இரைச்சல்—நவீனகால தொல்லை
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“வாழ்க்கையில் மிக அதிகளவு அழுத்தம் தரும் காரணிகளுள் ஒன்று.”—மாகிஸ் ட்சபோகாஸ், உலக சுகாதார நிறுவன ஆலோசகர்.
“அமெரிக்காவில் எங்கும் பரவியிருக்கும் மாசுப்பொருள்.”—த பாஸ்டன் ஸண்டே குளோப், அ.ஐ.மா.
“நம்முடைய நாளின் படுமோசமான மாசுப்பொருள்.”—டெய்லி எக்ஸ்பிரஸ், லண்டன், இங்கிலாந்து.
உங்களால் அதை பார்க்கவோ, நுகரவோ, சுவைக்கவோ, தொடவோ முடியாது. நவீன நகர்ப்புற வாழ்வின் சாபமாக இருக்கும் இரைச்சல், இப்போது கிராமப்புறங்களையும் மாசுபடுத்துகிறது.
சுமார் பதினாறு வருடங்களாக இயற்கையின் சப்தங்களை பதிவுசெய்துவந்த அமெரிக்க உயிரின ஆராய்ச்சியாளர் ஒருவர், இப்போது தன்னுடைய வேலை அதிக கடினமாகி வருவதைக் கவனித்தார். 1984-ல் அ.ஐ.மா.-விலுள்ள வாஷிங்டன் மாகாணத்தில், 15 நிமிடங்கள் அல்லது அதற்கும் அதிகமான நேரம் இரைச்சலின்றி இருந்த 21 இடங்களை அவர் ஆராய்ந்தார். ஐந்து வருடங்கள் கழித்து, மூன்று இடங்கள் மட்டுமே மீதமிருந்தன.
உலகத்திலுள்ள அநேகருக்கு, இரைச்சலில்லாத மூன்று இடங்களை கண்டுபிடிப்பதுங்கூட ஒரு சவாலாக இருக்கிறது. ஜப்பானில் மற்றெந்த விதமான தூய்மைக்கேட்டையும்விட, இரைச்சல் அதிகளவான முறையிடுதல்களைத் தூண்டியது என 1991-ன் தேசிய அளவிலான ஒரு அறிக்கை தெரிவித்தது. உண்மையில், இரைச்சலை “தற்போதைய வாழ்க்கையின் மிகப்பெரிய இன்னல்” என்று லண்டனின் த டைம்ஸ் பத்திரிகை விவரித்தது பொருத்தமாகவே இருக்கிறது. எரிச்சலூட்டும் வண்ணம் தொடர்ந்திருக்கும் ஒரு நாயின் குரைச்சலிலிருந்து, அயலகத்தாரின் ஸ்டீரியோ, காரில் பொருத்தப்பட்ட எச்சரிப்பொலி அல்லது ரேடியோவின் தொடர்ந்த அலறல் வரை, இரைச்சல் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. என்றபோதிலும், இரைச்சல் தூய்மைக்கேடு புதிதான ஒன்றல்ல. அதற்கு ஒரு நீண்ட சரித்திரமே இருக்கிறது.
ஒரு புதிய பிரச்சினையல்ல
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பகல் நேரத்தில் சக்கர வண்டிகள் ரோமின் மையப்பகுதிக்கு வருவதை ஜூலியஸ் சீசர் தடைசெய்தார். ஆனால் வருத்தகரமாக, “மர அல்லது இரும்பு வளையம் பொருத்தப்பட்ட வண்டிச்சக்கரங்கள் கல்-சாலையில் கடகடவென்று உருண்டுசென்றதால்,” அந்தச் சட்டம் அவருக்கும் உடன் ரோமர்களுக்கும் இரவுநேரத்தில் அதிகளவு இரைச்சல் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியது. (லூயிஸ் மம்ஃபோர்டு எழுதிய சரித்திரத்தில் நகரம் [ஆங்கிலம்]) இரைச்சல் ரோமர்களுக்கு நித்திய உறக்கமின்மையை ஏற்படுத்தியது என நூறு ஆண்டுகளுக்கும் பிறகு ஜூவினல் என்ற கவிஞர் குறைகூறினார்.
பதினாறாவது நூற்றாண்டிற்குள், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன், சந்தடிமிக்க ஒரு மாநகரமானது. எலிசெபத் காலத்து இங்கிலாந்து (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆசிரியரான அலிசன் பிலௌடன் இவ்வாறு எழுதுகிறார்: “பெரும்பாலான பார்வையாளர்கள் மனதில் முதலில் பதிந்தது பேரிரைச்சலே: ஆயிரக்கணக்கான பட்டறைகளிலிருந்து வந்த கடகட ஒலிகளும், சம்மட்டி ஒலிகளும், சக்கர வண்டிகள் உருண்டோடுவதும் கீறிச்சிடுவதும், சந்தைக்கு ஓட்டிச்செல்லப்படும் கால்நடைகளின் குரலோசைகளும், தங்கள் பண்டங்களை தெருக்களில் கூவி விற்கும் வியாபாரிகளின் உரத்த கரகரப்பான குரல்களுமே.”
பதினெட்டாவது நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஆரம்பமானது. தொழிற்சாலைகளில் வேலைசெய்பவர்களின் செவியுணர்வு பாதிக்கப்பட ஆரம்பித்ததுடன், இப்போது இயந்திர இரைச்சலின் பாதிப்புகள் தெளிவாக தெரிய ஆரம்பித்தன. ஆனால், தொழிற்சாலைகளுக்கு அருகில் வசிக்காத நகரவாசிகளும்கூட அதிகமான தொந்தரவு ஏற்படுவதாக முறையிட்டனர். கூவும் சேவல்கள், அயலகத்தாரின் பியானோ, அருகிலுள்ள தெருவின் போக்குவரத்து ஆகியவற்றின் சப்தங்களை தவிர்ப்பதற்காக, லண்டனிலுள்ள தன்னுடைய வீட்டுக் கூரையில் அமைந்த “சப்தம் புகா” அறையில் சரித்திராசிரியன் தாமஸ் கார்லையல் தஞ்சம் புகுந்தார். த டைம்ஸ் அறிவிக்கிறது: “எந்தப் பிரயோஜனமும் இல்லை.” ஏன்? “படகுகளின் மற்றும் ரயில் வண்டிகளின் சீழ்க்கைகள் உட்பட ஓயாத புதிய இரைச்சல்களினால் அவர் அதிகமாக அவதிப்பட்டார்”!
எங்கும் பரவியிருக்கும் நவீனகால மாசுப்பொருள்
இரைச்சலை எதிர்ப்பவர்கள் இன்று விமான நிலையங்கள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் அதேசமயத்தில், இரைச்சல் தூய்மைக்கேட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்படுவதை தவிர்க்க விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் மும்முரமாக முயற்சிசெய்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் அதிவேக கண்கார்டு விமானம் புறப்பட்டபோது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் விமான நிலையம் கட்டாய அபராதங்களை சுமத்தியது; அவை பலன் தருபவையாக இருந்தனவா? இல்லை. அந்த விமானம் அதிக இரைச்சல் ஏற்படுத்துவது உண்மைதான் என்று ஒரு கண்கார்டின் ஓட்டுனர் ஒப்புக்கொண்டார்; ஆனால் இரைச்சலை குறைப்பதற்காக குறைந்தளவு எரிபொருளுடன் அந்த விமானம் கிளம்பினால், எங்கும் நிற்காமல் நேராக டோரன்டோ அல்லது நியூ யார்க் போய்சேர முடியாது என்று கூறினார்.
சாலைப்போக்குவரத்து இரைச்சலை தவிர்ப்பதும் அதேயளவு கடினமானது. உதாரணமாக, ஜெர்மனியில் இந்தத் தூய்மைக்கேடு, ஜனத்தொகையில் 64 சதவீதத்தினரை தொந்தரவு செய்வதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அது அதிகரித்துவரும் ஒரு பிரச்சினையாகவும் உள்ளது; சமுதாயம் மோட்டார் வாகனங்களை உபயோகிப்பதற்கு முன்பிருந்ததைவிட இது ஆயிரம் மடங்கு அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. “ஐரோப்பாவிலுள்ள இரைச்சல்மிக்க நகரங்களில் ஆதன்ஸும் ஒன்று, மேலும் அதன் பேரிரைச்சல் அவ்வளவு அதிகம் தாங்கமுடியாததாக இருப்பதால் ஆதன்ஸ் வாசிகளின் சுகநலத்தை அது கெடுக்கிறது” என்று கிரீஸிலிருந்து வரும் ஒரு அறிக்கை கூறுகிறது. அதேபோல, போக்குவரத்து இரைச்சல் மோசமாகிக்கொண்டு வருவதாகவும் அதற்கு காரணம் அதிகரித்துவரும் மோட்டார் வாகன உபயோகமே என்பதாகவும் ஜப்பானின் சுற்றுச்சூழல் ஏஜென்ஸி கூறுகிறது. குறைவான வேகத்தில் காரின் இன்ஜின்தான் அதிக இரைச்சலுக்கான காரணம்; ஆனால் மணிக்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக செல்லும்போது, டயர்கள்தான் அதிக இரைச்சலை ஏற்படுத்துகின்றன.
பிரிட்டனில், இரைச்சல் முறையீடுகளுக்கு அதிகளவான காரணம் வீடுகளில் ஏற்படும் இரைச்சலே. 1996-ல், இரைச்சல் ஏற்படுத்திய அயலகத்தாரைப் பற்றிய முறையீடுகளில் 10 சதவீத அதிகரிப்பு இருந்ததை பிரிட்டனின் அரசுரிமைபெற்ற சுற்றுச்சூழல் நல நிறுவனம் கவனித்தது. அந்த நிறுவனத்தின் பெண்-பிரதிநிதி பேச்சாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “அதை விளக்குவது கடினம். ஜனங்கள் வேலைசெய்யும் இடத்தில் எதிர்ப்படும் அழுத்தங்கள் காரணமாக, வீட்டில் சமாதானமும் அமைதியும் நிலவும்படி அதிகம் எதிர்பார்க்கிறவர்களாக இருப்பதும்கூட ஒரு காரணியாக இருக்கலாம்.” பிரிட்டனில் 1994-ல் பதிவுசெய்யப்பட்ட எல்லா முறையீடுகளிலும் மூன்றில் இரண்டு பங்கு, பிந்திய இரவுநேர இசை, கார் இன்ஜின் இரைச்சல், எச்சரிப்பு மணிகள், ஹாரன்கள் போன்றவற்றை உட்படுத்தின. ஆனால், பழிவாங்கப்படுவோமோ என்ற பயத்தில் எந்த முறையீடும் செய்யாமல் இருக்கும் இரைச்சல் பலியாட்களில் கணக்கிடப்பட்ட 70 சதவீதத்தினரை பற்றியென்ன? உண்மையில் இந்தப் பிரச்சினை எங்கும் பரவியுள்ளது.
பரவலாக காணப்படும் இரைச்சல் தொல்லை காரணமாக, இரைச்சல் தூய்மைக்கேட்டை கட்டுப்படுத்த சட்டங்கள் தேவை என்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கங்கொண்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் சில சமுதாயங்கள், நிலத்தில் வேலைசெய்வதற்காக உபயோகிக்கப்படும் மின்-கருவிகளை பயன்படுத்துவதைக் குறைப்பதுப் பற்றிய சில உள்ளூர் சட்டங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இரைச்சல் ஏற்படுத்தும் அயலகத்தாரை மனதிற்கொண்டு பிரிட்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய இரைச்சல் சட்டம், இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தடைகளை மீறுகிறவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க அதிகாரமளிக்கிறது. வரம்பை மீறும் ஸ்டீரியோக்களை பறிமுதல் செய்யவும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், இரைச்சல் ஓய்ந்தபாடில்லை.
இரைச்சல் தூய்மைக்கேடு உண்மையில் வளர்ந்துவரும் பிரச்சினையாக இருப்பதால், ஒரு பலியாளாக நீங்கள் என்ன செய்வது என்று ஒருவேளை யோசிக்கலாம். ஆனால், நீங்களும்கூட எவ்வாறு இரைச்சல் ஏற்படுத்தாமல் இருக்கலாம்? நிலையான சமாதானமும் அமைதியும் எப்போதாவது இருக்குமா? பதில்களுக்கு பின்வரும் கட்டுரைகளை வாசியுங்கள்.