உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 5/8 பக். 22-25
  • பகுதி 4 “மக்களாகிய நாம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 4 “மக்களாகிய நாம்”
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஜனநாயகம் தொட்டில் நிலையைக் கடந்துவிட்டது
  • குடியரசுகள்
  • ஒப்பிடுகையில்தான் சிறந்ததா?
  • இடுகாடு நோக்கி?
  • தீமை வென்றுவிட்டதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • பகுதி 8 இரும்பும் களிமண்ணிலுமான ஓர் அரசியல் கூட்டு
    விழித்தெழு!—1992
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • நமக்கு அரசாங்கம் உண்மையிலேயே தேவையாயிருக்கிறதா?
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 5/8 பக். 22-25

மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது

பகுதி 4 “மக்களாகிய நாம்”

ஜனநாயகம்: மக்களாலான அரசு, ஆட்சி நேரடியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ செலுத்தப்படுவது.

“ஐக்கிய மாகாணங்களின் மக்களாகிய நாம் . . . இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்தி நிறுவுகிறோம்.” ஐ.மா. அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் இந்த ஆரம்ப வார்த்தைகள் பொருத்தமானவை, ஏனென்றால் ஐக்கிய மாகாணங்களின் ஸ்தாபகர்கள் அது ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். கிரேக்க மூலத்தையுடைய “ஜனநாயகம்” என்ற சொல் “மக்களாட்சி” என்பதை குறிக்கிறது, அல்லது ஐக்கிய மாகாணங்களின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் விவரித்தபடி: “மக்களாலான, மக்கள் மூலமான, மக்களுக்கான அரசாங்கம்.”

ஜனநாயகத்தின் தொட்டில் என்று பெரும்பாலும் அழைக்கப்படும் பூர்வீக கிரீஸ், அதன் நகர-அரசுகளில், குறிப்பாக ஏத்தன்ஸில், பொ.ச.மு. ஐந்தாவது நூற்றாண்டிலேயே மக்களாட்சி முறை நிலவியதாக பெருமைப்பாராட்டுகிறது. ஆனால் அன்றைய ஜனநாயகம் இன்றைய ஜனநாயகமாக இருக்கவில்லை. ஒன்று, கிரேக்க குடிமக்கள் ஆட்சிபுரிவதில் அதிக நேரடியாக உட்பட்டிருந்தனர். ஒவ்வொரு குடிமகனும் நடப்புப் பிரச்னைகளைக் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஆண்டு முழுவதும் கூடின ஒரு மக்களவையின் பாகமாக இருந்தனர். வெறுமென அநேகருடைய வாக்கெடுப்பின் மூலம் அந்த அவை நகர-அரசின் அல்லது சமுதாயத்தின் அரசியலைத் தீர்மானித்தது.

எனினும், பெண்கள், அடிமைகள் மற்றும் பரதேசிகள் அரசியல் உரிமைகளைக் கொண்டிருப்பதிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர். இப்படியாக, அத்தேனே ஜனநாயகம் சிலாக்கியம்பெற்ற ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்கக்கூடியதாயிருந்த ஓர் உயர்குடி ஜனநாயகமாக இருந்தது. மக்கள்தொகையில் பாதிபேர் முதல் ஐந்தில் நான்கு பகுதியினர் மட்டும் அரசியல் விவகாரங்களில் குரல் கொடுக்க முடியாதவர்களாய் இருந்தனர்.

இருந்தபோதிலும், இந்த ஏற்பாடு பேச்சு சுயாதீனத்தை அளித்தது, ஏனென்றால், வாக்குரிமையுடைய குடிமக்கள் தீர்மானங்கள் செய்யப்படுவதற்கு முன்பு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அரசியல் பதவிகள் குறிப்பிட்ட உயர்தரப்பினருக்கு மட்டும் அல்லாமல், குடியுரிமையுடைய ஒவ்வொரு ஆண்மகனுக்கும் திறந்திருந்தன. தனிப்பட்டவர்களும் தொகுதியினரும் அரசியல் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதைத் தடை செய்வதற்கு ஒரு கட்டுப்பாட்டு முறை வடிவமைக்கப்பட்டிருந்தது.

“அத்தேனியர் தங்கள் ஜனநாயகத்தில் பெருமையடைந்தனர்,” என்று சரித்திராசிரியர் D. B. ஹீட்டர் கூறுகிறார். “அது முழுமையான, பரிபூரண வாழ்வுக்கு முடியாட்சி அல்லது உயர்குடியாட்சியைக் காட்டிலும் ஒரு படி அருகாமையில் இருந்ததாக அவர்கள் நம்பினர்.” தெளிவாகவே ஜனநாயகம் ஒரு நல்ல ஆரம்பத்தைக் கண்டது.

ஜனநாயகம் தொட்டில் நிலையைக் கடந்துவிட்டது

நியு இங்கிலாந்து, அ.ஐ.மா.வில், நகர கூட்டங்களில் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவில் சுவிட்ஸர்லாந்தில் உள்ள சில மாகாணங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறதைத் தவிர நேரடியான, அல்லது தூய்மையான ஜனநாயகம் இனிமேலும் இல்லை. நவீன தேசங்களின் அளவையும், லட்சக்கணக்கான குடிமக்களையும் கவனிக்கும்போது, இந்த முறையில் ஆளுகை சட்டநுணுக்கத்தின் அடிப்படையில் கூடாததாயிருக்கும். மற்றும், இன்றைய சுறுசுறுப்பான உலகில் மணிக்கணக்கான அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதற்கு வேண்டிய நேரத்தை எத்தனை குடிமக்கள் கொண்டிருக்கக்கூடும்?

ஜனநாயகம் இப்பொழுது வாதத்துக்கிடமான ஒரு பெரிய ஆளாகிவிட்டது—பல முகங்களுடைய ஒன்றாகிவிட்டது. டைம் பத்திரிகை விளக்குகிறது: “உலகத்தை இப்பொழுது ஜனநாயகத் தொகுதி, ஜனநாயகமாயிராத தொகுதி என்று பிரித்திடுவது கூடாத காரியமாய் இருக்கிறது. சர்வாதிகார ஆட்சியில் அடக்குமுறைகளில் வித்தியாசங்கள் இருப்பது போன்று ஜனநாயகங்கள் என்று சொல்லப்படுவதிலும் தனிநபரின் சுதந்திரம், பல்பதவிவாதம் மற்றும் மனித உரிமைகளிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன.” என்றபோதிலும், பெரும்பான்மையான ஆட்கள் மக்களாட்சி அரசுகளில் தனிப்பட்ட சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகளுக்கான மதித்துணர்வு மற்றும் சட்டத்தின் மூலம் நீதி போன்ற சில அடிப்படைக் காரியங்களைக் காணும் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

நேற்றைய நேரடியான ஜனநாயகம் இன்றைய பிரதிநிதித்துவ ஜனநாயகமாக ஆகியிருக்கிறது. சட்டத் தொகுதியினர், ஒற்றை அவையினையுடைய, அதாவது ஒரு குழுவாலான அல்லது ஈரவையுடைய, இரண்டு குழுக்களாலான சட்டத்தொகுதியினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட—அல்லது மற்றவகையில் நியமிக்கப்பட்ட—தனி நபர்களாலானவர்கள். அவர்களுடைய நன்மைக்காக அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து சட்டங்கள் இயற்றுவதற்காக இருக்கவேண்டும்.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினிடமான ஒரு போக்கு இடைக்காலத்தில் ஆரம்பித்தது. 17-வது மற்றும் 18-வது நூற்றாண்டுகளில், மக்னா சார்டா போன்ற 13-வது நூற்றாண்டு நிறுவனங்களும், இங்கிலாந்து பாராளுமன்றமும், மனிதரின் சமத்துவம், இயல்பான உரிமைகள், மக்களுடைய ஆட்சியுரிமை ஆகியவற்றைக் குறித்த அரசியல் கொள்கைகளுடன் சேர்ந்து அதிகப்படியான அர்த்தத்தைப் பெறலாயின.

“ஜனநாயகம்” என்ற பதம் 18-வது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் சிலரால் ஐயத்தோடு நோக்கப்பட்ட போதிலும், பொது வழக்கில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறது: “1787-ல் ஐக்கிய மாகாணங்களின் சட்ட அமைப்புச் சாசன அமைப்பாளருங்கூட மக்களைப் பெரிய அளவில் அரசியலில் உட்படுத்துவதைக் குறித்து செளகரியமாக உணரவில்லை. அவர்களில் ஒருவர் எல்பிரிட்ஜ் கெரி ஜனநாயகத்தை ‘அனைத்து அரசியல் கேடுகளிலும் மிகவும் மோசமானது’ என்று அழைத்தார்.” பொறுக்க முடியாதவராய், ஜான் லாக் போன்ற ஆங்கிலேயர், அரசு மக்களுடைய அங்கீகரிப்பில் இருக்கிறது, அவர்களுடைய இயல்பான உரிமைகள் புனிதமானவை என்று தொடர்ந்து வாதாடினார்.

குடியரசுகள்

அநேக ஜனநாயகங்கள் குடியரசுகளாக இருக்கின்றன, அதாவது ஒரு மன்னனைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நாட்டிற்கு ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள், பெரும்பாலும் ஒரு ஜனாதிபதியைக் கொண்டிருக்கும். உலகின் முதல் குடியரசுகளில் முதன்மையானவற்றில் ஒன்று பூர்வீக ரோம், ஆனாலும் அதன் மக்களாட்சி உரிமை கட்டுப்பட்டதாக இருந்தது. என்றபோதிலும், பகுதி ஜனநாயகக் குடியாட்சி முடியாட்சிக்கும் ரோம சாம்ராஜ்யத்துக்கும் வழிவிடுவதற்கு முன் 400 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவந்தது.

குடியரசுகள்தானே இப்பொழுது பொதுவாக இருந்துவரும் அரசுமுறை. 1989-ம் ஆண்டு பார்வைக் குறிப்புப் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் 219 அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் அனைத்துமே பிரதிநிதித்துவ ஜனநாயகமாக இல்லாவிட்டாலும் 127 குடியரசுகளாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது, உண்மையில், குடியரசு ஆட்சி வகைகள் ஏராளமாயிருக்கிறது.

சில குடியரசுகள் தனியொரு அரசு முறைகளைக் கொண்டது, அதாவது ஒரு பலமான மைய அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மற்றவை கூட்டரசு முறைகளைக் கொண்டவை, அதாவது இரு நிலைகளில் இயங்கும் அரசுக்கு இடையே அதிகாரம் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. பெயர் சுட்டிக்காட்டுவது போல், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் கூட்டரசுமுறை என்றறியப்பட்டிருக்கும் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வகையைக் கொண்டிருக்கிறது. தேசிய அரசு மொத்தமாக தேசத்தின் அக்கறைகளைக் கவனித்திட, மாநில அரசுகள் பிராந்திய தேவைகளைக் கையாளுகின்றன. இந்தப் பரந்த சொற்களுக்குள் பல வகைகள் இருக்கின்றன.

சில குடியரசுகள் பொதுத் தேர்தல்களை நடத்துகின்றன. அவற்றின் குடிமக்களுக்குப் பல அரசியல் கட்சிகளும், அவற்றின் வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது, அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மற்ற குடியரசுகள் பொதுத் தேர்தலை தேவையற்றதாகக் கருதுகின்றனர், உற்பத்திக்குரிய வாய்ப்புவழியின் கூட்டு உரிமத்தை ஊக்குவித்தல் போன்ற மக்களுடைய ஜனநாயக விருப்பம் மற்ற வழிகளில் நிறைவேற்றப்படலாம் என்று வாதாடுகின்றனர். பூர்வீக கிரீஸ் இதற்கு ஒரு முன்னோடி, ஏனென்றால் அங்கும்கூட பொதுத் தேர்தல் அறியப்படாதிருந்தது. நிர்வாகிகள் சீட்டுப்போட்டு தெரிந்துகொள்ளப்பட்டு, பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஓராண்டு காலப்பகுதிக்கு மட்டும் சேவை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அரிஸ்டாட்டில் தேர்தல்களுக்கு எதிராக இருந்தார், அவை “சிறந்த மக்களைத்” தெரிந்துகொள்வதில் மேற்குடிக்கூறு நுழைந்துவிடுவதைக் கூடியகாரியமாக்கிற்று என்று சொல்கிறார். என்றபோதிலும், ஜனநாயகம் என்பது வெறுமென “சிறந்த” மக்களால் அல்ல, ஆனால் எல்லா மக்களாலும் ஆன அரசாங்கமாக இருக்க வேண்டும்.

ஒப்பிடுகையில்தான் சிறந்ததா?

பூர்வ ஏத்தென்ஸில்கூட, ஜனநாயக ஆட்சி முரண்கருத்துக்குட்பட்ட ஆட்சியாக இருந்தது. பிளாட்டோவுக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஜனநாயக ஆட்சி பலவீனமானதாய்க் கருதப்பட்டது, ஏனென்றால், கிளர்ச்சியூட்டும் தலைவர்களின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளால் அறியாத தனிநபர்கள் கைகளில் இருந்தன. மக்களாட்சி, கலகக்கும்பலின் ஆட்சியைவிட மேன்மையானதல்ல என்பது சாக்ரட்டீஸ் கருத்து. பூர்வீக கிரேக்க தத்துவஞானிகளில் பிரபல திரியேகத்தில் மூன்றாவதான அரிஸ்டாட்டில், “ஒரு ஜனநாயகம் எந்தளவுக்கு அதிக ஜனநாயகமாக ஆகிறதோ, அந்தளவுக்கு அது ஒரு கலகக்கும்பலால் ஆளப்படும் வாய்ப்பு இருக்கிறது, . . . கொடுமையினிடமாகச் சீரழிந்துவிடும்,” என்று அரசியல் கொள்கையின் சரித்திரம் என்ற நூல் கூறுகிறது.

மற்ற குரல்களும் இதுபோன்ற அவநம்பிக்கையைத் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜனநாயக ஆட்சியை நல்லது என்று அழைக்கிறார், ஆனால் இந்த விளக்க வார்த்தைகளைக் கூட்டினார்: “இதை நான் சொல்லுவதற்குக் காரணம், மற்ற ஆட்சிமுறைகள் மிக மோசமானவை.” ஆங்கில சமய குருவும் எழுத்தாளருமான வில்லியம் ரால்ஃப் இன்ஜ் ஒருமுறை எழுதினார்: “ஜனநாயகம் நல்லது என்று அல்ல, ஆனால் மற்ற எதைக் காட்டிலும் குறைந்த கேடுள்ளதாய் இருக்கிறது என்று நியாயமாகவே தற்காக்கப்படும் ஓர் அரசு முறை.”

ஜனநாயகத்திற்குப் பல பலவீனங்கள் உள்ளன. முதலில், அது வெற்றிபெற வேண்டுமானால், தனிநபர்கள், தங்களுடைய சொந்த நலனைக் காட்டிலும், பெரும்பான்மையினரின் நலனை முன்வைக்கத் தயாராயிருக்க வேண்டும். இது தனிப்பட்டவிதத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத காரியமாக இருந்தாலும், வரிவிதிப்புத் திட்டங்களை அல்லது தேசத்திற்கு மொத்தத்தில் நன்மையாக இருக்கக்கூடிய மற்ற சட்டங்களை ஆதரிப்பதைக் குறிக்கக்கூடும். அப்படிப்பட்ட தன்னலமற்ற அக்கறையை ஜனநாயக “கிறிஸ்தவ” தேசங்களிலுங்கூட காண்பது அரிது.

பிளாட்டோ மற்றொரு பலவீனத்தைக் கண்டார். அரசியல் கொள்கையின் சரித்திரம் கூறுகிறபடி “அரசியல் தலைவர்களின் அறியாமை மற்றும் திறமையின்மை ஜனநாயகங்களின் விசேஷ சாபமாக இருக்கிறது,” என்று அவர் தாக்கினார். அநேக அரசியலைப் பிழைப்பாகக் கொண்ட அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் சேவிப்பதற்கான தகுதியும் திறமையும் வாய்ந்த ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாததில் வருத்தம் காண்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுங்கூட அரசியலில் அனுபவமற்று இருப்பவர்களைவிட சற்றே மேலானவர்களாக இருக்கக்கூடும். இந்தத் தொலைக்காட்சி யுகத்தில், ஒரு வேட்பாளரின் நிர்வாகத் திறமைகள் சம்பாதித்துத்தராத வாக்குகளை அவருடைய தோற்றமும் கவர்ச்சியும் சம்பாதித்து வெற்றியைத் தேடித்தரக்கூடும்.

ஜனநாயகங்களின் மற்றொரு குறை, அவை மெதுவாகச் செல்பவை. ஒரு சர்வாதிகாரி பேசுகிறான், காரியங்கள் நடந்தேறுகிறது! ஜனநாயக நாடுகளில் முடிவற்ற வாக்குவாதங்களால் முன்னேற்றம் மெதுவாக ஆகக்கூடும். உண்மைதான், முரண்பட்ட பிரச்னைகளை முழுவதுமாய்க் கலந்தாராய்தல் திட்டவட்டமான நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. என்றபோதிலும், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கிளெமன்ட் அட்லீ ஒருசமயம் குறிப்பிட்டார்: “ஜனநாயகம் என்பது கலந்துபேசுதல் மூலம் அமைந்த அரசு என்று பொருள்படுகிறது, ஆனால் மக்கள் பேசுவதை நீங்கள் நிறுத்தினால் மட்டுமே அது திறம்பட இயங்கமுடியும்.”

பேசுவது நின்ற பின்புங்கூட, தீர்மானங்கள் எந்தளவுக்கு “மக்கள்” விருப்பத்தை உண்மையிலேயே பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும் என்பது விவாதத்துக்குரியதே. பிரதிநிதிகள் தங்கள் தொகுதியின் பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனரா, அல்லது அநேக சமயங்களில் நடப்பதுபோல் தங்களுடைய எண்ணங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனரா? அல்லது, தங்கள் அரசியல் கட்சியின் கொள்கையை அப்படியே ஆதரிக்கின்றனரா?

ஊழலைத் தடுப்பதற்கு ஒரு சோதனை மற்றும் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டிருக்கும் ஜனநாயக நியமம் ஒரு நல்ல கருத்தாகக் கருதப்படுகிறது, ஆனால் அது திறம்பட செயல்படுவதோ அரிதாயிருக்கிறது. 1989-ல் டைம் பத்திரிகை “எல்லா நிலைகளிலும் அரசின் சீரழிவு” குறித்துப் பேசியது; முன்னிலையில் இருக்கும் ஒரு ஜனநாயக அரசை “பெருத்துவிட்ட, திறமையற்ற, உதவியற்ற இராட்சதன்” என்று அழைத்தது. இன்னொரு அரசாங்கத்தில் வீணாக்கப்படும் காரியங்களை ஆய்வு செய்ய 1980-களின் மத்தியில் அமைக்கப்பட்ட ஒரு பணிக் குழுவின் தலைவர் வருத்தப்பட்டு இப்படியாகத் தெரிவிக்கத் தூண்டப்பட்டார்: “அரசாங்கம் மோசமாக இயங்குகிறது.”

இவை உட்பட மற்றநேக காரணங்களுக்காக, ஜனநாயக அரசுகள் சரியான அரசுகள் என்று அழைக்கப்பட முடியாது. 17-வது நூற்றாண்டின் ஆங்கில கவி ஜான் டிரைடன் குறிப்பிட்டபடி, “சிலரைப் போலவே பலரும் முழு அளவில் தவறுகின்றனர்,” என்பது வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி மில்லர் வெளிப்படையாக, ஆனால் சரியாக சாதுரியத்தோடு கூறினார்: “குருடர் குருடருக்கு வழிகாட்டி. இதுதான் ஜனநாயக முறை.”

இடுகாடு நோக்கி?

ஜனநாயக ஆட்சிமுறை, இதுவரை இருந்திராதவகையில் இந்த நூற்றாண்டில் அதிகமான வரவேற்பைக் கொண்டிருக்கிறது. கிழக்கத்திய ஐரோப்பாவில் அண்மையில் ஏற்பட்ட எழுச்சிகள் இதனை வெளிப்படுத்துகிறது. என்றபோதிலும், “இவ்வுலகில் முற்போக்கு ஜனநாயகம் இப்பொழுது அதிக ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது,” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாசிரியர் ஜேம்ஸ் ரெஸ்டன் எழுதினார். “முற்போக்கு ஜனநாயகம் ஒரு முன்னேற்றக் கருத்துப்பாங்குடையவை அல்ல,” என்றும், “ஜனநாயகங்கள் அழிந்திடுவதாகத் தெரிகிறது,” என்றும் தானியேல் மோனிஹன் எச்சரித்தார். ஒரு ஜனநாயக அரசு என்றும் நிலைத்திருக்க முடியாது, ஏனென்றால், அது “எப்பொழுதுமே திடனற்ற தேசிய வருமானக் கொள்கையின்பேரில் சீரழிந்துவிடுகிறது,” என்று பிரிட்டிஷ் சரித்திராசிரியர் அலெக்சாண்டர் டைலர் கூறினார். உண்மைதான், அவருடைய கருத்து வாதத்துக்குரியது.

என்ன இருந்தாலும், ஜனநாயகம், ஏதேனில் ஆரம்பித்த ஒரு போக்கின் தொடர்ச்சியாகவே இருக்கிறது, அப்பொழுது மனிதர் காரியங்களைக் கடவுளுடைய வழியில் செய்யாமல், தங்களுடைய வழியில் செய்ய தீர்மானித்தனர். ஆளுகையில் கொள்கையளவிலாவது எல்லாரையும் சேர்த்துக்கொள்ள செல்வதாயிருப்பினும், இது மானிட ஆட்சியின் இறுதி நிலையாகும். ஆனால் லத்தீன் முதுமொழி வாக்ஸ் பாப்புலி, வாக்ஸ் தெய், “மக்கள் குரல் இறைவனின் குரல்,” என்பது உண்மையல்ல. எனவே, ஜனநாயக மானிட ஆட்சியை ஆதரிப்பவர்கள் அதன் செயல்களுக்குப் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 5:22 ஒப்பிடவும்.

இந்த உண்மை 1914 முதல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அந்தக் கவலைக்குரிய ஆண்டில், தெய்வீக ஆட்சி ஒரு தனிச் சிறப்புடைய வழியில் செயல்பட ஆரம்பித்தது. உலக விவகாரங்களை முழு அளவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் இப்பொழுது தன் நிலையில் நிற்கிறது. எல்லா வகையான மானிட ஆட்சியும்—ஜனநாயக ஆட்சிமுறைகள் உட்பட—தராசுகளில் நிறுக்கப்படுகின்றன. தனிப்பட்டவர்களாய் நாம் எந்தளவுக்கு அவற்றின் சார்பாகப் பேசிவருகிறோமோ, அந்தளவுக்கு நாமும் அவர்களோடுகூட நிறுக்கப்படுகிறோம்.—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 19:11-21. (g90 9/22)

[பக்கம் 23-ன் பெட்டி]

“மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.”—எரேமியா 10:23

[பக்கம் 25-ன் பெட்டி]

ஜனநாயக மானிட ஆட்சியை ஆதரிப்பவர்கள் அதன் செயல்களுக்குப் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்க வேண்டும்

[பக்கம் 24-ன் படம்]

“மனுஷனுக்கு சரியாய்த் தோன்றுகிற வழி உண்டு; முடிவில் அது மரணத்திற்கு வழிநடத்துகிறது.”—நீதிமொழிகள் 14:12, “நியு இன்டர்நேஷனல் மொழிபெயர்ப்பு”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்