அந்தப் ஃபிரெஞ்சு புரட்சி வரவிருக்கும் காரியங்களுக்கு ஒரு முன் காட்சி
ஃபிரான்ஸ் விழித்தெழு! நிருபர்
ஃபிரெஞ்சுப் புரட்சி 201 ஆண்டுகளுக்கு முன், 1789-ல் ஏற்பட்டது. அதற்குக் காரணங்கள் என்ன? வரவிருக்கும் காரியங்களுக்கு அது என்ன முன்மாதிரியை வைத்துப்போனது?
“அது ஒரு கிளர்ச்சியா?” என்று கேட்டார் மன்னர்.
“இல்லை மன்னா, அது ஒரு புரட்சி.”
பாரிஸில் சிறைக்கோட்டம் உக்கிரமாய்த் தாக்கியழிக்கப்பட்ட நாளான ஜூலை 14, 1789 அன்று, ஃபிரெஞ்சு மன்னர் லூயி XVI அந்தக் கேள்வியைக் கேட்டார். ஃபிரான்சில் நீடித்து நிலைக்கும் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய சம்பவங்களையும், வரவிருக்கும் காரியங்களுக்கு அவை ஒரு முன்காட்சியாக அமையும் என்பதையும் ஃபிரெஞ்சு அரசு கண்டுணர முடியவில்லை என்று அவர் காண்பித்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டின்போது பசியும் பட்டினியும் ஃபிரான்சில் ஏற்கெனவே பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சிக்கு முன் தினம் மாலைப் பொழுதில், 2.5 கோடி மக்கள் தொகயில் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் உயிர்பிழைத்திருப்பதற்கு பிறர் கொடயில் சார்ந்திருந்தனர். மற்றும் அரசின் வல்லமை குறைந்துகொண்டிருந்தது, சீர்திருத்தங்கள் பேரில் நிர்வாகம் அக்கறையற்றிருந்தது, அரசனின் அக்கறைகள் தேசிய அக்கறைகளைவிட மேலானதாக இருக்க வேண்டுமா என்று அறிஞர்கள் கேள்வி கேட்டனர்.
ஸ்டேட்ஸ் ஜெனரல் தேசிய மன்றம்
1788-ல் அந்த ஆட்சி உச்சக்கட்ட நெருக்கடி நிலையை எதிர்ப்பட்டது, பிரிட்டனுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்கருக்குப் ஃபிரெஞ்சு ஆதரவே இதற்குக் காரணம். மன்னன் ஸ்டட்ஸ் ஜெனரல் தேசிய மன்றத்தைக் கூட்டிச்சேர்க்கக் கடமைப்பட்டிருந்தான். இது தேசத்தின் மூன்று பிரிவினராலானது: குருவர்க்கம் (முதல் நிலை); பிரபுக்கள் (இரண்டாவது நிலை); சாதாரண மக்கள் (மூன்றாவது நிலை).
குருவர்க்கம் 1,50,000 மக்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்தனர், பிரபுக்கள் 5,00,000 மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தனர், மூன்றாவது நிலையினர் 2,45,00,000-ற்கும் அதிகமானவர்களைப் பிரதிநிதித்துவம் செய்தனர். எனவே குருவர்க்கமும் பிரபுக்களும் (இரண்டு வாக்குகள் மூலம்) ஒப்புக்கொண்டாலொழிய சாதாரண மக்கள் (தங்களுடைய ஒரு வாக்கு மூலம்) எந்தவித சீர்திருத்தங்களையும் செய்ய முடியவில்லை. எனவே குருவர்க்கமும் அரச வகுப்பினரும்—மக்கள் தொகயில் 3 சதவீதத்தினர்—மற்ற 97 சதவீதத்தினரின் வாக்கை நிராகரித்துவிட முடியும்! மேலும், குருவர்க்கமும் பிரபுக்களும் ஏறக்குறை 36 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர், அதற்கு வரி செலுத்த வேண்டியதுமில்லை.
இத்தனை அநேக மக்கள் பசியாயிருக்கும்போது, சாதாரண மக்களின் பிரதிநிதிகள் அரசின் தன்னிச்சையான ஆளுகையையும் அநியாயமான வரிகளையும் வாக்கெடுப்பு முறைகளையும், அநீதிகளையும், கத்தோலிக்க மதக் குருத்துவத்தின் பொருள்வளத்தையும் பிரபுத்துவத்தையும் கண்டனம் செய்தனர். எனினும் அரசன், தெய்வீக உரிமையால் ஆளுவதாக எண்ணப்பட்டதால், பாதுகாப்பாய் இருந்ததாகத்தோன்றினது. என்றபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கும் சற்றுக் குறைவான காலப்பகுதிக்குள், முடியாட்சி முறியடிக்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்தை மட்டுப்படுத்துவதற்கான ஒரு திட்டமும் கொண்டுவரப்பட்டது.
1789-ன் வசந்த காலத்தில் புரட்சி நடவடிக்கை ஆரம்பமானது. பிரபுக்கள் பிரிவினரில் சிலர் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், மூன்றாவது பிரிவினரின் பிரதிநிதிகள் தங்களைத் தேசிய அவையாக அறிக்கை செய்தனர். இதுதானே நடுத்தர வகுப்பினருடைய புரட்சியின் வெற்றியையும் முடியாட்சியின் முடிவையும் குறித்தது.
என்றபோதிலும், குடியானவர்கள் மூன்றாவது வகுப்பினரை முறியடிப்பதற்காக அரசனும் பிரபுக்களும் செய்யும் சூழ்ச்சிக்குப் பயந்தனர். இது அவர்களுடைய கோட்டைகளையும் பண்ணை நிலங்களையும் தாக்க ஆரம்பித்து, மெதுமெதுவாகப் பெரும் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 4, 1789-ன் இரவு ஒழுங்கைக் காத்துக்கொள்வதற்காக பிரபுக்கள் பிரிவினரின் சிலாக்கியங்களை நீக்கி நிலப்பண்ணை உரிமைகளை எடுத்துப்போட அவை தீர்மானித்தது. இப்படியாக, ஒரு சில நாட்களுக்குள் பழைய ஆட்சியின் அஸ்திவாரங்கள் வீழ்த்தப்பட்டன.
மனிதனின் உரிமைகள்
அந்த அவை பின்பு மனித உரிமை அறிக்கையை வெளியிட்டது. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற இலட்சியங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த அரசியல் நிருணய சபை மதம் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை அங்கீகரித்த விதிமுறை 10, மற்றும் 11-ஐ சேர்ப்பதற்கு முன்பு குருவர்க்கத்தின் எதிர்ப்பை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது.
ஒரு பரிபூரண அரசாங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பலர் நம்பினர். என்றபோதிலும் அவர்கள் ஏமாற்றமடையும் நிலையிலிருந்தனர், ஏனென்றால் போப் பயஸ் VI பிரதிநிதித்துவம் செய்த சர்ச், அந்த அறிக்கையைக் கண்டனம் செய்தது. அநேக புரட்சியாளருங்கூட அந்த அறிக்கையைக் கண்டனம் செய்து தங்களை இரத்தம் சிந்தும் நிலைக்குள்ளாக்கிக் கொண்டனர்.
150 வருடங்களுக்குப் பின்னர், 1948-ல் ஐக்கிய நாட்டு சபையின் பொதுக் குழுக் கூட்டம் 1789-ன் ஃபிரெஞ்சு வாசகத்தினால் ஏவப்பட்டு மனித உரிமைகளின் சர்வலோக அறிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிறைவேற்றினர். ஆனால் இன்று, கடந்த காலத்தில் இருந்தது போலவே, அப்படிப்பட்ட உரிமைகளுக்கு உதட்டளவான சேவையை செய்யும் பலர், நிருணயிக்கப்பட்டிருக்கும் நியமங்களுக்கு முற்றிலும் மதிப்பைக் காண்பிப்பதில்லை. பிரசங்கி 8:9-ன் வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயிருக்கிறது: “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.”
சர்ச் பிளவுபடுகிறது
ஆகஸ்ட் 1789-ல் சர்ச் சொத்துக்களைத் தேசியமயமாக்குவது குறித்த ஒரு கருத்தைச் சில மக்கள் பிரதிநிதிகள் அவையின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அந்தக் கருத்து சட்டமாக்கப்பட்டு, அரசு சர்ச் சொத்தை பறிமுதல் செய்தது. மேலும் குருவர்க்கத்தின் பொது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உண்மைத்தவறாதவர்களாய் இருப்பதாக பிரமாணம் செய்துகொள்ள குருமாரை அவை வற்புறுத்தியது.
சர்ச் பிளவுபட்டது. அந்தப் பிரமாணம் எடுப்பதை நாட்டின் குருமார்கள் (குருவர்க்கத்தினரில் 60 சதவீதம்) உண்மைத்தவறாமைப் பிரமாணத்தை எடுக்க ஒப்புக்கொண்டனர், மறுத்த குருமார்கள் ரோமுக்கு உண்மையாயிருக்க விரும்பினார்கள். இந்தப் பிளவு அநேக சண்டைகளுக்குக் காரணமாயிருந்தது. பிராமாணம் எடுக்க மறுத்த குருமார்கள் பெரும்பாலும் புரட்சியின் மற்றும் தேசத்தின் பகைவர்களாகக் கருதப்பட்டனர்.
கொடுமையும் இரத்தம் சிந்துதலும்
வெளிப்புற துன்ப நெருக்கடிகளும் புரட்சிக்கு ஆபத்தாக இருந்தது. அயல்நாட்டு மன்னர்கள் ஃபிரெஞ்சு விவகாரங்களில் தலையிட்டு அரசனை மீண்டும் சிங்காசனத்தில் ஏற்றுவது குறித்து சிந்தித்துவந்தனர். பொது மக்களைக் குறித்ததில், லூயி XVI ஜுன் 21, 1791 அன்று நாட்டை விட்டு தப்பியோட நினைத்த போது அவன் மீது இருந்த நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர்.
1792-ன் வசந்த காலத்தில் மற்ற ஐரோப்பிய தேசங்களில் புரட்சிக்கு இருந்த எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்க ஃபிரான்ஸ் பொஹீமியா மற்றும் ஹங்கேரியின் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தது. போர் ஐரோப்பா முழுவதும் பரவி, 5,00,000-ற்கும் மேற்பட்டவர்கள் ஃபிரெஞ்சு பலியாட்களாகியிருக்க 1799 வரை தொடர்ந்தது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 1792-ல் புரட்சி தீவிரவாத உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. மன்னன் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டான், மரண தண்டனை வழங்கப்பட்டது, குடியாட்சி அறிவிக்கப்பட்டது. மன்னன் ஜனவரி 21, 1793-ல் தூக்கிலிடப்பட்டான். அரசி மேரி அன்டாய்னெட்டுக்கு அக்டோபர் 16, 1793 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒத்துழைக்க விரும்பாத குருமார்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர். கொடுங்கோலாட்சியின் கீழ் வாழும் மற்றவர்களையும் அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அந்தப் புரட்சியாளர் உணர்ந்தனர். ஆனால் விடுவிப்பவர்கள்தாமே கொடுங்கோலராக ஆனார்கள்.
என்றபோதிலும், போரின் கொடிய விளைவுகளிலிருந்து எதுவும் விடுதலையைக் கொண்டுவரவில்லை. 3,00,000 ஆண்மகன்களைச் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நாட்டில் குழப்பம் ஆரம்பித்தது. மேற்கு ஃபிரான்சில் சிலுவையும் புனித இருதயமும் அடங்கிய ஒரு சின்னத்தின் கீழ் உயர்குடிக் கத்தோலிக்க சேனை ஒன்று உருவானது. இது நான்கு பிரதேசங்களிலுள்ள நகரங்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து குடியாட்சியின் ஆதரவாளர்களைப் படுகொலை செய்தது.
இந்தப் பிரச்னைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மத்திய அரசு ராபஸ்பியரைப் பிரதான உறுப்பினராகக் கொண்ட “பொதுமக்கள் பாதுகாப்புக் குழு”வுக்கு சர்வாதிகாரமளித்தது. கொடுமையே அரசின் நியதியாக இருந்தது. 1789 அறிக்கையில் அமைந்த உரிமைகள் பெரும்பாலும் மிதிக்கப்பட்டன. புரட்சியாளரின் தீர்ப்பு மன்றங்கள் மரண தண்டனைத் தீர்ப்புகளை அதிகமதிகமாக வழங்கின, தலை வெட்டும் கிலோட்டின் இயந்திரம் அதிகப் பிரபலமானது.
கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவு குறைக்கப்படுகிறது
1793-ன் இலையுதிர் காலத்திலிருந்து, புரட்சி அரசு கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவு குறைக்கப்படுவதற்கான மாபெரும் ஒரு திட்டத்தைத் தீட்டியது. தீயொழுக்கத்திற்கு விலகிய ஒரு “புதிய மனிதனை” உருவாக்குவது என்பதே இதன் நோக்கமாயிருந்தது. மக்களின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டதாகக் கத்தோலிக்க மதம் குற்றஞ்சாட்டப்பட்டது. சில சர்ச்சுகள் அழிக்கப்பட்டன, மற்றவை இராணுவத்தினர் குடியிருப்பாக மாற்றப்பட்டன. குருவர்க்கம் அவர்களுடைய பணியை விட்டுவிடவும் விவாகம் செய்து கொள்ளவும் வற்புறுத்தப்பட்டனர். மறுத்தவர்கள் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். சிலர் நாட்டைவிட்டு ஓடினர்.
கத்தோலிக்க மதத்திற்குப் பதிலாகப் பகுத்தறிவு மதம் இடம்பெற்றது. பகுத்தறிவை சிலர் ஒரு தேவதையாக, “தாயகத்தின் தாய்” என்பதாக நோக்கினர். பின்பு அதன் இடத்தை ராபஸ்பியர் ஏற்படுத்திய ஓர் இயற்கைச் சமயம் ஏற்றது. அவன் தன்னுடைய எதிராளிகளை நீக்கிவிட்டு கொடிய சர்வாதிகார ஆட்சியை நிறுவினான். இரத்தத்துக்கான அவனுடைய வேட்கை அவனுடைய சொந்த உயிரைப் பலிவாங்கியது. ஜூலை 28, 1794 அன்று கதறும் நிலையில் தன் தலை வெட்டப்படுவதற்காகக் கிலோட்டின் இயந்திரத்திற்கு அவன் இழுத்துச்செல்லப்பட்டான்.
அதன் பின்வந்த அரசியல்வாதிகள் ஏக சர்வாதிகார ஆட்சியைத் தவிர்க்க விரும்பினர். எனவே ஐந்து உறுப்பினரைக் கொண்ட ஒரு மேலாண்மைக் குழுவுக்கு அதிகாரத்தை வழங்கினர். ஆனால் போர் ஆரம்பிக்க, பொருளாதார நிலை படுமோசமான நிலையை அடைந்திட, ஒரு தனி நபராகிய நெப்போலியன் போனபார்ட்டுக்கு அதிகாரம் வழங்குவது அவர்கள் விருப்பத்துக்குரியதாயிருந்தது. மற்றொரு சர்வாதிகார ஆட்சிக்கு வழி திறந்து வைக்கப்பட்டது.
ஃபிரெஞ்சுப் புரட்சி பின்னர் மக்களாட்சியாகவும் சர்வாதிகார ஆட்சியாகவும் வளர்ந்த அரசு முறைகளுக்கு வித்திட்டது. அரசியல் வல்லமைகள் திடீரென ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் மதத்திற்கு எதிராக எழுந்தால் என்ன நேரிடும் என்பதையும் அது காண்பித்தது. இந்தக் காரியத்தில் அது வரவிருக்கும் காரியங்களுக்கு ஒரு முன் காட்சியாக அமையக்கூடும்.—வெளிப்படுத்துதல் 17:16; 18:1–24. (g89 12/22)
[பக்கம் 28-ன் படம்]
நாட்டர் டேம் தலைமை ஆலயத்தில் பகுத்தறிவுத் தேவதைக்கு நடைபெறும் ஒரு விக்கிரகாராதனைப் பண்டிகை
[படத்திற்கான நன்றி]
Bibliothèque Nationale, Paris
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
From an old engraving, by H. Bricher sc.