அமைதியும் சாந்தமும்—எப்போதாவது நிலவுமா?
மற்றொரு நாட்டில் விடுமுறையை கழிக்கையில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்கப்பட்டபோது, பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் ஒவ்வொரு நான்கு பேரில் கிட்டத்தட்ட மூவர், “அமைதியையும் சாந்தத்தையும்” என்று பதிலளித்தனர். ஆனால் இரைச்சல் தூய்மைக்கேடு உலகளாவிய ஒரு பிரச்சினையாக இருப்பதால், உண்மையான அமைதியும் சாந்தமும் கிடைக்குமென்பது வெறும் மனக்கோட்டையே என்று அநேகர் நினைக்கின்றனர்.
இரைச்சல் தூய்மைக்கேட்டைக் குறைப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகள் மத்தியிலும், முழுமையான வெற்றி கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்புவது நடைமுறையானதா என ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். உங்களைப்போன்ற அக்கறையுடையவர்களாக இல்லாதவர்களைப் பற்றியென்ன?
மேற்கொள்ள வேண்டிய இடையூறுகள்
பகைமையுணர்ச்சி உள்ளவர்களிடம் பேசுவது சுலபமானதல்ல; உங்கள் நோக்குநிலையை அவர்களுக்கு புரியவைப்பது அதைவிட கடினமானது. ரான் என்பவர் குடியிருந்த கட்டடத்திற்கு வெளியே இரைச்சல்மிக்க இளைஞர் கும்பல்கள் கூடியபோது, அவர்களை நண்பர்களாக்க அவர் முன்முயற்சி எடுத்தார். அவர்களுடைய பெயர்களைத் தெரிந்துகொண்டார். அவர்களுடைய சைக்கிள்களில் ஒன்றை ரிப்பேர் செய்யவும்கூட உதவினார். அப்போதிலிருந்து, அவர்களால் அவருக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதில்லை.
பருவவயது மகளையுடைய ஒற்றைப்பெற்றோரான மார்ஜரி என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள்; மேல்வீட்டிலும் கீழ்வீட்டிலும் இரைச்சல்மிக்க அயலகத்தார் உள்ள அப்பார்ட்மெண்டில் அவள் வாழ்கிறாள். மேல்வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, தரையில் கம்பளம் இல்லை. ஆகவே, அவர்களுடையப் பிள்ளைகள் தரையில் ஸ்கேட்டிங் செய்வது, பந்தை தரையில் தட்டி விளையாடுவது அல்லது தங்கள் படுக்கையிலிருந்து குதிப்பதால் ஏற்படும் சப்தம்கூட தனக்கு தொந்தரவு தருவதாக மார்ஜரி உணர்கிறாள். கூடுதலாக, அவர்களுடைய தாயார் வீட்டிலிருக்கும்போது ஹை-ஹீல்ஸ் ஷூவைத்தான் அணிவார். கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி தயவான முறையில் கேட்க மார்ஜரி தன் அயலாரை அணுகினாள்; ஆனால், அவர்களுக்கிடையிலிருந்த மொழிப் பிரச்சினை ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதற்கு, ஒரு மொழிபெயர்ப்பாளரை அனுப்பிவைப்பதாக உள்ளூர் நகராட்சி மன்றம் கூறியுள்ளது; ஆகவே, ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமாவென்று மார்ஜரி காத்துக்கொண்டிருக்கிறாள்.
கீழ்வீட்டிலோ, தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் தாழ்வான அதிர்வொலி இசையை சத்தமாக ஒவ்வொரு நாள் காலையிலும் ஏழு முதல் எட்டு மணிவரை கேட்கும் ஒரு மனிதன் இருக்கிறான். அவள் சாமர்த்தியமாக அந்த மனிதனை அணுகியபோது, ‘தன் வேலையை செய்ய தன்னை நல்ல மூடில் வைப்பதற்கு’ தனக்கு இசை தேவை என்ற பதிலைத்தான் பெற்றாள். மார்ஜரி எவ்வாறு சமாளிக்கிறாள்?
“தன்னடக்கத்தையும் பொறுமையையும் வளர்த்துக்கொள்ள நான் பிரயாசப்படுகிறேன். என்னுடைய அட்டவணையை நான் மாற்றியமைத்துக்கொண்டு இரைச்சல் மத்தியிலும் வாசிக்க உட்காருகிறேன். வாசிப்பதில் நான் சீக்கிரத்திலேயே ஆழ்ந்துபோய்விடுவதைக் கவனிக்கிறேன். பிறகு அந்த இரைச்சலை நான் அதிகமாக பொருட்படுத்துவதில்லை” என்று கூறுகிறாள்.
மறுபட்சத்தில், கூச்சலும் குழப்பமும் மிக்க இரவுக்குப்பின் காலை சுமார் ஆறு மணியளவில் மூடும் ஒரு இரவுநேர கிளப்பிற்கு அருகிலிருக்கும் அப்பார்ட்மெண்டில் ஹெதர் என்பவள் குடியிருக்கிறாள். கடைசியாக உள்ளூர் அதிகாரிகளிடம் அவள் முறையீடு செய்திருந்தும், அந்தத் தொந்தரவை நிறுத்த ஒன்றும் செய்யப்படவில்லை.
இரைச்சலுக்கு முடிவா?
“முழுமையான அமைதி, அதிகளவில் தொந்தரவும் அச்சமும் தருவதாக அநேகர் காண்கின்றனர்” என்று பிரிட்டனிலுள்ள மருத்துவ ஆய்வுக் குழுவின் செவியுணர்வு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ராஸ் கோல்ஸ் கூறுகிறார். பறவைகளின் இனிமையான கீதங்களும், கடற்கரை மணலில் அலைகள் மெல்ல வருடிச்செல்வதும், பிள்ளைகளின் சந்தோஷமான ஆரவாரமும், இன்னும் மற்ற சப்தங்களும் நம்மை மகிழ்ச்சி அடையச்செய்கின்றன. இப்போது இரைச்சலிலிருந்து ஓரளவாவது விடுதலைப்பெற நாம் விரும்பினாலும், நம்மோடு அளவளாவும் நல்ல நண்பர்களோடிருக்க நாம் சந்தோஷப்படுகிறோம். தம் உண்மையுள்ள ஊழியர்களுக்கு அமைதியையும் சாந்தத்தையும் கொடுப்பதாக கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்.
பைபிளில் சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) கடவுளுடைய பரலோக ராஜ்ய அரசாங்கம் சீக்கிரத்தில் மனித விவகாரங்களில் தலையிடும். (தானியேல் 2:44) பிறகு கிறிஸ்து இயேசுவின் ஆட்சியில், “சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7; ஏசாயா 9:6, 7.
கடவுளின் தீர்க்கதரிசியாகிய ஏசாயா முன்னறிவித்ததைப்போலவே, நாம் அனைவரும் விரும்பும் அமைதியையும் சாந்தத்தையும், தெய்வீக தலையிடுதல் கொண்டுவரும் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்: ‘நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் . . . அமைதியாய்த் தங்கும் இடங்களில் குடியிருக்கும்.’—ஏசாயா 32:17, 18.
இப்போதேகூட, உள்ளூரில் யெகோவாவின் சாட்சிகள் கூடும் இடங்களில் நீங்கள் ஆவிக்குரிய அமைதியையும் சாந்தத்தையும் காணலாம். சில சமயங்களில் வணக்கத்திற்காக பெரிய மாநாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கூடிவரும்போது ஏற்படும் சத்தம், தொந்தரவாக இருப்பதற்கு மாறாக இன்பகரமாக இருக்கிறது; இந்தக் கூட்டங்கள் உண்மையில் ‘ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளால் இரைச்சல்மிக்கதாய்’ இருக்கின்றன. (மீகா 2:12, NW) உள்ளூரிலிருக்கும் சாட்சிகளை சந்திப்பதன்மூலம் அல்லது அவர்களோடு தொடர்புகொள்வதற்காக இந்தப் பத்திரிகையின் 5-ம் பக்கத்திலிருக்கும் விலாசங்களில் ஒன்றிற்கு எழுதுவதன்மூலம் நீங்களே அதை அனுபவித்துப் பாருங்கள். உண்மையான அமைதியையும் சாந்தத்தையும் அவர்களுடைய கூட்டுறவில் இப்போதும், கூடுமானால் நித்தியகாலம் வரையிலும் அனுபவியுங்கள்.