:18) ‘யெகோவா என்மேல் எப்படியெல்லாம் அன்பு காட்டியிருக்கிறார்’ என்று ஒவ்வொரு நாளும் யோசித்துப் பாருங்கள். உங்களுக்காக அவர் செய்த விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லி மறக்காமல் ஜெபத்தில் நன்றி சொல்லுங்கள். ‘யெகோவா என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார், எனக்காக எதையெல்லாம் செய்கிறார்’ என்று பவுலைப் போலவே நீங்களும் யோசித்துப் பாருங்கள். (கலாத்தியர் 2:20-ஐ வாசியுங்கள்.) ‘நானும் பதிலுக்கு என்னுடைய அன்பைக் காட்ட வேண்டுமா?’ என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாமேல் இருக்கும் அன்புதான் பிரச்சினைகள் வரும்போது விடாமல் சகித்திருக்கவும் அதை நன்றாகச் சமாளிக்கவும் உங்களுக்கு உதவும். வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தவறாமல் செய்வதற்கும், யெகோவாமேல் இருக்கிற அன்பை ஒவ்வொரு நாளும் காட்டுவதற்கும் இதுதான் உதவி செய்யும்.
“தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!”
10 நாம் தவிர்க்க வேண்டிய சில ஆபத்துகள் இவைதான்: விளையாட்டுக்காகக் காதலிப்பது, அளவுக்குமீறி குடிப்பது, அளவுக்குமீறி சாப்பிடுவது, குத்தலாகப் பேசுவது, வன்முறையான பொழுதுபோக்கையோ ஆபாசத்தையோ அதுபோன்ற மற்ற விஷயங்களையோ பார்ப்பது. (சங். 101:3) நம் எதிரியான பிசாசு, யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கும் நட்பைக் கெடுக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டே இருக்கிறான். (1 பே. 5:8) நாம் விழிப்பாக இல்லையென்றால், வயிற்றெரிச்சல், பொய் பித்தலாட்டம், பேராசை, பகை, பெருமை, மனக்கசப்பு போன்ற கெட்ட விஷயங்களை சாத்தான் நமக்குள் விதைத்துவிடுவான். (கலா. 5:19-21) ஆரம்பத்தில், இதெல்லாம் ஆபத்தான விஷயங்களாகவே நமக்குத் தெரியாது. ஆனால், அவற்றை வேரோடு பிடுங்கியெறிய நாம் உடனடியாக முயற்சி எடுக்காவிட்டால், அவை நம் நெஞ்சில் நஞ்சாகப் பரவி நம் உயிருக்கே உலை வைத்துவிடலாம்.—யாக். 1:14, 15.
யெகோவா கொடுக்கும் தெளிவான எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்பீர்களா?
7 போலிப் போதகர்களிடமிருந்து நாம் எப்படி விலகியிருக்கலாம்? நாம் அவர்களோடு பேசக் கூடாது, அவர்களை நம் வீட்டிற்குள் அழைக்கக் கூடாது. அவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கக் கூடாது, அவர்களோடு சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது, இன்டர்நெட்டில் அவர்களுடைய வெப்சைட்டை அலசக் கூடாது, அல்லது அவர்களைப் பற்றிய நம் கருத்துகளை இன்டர்நெட்டில் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருக்க நாம் ஏன் அவ்வளவு உறுதியாய் இருக்க வேண்டும்? “சத்தியத்தின் கடவுளை” நாம் நேசிப்பதே அதற்கு முதல் காரணம்; ஆகவே, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்திற்கு எதிரான பொய்ப் போதனைகளை நாம் கேட்க விரும்புவதில்லை. (சங். 31:5, NW; யோவா. 17:17) அருமையான சத்தியங்களை நமக்குப் போதிப்பதற்கு யெகோவா உபயோகிக்கும் அமைப்பை நாம் நேசிப்பதே இரண்டாவது காரணம். யெகோவாவின் பெயரையும், அதன் அர்த்தத்தையும், பூமிக்கான அவருடைய நோக்கத்தையும், மரிக்கும்போது நமக்கு என்ன ஏற்படுகிறது என்பதையும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் பற்றி நமக்குக் கற்றுக்கொடுத்தது யெகோவாவின் அமைப்புதானே? இவற்றையும் இன்னுமதிக சத்தியங்களையும் முதன்முதலில் கற்றுக்கொண்டபோது நீங்கள் பெற்ற சந்தோஷம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படியென்றால், போலிப் போதகர்கள் சொல்லும் பொய்களைக் கேட்டு இந்தச் சத்தியங்களை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த அமைப்பைப் பற்றித் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.—யோவா. 6:66-69.
8 போலிப் போதகர்கள் என்ன சொன்னாலும் சரி நாம் அவர்களைப் பின்பற்ற மாட்டோம். தண்ணீர் இல்லாத கிணறுகளைப் போலிருக்கும் நபர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் சொல்வதைக் கேட்போர் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் உண்மையாய் இருக்க நாம் தீர்மானமாயிருக்கிறோம். இந்த அமைப்பு நம்மை ஏமாற்றியதே கிடையாது; கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியமெனும் சுத்தமான தண்ணீரை ஏராளமாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.—ஏசா. 55:1-3; மத். 24:45-47.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 596
கூழைக்கடா பறவை
கூழைக்கடா பறவை, வயிறுமுட்ட சாப்பிட்ட பிறகு தனியாக ஒரு இடத்துக்குப் போய் அதன் கழுத்தை சுருக்கிக்கொண்டு ஆடாமல் அசையாமல் அப்படியே மணிக்கணக்காக உட்கார்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போது, தாங்க முடியாத ஏதோ சோகத்தில் அது மூழ்கியிருப்பதுபோல் இருக்கும். அதே மாதிரிதான் இந்த சங்கீதக்காரன் சோகமாக இருந்தார். அதனால்தான் “வனாந்தரத்தில் இருக்கிற கூழைக்கடா பறவையைப் போல ஆகிவிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.—சங் 102:6.
அக்டோபர் 28–நவம்பர் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 103-104
“நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்”
யெகோவாவைப் போல் வளைந்துகொடுங்கள்
5 யெகோவாவிடம் இருக்கிற மனத்தாழ்மையும் கரிசனையும்தான் வளைந்துகொடுப்பதற்கு அவரைத் தூண்டுகிறது. உதாரணத்துக்கு, சோதோமில் இருந்த கெட்ட மக்களை அழிக்கப் போகிற சமயத்தில், யெகோவா எந்தளவுக்கு மனத்தாழ்மையாக நடந்துகொண்டார் என்று பாருங்கள். அந்த ஊரில் இருந்த லோத்து என்ற நல்ல மனிதரை மலைகளுக்குத் தப்பி ஓடச் சொல்லி, தேவதூதர்கள் மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் அங்கு போவதற்கு லோத்து பயந்தார். அதனால் தானும் தன்னுடைய குடும்பமும் பக்கத்தில் இருந்த சோவார் என்ற சின்ன ஊருக்குத் தப்பித்து போகலாமா என்று லோத்து கெஞ்சிக் கேட்டார். சோவாரையும் அழிக்க வேண்டுமென்றுதான் யெகோவா நினைத்திருந்தார். ‘நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் நீ செய்’ என்று லோத்துவிடம் யெகோவா சொல்லியிருக்கலாம். ஆனால், யெகோவா லோத்து கேட்டதற்கு அனுமதி கொடுத்தார். அவருக்காக ஒரு ஊரையே யெகோவா அழிக்காமல் விட்டுவிட்டார். (ஆதி. 19:18-22) பல நூறு வருஷங்களுக்குப் பிறகு, நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யெகோவா கரிசனை காட்டினார். அந்த ஊரையும் அதில் வாழ்கிற பொல்லாத மக்களையும் அழிக்கப் போவதாக யோனா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்னார். ஆனால் நினிவே மக்கள் மனம் திருந்தியதை பார்த்தபோது, அவர்களுக்காக யெகோவா பரிதாபப்பட்டார். அந்த நகரத்தை அழிக்காமல் விட்டுவிட்டார்.—யோனா 3:1, 10; 4:10, 11.
சிம்சோனைப் போலவே யெகோவாவை நம்பியிருங்கள்
16 சிம்சோன் செய்த தவறினால் அவருக்குப் படுமோசமான பின்விளைவுகள் வந்தது உண்மைதான். ஆனாலும், யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதை அவர் நிறுத்தவே இல்லை. நாமும் ஒருவேளை தவறு செய்யலாம், அதனால் நமக்குக் கண்டிப்புக் கிடைக்கலாம், சில பொறுப்புகளையும் நாம் இழக்கலாம். ஆனாலும், நாம் தளர்ந்து போய்விடக்கூடாது. யெகோவா நம்மை மன்னிக்க எப்போதுமே தயாராக இருக்கிறார் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (சங். 103:8-10) நாம் தவறு செய்திருந்தாலும், யெகோவா தன் விருப்பத்தைச் செய்வதற்கு மறுபடியும் நம்மைப் பயன்படுத்த முடியும், சிம்சோனை அவர் பயன்படுத்தியது போல!
17 மைக்கேல் என்ற இளம் சகோதரரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர் உதவி ஊழியராகவும் ஒழுங்கான பயனியராகவும் யெகோவாவின் சேவையை ரொம்ப சுறுசுறுப்பாகச் செய்துவந்தார். ஆனால், திடீரென்று அவர் ஒரு தவறு செய்துவிட்டதால் சபையில் இருந்த பொறுப்புகளை இழந்துவிட்டார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “அதுவரைக்கும் நான் யெகோவாவின் சேவையில் பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், திடீரென்று எங்கேயோ மோதி அப்படியே நின்றுவிட்ட மாதிரி ஆகிவிட்டது. யெகோவா என்னை ஒரேயடியாகக் கைவிட்டுவிடுவார் என்று நான் நினைக்கவில்லைதான். ஆனால், முன்புபோல் யெகோவாவோடு நெருக்கமாக இருக்க முடியுமா, முன்புபோல் சபையில் நிறைய சேவை செய்ய முடியுமா என்றெல்லாம் யோசித்தேன்.”
18 நல்ல விஷயம் என்னவென்றால், மைக்கேல் தளர்ந்துபோகவில்லை. அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “நான் மறுபடியும் யெகோவாவோடு நெருக்கமாவதற்கு என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். மனம்விட்டு ஜெபம் செய்வது, படிப்பது, படிப்பதை ஆழமாக யோசிப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்தேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு, மைக்கேலுக்கு மறுபடியும் சபையில் பொறுப்புகள் கிடைத்தன. இப்போது அவர் ஒரு மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “மற்றவர்களிடமிருந்து, முக்கியமாக மூப்பர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த உதவியும் உற்சாகமும்தான் யெகோவாவுக்கு இன்னும் என்மேல் பாசம் இருக்கிறது என்பதை எனக்குப் புரிய வைத்தது. மறுபடியும் சுத்தமான மனசாட்சியோடு என்னால் சபையில் சேவை செய்ய முடிகிறது. உண்மையிலேயே மனம் திருந்துகிறவர்களை யெகோவா கண்டிப்பாக மன்னிப்பார் என்பதை என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.” மைக்கேலைப் போல நாமும் ஏதாவது தவறு செய்திருந்தால், நம்மைத் திருத்திக்கொள்வதற்கும் யெகோவாவைத் தொடர்ந்து நம்பியிருப்பதற்கும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்போது, யெகோவா கண்டிப்பாக நம்மையும் பயன்படுத்துவார், நம்மையும் ஆசீர்வதிப்பார்!—சங். 86:5; நீதி. 28:13.
உங்கள் குறிக்கோள்களை உங்களால் நிச்சயம் அடைய முடியும்
2 நீங்கள் ஏற்கெனவே வைத்த ஒரு குறிக்கோளை இன்னும் அடையாமல் இருக்கிறீர்களா? அப்படியென்றால், தோற்றுப்போய்விட்டதாக நினைத்து சோர்ந்துபோகாதீர்கள். பொதுவாக, ஒரு சின்ன குறிக்கோளை அடைவதற்கே நிறைய நேரமும் கடின உழைப்பும் தேவை. உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைய ஆசைப்படுவதே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்கள்... உங்களால் முடிந்த சிறந்ததை அவருக்குக் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள்... என்பதைக் காட்டுகிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார். உங்களால் கொடுக்க முடியாததை அவர் கண்டிப்பாக எதிர்பார்க்க மாட்டார். (சங். 103:14; மீ. 6:8) அதனால், உங்கள் சூழ்நிலையில் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள். அந்தக் குறிக்கோளை அடைய நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர்’
18 யெகோவா தமது படைக்கும் வல்லமையை பயன்படுத்துவதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? படைப்பின் எண்ணிலடங்கா தினுசுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. சங்கீதக்காரர் ஒருவர் இவ்வாறு வியந்துரைத்தார்: “யெகோவாவே, உமது செயல்கள் எத்தனை எத்தனை! . . . பூமி உமது படைப்புகளால் நிறைந்துள்ளது.” (சங்கீதம் 104:24, NW) அது எவ்வளவு உண்மை! பூமியில் 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்களை உயிரியல் நிபுணர்கள் கண்டிருக்கிறார்கள்; இருந்தாலும், 1 கோடி, 3 கோடி, அல்லது அதற்கும் அதிகமான உயிரினங்கள் இருக்கலாம் என பலர் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு மனித கலைஞன், சிலசமயம் தன் படைப்பாற்றல் வற்றிப்போனதுபோல் உணரலாம். ஆனால் யெகோவாவின் படைப்பாற்றலோ—பலதரப்பட்ட பொருட்களை புதிது புதிதாக புனைந்து படைக்கும் அவரது வல்லமையோ—துளியும் வற்றாதது.