டிவி இல்லாமல் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கமுடியுமா?
இந்த ஆண்டு பிப்ரவரியில், தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல், “டிவி இல்லாமலிருத்தல்: டிவி இல்லாமல் சில குடும்பங்கள் செழித்தோங்குகின்றன,” என்ற கட்டுரையை சிறப்பித்துக் காட்டியது. அந்தச் செய்தித்தாள் அறிவித்ததாவது: “ஓரளவு சிறிய எண்ணிக்கையை உடைய அமெரிக்க குடும்பங்கள் ஒரேடியாக ப்ளக்கைப் பிடிங்கி விட்டுவிட்டன, தொலைக்காட்சி போனபிறகு அவர்களுடைய வாழ்க்கைத் தொடருகிறது—மகிழ்ச்சிகரமாகவே தொடர்கிறது.”
குடும்பத்தின் மீதுள்ள தொலைக்காட்சியின் பாதிப்பைப்பற்றி சமீபத்தில், முதன்முதல் நான்கு நிமிடத்திற்கும் குறைவான மைல் ஓட்டத்தின் 40-ம் வருடாந்திர விழாவைக் கொண்டாடுவதற்கான ஒரு கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த ஓட்டம் ராஜர் பேனிஸ்டர் என்பவரால் ஓடப்பட்டது. 1960-களின் மைல் ஓட்டப்பந்தைய வீரராகிய ஜிம் ரையன் கூறியபடி, 1968 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னர் ராஜரோடு விருந்து உண்ணும்போது இந்த விஷயத்தைப் பற்றிய பேச்சு வந்தது.
“அச்சமயத்தில் நானும் என் மனைவி ஆன்னும் திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தோம்,” என்று ரையன் விவரிக்கிறார். “ஆகவே தன்னுடைய குடும்ப வாழ்க்கையின் தரத்தை உண்மையிலேயே முன்னேற்றுவித்த ஒன்றை தான் கண்டுபிடித்திருந்ததாக ராஜர் எங்களிடம் கூறினார். சந்தேகமேயின்றி, நாங்களெல்லாம் கவனமாக காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் என்ன செய்தார் என்றால், தொலைக்காட்சியை வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டார் என்று சொன்னார். அவ்வாறு செய்தது அவர்கள் ஒரு குடும்பமாக ஒன்றாக கூடியிருப்பதற்கும், சேர்ந்து பேசுவதற்கும், சேர்ந்து படிப்பதற்கும் அவர்களுக்கு அதிக நேரத்தைக் கொடுத்தது.”
ரையன் சொன்னார்: “அவர் என்ன சொன்னாரோ அது எங்களை வெகுவாக பாதித்தது. ‘உண்மையிலேயே எங்களுக்கு டிவி ஒன்று தேவையேயில்லை’ என்பதை உணரத் தொடங்கினோம்.’”
அநேக மக்களும் இதே முடிவுக்குத்தான் வந்திருக்கின்றனர். ஏன்? ஏனென்றால் டிவிக்கு இருக்கும் மனதை மயக்கும், குறிப்பாக இளைஞரின் மனதை மயக்கும் பாதிப்பின் காரணமாகவே. அ.ஐ.மா.-வின் மேரிலேண்டில் உள்ள ஒரு அம்மா சொல்கிறபடி, சிறு குழந்தையாக இருந்த தன் மகளுக்கு டிவியின் முன்பு வைத்துப் பாலூட்டியபோது, அந்தக் குழந்தை “தன் தலையை வெடுக்கென்று என்னிடமிருந்து திருப்பிக்கொண்டு, டிவி திரையையே உற்றுப் பார்த்தது. இந்த வயதிலேயே இவள் இவ்வாறு செய்தாளானால், வளர்ந்து பெரியவளானால் இன்னும் என்னென்னல்லாம் செய்வாள் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.” ஆகவே அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய டிவியை ஒழித்துக் கட்டினார்கள்.
டிவியை நீங்கள் முழுமையாக தள்ளிவிடவில்லை என்றால், அதைப் பார்ப்பதையாவது கட்டுப்படுத்துவது புத்தியுள்ள காரியமல்லவா? இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக ரோட்ஸ் ஸ்காலர்ஷிப்பைப் பெற்ற முதல் கறுப்புப் பெண், கேரன் ஸ்டீவென்ஸன் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “வார நாட்களில் தொலைக்காட்சி அனுமதிக்கப்படுவதேயில்லை. நாங்கள் முக்கியமாக பார்க்கவேண்டிய ஏதாவது [இருந்தால்] . . . அதற்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையே [அம்மாவிடம்] பேசி அதற்காக திட்டம்போட வேண்டும்.”
டிவி பார்க்கும் பழக்கம் உங்கள் குடும்பத்தில் எப்படி இருக்கிறது? அதைக் குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் அல்லது தள்ளியே வைத்துவிடுவதன் மதிப்பைக் காண்கிறீர்களா?