இரைச்சல்—இதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்
நாள் முழுவதும் வேலை செய்த களைப்பால், பொழுது சாய்கையில் நீங்கள் அயர்ந்து தூங்கிவிடுகிறீர்கள். திடீரென்று, அக்கம்பக்கத்திலுள்ள நாய்கள் குரைப்பதால் நீங்கள் விழித்துக்கொள்கிறீர்கள். எரிச்சலூட்டும் அந்த சப்தம் சீக்கிரத்தில் அடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் புரண்டுபடுக்கிறீர்கள். ஆனால் அது தொடர்கிறது. திரும்பத்திரும்ப அவை குரைத்துக்கொண்டே இருக்கின்றன. தூக்கமின்மையால் எரிச்சலும் கோபமும் அடைந்தவர்களாயும் இப்போது முழுமையாக விழித்துக்கொண்டவர்களாயும், உங்கள் அயலகத்தார் இந்த அமளியை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ என்று வியந்துபோகிறீர்கள்.
இரைச்சலை சகித்துக்கொள்ளும் விதத்தில் மக்கள் வெகுவாக வித்தியாசப்படுகின்றனர். விமானங்கள் சம்பந்தப்பட்டிராத வேலையை செய்பவர்களோடு ஒப்பிடுகையில், ரன்வேக்கு அருகில் குடியிருக்கும் விமான நிலைய ஊழியர்கள் அவற்றின் இரைச்சலால் அதிக தொந்தரவு அடைவதில்லை. பக்கத்து அறையில் அமர்ந்து, டிவி பார்க்கவோ புத்தகம் படிக்கவோ முயலும் ஒருவரை பார்க்கிலும் மிக்ஸியை பயன்படுத்தும் ஒரு குடும்பத் தலைவி அந்த இரைச்சலை நன்றாகவே பொறுத்துக்கொள்கிறாள்.
இரைச்சல் தூய்மைக்கேடு என்பது என்ன?
இரைச்சல் தூய்மைக்கேட்டை வரையறுக்கும் விதத்தில் நாடுகள் வித்தியாசப்படுகின்றன. மெக்ஸிகோவில், “ஆட்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் அல்லது கேடு விளைவிக்கும் எந்தத் தேவையற்ற சப்தமும்” இரைச்சலாகும். “ஒருவருடைய அமைதியிலும் சுகநலத்திலும் சௌகரியத்திலும் நியாயமற்ற விதத்தில் குறுக்கிடும் அளவுக்கு” சப்தம் இருக்குமானால் அதுவே நியூ ஜீலாந்தில் அளவுக்கதிகமான இரைச்சல் என்று கருதப்படும்.
இரண்டு புகழ்பெற்ற விஞ்ஞானிகளான, தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லும் ஜெர்மானிய இயற்பியலர் ஹைன்ரீக் ஹெர்ட்ஸும் சப்தத்தை அளவிடுவதுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்டவர்கள். பெல் அல்லது பொதுவாக டெசிபெல் (பெல்லில் பத்தில் ஒரு பாகம்) சப்தத்தின் சம்பந்தப்பட்ட அளவையும், ஹெர்ட்ஸ் சப்தத்தின் ஸ்தாயி அல்லது அலைவெண்ணை அளக்கவும் பயன்படுகின்றன. சப்தம் அளக்கப்படும்போது, அறிக்கைகள் பொதுவாக குறிப்பிடுவது சப்தத்தின் டெசிபெல் அளவையே. a
ஆனால் ஒரு சப்தம் எந்தளவு தொந்தரவை ஏற்படுத்துகிறது என்பதை யார் தீர்மானிப்பது? சப்தத்தை கேட்பவராகிய நீங்களே! “எரிச்சலூட்டும் அளவை தீர்மானிக்க மனித காதே திறம்பட்ட கண்டுபிடிப்புக் கருவி” என லண்டனின் தி இன்டிபென்டன்ட் கூறுகிறது.
இரைச்சலின் விளைவுகள்
சப்தத்தின் “திறம்பட்ட கண்டுபிடிப்புக் கருவி”யாக மனித காது இருப்பதால், அதிக சேதத்திற்குள்ளாகக் கூடியதும் அந்த உறுப்பாகவே இருக்கவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. உங்கள் உட்செவியின் நுண்ணிய நரம்பு செல்கள் பாதிக்கப்படுவது நிரந்தரமான செவிட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். அதிக சப்தமான ஒலிகளுக்கு மக்கள் வித்தியாசமான விதங்களில் பிரதிபலிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் 80 அல்லது 90 டெசிபெல்லுக்கு அதிகமான சப்தத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக செவியுணர்வு இழக்கப்படுவதில் விளைவடையக்கூடும். உண்மையில், சப்தம் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, உங்கள் செவியுணர்வு பாதிக்கப்படாமல் அந்தச் சூழலில் நீங்கள் தினமும் செலவிடக்கூடிய நேரம் அந்தளவுக்கு குறைவாக இருக்கும்.
பிரான்ஸில் விற்கப்படும் அநேக வாக்-மேன்களிலிருந்து வெளிப்படும் சப்தத்தின் உச்ச அளவு 113 டெசிபெல்லாகும் என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. “வாக்-மேன்களில் ராக் இசையை முழு சப்தத்தில் ஒருமணி நேரம் கேட்பது, பெரும்பாலான சமயங்களில் 100 டெசிபெல்லுக்கு அதிகமாகவும் உச்ச அளவாக ஏறக்குறைய 127 டெசிபெல்லையும் எட்டினது” என்று ஒரு ஆராய்ச்சியை மேற்கோள்காட்டுவதாய் அது கூறியது. இசை நிகழச்சிகள் நடக்கும்போது உண்டாகும் இரைச்சலின் விளைவு இன்னுமதிக வினைமையானது. ஒலிபெருக்கி அடுக்குகளுக்கு அருகில் மக்கள் உணர்வற்ற மயக்கநிலையில் குழுமியிருப்பதை ஒரு ஆராய்ச்சியாளர் கவனித்தார். “என் கண்கள் மங்க ஆரம்பித்தன; அந்தத் தாழ்வான அதிர்வொலி (bass beat) என் உடலெங்கும் பாய்ந்தது; அந்த இரைச்சல் என் காதுகளுக்கு வேதனையளிப்பதாக இருந்தது” என்று அவர் கூறுகிறார்.
இரைச்சல் உங்கள்மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தலாம்? ஒரு புத்தகம் கூறுகிறது: “மிதமானது முதல் அதிகளவு வரை உள்ள தொடர்ச்சியான இரைச்சல்கள், அழுத்தம், சோர்வு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.” ஜெர்மனியிலுள்ள கிஸன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேரால்ட் ஃப்லைஷர் இவ்வாறு கூறுகிறார்: “இரைச்சலால் சித்திரவதை அனுபவிப்பது வாழ்வின் சந்தோஷத்தை போக்குவது மட்டுமல்ல, ஒரு ஆளை சரீரப்பிரகாரமாகவும் உணர்ச்சிப் பிரகாரமாகவும் நொந்துபோகும்படியும் செய்யும்.” மற்ற அநேக அழுத்தந்தரும் நிலைமைகளோடு இரைச்சலும் சேர்ந்துகொள்ளும்போது, அது மனச்சோர்வையும் சரீர வியாதிகளையும்கூட தூண்டலாம் என்று பேராசிரியர் மாகீஸ் ட்சபோகாஸ் கூறுகிறார்.
தொடர்ந்து இரைச்சலைக் கேட்கும் நிலைக்கு ஆளாவது உங்கள் ஆளுமையை பாதிக்கலாம். அதற்குக் காரணமாக இருந்தவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று இரைச்சல் தூய்மைக்கேட்டினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரிட்டனின் அரசாங்க ஆராய்ச்சியாளர்கள் கேட்டபோது, அவர்களை வெறுப்பதாகவும், பழிவாங்க, கொலை செய்யக்கூட நினைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். மறுபட்சத்தில், தங்கள்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குவியும்போது, இரைச்சலுக்கு காரணமானவர்கள் அடிக்கடி ஆத்திரமடைகின்றனர். “இரைச்சல், மக்கள் மத்தியில் பிறர்நலம் கருதும் தன்மையை குறைத்து, ஆத்திரத்தையும் பகைமையையும் ஏற்படுத்துகிறது” என்று இரைச்சலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒருவர் உரிமைபாராட்டுகிறார்.
இரைச்சல் தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அந்தத் தொல்லைக்கெதிரான தங்கள் எதிர்ப்புசக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கவனிக்கிறார்கள். எப்போதுமே சப்தமாக இசையை இசைக்கும் அயலகத்தாரையுடைய ஒரு பெண்ணின் நோக்குநிலையையே இவர்களும் பிரதிபலிக்கின்றனர்: “நீங்கள் விரும்பாத ஒன்றை கேட்கும்படி வற்புறுத்தப்படும்போது, அது உங்கள் உடலை சேதப்படுத்துகிறது. . . . இரைச்சல் நின்றுபோன பிறகும் அது மறுபடியும் ஆரம்பிக்கும் என்று அறிந்திருந்தோம்.”
அப்படியென்றால், இரைச்சல் தூய்மைக்கேட்டை கையாள எந்த வழியுமே இல்லையா?
நீங்கள் செய்யக்கூடியவை
இரைச்சல் அவ்வளவாக எங்கும் பரவியிருப்பதால், தாங்கள் எப்போது மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள் என்பதைக்கூட அநேகர் அறியாமலிருக்கின்றனர். அவர்கள் அறிய வந்தால், எரிச்சலூட்டும் அந்த நடவடிக்கையை சிலர் நிச்சயம் நிறுத்திவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகவே, இரைச்சல் உண்டாக்கும் அயலகத்தாரிடம் சிநேகப்பான்மையான அணுகுமுறை பலன் தருவதாக இருக்கும். தான் இரைச்சல் ஏற்படுத்தியதாக அதிகாரிகளிடம் முறையிட்ட தன்னுடைய அயலகத்தார்மீது ஒருவர் கோபமடைந்தார். அவர் சொன்னார்: “அந்த இரைச்சல் அவர்களுக்கு தொந்தரவாக இருந்திருந்தால், நேரடியாக என்னிடம் வந்து சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.” சில சிறுவர்களுக்கு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ஒரு தாய், இரைச்சல் முறையீட்டை விசாரிக்க வந்த அதிகாரி ஒருவரை எதிர்ப்பட்டபோது ஆச்சரியமடைந்தார். “இந்த முறையீட்டை செய்தவர்கள், அவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறதென்று என் வீட்டுக் கதவைத் தட்டி என்னிடமே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். வீட்டிலுண்டாகும் இரைச்சலைப் பற்றி முறையிடுபவர்களில் 80 சதவீதத்தினர், இரைச்சலை குறைக்கும்படி தங்கள் அயலகத்தாரிடம் கேட்கவேயில்லை என்பதை பிரிட்டனின் சுற்றுச்சூழல் நல அலுவலர் ஒருவர் அறியவந்தபோது ஆச்சரியமடைந்ததில் வியப்பேதுமில்லை.
இரைச்சல் ஏற்படுத்தும் அயலகத்தாரிடம் பேச ஜனங்கள் விரும்பாதது, ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவது குறைவுபடுவதை காண்பிக்கிறது. ‘நான் பாட்டு கேட்க விரும்பினால் கேட்கலாம். அது என்னுடைய உரிமை!’ என்ற பதிலையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதையே அடிக்கடி பெறுகிறார்கள். சத்தத்தை குறைக்கும்படி தயவாக சொன்னால், இரைச்சலை ஏற்படுத்தும் அயலகத்தார் அந்த ஆலோசனையை அனாவசிய தலையிடுதலாக கருதுவார் என்றும் அது சண்டைக்கு வழிநடத்தும் என்றும் பயப்படுகின்றனர். தற்கால சமுதாயத்தைப் பற்றிய எப்படிப்பட்ட பரிதாபகரமான சித்தரிப்பை இது கொடுக்கிறது! பைபிள் சொன்னவிதமாகவே, இந்தக் ‘கொடிய காலங்களில்’ மக்கள் பொதுவாக ‘தற்பிரியராயும், அகந்தையுள்ளவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், துணிகரமுள்ளவர்களாயுமே’ இருக்கின்றனர்!—2 தீமோத்தேயு 3:1-4, NW.
பாதிக்கப்பட்டவரின் அணுகுமுறையிலேயே அதிகம் சார்ந்திருக்கிறது. கோபமாக செய்யப்பட்ட ஒரு முறையீடு, இரைச்சல் ஏற்படுத்தியவரை எரிச்சலடைய செய்திருந்தால் அந்த இறுக்கமான சூழ்நிலையை எப்படி கையாளலாம் என்பதைப் பற்றி உமண்ஸ் வீக்லி என்ற பத்திரிகை கொடுக்கும் கற்பனைக் காட்சிதான் இது: “முறையீடு செய்தவர் அன்போடும் புரிந்துகொள்ளுதலோடும், ‘என்ன மன்னிச்சுடுங்க—எனக்கு கோபம் வந்துடுச்சு; சரியா தூங்கமுடியாட்டி நான் ரொம்ப சோர்ந்துபோயிடறேன்’ என்று சொல்வதே [எதிர்வாதமிடும் அயலகத்தாரை] சமரசம் செய்வதற்கு போதுமானதாக இருக்கலாம்.” ஒருவேளை சந்தோஷத்துடன் அவர்கள் தங்கள் ஒலிபெருக்கி சாதனங்களை அருகிலுள்ள சுவற்றிலிருந்து தள்ளிவைக்கலாம் அல்லது ஓரளவு சத்தத்தை குறைக்கலாம்.
உண்மையில், உங்கள் அயலகத்தாரோடு நல்ல உறவுகளைக் காத்துக்கொள்வது நன்மை பயக்கும். பகைக்கும் அயலகத்தார் மத்தியில் சமரசம் செய்துவைக்க சில உள்ளூர் அரசாங்க அதிகாரங்கள் மத்தியஸ்த சேவை செய்கின்றன. அதிகாரப் பூர்வமான முறையீடுகள் செய்வது பகைமை உணர்ச்சிகளை தூண்டுவதால் அமலாக்க அதிகாரிகளை அழைப்பதை “மிகவும் கடைசியான வழிமுறையாகவே” கருதவேண்டும்.
ஒரு புதிய வீட்டிற்கு மாறிச்செல்வதாக இருந்தால், ஒப்பந்தங்களை முடிவுசெய்வதற்கு முன் இரைச்சல் தொந்தரவுகள் ஏற்படுத்தும் ஊற்றுமூலங்களை கண்டறிவதை ஞானமான ஒன்றாக நீங்கள் காணலாம். நீங்கள் மாறிச்செல்லவிருக்கும் வீட்டிலுள்ள இரைச்சலை கண்டறிவதற்கு, ஒருநாளின் பல்வேறு சமயங்களில் அங்கு சென்று பார்க்கும்படி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சிபாரிசு செய்கின்றனர். அயலகத்தார் தங்கள் கருத்தைக் கூறும்படியும் நீங்கள் கேட்கலாம். புதிய வீட்டிற்கு சென்றபிறகு நீங்கள் பிரச்சினைகளை எதிர்ப்பட்டால், அவற்றை சிநேகப்பான்மையான முறையில் தீர்த்துக்கொள்ளுங்கள். சட்டமுறைப்படி தீர்க்க நினைப்பது பொதுவாக எதிர்ப்பையே தூண்டுகிறது.
ஆனால் நீங்கள் இரைச்சல்மிக்க சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு வேறு எங்கும் மாறிச்செல்ல முடியாதவர்களாக இருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வது? முடிவேயில்லாமல் கஷ்டப்பட வேண்டியதுதான் உங்கள் கதியா? அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.
இரைச்சலிலிருந்து பாதுகாப்பை பெறும் விதம்
வெளிப்புற இரைச்சலிலிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அடைக்கப்பட வேண்டிய துளைகள் ஏதாவது சுவர்களிலும் தரைகளிலும் இருக்கின்றனவா என பாருங்கள். மின்சார துளைகள் (electric sockets) இருக்குமிடங்களை முக்கியமாக கவனியுங்கள். அவை நன்றாக அடைக்கப்பட்டிருக்கின்றனவா?
இரைச்சல் பொதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியாகத்தான் வீட்டிற்குள் வருகிறது. ஜன்னல்களில் இரண்டாவது அடுக்கு கண்ணாடி (இரட்டை கண்ணாடி) அமைப்பது இரைச்சலை குறைக்க உதவலாம். ஒரு மெல்லிய துண்டு ஃபோமை உங்கள் கதவு சட்டங்களில் சேர்ப்பதும்கூட கதவு நல்ல இறுக்கமாக மூடுவதற்கு உதவியாக இருக்கலாம். உங்கள் வீட்டிற்குமுன் கதவுடன்கூடிய ஒரு வராண்டா கட்டுவது, தொல்லைப்படுத்தும் போக்குவரத்து இரைச்சலிலிருந்து உங்கள் வீட்டின் உட்புறத்தை பாதுகாக்கும்.
போக்குவரத்து இரைச்சல் மிகவேகமாக அதிகரித்துவந்தாலும் உங்கள் வாகனத்திற்குள் அதிக சத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக அநேக புதிய பொருட்களையும் வழிமுறைகளையும் வாகன தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துவருகின்றனர். அதிக சத்தம் ஏற்படுத்தாத டயர்களை உங்கள் வாகனத்தில் உபயோகிப்பது பலனளிக்கும். வித்தியாசப்பட்ட சாலை அமைப்புகளைப் பற்றி அநேக நாடுகளில் செய்யப்பட்ட சோதனைகள், “சத்தமில்லா கான்கிரீட்” (whisper concrete) போன்றவை கண்டுபிடிக்கப்படுவதில் விளைவடைந்திருக்கின்றன. அதில் சில சரளைக் கற்கள் பரவலாக விடப்படுகிறதினால், டயரோடு அதிக தொடர்பு ஏற்படுவதில்லை. இந்த விதமான சாலை அமைப்புகளை உபயோகிப்பது, சிறிய வண்டிகளில் இரண்டு டெசிபெல்லும் பார வண்டிகளில் ஒரு டெசிபெல்லும் இரைச்சல் குறைவதில் விளைவடைவதாக அறிவிக்கப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க ஒன்றல்ல என்பதுபோல் தோன்றினாலும், சராசரியாக மூன்று டெசிபெல்லை குறைப்பது போக்குவரத்திலிருந்து வரும் இரைச்சலை பாதியாக குறைப்பதற்கு சமமாகும்!
சாலை அமைப்பவர்கள் இப்போது, மறைவுகள் அல்லது மண்திட்டுகளுக்கு மத்தியில் சாலைகள் மறைந்திருக்கும்படி நெடுஞ்சாலைகளை திட்டமைக்கிறார்கள்; இவ்வாறு இரைச்சலை வெகுவாக கட்டுப்படுத்துகிறார்கள். இப்படி செய்யமுடியாத இடங்களிலும்கூட, கிழக்கு லண்டனில் உள்ளதைப்போல கற்றாடி மரக்கிளைகளும் (willow shoots) பசுமை மாறாத தாவரங்களும் ஒன்றாக பின்னப்பட்ட விசேஷமான வேலிகள் அமைக்கப்படுகின்றன; நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வாழ்பவர்களை தேவையில்லாத இரைச்சலிலிருந்து அவை பாதுகாக்கின்றன.
அலுவலகங்கள் போன்ற சில இடங்களில், வெள்ளை இரைச்சல் என்று அழைக்கப்பட்டதைக்கொண்டு கவனம் சிதறச்செய்யும் இரைச்சலை மறைப்பதும் உதவியாக இருக்கலாம்; இது வேகமாக செலுத்தப்படும் அல்லது அசையாமலிருக்கும் காற்று போன்றவற்றை உட்படுத்தலாம். b ஒலியில்லாத பியானோக்கள் (silent pianos) ஜப்பானில் பிரபலமாகி வருகின்றன. இயக்கப்படும்போது அந்த சுத்தி, கம்பியை தட்டுவதற்கு பதிலாக வாசிப்பவர் அணிந்திருக்கும் இயர்-போனில் ஒரு ஸ்வரத்தை உண்டாக்கும் மின் இணைப்பை தூண்டிவிடுகிறது.
எதிர்-இரைச்சல் என்று அவர்கள் அழைப்பதை தயாரிக்க ஏற்கெனவே விஞ்ஞானிகள் அதிக நேரத்தை ஆராய்ச்சியில் செலவு செய்திருக்கின்றனர். அடிப்படையில், இரைச்சலின் விளைவுகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் அதிர்வுகளை உண்டுபண்ண மற்றொரு ஒலிமூலத்தை உபயோகிப்பதை இது உட்படுத்துகிறது. நிச்சயமாகவே, இது கூடுதலான உபகரணத்தையும் அதிக செலவையும் உட்படுத்தும்; மேலும் இது பிரச்சினையின் மூலகாரணத்தையும் உண்மையில் நீக்கிவிடுவதில்லை. “இரைச்சலை ஒலிசார்ந்த குப்பையாக மக்கள் கருத ஆரம்பிக்கும்வரை, ஒரு நொடி அமைதியைப் பெற எதிர்-இரைச்சல்தான் ஒரே வழியாக இருக்கும்” என்று யூ.எஸ்.நியூஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுகிறது. அப்படியிருக்கலாம், ஆனால் அமைதிதான் இரைச்சல் தூய்மைக்கேட்டிற்கு மருந்தா?
உங்கள் வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் அமைதிக்கும் சமாதானத்திற்குமான வழி உண்மையில் ஏதாவது இருக்கிறதா? அடுத்த கட்டுரை உண்மையான நம்பிக்கையை தருகிறது.
[அடிக்குறிப்பு]
a சப்தத்தை டெசிபெல் அளவுகளில் அளக்கும் ஒரு கருவியை உபயோகித்தே சப்த அளவுகள் பொதுவாக கணிக்கப்படுகின்றன. நம் காது, சில அலைவெண்களை மற்றவற்றைவிட அதிக கூர்மையாக கேட்பதைப்போல, இந்தக் கருவியும் அதேவிதமாக பிரதிபலிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
b ஒளி நிறமாலையிலுள்ள எல்லா அலைவெண்களின் கலவையாக வெள்ளை ஒளி இருப்பதைப்போல, ஏறக்குறைய ஒரேயளவு சத்தம் கொண்ட, கேட்கக்கூடிய எல்லைக்குள் இருக்கும் எல்லா அலைவெண்களின் தொகுப்பாக இருக்கும் ஒலிதான் வெள்ளை இரைச்சல்.
[பக்கம் 6-ன் பெட்டி]
இரைச்சல்மிக்க அயலகத்தாராக இருப்பதை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்
● இரைச்சல்மிக்க ஏதாவது ஒன்றை செய்யும்போது உங்கள் அயலகத்தாரை கவனத்தில் கொள்ளுங்கள்; முன்னதாகவே அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.
● இரைச்சலை குறைக்கும்படி ஒரு அயலகத்தார் கேட்கும்போது ஒத்துழையுங்கள்.
● உங்கள் இன்பம் உங்கள் அயலகத்தாரின் துன்பத்திற்கு வழிநடத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
● இரைச்சலும் அதிர்வும், ஹால்கள் மற்றும் தரைகள் மூலம் மிகச் சுலபமாக கடத்தப்படலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
● இரைச்சல்மிக்க வீட்டு உபயோக பொருட்களை குஷன் போன்றவற்றின்மீது வையுங்கள்.
● வீடுகளிலிருந்தும் கார்களிலிருந்தும் வரும் பொய்யான எச்சரிப்பொலிகளை கையாள யாராவது ஒருவர் அருகிலிருக்கும்படி உறுதிசெய்து கொள்ளுங்கள்.
● பிந்திய இரவு நேரங்களில் இரைச்சல்மிக்க வேலையை செய்யாதீர்கள் அல்லது இரைச்சல் ஏற்படுத்தும் வீட்டுச் சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.
● உங்கள் அயலகத்தாருக்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அளவு சத்தத்தில் இசையை கேட்காதீர்கள்.
● அதிகமான நேரத்திற்கு நாய்களை தனியாக விடாதீர்கள்.
● பிள்ளைகள் தரையில் குதிப்பதன்மூலம், கீழ்வீட்டில் இருப்பவர்களை தொந்தரவுசெய்ய அனுமதிக்காதீர்கள்.
● இரவுநேரத்தில் கார்-ஹாரன்களை ஒலிக்கவோ, கதவுகளை தடால் என்று சாத்தவோ, இன்ஜின்களை வேகமாக இயக்கவோ செய்யாதீர்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி]
இரைச்சலும் நீங்களும்
“பிரிட்டனில் இன்று, இரைச்சல்தான் அதிக பரவலான தொழிற்சாலைசார்ந்த ஆபத்து; செவிட்டுத்தன்மைதான் அதன் பொதுவான விளைவு” என்று தி டைம்ஸ் கூறுகிறது. 85 டெசிபெல்லுக்கும் அதிகமான இரைச்சல், வளரும் ஒரு கருவை பாதிக்கலாம் என்று வேலைசார்ந்த-நல ஆராய்ச்சிகள் சில காட்டுகின்றன. குழந்தையின் செவியுணர்வு பாதிக்கப்பட்டு, இயக்குநீர் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளும் பிறக்கும் சமயத்தில் குறைபாடுகளும் ஏற்படலாம்.
அதிகமான இரைச்சலுக்கு ஆளாவது, இரத்த குழாய்களை சுருங்கச்செய்து உங்கள் உடல் உறுப்புகளுக்கு இரத்தம் செல்வதை குறைக்கிறது. உங்கள் உடல் அதற்குப் பிரதிபலிப்பதாய், இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத் துடிப்பை வேகமாக்கும் இயக்குநீர்களை தயாரிக்கிறது; அது சில சமயங்களில் வேகமான இதயத்துடிப்பை அல்லது இதயவலியையும்கூட ஏற்படுத்தலாம்.
இரைச்சல் உங்கள் வழக்கமுறையை குலைக்கும்போது, மற்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். சரியான தூக்கமின்மை, பகலில் உங்கள் நடவடிக்கைகளை பாதிக்கலாம். நீங்கள் வேலைசெய்யும் ஒட்டுமொத்த வேகத்தை இரைச்சல் மாற்றாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் செய்யும் தவறுகளின் எண்ணிக்கையை அது பாதிக்கலாம்.
[பக்கம் 9-ன் பெட்டி]
வேலை செய்கையில் பாதுகாப்பு
வேலைசெய்யும் இடத்தில் இரைச்சல் உங்களுக்கு தொந்தரவாக இருந்தால், காதை பாதுகாக்க ஏதாவது அணிவதை பற்றி சிந்தியுங்கள்.c ஹெட்-போனைப்போல உங்கள் தலையில் மாட்டிக்கொள்ளக்கூடிய காது-உறைகள் (earmuffs) அதிகமான இரைச்சலுள்ள இடங்களில் பொதுவாக பிரயோஜனமாக இருக்கும். சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தெளிவாக உங்களால் சொல்லமுடியாது என்றாலும் பேச்சு சப்தத்தையும் இயந்திர அபாய ஒலிகளையும் கேட்கக்கூடும் என்பதே அவற்றின் அனுகூலமாகும். காது-அடைப்புகள் (earplugs) உங்களுக்கு ஏற்ற அளவில் இருக்கவேண்டும்; காது நோய் அல்லது செவிக்குழாயில் ஏதாவது எரிச்சல் உங்களுக்கு இருந்தால் இவை பயனில்லை.
இயந்திரங்களை நல்லவிதமாக பராமரிப்பது அதிர்வுகளை குறைக்க உதவும். இயந்திர சாதனங்களை ரப்பர் பரப்புகளில் வைப்பதும், இரைச்சல்மிக்கவற்றை தனி இடத்தில் வைப்பதும்கூட இரைச்சல் தூய்மைக்கேட்டை வெகுவாக குறைக்கும்.
[அடிக்குறிப்பு]
c வேலைசெய்பவர்கள், தங்கள் செவியுணர்வை பாதுகாக்க போதுமான பாதுகாப்பு கருவிகளை அணிந்திருக்கிறார்களா என்பதை முதலாளிகள் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அநேக நாடுகளின் சட்டம் தேவைப்படுத்துகிறது.
[பக்கம் 17-ன் படம்]
வாகனங்களை உபயோகிக்கும் சமுதாயம் ஏற்படுத்தும் இரைச்சலிலிருந்து நீங்கள் உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம்?