“எல்லாருமே இறைவாக்கினராக இருந்தால் நலமாயிருக்குமே!”
பைபிளில் பிரியங்கொண்ட ஒரு கத்தோலிக்க கூட்டத்தில் போப் ஜான் பால் II பின்வரும் செய்தியை விளம்பினார்: “பைபிள் அப்போஸ்தலத்துக்குரிய கத்தோலிக்க உலக கூட்டிணைப்பின் பொது மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்துடன் ஆவிக்குரிய விதத்தில் அவர்களுடன் நெருங்கியிருக்கிறேன் என்பதையும் உறுதி செய்துகொள்கிறேன். ‘எல்லாருமே இறைவாக்கினராக இருந்தால், நலமாயிருக்குமே!’ என்ற மோசேயின் வார்த்தைகளை இந்த மாநாடு தன் பொருளாகத் தெரிந்துகொண்டிருப்பதைக் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மற்றும் மாநாடு இந்த வார்த்தைகளைத் தான் மேற்கொள்ளும் உத்தரவாதத்திற்கும் பொருத்தியிருப்பதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.”—L’Osservatore Romano, ஆகஸ்ட் 24, 1984.
ஒரு கத்தோலிக்க பைபிள் கல்வி வேலை
பைபிள் அப்போஸ்தலத்துக்குரிய உலக கத்தோலிக்க கூட்டிணைப்பின் மூன்றாவது பொது மாநாடு, ஆகஸ்ட் 1984-ல் இந்தியாவிலுள்ள பெங்களூரில் நடைபெற்றது. பிரதிநிதிகள் 53 தேசங்களிலிருந்து கூடிவந்தனர். இந்த கூட்டிணைப்பு ரோமில் 1969-ல் ஏற்படுத்தப்பட்டது. இது பைபிள் சம்பந்தமானக் காரியங்களில் கத்தோலிக்க சர்ச்சின் தேவைகளை ஆராய்ந்து பார்க்கும்படி போப் ஜான் பால் ஜெர்மன் கார்டினல் ஒருவரை நியமித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது இத்தாலியைச் சேர்ந்த லெக்ஹார்ன் மேற்றிராணியர் அப்லோண்டி அதற்குத் தலைவராக இருக்கிறார்.
இந்தக் கூட்டிணைப்பு அதன் இலச்சியங்களை விமர்சனை செய்யும்படியாக ஊக்குவித்த போப் ஜான் பால் தன் செய்தியில் பின்வருமாறு கூறினார்: “இந்த இயக்கத்தின் ஒரு இலச்சியம், உலகமுழுவதுமுள்ள கத்தோலிக்கர் கடவுளுடைய வார்த்தையை எளிதில் பெறும்படிச் செய்வதாகும். ஆம், சர்ச்சின் அனைத்து செயல்களும் அனைத்து சாட்சியும் உயிருள்ள அந்த வார்த்தையிலிருந்துதான் வரவேண்டும் . . . கடவுளுடைய மக்களின் ‘இறைவாக்கினர் ஸ்தானம்’ அந்த வார்த்தையின் உண்மையான சேவைக்குரியது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்ப்பதிலும், பிரசுரிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபடுவதன் மூலம், ஒருவர் கடவுளுடைய வார்த்தைக்காக பசிதாகமுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும் ஒரு பணியில் ஈடுபடுகிறார். (ஆமோஸ் 8:11) பரிசுத்த வேதாகமத்தைக் கற்பிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும் என்றாவது ஒருநாள் தங்களை ஒப்புக்கொடுப்பவர்களை உருவாக்கும் வேலையையும் இது உட்படுத்துகிறது.”
தனது பொருளுக்கு இசைவாக தனது இறுதி அறிக்கையில் இந்தக் கத்தோலிக்க பைபிள் மாநாடு பின்வருமாறு கூறியது: “கடவுளுடைய மக்கள் அனைவரும் தங்களுடைய தீர்க்கதரிசன பங்கை நிறைவேற்ற அவர்கள் கடவுளுடைய வார்த்தையை தங்களுடைய சொந்த மொழியில் பைபிளின் ஒரு தனிப்பட்ட பிரதியை உடையவர்களாய் இருக்கவேண்டும். வேத வசனங்களின் அறிவில் தங்களை பயிற்றுவித்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு . . . சர்ச்சின் சுவிசேஷ வேலை பைபிள் அடிப்படையிலானது என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிசெய்துகொள்கிறது.”
செய்ய முடியாத நிலை
எனவே கத்தோலிக்கர்கள் பைபிளை வாசிக்க உற்சாகப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பைபிள் அடிப்படையிலான சுவிசேஷக வேலையில் சுறுசுறுப்பான ஒரு பங்கை உடையவர்களாக இருக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது போற்றத்தகுந்த காரியம். ஆனால் இது அவர்களை செய்யமுடியாத ஒரு நிலையில் வைக்கிறது.
ஒரு காரியம், பைபிளுக்கு முன்னால் பாரம்பரியம் என்ற போதனையைக் கத்தோலிக்க சர்ச் போதிக்கிறது. கத்தோலிக்கர் ஒருவர் எப்படி பைபிளை வைராக்கியமாக போதிக்கிறவராயும் அதே சமயத்தில் சர்ச்சுக்கு உண்மையுள்ளவராயும் இருக்க முடியும்? உதாரணமாக, “பாவஞ்செய்யும் ஆன்மாவே சாகும்,” என்று அவர் பைபிளில் வாசிப்பார். (எசேக்கியேல் 18:4, 20, கத்தோலிக்க தமிழ் மொழிபெயர்ப்பு) ஆனால் ஆன்மா அழியாமையுள்ளது, அனைத்து ஆன்மாக்களும் நரகத்தில், நரக வட்டத்தில், உத்திரிக்கும் ஸ்தலத்தில் அல்லது பரலோகத்தில் இருக்கிறது என்று அவருடைய சர்ச் போதிக்கிறது. அவர் எதை போதிப்பது—கத்தோலிக்க கொள்கையையா அல்லது பைபிளையா?
மேலும், பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை என்ற வாசகரின் நம்பிக்கையைக் குறைக்கக்கூடிய குறிப்புகளையுடைய பைபிள் பிரதிகளைத்தான் கத்தோலிக்க சர்ச் அங்கீகரிக்கிறது. உதாரணமாக, “பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்” என்ற அதன் முன்னுரையில் தி நியு அமெரிக்கன் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) போப் பால் VI-ன் ஆசிக்குரிய வார்த்தைகளைக் கொண்டிருந்தது. அந்த முன்னுரை குறிப்பிட்டதாவது: “சரித்திரத்தைக் குறித்து பேசப்படுகிறதா அல்லது அடையாள அர்த்தத்தில் பேசப்படுகிறதா என்பதை ஒருவர் எப்படி அறிந்துகொள்வது? . . . மனித இனம் ஒரு கீழ்த்தர வகை உயிரினத்திலிருந்து தோன்றியிருக்கிறது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அறிவுதானே கடவுளுடைய படைப்புச் செயலின் ‘எப்படி’ என்ற அம்சத்தை மறுபரிசீலனை செய்யவும், ஆதி ஆகமம் 2-ம் 3-ம் அதிகாரங்கள் மனித இன ஆய்வின்பேரில் ஒரு பாடம் அல்ல, ஆனால் ஒரு தொடர் உருவகம், பாவம் எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்ற பாடத்தைக் கற்பிக்கிறது என்று புரிந்துகொள்ளவும் கிறிஸ்தவர்களுக்கு உதவியிருக்கிறது.”
இப்படியாக, ஆதியாகமத்தின் முதல் பக்கங்களைத் தொடுவதற்கு முன்பே, கத்தோலிக்க பைபிளின் வாசகர்கள் சரித்திரத்தை வாசிப்பதில்லை. ஆனால் உருவகக் கதைகளையே வாசிப்பவர்களாயிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் ஒரே விவாக துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு இயேசு ஆதாம் ஏவாள் உதாரணத்தைப் பயன்படுத்தியது, அந்தப் போதனைக்கு அவர் வெறும் ஒரு உருவகக் கதையைத்தான் ஆதாரமாகப் பயன்படுத்தினார் என்று சொல்லுவதற்கு ஏதுவாக இருக்கிறது. (மத்தேயு 19:3-9; ஆதியாகமம் 1:27; 2:24) மற்றும் மனிதவர்க்கம் ஒரே பொதுவான பெற்றோரைக் கொண்டிராமலிருந்திருந்தால், கிறிஸ்துவின் மீட்கும் பலியாகிய அடிப்படைக் கிறிஸ்தவ கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.—மத்தேயு 20:28; ரோமர் 5:12, 17-19; 1 கொரிந்தியர் 15:45.
அதே கத்தோலிக்க பைபிள், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கச் செய்யுமளவுக்குச் செல்கிறது. “உங்கள் பைபிளை எப்படி வாசிக்க வேண்டும்” என்பதற்குக் கீழ் அது பின்வருமாறு குறிப்பிடுகிறது: “சுவிசேஷ எழுத்தாளர்கள் சரித்திரத்தை விஞ்ஞான ரீதியில் எழுத எண்ணம் கொள்ளவில்லை என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும் . . . இந்த உரையாடல்களில் இயேசு உட்பட்டிருந்தாரா? பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கும் அதே முறையில் அவர் பதிலளித்தாரா? அதை நிச்சயமாய் சொல்லுவதற்கில்லை.”
விசுவாசத்தை சேதப்படுத்தும் இப்படிப்பட்ட கூற்றுகளைக்கொண்ட பிரசுரத்தை தங்கள் சர்ச் அங்கீகரிக்கையில், உண்மை மனமுள்ள கத்தோலிக்கர்கள் எப்படி பைபிளை விசுவாசத்தோடு படிப்பவர்களாகவும் “பரிசுத்த வேதாகமத்தைப் போதிக்கவும் பிரசங்கிக்கவும் தங்களை ஒப்புக்கொடுப்பவர்களாகவும் இருக்க முடியும்? இவற்றையொத்த விசுவாசத்தைக் குறைத்திடச் செய்யும் கூற்றுகள் தி ஜெருசலேம் பைபிளிலும் மற்ற கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலும் என்ஸைக்ளோபீடியாக்களிலும் காணப்படுகின்றன. புராட்டஸ்டான்ட் பைபிள் விமர்சனங்களுங்கூட பைபிள் பேரிலுள்ள விசுவாசத்தை சேதப்படுத்துவதாயிருக்கின்றன என்றும் குறிப்பிட வேண்டும்.
உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருமே இறைவாக்கினர்
தி நியு அமெரிக்கன் பைபிள் சரியாகவே சொல்லுகிறது: தீர்க்கதரிசி அல்லது இறைவாக்கினர் என்றால் ‘இன்னாருவருக்காக பேசுபவர்.’ விசேஷமாக கடவுளுக்காக பேசுபவர். அவர் எதிர்காலத்தை முன்னறிவிக்க வேண்டும் என்று அர்த்தம்கொள்ள வேண்டியதில்லை!” போப் ஜான் பால் II, “கடவுளுடைய மக்களின் ‘இறைவாக்கினர் ஸ்தானம்’ அந்த வார்த்தையின் உண்மையான சேவைக்குரியது,” என்றார். ஆனால் நாம் கவனித்த பிரகாரம் ஒரு கத்தோலிக்கன் அடிப்படையில் பாரம்பரியத்தை ஆதாரமாகக் கொண்ட கத்தோலிக்க சர்ச்சின் கொள்கைக்கு அல்லது போதனைக்கு துரோகம் செய்யாமல் உண்மையான தீர்க்கதரிசியாக அல்லது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு சாட்சியாக இருப்பது கூடாத காரியம்.
தனது கடைசி அறிக்கையில், பைபிள் அப்போஸ்தலத்துக்குரிய உலக கத்தோலிக்க இயக்கம் விசேஷமாக இளைஞருக்கும் ஏழை எளியோருக்கும் பைபிள் கல்வி புகட்டப்பட வேண்டிய அவசியத்தையும் விலைமலிவான பைபிள் மற்றும் பைபிள் கல்வி புத்தகங்களின் அவசியத்தையும், பைபிள் மொழிபெயர்ப்புகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்குமான தேவையையும் முழுநேர ஊழியருக்கான தேவையையும் அறிவுறுத்தியது. மேலும் கிறிஸ்தவர்கள் எல்லாருமே பிரசங்கிக்க வேண்டும், போதிக்க வேண்டும், பைபிள் பிரகாரம் நடக்க வேண்டும் மற்றும் “காலங்களின் அடையாளங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியது.
இந்தப் பூமியில் கடவுள் ஒரு ஜனத்தைக் கொண்டிருக்கிறார். அவர்கள் எல்லருமே இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசிகள் அல்லது கடவுளுக்கு சாட்சிகள் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாயிருப்பீர்கள். உண்மை என்னவெனில் உலகமுழுவதும் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் அளவிலா அன்பு கொண்டிருப்பதனால் அவர்கள் அகில உலக ரீதியில் முதியோருக்கும் இளைஞருக்கும், பணக்காரருக்கும் ஏழைக்கும் பைபிள் கல்வி புகட்டி வருகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கான முழுநேர ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் விலைமலிவாக அல்லது இலவசமாகவும் விநியோகிக்கப்படும் பைபிள் மற்றும் பைபிள் கல்வி சம்பந்தப்பட்ட இலக்கியங்களை மொழிபெயர்த்து அச்சடிப்பவர்களுமாவர். லட்சக்கணக்கான பகுதி நேர ஊழியர்களும் அவர்களுடைய வேலைக்குத் தோள் கொடுக்கின்றனர். இவர்களில் ஒருவர், நீங்கள் “காலங்களின் அடையாளங்களைப் புரிந்துகொள்ளவும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆச்சரியமான நம்பிக்கையை நீங்கள் அரவணைத்துக்கொள்ளவும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவுவார். (g86 6/8)
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
‘சுவிசேஷ எழுத்தாளர்கள் சரித்திரம் எழுத எண்ணம் கொள்ளவில்லை,’ என்று தி நியு அமெரிக்கன் பைபிள் உரிமைப்பாராட்டுகிறது.
[பக்கம் 22-ன் படம்]
உண்மையான கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களுக்குப் போதிப்பதால் தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள்