சின்னஞ்சிறு ஆட்கள், பேரழுத்தங்கள்
“பிள்ளைகளின் கவலைகள் சிறியனவே, ஆனாலும் நிச்சயமாகப் பிள்ளையும் சிறியதே.” —பர்ஸி பிஷ் ஷெல்லி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு நெடுந்தொப்பியின் படத்தைப் பாருங்கள். முதல் பார்வைக்கு விளிம்புகளின் அகலத்தைவிட தொப்பி உயரமாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால், உயரமும் அகலமும் சமமாகவே இருக்கின்றன. அளவுகள் (dimensions) எளிதில் தவறாகக் கணிக்கப்படலாம்.
வயதுவந்தவர்கள் ஒரு பிள்ளையுடைய அழுத்தத்தின் அளவுகளைத் தவறாகக் கணிப்பதும் அவ்வளவு சுலபமே. ‘பிள்ளைகளின் பிரச்னைகள் மிகவும் அற்பமானவை,’ என்று சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்து ஏமாற்றக்கூடியதாகும். “வயதுவந்தோர் துன்பங்களை அவற்றின் அளவில் அல்ல, ஆனால் அவை ஏற்படுத்தும் வேதனையின் அளவினாலே கணிக்கவேண்டும்,” என்று எச்சரிக்கிறது பிள்ளையழுத்தம்! (Childstress!) புத்தகம்.
அநேக பிள்ளைகளின் விஷயத்தில் ஒரு பிள்ளையின் வேதனை விகிதங்கள் வயதுவந்தோர் உணர்வதைக் காட்டிலும் அதிகம் இருக்கின்றன. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் உணர்ச்சிசம்பந்தப்பட்ட நிலையை மதிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியால் இது உறுதிசெய்யப்பட்டது. பெரும்பாலும் எல்லா பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் “மிக மகிழ்ச்சியாக” இருந்தனர் எனப் பதிலளித்தனர். எனினும், அவர்களுடைய பெற்றோர் இல்லாத சமயத்தில் விசாரித்தபோது, அந்தப் பிள்ளைகளில் பெரும்பாலானோர் தங்களை “மகிழ்ச்சியற்றவர்களாகவும்” ஏன் “துயர்நிறைந்தவர்களாகவும்”கூட விவரித்தனர். பெற்றோர் மிகவும் அற்பமென்பதாகக் கருதும் பயத்தைப் பிள்ளைகள் எதிர்ப்படுகின்றனர்.
டாக்டர் காவ்ரூ யாமமோட்டோ நடத்திய மற்றொரு ஆராய்ச்சியில், பிள்ளைத் தொகுதி ஒன்று 20 வாழ்க்கை சம்பவங்களை ஓர் ஏழு-அம்ச அழுத்த அளவுகோலில் மதிப்பீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் ஒரு பிள்ளை அவற்றை எவ்வாறு மதிப்பிடும் என்பதைப்பற்றி தாங்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை அனுசரித்து, அதே சம்பவங்களை வயதுவந்தோரின் தொகுதி ஒன்று மதிப்பிட்டது. வயதுவந்தோர் 20 சம்பவங்களில் 16 சம்பவங்களைத் தவறாக மதிப்பிட்டனர்! “நம்முடைய பிள்ளைகளை நாம் அறிந்திருக்கிறோம் என்று நாம் எல்லாரும் நினைக்கிறோம். ஆனால் அடிக்கடி அவர்களை உண்மையிலேயே எது துன்பப்படுத்துகிறது என்பதை நாம் உண்மையிலேயே பார்ப்பதும் கேட்பதும் புரிந்துகொள்வதும் கிடையாது,” என்று சொல்லி டாக்டர் யாமமோட்டோ முடிக்கிறார்.
பெற்றோர் வாழ்க்கை அனுபவங்களை ஒரு புதிய கண்ணோட்டத்தில் காண கற்றுக்கொள்ளவேண்டும்: ஒரு பிள்ளையின் கண்ணோட்டத்தில். (பெட்டியைப் பார்க்கவும்.) குறிப்பாக இது இன்று இன்றியமையாததாய் இருக்கிறது. “கடைசி நாட்களில் . . . சமாளிக்கமுடியாத சகிக்கமுடியாத பெரிய அழுத்தத்தின் இக்கட்டான காலங்கள் வரும்,” என்று பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்) பிள்ளைகள் அத்தகைய அழுத்தத்திலிருந்து விடுபட்டவர்களாய் இல்லை; அடிக்கடி அவர்கள் அதன் முக்கிய பலியாட்களாகின்றனர். பிள்ளைகளின் சில அழுத்தங்கள் வெறுமனே ‘பாலியத்துக்குரிய இச்சைகளாக’ இருக்கலாம். மற்றவையோ அசாதாரணமானவையாக இருந்து தனிப்பட்ட கவனத்தைத் தேவைப்படுத்துகின்றன.—2 தீமோத்தேயு 2:22.
[பக்கம் 5-ன் பெட்டி]
ஒரு பிள்ளையின் கண்ணோட்டத்தில்
பெற்றோர் மரணம் = குற்றவுணர்வு. ஒரு பெற்றோர்மேல் இருந்த நொடிப்பொழுது கோப எண்ணங்களை ஞாபகப்படுத்திப் பார்த்து, ஒரு பிள்ளை பெற்றோர் மரணத்திற்குத் தன்னைப் பொறுப்பெனக் கருதி புதைந்துகிடக்கும் உணர்ச்சிகளை வைத்திருக்கலாம்.
மணவிலக்கு = கைவிடப்படுதல். பெற்றோர் ஒருவரையொருவர் நேசிப்பதை நிறுத்திவிடலாம் என்றால், அவர்கள் தன்னை நேசிப்பதையும் நிறுத்திவிடலாம் என்று ஒரு பிள்ளையின் வாதம் கூறுகிறது.
குடிவெறிப்பழக்கம் = மன இறுக்கம். க்ளாடிய ப்ளாக் இவ்வாறு எழுதுகிறார்: “குடிவெறியரின் வீட்டில் உருவாக்கப்பட்ட பயம், கைவிடப்படுதல், புறக்கணிப்பு, இசைவின்மை மற்றும் உண்மையான வன்முறை அல்லது வன்முறை ஏற்படவிருக்கும் வாய்ப்புப் போன்றவை அடங்கிய அனுதின சுற்றுச்சூழல் நடைமுறையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சுற்றுச்சூழல் அல்ல.”
பெற்றோர் சண்டை = பயம். பெற்றோரிடையே ஏற்படும் சண்டைகள், வாந்தியெடுத்தல், நரம்புச்சம்பந்தமான முகச்சுரிப்பு வலி, முடி கொட்டுதல், எடை குறைதல் அல்லது கூடுதல், புண் போன்றவற்றில் விளைவடையுமளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துபவையாக, 24 மாணாக்கர்களைக் கொண்டு நடத்திய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது.
அளவுக்குமீறிய நிறைவேற்றம் = ஏமாற்றம். மேரி சூஸன் மில்லர் இவ்வாறு எழுதுகிறார்: “பிள்ளைகள் எங்குத் திரும்பினாலும், தங்களுக்காக வயதடைந்தோரால் அமைக்கப்பட்ட வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றனர்.” பள்ளியிலும், வீட்டிலும், விளையாட்டிலும்கூட மிகச் சிறந்து விளங்குவதற்கு அழுத்தப்படுவதால், அப்பிள்ளை ஒருபோதும் வெற்றி பெறுவதுமில்லை, அந்த ஓட்டப்பந்தயம் ஒருபோதும் ஓய்கிறதுமில்லை.
புதிய உடன்பிறப்பு = இழப்பு. இப்பொழுது பெற்றோரின் கவனத்தையும் நேசத்தையும் பங்கிடவேண்டியிருப்பதால், ஒரு பிள்ளை ஓர் உடன்பிறப்பைப் பெற்றதைப் பார்க்கிலும் ஒரு பெற்றோரை இழந்துவிட்டதாக உணரலாம்.
பள்ளி = பிரிக்கப்பட்ட கவலை. தன் தாயை விட்டுப் பிரிந்து பள்ளிக்குச் செல்வது, ஏமிக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகச் சாவது போல் இருந்தது.
தவறுகள் = தாழ்த்தப்படுதல். தங்களைப்பற்றி உறுதியற்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதால், பிள்ளைகள், “சில காரியங்களை உள்ளதைவிட அதிக வினைமையாகக் கருதுகின்றனர்,” என டாக்டர் ஆன் எப்ஸ்டீன் கூறுகிறார். தாழ்த்தப்படுதல் பிள்ளையின் தற்கொலையைத் தூண்டிவிடும் மிகவும் பொதுவான விசைகளில் ஒன்று என்பதாக அவர் கண்டார்.
ஊனங்கள் = ஏமாற்றம். இரக்கமற்ற உடன் சகாக்களின் பரிகாசம் மட்டுமல்லாமல், வெறுமனே அவனுடைய திறமைக்கு அப்பாற்பட்டவற்றின் பேரில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர்களின் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் பொறுமையின்மையையும் சரீரப்பிரகாரமாக அல்லது மனச்சம்பந்தமாக ஊனமுற்றிருக்கும் பிள்ளைப் பொறுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.
[பக்கம் 4-ன் படம்]
பழைய-பாணி நெடுந்தொப்பி