மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 2 அரசர்கள், நட்சத்திரங்களைப்போல், எழும்பி வீழ்ச்சியடைகின்றனர்
முடியரசு: ஓர் அரசர் அல்லது ஒரு பேரரசன் போன்ற, நாட்டின் பரம்பரை தலைவர் ஒருவரால் தலைமைதாங்கப்படும் ஓர் அரசாங்கம்; ராஜ்யம்: ஓர் அரசன் அல்லது ஓர் அரசியால் தலைமைதாங்கப்படும் முடியரசுசார்ந்த வகையான அரசாங்கம்; பேரரசு: தனி அரச அதிகாரத்தின்கீழ், பொதுவாய் ஒரு பேரரசனால் தலைமைதாங்கப்படும், பல தேசங்கள், நாடுகள், அல்லது ஜனங்கள் அடங்கிய ஒரு தொகுதியாலாகிய விரிவாக்கப்பட்ட பிராந்தியம்.
“சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், . . . இருந்த நாட்களில்.” இங்கே ஆதியாகமம் 14-ம் அதிகாரம் தொடங்குகையில், பைபிள் “ராஜா” என்ற சொல்லை முதல் தடவை பயன்படுத்துகிறது. சிலர் விவாதிக்கிறபடி, அம்ராப்பேல் பாபிலோனின் பிரசித்திப்பெற்ற அரசன் ஹமுரபிக்கு மற்றொரு பெயர்தானா என்பதை நாம் அறிந்தில்லை. நமக்குத் தெரிவதென்னவெனில், அவன் யாராயினும், மனித அரசாதிகாரத்தைப்பற்றிய எண்ணம் அம்ராப்பேலுடன் தொடங்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், நிம்ரோது, அரசன் என அழைக்கப்படாவிடினும், அரசனாக இருந்தானெனத் தெளிவாய்த் தெரிகிறது. உண்மையில், அவனே சரித்திரத்திலுள்ள முதல் மனித அரசன்.—ஆதியாகமம் 10:8-12.
அரசன் நிம்ரோது அல்லது அரசன் அம்ராப்பேலைக் குறிப்பிடும் கலைப்பொருட்கள் நமக்கு இல்லை என்பது உண்மையே. “என்மிபரகேசி, கீஷின் அரசனே, தன்னைப்பற்றி உண்மை உறுதிப்படுத்தும் கல்வெட்டு எழுத்துப்பொறிப்புகளையுடைய மிகப்பழைய மெசாப்பொத்தேமிய அரசன்,” என்று தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. மெசொப்பொத்தேமியாவிலிருந்த ஒரு பூர்வ நகர-நாட்டரசான கீஷிலிருந்தே “பெரிய மனிதன்” எனப் பொருள்படும் அரசன் என்பதற்குரிய சுமேரியச் சொல் வந்தது. என்மெபரகேசியின் ஆட்சிக்குரிய தேதி, பைபிள் காலக்கணக்குடன் வேறுபடுகிறபோதிலும், பைபிள் அனுமதிக்கும் காலப்பகுதிக்கு ஏறத்தாழச் சரியாயிருக்கிறது மேலும், அதிக முக்கியமாக, மனித ஆட்சியின் தொடக்க இடத்தை பைபிள் குறிப்பிடும் பூமியின் அதே பாகத்தில் வைக்கிறது.
ஒருவர் பெரும்பான்மை மூலம் ஒற்றுமை
சீனாவின் ஷாங், அல்லது இன், அரசர்குலம் பொ.ச.மு. 18-வது மற்றும் 16-வது நூற்றாண்டுகளுக்கிடையிலுள்ள ஒரு காலத்தில் தொடங்கினதெனப் பொதுவாய் எண்ணப்படுகிறது, எனினும் இந்தத் தேதிக்குறிப்பு நிச்சயமில்லாதது. எவ்வாறாயினும், முடியரசுகள் மனித அரசாங்கத்தின் மிகப்பூர்வ வகையானவை. அவை விரிவாகவும் பரவியுள்ளன.
ஆங்கிலத்தில் “மோனார்க்” (முடிமன்னர்) என்றச் சொல் “தனி” என பொருள்படும் மோ’னோஸ் மற்றும் “ஆட்சி” என பொருள்படும் ஆர்.க்கி’ என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து வருகிறது. அதன்படி, முடியரசு, தன் சொந்த உரிமையில் நாட்டின் நிலையான தலையாகச் சேவிக்கும் ஒரு தனி ஆளுக்கு உயர் அதிகாரத்தை வழங்குகிறது. சுயேச்சை ஆட்சி முடியரசில், அரசனின் சொல்லே சட்டம். அவனே ஒருவர் பெரும்பான்மை என்பதாகிறான்.
முடியரசுகள் தேசங்களை ஒன்றிணைய பற்றிவைப்பதில் உதவியானவையென எப்பொழுதும் கருதப்பட்டுள்ளது. “அது தனிப்பட்ட கட்சிகளுக்கு மேம்பட்டதால், முடியரசு ஏற்பாடு தம்முள் மாறுபட்ட மற்றும் முரண்பட்ட பகுதிகளுக்குரிய அக்கறைகளுக்குத் தகுந்ததாயிருந்ததென்று” இடைநிலைக்காலங்களில், அரசியல் கோட்பாடு “விவாதித்தது,” என இடைநிலைக்காலத்திய சரித்திரம் கற்பிக்கும் ஜான் H. முன்டி, விளக்குகிறார். இந்த “முரண்பட்ட பகுதிகளுக்கான அக்கறைகளுக்கு”ரிய பெரும் ஆட்சி எல்லைகள் அடிக்கடி இராணுவ கைப்பற்றுதலின் விளைவாக இருந்தன,
எப்படியெனில் அரசர்கள் மாறாது எப்பொழுதும் இராணுவத் தலைவர்களாயிருந்தனர். உண்மையில், போரில் வெற்றிப்பெறுவதே “வெற்றிகரமான அரசபதவிக்கு முதல் தனிச்சிறப்பு பண்படையாளமாகப் பொதுவாய்க் கருதப்பட்டது,” என்று சரித்திராசிரியன் W. L. வாரன் கூறுகிறார்.
இவ்வாறு, முடியரசு வகை அரசாங்கம், மகா அலெக்ஸாண்டரின்கீழ் கிரேக்கப் பேரரசு, இராயர்களின்கீழ் ரோமப் பேரரசு, மற்றும், மிகச் சமீபத்தில், பிரிட்டிஷ் பேரரசு போன்ற உலக வல்லரசுகளின் ஸ்தாபனத்துக்குச் சாதகமாயிருந்தது. கடைசியில் குறிப்பிடப்பட்டது, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதன் உச்சநிலையில், உலக ஜனத்தொகையின் ஏறக்குறைய கால்பாகத்தையும் அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பாகத்தையும் ஒரு தனி ஆட்சியாளரின்கீழ் ஒற்றுமைப்படுத்தியது.
மத அங்கிகளில் அரசபதவி
பூர்வ அரசர்கள் பலர் தெய்வபதவிக்குரிய உரிமைபாராட்டினர். சரித்திராசிரியன் ஜார்ஜ் சாபீன் குறிப்பிட்டபடி: “அலெக்ஸாண்டர் முதல்தொடங்கி, கிரேக்க அரசர்கள் கிரேக்க நகரங்களின் கடவுட்களுக்குள்ளும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டனர். தெய்வமாக்கப்பட்ட அரசன் கிழக்கில் உலகளாவ அறியப்படுபவனானான், முடிவில் அதை ரோமப் பேரரசர்கள் ஏற்கவேண்டியதாயிற்று.” அரசன் தெய்வத்தன்மை வாய்ந்திருப்பதில் கொண்டிருந்த இந்த நம்பிக்கை “ஒரு வகையிலோ மற்றொரு வகையிலோ நம்முடைய நவீன காலங்கள் வரையில்” ஐரோப்பாவில் தொடர்ந்து வந்துள்ளதென அவர் கூறுகிறார்.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில், அஸ்டெக் மற்றும் இன்க்கா நாடுகள் புனித முடியரசுகளென கருதப்பட்டன. ஆசியாவில் ஜப்பானின் பேரரசன் ஹீரோஹிட்டோ தான் சூரியத் தேவதையான அமெத்தரசு ஓமிக்காமியின் 124-வது மனித பரம்பரையாளன் என்ற தன் உரிமைபாராட்டலை 1946 வரையில் விட்டுவிடவில்லை.
எல்லா அரசர்களும் தெய்வபதவியை உரிமைபாராட்டாவிடினும், அவர்களில் பெரும்பான்மையர் தங்களுக்குத் தெய்வீக ஆதரவு உண்டென்றாவது வற்புறுத்திவந்தனர். பூமியில் கடவுளைப் பிரதிநிதித்துவஞ் செய்வதற்குத் தனிப்பட தெரிந்தெடுத்திருப்பது அதனுடன் தனிப்பட்ட குருத்துவ சக்தியைக் கொண்டுசென்றது. “அரசர்கள்தாமே குருத்துவ தன்மைவாய்ந்தவர்களென்ற பூர்வ எண்ணம் மேற்கத்திய நாடுகளினூடே பரவி, இளவரசனை அவனுடைய சர்ச்சின் ஆட்சிமுறைக்குரிய தலையாகவும் அப்போஸ்தல மேலாளனாகவும் ஆக்கின,”வென ஜான் H. முன்டி விளக்குகிறார். இது “[பொ.ச. நான்காம் நூற்றாண்டின்போது], சர்ச்சும் அரசாங்கமும் ஒன்றிணைந்த கான்ஸ்டன்டீனிய கூட்டுறவிலிருந்தும், பிளேட்டோகலவைக்கோட்பாட்டு எண்ணத்தைச் சர்ச் இணையாக ஏற்றதிலிருந்தும் வருவித்த” மதக் கருத்தாக இருந்தது. முடிசூட்டும் சமயத்தில் அளிக்கப்படும் மத ஆசீர்வாதம், மற்றப்படி குறைவுபடக்கூடிய சட்டப்படியான ஒரு நிலையால் அரசனின் ஆட்சியை மேன்மைப்படுத்தியது.
1173-ல், இங்கிலாந்து அரசன் ஹென்ரி II “தேவக்கிருபையாலாகிய அரசன்,” என்ற பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினான். இது பின்னால் அரசரின் தெய்வீக உரிமை என அறியப்பட்ட எண்ணத்துக்கு வழிநடத்தினது, அந்த அரசனின் அதிகாரம் பரம்பரையானதென பொருள்கொண்டது. பிறப்பின் விஷயத்தில் கடவுள் தம்முடைய தெரிவைக் காட்டினதுபோல் பாவிக்கப்பட்டது. 1661-ல், ஃபிரான்ஸின் லூயி XIV சர்வாதிபத்திய அரசாங்க அதிகாரத்தை மேற்கொள்வதால் இந்தக் கோட்பாட்டின் மிதமீறிய ஒரு தனிமுறை விளக்கத்தை செயற்படுத்தினான். எதிர்ப்பைத் தான் பிரதிநிதித்துவம் செய்த கடவுளுக்கு எதிரான பாவம் எனக் கருதினான். “L’ėtat c’estmoi! [நானே அரசாங்கம்],” என அவன் செருக்குடன் கூறிக்கொண்டான்.
ஏறக்குறைய அதே சமயத்தில் ஸ்காத்லாந்தில் இதற்கொப்பான எண்ணம் தோன்றியது. 1603-ல் ஜேம்ஸ் I ஆக இங்கிலாந்தின் அரசனாவதற்கு முன்னால் ஜேம்ஸ் VI ஆக ஸ்காத்லாந்தில் ஆளுகையில், இந்த முடியரசன் பின்வருமாறு எழுதினான்: “அரசர்கள் கடவுட்களென அழைக்கப்படுகின்றனர் . . . ஏனெனில் அவர்கள் பூமியிலுள்ள கடவுளுடைய சிங்காசனத்தின்மீது வீற்றிருக்கின்றனர், மற்றும் தங்கள் ஆட்சிமுறைக்குரிய கணக்கை அவருக்கு ஒப்புவிக்க வேண்டும்.” பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி அதிகாரங்கொடுப்பதற்கு எந்த அளவில் இந்த நம்பிக்கை ஜேம்ஸைத் தூண்டியியக்கியதென நமக்குத் தெரியாது. அதன் பலனை நாம் நிச்சயமாக அறிந்துள்ளோம், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு, இப்போதும் புராட்டஸ்டன்டுகள் விரிவாய்ப் பயன்படுத்துகின்றனர்.
சுயேச்சை முடியரசுகளின் சகாப்தம்
இடைநிலைக்காலங்களின் தொடக்கம் முதற்கொண்டு, முடியரசுகளே அரசாங்க வகையாக இருந்தன. அரசர்கள் முதன்மைவாய்ந்த நில உரிமையாளர்களுக்கு அதிகாரம் கொடுப்பதன்மூலம் கீழ்த்தரமான மற்றும் வசதியான ஆளும் முறை ஒன்றை உருவாக்கினர். இவர்கள், தங்கள் முறையாக, நிலப்பண்ணை உரிமை முறை என அறியப்பட்ட அரசியல் மற்றும் இராணுவ ஒழுங்குமுறையை ஏற்படுத்தி வைத்தனர். இராணுவ மற்றும் வேறு சேவைகளுக்கு பரிமாற்றமாக, இந்த நில உரிமையாளர்கள் தங்கள் குத்தகைக்காரர்களுக்கு நிலத்தைக் கொடுத்தனர். ஆனால் மிகத்திறமைவாய்ந்த மற்றும் வல்லமைவாய்ந்த பண்ணை நில உரிமையாளர்கள் பெரும்பாலும் இனி இருக்கப்போகிற ராஜ்ய ஆக்கப் பண்ணை உரிமை அதிகாரக் கட்சி பிரிவுகளாகப் பிரிந்தனர்.
இதுமட்டுமல்லாமல், இந்தப் பண்ணை நிலவுரிமை முறை குடிமக்களிடமிருந்து அவர்களுடைய மதிப்பையும் சுதந்திரத்தையும் பறித்துக்கொண்டது. இராணுவ நில உரிமையாளர்கள் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்தினர், இந்த நில உரிமையாளர்களின் வருமானத்துக்கு அவர்கள் முக்கியமாய்ப் பொறுப்புள்ளோராய் இருந்தனர். கல்வி மற்றும் நாகரிக பண்பாட்டு வாய்ப்புகள் இல்லாமற்போகச் செய்திருக்க, “பண்ணையாளுக்கு தன்னை ஆளும் பண்ணைநில உரிமையாளருக்கு எதிராகச் சட்டப்படி செயற்படுத்தக்கூடியதற்கு இருந்த உரிமைகள் மிகச் சொற்பமே,” என காலியர்ஸ் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது. “அவன் மணம் செய்து, தன் கட்டுக் குத்தகை நிலத்தை வாரிசுகளுக்குக் கடத்த முடியாது, நில உரிமையாளரின் சம்மதமில்லாமல் அந்தப் பண்ணைமுறையாட்சி நிலத்தைவிட்டுச் செல்லவும் முடியாது.”
சுயேச்சை முடியரசுகளில், இது மாத்திரமே ஆளும் ஒரே முறையல்ல. சில அரசர்கள் ஆட்சிநிர்வாக பதவிபொறுப்புகளைச் சில நபர்களுக்கு வழங்கினர், பின்னால், அவசியமென்று எண்ணினால், இவர்கள் பொறுப்பிலிருந்து விலக்கப்படக்கூடிய நிலையிலிருந்தனர். மற்ற அரசர்கள் உள்ளூர் அரசாங்கத்தை பொதுமக்கள் பாராட்டுக்குரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தனர், அவை, வழக்கம் மற்றும் சமுதாய தேவை நெருக்கடிகளுக்குரிய வழிவகைகளைக் கொண்டு ஆண்டன. ஆனால் இந்த எல்லா முறைகளும் ஒரு வகையிலோ மற்றொரு வகையிலோ திருப்தியற்றவையாக இருந்தன. இருப்பினும், இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ராபர்ட் ஃபில்மர் மற்றும் ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜாக்குவஸ்-பெனிக்னி போஸட் போன்ற, 17-வது நூற்றாண்டு எழுத்தாளர்கள், சுயேச்சை முறையையே தகுந்த ஒரேவகையான அரசாங்கமென இன்னும் சிபாரிசு செய்தனர். எனினும் அதன் நாட்களும் முடிவடைந்தன.
“கடவுட்கள்” பொம்மைத் தலைவர்கள்நிலைக்குக் குறைக்கப்பட்டனர்
முடியரசர்கள் கடவுளுக்கு மாத்திரமே உத்தரவாதமுள்ளவர்களென்ற பொது நம்பிக்கை இருந்தபோதிலும், அவர்களை மனித சட்டங்களுக்கும், வழக்கங்களுக்கும், அதிகாரங்களுக்கும் உத்தரவாதமுள்ளவர்களாக்க நீண்டகாலமாக வற்புறுத்தும் அழுத்தம் வளர்ந்துகொண்டேயிருந்தது. 18-வது நூற்றாண்டுக்குள், “முடியரசர்கள் பதினேழாவது நூற்றாண்டு தனியுரிமை அரசர்களிலிருந்து வேறுபட்ட கலைமுறையைப் பயன்படுத்தினர்,” என்று கொலம்பியா உலக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் கூறி, எனினும் “அந்த வேறுபட்ட கலைமுறைக்கு அடியிலும் பின்னாலும் அவர்கள் இன்னும் தனியுரிமை அரசர்களாயிருந்தனர்,” என மேலும் சேர்க்கிறது. பின்பு “மகா ஃபிரெட்ரிக் தன்னை ‘நாட்டின் முதல் ஊழியன்’ என அழைத்து அரசர்களின் தெய்வீக உரிமையை ஏற்க மறுத்தபோது, அவன் அதிகாரத்தைக் கைவிடுவதைப்பற்றி எண்ணவில்லை,” என விளக்குகிறது.
இருப்பினும், இங்கிலாந்தில் நடந்த 1688-ன் புரட்சிக்கும் 1789-ன் ஃபிரெஞ்ச் புரட்சிக்கும் பின், பெரும் பாகமாக சுயேச்சைக்குரிய நாள் முடிந்துவிட்டது, சட்டமியற்றும் குழுக்கள் அல்லது அரசியலமைப்புகள், அல்லது இரண்டையுமே கொண்டு சுயேச்சை முடியரசுகள் வரம்புக்குட்படுத்தப்பட்ட முடியரசுகளுக்குப் படிப்படியாய் இடமளித்தன. “அரசபதவி ஓர் அரசன் அதை உண்டாக்கும் திறமைக்கேற்றபடியும் அவனுடைய குடிமக்கள் ஏற்க ஆயத்தமாயிருந்ததற்கேற்றபடியும் இருந்த” 12-வது நூற்றாண்டுக்கு மாறாக, சரித்திராசிரியன் W. L. வாரன் சொன்னபடி, இன்று பெரும்பான்மையான அரசர்களின் மற்றும் அரசிகளின் அரசியல் அதிகாரம் பேரளவு வரம்புக்குட்பட்டுள்ளது.
நிச்சயமாகவே, முடியரசர்கள் சிலர் இன்னும் சிறிதளவு மேம்பட்ட அதிகாரத்தைச் செலுத்துகின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பான்மையர் “தெய்வப்பதவிக்”குரிய தங்கள் ஒளிவட்டங்களை இழந்து வெகு காலமாகிவிட்டது மற்றும் பொம்மைத்தலைவர்களாக, அரசப்பற்றுதலான ஆவியில் அதைச் சுற்றித் திரண்டுவரும்படி மக்களை ஊக்கப்படுத்தக்கூடிய மத்திய வல்லமைக்குரிய உருவங்களாகச் சேவிப்பதோடு திருப்தியுடனிருக்கின்றனர். வரம்புக்குட்பட்ட முடியரசுகள், உண்மையான அதிகாரத்தைச் சட்டமியற்றும் குழுவுக்கு வழங்குவதால் ஒரேமனிதன் ஆட்சிக்குரிய எதிர்மறையான அம்சங்களை முற்றிலும் தொலைத்தொழிக்கையில், அதன் ஒற்றுமைப்படுத்தும் அம்சங்களை விடாது காத்துவைக்க முயன்றுள்ளனர்.
வரம்புக்குட்பட்ட முடியரசுகளைப்பற்றிய எண்ணம் இன்னும் பொதுவாய் விரும்பப்படுவதாயுள்ளது. 1983 ஆகிய இவ்வளவு சமீபத்திலும், நேபாலில் நேபால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய், ‘நாட்டை ஒற்றுமைப்பட்டதாய் வைக்க அரசன் இன்றியமையாதத் தேவை’ என்று சொல்லி ‘குழப்பத்துக்கு எதிரான தடங்கலாக’ முடியரசின் சார்பாகப் பேசினார். 1987-ல் ஃபிரெஞ்சுக்காரர்கள் ஃபிரெஞ்ச் புரட்சியின் 200-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்துக்காக முடிவான ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தபோதிலும், தேர்தலில் வாக்களித்தவர்களில் 17 சதவீதம் முடியரசு திரும்ப வருவதை ஆதரித்தனர். முடியரசை ஆதரித்தத் தொகுதியின் ஓர் உறுப்பினர் பின்வருமாறு கூறினார்: “அரசியல் சச்சரவால் இவ்வளவு காலம் பிரிவுற்ற ஒரு ஜனத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரே வழி அரசனைக் கொண்டிருப்பதே.”
அதே ஆண்டில், டைம் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: “அரசர் அதிகாரம் அரசப்பற்றைச் செயற்படச் செய்கிறது ஒருவேளை முடியரசர்கள் நம்முடைய உலகியல்சார்ந்த சகாப்தத்தின் கடைசி பெரும் உருவச்சிலைகளாக இருப்பதனாலாகும், புதிர்நிலையில் வாழ்கையில் இன்னும் நம்பிக்கை எழுச்சியூட்டக்கூடிய, உயிர் உருவங்களைப் பார்க்கிலும் பெரியதான அந்த ஒரே உருவம். கடவுள் மரித்துவிட்டாரெனில், அரசி நீடூழி வாழ்க!” ஆனால் பின்பு காரியங்களை மேலுமதிக நடைமுறை மெய்ம்மையில் கருதி, “[பிரிட்டிஷ்] அரசியின் உயர் அரசவல்லமை பெரும்பாலும் அவளுடைய மினுமினுக்கும் வல்லமையில்லாமையில் தங்கியிருக்கிறது,” என்று அது மேலும் கூறியது.
குறைவுபடுவோராய்க் காணப்பட்டனர்
சுயேச்சை குடியரசுகள் திருப்தியற்றவை. அவற்றின் இயல்பில்தானே, அவை நிலையற்றவை. சீக்கிரத்திலோ பிந்தியோ, ஒவ்வொரு அரசனும் மரிக்கிறான் ஒரு வாரிசு அவனிடத்தை ஏற்கவேண்டும், இவன் உயர் ஒழுக்கநெறிகளின் அல்லது திறமையின் காரணமாக அல்ல பரம்பரை உரிமையினிமித்தமே பெரும்பாலும் தெரிந்தெடுக்கப்படுகிறான். குமாரன் தன் தகப்பனைப்போல் அவ்வளவு நல்ல முறையில் இருப்பானென யார் உறுதியளிக்க முடியும்? அல்லது தகப்பன் கெட்டவனாயிருந்தானெனில், அவனுடைய குமாரன் எவ்வாறாவது மேம்பட்டிருப்பானென்பதற்கு என்ன உறுதியுண்டு?
மேலும் கிறிஸ்டியானோ கிரோட்டனெல்லி குறிப்பிட்டுக் காட்டுகிறபடி, “அரச வாரிசின் தெரிவு” அடிக்கடி “திட்டமற்ற முறையில் வகுத்துரைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அரச வழிமரபிலுள்ள தகுதிபெற்ற உறுப்பினருக்குள் போட்டி ஏற்படலாம். அரசனின் மரணத்தைப் பின்தொடர்ந்து வரும் காலப்பகுதி இவ்வாறு, உண்மையாயும் அடையாளக்குறிப்பாயும், பொதுவாய் சமுதாய (மற்றும் ஒழுங்கமைதி) பெருங்குழப்பக் காலப்பகுதியாயுள்ளது.”
ஒருவனின் ஆட்சியாயிருப்பதால், சுயேச்சை முடியரசின் பயனுறுதி அதன் அரசனாக இருக்கும் அந்த ஒருவனின் பயன்தரும் திறமையின்பேரில் சார்ந்துள்ளது. அவனுடைய தனித்திறமைகளும் தனிச் சிறப்பியல்புகளும் அவனுடைய அரசாங்கத்தில் பிரதிபலித்துக்காட்டப்படலாம் ஆனால் அவனுடைய பலவீனங்கள், மட்டுப்பாடுகள், மற்றும் அறிவு குறைவுங்கூட அவ்வாறு பிரதிபலிக்கப்படும். பிரசித்திப்பெற்ற உயர்குடி மரபினருங்கூட அபூரணரே. சீர்கேடான அரசர்கள் சீர்கேடான அரசாங்கங்களை ஏற்படுத்தி வைக்கின்றனர், நல்ல அரசர்கள் மேம்பட்டவற்றை ஒருவேளை ஏற்படுத்தலாம், ஆனால் ஒரு பரிபூரண அரசர் மாத்திரமே மனிதவர்க்கம் ஆவலோடு ஏங்கும் மற்றும் உடையதாயிருப்பதற்குத் தகுதியுள்ள வகையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும்.
சட்ட மாமன்றக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட அல்லது வரம்புக்குட்பட்ட முடியரசுகளும் குறைவுபடுகின்றன. பிரிட்டிஷ் கூட்டரசில், இங்கிலாந்தின் பெயரளவில் தலைவர்களான அரசர்களும் அரசிகளும் இந்த உலகம் கண்டுள்ள எதற்கும் மேலாக மிகப் பெரியதும் மிக அதிக வல்லமைவாய்ந்ததுமான பிரிவுகளடங்கிய பேரரசின்மீது தலைமைதாங்குவதை இந்த நூற்றாண்டு கண்டுள்ளது.
வேறு வகையான ஒரு நட்சத்திரம்
அரசர்கள், நட்சத்திரங்களைப்போல், எழும்பி வீழ்ச்சியடைகின்றனர்—இதில் ஒரே ஒரு விதிவிலக்குள்ளது. இயேசு கிறிஸ்து, தம்மைக் குறித்து, “தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்” எனக் கூறுகிறார். (வெளிப்படுத்துதல் 22:16) அரசன் தாவீதின் நேரடியான சந்ததியாராயிருந்ததனால், இயேசு கடவுளுடைய தெய்வீக அரசாங்கத்தின் அரசனாயிருப்பதற்குத் தகுதிபெற்றுள்ளார். “பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திர”மாக, இயேசு, உதித்து அந்த நாளின் பொழுது விடியச் செய்யும் என பேதுரு கூறின “விடிவெள்ளி”யாகவும் இருக்கிறார்.—2 பேதுரு 1:19; எண்ணாகமம் 24:17; சங்கீதம் 89:34-37.
இந்த உண்மைகளைக் கருதுகையில், வழிநடத்துதலுக்காக, மனித முடியரசுகளின் வீழ்ச்சியடையும் நட்சத்திரங்களை நோக்கியிருப்பது எவ்வகையில்தான் ஞானமாயிருக்கும்? அதற்கு மாறாக, நாம் நம்முடைய நம்பிக்கைகளைக் கடவுள் நியமித்துள்ள “ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் [மனித அரசர்கள் எல்லாருக்கும் மேம்பட்டவராய்], சாவாமையுள்ளவரு”மான அரசர் இயேசு கிறிஸ்துவினிடமே பற்றுதலாயிருக்கச் செய்யும்படி ஞானம் கட்டளையிடும். (1 தீமோத்தேயு 6:15, 16) அவர் காணக்கூடாத அரசராக பரலோகங்களில் ஏற்கெனவே எழும்பியிருப்பதால், புதிய உலகத்தின் விடியற்காலத்தைச் சீக்கிரத்தில் கொண்டுவருவார். அவர் ஒரு நட்சத்திரம்—ஓர் அரசர்—இப்பொழுது அவர் எழும்பியிருக்கிறார், ஒருபோதும் வீழ்ச்சியடையார்! (g90 8/22)
[பக்கம் 13-ன் படம்]
மரிக்கையில் மிகச் சிறந்த மனித அரசனும் தன் வேலையை நிச்சயமில்லாதோர் கைகளில் விட்டுச் செல்கிறான்