சத்தியத்தை நான் கடைசியில் கண்டுபிடித்தேன்
1939, ஆகஸ்ட் மாத முடிவு வாக்கில், ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்டிலிருந்த என் வீட்டுக்கு போகிற வழியில் மாஸ்கோவில் நான் தங்கினேன். ஜெர்மன்-சோவியத் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் (German-Soviet Nonaggression Pact) அநேக நாட்களுக்கு முன்பே, ஆகஸ்ட் 23-ம் தேதி கையெழுத்தாகியிருந்தது; க்ரெம்லின் சுவர்கள் நாசி ஸ்வஸ்திக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நான் ஏன் ரஷ்யாவில் இருந்தேன், வீட்டில் எனக்காக என்ன காத்துக்கொண்டிருந்தது?
முதலில் வெஸ்பிரேமிலுள்ள சிறு ஹங்கேரிய பட்டணத்தில் நான் வாழ்ந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அங்குதான் ஜனவரி 15, 1918-ல் நான் பிறந்தேன். நாலு பிள்ளைகளில் நான்தான் மூத்தவன், நாங்கள் தவறாமல் சர்ச்சுக்குப் போவதை விட்டுவிடாதவாறு எங்களுடைய அப்பாவும் அம்மாவும் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். எனக்கு ஐந்து வயசாவதற்குள்ளாகவே, நான் ரோமன் கத்தோலிக்க கான்வென்ட்டிலுள்ள பூசையில் கூடமாட இருந்து உதவி செய்துகொண்டிருந்தேன். வீட்டில் இருக்கும் சமயத்தில், பூசைக்காக நான் தயாரித்திருந்த பேப்பர் அங்கியைப் போட்டுக்கொண்டு, என்கூடப் பிறந்தவர்களிடம் பூசை நடத்துவதுபோல நான் நடித்துக் காட்டுவேன்.
எனக்கு எட்டு வயசு இருக்கும்போது, என்னுடைய அப்பா வீட்டை விட்டு போய்விட்டார்கள்; என்னுடைய அம்மா, அவர்களைப் பெற்ற அம்மாவின் ஒத்தாசையால் எங்களை கவனித்துக்கொண்டார்கள். அதற்கடுத்த வருஷத்தில், புற்றுநோயினால் அம்மா இறந்துவிட்டார்கள். அதற்குப் பின்னாடி வந்த வருஷங்களில், பிள்ளைகளாகிய நாங்கள் பிரிக்கப்பட்டு, பல்வேறு அனாதை இல்லங்களிலும் காப்பகங்களிலும் போடப்பட்டோம். நான் கடைசியாக தங்கியிருந்த அனாதை இல்லம் புடாபெஸ்டுக்கு கிட்டத்தில்தான் இருந்தது. அதை பிரெஞ்சு கத்தோலிக்க ஆசிரியர்களின் மத ஸ்தாபனமாகிய ஃப்ரார் மாரிஸ்ட் (மரியாளின் சகோதரர்கள்) நடத்திவந்தது. நான் கடவுள்மீது உண்மையான அன்பு செலுத்தினேன்; எனவே எனக்கு 13 வயசு ஆனபோது, அவர்களுடைய மத ஸ்தாபனத்தால் கொடுக்கப்பட்ட கல்வியை ஏற்றுக்கொண்டேன்.
விரிவான மத பயிற்சி
அதற்கடுத்த வருஷத்தில் என்னை கிரீஸுக்கு அனுப்பினார்கள், அங்கு பிரெஞ்சு மொழியில் நடத்தப்படும் ஃப்ரார் மாரிஸ்ட் பள்ளிக்குப் போனேன்; ஒரு ஆசிரியராவதற்கு அது என்னை தயார்படுத்தியது. நாலு வருஷத்திற்குப் பிறகு, 1936-ல், ஒரு சர்டிஃபிக்கேட்டுடன் தேறினேன்; ஆரம்பப் பள்ளியில் போதிப்பதற்கு அது என்னை தகுதியாக்கியது. நான் பட்டம்பெற்ற பிறகு அந்த மத ஸ்தாபனத்தில் ஒரு ஊழியக்காரனாகி, எளிய வாழ்க்கை, கீழ்ப்படிதல், கற்பு என்ற முப்பங்கு பொருத்தனை பண்ணிக்கொண்டேன். ஊழியக்காரரான நாங்கள் மத அங்கியைப் போட்டுக்கொண்டு சமயபோதனை கொடுத்துவந்தோம்; அப்படியிருந்தபோதிலும் ஒருநாளும் பைபிளைப் படித்தது கிடையாது.
அந்தக் கோடையில் சீனாவிலுள்ள பள்ளியில் போதிப்பதற்கு அப்ளிக்கேஷன் போட்டேன், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1936, அக்டோபர் 31-ம் தேதி, பிரான்ஸிலுள்ள மார்செய்ல்ஸிலிருந்து கப்பலில் கிளம்பினேன். 1936, டிசம்பர் 3-ல், ஷாங்காய்க்கு வந்துசேர்ந்தேன். அங்கிருந்து மறுபடியும் ரெயிலேறி வடசீனாவின் தலைநகராகிய பீஜிங்குக்குப் போனேன்.
பீஜிங்கிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பிரதேசத்தில், ஃப்ரார் மாரிஸ்ட் மத ஸ்தாபனத்திற்கு சொந்தமான ஒரு பெரிய பள்ளிக்கூடமும் படுக்கை அறைகளும் பண்ணை கட்டடங்களும் இருந்தன. அந்த இடம் பேரரசரின் கோடை வாசஸ்தலத்திற்குப் பக்கத்தில் இருந்தது, பண்படுத்தப்பட்ட அழகிய தோட்டங்களும் பழமரங்களும்கூட இருந்தன. அங்கு சீன மொழி, ஆங்கில மொழி ஆகிய இரண்டையுமே தீவிரமாய் படிப்பதில் ஆழ்ந்துவிட்டேன். ஆனால் நாங்கள் ஒருநாளும் பைபிளைப் புரட்டிப்பார்த்ததுகூட கிடையாது.
கலவரத்தின் மத்தியில்
1930-களின் ஆரம்பத்தில், சீனாவின் பாகமாயிருந்த மஞ்சூரியாவை ஜப்பான் கைப்பற்றியது. 1937 ஜூலையில், ஜப்பானிய பட்டாளங்களும் சீன பட்டாளங்களும் பீஜிங்குக்கு அருகில் மோதின. வெற்றி வாகைசூடிய ஜப்பானியர்கள், தாங்களே சீன ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்தனர். இது, சீன கொரில்லாக்கள் அந்தப் புதிய அரசாங்கத்திற்கு விரோதமாக சண்டையிடுவதற்கு வழிநடத்தியது.
பீஜிங்குக்கு வெளியிலிருந்த எங்களுடைய மடம் பிரெஞ்சு பிராந்தியமாக கருதப்பட்டதால், நேரடியான சண்டையிலிருந்து தப்பியது. இருந்தாலும், குருட்டாம் போக்கில் வந்த பீரங்கிக் குண்டுகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் நாங்கள் தாக்கப்பட்டோம்; அவை, எங்களுடைய மடத்தில் தஞ்சம்புக வந்திருந்த 5,000-க்கும் மேற்பட்ட சீனர்களில் சிலரை காயப்படுத்தின. இதற்கிடையில், சீன கொரில்லாக்கள் நாட்டுப்புறத்தை ஆண்டுவந்தார்கள்.
1937 செப்டம்பரில், ஆயுதங்களுக்காகவும் பணத்துக்காகவும் உணவுக்காகவும் தேடிவந்த ஆயுதம் தாங்கிய சுமார் 300 சீன கொரில்லாக்கள் எங்கள் கட்டடங்களைத் தாக்கினார்கள். பிணைக் கைதிகளாக கொண்டுசெல்லப்பட்ட பத்து ஐரோப்பியர்களில் நானும் ஒருத்தன். ஆறு நாட்களுக்கு எங்களைப் பிடித்துவைத்துக்கொண்ட பிறகு, விடுதலை செய்யப்பட்ட பிணைக் கைதிகளில் நான்தான் முதல் ஆளாக இருந்தேன். மாசுபட்ட உணவை சாப்பிட்டதனால் எனக்கு சீக்குவந்துவிட்டது, அதனால் ஆஸ்பத்திரியில் ஒரு மாசம் கிடந்தேன்.
நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்ததும், அந்த மத ஸ்தாபனத்தால் நடத்தப்படும் மற்றொரு பள்ளிக்கு மாற்றப்பட்டேன்; அது பீஜிங்கில் அதிக பாதுகாப்பான ஓரிடத்தில் அமைந்திருந்தது. ஜனவரி 1938-ல், ஷாங்காய்க்கு போதிப்பதற்காக அனுப்பப்பட்டேன், ஆனால் போதிப்பதற்கு திரும்பவும் பீஜிங்குக்கே செப்டம்பரில் வந்துவிட்டேன். இருந்தபோதிலும், பள்ளி ஆண்டிற்குப் பிறகு, நான் என்னுடைய மத பொருத்தனைகளைப் புதுப்பிக்கவில்லை. ஏழு வருஷகாலமாக நான் ஒரு ஆன்மீக வாழ்க்கையையும் கல்வியையும் நாடியிருந்தும், சத்தியத்திற்கான என்னுடைய தேடுதலில் திருப்தியைக் கண்டடையத் தவறிவிட்டேன். ஆகையால், புடாபெஸ்ட்டிலுள்ள என் வீட்டுக்குச் செல்வதற்காக மத ஸ்தாபனத்திற்கு ஒரு டாட்டா சொல்லிவிட்டேன்.
அதற்குள் இரண்டாம் உலகப் போருக்கான புயல் மேகங்கள் திரண்டுகொண்டிருந்தன. என்னுடைய பிரெஞ்சு உயர் அதிகாரிகள் டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை வழியாக செல்லும்படி உற்சாகப்படுத்தினார்கள், அது சோவியத் யூனியனின் பகுதிகள் வழியாக சென்றது. இந்தப் பயணத்தின்போதுதான், 1939, ஆகஸ்ட் 27-ம் தேதி மாஸ்கோ போய்ச் சேர்ந்தேன்; நாசி கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட க்ரெம்லின் சுவர்களைப் பார்த்தேன்.
போர்க்கோலம் பூண்ட ஓர் உலகம்
1939, ஆகஸ்ட் 31-ம் தேதி புடாபெஸ்டிலுள்ள என் வீட்டிற்கு நான் வந்துசேர்ந்தேன். அடுத்த நாளில் போலந்தின்மீது ஜெர்மனி படையெடுத்தது, இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பிற்பாடு, சோவியத் யூனியனுடன் செய்திருந்த அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தை ஜெர்மனி முறித்தது; ஜூன் 22, 1941-ல், ஹிட்லரின் இராணுவங்கள் சோவியத் யூனியனுக்குப் படையெடுத்துச் சென்றன. அவை மாஸ்கோவின் புறநகர்ப் பகுதி வரைக்கும் ஊடுருவிவிட்டன, ஆனால் நகரத்தைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்துவிட்டன.
ஹங்கேரியின் கவர்னர் ஜெர்மனியுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஜெர்மன் இராணுவங்கள் ஹங்கேரியின் வழியாக நுழைந்து செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டன. 1942-ல் நான் கலியாணம் பண்ணிக்கொண்டேன், 1943-ல், ஹங்கேரிய இராணுவத்தில் கட்டாயமாக பணிபுரியும்படி சேர்க்கப்பட்டேன். மார்ச் 1944-ல், ஹங்கேரியின்மீது ஜெர்மனி படையெடுத்தது, ஏனென்றால் ஹிட்லர் தனது போர் முயற்சிக்கு ஹங்கேரி கொடுத்த ஆதரவில் திருப்தியடையவில்லை. அந்த ஆண்டில் எங்கள் மகன் பிறந்தான். புடாபெஸ்டின்மீது விழுந்த பலத்த வெடிகுண்டு தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக, என்னுடைய மனைவியும் மகனும் அவளுடைய பெற்றோர்களுடன் வாழ்வதற்கு நாட்டுப்புறத்திற்கு மாறிச்சென்றார்கள்.
போரின் சம்பந்தமாக அடித்துக்கொண்டிருந்த காற்று இப்பொழுது திசைமாறி அடிக்க ஆரம்பித்துவிட்டது, சோவியத் படை புடாபெஸ்டுக்கு முன்னேறி, 1944, டிசம்பர் 24-ல் வந்துசேர்ந்தது. நான் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு, போர் கைதியாக ஆகிவிட்டேன். எங்களில் சிறைக்கைதிகளாய் இருந்த ஆயிரக்கணக்கானோர், கிட்டத்தட்ட நூற்று அறுபது கிலோமீட்டர் தூரத்திற்கு ஹங்கேரியிலுள்ள பாஜாவுக்கு பலவந்தமாக நடத்திச்செல்லப்பட்டோம். அங்கு, நாங்கள் கால்நடை வேகன்களில் நெருக்கி அடைக்கப்பட்டோம்; பின்பு திமிசோராவுக்கு மாற்றப்பட்டு, ஒரு பெரிய முகாமில் போடப்பட்டோம். 1945-ன் ஆரம்பத்தில், 45,000 சிறைக்கைதிகளில் கடைசியாக குறைந்தது 20,000 பேர் பெருவாரியான டைபாய்டு காய்ச்சலினால் இறந்துபோனார்கள்.
ஆகஸ்டில், தப்பிப்பிழைத்த 25,000 முகாமினர் கருங்கடலுக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். அங்கிருந்து சுமார் 20,000 பேர் சோவியத் யூனியனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இருந்தபோதிலும், நானும் வியாதியாயிருந்த மீதமுள்ள சுமார் 5,000 பேரும், ஹங்கேரிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விடுதலை செய்யப்பட்டோம். இவ்விதமாய், பயங்கரமான எட்டு மாத சிறையிருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, என் மனைவியுடனும் மகனுடனும் நான் ஒன்றுசேர்க்கப்பட்டேன்; பின்பு நாங்கள் குடியிருப்பதற்காக புடாபெஸ்டுக்குத் திரும்பி வந்தோம்.
போருக்குப் பின்னும்கூட அநேக மக்கள் வேதனையில் இருந்தனர். உணவுப் பற்றாக்குறை இருந்தது, பணவீக்கம் சீரழித்துக்கொண்டிருந்தது. 1938-ல் பெங்கோ என்ற ஒரு ஹங்கேரிய பணத்துக்கு என்ன வாங்கமுடிந்ததோ, அதை 1946-ல் வாங்குவதற்கு நூறு கோடியே கோடி கோடி கோடிக்கும் (100,00,00,000,00,00,000,00,00,000,00,00,000) மேற்பட்ட பெங்கோக்கள் தேவைப்பட்டன! காலப்போக்கில், எனக்கு ரெயில்வேயில் ஆபீஸ் வேலை கிடைத்தபோது எங்களுடைய வாழ்க்கை முன்னேறியது.
சத்தியத்தைக் கண்டடைதல்
1955-ல், எங்களுடைய புடாபெஸ்ட் அபார்ட்மெண்ட் கட்டடத்தில் வசித்துவந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என் மனைவி அன்னாவிடம் பைபிளைப் பற்றி பேச ஆரம்பித்தார். நரகம் என்பது வதைக்கப்படும் ஒரு இடமென பைபிள் போதிக்கிறதில்லை என்று அன்னா சொன்னபோது என்னுடைய ஆவல் தூண்டப்பட்டது. (பிரசங்கி 9:5, 10; அப்போஸ்தலர் 2:31) ஒரு கத்தோலிக்கனாக, நான் பைபிளை ஒருகாலும் படிக்கவில்லை, சர்ச் பள்ளிகளில் விசேஷ பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோதுகூட படிக்கவில்லை. நரக அக்கினி போன்ற வேதப்பூர்வமற்ற கத்தோலிக்க போதனைகளை நான் வெறுமனே ஏற்றுக்கொண்டுவிட்டேன். நான் இப்பொழுது பைபிள் சத்தியங்களை, விசேஷமாய் கடவுளுடைய ராஜ்ய சம்பந்தமானவற்றையும் பூமியை ஒரு பரதீஸாக்குவதற்கு கடவுளுடைய நோக்கத்தை அது எவ்வாறு நிறைவேற்றும் என்பதையும் நேசிக்க ஆரம்பித்தேன். (மத்தேயு 6:9, 10; லூக்கா 23:42, 43; வெளிப்படுத்துதல் 21:3, 4) நான் இதற்கு முன்பு ஒருபோதும் அனுபவித்திராத அதிசயக்கத்தக்க சந்தோஷத்தை உணர்ந்தேன்.
அந்தச் சமயத்தில், ஹங்கேரியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் வேட்டையாடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள், ஏனென்றால் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியங்களை அவர்கள் தைரியமாக போதித்தார்கள். ஹங்கேரிய மொழியில் என்னால் கண்டுபிடிக்க முடிந்த சாட்சிகளுடைய எல்லா பிரசுரங்களையும் வாசித்தேன்; ஹங்கேரிய மொழியில் மொழிபெயர்க்கப்படாத ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய பிரசுரங்களையும் என்னால் பெறமுடிந்தது. வேறு மொழிகளாகிய இவற்றையும் நான் கற்றிருந்தது எவ்வளவு நல்லதாக போய்விட்டது!
1956, அக்டோபரில், ரஷ்யரால் ஸ்தாபிக்கப்பட்ட கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக ஹங்கேரிய நாட்டினர் கலகம் செய்தார்கள். புடாபெஸ்டில் சண்டை சூடுபிடித்திருந்தது. யெகோவாவின் சாட்சிகள் உட்பட, சிறையிலிருந்த நிறைய பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்தச் சமயத்தில், யெகோவா தேவனுக்கு எங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக் காண்பிப்பதற்கு என்னுடைய மனைவியும் நானும் முழுக்காட்டப்பட்டோம். ஒரு வாரத்திற்குப் பிறகு, ரஷ்ய படையினர் கலகத்தை அடக்கினார்கள். விடுதலை செய்யப்பட்ட அந்த சாட்சிகள் சிறைக்குத் திரும்பி வந்தார்கள்.
மதிப்புமிக்க சிலாக்கியம்
பிரசங்க வேலைக்குப் பொறுப்புள்ளவர்களாய் இருந்த பெரும்பாலான சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், உடன் விசுவாசி ஒருவர் என்னிடம் அணுகி நம்முடைய பைபிள் பிரசுரங்களை கொஞ்சம் மொழிபெயர்க்க முடியுமா என்று கேட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருந்த இரகசிய கடிதங்கள் முதலில் எனக்கு கொடுக்கப்பட்டன; அவற்றில் பிரெஞ்சு மொழியில் டைப் அடிக்கப்பட்டிருந்த காவற்கோபுர கட்டுரைகள் அடங்கியிருந்தன. நான் இவற்றை ஹங்கேரியனில் மொழிபெயர்த்தேன், அதன் பிறகு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை பிரதிகள் சபைகளுக்கு கிடைக்கும்படி செய்யப்பட்டன.
ஹங்கேரிய கிளை அலுவலக ஊழியர் யானோஷ் கோன்ராட் என்பவர் கிறிஸ்தவ நடுநிலைமை வகித்தற்காக 12 ஆண்டுகள் சிறையிலிருந்த பிறகு 1959-ல் விடுதலை செய்யப்பட்ட பின், நான் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டேன். பின்பு மொழிபெயர்ப்பதற்காக ஆங்கில கட்டுரைகளை நான் பெற்றேன். அவை பொதுவாக, எனக்குப் பெயர் தெரியாமலிருந்த ஒரு பெண் கூரியரால் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. இதனால், நான் எப்பொழுதாவது பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டால், நான் அவருடைய பெயரை காட்டிக்கொடுக்க முடியாது.
காவற்கோபுரத்தை நான் மொழிபெயர்த்த பிறகு, சரியாக இருக்கிறதா என்பதை சகோதரர் கோன்ராட் செக்பண்ணுவார். மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் பின்பு சகோதரிகள் மெல்லிய தாள்களில் டைப் அடிப்பார்கள், ஒரே சமயத்தில் 12 பிரதிகள் எடுப்பதற்காக கார்பன் பேப்பரை பயன்படுத்துவார்கள். இவ்விதமாக, சிலசமயங்களில், காவற்கோபுர படிப்புக்கு ஆஜராயிருந்த ஒவ்வொருவரும் பாடத்திற்கான தங்களுடைய சொந்த, டைப் செய்யப்பட்ட பிரதியை வைத்திருந்தார்கள். அதன் பிறகு, அவர்கள் தங்களுடைய பிரதிகளை மற்றொரு தொகுதிக்கு கொடுத்துவிடுவார்கள். என்றபோதிலும், ஒவ்வொரு படிப்பு தொகுதிக்காக பெரும்பாலும் ஒரேவொரு காவற்கோபுர பிரதியையே நாங்கள் தயாரிக்க முடிந்தது. ஆகையினால், ஆஜராயிருந்த அனைவரும் முக்கியமாக கருத்தோடு கவனித்து, பைபிள் கலந்தாலோசிப்பிலிருந்து முழுமையாக பயனடைய குறிப்புகள் எடுக்க வேண்டியதாயிருந்தது.
1956-ல் நான் மொழிபெயர்க்கத் தொடங்கியது முதல் 1978 வரை, காவற்கோபுரம் ஹங்கேரிய மொழியில் டைப் அடிக்கப்பட்ட வடிவில்தான் விநியோகிக்கப்பட்டது. 1978 முதல் 1990 வரையாக, சைக்ளோஸ்டைலிங் செய்யப்பட்ட காவற்கோபுர பிரதிகள் கொடுக்கப்பட்டன. 1990 ஜனவரி முதற்கொண்டு அழகிய முழுவர்ணத்தில் ஹங்கேரிய மொழியில் அச்சிடப்பட்ட காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் இரண்டையும் பெறுவது என்னே ஒரு சிலாக்கியமாய் இருந்திருக்கிறது!
கம்யூனிஸ ஆட்சியில், ஒவ்வொருவரும் உலகப்பிரகாரமான வேலை செய்யவேண்டியதாயிருந்தது. ஆகவே 22 ஆண்டுகளாக, 1978-ல் உலகப்பிரகாரமான வேலையிலிருந்து நான் ஓய்வுபெறும் வரையாக, சும்மா இருந்த நேரங்களில் மொழிபெயர்த்தேன். அதை பொதுவாக, அதிகாலை வேளையிலும் பாதி இராத்திரி வரையிலும் செய்துவந்தேன். நான் ஓய்வுபெற்ற பிறகு, முழுநேர மொழிபெயர்ப்பாளராக சேவைசெய்தேன். அந்தச் சமயத்தில், ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் வீட்டில் வேலைசெய்தார்கள்; தடைவிதிக்கப்பட்டிருந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது எங்களுக்கு கடினமாய் இருந்தது. 1964-ல் போலீஸ் ஒரேசமயத்தில் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுடைய வீடுகளுக்கு ரெய்டுவந்து, எங்களுடைய கட்டுரைகளையெல்லாம் பறிமுதல் செய்தார்கள். அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக, நாங்கள் அடிக்கடி போலீஸ் ரெய்டுகளுக்கு ஆளானோம்.
மகத்தான ஆசீர்வாதங்கள்
1969-ல் பாஸ்போர்ட்டுக்கான என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; எனவே, யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாடாகிய, “பூமியில் சமாதானம்” என்ற மாநாட்டிற்கு ஆஜராவதற்கு ஹங்கேரியிலிருந்து யானோஷ் கோன்ராடும் நானும் பாரிஸுக்கு பயணம் செய்ய முடிந்தது. வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த உடன் சாட்சிகளை சந்தித்ததும் ஸ்விட்ஸர்லாந்திலுள்ள பெர்னில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சில நாட்களை செலவழித்ததும் என்னே ஒரு ஆசீர்வாதமாயிருந்தது! 1970-களில் ஹங்கேரியிலிருந்து வந்திருந்த அநேக சாட்சிகள் மாநாட்டிற்காக ஆஸ்திரியாவுக்கும் ஸ்விட்ஸர்லாந்துக்கும் செல்ல முடிந்தது.
வருஷக்கணக்கான அரசாங்க கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, 1986-ல் எங்களுடைய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மாநாட்டை புடாபெஸ்டிலுள்ள காமராயெர்டோ யூத் பார்க்கில் நாங்கள் நடத்தினோம். ஆஜராயிருந்த 4,000-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சகோதர சகோதரிகளை வரவேற்றபோதும் பார்க்கின் நுழைவாயிலில் பொறிக்கப்பட்டிருந்த எங்களுடைய கூட்டத்திற்கான வரவேற்பு உரையை வாசித்தபோதும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
கடைசியாக, 1989, ஜூன் 27 அன்று, அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுத்தது. நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில் இந்தச் செய்தி ஹங்கேரியன் டெலிவிஷனிலும் ரேடியோவிலும் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், நாங்கள் எங்களுடைய முதல் மாவட்ட மாநாடுகளை நடத்தினோம்; ஏனென்றால் எங்களுடைய வேலைக்கு ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. புடாபெஸ்டில் நடைபெற்ற கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜரானார்கள்; மேலும் அந்த நாட்டில் நடைபெற்ற மற்ற நான்கு மாநாடுகளில் ஆயிரக்கணக்கானோர் ஆஜரானார்கள். என்னுடைய கடைசி தம்பி லாஸ்லோவும் அவனுடைய மனைவியும் அந்தக் கோடையில் புடாபெஸ்டில் முழுக்காட்டுதல் பெற்றதைக் கண்டு நான் எவ்வளவாய் சந்தோஷப்பட்டேன்!
பின்பு, 1991, ஜூலையில், நாங்கள் விரும்பிய கனவு நனவாகியது—அதுதான் 40,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆஜரான புடாபெஸ்டிலுள்ள பெரிய நெப்ஸ்டேடியனில் நடைபெற்ற மாநாடு. புருக்லினிலுள்ள தலைமை அலுவலக அங்கத்தினர்களால் கொடுக்கப்பட்ட பேச்சுக்களை மொழிபெயர்க்கும் சிலாக்கியம் எனக்கு கிடைத்தது.
இன்றைக்கு அன்னாவும் நானும், அதோடுகூட 40-க்கும் மேற்பட்ட எங்களுடைய அன்பான சகோதர சகோதரிகளும், புடாபெஸ்ட் புறநகர் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அழகிய கிளை அலுவலகத்தில் வேலைசெய்கிறோம். இங்கு, எங்களுடைய மொழிபெயர்ப்பு இலாகாவில், வாலிபர்களடங்கிய ஒரு சிறந்த அணியுடன் நான் சேவை செய்கிறேன், உள்ளேயே வீட்டு வேலையில் அன்னா பங்குகொள்கிறாள்.
எங்கள் மகனுக்கு பைபிள் சத்தியத்தை அளிப்பதற்கு நாங்கள் எடுத்த முயற்சிகளின் மத்தியிலும், அவன் பெரியவனானபோது அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றபோதிலும், அவன் இப்பொழுது சத்தியத்திற்கு சாதகமாய் பிரதிபலிக்கிறான், காலப்போக்கில் அவன் யெகோவாவை சேவிப்பான் என்று நாங்கள் நம்புகிறோம்.
நம்முடைய அன்பான கடவுளாகிய யெகோவாவைப் பற்றிய சத்தியத்தைக் கண்டுபிடித்ததற்காகவும், இப்பொழுது 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை சேவிக்க முடிந்ததற்காகவும் என்னுடைய மனைவியும் நானும் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.—என்ட்ரே சான்யே சொன்னபடி.
[பக்கம் 21-ன் படம்]
என் மனைவியுடன்