பதில்களுக்காக ஓர் இளம் மனிதனின் தேடல்
காலைக் கதிரவன் பொலிவுடன் பிரகாசித்து, மண்டியிட்டு ஊக்கமாக ஜெபம் செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுவன் மீது மரங்களினூடாக வீசியது. பதினான்கு வயதான ஜோஸஃப் தன் காலத்து மதக் குழப்பத்தால் குழம்பியவராக இருந்தார். பாரம்பரிய சர்ச்சுகள் பிரிவினையால் துன்புற்றன. எங்கும் புதிய மத உட்பிரிவுகள் காணப்பட்டன. அவர் எந்தத் தொகுதியைச் சேர வேண்டும்? மண்டியிட்டவராய் அவர் கேட்டார்: “இந்தத் தொகுதிகள் அனைத்திலும் சரியானது எது; அல்லது அவை அனைத்துமே மொத்தமாகத் தவறானவையா? அவற்றில் ஏதாவது ஒன்று சரியானதாக இருந்தால், அது எது, மேலும் நான் அதை எப்படி அறிந்துகொள்ளுவேன்?”
இவ்வாறாக ஜோஸஃப் ஸ்மித் தன் ஆரம்ப ஆவிக்குரிய நெருக்கடியை விவரித்தார். அவர் குழப்பமடைந்திருந்ததில் எவ்வித ஆச்சரியமுமில்லை. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத வெறியார்வத்தால் கொழுந்துவிட்டு எரியும் பகுதியான நாட்டுப்புறஞ்சார்ந்த வடகிழக்கு அமெரிக்கா இவ்வாறே இருந்தது. a நம்பிக்கை மிகவும் தேவைப்பட்டது. அநேக விவசாயிகள் தாங்கள் உழுதுகொண்டிருந்த பாறை நிலத்தைப் போன்றதோர் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருந்தனர். மேம்பட்ட ஏதாவதொன்றிற்காக ஆவலோடு எதிர்நோக்கியவர்களாய், புதைந்துகிடக்கும் அமெரிக்க இந்திய பொக்கிஷத்தைப் பற்றிய கதைகளால் அவர்கள் ஏய்க்கப்பட்டார்கள். ஆகவே அவர்கள் வருங்காலத்தைப் பார்ப்பவர்கள் வைத்திருக்கும் மந்திர கற்கள், மந்திர வாசகங்கள், அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கவைக்கம்பு ஆகியவற்றுடன் அந்த மலைகளில் முழுமையாகத் தேடினார்கள். நியூ யார்க் மாகாணத்தில் எங்கோ நடந்த ஒரு பயங்கரமான சண்டையில் அழிந்துபோன ஒரு பெரிய இந்திய நாகரிகத்தைப் பற்றி உள்ளூர் புராணக் கதைகள் கூறின.
காணாமற்போன இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்தாரின் வம்சாவழியில் அமெரிக்க இந்தியர்கள் வந்தார்கள் என்று சொல்வதன்மூலம் அந்நாளின் பிரபல பிரசங்கிகள் அந்த ஊக வெறிக்கு ஊக்கமளித்தார்கள். உதாரணமாக, 1823-ல், எபிரேயர்களின் நோக்கு; அல்லது அமெரிக்காவில் இஸ்ரவேல் கோத்திரங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை ஈதன் ஸ்மித் எழுதினார்.
பொற்தகடுகளும் ஒரு தீர்க்கதரிசியும்
மரபும் மத வைராக்கியமும் தழைத்தோங்கிய இப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவர் இளம் ஜோஸஃப் ஸ்மித். அவருடைய குடும்பமும் அந்தக் கிளர்ச்சியில் உட்பட்டிருந்தது. குணப்படுத்தல்களையும், அற்புதங்களையும், தரிசனங்களையும் குறித்ததில் அவர்களுடைய அனுபவத்தை ஜோஸஃப்பின் தாயார் எழுதினார்கள். ஆனால் அவர்களும் பிள்ளைகளில் சிலரும் ஒரு சர்ச்சைச் சேர்ந்தபோது, ஜோஸஃப் தொடர மறுத்தார். பின்னர், தன்னுடைய வாழ்க்கை சரிதையில், உதவிக்கான அவருடைய ஜெபத்தையும் அவர் பெற்ற பதிலையும் குறித்து எழுதினார்.
எல்லா மத உட்பிரிவுகளும் தவறாக இருப்பதன் காரணமாக அவற்றில் எதையும் சேராதபடிக்கு கடவுள் அவரைத் தடுத்த ஒரு தரிசனத்தைப் பற்றி ஜோஸஃப் சொன்னார். பின்னர், 1823-ல் இலையுதிர் காலத்தில் ஒரு நாள், மாரோனை என்ற பெயருள்ள ஒரு தூதன் பண்டைய பொற்தகடுகளின் அடுக்கு ஒன்றைத் தன்னிடம் காண்பித்திருந்ததாக 17 வயது ஸ்மித் தன் குடும்பத்தினரிடம் சொன்னார். நான்கு வருடங்கள் கழித்து, அந்தத் தகடுகளும் அவற்றை மொழிபெயர்ப்பதற்கான தனி தெய்வீக வல்லமையும் அவருக்குக் கொடுக்கப்பட்டதாக உரிமைபாராட்டினார்; இது “வருங்காலத்தைப் பார்க்கும் ஒரு கல்” என்ற ஒரு விசேஷித்த கல்லையும், மிருதுவாக்கப்பட்ட இரு மும்முக்கு வைரக்கற்கள் கண்ணாடியில் பொருத்தப்பட்ட மந்திர வெள்ளி மூக்குக்கண்ணாடிகளையும் பயன்படுத்துவதைத் தேவைப்படுத்தியதாகக் கூறினார். அந்தச் சமயத்தில் மற்றவர்கள் அந்தத் தகடுகளைப் பார்த்தால் அது அவர்களுக்கு உடனடியான மரணத்தைக் குறித்ததாக ஸ்மித் எச்சரித்தார்.
வாசிக்கத்தெரிந்த ஆனால் நன்றாக எழுதமுடியாதவராகிய ஸ்மித், அந்தத் தகடுகளின் ‘மொழிபெயர்ப்பை’ இவர் சொல்லசொல்ல பல்வேறு எழுத்தர்கள் எழுதும்படி செய்தார். ஒரு திரைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு, மார்மன் என்ற பெயருடைய ஒரு எபிரேய மனிதனால் தொகுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு கதையைச் சொன்னார். அந்தத் தகடுகள், எபிரேயுவைவிட கச்சிதமான “திருத்தியமைக்கப்பட்ட எகிப்திய” எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தன என்று ஸ்மித் விவரித்தார். சுமார் பொ.ச.மு. 600-ல் எருசலேமின் அழிவைத் தப்புவதற்காக அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து வந்திருந்ததாகச் சொல்லப்பட்ட எபிரேயர்களின் வம்சாவழியில் வந்த செந்நிறமுள்ள நீஃபைட் தேசத்தினர் என்று அழைக்கப்பட்டவர்களில் கடைசியாக தப்பிப்பிழைத்தவர்களுக்குள் மார்மனும் அவருடைய மகன் மாரோனையும் இருந்ததாக விவரிக்கப்பட்டனர்.
இயேசு தம்முடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர், அமெரிக்காவில் இந்தத் தேசத்தாரிடமாக காட்சியளித்து 12 நீஃபைட் அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டிருந்தார் என்று அந்தப் பதிவு சொல்கிறது. லேமனைட்களும் எபிரேய வம்சாவழியில் வந்தவர்கள்; அவர்கள் கலகக்காரரும் சண்டையிடும் பாங்குள்ளவர்களுமானதால் கறுப்பு நிறமுள்ளவர்களாக இருக்கும்படி கடவுளால் சபிக்கப்பட்டனர். இந்த இரு தேசத்தாருக்கும் இடையில் தொடர்ந்திருந்த சண்டைகளைப்பற்றி முக்கியமாக மார்மனின் பதிவு எடுத்துக்கூறியது. நீஃபைட்கள் பொல்லாதவர்களாகி, அமெரிக்க இந்தியர்களின் முன்னோர்களாயிருந்த லேமனைட்களால் கடைசியில் பூண்டோடழிக்கப்பட்டனர்.
ஸ்மித்தின்படி, இப்போது ஆவியாக இருக்கும் மாரோனையாகிய மார்மனின் மகன், பொற்தகடுகளில் அந்தப் பதிவையும், கிறிஸ்துவின் சர்ச்சைத் திரும்ப நிலைநாட்டுவதற்கு வழிநடத்தும் கட்டளையையும் தன்னிடம் கொடுத்திருக்கிறார். சீக்கிரத்தில், ஸ்மித்தைப் பின்பற்றுகிறவர்கள் இருந்தார்கள். செல்வச்சிறப்புள்ள விசுவாசி ஒருவர், மார்மன் புத்தகம் (ஆங்கிலம்) என்ற ஸ்மித்தின் உரையைப் பிரசுரிப்பதற்கு நிதி உதவி செய்தார். 1830-ன் இளவேனிற்காலத்தில் அது அச்சு வடிவில் பிரசுரிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் கழித்து, ஜோஸஃப் ஸ்மித் தன் அதிகாரப்பூர்வமான பட்டப்பெயரை அறிவித்தார்: “வருங்காலத்தைப் பார்ப்பவர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு அப்போஸ்தலர்.” ஏப்ரல் 6, 1830-ல், மார்மன் சர்ச், அல்லது இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் சர்ச் தோன்றியது. b
ஸ்மித், மனதில் பதியவைக்கத்தக்க தோற்றத்தைக் கொண்டிருந்தார்; அது மதமாறிய அநேகரின் பக்தியை ஈர்த்தது. ஆனால் மரபு சாராத அவருடைய மதம் பகைவர்களையும் உண்டுபண்ணியது. இந்தப் புதிய சர்ச் விடாமுயற்சியுடன் வேட்டையாடப்பட்டது; அதன் அங்கத்தினர்கள் அதன் புதிய எருசலேமைத் தேடி நியூ யார்க்கிலிருந்து ஒஹாயோவுக்கும் பின்னர் மிஸ்ஸௌரிக்கும் ஓடினார்கள். தீர்க்கதரிசியாக, ஸ்மித் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுத்துதல்களை எடுத்துரைத்தார்; நிதிசம்பந்தமான நன்கொடைகளிலிருந்து பல மனைவிகளை வைத்திருப்பது சம்பந்தமான ஒரு தெய்வீக கட்டளை வரையான காரியங்களின் பேரில் அவர் கடவுளுடைய சித்தத்தை அறிவித்தார். குறிப்பாக, பின்னால் சொல்லப்பட்ட இந்த வெளிப்படுத்துதல் அதிக துன்புறுத்தலை உருவாக்கியது. சந்தேகம் மற்றும் எதிர்ப்பை எவ்விடத்திலும் எதிர்ப்பட்டவர்களாக, மார்மன்கள் தங்களைத் தற்காப்பு செய்துகொள்வதற்காக போர்க்கருவிகளை எடுக்க ஆரம்பித்தனர்.
ஜோஸஃப் ஸ்மித்துடைய வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் குறிப்பிடத்தக்கதாய் இருந்த மறைவான சூழ்ச்சிகளும் குழப்பங்களும் ஒருபோதும் குறையவில்லை. ஸ்மித்தைப் பின்பற்றியவர்கள் திரண்டு உள்நோக்கி வந்துகொண்டிருந்ததை எல்லைப்புற நகரத்தார் பலமாக எதிர்த்தனர். இந்த நகரத்தார் மற்றொரு புனித நூலையோ சுயமாக அறிவித்துக்கொண்ட ஒரு தீர்க்கதரிசியையோ விரும்பவில்லை. பின்னர், 1839-ல், உள்ளூர் மக்களுக்குத் திகிலூட்டும் வண்ணம், மார்மன்கள், சொந்த ஆலைகளையும், தொழிற்சாலை, பல்கலைக்கழகம், மற்றும் படை ஆகியவற்றைக் கொண்ட செழித்தோங்கும் ஒரு குடியிருப்பை இல்லினாய்ஸிலுள்ள நாவூவில் நிறுவினார்கள். பகைமைகள் எழும்பியபோது, ஸ்மித் கைதுசெய்யப்பட்டு, இல்லினாய்ஸில் கார்திஜிலுள்ள சிறையிலடைக்கப்பட்டார். அங்கு, ஜூன் 27, 1844-ல், ஒரு கலகக்கும்பல் அந்தச் சிறையைச் சூறையாடி அவரைச் சுட்டுக் கொன்றது.
அந்தச் சர்ச் அதன் தீர்க்கதரிசிக்குப் பின்னும் தொடர்கிறது
ஜோஸஃப் ஸ்மித்தின் மரணத்துடன் இந்தப் பதிவு எவ்விதத்திலும் முடிவடைவதில்லை. பன்னிரண்டு அப்போஸ்தலர் குழுவினுடைய தலைவராகிய ப்ரிகாம் யங், விரைவில் தலைமை ஏற்று, அநேக விசுவாசிகளை உடாவிலுள்ள பெரிய உப்பு ஏரி பள்ளத்தாக்குக்கு ஒரு ஆபத்தான பயணம் மேற்கொள்ளச் செய்தார்; அங்குதான் இன்றுவரையாக மார்மன் தலைமை அலுவலகம் இருக்கிறது. c
ஜோஸஃப் ஸ்மித்தால் நிறுவப்பட்ட சர்ச், மதம் மாறுகிறவர்களை இன்னும் கவர்ந்து வருகிறது; LDS ஆதார மூலங்களின்படி உலகளாவ சுமார் தொண்ணூறு லட்ச அங்கத்தினர்களை உடையதாக இருக்கிறது. நியூ யார்க் மாகாணத்தில் அது தொடங்கப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள இத்தாலி, உருகுவே, பிலிப்பீன்ஸ், ஜயர் போன்ற இடங்களுக்கும் அது பரவியிருக்கிறது. தொடர்ச்சியான எதிர்ப்பின் மத்தியிலும், குறிப்பிடத்தக்க இந்த மார்மன் சர்ச் செழித்தோங்கி இருக்கிறது. விசுவாசமுள்ள மனிதர் காத்திருந்த உண்மைக் கிறிஸ்தவத்தின் திரும்ப நிலைநாட்டப்படுதலாக அது உண்மையில் இருக்கிறதா?
[அடிக்குறிப்புகள்]
a 1800-களின் தொடக்கத்தில் அந்தப் பகுதியெங்கும் குறுகிய கால புதிய மதவெழுச்சிகளின் அலை பரவியதன் காரணமாக நியூ யார்க் மாகாணத்தின் மேற்கு பாகத்திலுள்ள இந்தப் பகுதியை எரிந்துபோன மாவட்டம் என்பதாக பின்னர் வரலாற்றாசிரியர்கள் அழைத்தனர்.
b கிறிஸ்துவின் சர்ச் (The Church of Christ) என்பதாக ஆரம்பத்தில் பெயரிடப்பட்ட அது, ஏப்ரல் 26, 1838-ல் இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் சர்ச் (The Church of Latter-day Saints) அல்லது LDS என்று அழைக்கப்படலாயிற்று. அதன் அங்கத்தினர்கள் LDS என்று அழைக்கப்படுவதைத் தெரிந்துகொண்டபோதிலும், (மார்மன் புத்தகம் என்பதிலிருந்து வரும்) மார்மன் என்ற பெயரும் இந்தத் தொடர் கட்டுரைகளில் பயன்படுத்துப்பட்டிருக்கிறது, ஏனென்றால் அது அநேக வாசகர்களால் நன்கு அறியப்பட்ட பதமாக இருக்கிறது.
c LDS-லிருந்து பிரிந்து சென்று, தங்களையும் மார்மன்கள் என்று அழைக்கும் பல்வேறு தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் திரும்ப ஒழுங்கமைக்கப்பட்ட சர்ச்; அதன் தலைமை அலுவலகம் மிஸ்ஸௌரியிலுள்ள இன்டிப்பென்டன்ஸில் இருக்கிறது.
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
Photo: Courtesy Church of Jesus Christ of Latter-Day Saints/Dictionary of American Portraits/Dover