இனிமேலும் அது விலக்கப்பட்ட ஒரு புத்தகம் அல்ல
பைளிடமாகக் கத்தோலிக்க சர்ச்சின் மனப்பான்மை கடந்த சில பத்தாண்டுகளில் கத்தோலிக்க நாடுகளிலே பேரளவில் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. பைபிள் வாசிப்பு கண்டனம் செய்யப்பட்ட நாட்களை வயதுசென்ற கத்தோலிக்கர் இன்னும் ஞாபகத்தில் கொண்டிருப்பர். வைராக்கியமுள்ள சில கத்தோலிக்க நாடுகளில் பொதுமக்கள் பைபிளை புராட்ஸ்டான்ட் மதத்தினரின் புத்தகம் என்று அதை ஒதுக்கினர்.
பிரான்ஸில் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் இருந்த நிலைமையைக் குறித்து பிரான்ஸில் ரூவனிலுள்ள மகா குருத்துவத்தில் பரிசுத்த வேத வசனங்களின் பேராசிரியர் ஜார்ஜஸ் ஆஸோ சர்ச் அங்கீகரிப்பைப் பெற்ற தனது லா பெரோல் டி டையு (கடவுளுடைய வார்த்தை) என்ற புத்தகத்தில் எழுதியதாவது: “பைபிள் வாசிப்பு ஊக்குவிக்கப்படவில்லை. . . . உண்மை என்னவெனில், குருவர்க்கத்தினர் மற்றும் சில ஞானிகளைத் தவிர இந்தப் பரிசுத்த புத்தகம் மற்ற கத்தோலிக்கரால் வாசிக்கப்படவில்லை. [கத்தோலிக்க] புத்தக கடைகளில் இது இல்லாமற்போறிற்று. பைபிள் ஒரு ஆபத்தானதும் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடியதுமான ஒரு புத்தகம் என்ற கருத்து நிலவியது. . . . கன்னியாஸ்திரி மடங்களிலும் கிறிஸ்தவ [கத்தோலிக்கர்] கல்வி நிறுவனங்களிலுமிருந்து விலக்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டது.”
பின்பு நிலைமையில் மாற்றம் ஏற்படலாயின. பிரான்ஸில் ப்ரீஜஸ் மற்றும் டெளலானின் கத்தோலிக்க மேற்றிராணியர் மிக்னாட், விகரூவின் டிக்ஷனேர் டி லா பைபிள் (1891-1912) என்ற அகராதிக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்: “பிரான்ஸில் பைபிள் படிப்பதில் ஒரு புதுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு [பைபிள் கேள்விகள்] ஆர்வமுள்ள ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குத்தான் அக்கறைத் தூண்டுவதாயிருந்தது. . . . பைபிள் வாசிப்புக்கும் படிப்புக்கும் குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட காரியங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. என்றைக்காவது பாமாரன் ஒருவன் ஏசாயாவிலிருந்து அல்லது நீதிமொழிகளிலிருந்து வசன மேற்கோள் காண்பிப்பானானால், மக்கள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தது மட்டுமின்றி, புராட்டஸ்டான்ட் மதத்தினிடமாக இரகசிய தொடர்பு கொண்டிருப்பானோ என்று சந்தேகித்தனர்!”
புராட்டஸ்டான்ட் பைபிள் சங்கங்களின் அதிகரிக்கப்பட்ட நடவடிக்கைகளின் மத்தியில் 1893-ல் போப் லியோ XIII, 1920-ல் போப் பெனடிக்ட் XV மற்றும் 1943-ல் போப் பயஸ் XII பைபிள் படிப்புகள் பேரில் சுற்றறிக்கைகளை பிரசுரித்தனர். ஆனால் போப்புகளின் இந்தக் கடிதங்கள் கத்தோலிக்க மக்களை அல்ல, ஆனால் கத்தோலிக்க குருவர்க்கத்தினரையும் குருத்துவ மாணவர்களையுமே அதிகமாக பாதித்தது.
இரண்டாம் வத்திக்கன் கவுன்ஸிலைத் (1962-65) தொடர்ந்து தான் உண்மையான மாற்றம் ஏற்பட்டது. அந்தத் திருச்சபைக் குழு பின்வருமாறு கூறியது: “இந்தப் புனிதத் திருச்சபைக் குழு உண்மையுள்ள எல்லா கிறிஸ்தவர்களையும், விசேஷமாக மதபற்றுதல் மிகுந்த எல்லோரையும் வேத வசனத்தை அடிக்கடி வாசித்து ‘கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தை’ கற்றறிய மனப்பூர்வமாய் ஊக்குவிக்கிறோம். ஏனென்றால் வேத வசனங்களை அறியாதிருத்தல் கிறிஸ்துவை அறியாதிருப்பதாகும்,” என்றார் [ஜெரோம்].”
இப்படியாக 1966-ல் கத்தோலிக்கரின் வாசிப்புக்கு ஒரு துணை என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்கள் பின்வருமாறு எழுத முடிந்தது: “பைபிள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் என்றும் பாரம்பரியமாக அது கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்கு ஊற்றுமூலம் என்றும் பொதுவாக ஒரு கத்தோலிக்க மனிதன் நம்பிவந்திருக்கிறான். ஆனால் அவன் பைபிளை அதிக கவனத்துடன் வாசிக்க வேண்டும் என்றும் அறிவுரைக் கொடுக்கப்பட்டிருக்கிறான், மற்றும் மதப் போதகர்களின் மேற்பார்வையில் அதை வாசிக்க வேண்டும் என்றும் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறான். . . . மகிழ்ச்சிக்குரிய விதத்தில், நிலைமை இன்று வெகுவாக மாறியிருக்கிறது, புத்தகங்களின் புத்தகத்தை வாசிக்கும்படியாக கத்தோலிக்கர் இன்று எல்லா பக்கங்களிலுமிருந்து துரிதப்படுத்தப்பட்டும் ஊக்குவிக்கப்பட்டும் விண்ணப்பிக்கப்பட்டுமிருக்கின்றனர்.”—தடித்த எழுத்துகள் எங்களுடையது.
சர்ச் அங்கீகாரத்தைப் பெற்ற மேற்கோள்கள், கத்தோலிக்கருக்கு பைபிள் இனிமேலும் விலக்கப்பட்ட புத்தகம் அல்ல என்பதைக் காண்பிக்கிறது. என்றபோதிலும், கடைசியாகக் குறிப்பிடப்பட்ட மேற்கோள்படி கத்தோலிக்கர் சர்ச்சின் பாரம்பரியத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும். இது அநேக உண்மை மனமுள்ள கத்தோலிக்கருக்கு ஒரு புதிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது, ஏன் சர்ச்சுக்குங்கூட என்பதை அடுத்து வரும் கட்டுரையில் காண்போம். (w86 6/8)