“புதிய உலக ஒழுங்குமுறை”—தடுமாற்றமான துவக்கம்
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஜனங்கள், 1991 ஆரம்பமானபோது, நம்பிக்கையான மனநிலையோடு இருந்தனர். கெடுபிடிப் போர் முடிவடைந்திருந்தது. குவைத்தின் பிரச்சினை இருந்தது உண்மைதான். அதற்கு முந்திய ஆகஸ்ட்டில் ஈராக்கின் படையால் அது தாக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாட்டு அமைப்பு அதன் பலத்தைக் காண்பித்து, ஜனவரி 15-க்குள்ளாக பின்வாங்கிவிடும்படி ஈராக்குக்கு கட்டளையிட்டது. விரைவில் அமைக்கப்பட்டு, ஈராக்கை படிந்துவிடும்படி வற்புறுத்த தயாராயிருந்த, 28 நாடுகளை பிரதிநிதித்துவம் செய்த ஐநா இராணுவ கூட்டமைப்பினால் அந்தக் கோரிக்கை ஆதரிக்கப்பட்டது. உலக சமுதாயத்தால் எடுக்கப்பட்ட உறுதியான நிலைநிற்கை ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கத்திற்கான அறிகுறி என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.
“ஒரு புதிய உலக ஒழுங்குமுறையை—கொடிய போட்டியின் விதிமுறைக்கு பதிலாக சட்டத்தின் விதிமுறையே சர்வதேச நடத்தையை அடக்கியாளும் விதத்தில் இருக்கும் ஓர் உலகத்தை—உருவாக்குவதற்கு நமக்கும் இனிவரும் சந்ததிக்கும் இருக்கும் சாத்தியத்தைப்” பற்றி ஐ.மா.-வின் அப்போதைய ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் பேசினார்.
பின்னர் ஜனவரி 15-ன் காலக்கெடுவை ஈராக் புறக்கணித்தது, ஆக ஈராக்கின் இராணுவ இடங்களில் பெருத்த விமானத் தாக்குதல்களும் ஏவுகணைத் தாக்குதல்களும் நடைபெறுவதில் அது விளைவடைந்தது. தெளிவாகவே, ஒருபோதும் அலட்சியம் செய்ய முடியாத ஒன்றாக அதை உலக சமுதாயம் கருதியது. மூன்று மாதத்திற்கும் குறைவான காலத்துக்குப் பின்னர், ஏப்ரல் 11-ம் தேதியன்று, வளைகுடாப் போர் முடிந்துவிட்டதாக ஐநா அறிவித்தது. சமாதானமான, பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தமாக நிலையான ஒரு புதிய உலக ஒழுங்குமுறையின் வாக்குறுதி மெய்ம்மையாவதாக தோன்றியது.
போர்கள் வருத்தம் ஏற்படுத்தும் வகையில் நிலையானவை
1991-ன் மத்திபத்தில் இரண்டு குடியரசுகளான ஸ்லோவினியாவும் க்ரோயேஷீயாவும், அந்நாளைய யுகோஸ்லாவியாவிலிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தன. இது உள்நாட்டுப் போரை துவக்கி இறுதியில் அநேக தனிப்பட்ட தேசங்கள் உருவாவதில் விளைவடைந்தது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்துக்கு பின்பு, பிரெஞ்சு நாட்டின் அரசியல் பகுப்பாய்வாளரான பியர் ஆஸ்னர் இவ்வாறு சொன்னார்: “1914-க்கு முன்பிருந்த ஐரோப்பா எவ்வாறு மறைந்துபோனதோ அவ்வாறே ஜார்ஜ் புஷ்ஷின் புதிய உலக ஒழுங்குமுறையும் சரஜெவோவில் மறைந்துபோனது.” இருந்தபோதிலும், நவம்பர் 1995-ல், அ.ஐ.மா.-வின் ஒஹாயோவிலுள்ள டேடனில் பேச்சு வார்த்தைகள் துவங்கப்பட்டு, டிசம்பர் 14-ல் பாரிஸில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானபோது சமாதானத்திற்கான எதிர்கால வாய்ப்பு ஒளிமயமானது. 1995 முடிவை நெருங்கியபோது, புதிய உலக ஒழுங்குமுறை ஒருவேளை மறைந்துவிடவில்லை என்ற நம்பிக்கை மீண்டும் உண்டானது.
ஐக்கிய சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் குடியரசு நாடுகள் படிப்படியாக ஒன்றுக்கொன்று பிரிந்துகொண்டு வந்தன. 1991-ல், லிதுவேனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகள்தான் முதலில் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தன, விரைவில் மற்ற நாடுகளும் அவற்றைப் பின்தொடர்ந்தன. சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் என்பதாக அழைக்கப்பட்ட அதிக கட்டுப்பாடில்லாத ஒரு தொகுதி, சோவியத் யூனியனின் முந்திய அங்கத்தினர்கள் சிலர் அதோடு சேர்ந்துகொள்ள மறுத்தபோதிலும், டிசம்பரில் ஸ்தாபிக்கப்பட்டது. பின்பு, டிசம்பர் 25-ல் சோவியத் ஜனாதிபதி பதவியை கார்ப்பச்சேவ் ராஜினாமா செய்தார்.
எனினும், தனிப்பட்ட குடியரசுகளும் பிரிந்துவிட ஆரம்பித்தன. உதாரணத்திற்கு, ரஷ்யாவின் வட காகஸஸ் பகுதியில் உள்ள வேற்று நாட்டினர் எல்லைக்குட்பட்ட ஒரு சிறிய முஸ்லிம் நிலப்பகுதியான சச்சன்யா, சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்தது. 1994-ல் பிரிந்து செல்வதற்கான அதன் முயற்சி, ரஷ்ய இராணுவப் படையினிடமிருந்து எதிர்த்தாக்குதலைத் தூண்டிவிட்டது. 1990-ன் ஆரம்பத்தில் துவங்கிய நெருக்கடியின் சமயத்திலிருந்து சுமார் 30,000 உயிர்கள் இழக்கப்பட்டிருக்கிறபோதிலும், இந்த வருடம் வரையாக போர் நீடித்திருந்திருக்கிறது.
அக்டோபர் 1995-ஐப் பொறுத்தவரையில், 27-லிருந்து 46 சண்டைகள்—எவ்வாறு அவை வகைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து—உலகம் முழுவதும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன.
நொடிப்பின் தறுவாயில்
1990-களின் ஆரம்பத்தில், புதிய உலக ஒழுங்குமுறை அரசியல் சம்பந்தமாக மாத்திரமல்லாமல் பொருளாதார சம்பந்தமாகவும் தடுமாறிக்கொண்டிருந்தது.
1991-ல், நிகரகுவா அதன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தது; ஆனால் அப்போதும்கூட 2 கோடியே 50 லட்சம் கார்டோபாஸ் ஒரே ஒரு ஐ.மா. டாலரின் மதிப்புள்ளதாய் இருந்தது. இதற்கிடையே, ஜயர், 850 சதவீத பணவீக்கத்தை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தது. உலகத்தின் மிக மட்டமான வாழ்க்கை தரத்தை சகித்துக்கொள்ளும்படி அதன் குடிமக்களை அது வற்புறுத்தியது. ரஷ்ய பொருளாதாரமும்கூட நஷ்டத்தை எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தது. 1992-ல் வருடத்திற்கு 2,200 சதவீதத்திற்கு பணவீக்கம் அதிகரித்து பணத்திற்கு ஏறத்தாழ எந்த மதிப்பும் இல்லாதபடி செய்தது. அதன் பின்னர் காரியங்கள் முன்னேறினாலும், 1995-ல் பொருளாதார பிரச்சினைகள் நிச்சயமாகவே முடிவடையவில்லை.
1991-ல், பாங்க் ஆஃப் க்ரெடிட் அண்ட் காமர்ஸ் இன்டர்நேஷனல், ஏமாற்றுதல் மற்றும் குற்றச்செயல்களின் காரணமாக வீழ்ச்சியடைந்தபோது அந்நூற்றாண்டின் மிகப் பெரிய நிதிமோசடி ஏற்பட்டது. 62 நாடுகளைச் சேர்ந்த சேமிப்பாளர்கள் நூற்றுக்கோடிக்கணக்கான ஐ.மா. டாலர்கள் மதிப்புள்ள தங்கள் பணத்தை இழந்தனர்.
பொருளாதாரத்தில் பலவீனமாய் இருந்த தேசங்கள்மட்டும் உலுக்கப்படவில்லை; வல்லமைபொருந்திய ஜெர்மனியும் ஒருங்கிணைப்பினால் ஏற்பட்ட செலவுகளினால் அதிக பாரமடைந்திருந்தது. பணிபுரிபவர்கள் அதிக நாள் விடுமுறைகளையும் மேம்பட்ட உடல்நல பராமரிப்பையும் கோரியதால் வேலையின்மை அதிகரித்தது. அதிகம்பேர் வேலைக்கு வராததும் மக்கள் நலத்துறையின் பரவலான மோசடிகளும் பொருளாதாரத்தின்பேரில் கூடுதலான அழுத்தங்களை உண்டாக்கின.
ஐக்கிய மாகாணங்களில், தொடர்ச்சியாக நிகழ்ந்த கடுமையான பேரழிவுகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கிடையே பேரிழப்பை ஏற்படுத்தின. இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதை அவை மிகவும் கடினமாகக் கண்டன. 1993-ல், நொடிப்பு 1995: அமெரிக்காவிற்கு ஏற்படப்போகும் நாசம் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்ற ஆங்கில புத்தகம், தேசிய கடனும் பட்ஜட் பற்றாக்குறையும் திடீரென அதிகரிக்கும் ஆபத்தை குறித்து எச்சரித்தது. ஜிப்ரால்டர் பாறையைப் போன்ற உறுதிக்கு பேர்போன பிரிட்டிஷ் இன்ஷூரன்ஸ் சங்கமான லாயிட்ஸ் ஆஃப் லண்டனும்கூட சந்தேகிக்கப்பட்டது. இழப்புகளால் குழைந்துபோன அது, அதுவரையாக நினைத்தும்கூட பார்த்திராத, ஆனால் சாத்தியமான நொடிப்பைக் குறித்து யோசிக்கும்படி வற்புறுத்தப்பட்டது.
மதம், நிலைப்படுத்தும் சக்தியா?
1991-ல் ஜெர்மானிய செய்தித்தாளான ஃப்ராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜெமைன் ட்ஸைட்டுங் இவ்வாறு குறிப்பிட்டது: “ஒரு புதிய உலக ஒழுங்குமுறையின் இந்தக் காட்சி, உலகளாவிய அமெரிக்க கருத்துகளின் நெடுநாளைய பாரம்பரியத்தில் வேரூன்றியிருக்கிறது. இந்த எல்லா கருத்துக்களும் மத மூலத்தைக் கொண்டுள்ளன, கிறிஸ்தவ சொற்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.”
இந்த மத பின்னணி புதிய உலக ஒழுங்குமுறையின் நிலையான தன்மையை அதிகரித்திருக்க வேண்டும் என்பதாக ஒருவர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் மத சகிப்புத்தன்மை இல்லாமையும் சச்சரவும் பரவலான நிலையற்றத்தன்மையில் விளைவடைந்தது. அநேக அரசாங்கங்களில் அல்ஜீரியா மற்றும் எகிப்து ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாமிய மரபு மாறா கோட்பாட்டாளர்களோடு உடன்பாடில்லாது இருந்தன. மதத்தால் உந்துவிக்கப்பட்ட தீவிரவாதத்தின் அலைகள் இரண்டு நாடுகளையுமே தாக்கின. இந்தியாவில் நடந்த மத கலவரங்கள், 1993-ன்போது மத தூண்டுதலால் ஒன்பது நாட்களுக்கு மும்பையில் நீடித்த வன்முறையையும் உட்படுத்தின. அதில் 550-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1994-ல் ஆங்கிலிக்கன் சர்ச் 32 பெண்களை பாதிரிகளாக நியமித்தபோது மத சம்பந்தமான ஐக்கியமற்ற தன்மை, கிறிஸ்தவ ஒற்றுமைக்கான வளர்ச்சியின் வேகத்தைக் குறைத்தது. போப் ஜான் பால் II இதை, “கத்தோலிக்க சர்ச்சும் ஆங்கிலிக்கன் குழுவும் மறுபடியும் ஒன்றுசேரும் என்ற நம்பிக்கைகள் அனைத்திற்கும் ஒரு மிகப் பெரிய இடையூறு” என்பதாக அழைத்தார்.
ஏப்ரல் 19, 1993-ல், ஐ.மா. அரசாங்கத்துக்கும் மத கருத்துவேறுபாட்டுக் குழுவான ப்ராஞ்ச் டவிடியன்ஸின் அங்கத்தினர்களுக்குமிடையே நிலவிய பகை, குறைந்தபட்சம் 75 கருத்துவேறுபாட்டுக் குழுவின் அங்கத்தினர்களுடைய உயிர்களை காவுகொண்டது; அது ஏற்கெனவே வாக்கோ டெக்ஸஸில் கருத்துவேறுபாட்டுக் குழுவினரின் காம்பவுண்டில் முட்டுக்கட்டை நிலை உருவாவதிலும் நான்கு அரசாங்க ஊழியர்கள் கொல்லப்படுவதிலும் விளைவடைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓக்லஹாமா நகரத்தில் உள்ள மத்திய அரசாங்க கட்டிடத்தில் 168 பேரைக் கொன்ற தீவிரவாத குண்டுவீச்சு செயல், வாக்கோ தாக்குதலுக்கான பழிவாங்கும் செயலாக இருந்திருக்கலாம் என்ற சாத்தியத்தின்பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
1995-ன் ஆரம்பப் பகுதியில் டோக்கியோவின் சுரங்க பாதையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட விஷவாயு தாக்குதலைக் குறித்து கேள்விப்பட்டபோது உலகம் அதிர்ச்சியடைந்தது. பத்து பேர் இறந்துபோயினர், இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆம் ஷின்ரிக்யோ அல்லது ஆம் சுப்ரீம் ட்ரூத் என்பதாக அழைக்கப்படும் அப்போகாலிப்ட் பிரிவு இதற்காக குற்றஞ்சாட்டப்பட்டபோது உலகம் இன்னும் அதிக அதிர்ச்சியடைந்தது.
கொண்டாடப்படும் அளவுக்கு அதிகத்தைக் கொண்டிராத முக்கிய ஆண்டுவிழாக்கள்
1492-ல், கொலம்பஸ் எதிர்பாராத விதமாக மேற்கு அர்த்தக்கோளத்திற்கு சென்றார். இந்தச் சம்பவத்தின் 500-வது ஆண்டுவிழா 1992-ல் கொண்டாடப்பட்டபோது கருத்து மாறுபாடுகளால் அது சூழப்பட்டிருந்தது. அமெரிக்க இந்தியர்களின் சந்ததியைச் சேர்ந்த சுமார் நான்கு கோடி பேர், கொலம்பஸ் பிறப்பதற்கு முன்பாகவே தங்கள் முற்பிதாக்கள் வாழ்ந்து செழிப்படைந்திருந்த இடங்களைப்போய் ஓர் ஐரோப்பியர் புதிதாக “கண்டுபிடித்தார்” என்று சொல்லப்பட்டதைக் குறித்து வெகுண்டு எழுந்தனர். சிலர், அந்த ஆய்வுப்பயணியை “வீரச்செயலுக்கும் வெற்றிக்கும் ஒரு முன்னோடி” என்பதாக அழைத்தனர். உண்மையில், மேற்கு அர்த்தக்கோளத்திற்கு கொலம்பஸ் சென்றது அந்நாட்டின் பழங்குடி மக்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருந்ததைக் காட்டிலும் விபரீத சம்பவமாகவே இருந்தது. அவர்களது நாட்டையும் அரசாட்சியையும் மதிப்பையும் உயிர்களையும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட வெற்றிவீரர்கள் பறித்தனர்.
செப்டம்பர் 1995-ல், ராஜாவாகிய தாவீது எருசலேமை வென்று 3,000 ஆண்டுகள் ஆகியிருந்ததை நினைவுகூருவதற்கு இஸ்ரேல் 16-மாதங்கள் நீடித்த கொண்டாட்டத்தை ஆரம்பித்தது. ஆனால் அந்த ஆண்டுவிழா ஒரு துக்ககரமான துவக்கத்தைக் கொண்டிருந்தது; ஏனெனில், சமாதான பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவாற்றிய ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே கொலையாளியின் குண்டுகளால் நவம்பர் 4-ம் தேதியன்று பிரதம மந்திரியான யிஷாக் ராபின் கொல்லப்பட்டார். மத்திய கிழக்கின் சமாதான செயல்பாட்டை பொறுத்தவரையில் துயர்தருவதாய் இருந்த அது, யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மாத்திரமல்லாமல் யூதர்களுக்கிடையேயும்கூட தீவிரமான மத வேறுபாடுகள் இருந்ததை வெளிப்படுத்தியது.
1991-க்கும் 1995-க்கும் இடையே இரண்டாவது உலகப் போரோடு சம்பந்தப்பட்ட அநேக 50-வருட ஆண்டுவிழாக்கள் நடத்தப்பட்டன. ஐக்கிய மாகாணங்கள் போரில் தலையிடும்படி செய்த பேர்ல் ஹார்பர் தாக்குதல்; ஐரோப்பாவின்மீது நேச நாடுகளின் படையெடுப்பு; நாசி கான்ஸன்ட்ரேஷன் முகாம்களின் நீக்கம்; ஐரோப்பாவில் நேச நாடுகளின் வெற்றி; ஜப்பானில் முதல் அணுகுண்டு போடப்பட்ட சம்பவம் ஆகியவை அவற்றில் சில. இந்தச் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட இரத்தத்தையும் கண்ணீரையும் கருத்தில் கொண்டு, உண்மையிலேயே அவை கொண்டாடப்பட தகுதியுள்ளவையா என்று சில ஜனங்கள் கேட்டனர்.
இது, மற்றொரு முக்கியமான சம்பவத்தின் ஆண்டுவிழாவிற்கு வழிநடத்தியது. அக்டோபர் 1945-ல் ஐக்கிய நாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஆண்டுவிழாவே அது. உலக சமாதானத்தைப் பெறுவதற்கான திறவுகோல் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து நம்பிக்கைகள் அதிகரித்தன.
ஐக்கிய நாட்டு அமைப்பு, பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி என்ற அதன் பொதுச்செயலாளர் சமீபத்தில் அதன் சார்பாக வாதாடும்போது சொன்ன விதமாகவே, அநேக வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துவருதல்” என்ற அதன் சாசன நோக்கத்தை நிறைவேற்றுவதில் அது வெற்றி பெறவில்லை. காத்துவருவதற்கு சமாதானம் இல்லாத இடங்களில் சமாதானத்தைக் காத்துவர அதன் படைகள் அடிக்கடி முயன்றிருக்கின்றன. 1995-ஐ பொறுத்ததிலோ, தடுமாறும் ஒரு புதிய உலக ஒழுங்குமுறைக்கு உயிரூட்ட தவறிவிட்டிருக்கின்றன.
புதிய உலக ஒழுங்குமுறை தடுமாறிக்கொண்டிருந்த அதேசமயத்தில், மெய்யான தேவாட்சி செழிப்படைந்தது!
தங்கள் கண்களுக்கு எதிராகவே ஒரு புதிய உலக ஒழுங்குமுறைக்கான நம்பிக்கைகளை குலைத்துப்போட்ட அரசியல் சம்பந்தமான, பொருளாதார சம்பந்தமான மற்றும் மத சம்பந்தமான நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டவர்களாய், சில ஜனங்கள், ஒரு புதிய உலக ஒழுங்கின்மையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். கடவுளால் ஏற்படுத்தப்படும் ஒரு புதிய உலகில்தான் மனித சமுதாயம் நிலையான தன்மையைப் பெறும் என்பதற்கு கூடுதலான அத்தாட்சியை இச்சம்பவங்களில் யெகோவாவின் சாட்சிகள் கண்டனர்.
சில நாடுகளில், கெடுபிடிப் போரின் முடிவு, யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக சுதந்திரத்தை அர்த்தப்படுத்தியது. புடாபெஸ்ட், கீவ், மாஸ்கோ, ப்ராக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வார்ஸா மற்றும் பிற இடங்களில் தலைசிறந்த சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்கு இது அவர்களை அனுமதித்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சபைகளை அது பலப்படுத்தி, அவர்களது பிரசங்க வேலையின் வேகத்தை அதிகரிக்க உதவியது. இவ்வாறு, இவற்றில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் சுறுசுறுப்பான சாட்சிகளின் எண்ணிக்கை, 1991-ல் 49,171-ஆக இருந்ததிலிருந்து 1995-ல் 1,53,361-க்கு அதிகரித்தது ஆச்சரியமல்லவே. அதே நான்கு வருடங்களில், இந்த முழு உலகத்தில் உள்ள சாட்சிகளின் எண்ணிக்கை 42,78,820-லிருந்து 51,99,895-க்கு உயர்ந்தது. உண்மையான தேவாட்சி எப்போதுமிராத அளவுக்கு செழித்தோங்குகிறது!
ஆம், ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ உண்டாக்கப்போவதாக யெகோவா தேவன் அளித்திருக்கும் வாக்குறுதியின்பேரில் இப்போது லட்சக்கணக்கான ஆட்கள் தங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளை வைத்திருக்கின்றனர். (2 பேதுரு 3:10, 13) இதை எதிர்நோக்கி இருப்பது, தடுமாற்றத்துடன் ஆரம்பமானதும் விரைவில் முழுமையாக அகற்றப்படப்போவதுமான மனிதனால் ஏற்படுத்தப்படும் புதிய உலக ஒழுங்குமுறைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் எவ்வளவு ஞானமானது!—தானியேல் 2:44.