கூட்டுகுற்றச்செயல் ஏன் செழித்தோங்குகிறது?
அச்செயல் கும்பலைச் சேர்ந்த இழிபேரெடுத்த ஒருவராவார். அவர், விநியோகம் மற்றும் தேவை சம்பந்தமான சட்டத்திற்கு இசைந்துசெல்லும் வெறும் ஒரு வர்த்தகராகவே தன்னைப் பற்றி மார்தட்டிக்கொண்டார். ஒரு வழக்குரைஞர், ஜப்பானின் மிகப்பெரிய யாக்கூஸா நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்ததாவது: “[பாலின, போதைப்பொருள், மற்றும் சூதாட்ட] நடவடிக்கைகளுக்கு ஓர் பலத்த தேவை இருப்பது மறுக்க முடியாதது.” அந்தத் தேவையே கூட்டு குற்றச்செயலை வளர்க்கிறது. எவருமே குற்றச்செயலுக்குப் பலியாவதை விரும்பாத போதிலும், சிலர் குற்றச்செயல் அமைப்புகளை நாடி, அவர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
உதாரணமாக, பல நாடுகளில் வருவாயைப் பெறுவதற்கான ஒரு வழியாய் கும்பல்காரர்கள் பயன்படுத்தும் உத்தியான, பாதுகாப்பு தரப்போவதாக மிரட்டி பணம் பறிப்பதை (protection rackets) எடுத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் அவர்கள் நேர்மையான கடை முதலாளிகளைக் குறிவைக்கிறபோதிலும், பொதுவாக அவர்கள் கேள்விக்கிடமான தொழில்களை நடத்துபவர்களையே கொள்ளையடிக்கின்றனர். டோக்கியோவில், ஷீன்யூக்கூ பகுதியில், வீடியோவிளையாட்டு நிலையங்கள் என்ற பெயரில், சூதாட்டத் தொழில் நடத்திவரும் ஒரு முதலாளி சொன்னதாவது: “ஒரு கிளார்க்கைக் கத்தியால் குத்தி, இருபது லட்சம் [யென் (20,000 டாலர்)] கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் அதற்காக நாங்கள் போலீஸை கூப்பிடப்போகிறவர்களாய் இல்லை.” ஏன்? “நாங்கள் ஒரு சட்டவிரோதமான செயலில் (சூதாட்டம்) ஈடுபட்டுவருவதால், போலீஸுடன் எவ்விதத்திலும் சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரு வாடிக்கையாளர் ரவுடித்தனம் பண்ணினால், நாங்கள் யாக்கூஸாவை அழைக்கிறோம்.” இந்தச் சூதாட்ட நிலையக்காரர் யாக்கூஸாவிற்கு மாதம் 4,000 டாலர் கட்டுகிறார். அந்தச் சமயத்தின்போது, அவருடைய சட்டவிரோத செயலின் மூலமாக அவருக்குக் கிடைக்கும் கொள்ளை லாபமான 3,00,000 டாலருடன் ஒப்பிட, இந்தப் பணம் மிகக் குறைந்த ஒரு கட்டணமே. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? சட்டவிரோத சூதாட்டத்தை அனுபவிப்பவர்களிடமிருந்தே.
பிரச்சினையைத் தவிர்க்க நினைக்கும் மதிப்பான விதத்தில் செயல்படும் தொழில்களின் விஷயத்திலும் இதுவே உண்மையாயிருக்கிறது. ஆண்டுக்கு 1.5 கோடி டாலர் சம்பாதிக்கும் ஒரு பெயின்ட்டிங் காண்ட்ராக்டர், கும்பல்காரர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் 38 லட்சம் டாலரை சேமித்துக்கொண்டதாக நியூ யார்க்கைச் சேர்ந்த ஓர் அலுவலகம் மதிப்பீடு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம், அந்தக் காண்ட்ராக்டர் குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளவும், கும்பலைக் கைக்குள் வைத்திருக்கும் தொழிலாளர் சங்கத்துடன் மோதலைத் தவிர்க்கவும் முடிந்தது. ஜப்பானில், பொருளாதார வகையில் செழித்தோங்கிய ஒரு காலப்பகுதியில், ஃபைனான்சியர்கள் ரியல் எஸ்டேட்டுகளில் தங்களுடைய பணத்தைக் கொட்டினர். அதோடு, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டுவதற்கு வழிவகுக்கும் வகையில், பழைய வீடுகளையும் கடைகளையும் இடித்துப் போட்டனர். குடியிருப்போர் வீட்டைக் காலிபண்ணாமலோ, தங்களுடைய நிலத்தை விற்காமலோ இருப்பார்களேயானால், அவர்களை வெளியேற்றுவதற்காக ஃபைனான்சியர்கள் பெரும்பாலும் யாக்கூஸாவுடன் தொடர்புடைய ஜீயாகேயா கும்பலை வரவழைத்தனர்.
யாக்கூஸா கும்பலைச் சேர்ந்தவர்கள், 80-களின்போது பணத்தைக் கடன் வாங்குவதும், சம்பாதிப்பதும் எத்தனை சுலபம் என்பதைக் கண்டறிந்தபோது, நிறுவனங்களை உருவாக்கி, ரியல் எஸ்டேட் மற்றும் லாபம் நிச்சயமில்லாத வியாபாரத்தில் துணிகரமாக முதலீடு செய்வதிலும் மூழ்கிவிட்டனர். தெளிவாகவே, தங்கள் சொந்த லாபத்தைக் கருதி வங்கிகளும் கடனுதவி அளிக்கும் ஸ்தாபனங்களும் இந்த நிறுவனங்களில் தங்கள் பணத்தைக் கொட்டினர். ஆனால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டபோதோ, அந்த வங்கிகள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதைக் கடினமாகக் கண்டன. ஜப்பானில் குறைந்த பொருளாதார நடவடிக்கை மெல்ல தலைதூக்கிய காலத்தைப் பற்றி நியூஸ்வீக் பத்திரிகையில் பேசியபோது, ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி கூறியதாவது: “நாள்பட்ட கடன்களை உட்படுத்தும் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட முடியாமற்போவதற்கான உண்மைக் காரணம் என்னவென்றால், அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு, கூட்டு குற்றச்செயலுடன் தொடர்புடையதாய் இருப்பதே.”
உண்மையில், மக்கள் தங்கள் சிற்றின்ப இச்சைகளைத் திருப்திப்படுத்த ஆவலாய் இருப்பது எங்கேயோ, அங்கேயே கூட்டு குற்றச்செயல் எப்படியாவது வேர்விட்டு செழித்தோங்குகிறது. இன்பம், செக்ஸ், பணம் ஆகியவற்றுக்கான பேராசையே, சட்டவிரோதமாக போதைப்பொருளைக் கடத்தி விற்றல், விபச்சாரம், சூதாட்டம், அதிக வட்டிக்குக் கடனுதவி அளித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை வழிவகுக்கிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொதுவாக கும்பல்காரர்களுக்கு தீனிபோட்டு அவர்களைக் கொழுக்க வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. கூட்டு குற்றச்செயல், தங்கள் சொந்த உடல் இன்பம் மற்றும் பசி சம்பந்தப்பட்ட ஆசைகளைத் திருப்திப்படுத்தத் தீர்மானமாய் இருப்பவர்களின் தேவைகளுக்கு இசைந்து செயல்படுவது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது!
போலி குடும்ப அமைப்பு
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தேவைகளோடுகூட, கூட்டு குற்றச்செயல் செழித்தோங்க உதவுவதற்கான வேறொரு தேவையும் இருக்கிறது. ஜப்பானில், சமீபத்தில் காலமான, மிகப் பெரிய யாக்கூஸா நிறுவனங்கள் ஒன்றின் தலைவர், சட்டவிரோதிகளைத் தனக்குக்கீழ் வைத்துப் பராமரிப்பதற்குக் காரணம், தார்மீக விஷயத்தில் பொல்லாதவர்களாய் ஆகிவிடாதபடி அவர்களைப் பாதுகாப்பதற்கே என்று அடித்துக் கூறினார். அந்தக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குத் தான் ஒரு தகப்பனாய் இருப்பதாகவும் உறுதியுடன் சொன்னார். எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலான கும்பல்காரர்கள், அப்படிப்பட்ட போலி குடும்ப உறவுகளின்மீதே தங்களுடைய அமைப்புகளைக் கட்டுகின்றனர்.
ஹாங் காங்கில் ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த சீ சன் என்பவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். a அவருடைய அப்பா எதற்கெடுத்தாலும், சின்னஞ்சிறு விஷயங்களுக்கெல்லாம் வன்மையாக அடித்தார். சீ சன் இளைஞனாய் இருந்தபோது கலகம் செய்பவரானார், அது, அவர் தன் 12-வது வயதில், பேர்போன ட்ரையடுகளின் கூட்டத்தைச் சேர்ந்துகொள்வதில் விளைவடைந்தது. குற்றச்செயல் சம்பந்தப்பட்ட அமைப்புகளில், தான் “சௌகரியமாயும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதமாயும் உணர்ந்த” ஓரிடத்தைக் கண்டுபிடித்தார். ஆயுதமணிந்து போரிடுவதில் அவருக்கிருக்கும் வீரத்தால், விரைவில் அவர் பலருக்குத் தலைவராகும் ஒரு நிலைக்கு உயர்த்தப்பட்டார். முடிவில், அவருக்கு 17 வயதே ஆகியிருந்தபோது, சிறையில் போடப்பட்டார்.
சீ சன்னைப் போன்ற பலர், வீட்டில் கிடைக்காத குடும்பப் பிணைப்பைப் பெறுவதற்காக குற்றச்செயல் அமைப்புகளை நாடுகின்றனர். அப்படிப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் அக்கறையுள்ளவர்களாய் தாங்கள் இருப்பதாக உறுதியுடன் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் தற்பிரியராய் இருப்பதை இளையவர்கள் காணும்போதுதான் பெரும்பாலும் ஏமாற்றமடைகின்றனர்.
ஒளியின் தூதன்
1992-ல், குண்டர் ஒழிப்புச் சட்டத்தின்கீழ், ஜப்பானிலுள்ள மிகப்பெரிய குற்றச்செயல் கும்பல் ஒரு வன்முறைத் தொகுதியாக குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. அப்போது, தீமைக்கு எதிராகப் போராடும் “வீரப்பண்புடையோர்” என்று அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களை மார்தட்டிக் கொள்வதாக, அதன் தலைவர்களில் ஒருவர் சொல்லிக்கொண்டார். 1995-ல் பயங்கரமான பூமியதிர்ச்சி கோப் நகரைத் தாக்கியபோது, உணவு, நீர் மற்றும் பிற அவசரத்தேவைக்குரிய பொருட்களை அதே கும்பல் தங்கள் அயலகத்தாருக்கு வழங்கியது. “அப்படிப்பட்ட தாராள மனப்பான்மை, ஜப்பானில் யாக்கூஸாக்களுக்கு இருந்துவந்த சட்டவிரோதிகள் என்ற பெயருக்கு மரியாதையுடன் ஆதரவளிக்க வைக்கிறது” என்று ஆசாஹி ஈவ்னிங் நியூஸ் அறிக்கை செய்தது.
குற்றச்செயல் கும்பல்களின் தலைவர்கள், பெரும்பாலும் தங்களை நன்மை செய்பவர்களாகவே காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளனர். கொலம்பியாவின் மெடலின் போதைப்பொருள் கடத்தல் குழுவின் பேர்போன தலைவரான பேப்ளோ எஸ்கோபார், தான் வாழ்ந்துவந்த நகரின் குடிசைவாழ் மக்களுக்கு, “ஒருவிதத்தில் மேசியா, ஒரு விதத்தில் ராபின் ஹூட், ஒரு விதத்தில் கிட்டத்தட்ட நிலப்பண்ணை முறை அர்த்தத்தில் காட்ஃபாதர் என அழைக்கப்படும் பாட்ரான் ஆகிய அனைத்து அம்சங்களும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் கற்பனை நபராய் இருந்தார்,” என்று ஆனா காரகன் நியூஸ்வீக்கில் எழுதினார். அவர், சிறார்களுக்கு பனிச்சறுக்காட்டக் களங்களையும், ஏழைகளுக்கு நல்ல வீடுகளையும் கட்டினார்; தெருப்பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பும் அளித்தார். அவருடைய வள்ளன்மையால் நன்மையடைந்தவர்களுக்கு அவர் ஒரு கதாநாயகராய் இருந்தார்.
குற்றச்செயல் புரியும் தங்களுடைய கும்பல்களுக்குப் பின்னே பாதுகாப்பாக மறைந்திருப்பதாய்த் தோன்றும் குற்றவாளிகள், எப்படியிருந்தாலும், ஒரு சர்வலோக கைதேர்ந்த குற்றவாளியின் கையாட்களாகவே இருக்கின்றனர். அவன் யார் என்று பைபிள் வெளிப்படுத்திக் காட்டுகிறது. “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.” (2 கொரிந்தியர் 11:14, 15) இன்று பெரும்பாலானோர், சாத்தான் ஓர் உண்மையான ஆள் என்றே நம்புவதில்லை. 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு கவிஞர் சொன்னதாவது: “அப்படிப்பட்ட ஓர் ஆள் இல்லவே இல்லை என்று உங்களை நம்ப வைப்பதே பிசாசின் மிகத் தந்திரமான சதியாகும்.” அவன் திரைக்குப் பின்னால் பதுங்கியிருந்து, குற்றச்செயல் புரியும் கும்பல்களை மட்டுமல்ல, உலகமுழுவதையும் ஆட்டிப்படைத்து, இப்போது சம்பவித்துவருபவற்றை இயக்குகிறான். ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று பைபிள் விளக்குகிறது. சாத்தானை, ‘அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; . . . பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்’ என்று இயேசு விவரித்தார்.—1 யோவான் 5:19; யோவான் 8:44.
பிசாசாகிய சாத்தான் 1914-லிருந்து விசேஷ சுறுசுறுப்புடன் இயங்கிவந்திருப்பதாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. அந்த ஆண்டிலிருந்து, கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாக செய்யப்பட்டுவரும் முழுமூச்சான போரில் அவனுடைய சேனையைத் தயார்ப்படுத்தி வந்திருக்கிறான். குழப்பங்கள் நிறைந்த ஒரு பெருநீர்ச்சுழிக்குள் மனிதகுலத்தை அவன் இழுத்துவருகிறான். குற்றச்செயலும் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் இன்று செழித்தோங்குவதற்கான மிகமுக்கியக் காரணமே அவன்தான்.—வெளிப்படுத்துதல் 12:9-12.
பூமியின் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்குப் பின்னால் இருந்து அதை இயக்கிவருபவன் எப்பொழுதாவது தொலைத்துக்கட்டப்படுவானா? மனிதகுலம் எப்பொழுதாவது சமாதானத்தையும் ஒழுங்கையும் அனுபவிக்குமா? சாத்தான் இன்று பூமியில் ஸ்தாபித்து ஆண்டுவந்திருக்கும் தீய பேரரசிலிருந்து நீங்கள் விலக முடியுமா?
[அடிக்குறிப்பு]
a சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்புக்காக சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 7-ன் பெட்டி]
உங்கள் குடும்பத்தைக் காப்பது எப்படி
கனிவான, ஒன்றுபட்ட குடும்பச்சூழல் இல்லாதிருப்பது, இளைஞரைக் குற்றச்செயல் குழுக்களுக்கு எளிதில் இரையாகிவிடும்படி செய்யலாம். ஐக்கிய மாகாணங்களில், கும்பல் கொலைகளில் ஈடுபடும் இளைஞரில் பெரும்பான்மையானோர் வசதி குறைந்த அல்லது பிரிவுற்ற குடும்பங்களிலிருந்து வருவதாக அறிக்கை செய்யப்படுகிறது. “தாழ்த்தப்பட்டவர்களாய் இருப்பவர்களாக, தங்கள் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக அவர்கள் அனுபவிக்கும், அந்தத் தலைவனுக்கும் கையாளுக்கும் இடையே இருக்கும் பலமான பிணைப்பாலும் ஓர் அமைப்பின் ஓர் உறுப்பினனாக, ஒற்றுமைப்பட்ட உணர்வாலும் அவர்கள் எளிதில் உந்துவிக்கப்படுகின்றனர்” என்று வட கரோலினாவிலுள்ள தடுப்புக்காவல் மையமொன்றின் ஓர் அதிகாரி தெரிவிக்கிறார்.
அதைப் போலவே, கிழக்கத்திய நாடுகளில் தன்னுடைய தலைவனைக் காக்க தன்னை உயிருடனுள்ள ஒரு கேடயமாய் அர்ப்பணிக்கத் தயாராயுள்ள ஓர் இளம் யாக்கூஸா கூறுவதாவது: “வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் நான் தனியாகவே இருந்தேன். நாங்கள் ஒரு குடும்பமாய் இருந்தபோதிலும், மனம் திறந்து ஒருவரோடொருவர் பேசிக்கொள்ள முடியும் என்று நான் ஒருபோதும் உணரவில்லை. . . . ஆனால் இப்போது, இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் என்னால் மனம் திறந்து பேச முடியும்.” ஒரு குடும்பம்போன்ற ஏற்பாட்டுக்குள் தங்களை இழுத்துக்கொள்ளும் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பதாக, தனிமையாய் இருக்கும் இளைஞர் உணருகின்றனர்.
“யாக்கூஸாவைச் சேர்ந்தவங்க ரொம்ப ரொம்ப அக்கறை காட்டுறவங்க, அதுவே அவங்களோட தந்திரமாய் இருக்கலாம்; ஆனா பாருங்க, நாங்க ஒருபோதும் அன்பா நடத்தப்படாதிருப்பதனால, இது எங்கள உந்துவிக்கிது” என்று ஒகினாவாவிலுள்ள மோட்டார்பைக் குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த பெண்கள் தொகுதி ஒன்றின் தலைவி சொல்கிறாள். கும்பல்காரர்கள் “பெண்பிள்ளைகளின் இதயத்தைக் கவருவதில் உண்மையிலேயே மிகச் சிறந்தவர்கள்” என்று குற்றவாளி பெண்கள் இல்லத்து சூப்பரின்டென்டெண்ட் உறுதியுடன் கூறுகிறார். தனிமையில் இருக்கும் பெண்கள் அவர்களை நள்ளிரவில் அழைக்கையில், கும்பல்காரர்கள் அவர்களிடம் விரைந்து சென்று அவர்கள் சொல்வதெதுவோ அவையெல்லாவற்றையும், பாலின அணுகுமுறை ஏதும் இன்றியே செவிகொடுத்துக் கேட்கின்றனர்.
அவர்களுடைய அக்கறை மனப்பான்மை, அவர்கள் இரையாக்கிக்கொள்ள நினைக்கும் இளைஞர்களை முழுவதுமாய்க் கவர்ந்திருக்கும் வரையில் மட்டுமே நிலைத்திருக்கிறது. இந்த இளைஞர்கள் சிக்கவைக்கப்பட்டுவிட்டால், அவர்களுடைய சுயநலத்துக்காக தவறான முறையில்—பெண்பிள்ளைகள் விபச்சார விடுதிகளிலும் பையன்கள் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட அமைப்புகளிலும்—பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றனர்.
நீங்கள் நேசிப்பவர்களை எப்படி காக்கலாம்?
“பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என்று பைபிள் புத்திமதி கூறுகிறது. (கொலோசெயர் 3:21) இது, பெற்றோர் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை உற்சாகப்படுத்துவதில்லை. “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என்று பைபிள் நீதிமொழி ஒன்று கூறுகிறது. (நீதிமொழிகள் 29:15) மாறாக, தங்களுடைய பிள்ளைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் நியாயத்தன்மையுள்ளவர்களாய் இருக்கும்படியும், அவர்களுக்குச் செவிகொடுக்கும்படியும், ஒளிவுமறைவின்றி பேச்சுத்தொடர்பு கொள்ளும்படியும் தகப்பன்மாரை—தாய்மாரையும் கூட—பைபிள் உற்சாகப்படுத்துகிறது. அப்போது, பிள்ளைகள் வேதனை தரும் தொந்தரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவர்களுடைய பெற்றோரை நம்பி தங்கள் விஷயங்களைச் சொல்ல தூண்டப்படுவர்.
ஒளிவுமறைவின்றி பேச்சுத்தொடர்பு கொள்வதோடு, தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வின் தராதரங்களையும் பெற்றோர் அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட வழிகாட்டும் குறிப்புகளை ஒரு தகப்பன் எங்கே காண முடியும்? பைபிள் கூறுவதாவது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) குடும்ப பைபிள் படிப்பு ஏற்பாடுகளின் மூலம் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து பைபிளைப் பற்றி சிந்திப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் தங்கள் சொந்த நன்மைக்காக, எப்பொழுதும் யெகோவாவின் வழிகாட்டுதலை அவர்கள் பின்பற்றுபவர்களாகும்படி யெகோவாவுக்கான ஆரோக்கியமான பயத்தை அவர்களின் இதயத்தில் ஆழமாய்ப் பதிய வையுங்கள்.—ஏசாயா 48:17.