உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுர பிரதிகளை நீங்கள் கவனமாக ஆலோசித்துப் பார்த்தீர்களா? அப்படியானால் பின்வருபவற்றை ஞாபகப்படுத்திப் பார்ப்பது உங்களுக்கு அக்கறையூட்டுவதாக இருக்கும்:
□மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்ன?
முக்கியமான வேறுபாடானது மூளையின் வடிவமைப்பு, திறமை, செயல்பாடுகள் ஆகியவற்றில் மையங்கொண்டிருக்கிறது. விலங்குகளில் ஏறக்குறைய மூளைக்குரிய செயல்பாடுகள் அனைத்தும், இயல்புணர்ச்சி ஞானம் என்றழைக்கப்படுவதில் திட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் விஷயத்தில் இவ்வாறு இல்லை. கடவுள் மனிதர்களுக்குத் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை வழங்கினார். (நீதிமொழிகள் 30:24-28)—4/15, 5-ம் பக்கம்.
□இஸ்ரவேலருடைய ஆலய வணக்கத்தில் பாடுவது என்ன பாகத்தை வகித்தது?
இசை வணக்கத்தில் ஒரு முக்கிய பாகத்தை வகித்தது, விசேஷமாக பாடகர்கள். நியாயப்பிரமாணத்தின் அதிமுக்கியமான காரியங்களைப் புகட்டவேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் வணக்கத்திற்குச் சரியான உணர்வைக் கொடுப்பதற்காகவே. இஸ்ரவேலர் யெகோவாவை ஊக்கத்துடன் வணங்க அது உதவியது. (1 நாளாகமம் 23:4, 5; 25:7)—5/1, 10, 11 பக்கங்கள்.
□சிசுப்பருவம் முதல் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட கவனிப்புத் தேவைப்படுகிறது?
பச்சிளம் குழந்தையைப் பெற்றோர் பெரும்பாலும் தொடர்ந்து கவனித்துக்கொள்ளவேண்டும். “உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிசுப்பருவம் முதல் அறிந்திருக்கிறாய்,” என்று பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:15, NW) எனவே, சிசுப்பருவத்திலிருந்தே தீமோத்தேயுவுக்குக் கிடைத்த பெற்றோருடைய கவனிப்பு, ஆவிக்குரிய கவனிப்பையும் உட்படுத்தியது.—5/15, 11-ம் பக்கம்.
□பைபிள் முழு மனிதவர்க்கத்துக்கும் கடவுளுடைய செய்தியைக் கொண்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு என்ன நான்கு அத்தாட்சிப்பூர்வ ஆதாரங்கள் இருக்கின்றன?
(1) கிடைக்கக்கூடியத் தன்மை. பைபிள் உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய 98 சதவீதமானோருக்கு கிடைக்கிறது. (2) சரித்திர மெய்ம்மை. பைபிளில், நிரூபிக்க முடியாத புராணக் கதைகளுக்கு மாறாக, சரித்திரப்பூர்வ உண்மை நிகழ்ச்சிகளே அடங்கியதாக உள்ளது. (3) நடைமுறைக்குரிய தன்மை. அதன் கட்டளைகளையும் நியமங்களையும் கவனமாகக் கடைப்பிடிப்போருக்கு அவை நன்மையைக் கொண்டுவரும் ஒரு வாழ்க்கை முறையை குறிப்பிடுகின்றன. (4) தீர்க்கதரிசனம். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை நுட்பவிவரமாய் சொல்லும் ஒரு புத்தகம்.—6/1, 8, 9 பக்கங்கள்.
□சரியான மதத்தை அறிந்துகொள்வதோடு வரும் பொறுப்பு என்ன?
சரியான மதத்தை அடையாளம் கண்டுகொண்டவுடன், நம் வாழ்க்கையை அதற்கேற்ப கட்டியமைக்கவேண்டும். அது ஒரு வாழ்க்கை முறை. (சங்கீதம் 119:105; ஏசாயா 2:3)—6/1, 13-ம் பக்கம்.
□பைபிளைத் தனிப்பட படிப்பது ஏன் அவ்வளவு அத்தியாவசியமானது?
கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே கடவுளுடைய வார்த்தையிலிருக்கும் சத்தியத்தின் புதிதான அல்லது ஆழமான அம்சங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் நாளுக்கு நாள் தங்களுடைய சந்தோஷத்தையும் பலத்தையும் புதுப்பித்துக்கொள்வது அவசியம். இவ்வாறு தங்களைத்தாமே ஆவிக்குரிய விதத்தில் உந்தப்பட்ட நிலையில் வைத்துக்கொள்கின்றனர்.—6/15, 8-ம் பக்கம்.
□பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி “பாவம்” என்ற சொல்லின் அர்த்தம் என்ன?
“பாவம்” என்பதைக் குறிப்பதற்கு பைபிளில் பொதுவாக பயன்படுத்தப்பட்டுள்ள இதன் எபிரெய, கிரேக்க சொற்கள் வினை வடிவில் “தவறவிடுவது” என்ற அர்த்தங்கொள்கின்றன; ஒரு இலக்கு, குறி, அல்லது குறிக்கோளைத் தவறவிடுவது அல்லது அடையாமலிருப்பது என்ற கருத்தைக் கொடுக்கின்றன. முதல் மனித ஜோடி கடவுளுடைய மகிமையில் குறைவுபட்டு, கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டதன் நோக்கத்தைத் தவறவிட்டனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் பாவம் செய்தனர். (ஆதியாகமம் 2:17; 3:6)—6/15, 12-ம் பக்கம்.
□விசுவாசதுரோகிகளின் புத்தகங்களை வாசிப்பது ஏன் மிகவும் ஞானமற்றதாக இருக்கிறது?
சில விசுவாசதுரோக பிரசுரங்கள் “நயவசனிப்”பினாலும் “தந்திரமான வார்த்தைக”ளாலும் பொய்மைகளை அளிக்கின்றன. (ரோமர் 16:17, 18; 2 பேதுரு 2:3) விசுவாசதுரோகிகளின் புத்தகங்கள் யாவுமே குற்றத்தை மாத்திரம் கண்டுபிடித்து, தூஷிக்கிறவையாக இருக்கின்றன. எதுவும் கட்டியெழுப்புவதாக இல்லை.—7/1, 12-ம் பக்கம்.
□கிரேக்கு மக்களாட்சியின் பிறப்பிடமாக இருந்ததா?
பண்டைய கிரேக்கில், மக்களாட்சி ஒருசில நகர அரசுகளில் மட்டுமே அப்பியாசிக்கப்பட்டது; இவற்றிலும்கூட ஆண் குடிமக்கள் மட்டுமே வாக்களித்தனர். அந்த மக்கள் தொகையில் ஐந்தில் நான்கு பங்கு விட்டுவிடப்பட்டார்கள். அது அரிதாகவே மக்கள் இறைமையாக (popular sovereignty) அல்லது மக்களாட்சியாக இருந்தது!—7/1, 16-ம் பக்கம்.
□எது கிறிஸ்தவ திருமணத்தை வளங்கொழிக்கச் செய்கிறது?
கணவனும் மனைவியும் திருமணத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை மதித்து, அவருடைய வார்த்தையிலுள்ள நியமங்களுக்கேற்ப வாழ முயற்சி செய்யும்போது அவ்வாறிருக்கும். (எபேசியர் 5:21-33)—7/15, 10-ம் பக்கம்.
□உங்கள் குடும்பப் படிப்பு எப்படி அனுபவித்து மகிழத்தக்கதாக இருக்கலாம்?
எல்லா பிள்ளைகளையும் பங்குகொள்ள வைக்க முயற்சி செய்யுங்கள். மனதிட்பமுள்ளவர்களாகவும் கட்டியெழுப்பக்கூடியவர்களாகவும் இருங்கள். பிள்ளைகள் பங்குகொள்கையில், அன்போடு அவர்களைப் பாராட்டுங்கள். மேல்வாரியாக அதிக பொருளை சிந்திப்பதற்கு மாறாக, உங்கள் பிள்ளைகளின் இருதயங்களைச் சென்றெட்ட முயற்சி செய்யுங்கள்.—7/15, 18-ம் பக்கம்.
□“சமாதானமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது” என்ற கூற்றினால் என்ன சுட்டிக்காட்டப்படுகிறது? (1 தெசலோனிக்கேயர் 5:3)
‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ நாடுகள் அடைவார்கள் என்று பைபிள் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். ஆனால், அதைக் குறித்து தனிச்சிறப்பான கருத்தில் பேசிக்கொண்டாவது இருப்பார்கள். முன்பு உணராத அளவுக்கு நன்னம்பிக்கையையும் திடநம்பிக்கையையும் அவர்கள் வெளிக்காட்டுவார்கள். சமாதானம், பாதுகாப்பை அடைவதற்கான வாய்ப்புகள் முன்னொருக்காலும் இருந்ததைவிட சமீபமாயிருப்பதாக தோன்றும்.—8/1, 6-ம் பக்கம்.
□யெகோவா நியாயத்தன்மையை வெளிக்காட்டக்கூடிய மூன்று வழிகளைக் குறிப்பிடுங்கள்.
யெகோவா மன்னிப்பதற்குத் தயாராக இருப்பதை வெளிக்காட்டியிருக்கிறார். (சங்கீதம் 86:5) செய்யப்போவதாக எண்ணியிருந்த ஒரு போக்கை புதிய சூழ்நிலைகள் எழும்புகையில், மாற்றியமைத்துக்கொள்வதற்கு மனமுள்ளவராய் இருந்திருக்கிறார். (யோனா, 3-ம் அதிகாரத்தைப் பாருங்கள்.) மேலும், அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் யெகோவா தம்மைத்தாமே நியாயத்தன்மையுடையவராக காண்பித்திருக்கிறார். (1 இராஜாக்கள் 22:19-22)—8/1, 12-14 பக்கங்கள்.