பூர்வீக அமெரிக்கர்கள்—ஒரு சகாப்தத்தின் முடிவு
பொதுவாக மாட்டிடையர்கள்-இந்தியர்கள் படத்தை யார்தான் பார்த்திருக்க மாட்டார்? உலகெங்கிலுமுள்ள மக்கள், வியட் இயர்ப், பஃபல்லோ பில் மற்றும் லோன் ரேஞ்சர் ஆகியவற்றைப் பற்றியும் இந்தியர்களான ஜரானமோ, சிட்டிங் புல், கிரேஸி ஹார்ஸ், சீஃப் ஜோஸஃப் மற்றும் பலரைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றனர். ஆனால் நிலைமைகளைப் பற்றிய ஹாலிவுட்டின் சித்தரிப்பு எந்தளவுக்கு நம்பத்தக்கதாய் இருந்திருக்கிறது? மேலும் அவர்கள் இந்தியர்களைச் சித்தரித்துக் காட்டியிருப்பது எந்தளவுக்குப் பாரபட்சமற்றதாய் இருந்திருக்கிறது?
பூர்வீக வட அமெரிக்கர்கள் (இந்தியர்கள்) ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்ட வரலாறு கேள்விகளை எழுப்புகிறது. a வரலாற்று நூல்கள் இந்தியர்களைப் பாரபட்சமற்ற விதத்தில் கையாண்டிருக்கின்றனவா? பேராசை, ஒடுக்குதல், இனவெறி, அட்டூழியங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது பாடங்கள் இருக்கின்றனவா? மாட்டிடையர்கள், இந்தியர்கள் என்று பொதுவாய் அழைக்கப்படுபவர்களின் உண்மை விவரம் என்ன?
கஸ்ட்டரின் இறுதி எதிர்ப்பும் ஊண்டட் நீ-யில் படுகொலையும்
1876-ம் ஆண்டில், லக்கோட்டாவைச் சேர்ந்த (சியோக்ஸ் குடியின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்று) மாயமந்திர மருத்துவர் சிட்டிங் புல், மான்ட்டனாவில் நடந்த பிரசித்திப் பெற்ற லிட்டில் பிக்ஹார்ன் ரிவர் (Little Bighorn River) யுத்தத்தில் ஒரு தலைவராய் இருந்தார். 1,000 சியோக்ஸ் மற்றும் செய்யன் போர்வீரர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று 650 படைவீரர்களைக் கொண்ட, துணைத் தளகர்த்தரான “நீள் மயிர்” கஸ்ட்டர் எண்ணினார். இது முற்றிலும் தவறான கணிப்பாய் இருந்தது. எக்காலத்திலும் கூடியிருந்த பூர்வீக அமெரிக்கப் போர்வீரர்களிலேயே ஒருவேளை மிகப் பெரிய தொகுதியை—சுமார் 3,000 பேரடங்கிய தொகுதியை—அவர் எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தார்.
கஸ்ட்டர் தனது 7-வது குதிரைப் படையின் அணியை மூன்று தொகுதிகளாகப் பிரித்தார். மற்ற இரண்டு தொகுதிகளின் ஆதரவைப் பெறக் காத்திராமல், இந்திய முகாமின் ஒரு பலவீனமான தொகுதியாக இருக்குமென அவர் கருதியிருந்ததை அவரது தொகுதி தாக்கியது. தலைவர்களான கிரேஸி ஹார்ஸ், கால் (Gall), சிட்டிங் புல் ஆகியோரின் தலைமையின்கீழ், இந்தியர்கள் கஸ்ட்டரையும், சுமார் 225 படைவீரர்களைக் கொண்ட அவரது தொகுதியையும் முற்றிலும் அழித்துவிட்டனர். அது இந்திய தேசங்களுக்கு ஒரு தற்காலிக வெற்றியாக இருந்தது, ஆனால் ஐ.மா. படைக்கு அது ஒரு கடும் தோல்வியாய் இருந்தது. என்றபோதிலும், வெறும் 14 ஆண்டுகள் கழித்து பயங்கரப் பழிவாங்குதல் நடக்கவிருந்தது.
முடிவில், மன்னிக்கப்படுவார் என்று வாக்களிக்கப்பட்டதால், சிட்டிங் புல் சரணடைந்தார். மாறாக, டக்கோட்டா பகுதியைச் சேர்ந்த ரன்டல் கோட்டையில் (Fort Randall) அவர் குறிப்பிட்ட காலத்துக்கு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வயோதிப காலத்தில், பஃபல்லோ பில்ஸ் வைல்டு வெஸ்ட் என்ற பிரயாணக்காட்சியில் பொதுமக்களுக்கு முன் அவர் தோன்றினார். முற்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய தலைவர், ஒரு சமயம் செல்வாக்கு மிகுந்த மாயமந்திர மருத்துவராய்த் தனக்கிருந்த உற்சாகத்தையும் செல்வாக்கையும் இழந்துவிட்டிருந்தார்.
1890-ல், அவரைக் கைது செய்யும்படி அனுப்பப்பட்டிருந்த இந்திய போலீஸ் அதிகாரிகளால் சிட்டிங் புல் (லக்கோட்டா பெயர், டாடாங்க்கா இயோட்டாக்கா) சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் சியோக்ஸ் “உலோக நெஞ்சங்கள்” (போலீஸ் பேட்ஜ் வைத்திருப்போர்), துணைத்தலைவர் புல் ஹெட் மற்றும் சார்ஜண்ட் ரெட் டோமஹாவ்க் ஆகியோராவர்.
அதே ஆண்டில், அமெரிக்கன் கிரேட் பிளெய்ன்ஸில் ஊண்டட் நீ கிரீக் படுகொலையில், வெள்ளையனின் ஆதிக்கத்துக்கு இந்திய எதிர்ப்பு முடிவில் அடிபணிந்தது. அங்கு, ஓடிச் சென்ற சியோக்ஸ் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அடங்கிய சுமார் 320 பேர், அரசு துருப்புகளாலும் அவற்றின் ஹாச்கிஸ் தீவிரமாய்ச் சுட்டு வீழ்த்தும் பீரங்கிகளாலும் கொல்லப்பட்டனர். இது லிட்டில் பிக்ஹார்ன் ரிவருக்கு மேல் தெரியும் முகடுகளின்மீது தங்கள் நண்பர்களான கஸ்ட்டரையும் அவரோடு சேர்ந்தவர்களையும் கொலை செய்ததற்காகப் பழிவாங்குதலாய் இருந்தது என்பதாகப் படைவீரர்கள் பெருமையடித்துக் கொண்டனர். இவ்விதமாக, முற்றுகையிடும் அமெரிக்கக் குடிகளுக்கும் முற்றுகையிடப்பட்ட பழங்குடியினருக்கும் இடையில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்குமங்குமாக நிகழ்ந்துகொண்டிருந்த போர்களும் சிறுசிறு சண்டைகளும் முடிவுக்கு வந்தன.
ஆனால் வட அமெரிக்காவில் பூர்வீக அமெரிக்கர்கள் எப்படி தங்களை முதலில் நிலைநிறுத்திக் கொண்டனர்? வட அமெரிக்காவில் வெள்ளையன் முதலில் கால் வைப்பதற்கு முன்பு என்ன வகையான வாழ்க்கைப்பாணியைக் கொண்டிருந்தனர்? b அவர்கள் முடிவில் தோற்கடிக்கப்படுவதற்கும் அடிபணிவதற்கும் எது வழிநடத்தினது? மேலும் ஆரம்பத்தில் குடியேறிய ஐரோப்பிய வம்சத்தினரால் இப்போது ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு நாட்டில் இந்தியர்களின் தற்போதைய நிலைமை என்னவாய் இருக்கிறது? இவையும் பிற கேள்விகளும் பின்வரும் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a “பூர்வீக அமெரிக்கர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை இப்பொழுது சிலர் விரும்புகிற அதே சமயத்தில், “இந்தியன்” என்பது பல குறிப்புப் புத்தகங்களில் இன்னும் பொதுவாய் பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் இச் சொற்றொடர்களை மாற்றி மாற்றி பயன்படுத்துபவர்களாய் இருப்போம். “இந்தியன்” என்பது, கொலம்பஸால் பூர்வீக குடிகளுக்குச் சூட்டப்பட்ட தவறான பெயர். இப்போது மேற்கு இந்தியத் தீவுகள் என்று அறியப்பட்டிருக்கும் இடத்தில் அவர் வந்திறங்கியபோது, தான் இந்தியாவுக்கு வந்துசேர்ந்திருந்ததாக எண்ணினார்.
b இக் கட்டுரைகளில் வட அமெரிக்க இந்தியர்களைப் பற்றி மட்டுமே நாங்கள் கையாளுகிறோம். மெக்ஸிகோ, மத்திப அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிந்தியர்களைப் பற்றி—அஸ்தக்குகள், மாயா, இன்காக்கள், ஆல்மக், மற்றும் பிறரைப் பற்றி—இப் பத்திரிகையின் வரவிருக்கும் இதழ்களில் சிந்திக்கப்படும்.
[பக்கம் 3-ன் படம்]
ஊண்டட் நீ-யில் இறந்தவர்களைப் புதைத்தல்
[படத்திற்கான நன்றி]
Montana Historical Society