இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னில் ஏதாவது தவறு இருக்கிறதா?
எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவிவருவதுதானே உலகத்தில் கவனத்தை ஓரினப்புணர்ச்சி என்ற பொருளினிடமாகத் திருப்பியிருப்பதோடு, இளைஞரில் தங்களுடைய சொந்த பாலுணர்வு சம்பந்தப்பட்ட அநேக கேள்விகளையும் அச்சங்களையும் வெளிப்படையாக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரை இப்படிப்பட்ட சில அச்சங்களை பொறுப்புணர்வோடு, உதவியாக இருக்கும் வகையில் கையாளுகிறது.
‘நான் ஒரு பெண், என்னுடைய ஆசிரியரில் ஒருவரின் பேரில் என்னுடைய உணர்ச்சிகள் விசித்திரமாக இருக்கின்றன. நான் அவளில் அல்லது ஏதோ ஒன்றில் அன்பாயிருக்கக்கூடும் என்று எனக்கு பயமாயிருக்கிறது.’ இப்படியாக 13 வயது இளம் பெண் ஒருத்தி எழுதினாள். ஓரினப்புணர்ச்சி என்ற பொருள் “வளரிளமைப் பருவத்தில் இருக்கும் அநேகர் மத்தியில் ஓரளவு கவலையை ஏற்படுத்துகிறது . . . வளரிளமைப் பருவத்தினர் தாங்கள் ஓரினப்புணர்ச்சிக்காரரோ என்று யோசிப்பது ஆச்சரியமில்லை,” என்று வளரிளமைப் பருவம் (Adolescence) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
ஆலன், இப்பொழுது பருவம் எட்டிய ஓர் இளம் பையன், இப்படியாகக் கூறுகிறான்: “மாற்கு என்பவன் என்னுடைய முதல் உண்மையான நண்பனாக இருந்தான். இதற்கு முன்பு பள்ளியில் நான் தனித்தவனாயிருந்தேன். எனக்கு விளையாட்டுகளில் அக்கறை இல்லாததாலும், நான் கலையில் அக்கறையுடையவனாயிருந்ததாலும் ஒதுக்கப்பட்டவனாயிருந்தேன். மாற்குவின் நட்பு அவன்பேரில் விருப்பத்துக்குரிய அனலான உணர்ச்சிகளை எனக்குள் தூண்டியது. அவனோடு இருக்கவும் அவனைப் போல் இருக்கவும் விரும்புகிற அளவுக்கு அவனை நேசித்தேன். ஆனால் திடீரென எழும்பியிருக்கும் இந்தப் பலமான உணர்ச்சிகள் ஓரினப்புணர்ச்சி சார்ந்த மனச்சாய்வுகளாக இருக்குமோ என்று நான் கவலைப்பட்டேன்.”
அப்படிப்பட்ட உணர்ச்சிகள் எங்கிருந்து வருகின்றன? அவை தீய உணர்ச்சிகளாகத்தான் இருக்க வேண்டுமா?
ஒத்த பாலினத்தவர் மோகங்களின் ஆரம்பம்
மற்றவர்களோடு நெருங்கியிருப்பதன் உணர்வில் தவறு ஏதுமில்லை. “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு,” என்று நீதிமொழிகள் 18:24 கூறுகிறது. இப்படியாக ஓரினப்புணர்ச்சி உணர்வுகள் கலந்திராத அநேக நெருங்கிய உறவுகளைக் குறித்து பைபிள் சிறப்பாகக் குறிப்பிடுகிறது; உதாரணமாக, இயேசுவும் அப்போஸ்தலனாகிய யோவனும், நகோமியும் ரூத்தும், தாவீதும் யோனத்தானும்.—ரூத் 1:16, 17; 1 சாமுவேல் 18:1; யோவன் 13:23.
என்றபோதிலும் ஒத்த பாலினத்தவர் மோக உணர்ச்சிகள், நட்பு அல்லது மரியாதையின் அடிப்படையிலான முதிர்ச்சியுள்ள உறவுகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. மோகங்களே பொதுவாக ஒரு பக்க உணர்ச்சிகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட மோகத்தின் மையப்பொருள் பொதுவாக தன்னைவிட வயதில் பெரிய இளைஞராக அல்லது (ஓர் ஆசிரியர் போன்று) வயதில் பெரிய ஒருவராக இருக்கிறார், அந்த நபர் பெரிதளவில் தன் ஆராதனைக்குரியவராகிறார்.
அப்படிப்பட்ட மோகம் குறைந்த காலத்துக்கு இருக்கும் வளர்ச்சியின் பாகமான வேதனையைக் காட்டிலும் சற்று அதிகத்தை உட்படுத்துகிறது, “ஓரினப்புணர்ச்சி உறவைக் காட்டிலும் பெருமளவில் வளரிளமைப் பருவ வளர்ச்சியின் அறிகுறியாகவே இருக்கிறது.” (கேத்லீன் மெக்காய் எழுதிய பருவ வயதினர் சோர்வை மேற்கொள்ளுதல் [Coping With Teenage Depression]) பிறர் மத்தியில் தங்களுக்கு ஓர் இடம் பெற்றிடுவதை அல்லது பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுவதை இளைஞர் நாடுகின்றனர். எழுத்தாளர் சாலி ஹெல்கசென் குறிப்பிட்டார்: “நாம் என்னவாக இருக்க விரும்புகிறோமோ, அதைப் பிரதிநிதித்துவம் செய்வதாக நாம் நினைக்கும் வயதில் பெரிய இளைஞரிடமாகவே பொதுவாகத் திரும்புகிறோம், மற்றும் அவர்களைப் போல நம்மை அமைத்துக்கொள்கிறோம்.”
ஒத்த பாலினத்தவரிடம் மோகம் கொள்ளுதல் தனிமையின் காரணத்தால், சுய கெளரவக் குறைவால், அல்லது உணர்ச்சி சார்ந்த ஆதரவு தேவைப்படுவதால் வளரக்கூடும். ஆலன் கூறுகிறான்: “முக்கியமான அம்சம் என்னுடைய உணர்ச்சி சார்ந்த நிலையற்ற தன்மையும் என்னுடைய பெற்றோரிடமிருந்து நான் தூரமாக விலகியிருப்பதுமே. அவர்களோடு நான் தொடர்பு கொள்ள முடியும் என்று நான் உணராததால், என் மனதிலிருப்பதை அதிகமதிகமாக மாற்குவிடமே மனம்விட்டு பேசினேன்.”
“மோக உணர்ச்சிகளின் தொடர்புகளை “ஓரினப்புணர்ச்சி” என்று எண்ணிவிடக்கூடாது, ஏனென்றால், அவை பாலுறவுத் தொடர்புகளில் முடிவடைவது அரிது. அப்படிப்பட்ட நடத்தை பருவம் வந்தவராக எதிர்காலத்தில் ஓரினப்புணர்ச்சி ஆரம்பத்தைக் கொண்டிருப்பதை முன்னுரைப்பதாயில்லை,” என்று டாக்டர் ரிச்சர்டு E. க்ரீப் கூறுகிறார். (மனித பாலுறவுகளின் மருத்துவ அம்சங்கள் [Medical Aspects of Human Sexuality]) எனவே ஆலன் சொல்லுகிறான்: “மாற்குவின் சம்பந்தமாக என்னுடைய உணர்ச்சிகள் குறித்த என் பயங்கள் தளர்ந்தன. என்னில் எந்த வித ‘தவறும்’ இல்லை என்பதை நான் உணர ஆரம்பித்தேன்!”
என்றபோதிலும், ஒத்த பாலினத்தவர் மோக உணர்சிகள் அநேக சமயங்களில் மனச்சோர்வையும், பொறாமையையும், தன்னுரிமை எண்ணத்தையும், தான் ஆராதிக்கும் ஒருவராக முழுகவனத்துக்குரியவராய் அவரை ஆக்குவதையும் பிறப்பிக்கிறது—நிச்சயமாகவே ஆரோக்கியமற்ற உணர்ச்சிகள்! அப்படிப்பட்ட உணர்ச்சிகளை நீங்கள் எவ்விதம் போக்கிடலாம்? நீங்கள் அப்படி ஆராதிப்பதாய் உணரும் நபரை நிதானமாக நேர்மையுடன் நோக்குவதில் துவங்குங்கள். அவரோ அல்லது அவளோ வெறுமென மனிதராக, எல்லாவிதமான பலவீனங்களுக்கும் குறைபாடுகளுக்கும் ஆட்பட்டவர் என்பது உண்மை அல்லவா? (ரோமர் 3:23) நல்லவேளையாக, பருவ வயதினர் முதிர்ச்சியடைகையில், தங்களைக் குறித்து பாதுகாப்பாக உணருகையில் பொதுவாக அப்படிப்பட்ட மோக உணர்ச்சிகளைக் கடந்துவிடுகின்றனர்.
கவனமாக இருக்க வேண்டிய அவசியம்
மோகம் ஒத்த பாலினத்தவரைக் குறித்த பாலின எண்ணங்களை அல்லது கனவுகளை உட்படுத்தினால், அப்பொழுது என்ன? நீங்கள் “இளமையின் மலரும் பருவத்தில்” இருக்கிறீர்கள் என்பதை மனதிற்கொள்ளுங்கள்—புதிய ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டவர்களாய் இருக்கும் பருவம். (1 கொரிந்தியர் 7:36, NW) இந்த உணர்ச்சி வேகங்களை எவ்விதம் கையாள வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளும் வரை நீங்கள் தேவையற்ற பாலின உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு ஆட்படலாம். ஒத்த பாலினத்தவரிடம் கவரப்படுவது மனக்குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாயிருப்பினும், நீங்கள் ஓரினப்புணர்ச்சிக்காரராவீர்கள் என்பதைக் குறிக்காது. வளருகையில் பெரும்பான்மையான இளைஞர் இத்தகைய உணர்ச்சிகளை அனுபவிப்பதில்லை.
இருந்தாலும், ஓரினப்புணர்ச்சியின் கண்ணியில் சிக்கிவிடாதபடிக்குக் கவனமாயிருக்க வேண்டியது அவசியம். பைபிள் 1 கொரிந்தியர் 6:9, 10-ல் நம்மை இப்படியாக எச்சரிக்கிறது: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் (முறைகெட்ட ஓரினப்புணர்ச்சிக்காரரும், இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—லேவியராகமம் 18:22; 20:13; ரோமர் 1:26, 27.
ஒழுக்கங்கெட்ட சிந்தனைகளில் குடியிருக்கும் ஓர் இளைஞன் தன்னுடைய கற்பனை உண்மையாகும் ஆபத்தான நிலையைக் கொண்டிருக்கிறான். (யாக்கோபு 1:14, 15) விசேஷமாகப் பருவ வயதை எட்டாத சில இளைஞரில் ஒத்தப் பாலினத்தவர் மத்தியில் “பாலின விளையாட்டுகள்” அதிர்ச்சி தரும் அளவுக்குச் சாதாரணமாகிவிட்டிருக்கிறது என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. உண்மைதான், இது ஓரினப்புணர்ச்சி வாழ்க்கைக்கு வழிநடத்துவது அரிதே என்று அநேக நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இருந்தபோதிலும், அப்படிப்பட்ட “பாலின விளையாட்டு” (ஒருவேளை அதில் உட்பட்டிருக்கும் ஒழுக்க சம்பந்தப்பட்ட அம்சத்தை உண்மையில் புரியாமல் இருந்தாலும்) அசுத்தமான செயலாக இருக்கிறது, அது போர்னியா-வாகவும்—இன்னொரு நபரோடு ஒழுக்கங்கெட்ட பாலின நடத்தையை விவரிக்க பைபிளில் பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை—இருக்கக்கூடும். (யூதா 7) அப்படிப்பட்ட நடத்தை யெகோவாவுக்குப் பிரியமற்ற நடத்தையாயிருப்பது மட்டுமின்றி அது இளைஞரை ஓரினப்புணர்ச்சிப் பழக்கங்களுக்கு வழிநடத்தி, நிரந்தர உணர்ச்சிசம்பந்தப்பட்ட வடுக்களை விட்டுச்செல்லக்கூடும்.
எனவே ஒத்தபாலினத்தவரைக் குறித்து பாலின உறவு சார்ந்த சிந்தனைகள் தோன்றுமானால், ‘நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள’ காரியங்களின் மேல் உங்கள் மனதைக் கொண்டிருக்கக் கடினமாகச் செயல்படுங்கள். (பிலிப்பியர் 4:8) சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆபாசமான திரைப்படங்கள், அல்லது மெல்லிய அல்லது குறைவான ஆடை அணிந்த படங்களையுடைய நவநாகரீகப் பாணிகள் மற்றும் உடற்கட்டமைப்பை விருத்தி செய்தல் பேரில் கவனத்தைத் திருப்பும் பத்திரிகைகளை வாசித்தல் போன்றவற்றைத் தவிருங்கள். பருவ வயதில் இருந்தபோது ஓரினப்புணர்ச்சி சார்ந்த கற்பனைகளாலும், கனவுகளாலும் வாதிக்கப்பட்ட டேவ் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறான்: “தற்புணர்ச்சியும் ஆபாசப் படங்களும் இலக்கியங்களும் இப்படிப்பட்ட கனவுகளுக்கு வழிநடத்தின என்பதில் நான் நிச்சயமாயிருக்கிறேன், ஏனென்றால் மோசமான திரைப்படங்களிலும் இலக்கியங்களிலும் நான் பார்க்கும் காரியங்கள் அநேக சமயங்களில் இரவு நேரத்தில் மீண்டும் உயிர்பெறுகின்றன.” தன்னுடைய மனதைச் சரியான எண்ணங்களால் நிரப்புவதன் மூலம் மட்டுமே அந்தக் கவர்ச்சிக் கற்பனைகளை அவன் கட்டுப்படுத்த முடிந்தது.
இப்பொழுது ஒரு கிறிஸ்தவ மூப்பராயிருக்கும் ஜேசன் இளைஞனாயிருந்தபோது, அதுபோன்று ஒத்தபாலினத்தவரிடமாகப் பாலின உணர்ச்சிகள் தன்னை இழுப்பதை உணர்ந்தார். அவர் ஒப்புக்கொள்வதாவது: “ஒத்த பாலினத்தவர் சார்ந்த பாலினக் கனவுகள் குறித்த என் பிரச்னையைத் தற்புணர்ச்சிப் பழக்கம் வளர்த்தது என்று நினைக்கிறேன். அது என்னில் ஒவ்வொரு நாளும் மோசமான ஒழுக்கங்கெட்ட சிந்தனைகளைத் தூண்டியது. இது மேலுமான அசுத்த இச்சைகளுக்கான பலமான பசியை வளர்த்தது.” நீங்கள் ‘வேசித்தனம் குறித்ததில் உங்கள் அவயவங்களை மரிக்கச் செய்வது’ அவசியம். (கொலோசெயர் 3:5) தற்புணர்ச்சி தவறான இச்சைகளைப் போஷிக்கிறது.a
உங்களுடைய பெற்றோரிடம் அல்லது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடம் மனம்விட்டு பேசுதலும் உதவியாயிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு நடைமுறையான ஆலோசனைகளைக் கொண்டிருக்கலாம், அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கான உங்கள் முயற்சிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பவர்களாகவும் இருக்கலாம். (நீதிமொழிகள் 11:14) அவர் சொல்லுகிறார்: “ஆண்களும் பெண்களும் அடங்கிய என்னுடைய நண்பர் வட்டாரத்தை விரிவுபடுத்திடவும், எல்லாச் சமயங்களிலும் அதே ஆட்களோடு என் நேரத்தைச் செலவழிக்காமலும் இருக்கும்படி [என் நண்பர்] என்னிடம் சொன்னார்.”
ஜேசன் தன்னுடைய பாலின உணர்ச்சிகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் அந்தச் சமயம் வரை, கூடுதலான முன்னெச்சரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது ஞானமாயிருந்தது. அவர் சொல்லுகிறார்: “என்னில் பாலின உணர்ச்சிகளைத் தூண்டிய ஒத்த பாலினத்தவரிடம் நான் பாசமாயிராதபடிக்குக் கவனமாயிருந்தேன். பாசம் என்பதில் நான் கீழ்த்தரமான விளையாட்டையும் கட்டிப்பிடித்தலையும் அர்த்தப்படுத்துகிறேன்.” அப்படிப்பட்ட சுய சிட்சை ‘உங்களுடைய சரீரத்தை ஒடுக்கி அடிமையாக்கிக்கொள்ளும்படி’ பவுல் அப்போஸ்தலன் கொடுக்கும் புத்திமதிக்கு இசைவாயிருக்கிறது.—1 கொரிந்தியர் 9:27, தி.மொ.
குற்ற உணர்வுகளைத் தளர்த்தல்
சில இளைஞர் குற்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர், தங்களுடைய மோக உணர்ச்சிகள் தளர்ந்து வெகு காலத்துக்குப் பின்பும் சந்தேகங்களால் பாதிக்கப்படுகின்றனர். இளம் பிள்ளைகளாக சிலர் ஓரினப்புணர்ச்சிக்கொப்பான பாலின விளையாட்டுகளில் அறியாமல் ஈடுபட்டது குறித்த பழைய நினைவுகளால் வாதிக்கப்படுகின்றனர்.
நாள்பட்ட கடந்த காலத்தைக் குறித்து நினைத்து வருத்தப்படுவதில் சாதனை ஏதும் இருக்கப்போவதில்லை, விசேஷமாக ஒத்தபாலினத்தவர் பேரில் கவர்ச்சியின் உணர்ச்சிகள் கடந்து வெகுகாலமாகிவிட்டால்.b ‘யெகோவா மன்னிக்கிறதற்குத் தயைப் பெருத்திருக்கிறார்,’ மற்றும் ஒரு பிள்ளையாக பாலின காரியங்களைக் குறித்த அறிவு எந்தளவுக்குக் குறைவுபட்டதாயிருக்கிறது என்பதை அவர் மனதிற்கொள்கிறார். (ஏசாயா 55:7) ‘நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்குமானால் தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருப்பதால் நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.’ (1 யோவான் 3:19, 20) இருந்தாலும், ஒருவருடைய பெற்றோரிடம் அல்லது கிறிஸ்தவ மூப்பர்களிடம் காரியங்களைப் பேசுவது உதவியாக இருக்கும்.
ஒத்தபாலினத்தவரிடம் மோகம் கொள்ளுதல் ஒரு சங்கடமான, கவலைக்குரிய அனுபவமாக இருக்கக்கூடும். ஆனால் அது ஒரு வாழ்நாள் வடுவை விட்டுச்செல்லவேண்டிய அவசியமில்லை. என்றபோதிலும் இது சுய சிட்சை மூலமும், யெகோவா தேவனின் உதவியாலும் மேற்கொள்ளக்கூடிய கூடுதலான ஓர் இளைஞர் சோதனையாகும். (g89 4/8)
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! பத்திரிகையில் தற்புணர்ச்சி பழக்கங்களின் பேரில் அக்டோபர் 8, 1988; டிசம்பர் 8, 1988; மற்றும் மார்ச் 8, 1989 இதழ்களில் காணப்படும் கட்டுரைகளைப் பார்க்கவும்.
b ஒத்த பாலினத்தவரிடமாகக் கவரப்படும் உணர்ச்சிகள் தொடருமானால், அல்லது ஒரு கிறிஸ்தவனாக முழுக்காட்டுதல் பெற்ற பின்பு பாலுறவு சம்பந்தமான தவறான நடத்தையில் ஈடுபட்டால், அந்த இளைஞன் கிறிஸ்தவ பெற்றோர் மற்றும் சபை மூப்பர்களின் உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியம்.—யாக்கோபு 5:14, 15.
[பக்கம் 23-ன் படம்]
உங்களுடைய உணர்ச்சிகளை ஒரு பெற்றோருடனோ அல்லது ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடமோ பேசுவது காரியங்களை சரியான நிலையில் நோக்கிட உங்களுக்கு உதவும்