எமது வாசகரிடமிருந்து
சபைநீக்கம் “பைபிளின் கருத்து: சபைநீக்கம் செய்வது ஏன் அன்பான ஓர் ஏற்பாடு” (செப்டம்பர் 8, 1996) என்ற கட்டுரையைப் போற்றினேன். நானும்கூட 1987-ல் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தேன்; நான் ஒரு படிப்பினையைக் கற்றுக்கொண்ட பிற்பாடு 1988-ல் மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இந்த அன்பான ஏற்பாடு, என் வாழ்க்கைப் பாணியையும் கூட்டாளிகளையும் பொருத்தவரையில் மாற்றங்களைச் செய்துகொள்ள எனக்கு உதவியது. பைபிள் தராதரங்களை மதிக்கும் ஒரு அமைப்பில் இருப்பதற்கு நாம் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!
ஆர். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
நானும்கூட சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். யாருக்குமே நேரிடக்கூடாத மிகக் கொடுமையான குரோதச் செயல் அது என்று அந்தச் சமயத்தில் நான் நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு! சபைநீக்கம் செய்வதற்கு முன், நான் மனந்திரும்ப வேண்டுமென்பதற்காக சபை மூப்பர்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் அந்த உதவியை நான் பொருட்படுத்தவே இல்லை. சபைநீக்கம் செய்யப்பட்டதால் என் செருக்கெல்லாம் மறைந்துபோனது. யெகோவாவுடன் வைத்திருக்கும் உறவு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள அது எனக்கு உதவியது.
பி. டி., ஐக்கிய மாகாணங்கள்
அமெரிக்க இந்தியர்கள் “அமெரிக்க இந்தியர்கள்—அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?” (செப்டம்பர் 8, 1996) என்ற தொடர் கட்டுரைகளுக்காக நன்றி. அமெரிக்க இந்தியர்களது சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு. மறுபடியும், உங்களது பத்திரிகைகளின் ஒளிவுமறைவற்ற தன்மையும், உண்மைத்தன்மையும், திருத்தமான சரித்திர விவரமும் என்னைக் கவர்ந்தன.
ஏ. எம்., இத்தாலி
ஒரு அமெரிக்க இந்திய ஆசிரியரையோ வழக்கறிஞரையோ ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்தில் எப்போதுமே உங்களால் காணமுடிவதில்லை. உங்களது பத்திரிகையில் வெளிவந்த அட்டைப் படத்துக்கு ஒத்த பழங்காலத்திய உருவப் படங்களே அடிக்கடி வெளிவருகின்றன. இப்படிப்பட்ட படங்களை தொடர்ந்து பயன்படுத்துவதுதானே, காலகாலமாக சித்தரிக்கப்படும் ஒரேமாதிரியான பாணிக்கு எதிராக குரலெழுப்பும் எங்களது முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
கே. எம். டி., ஐக்கிய மாகாணங்கள்
தீங்குவிளைவிக்கும் ஒரே பாணியை முன்னேற்றுவிப்பது நிச்சயமாகவே எங்களது நோக்கம் இல்லை. அந்த அட்டைப்படம் அமெரிக்க இந்தியர்களை நல்ல விதத்திலும் கண்ணியமான விதத்திலும் சித்தரிக்கும் நோக்கத்திலேயே வெளியிடப்பட்டது. பொருளுக்கு பொருத்தமாக இருந்ததால் பாரம்பரிய உடை தேர்ந்தெடுக்கப்பட்டது, மேலும் அது நமது உலகளாவிய வாசகர்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படும். ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில், அதை வாசித்த அநேக அமெரிக்க இந்தியர்கள், அக்கட்டுரைகளுக்காகவும் அப்படத்திற்காகவும் தங்களது பாராட்டைத் தெரிவித்தனர். சில பண்டைய பழக்கவழக்கங்களைத் தக்கவைத்துக்கொள்ள சிலர் விரும்புகின்றனர்; இப்போதும்கூட, சில நிகழ்ச்சிகளின்போது பாரம்பரிய உடையை அணிந்துகொள்கின்றனர்.—ED.
ஒரு அருங்காட்சியகத்தில் மனித இன ஆய்வியலாளராக நான் பணியாற்றி வருகிறேன்; முக்கியமாக வட அமெரிக்க மக்களைப் பற்றி ஆய்வுசெய்வதால் இந்தப் பொருளில் எனக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்க இந்தியர்களைக் குறித்து அறிய ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் இந்தப் பத்திரிகையைக் கொடுப்பதற்காக எனக்கு பத்து பிரதிகளை உங்களால் அனுப்பிவைக்க முடியுமா?
பி. பி., ஜெர்மனி
இந்த வேண்டுகோளுக்கு இணங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.—ED.
இந்தியர்களைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்த கொஞ்சநஞ்ச விஷயமும் திரைப்படங்களிலிருந்து கற்றுக்கொண்டவைதான். இந்தக் கட்டுரைகளைப் படித்த பிறகு, ஹாலிவுட் உண்மையை காண்பிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தியர்களைக் குறித்த என் கருத்து மாறிவிட்டது.
டி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
ஒரு விதத்தில் பார்த்தால், நான் அமெரிக்க இந்தியர்களது சந்ததியில் வந்தவள், ஆகவே இந்தப் பத்திரிகையை படித்து மகிழ்ந்தேன். ஆனாலும், பெரும்பாலும் நம்பப்படுவதுபோல், சிட்டிங் புல் என்பவர் லிட்டில் பிக்ஹார்ன் யுத்தத்தில் தலைமைதாங்கவில்லை.
பி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
சிட்டிங் புல் உண்மையிலேயே போரில் தனிப்பட்ட விதமாக கலந்துகொண்டாரா இல்லையா என்பது சரித்திராசிரியர்களுக்கு இடையேயுள்ள சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் ஆகும். பெரும்பாலான அறிஞர்களின் கருத்து, “நாச்சுரல் ஹிஸ்டரி” என்ற நன்மதிப்புள்ள பத்திரிகையில் காணப்படுகிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “இந்தியப் பதிவுகளின்படி, போரில் கஸ்ட்டரின் எதிராளியாக சிலசமயம் கருதப்படும் சிட்டிங் புல் சண்டையில் கலந்துகொள்ளவில்லை; ஆனால் இந்திய வீரர்களைப் பலப்படுத்துவதற்காக மருந்து தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்தினார்.” இன்னும் தெளிவான விவரம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.—ED.