கூட்டு குற்றச்செயல் உங்களை எப்படி பாதிக்கிறது
ஜப்பானிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஒரு மாஃபியா கும்பலின் ஆண்டவர் (தலைவன்) அக் கும்பலில் புதிய உறுப்பினனாகச் சேர்ந்தவனின் விரலை ஊசியால் குத்துகிறான். ஒரு “புனிதரின்” படத்தின்மீது இரத்தம் சொட்டுச்சொட்டாக வடிகிறது. அடுத்து, அந்தப் படத்தை நெருப்பு சுட்டெரிக்கிறது. ‘நம்ம கும்பலோட ரகசியம் எதையாவது வெளியே சொன்னேன்னு தெரிஞ்சுது, அவ்வளவுதான், ஒன்னோட உயிரும் இந்தப் புனிதனுடையதைப்போலவே சுட்டெரிக்கப்பட்டுடும்,’ என அந்தத் தலைவன் இந்த இளைஞனிடம் சொல்கிறான்.
அமதியின் நியதி—இத்தாலிய மொழியில், ஓமெர்ட்டா—கூட்டு குற்றச்செயலைப் பல்லாண்டுகளாய் பெரும்பாலும் இரகசியமாகவே வைத்திருந்தது. இன்றோ, கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களில் சிலர் செய்தியை வெளிவிட்டுவிடுவதால், எங்குப் பார்த்தாலும் தலையங்கச் செய்திகளிலெல்லாம் குற்றவாளிக் கும்பல்களைப் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. தவறுக்காக மனம் வருந்தும் (இத்தாலிய மொழியில் பென்டீட்டி) அல்லது மாஃபியாவுக்கு எதிராக மாறிவிடும் இவர்கள் குற்றஞ்சாட்டிய பிரபல புள்ளி, ஜூலியோ ஆண்ட்ரேயாட்டி என்ற பெயருடையவர். இவர் ஏழு தடவை இத்தாலியின் பிரதம மந்திரியாக இருந்து, இப்போது மாஃபியாவுடன் வைத்திருந்த தொடர்புகளால் நீதிவிசாரணைக்கு வைக்கப்பட்டுள்ளார்.
எங்குமுள்ள குற்ற அமைப்புகள் வாழ்வின் எல்லா வழிமுறைகளையும் முற்றுகையிட்டிருக்கின்றன: கோச நாஸ்ட்ரா என்றும் அழைக்கப்படும், இத்தாலியிலும் ஐக்கிய மாகாணங்களிலும் இருக்கும் மாஃபியா கும்பல்; தென் அமெரிக்காவில் இருக்கும் போதைப்பொருள் கடத்தும் ஸ்தாபனங்கள்; சீனாவின் ட்ரையடுகள்; ஜப்பானைச் சேர்ந்த யாக்கூஸா ஸ்தாபனம். அவர்களுடைய கெட்ட நடவடிக்கைகள் நம் அனைவரையும் பாதித்து நம் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கின்றன.
ஐக்கிய மாகாணங்களில், நியூ யார்க் நகரை மாஃபியா கும்பல் ஐந்து தொகுதிகளாகப் பகிர்ந்துகொள்வதாக சொல்லப்படுகிறது. எவ்வாறென்றால், பலவந்தமாகப் பிடுங்குவது, பாதுகாப்பு தரப்போவதாக மிரட்டி பணம் பறிப்பது, அதிக வட்டிக்குக் கடனுதவி அளிப்பது, சூதாடுவது, போதைப்பொருள் விற்பனை செய்வது, விபச்சாரம் செய்வது போன்ற வெவ்வேறு வழிகளில் நூற்றுக்கோடிக்கணக்கான டாலர் பணத்தை சம்பாதிக்கிறது. இந்த மாஃபியா தொகுதிகள், குப்பைக்கூளம் துப்புரவுப் பணி, டிரக்குகளில் ஏற்றிச்செல்வது, கட்டுமான வேலை, உணவுப்பொருள்கள் வழங்கீடு செய்வது, உடைகள் தயாரிக்கும் ஸ்தாபனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு தொழிலாளர் சங்கங்களின்மீது தங்களுக்கிருக்கும் அதிகாரத்தைக்கொண்டு, தொழிலாளர் கலகங்களைத் தீர்த்துவைக்கவோ, நாச வேலை செய்து ஒரு திட்டத்தை முறியடிக்கவோ முடியும். உதாரணமாக, ஒரு கட்டுமான இடத்தில், ஒருநாள், புல்டோஸர் வேலைசெய்யாமல் போய்விடும்; இன்னொரு நாள் மண்தோண்டும் இயந்திரத்தின் பிரேக்குகள் செயல்படாமல் போய்விடும்; அவற்றை இயக்கும் பொறியியலர்கள் தினம் வேலைக்கு வந்து, ஒன்றும் செய்யாமல் போவர்—இந் நிகழ்ச்சிகளும் இதுபோன்ற இன்னும் ஏராளமானவையும், அவை லஞ்சமாயிருந்தாலும், தொழில் ஒப்பந்தமானாலும், அந்தக் கும்பல் வற்புறுத்திக் கேட்பவை எவையோ, அவற்றை அந்தக் கட்டிட சொந்தக்காரர் கொடுக்கும் வரையில் தொடருகின்றன. உண்மையில், “தொழில் அதிபர்கள் இந்தக் கும்பலுக்கு லஞ்சம் கொடுப்பது, உடனடி விநியோகங்களையும், பணியாளர்களுடன் சமாதான உறவுகளையும், குறைந்த கூலிக்கு உழைக்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் திறமைகளையும் குறித்ததில் நிச்சயமளிக்கிறது,” என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
கொலம்பியாவில் போதைப்பொருள் கடத்தும் இரண்டு ஸ்தாபனங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவற்றில், மெடலின் நகர் ஸ்தாபனத்தின் தலைவரான பாப்ளோ எஸ்கோபார் 1993-ல் சுட்டுக் கொல்லப்படும் வரையிலும் போட்டியிட்டன. அதன் பிறகு, காலி நகரத்தைச் சேர்ந்த ஸ்தாபனம், உலகின் கொகேய்ன் கடத்தல் தொழிலையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. 1994-ல், ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 700 கோடி டாலர் பணத்தை மொத்தமாக சம்பாதித்து, ஒருவேளை உலகிலேயே மிகப் பெரிய கூட்டு குற்றச்செயல் நிறுவனமாக ஆனது. ஆனால் அதை இயக்குவித்து வந்தவரான ஜோஸ் சாந்தாகுரூஸ் லாண்டோன்யோ 1995-ல் கைது செய்யப்பட்டதானது, அந்த ஸ்தாபனத்துக்கே பெருத்த அடியாகிவிட்டது. என்றபோதிலும், அடுத்த தலைவராகப் பதவியேற்பதற்கு ஆவலோடு ஒருவர் காத்திருப்பதுண்டு.
கிழக்கு ஐரோப்பாவில் இருந்துவந்த ஒரு கட்சியின் ஆட்சி 1989-90-ல் முடிவுக்கு வந்தபோது, ரஷ்யாவைச் சேர்ந்த மாஃபியா கும்பல் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் முதல் தடவையாக தலைக்காட்டியது. அதன் விளைவாக, “ரஷ்யாவில் செய்யப்படும் எந்தவொரு தொழிலும் மாஃபியாவுடன் சம்பந்தம் கொண்டே ஆக வேண்டும்” என்று நியூஸ்வீக் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வங்கியாளர் தெரிவிக்கிறார். நியூ யார்க்கைச் சேர்ந்த பிரைட்டன் பீச்சிலும்கூட, சட்டவிரோதமாக கேசொலைன் (gasoline) விநியோகம் செய்வதை உட்படுத்திய சிக்கலான குற்றச்செயல் திட்டங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தை ரஷ்ய மாஃபியா கும்பல்கள் கொள்ளையடிப்பதாய் அறிக்கை செய்யப்படுகின்றன. காருக்கு கேசொலைனை உபயோகிப்பவர்கள் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது; அரசும் வரிகளை இழக்கிறது. ரஷ்ய கும்பல்கள் கிழக்கு ஐரோப்பாவில் விபச்சார அமைப்புகளையும் நடத்தி வருகின்றன. அவை செய்யும் பெரும்பாலான தவறுகளின்போது, சட்டத்தின் கையில் பிடிபடாமல் ஏய்த்துவிடுகின்றன. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், போர்வீரர்கள் ஆகியோர் பெரும் ஆயுதந்தாங்கி இருக்கும்போது, அவர்களை எதிர்த்துப் போரிட யாரால்தான் முடியும்?
கிழக்கத்திய நாடுகளில் சூழ்நிலை வித்தியாசமாய் இல்லை. ஜப்பானில் திரையரங்கு, டிவி போன்ற பொழுதுபோக்கு காட்சித் துறையைச் சேர்ந்தவர்கள், உள்நாட்டிலுள்ள யாக்கூஸா ஸ்தாபனத்துக்கு உரிய மரியாதை செலுத்தாவிட்டாலோ, கட்டாய மானியத் தொகையைச் செலுத்தாவிட்டாலோ, எல்லா தொல்லைகளையும் அனுபவிக்க எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான். இங்கும், பார்களிலும், வழிப்போக்கர்களிடமும்கூட, பாதுகாப்பு தரப்போவதாக மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. அதோடு, யாக்கூஸா ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த நிறுவனங்களை ஒழுங்கமைப்பதன் மூலமும், தங்கள் செல்வாக்கைக் கொண்டு, அதிக லாபம் ஈட்டும் கார்ப்பரேஷன்களை உள்ளடக்கும் பொருளியல் தொகுதிகளிடமிருந்து வற்புறுத்தி பணம் பறிப்பதன் மூலமும், வெளிநாடுகளிலுள்ள குற்றச்செயல் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதன் மூலமும் ஜப்பானிய பொருளியலினுள்ளேயும் நுழைந்துள்ளனர்.
ஹாங் காங் மற்றும் தையுவனை தலைமையகங்களாகக் கொண்ட குற்றச்செயல் அமைப்புகள் உலக முழுவதிலும் ஒரு வலைப்பின்னலைப் பரப்பவும் செய்கின்றன. ட்ரையடுகள் என்ற பெயரைத் தவிர, அவர்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய விவரங்கள் அதிகம் தெரிய வருவதில்லை. சீனத் துறவிகள், சீனாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மஞ்சூரியர்களுக்கு எதிராக ஒன்றுசேர்ந்த சமயமாகிய 17-வது நூற்றாண்டைச் சேர்ந்தது அவர்கள் சரித்திரம். அவர்களுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாயிரக்கணக்காக அதிகரித்தபோதிலும், ஹாங் காங்கிலுள்ள ட்ரையடுகள், ஒரு திட்டவட்டமான குற்றச்செயல் அல்லது குற்றச்செயல்களுக்காக தற்காலிகக் குழுக்களை ஏற்படுத்தி, அவர்களை போலீஸார் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆக்கிவிடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. ஹீரோயினைக் கடத்துவதில் நூற்றுக்கோடிக்கணக்கான டாலர் பணத்தைச் சம்பாதித்து, ஹாங் காங்கை, கள்ளக் கடன் அட்டைத் தயாரிப்பு மையமாக மாற்றியிருக்கின்றனர்.
தி நியூ எத்னிக் மாப்ஸ் என்ற தனது புத்தகத்தில் உவில்லியம் க்ளைன்க்னெக்ட், ஐக்கிய மாகாணங்களில் நடக்கும் குற்றச்செயலைப் பற்றி எழுதியதாவது: “கூட்டு குற்றச்செயலை நடத்தும் விசேஷ மக்கள் தொகுதியில், சீன இனத்தைச் சேர்ந்த குற்றச்செயல் கும்பலைத் தவிர வேறொரு கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் இல்லை. . . . சீன குற்றச்செயல் தொகுதிகள் நாடு முழுவதிலும் நகர்ப்புறங்களில் தீவிரமாய் அதிகாரம் பெற்று வருகின்றன. . . . அவை நியூ யார்க்கில் மட்டுமே மாஃபியா கும்பலுக்கு அடுத்த நிலையில் உள்ளன.”
ஹாங் காங்கில் தோன்றிய, சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தும் இன்னுமொரு வடிவைப் பற்றி யூ.எஸ். நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுவதாவது: “அயல்நாட்டவரை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவருவது கூட்டு குற்றச்செயலின் ஓர் உருவாகும்.” ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய மாகாணங்களில் சட்டவிரோதமாக 1,00,000 சீனர்கள் நுழைகின்றனர் என்பதாக சில அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அவ்வாறு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டவர், தன்னை ஒரு செல்வச்செழிப்பு மிக்க தேசத்திற்குள் கொண்டுவந்ததற்காக குறைந்தபட்சம் 15,000 டாலர் பணமாவது செலுத்த வேண்டியிருக்கிறது, அதையும் அவர் வந்துசேர்ந்த பிறகு பெரும்பாலான தொகையை முழுவதுமாய்க் கட்டிவிட வேண்டியுள்ளது. இவ்வாறு, வேற்றுநாட்டுக்குக் குடிபுகுந்தவர்கள் பலருக்கு, அவர்களது லட்சியங்கள், இனிப்பகங்களிலும் விபச்சார விடுதிகளிலும் கட்டாயப் பணிபுரியும் ஒரு கொடுங்கனவாக ஆகிறது.
நீங்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதால், கூட்டு குற்றச்செயலால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை என்று உணரலாம். ஆனால் அது உண்மையில் அப்படி இருக்கிறதா? பல கண்டங்களில் வாழ்ந்துவரும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பலர் தென் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் போதைப்பொருள்களுக்குப் பணம் செலுத்துவதற்காக குற்றச்செயல் புரிகின்றனர். கூட்டு குற்றச்செயல் புரியும் தொகுதிகளுடன் இணைக்கப்பெற்றுள்ள நிறுவனங்களுக்கு பொதுமக்கள் சேவைகளுக்கான ஒப்பந்தங்கள் அளிக்கப்படுவதை கூட்டு குற்றச்செயல் நிச்சயப்படுத்திக்கொள்கிறது; அதன் விளைவாக, குடிமக்கள் அதிக பணம் செலுத்துகின்றனர். ஐக்கிய மாகாணங்களில், “திருட்டு, வழிப்பறி, லஞ்சம், சட்டவிரோதச் செயலின் மூலம் விலை நிர்ணயம் செய்தல், வியாபாரத்தை மட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக கூட்டு குற்றச்செயல் பொருட்களின் விலைகளைத் திரித்துக் கூறுகிறது” என்றும், பொருட்களை வாங்குபவர்கள் மாஃபியா கும்பலுக்கு போய்ச்சேரவிருக்கும் “கூடுதல் கட்டணம் என்று உண்மையில் அழைக்கப்படக்கூடிய” பணத்தைச் செலுத்தும்படி வற்புறுத்தப்படுகின்றனர் என்றும், கூட்டு குற்றச்செயலின்மீது நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் குழு ஒரு முறை சொன்னது. ஆகவே, குற்றச்செயலின் விளைவுகளிலிருந்து எவரும் தப்பித்துக்கொள்வதில்லை. நாம் அனைவருமே பொருளாதார ரீதியில் துன்புறுகிறோம்.
ஆனால் கூட்டு குற்றச்செயல் இன்று ஏன் செழித்தோங்குகிறது?
மாஃபியா கும்பல்—அதன் ஆரம்பம்
“மாஃபியா கும்பல், இடைக்காலத்தின் பிற்பகுதியில் சிசிலியில் தோன்றியது. அத் தீவின்மேல் படையெடுத்து வந்த வெவ்வேறு அயல்நாட்டினரின் ஆட்சியைக் கவிழ்த்துப் போடுவதில் மும்முரமாய் ஈடுபட்டுவந்த ஓர் இரகசிய அமைப்பாய் ஒருவேளை அங்கு ஆரம்பித்திருக்கலாம்—உதாரணமாக, சாரஸன்கள், நார்மன்கள், ஸ்பானியர்கள். பல சிறு தனியார் படைகளிலிருந்து அல்லது மாஃபி யிலிருந்து உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டதனாலேயே மாஃபியா கும்பல் என்றழைக்கப்படலாயிற்று. அந்த உறுப்பினர்கள், ஊரில் இராமல் வெளியே சென்றுவிடும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நில உடைமைகளைப் பார்த்துக்கொள்வதற்காக சம்பளத்துக்கு அமர்த்தியவர்களேயாவர். இந்த நிலங்களை, கொள்ளைக்காரர்களிடமிருந்து சட்டவிரோதமான சூழ்நிலைகளில் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளே நூற்றாண்டுக்கணக்கில் சிசிலித்தீவு முழுவதிலும் நிலவிவந்தன. 18-வது, 19-வது நூற்றாண்டுகளின்போது, இத் தனியார் படைகளிலுள்ள திடகாத்திரமான ரவுடிகள் கூட்டுச்சேர்ந்து, அந்த நிலச் சொந்தக்காரர்களுக்கு எதிராகவே மாறிவிடுமளவுக்கு பலம் பெற்றனர். நில உடைமைகள் பல அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமளவுக்கு அவர்கள் பிரபலமாகிவிட்டனர். ஆகவே அந்த நிலச் சொந்தக்காரர்களின் பயிர்களைப் பாதுகாப்பதற்கு ஊதியமாக, அவர்களிடமிருந்து பணத்தை பலவந்தமாகப் பிடுங்கினர்.” (தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா) பாதுகாப்பு தரப்போவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக பணம் பறிப்பது அவர்களின் செயல்முறையாய் ஆனது. அவர்கள் தங்கள் செயல்முறைகளை ஐக்கிய மாகாணங்களுக்கும் எடுத்துச்சென்றனர். அங்கே, சூதாட்டம், வற்புறுத்தி வேலை வாங்குதல், அதிகப்படியான வட்டிக்குக் கடன் வழங்குதல், போதைப்பொருள் கடத்துதல், விபச்சாரம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.