அவர்கள் எங்கிருந்து வந்தனர்?
“கொலம்பஸ் வருவதற்கு முன்பு எங்களை நாங்கள் எவ்வாறு அழைத்துக் கொண்டோம்? . . . ஒவ்வொரு தனியொரு பழங்குடியிலும், இன்றும்கூட, எங்களில் ஒவ்வொரு மக்களுடைய பெயருக்கான வார்த்தையை, பிற பழங்குடியினர் வைத்திருக்கும் பெயரை அறியாமலே, மொழிபெயர்த்தால், அது அடிப்படையில் அதே அர்த்தத்தையே உடையதாய் இருக்கும். எங்கள் மொழியில் [நரகன்செட்] அது, நீனுக், அல்லது மக்கள் [நவகோவில், டீனே], அதாவது மனிதர் என்று பொருள்படும். அப்படித்தான் எங்களையே நாங்கள் அழைத்துக் கொண்டோம். ஆகவே [ஐரோப்பிய] குடியேற்றக்காரர்கள் இங்கு வந்து சேர்ந்ததும், நாங்கள் யாரென்று எங்களுக்குத் தெரிந்தது, ஆனால் அவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே அவர்களை, ஆவாநாகிசக் அல்லது முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்று நாங்கள் அழைத்தோம், ஏனெனில் அவர்களே வேற்றாளாய் இருந்தனர், அவர்களே எங்களுக்குத் தெரிந்திராதவர்களாய் இருந்தனர், நாங்களோ ஒருவரையொருவர் அறிந்திருந்தோம். மேலும் நாங்கள் மனிதராய் இருந்தோம்.”—டால் ஓக், நரகன்செட் பழங்குடியினர்.
பூர்வீக அமெரிக்கர்களின் தொடக்கத்தைக் குறித்ததில், கோட்பாடுகள் மிகுந்துள்ளன. a இந்தியர்களை, இஸ்ரவேலின் காணாமற்போன பத்துக் கோத்திரங்களாக அழைக்கப்பட்டவர்களின் வம்சத்தாரான எபிரெயர்களாகக் கருதிய குவேக்கர் உவில்லியம் பென் உள்ளிட்ட பலருள் மார்மன் மதத்தைத் தோற்றுவித்தவரான ஜோஸஃப் ஸ்மித் ஒருவராயிருந்தார். ஆசிய பழங்குடி மக்கள், நிலப்பகுதியாலான பாலத்தினாலோ, படகினாலோ இப்போது அலாஸ்கா, கனடா, மற்றும் ஐக்கிய மாகாணங்கள் என்றறியப்படும் இடங்களுக்கு மாறிச் சென்றனர் என்பது மானிடவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கமாகும். இக் கருத்தை டிஎன்ஏ பரிசோதனைகளும் ஆதரிப்பதாகத் தோன்றுகின்றன.
பூர்வீக அமெரிக்கர்கள்—அவர்கள் தோற்றங்களும் நம்பிக்கைகளும்
பூர்வீக அமெரிக்க பதிப்பாசிரியர்களான டாம் ஹில்லும் (செனிகா), மூத்த ரிச்சர்ட் ஹில்லும் (டுஸ்கரோரா), கிரியேஷன்ஸ் ஜர்னி—நேட்டிவ் அமெரிக்கன் ஐடென்டிட்டி அண்ட் பிலிஃப் என்ற தங்களுடைய புத்தகத்தில் எழுதுகின்றனர்: “பூமியிலிருந்து தானேயோ, தண்ணீரிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ, தாங்கள் படைக்கப்பட்டதாகப் பூர்வீக மக்களில் பெரும்பாலானோர் பாரம்பரியமாய் நம்புகின்றனர். மறுபட்சத்தில், பேரிங் ஜலசந்திக்குக் குறுக்கே இருந்த நிலப்பகுதியாலான ஒரு பெரிய பாலத்தின் வழியாக ஆசியர்கள் அமெரிக்காக்களுக்கு இடம் மாறினர் என்ற கோட்பாட்டையும்; இந்த ஆசியர்கள் மேற்கு கோளார்த்தத்தைச் சேர்ந்த பூர்வீக மக்களின் மூதாதையர்களாய் இருந்தனர் என்ற கோட்பாட்டையும் தொல்லியலாளர்கள் கொண்டிருக்கின்றனர்.” பூர்வீக அமெரிக்கர்களில் சிலர், வெள்ளையனின் பேரிங் ஜலசந்தி கோட்பாட்டைப் பற்றி சந்தேகப்படும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய கட்டுக்கதைகளையும் கதைகளையும் நம்புவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆய்வுப்பயணம் செய்யும் பொருட்டு ஆசியாவிலிருந்து இடம் மாறியவர்களாகத் தங்களைக் கருதுவதற்குப் பதிலாக பூர்வீக குடிகளாகத் தங்களைக் கருதுகின்றனர்.
ஆன் இண்டியன் வின்ட்டர் என்ற தன் புத்தகத்தில், ரஸல் ஃபிரீட்மன் விளக்குகிறார்: “மந்தன், [மிஸ்ஸௌரி ஆற்றின் மேற்பகுதிக்கு அருகே இருந்த ஒரு பழங்குடியினர்] நம்பிக்கையின்படி, முதல் மனிதன் ஒரு சக்திவாய்ந்த ஆவியாக, தெய்வீகமானவனாக இருந்தான். அவன், சாதாரண மனிதர்களுக்கும், அண்டத்தில் வசிக்கும் எண்ணற்ற தேவர்கள், அல்லது ஆவிகளுக்கும் ஒரு மத்தியஸ்தனாக செயல்படும்படி, எல்லாவற்றையும் படைத்த உயிர்க்கர்த்தாவால் வெகு காலத்துக்கு முன்பு படைக்கப்பட்டிருந்தான்.” மந்தன் நம்பிக்கை ஒரு ஜலப்பிரளய கட்டுக்கதையையும் உள்ளடக்கியது. “ஒருமுறை, ஒரு பெரிய ஜலப்பிரளயம் உலகை அழித்தபோது, அப்பிரளயத் தண்ணீர்களுக்கு மேலாக எழும்புமாறு, பாதுகாப்பான கோபுரம், அல்லது ‘பேழை’ ஒன்றைக் கட்ட அம் மக்களுக்குக் கற்பித்ததன் மூலம் அந்த முதல் மனிதன் அம் மக்களைக் காப்பாற்றினான். அவனைக் கௌரவிக்குமாறு, ஒவ்வொரு மந்தன் கிராமமும் அந்தக் கட்டுக்கதையில் வரும் கோபுரத்தின் சிறிய உருவ நகல் ஒன்றை—பலகையாலான ஒரு வேலியால் சூழப்பட்ட சுமார் ஐந்து அடி உயர கேதுருவாலான ஒரு கம்பத்தை—கொண்டிருந்தது.”
மந்தன் குடியைச் சேர்ந்தவர்கள், “இறகுகளாலும் மிருதுவான ரோமத்தாலும் சுற்றப்பட்டு, நுனியில் கறுப்பு வர்ணம் தீட்டப்பட்ட மரத்தாலான வெறுப்பூட்டும் தலைப்பகுதியைக் கொண்ட உயரமான கம்பு ஒன்றையும்” ஒரு மத அடையாளமாகக் கொண்டிருந்தனர். இது யாரைக் குறித்துக் காட்டக்கூடும்? “இந்த உருவபொம்மை, மனிதர்மீது மிக அதிகமான செல்வாக்கைக் கொண்டிருந்ததும், ஆனால், உயிர்க்கர்த்தாவைப் போன்றோ, அந்த முதல் மனிதனைப் போன்றோ அவ்வளவு சக்திவாய்ந்ததாய் இல்லாதிருந்ததுமான ஒரு தீய ஆவியான ஓக்கிஹாடாவைக் குறித்துக் காட்டியது.” சமவெளிப் பகுதிகளில் குடியேறியிருந்த இந்தியர்களுக்கு, “ஆவி உலகில் நம்பிக்கை கொள்வது, அன்றாட வாழ்க்கையின் சந்தேகத்துக்கிடமல்லாத ஒரு பாகமாய் இருந்தது. . . . மனித விவகாரங்களை நிர்வகித்த புனித படைப்புகளின் உதவியையும் அங்கீகாரத்தையும் முதலில் நாடாமல், பெரிய தீர்மானங்கள் எதுவும் செய்யப்பட முடியாது, திட்டம் எதுவும் போடப்படமுடியாது.”
தி மித்தாலஜி ஆஃப் நார்த் அமெரிக்கா என்ற தன் புத்தகத்தில் ஜான் பிர்ஹோர்ஸ்ட் விளக்குகிறார்: “குலமரபுகள் தோன்றுவதற்கு முன்பு, ஆசேஜ் குடியினர், காநிட்ட (சட்டமும் ஒழுங்கும் இல்லாமல்) என்றறியப்பட்ட ஒரு நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து திரிந்தனர் என்று கூறப்பட்டது. ஓர் அமைதியான, படைக்கும் திறனுள்ள சக்தி, வானத்தையும் பூமியையும் நிரப்புகிறது என்றும், நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் ஆகியவற்றைப் பூரண ஒழுங்கில் அசைவிக்கிறது என்றும் அந்த ஆரம்ப நாட்களில் கொஞ்சம் பெரிய மனிதர் (Little Old Men) என்றழைக்கப்பட்ட குறிப்பிட்ட சிந்தனையாளர்கள் . . . ஒரு கோட்பாட்டை உருவாக்கினர் என்றதோர் பாரம்பரியக் கருத்து இருந்தது. அதை வாகான்டா (மாயமான சக்தி) அல்லது ஈயாவாவோனாக்கா (நம் இருப்புக்குக் காரணர்) என்று அழைத்தனர்.” அதைப்போன்றதோர் கருத்தே சுனி என்ற சியோக்ஸ் குடியினராலும், மேற்கிலுள்ள லக்கோட்டா குடியினராலும் கொள்ளப்படுகிறது. “இயர்த்மேக்கரை” (Earthmaker) உட்படுத்தும் படைப்பு சம்பந்தமான ஒரு கட்டுக்கதையை வினபேகோவினரும் கொண்டுள்ளனர். அந்த விவரப்பதிவு கூறுகிறது: “அவன் ஒளி வேண்டுமென விரும்பினான், ஒளி வந்தது. . . . பிறகு அவன் மறுபடியும் பூமி வேண்டும் என்று நினைத்து விரும்பினான், அப்படியே இப் பூமி தோன்றியது.”
பைபிள் மாணாக்கருக்கு, பூர்வீக அமெரிக்கரது நம்பிக்கைகளுக்கும் பைபிளில் தெரிவிக்கப்பட்ட போதனைகளுக்கும் இடையே இணைப்பொருத்தங்களைக் காண்பது மிகவும் அக்கறைக்குரியது, விசேஷமாக பெரிய ஆவியைப் பொறுத்தமட்டில், “நம் இருப்புக்குக் காரணர்,” என்பது யெகோவா என்ற தெய்வீக நாமத்தின் அர்த்தமாகிய, “அவர் ஆகச் செய்கிறவர்” என்பதை ஒத்திருப்பது அக்கறையூட்டுகிறது. பிற இணைப்பொருத்தங்கள், பைபிளில் ஜலப்பிரளயம் என்றும், சாத்தான் எனப்படும் தீய ஆவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை உள்ளடக்குகின்றன.—ஆதியாகமம் 1:1-5; 6:17; வெளிப்படுத்துதல் 12:9.
பூர்வீக அமெரிக்கரது தத்துவங்களைப் புரிந்துகொள்ளுதல்
தங்கள் மூதாதையரிடமிருந்து ஐந்து பரிசுகளைப் பூர்வீக அமெரிக்கர்கள் பெற்றிருப்பதாய்ச் சொல்வதாக பூர்வீக அமெரிக்க எழுத்தாளர்களான டாம் ஹில்லும் ரிச்சர்ட் ஹில்லும் விளக்குகின்றனர். “முதலாவது பரிசு . . . இந்த நிலத்தோடுள்ள எங்கள் பற்று.” ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பும் வந்ததிலிருந்தும் அவர்களது வரலாற்றின் முன்னிலையில் பார்க்கையில், யார் அதை மறுக்க முடியும்? பூர்வீக அமெரிக்கர்களால் புனிதமாக அடிக்கடி கருதப்படும் அவர்களின் நிலம், கட்டாயமாய், வஞ்சகமாய், அல்லது நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்களால் படிப்படியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
“இரண்டாவது பரிசு, நம் மக்களோடு சேர்ந்து விலங்குகள் கொண்டிருக்கும் சக்தியும் ஆவியும் ஆகும்.” விலங்குகளுக்கான பூர்வீக அமெரிக்கரின் மரியாதை பல வழிகளில் காட்டப்பட்டிருக்கிறது. வெறும் உணவுக்காகவும், உடைக்காகவும், உறைவிடத்திற்காகவுமே அவர்கள் வேட்டையாடினர். எருமையை (காட்டெருது) ஒட்டுமொத்தமாகத் துடைத்தழித்தவர்கள், பூர்வீக மக்கள் அல்லர், ஆனால் இரத்தப்பிரியனும் குறுகிய எண்ணத்துடன் பேராசையுள்ளவனுமான வெள்ளையனே துடைத்தழித்தான்.
“மூன்றாவது பரிசு, உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் உறவினர்களும், நாங்கள் அவர்களுக்கு உருவாக்கும் உருவங்களின் மூலமாக எங்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்பவர்களுமான ஆவி சக்திகள் ஆகும்.” இங்கு உலகளவிலான பல மதங்களின் பொதுவான பொருள் இருக்கிறது—மரணத்துக்குப் பிறகு உயிர்வாழும் ஏதோ ஆவி அல்லது ஆத்துமா. b
“நான்காவது, எங்களுடைய பழங்குடிகளுக்கான பாரம்பரியங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுத் தொடர்ந்திருப்பதன்படி, நாங்கள் யார் என்று அறிந்திருப்பதாகும்.” இன்று இது, பழங்குடியினரின் விவகாரங்களைக் கலந்தாலோசிக்க மக்கள் கூடிவரும் இடங்களிலுள்ள பழங்குடியினரின் சடங்குகளில், அல்லது பழங்குடி நடனமும் இசையும் நடைபெறும் சமூகக் கூட்டங்களில் நிச்சயமாகவே காணப்படுகிறது. அந்த இந்திய உடை, முரசுகளின் சந்தத்துடன் கூடிய தாளம், நடனங்கள், குடும்பமும் குலமரபு மீண்டும் ஒன்றுசேர்தல்களும்—எல்லாமே பழங்குடியினரின் பாரம்பரியத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
“கடைசி பரிசானது, படைப்பு முறை—இயற்கையில் கிடைக்கும் பொருட்களை விசுவாசம் மற்றும் பெருமிதத்தின் பொருள்களாக மாற்றுவதன் மூலம் எங்கள் நம்பிக்கை மெய்மையாக்கப்படுவது—ஆகும்.” அது கூடை முடைவதாய், நெய்வதாய், உருவமைப்பதாய், தட்டுமுட்டுச் சாமான்களுக்கு வர்ணம் தீட்டுவதாய், நகை மற்றும் அணிகலன்களைப் புதுப்பாணியில் உருவாக்குவதாய், அல்லது வேறெந்த படைப்புச் செயலாய் இருந்தாலும், அது அவர்களின் காலம்காலமான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுடன் இணைக்கப்படுகிறது.
எல்லா பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் விவரிக்க பல புத்தகங்கள் தேவைப்படுவதாய் இருக்குமளவுக்கு பல பழங்குடியினர் இருக்கின்றனர். நமக்கு இப்பொழுது அக்கறைக்குரியதாய் இருப்பது, கிறிஸ்தவர்களாக கருதப்பட்ட லட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் வந்துகொண்டிருந்தது, பூர்வீக அமெரிக்கர்களின்மீது என்ன தாக்கத்தைக் கொண்டிருந்தது என்பதுதான்.
[அடிக்குறிப்புகள்]
a “பூர்வீக அமெரிக்கர்கள்” என்ற பதம் கனடாவில் வாழும் பழங்குடியினரையும் தெளிவாகவே உள்ளடக்குகிறது. ஆசியாவிலிருந்து ஆரம்பத்தில் இடம் மாறியவர்கள் மிதமான தட்பவெப்பநிலையுள்ள தென்பகுதியை நோக்கிச் செல்லும் தங்கள் வழியில் வடமேற்கு கனடாவின் வழியாகப் பயணம் செய்ததாகப் பலர் நம்புகின்றனர்.
b மரணத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் அழிவில்லாத ஆத்துமா அல்லது ஆவியில் நம்பிக்கை கொள்வதற்கு எந்த ஆதரவையும் பைபிள் அளிப்பதில்லை. (ஆதியாகமம் 2:7; எசேக்கியேல் 18:4, 20-ஐக் காண்க.) இப் பொருளின்மீது மிகவும் விவரமான தகவலுக்கு, கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தில், பக்கங்கள் 52-7, 75, மற்றும் அதன் அட்டவணையில் “அழிவில்லாத ஆத்துமா, அதில் நம்பிக்கை” என்ற தலைப்பின்கீழ் காண்க. இப் புத்தகம் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.