பைபிள்—கடவுளிடமிருந்து வந்த கடிதம்
பைபிள் அல்லது பரிசுத்த வேதாகமம் யெகோவாவின் ஏவப்பட்ட வார்த்தையாகும். எக்காலத்துக்கும் இதுவே தலைசிறந்த புத்தகம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால், இது மிகமிக பழமையானது. மேலும், இதன் மொத்த விநியோகிப்பு, மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை போன்ற காரணங்களாலும், ஓர் இலக்கியப்படைப்பாக ஈடிணையற்று அது திகழ்வதாலும், மனிதகுலம் முழுவதற்கும் அதி முக்கியமாக இருப்பதாலும் மகத்தான புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மற்ற எல்லா புத்தகங்களிலிருந்தும் தனித்து நிற்கிறது. எந்தவொரு புத்தகத்தையும் இது பின்பற்றுவதில்லை. அதற்கே உரிய பண்புகளால் சிறப்புற்று திகழ்ந்தாலும், அதற்கான புகழை அதன் தன்னிகரற்ற ஆசிரியருக்கே அது கொடுக்கிறது. மற்ற புத்தகங்களைக் காட்டிலும் பைபிளே தீவிரமான சர்ச்சைக்குள்ளாகி வெற்றிகரமாக வெளிவந்தது; இன்று பல விரோதிகளால் பகைக்கப்படுவதைப்போல் அன்றும் பகைக்கப்பட்டது. எனவே மற்ற புத்தகங்களிலிருந்து இது வித்தியாசமாக திகழ்கிறது.
பிப்ளியா என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “சிறு புத்தகங்கள்” என்பதாகும். இந்தக் கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஒரு லத்தீன் சொல்லிலிருந்து “பைபிள்” என்ற வார்த்தை பிறந்தது. பேச்சுத்தொடர்பு கொள்ளும் கடவுளின் எழுதப்பட்ட வார்த்தையே இந்தத் தொகுப்பு, அதாவது கடவுளின் வார்த்தை. இதைப் பின்வரும் சொற்றொடர்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்: ‘யெகோவாவின் கூற்றுகள்’ (உபாகமம் 8:3, NW), “யெகோவா சொன்னவை” (யோசுவா 24:27, NW), “யெகோவாவின் கட்டளைகள்” (எஸ்றா 7:11, NW), “யெகோவாவின் சட்டம்,” “யெகோவாவின் நினைப்பூட்டுதல்,” “யெகோவாவின் கற்பனைகள்” (சங்கீதம் 19:7, 8, NW), “யெகோவாவின் வார்த்தை” (ஏசாயா 38:4, NW), ‘யெகோவாவின் வார்த்தைகள்’ (மத்தேயு 4:4, NW), “யெகோவாவினுடைய சொல்” (1 தெசலோனிக்கேயர் 4:15, NW). இந்த வேத எழுத்துக்கள் “கடவுளுடைய பரிசுத்த வாக்கியங்கள்” என்று அடிக்கடி அழைக்கப்படுகின்றன.—ரோமர் 3:2; அப்போஸ்தலர் 7:38; எபிரெயர் 5:12; 1 பேதுரு 4:11; NW.
பைபிளின் பொருளடக்கம்
புத்தகங்களுக்கெல்லாம் புத்தகமாக திகழும் இதன் பொருளடக்கம், இறந்தகாலத்தை வெளிப்படுத்துகிறது, நிகழ்காலத்தை விளக்குகிறது, எதிர்காலத்தை முன்னுரைக்கிறது. ஆதியும் அந்தமும் அறிந்திருக்கும் அவர் ஒருவரால் மாத்திரம் இந்த விஷயங்களை எழுதமுடியும். (ஏசாயா 46:10) தொடக்கத்திலேயே வானம் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றி சொல்லி இது ஆரம்பிக்கிறது. அடுத்ததாக, இந்தப் பூமியை மனித குடியிருப்புக்கு ஏற்றவாறு தயாராக்கிய பல்வேறு சம்பவங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. பிறகு, மனித ஆரம்பத்தைப் பற்றி உண்மையில் அறிவியல் ரீதியிலான விளக்கத்தை, அதாவது உயிரின் ஊற்றுமூலராகிய அவரிடமிருந்து மாத்திரம் உயிர் உற்பத்தியாகிறது என்ற விளக்கத்தை வெளியிடுகிறது. இந்த உண்மைகளை இப்போது ஓர் ஆசிரியரின் இடத்திலிருந்து படைப்பாளர் ஒருவரால் மாத்திரம் விளக்க முடியும். (ஆதியாகமம் 1:26-28; 2:7) மனிதன் இறப்பதற்கான காரணத்தை சொல்லும் பைபிள் பதிவில் அதன் தலைப்பு அறிமுகம்செய்யப்படுகிறது. இத்தலைப்பு பைபிள் முழுவதும் பரவலாக ஊடுருவிச்செல்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகிய கிறிஸ்துவினுடைய ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படும் மற்றும் பூமிக்காக அவர் கொண்டுள்ள நோக்கம் கடைசியில் நிறைவேற்றப்படும் என்பதே இதன் தலைப்பு. இந்தத் தலைப்பு, ‘ஸ்தீரியின் வித்துவை’ பற்றிய சொல்லப்பட்ட முதல் தீர்க்கதரிசனத்தில் பொதிந்துகிடந்தது. (ஆதியாகமம் 3:15) இந்த வாக்குப்பண்ணப்பட்ட ‘வித்துவை’ குறித்து மறுபடியும் சொல்வதற்குள் 2,000-க்கும் அதிகமான வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆபிரகாமிடத்தில் கடவுள் இவ்வாறு சொன்னார்: “உன் சந்ததிக்குள் [“வித்து,” NW] பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) 800 வருடங்களுக்கு மேல் ஆனபோது ஆபிரகாமின் வம்சத்தில் வந்த தாவீது ராஜாவிடம் மறுபடியும் இதைக்குறித்து உறுதியளிக்கப்பட்டது. காலம் கடந்து செல்லச்செல்ல இந்த நம்பிக்கையென்னும் தீபத்தை யெகோவாவின் தீர்க்கதரிசிகள் இன்னும் பிரகாசமாக ஒளிரச்செய்தனர். (2 சாமுவேல் 7:12, 16; ஏசாயா 9:6, 7) தாவீதுக்குப்பின் 1,000 வருடங்களுக்கும் மேல் உருண்டோடி விட்டன; முதன்முதலில் ஏதேனில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 4,000 வருடங்கள் கடந்து சென்றன. இந்தச் சமயத்தில்தான் வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகிய இயேசு கிறிஸ்து தோன்றினார். ‘அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்துக்கு’ சட்டப்படி அவர்தான் வாரிசு. (லூக்கா 1:31-33; கலாத்தியர் 3:16) பூமிக்குரிய ‘சர்ப்பத்தின்’ வித்தினால், “உன்னதமானவருடைய குமாரன்” மரணத்தில் நசுக்கப்பட்டு, ஆதாமின் வம்சத்தார் இழந்துபோன வாழ்க்கை உரிமைகளை மீட்பதற்காக கிரய விலையை அவர் கொடுத்தார். இவ்வாறாக, மனிதகுலம் நித்தியஜீவனை பெறுவதற்கான ஒரே வழியை உண்டாக்கினார். பிறகு மிக உயர்ந்த ஸ்தானத்துக்கு அவர் உயர்த்தப்பட்டார். ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பத்தை’ பூமியில் தள்ளிவிடவும், கடைசியில் அவனை முற்றிலுமாக அழித்துவிடவும் ஏற்றதோர் காலம் வரும்வரை அங்கே அவர் காத்திருக்க வேண்டும். இவ்வாறாக, ஆதியாகமத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மகத்தான தலைப்பானது பைபிளின் மற்ற பகுதிகள் முழுவதிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவடைந்து, வெளிப்படுத்துதலின் கடைசி அதிகாரங்களில் மகத்தான உச்சக்கட்டத்தை அடைகிறது. ஏனென்றால் யெகோவா தம்முடைய ராஜ்யத்தின் மூலம் செய்யவிருக்கும் அவரது மகத்தான நோக்கம் இந்த அதிகாரங்களில் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 11:15; 12:1-12, 17; 19:11-16; 20:1-3, 7-10; 21:1-5; 22:3-5.
ஒரு தகவல் கருவூலம்
66 சிறு புத்தகங்கள் அடங்கிய இந்த நூலகத்தில் பல விஷயங்களின் பேரில் தரப்படும் தகவல்களோடு ராஜ்யம் என்ற அதன் தலைப்பும், யெகோவாவின் பெயரும் பின்னிப்பிணைந்துள்ளன. விவசாயம், கட்டடக் கலை, வானவியல், வேதியியல், வணிகவியல், பொறியியல், மனித இன இயல், அரசாங்கம், சுகாதாரம், இசை, கவிதை, மொழியியல், போர் தந்திரங்கள் போன்ற பல்வேறு அறிவு துறைகளைப்பற்றி பைபிள் குறிப்பிடுகிறது; ஆனாலும், அதன் தலைப்பை விரிவாக்கவே அவ்வாறு சிறிய அளவில் குறிப்பிடுகிறதே அன்றி, ஆய்வு கட்டுரையாக அளிப்பதில்லை. இருந்தபோதிலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் பழம் எழுத்துக்களை ஆராய்வோருக்கும் நம்பகமான தகவல் அடங்கிய ஒரு கருவூலமாக இது திகழ்கிறது.
வரலாற்று விவரத்தை துல்லியமாகவும், மிக ஆழமாகவும் அளிப்பதால் மற்ற எல்லா புத்தகங்களையும் பைபிள் மிஞ்சிவிடுகிறது. ஆயினும், தீர்க்கதரிசனம் என்ற அம்சத்தை எடுத்துக்கொண்டால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக உயர்கிறது. அது முன்னுரைத்திருக்கும் எதிர்காலம் நித்திய ராஜாவால் மாத்திரம் திருத்தமாக வெளிப்படுத்த முடியும். பைபிளின் நீண்ட தீர்க்கதரிசன பட்டியலில், கடந்த நூற்றாண்டுகளில் வந்து போன உலக பேரரசுகளைப் பற்றியும், இன்றைக்கு இருக்கும் அமைப்புகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைப் பற்றியும் முன்னுரைக்கப்பட்டன.
அறியாமை, மூடநம்பிக்கைகள், மனித தத்துவங்கள், முட்டாள்தனமான மனித பாரம்பரியங்கள் போன்றவற்றிலிருந்து கடவுள் வார்த்தையிலுள்ள சத்தியம் மக்களுக்கு நன்மைதரும் விதத்தில் விடுதலையை அளிக்கிறது. (யோவான் 8:32) ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’ (எபிரெயர் 4:12) பைபிள் மாத்திரம் இல்லையென்றால், நமக்கு யெகோவாவைப் பற்றியும் தெரிந்திருக்காது, கிறிஸ்துவின் கிரய பலியால் விளையும் அருமையான நன்மைகளைப் பற்றியும் தெரிந்திருக்காது, கடவுளுடைய நீதியான ராஜ்யத்தில் அல்லது அதன் ஆளுகையின்கீழ் நித்தியஜீவனை பெறுவதற்கான தேவைகளை நிறைவேற்ற என்ன செய்யவேண்டும் என்றும் புரிந்திருக்காது.
வேறுவிதங்களிலும் பைபிள் மிகவும் நடைமுறையான புத்தகமாக இருக்கிறது. ஏனெனில், வாழ்க்கையை எவ்வாறு நடத்தவேண்டும், கிறிஸ்தவ ஊழியத்தை எவ்வாறு நிறைவேற்றவேண்டும், கடவுள் இல்லை என்று சொல்லி, இன்பத்தையே நாடி ஓடும் இந்தக் காரிய ஒழுங்குமுறையிலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்ற நல்ல பயனுள்ள அறிவுரையைத் தருகிறது. இந்த உலக சிந்தனைகளை விட்டுவிட கிறிஸ்தவர்கள் தங்கள் மனங்களில் திடத்தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன்மூலம் “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” அவர்களால் இருக்கமுடியும் என்றும் அது அறிவுறுத்துகிறது. இதற்காக அவர்கள், “கிறிஸ்து இயேசுவிலிருந்த” தாழ்மையான மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டும், முன்பு இருந்த மனிதப் பண்புகளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, புதிய பண்புகளை வளர்க்கவேண்டும். (ரோமர் 12:2; பிலிப்பியர் 2:5-8; எபேசியர் 4:23, 24; கொலோசெயர் 3:5-10) அப்படியென்றால், “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டவேண்டும். இந்தத் தலைப்புகளின் பேரில் அதிகமாக எழுதியிருப்பதை நாம் பைபிள் முழுவதும் காணலாம்.—கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:12-14.
ஆகவே, இந்த 20-ம் நூற்றாண்டில், “இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற [பைபிளை] கவனித்திருப்பது” நமக்கு நன்மையை விளைவிக்கும். (2 பேதுரு 1:19; சங்கீதம் 119:105) “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து” படித்த விஷயங்களைப் பின்பற்றும் நபர் வாழ்க்கையில் வெற்றியடைகிறார், மனமகிழ்ச்சியோடு இருக்கிறார்.—சங்கீதம் 1:1, 2; யோசுவா 1:8.