ஒலிம்பிக் ஜோதி ஓர் இருளைப் பரப்புகிறது
நெருப்பும் ஜோதியும் சரித்திரத்தின் ஆரம்பமுதல் மனிதனின் ஆவலைத் தூண்டிவந்திருக்கிறது. முதல் மனிதர் ஏதேன்தோட்டத்துக்குள் பிரவேசியாதபடிக்குத் தடைசெய்த “சுடரொளி பட்டயம்” கண்டு அஞ்சி இருப்பர். (ஆதியாகமம் 3:24) என்றபோதிலும், மற்றொரு ஜோதி, ஒலிம்பிக் ஜோதி, பலருடைய இருதயத்தில் அனலான உணர்ச்சிகளை ஒளிரச்செய்திருக்கிறது.
இந்த ஜோதி 1988 XV ஒலிம்பிக் கோடைக்கால விளையாட்டுக்களையும் XXIV ஒலிம்பிக் கோடைக்கால விளையாட்டுகளையும் துவக்கிட எப்படி கிரீஸிலுள்ள ஒலிம்பியாவிலிருந்து வித்தியாசமான போக்குவரத்து முறையில் மகா சமுத்திரங்களையும் கண்டங்களையும் கடந்து கனடாவிலுள்ள சீயோலை வந்தடைந்தது என்பது சிலருக்கு நினைவிருக்கலாம். கனடாவின் குறுக்கே ஆட்கள் ஒவ்வொரு மைல் தொலைவுக்கு நடைமூலமும், சக்கர நாற்காலிகளையும் பயன்படுத்தி அந்தச் சுடரைப் கொண்டுவந்த சமயத்தில் மக்களின் உணர்ச்சிகள் உச்சக் கட்டத்தை எட்டினதால், மக்ளீன்ஸ் பத்திரிகை “உணர்ச்சி ஜோதி” என்று தன் கட்டுரைக்குத் தலைப்பளிக்கத் தூண்டப்பட்டது.
என்றபோதிலும், மற்றவர்கள் ஒலிம்பிக்கின் ஆரம்பத்தைக் கூர்ந்து கவனிக்கையில், காரியங்களை வித்தியாசமா நோக்குகின்றனர். அவர்களுக்கு அந்த ஜோதி அமைதியிழக்கச்செய்யும் ஓர் இருளைப் பரப்புகிறது.
ஜோதி உயிர்ப்பிக்கப்படுகிறது
நெருப்பு பரலோகத்திலிருந்து ஒரு வெகுமதியாக அனுப்பப்பட்டது என்று பூர்வீக புராணக்கதைகள் பெரும்பாலும் கூறுகிறது. புராமத்தியஸ் ஒலிம்பஸ் மலையிலிருந்து நெருப்பைத் திருடி மனிதருக்குக் கொடுத்ததாக கிரேக்கரின் புராணக்கதை கூறுகிறது. நெருப்பு மிக முக்கியமாயிருந்ததால் சில சமுதாயங்களில் ஒரு ஜோதி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கச் செய்யப்பட்டிருந்தது. கிரீஸ் நாட்டில் பல வீடுகள் பரிசுத்தமான கணப்பறை ஒன்றைக் கொண்டிருந்தன, இது மக்களின் உயிர் அல்லது ஆவியைப் பிரதிநித்துவம் செய்தது. ரோமில் கண்டுபிடிப்பின் தேவதையை வெஸ்டாவை வணங்குவதற்கென்று ஓர் ஆலயம் அற்பணிக்கப்பட்டது.
பொ.ச.மு. 776-ன் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது, ஸீயஸ் தெய்வத்துக்கு நூறு காளைகள் பலிசெலுத்தப்பட்டது, அந்தச் சமயத்தில் விளயாட்டு அரங்கத்தின் கடைசியில் ஒரு மத ஆசாரியன் ஒரு சுடரைப் பிடித்துக்கொண்டு நின்றான். விளையாட்டு வீரர்கள் ஆசாரியன் இருந்த இடம் மட்டும் ஓடிவந்தனர். வெற்றிகொள்ளும் விளையாட்டு வீரர்கள் அந்தச் சுடரை வாங்கி பலிகளுக்கான பீடத்தின் நெருப்பை மூட்டினார். இந்த விளையாட்டின் போது ஸீயஸ் தெய்வத்தின் கனத்துக்காக செலுத்தப்பட்ட இந்தப்பலியின் சின்னமாக அந்த ஜோதி எரிந்துகொண்டிருந்தது.
பாரன் பியரெ டெ குபர்ட்டின் என்பவர் இந்த விளையாட்டுகளை மீண்டும் 1896-ல் ஆரம்பித்த போது ஜோதி இருந்ததாக ஒரு பதிவும் இல்லை. என்றபோதிலும், 1928 ஆம்ஸ்டர்டாம் விளையாட்டுகளிலும் 1932 லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுகளிலும் ஒலிம்பிக் ஜோதி எரிந்ததாக அறிக்கை செய்யப்பட்டது.
ஆனால் நவீன காலங்களில் இருந்துவரும் ஜோதியைத் தூக்கி செல்லுதல் என்னும் எண்ணம் எப்பொழுது ஆரம்பமாயிற்று? மக்ளீன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்வதாவது, 1936-ல் பெர்லின் கோடைக்கால விளையாட்டுகளை ஏற்பாடு செய்த நாசி அரசியல் கட்சி, கிரீஸிலுள்ள ஒலிம்பியாவிலிருந்து ஜெர்மனி வரை ஜோதிகளை ஏந்தியுள்ள 3,000 பேரை உபயோகித்து, ஒரு பன்னிரண்டு நாள் ஓட்டத்தை ஏற்பாடுசெய்தது. நாசியர் ஆட்சிக்குரிய ஜெர்மன் குடியரசுத் தலைவர்கள் மக்களுடைய பெரும்பான்மையான ஆதரவைப் பெறுவதில் நிபுணர்கள், மக்ளீன்ஸ் தொடர்ந்து கூறுகிறது: “ஜோதியின் வருகை விளையாட்டுகளின் துவக்க சடங்குகள் எதிர்பாராதளவுக்கு அமைந்த காட்சிகளுடன் ஊக்கம் பெற்றது, மற்றும் அந்த எண்ணம் நிலைபெற்றது.”
கிரேக்க ஆசிரியர் ஸெனஃபோன் மெஸிநெஸி கூறுகிறார்: “சில சமயங்களில் இரண்டு மாதங்களுங்கூட பயணம்பண்ணி ஒலிம்பியாவிலிருந்து வரும் அந்த ஜோதியைப் போன்று வேறு எந்தக் காட்சிகளும் அவ்வளவு மறக்க முடியாததாக இருக்கவில்லை. இது நடக்கவிருக்கும் விளையாட்டுகளை கடந்த நூற்றாண்டுகளினுடே பரிசுத்தப்படுத்தப்பட்ட மதசம்பந்தான வார்த்தைகளால் இணைக்கிறது.”
விளையாட்டுகளுக்குப் புத்துயிர்
முதல் ஒலிம்பிக் விளையாட்டுகள் வணக்கத்தின் ஜோதிகள் எரிந்துகொண்டிருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஒலிம்பிய தெய்வங்களில் உன்னதமான தெய்வமாகிய ஸீயஸைக் கனப்படுத்துவதற்காக அவை ஒரு மதப் பண்டிகையாகப் பிறந்தன. இந்த விளையாட்டுகள் பொ.ச.மு. 776 முதல் பொ.ச. 394 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டன. “கிறிஸ்தவனால் ரோம சக்கரவர்த்தி தியோடோசியஸ் ‘புறமதப் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நிறுத்தப்படவேண்டும்” என்று அறிக்கை கொடுத்த அந்தச் சமயம் வரை தொடர்ந்தது” அப்பொழுது ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பாகமாயிருந்த கிரீஸ் அதற்கு இணங்கியது.
இந்த ரோம சட்டம் அந்தளவுக்கு விட்டுக்கொடுக்காத ஒன்றாயிருந்ததால் 1800-கள் வரை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற ஆரம்ப இடம் எங்கிருந்தது என்பது அறியப்படாமற்போனது. பின்பு “அந்த இடம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதானது, ஒலிம்பிக் பாரம்பரியத்துக்குப் புத்துயிரளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. எனவே 1896-ல் தற்கால முதல் ஒலிம்பிக் விளையாட்டுகள்” ஏத்தன்ஸில் நடத்தப்பட்டன என்று தி டொராண்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது.
தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் உயர்ந்த இலட்சியத்தைக் கொண்டது. மேன்மையான சமூக மதிப்பீடுகளைத் தொடருதல். புரூஸ் கிட் கேல்கரி ஹெரல்டு பத்திரிக்கையில் எழுதுகையில் இப்படியாகக் குறிப்பிட்டார்: “மனிதாபிமானமாகிய ஒலிம்பிய தத்துவத்தையும் பரந்த கல்வி முறைகளையும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்த உலகத்தை மேன்மையான ஓர் இடமாக ஆக்கிட உதவும் ஒரு சமூக இயக்கத்தின் மையமாக அமைந்திடவே பியரெ டெ குபர்ட்டின் தற்கால விளையாட்டுகளை நிறுவினார்.” அந்த விளையாட்டுகள் இந்த உயர்ந்த இலட்சியங்களைச் சார்ந்திருக்கின்றனவா? கானடா தேசத்தின் ஒலிம்பிக் அக்கெடமியின் தலைவரும் முன்னாள் ஒலிம்பிய வீரருமாகிய கிட் மேலும் குறிப்பிடுகிறவராய், “ஒலிம்பிக் இயக்கம் பிற மதங்கள் சார்பற்ற ஒரு மதமாக உரிமைப்பாராட்டுகிறது.” மற்றும் “ஒலிம்பிக் இயக்கம் சாதாரணமாக நன்மைக்கான ஒரு சக்தியாக இருந்து வந்திருக்கிறது, ஆனால் அதன் மிக ஆழமான நோக்கங்களை நிறைவேற்றுவதில் குறைவுபடுகிறது,” என்றார்.
அது தன் மதிப்புமிகுந்த இலட்சியத்தைத் தவறவிட்டிருப்பதற்குக் கரணம் ஒருவேளை மிகுந்த போட்டியை உட்படுத்தும் விளையாட்டுகளில் சமூக முன்னேற்றத்தைச் சாதிப்பது மிகவும் கடினமாயிருப்பதாகும். மற்றும் இப்படிப்பட்ட போட்டி மனப்பான்மையை தற்கால ஒலிம்பிக் ஜோதிகளுக்குப் பின்னால் அமைந்திருக்கும் இலட்சியங்களை அதற்கு ஒத்திணங்கிடச் செய்திருக்கிறது.
எப்படியும் வெற்றி
தேசிய அளவிலும் தனிப்பட்ட விதத்திலும் எப்படியும் எல்லாரிலும் சிறந்து விளங்கவேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை அவர்களுடைய திறமையை அதிகரித்திடும் போதை மருந்துகள் பரவலாகப் பயன்படுத்துவதற்குக் காரணமாயிருந்திருக்கிறது. இதை உபயோகிப்பதுதானே ஆழ்ந்த மனச்சோர்வை ஏற்படுத்துவது முதல் கடுஞ் சீற்றத்தை ஏற்படுத்துவதுவரையாக மனசம்பந்தப்பட்டக் கோளாறுகளை உண்டாக்கக்கூடும். டாக்டர் ஹாரிசன் போப் கேல்கரி ஹெரல்டில் பின்வருமாறு சொன்னது மேற்கோளாக எடுத்துக்காண்பிக்கப்பட்டது: நம்மில் எவரும் இதுவரை நினைத்திருந்ததற்கு மாறாக வலுவூட்டும் ஸ்டிராய்டுகள் மனக்கோளாறுகள் சார்ந்த அறிகுறிகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.” ஐ. மா. ஒலிம்பிக் அணியில் மருத்துவர் ஒருவர் இப்படியாகக் கூறினார்: இப்பொழுதெல்லாம் வலுவூட்டும் ஸ்டிராய்டுகள் பயன்படுத்தாமல் சர்வதேச விளையாட்டுகளில் போட்டிச் போடுவது கூடாத காரியம்.”
“இவர்கள் பெரிய உருவத்தையும், அதிக வேகத்தையும் கூடுதல் பலத்தையும் பெறுவதற்கு நாங்கள் மின்னணுப் பொறிகளைப் பயன்படுத்துகிறோம்.” என்று ஓர் ஒலிம்பிக் அணி மருத்துவர் கூறுகிறார். “காரியங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருக்கப்போகிறது. தங்களுடைய திறமைகளைக் காட்டுவதற்கு மக்கள் எந்தளவுக்கும் செல்வார்கள்.” இதுதான் “எப்படியாகிலும் வெற்றி என்ற நோய்குறி” மற்றும் ”ஃப்ராங்கென்ஸ்டீன் நோய்க்குறி” என்று அழைக்கப்படுகிறது. “தங்கத்தை”—வெற்றியை அதைத் தொடர்ந்த விளம்பரப் பதிவுகளை பணத்தை நாடிட எல்லா முயற்சிகளையும் உட்படுத்திடும் ஒரு சமுதாயத்தில் “மிக முக்கியமான காரியம் வெற்றி பெறுவது அல்ல, ஆனால் பங்கு பெறுவதே” என்ற குபர்ட்டினின் வாசகம் முற்றும் சம்பந்தமற்றதாக இருக்கிறது.
இரக்கத்தில் ஆற்றலைப் பெருக்குதல், வளர்ச்சிக்காக ஹார்மோன்களைப் பயன்படுத்துதல், கருச்சிதைவு செய்துகொள்வதற்கு முன்பு செயற்கைமுறையில் கர்ப்பமாகுதல் மற்றும் சிறுநீர் மாற்றம் ஆகிய காரியங்களெல்லாம் போதை மருந்து பரிசோதனையைக் கடந்துவிடுவதற்கும், விளையாட்டுகளில் தங்களுடைய திறமைகளை முன்னேற்றுவிப்பதற்கும் சில ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுகிறது. தி டொராண்டோ ஸ்டார் கூறுகிறபடி. “ஹார்மோன் விறுவிறுப்பைப் பெற்றிட” சில விளையாட்டு வீராங்கனைகள் “செயற்கை முறையில் கர்ப்பமாகி, இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்பு வளர்கருவை அழித்துவிடுகின்றனர்.” மற்ற விளையாட்டு வீரர்கள் “தங்களுடைய போதை மருந்து கலந்த சிறுநீரை முடிந்தளவுக்கு வெளியேற்றிவிட்டு, வேறொருவரின் ‘சுத்தமான’ அல்லது போதை மருந்து பரிசோதனையைக் கடப்பது அவசியப்பட்டால் ‘சுத்தமான’ அல்லது போதை மருந்து கலக்கப்பெறாத சிறுநீரை ஏற்றுக்கொள்கின்றனர் . . .விளையாட்டு வீரர் போதை மருந்து பரிசோதனையைக் கடப்பது அவசியப்பட்டால் ‘சுத்தமான’ சிறுநீர் சிறுநீர்ப்பையில் செலுத்தப்படுகிறது.” இரத்தத்தில் ஆற்றலைப்பெருக்குதலில் விளையாட்டு வீரர் உடல் இயல்பாகவே மாற்றியமைத்துக்கொள்ளும் சில சிவப்பு இரத்த அணுக்களைப் பிரித்தெடுத்து, போட்டிக்கு முன்பு தசைகளுக்குக் கூடுதல் ஊக்குவிப்பைக் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட இரத்தத்தை மீண்டும் செலுத்திக்கொள்கின்றனர்.
அனைத்துக் கலாச்சார கல்வி என்ற முறையில் ஒருவரையொருவர் மேன்மையான விதத்தில் புரிந்துகொள்ளுதல் என்ற காரியத்தைக் குறித்ததில், போட்டியிடும் தேசிய முகாம்கள் அவர்கள் வரைக்கும் இருந்துவிடும் மனச்சாய்வுடையவர்களாயிருக்கிறார்கள், ஒவ்வொரு தொகுதியும் அதனதன் தேசத்திலும் அணியிலுமே கவனம் செலுத்துகின்றன. எனவே தேசிய தடைகளை முறிப்பதற்குப் “பரிசுத்த ஜோதி” எந்தவிதத்திலும் உதவுவதாயில்லை. ஓர் எழுத்தாளர் இப்படியாகச் சொன்னார்: “கேல்கரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் அதைத் தொடரும் கோடைக்கால சீயோல் விளையாட்டுகளிலும் வெளியாகும் காரியம், அவரவர்களுடைய முறைகளின் மேன்மையை சர்வதேச அங்கீகரிப்புக்காகப் போட்டியிடும் ஒரு காட்சிப்பெட்டியாக இருப்பதைத் தவிர மேன்மையான ஒன்றாக இல்லை” இது எவ்வளவு உண்மையாக நிரூபித்தது! ஓர் ஒலிம்பிக் அணியின் மருத்துவ அதிகாரி மேலுமாகக் குறிப்பிட்டதாவது, விளையாடுகிறவர்கள் “வீரர்கள். அவர்கள் வெற்றிபெற்றால், எங்களுடைய கலாச்சாரம் மேன்மையான கலாச்சாரமாக நோக்கப்படுகிறது.” கடைசியில் பெற்றுக்கொள்ளப்படும் மொத்த பதக்கங்கள்தானே அளவு கோலாக இருக்கிறது.
ஒலிம்பிக் ஜொதியும் அது பிரதிநித்துவம் செய்யும் மேன்மையான இலட்சியங்களும் அரசியல், வர்த்தகம், மற்றும் போதை மருந்து துர்ப்பிரயோகம் ஆகியவற்றால் அணைக்கப்பட்டிருக்கிறது. கானடாவின் குறுகியதூர விரைவு ஓட்டக்காரர் பென் ஜான்சனும் மற்றவர்களும் சீயோல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் போதைமருந்து உபயோகித்ததற்காக பதக்கங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்ட அந்தப் பழிச்செயலுக்குப் பின்னர் ஒருவர் பின்வருமாறு கேட்டுக்கொள்ளவேண்டியதாயிருக்கிறது: மறைந்துபோகும் மகிமையைப் பெற்றிடுவதற்காக மேலுமாக என்ன விலைகொடுக்கப்படும்? (g89 3/8)