குற்றச்செயல் இல்லாத ஓர் உலகம் எப்படி?
உலகமுழுவதிலும் கூட்டு குற்றச்செயலுக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. “மாஃபியா கும்பலுக்கு எதிராக மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருந்துவந்திருக்கிறது” என்றும், “அது பெரும்பாலும் மிரட்டிப் பணம் பறிப்போரின் செல்வாக்குள்ள மற்றும் ஊழல் அமைப்புகள் சட்டம் (Racketeer Influenced and Corrupt Organizations Act) அல்லது ரிக்கோ (RICO) என்ற ஒரு சட்டம்” என்றும் யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் தெரிவித்தது. அது, வெறுமனே தனிநபர்களுடைய செயல்களின் அடிப்படையில் அல்லாமல், மிரட்டிப் பணம் பறிக்கும் செயலின் அடிப்படையில் குற்றச்செயல் சம்பந்தப்பட்ட அமைப்புகளை தக்க சான்றுடன் குற்றப்படுத்த அனுமதிக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், தொலைபேசி அல்லது தந்தி மூலமாகப் பெறப்பட்ட தகவலுடனும், குறைவான தண்டனையைப் பெறுவதற்காக துப்பு கொடுத்துவிடும், கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலுடனும் சேர்ந்து இது, மாஃபியா கும்பலுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியில் பங்கு வகித்துள்ளது.
இத்தாலியிலும், அதிகாரிகள் கும்பல்களுக்கு எதிராகக் கடுமையாய் செயல்படுகின்றனர். கூட்டு குற்றச்செயல் தீவிரமாய் நடைபெற்றுவரும் சிசிலி, சார்டீனியா, கலேபிரியா போன்ற இடங்களில், பொதுக் கட்டடங்களையும் முக்கியப் பகுதிகளையும் குற்றச்செயல் அமைப்பு உறுப்பினர்களின் தாக்குதல்களிலிருந்து காக்கும்படி ராணுவப் பிரிவினர்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனர். இதை ஓர் உள்நாட்டுப் போராகவே அரசு கருதுகிறது. குற்றச்செயல் குழுக்களின் பேர்போன தலைவர்கள் சிறையில் வைக்கப்பட்டதோடும், மாஃபியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகப் பேச்சு அடிபட்டதற்காக ஒரு முன்னாள் பிரதம மந்திரி குற்றஞ்சாட்டப்பட்டதோடும், இத்தாலியில் கொஞ்சம் பலன் கிடைத்திருக்கிறது.
ஜப்பானில் மார்ச் 1, 1992-ல், கூட்டு குற்றச்செயலுக்கு எதிரான சட்டத்தை அரசு அமலுக்குக் கொண்டுவந்தபோது, யாக்கூஸா கும்பல்மீது தடைகளை விதித்தது. இந்தச் சட்டத்தின்கீழ், கும்பல்காரர் அடங்கிய அமைப்பொன்று ஒரு கூட்டு குற்றச்செயல் அமைப்பாக அழைக்கப்பட்ட பிறகு, இரகசியத்தை வெளிவிடாமல் இருப்பதாகக் கோரி பணம் பறிப்பது, பாதுகாப்பு தருவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் பங்கேற்பது, பணம் வாங்கிக்கொண்டு பஞ்சாயத்தில் தலையிடுவது ஆகியவை உள்ளிட்ட வன்முறையில் இணங்கவைத்தலை உட்படுத்தும் 11 செயல்களிலிருந்து அதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை அமலாக்குவதன் மூலம், குற்றச்செயல் கும்பல்களுக்குக் கிடைத்துவரும் வருவாயின் ஊற்றுமூலங்களைத் தடுப்பதற்கு அரசு உத்தேசிக்கிறது. இந்தச் சட்டம் குற்றச்செயல் அமைப்புகளுக்குப் பெருத்த அடியைக் கொடுத்திருக்கிறது. சில தொகுதிகள் கலைந்திருக்கின்றன, மேலும் குற்றச்செயல் அமைப்பொன்றின் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்—இந்தச் சட்டத்தின் கடும் அமலாக்கத்தின் விளைவே எனத் தெரிகிறது.
உண்மையில், அரசுகளும் சட்ட அமலாக்க ஏஜென்ஸிகளும் கூட்டு குற்றச்செயலுக்கு எதிராகக் கடுமையாய்ப் போராடிவருகின்றன. என்றாலும், 1994-ல் நடைபெற்ற உலகெங்குமுள்ள நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டின் பேரில் அறிக்கை வெளியிடும்போது மைனிச்சி டெய்லி நியூஸ் கூறினதாவது: “நடைமுறையில் கூட்டு குற்றச்செயல் உலகின் ஒவ்வொரு பாகத்திலும் உறுதியாகவும் வெகுவாகவும் பெருகிவருகிறது, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் வரையில் பணத்தைத் திரட்டிவருகிறது.” விசனகரமாக, குற்றச்செயல் குழுக்களை இந்தப் பூமியிலிருந்து முற்றிலும் ஒழித்துவிட மனித முயற்சிகள் மட்டுப்பட்டவையாய் இருக்கின்றன. இதற்கு ஒரு காரணம், பல சந்தர்ப்பங்களில் உடனடியாயும், தீர்வாயும் நியாயம் வழங்கப்படாமல் இருப்பது. பலருடைய விஷயங்களில் சட்டங்கள், பலியானவருக்குச் சாதகமாய் இராமல், குற்றவாளிக்குச் சாதகமாய் இருப்பதாக பெரும்பாலும் தோன்றுகிறது. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பைபிள் கூறினதாவது: “துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.”—பிரசங்கி 8:11.
குற்றச்செயல் அமைப்புகளை விட்டு விலகுதல்
கூட்டு குற்றச்செயலுக்கு எதிராக வெளியே ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றின் அங்கத்தினர்கள் குற்றச்செயல் குழுக்களைவிட்டு வெளிவர உதவுவதற்கும் அரசுகள் முயன்றிருக்கின்றன. அப்படிப்பட்ட மாற்றம் எளிதானதல்ல. ஒரு பழமொழியின்படி, “சவப்பெட்டிதான் மாஃபியா கும்பலை விட்டு வெளிவருவதற்கான ஒரே வழி.” ஒரு கும்பல்காரர் யாக்கூஸா அமைப்பு ஒன்றை விட்டு விலகுவதற்கு, ஏராளமான பணம் கட்ட வேண்டும், அல்லது அவருடைய சுண்டு விரல் முழுவதுமாகவோ, அதன் ஒரு பகுதியோ வெட்டப்படும். இரகசிய உலகுடன் வைத்திருந்த பிணைப்புக்கு முழுக்குப் போடுவதில் உட்பட்டுள்ள பயத்தோடு சேர்ந்து, நேர்மையான வாழ்க்கை வாழ்வதன் மெய்ம்மையையும் ஒரு முன்னாள் கும்பல்காரர் எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. வேலை வேண்டி அவர் அனுப்பும் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படும். என்றபோதிலும், சில நாடுகளில், இரகசிய போலீஸ் தொலைபேசி இணைப்புகள் இருக்கின்றன. இவை, குற்றச்செயல் அமைப்புகளோடுள்ள தொடர்பை துண்டித்துக்கொள்ள முயன்றுகொண்டும், நல்ல வேலை கிடைக்காமல் தவித்துக்கொண்டும் இருக்கும் கும்பல்காரர்களுக்கு உதவும் வகையிலான தொலைபேசி இணைப்புகள் ஆகும்.
குற்றச்செயலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நேர்மையான வாழ்க்கை வாழ முனையும் ஒரு கும்பல்காரருக்கு, கும்பல் குடும்பத்திலிருந்து வரும் அழுத்தங்களையும், சமுதாய தப்பெண்ணத்தையும் எதிர்ப்படுவதற்கு பலமான உந்துவிப்பு தேவை. எது அவரை உந்துவிக்கக்கூடும்? அவருடைய குடும்பத்தின்மீதுள்ள அன்பு, ஓர் அமைதியான வாழ்வுக்கான ஏக்கம், அல்லது சரியானதைச் செய்வதற்கான ஓர் ஆவல் ஆகியவையாக இருக்கக்கூடும். என்றாலும், மிகவும் பலமான உந்துவிப்பு, பின்வரும் கட்டுரையில் வரும் யாசூவோ காட்டாவோக்காவின் சரிதையால் நன்றாக விளக்கிக் காட்டப்படுகிறது.
யாசூவோ காட்டாவோக்கா, தங்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு ஓர் உதாரணம். அவர்கள் முன்பு காட்டிவந்த மிருகத்தனமான பண்புகள், “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட” புதிய ஆளுமையால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளன. (எபேசியர் 4:24) முன்பு ஓநாயைப் போன்று இருந்தவர்கள், இப்போது ஆட்டுக்குட்டியைப் போன்ற சாந்தகுணமுள்ள குடிமக்களின் மத்தியில் சமாதானத்துடன் வாழ்கின்றனர், மேலும் அவர்கள் பிறருக்கு உதவிக்கொண்டும் இருக்கின்றனர்!—ஏசாயா 11:6.
உலக மனப்பான்மையை விட்டு விலகுதல்
முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, அனைத்து குற்றச்செயல் குழுக்கள் மட்டுமல்லாமல், இந்த முழு உலகமுமே பிசாசாகிய சாத்தானின் காணக்கூடாத ஓர் அதிகாரத்தின்கீழ் இருக்கிறது. சாத்தான் அவனுடைய குற்றச்செயல் புரியும் இலக்குகளை அடைய இந்த உலகைக் கூட்டியிருக்கிறான், மக்களோ அதை உணருவதே இல்லை. செல்வத்தையும் போலி குடும்ப அமைப்புகளையும் குற்றச்செயல் நிறுவனங்கள் அளிப்பதைப் போலவே, சம்பத்துக்களையும், இன்பங்களையும், ஒன்றுபட்ட உணர்வையும் அளிப்பதன் மூலம் நன்மை பயக்கும் ஒரு தலைவனின் பங்கை அவன் வகிக்கிறான். நீங்கள் அதை உணராவிட்டாலும், அவனுடைய தீய திட்டங்களால் வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். (ரோமர் 1:28-32) “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை” என்று பைபிள் நமக்குக் கூறுகிறது. (யாக்கோபு 4:4) சாத்தானிய செல்வாக்கின்கீழ் இருக்கும் இந்த உலகத்தோடு சகவாசம் வைப்பது பாதுகாப்பானதல்ல. சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களின் பொல்லாத செல்வாக்கிலிருந்து இந்த உலகை சுத்திகரிப்பதற்காக, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இயேசு கிறிஸ்துவின்கீழ் தூதர்களின் சேனையொன்று இப் பிரபஞ்சத்தின் படைப்பாளர்வசம் தயாராய் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18; 16:14, 16; 20:1-3.
ஆகவே, சாத்தானிய உலக செல்வாக்கின் கீழிருந்து நீங்கள் எப்படி விலக முடியும்? துறவி வாழ்க்கை வாழ்வதன் மூலமாக அல்லாமல், இன்று உலகின்மீது செல்வாக்கு செலுத்திவரும் மனோபாவங்கள் மற்றும் சிந்தனா முறைகளிலிருந்தும் விலகுவதன் மூலமே. அப்படி செய்வதற்கு, சாத்தானின் பயமுறுத்தும் வழிமுறைகளுக்கு எதிராகப் போராடவும், அவனுடைய பிடியில் மக்களை வைத்துக்கொள்வதற்காக அவன் அளிக்கும் தூண்டுதல்களை எதிர்க்கவும் வேண்டியிருக்கும். (எபேசியர் 6:11, 12) இது, தியாகங்களை உட்படுத்தும், ஆனால் நீங்கள் திடத் தீர்மானமுள்ளவர்களாயும், யெகோவாவின் சாட்சிகள் அளிக்கும் உதவிகளைப் பயன்படுத்திக் கொள்பவர்களாயும் இருந்தால், மற்றவர்களைப் போலவே நீங்களும் விலக முடியும்.
குற்றச்செயல் நிறைந்த குழப்பமான இந்த உலகை சுத்திகரிக்கும் கடவுளுடைய நடவடிக்கையை எது பின்தொடரும்? “துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்” என்று பைபிள் சொல்வதோடு, அது மேலும் தொடர்ந்து சொல்வதாவது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:28, 29) பிறகு, மிருகத்தனமான பண்புகளை உடையவர்களாய் இருந்தவர்களைப் பார்த்து நடுங்குவதற்கு எந்தக் காரணமும் இருக்காது, ஏனெனில் அவர்கள் பூமியை நிரப்பவிருக்கும் “கர்த்தரை அறிகிற அறிவினால்” மாற்றமடைந்திருப்பார்கள்.—ஏசாயா 11:9; எசேக்கியேல் 34:28.
ஜப்பானைச் சேர்ந்த ஒரு முன்னாள் யாக்கூஸா உறுப்பினரின் பின்வரும் சரிதை காட்டுவதன்படி, இன்று அப்படிப்பட்ட மாற்றம் ஏற்கெனவே நிஜமாகியிருக்கிறது.
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகில், எல்லாரும் தங்கள் கைகளின் பலனை அனுபவிப்பர்