அப்பாச்சி அவர்களுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது?
“வாழ்ந்தவருள் மிகக் கொடூர முகத்தோற்றம்” என்று யாரைப்பற்றி குறிப்பிட்டார்கள்? அதே சமயத்திலே தைரியத்திற்கும் அஞ்சா நெஞ்சத்திற்கும் பெயர் பெற்றவர் யார்? அவர்தான் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்த கடைசி அப்பாச்சி தலைவர். அவர் சுமார் 80 வயதுவரை உயிர் வாழ்ந்து 1909-ல் ஓக்லஹாமாவில் டச்சு ரிஃபார்ம்ட் சர்ச்சின் ஓர் அங்கத்தினராக இறந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் கொயத்லே, (கொயக்லா என்று உச்சரிக்கப்படுகிறது) ஜரானமோ என்ற பெயரில் நன்கு அறியப்பட்ட கடைசி அப்பாச்சி பெருந்தலைவர்.
மெக்ஸிகோ வீரர்களை கொயத்லே தாக்கிய நேரத்தில் அவர்கள் பயத்தால் “செயின்ட்” ஜெரோமிடம் (ஜரொனிமோ) அலறியதால், இவரை ஜரானமோ என்று அழைக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 1850-ம் வருடத்திலே, மெக்ஸிகோவிலுள்ள ஜேனோஸ் புறநகர் பகுதிகளில் கூடாரமிட்டிருந்த 25 அப்பாச்சி பெண்களையும் பிள்ளைகளையும் மெக்ஸிகோ படை வீரர்கள் கொன்று குவித்தார்கள். அவர்களில் ஜரானமோவின் தாயும் இளம் மனைவியும் மூன்று பிள்ளைகளும் அடங்குவர். இதன்பிறகு “ஜரானமோ, வாழ்நாள் முழுவதும் மெக்ஸிகோ ஆட்களை வெறுத்தார்” என்று சொல்லப்படுகிறது. பழிவாங்கவேண்டும் என்ற வெறியினால் தூண்டப்பட்டு, மிக அஞ்சத்தக்க அப்பாச்சி தலைவர்களில் ஒருவரானார்.
ஹாலிவுட் படங்களில் எப்பொழுதும் வில்லன்களாகக் காட்டப்படும் அப்பாச்சி இந்தியர்களைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர்கள் இன்னும் இருக்கிறார்களா? அப்படியென்றால் அவர்கள் எவ்விதம் வாழ்கிறார்கள், அவர்களுக்கு என்ன எதிர்காலமிருக்கிறது?
“மனித இனத்தின் புலிகள்”
அப்பாச்சி இனத்தவர்,a (சுனி மொழியின் பதமாகிய ஆப்பாச்சு என்ற வார்த்தையிலிருந்து அவர்களுடைய பெயர் வந்திருக்கலாம்; இதன் பொருள் “எதிரி”) துணிச்சலான, பயனுள்ள யுத்தவீரர்கள் என்று அறியப்பட்டார்கள். 19-ஆம் நூற்றாண்டில், அமெரிக்க இந்தியர்களை எதிர்த்து சண்டையிட்ட பிரபலமான ஜெனரல் ஜியார்ஜ் க்ரூக் அவர்களை “மனித இனத்தின் புலிகள்” என்று அழைத்தார். இருந்தபோதிலும், ஒரு தகவல் மூலம் இவ்விதம் குறிப்பிடுகிறது: “1500-க்குப் பிறகு எந்த சமயத்திலும் எல்லா அப்பாச்சி பழங்குடியினரும் சேர்ந்து ஆறாயிரத்திற்கும் அதிகமாக இருந்ததில்லை.” ஆனால் வெறுமனே சில டஜன் யுத்த வீரர்கள், கொரில்லா போர்முறையில், ஒரு பெரிய ராணுவத்தையே நகரவிடாமல் செய்துவிட முடியும்!
ஆனால் ஒரு அப்பாச்சி குறிப்பு பின்வருமாறு சொல்கிறது: “ஸ்பானியர்கள், மெக்ஸிகோ நாட்டவர்கள், அமெரிக்கர்கள் ஆகியவர்களிடையே நிலவும் எண்ணத்திற்கு மாறாக அப்பாச்சி, யுத்தத்தை விரும்பும் இரத்த வெறி பிடித்த காட்டுமிராண்டிகள் அல்ல. நாங்கள் உணவு தட்டுப்பாடு இருந்த சமயத்தில் மட்டுமே சூறையாடினோம். காரணமின்றி போர்கள் தொடுக்கவில்லை, ஆனால் எங்களுக்கு விரோதமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக பழிவாங்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டு போர்கள் தொடுக்கப்பட்டன.” அந்த அநீதிகள், ஏராளம், ஏராளம்!
அரிஜோனாவிலுள்ள பெரிடொட் என்ற இடத்திலிருக்கும் சான் கார்லெஸ் அப்பாச்சி கலாச்சார மையத்திலுள்ள கண்காட்சி அரங்கம் அப்பாச்சி சரித்திரத்தை அவர்களுடைய கண்ணோட்டத்தில் இவ்விதம் விவரிக்கின்றது: “பிராந்தியத்திற்குள் அன்னியர்களின் வரவு, போர்களையும் சமூகத்திற்குள் மிகப்பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்தது. பழங்குடியினராகிய எங்களுக்கும் நிலத்திற்கும் இருக்கும் பந்தத்தைப்பற்றி புதிதாக குடியேறியவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. எங்களுடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் காப்பதற்காக எங்களுடைய மூதாதையர்கள் ஸ்பெய்ன், மெக்ஸிகோ, ஐக்கிய மாகாணங்கள் ஆகியவற்றின் ராணுவத்தினருக்கும் ஜனங்களுக்கும் எதிராக அநேக போர்களில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையாலும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களாலும், எங்களுடைய பாட்டன் முப்பாட்டன்மார் கடைசியாக ஐ.மா. அரசின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். காற்றைப்போல் சுதந்திரமான எங்கள் வாழ்க்கையைத் துறந்து ஒதுக்கீட்டுப்பகுதிகளில் வாழும் கட்டாயநிலை ஏற்பட்டது.” ‘ஒதுக்கீட்டுப்பகுதிகளில் வாழவேண்டிய கட்டாயநிலை’ என்ற சொற்றொடர், (இருபது லட்சத்துக்கு மேற்பட்ட பூர்வீக அமெரிக்க இந்தியரில்) ஒதுக்கீட்டுப்பகுதியில் வசிக்கும் ஐந்து லட்சம் பேர்மீது ஆழ்ந்த அனுதாபத்தை ஏற்படுத்துகிறது, இவர்கள் அமெரிக்க மாகாணங்களில் 554 பழங்குடி வகுப்பாகவும் கனடாவில் 633 தொகுதிகளாகவும் பரவியிருக்கின்றனர். அப்பாச்சி இனத்தவரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000.b
பூர்வீகத் தப்பிப்பிழைத்தல்
பூர்வீக அமெரிக்க இந்தியரின் சரித்திரத்தைப்பற்றி வல்லுநர்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு கருத்து என்னவென்றால், பூர்வீக பழங்குடியினர் ஆசியாவிலிருந்து பேரிங் ஜலசந்தி வழியாக வந்தவர்கள், பின்னர் மெதுவாக தெற்கிலும் கிழக்கிலும் பரவியவர்கள் என்பதே. மொழி வல்லுநர்கள் அப்பாச்சியின் மொழியை அலாஸ்கா மற்றும் கனடாவின் அத்தாபாஸ்கன் மொழி பேசும் மக்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள். தாமஸ் மேல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிக்கு அவர்கள் வந்த சமயத்தை இப்பொழுது ஆய்வு செய்து பார்க்கும்போது கி.பி. 1000-ல் இருந்து 1500-க்குள் இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. எந்த வழியாக வந்தார்கள் என்பதும் எவ்வளவு வேகமாக என்பதும் மனித இன வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.”—த பீப்பிள் கால்ட் அப்பாச்சி.
முந்தைய நூற்றாண்டுகளில் அப்பாச்சி இனத்தவர் தங்கள் அயலகத்தாரான ஸ்பானிய-மெக்ஸிகோ ஆட்களை சூறையாடி பிழைப்பு நடத்தினர். தாமஸ் மேல்ஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “இப்படிப்பட்ட சூறையாடுதல் சுமார் 1690-ல் தொடங்கி சுமார் 1870-வரை, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இப்படிப்பட்ட சூறையாடுதல்கள் எதிர்பாராதவை அல்ல; ஏனென்றால் பெயருக்கேற்ப மெக்ஸிகோ தேவையான பொருட்களின் களஞ்சியமாகவே விளங்கியது.”
மண்டையோட்டுத்தோலை உரிக்கும் பழக்கத்தை முதலில் ஆரம்பித்தோர் யார்?
மெக்ஸிகோ மற்றும் அப்பாச்சி தேசத்திற்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்தமையால், மெக்ஸிகோவின் சனோரா மாநில அரசு, மண்டையோட்டுத்தோலுக்கு வெகுமதி என்ற “பழைய ஸ்பானிய பழக்கத்திற்கு” திரும்பியது. இது வெறுமனே ஒரு ஸ்பானிய கண்டுபிடிப்பல்ல, இதற்கு முன்பே ஆங்கிலேயரும் பிரெஞ்சு தேசத்தவரும் இந்தப் பழக்கத்தை கையாண்டிருக்கிறார்கள்.
மெக்ஸிகோ நாட்டவர்கள் பண வெகுமதிக்காக மண்டையோட்டுத்தோலை உரித்தார்கள்; சில சமயங்களில் அந்தத் தோல் அப்பாச்சியுடையதா இல்லையா என்பதுகூட அவர்களுக்கு முக்கியமல்லாததாக இருந்தது. 1835-ஆம் ஆண்டு மண்டையோட்டுத்தோல் வெகுமதி சட்டம் மெக்ஸிகோவில் நிறைவேற்றப்பட்டது, அதன்படி ஒவ்வொரு யுத்தவீரனுடைய மண்டையோட்டுத் தோலுக்கும் 100 பேஸோ வெகுமதியாக அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணுடைய மண்டையோட்டுத்தோலுக்கு 50 பேஸோ என்றும் ஒரு பிள்ளையுடைய மண்டையோட்டுத்தோலுக்கு 25 பேஸோ என்றும் சன்மானம் நிர்ணயம் செய்யப்பட்டது! டான் த்ராப் என்பவர் த கான்குவெஸ்ட் ஆஃப் அபச்செரியா என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “இந்தச் செயல்முறை உண்மையில் பூண்டோடு அழிப்பதை குறிவைத்தது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இன அழிவு என்ற வேர் மிகப்பரவலாக பரவியிருக்கின்றது என்பதும், இது ஏதோ ஒரு நவீன நாளைய தேசத்தின் கண்டுபிடிப்பு அல்ல என்பதும் தெளிவாகிறது.” அவர் தொடர்ந்து சொல்லுகிறார்: “அப்பாச்சிகளுக்கு மண்டையோட்டுத்தோலை உரிக்கும் பழக்கம் கிடையாது.” ஆனால் எப்போதும் அல்ல, சில சமயங்களில் ச்சிரிகாஹுவா மண்டையோட்டுத்தோலை உரித்தார்கள், “ஏனென்றால் அவர்களுக்கு பேய் பயமும் மரணபயமும் மிக அதிகம்.” அவர் மேலும் இவ்விதம் சொல்கிறார்: “மெக்ஸிகோ நாட்டவர் இந்த முறையை ஆரம்பித்து வைத்தபின் ஒரு எதிர் நடவடிக்கையாக மட்டுமே அவர்கள் மண்டையோட்டுத்தோலை உரித்தார்கள்.”
கனிப்பொருளுக்காக சுரங்கம் வெட்டுபவர்கள் “ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு . . . இந்தியர்களை துரத்திச் சென்றார்கள் இவர்கள் மாட்டிக்கொள்ளும்போது கடைசி ஆண்வரை அல்லது சில சமயங்களில் எல்லா பெண்களையும் பிள்ளைகளையும்கூட கொன்று குவித்தார்கள். இந்தியர்களும் இதே பாணியை பின்பற்றி, வெள்ளையர்களையும் இன்னும் மற்ற இனத்தவரையும் பதிலுக்கு கொன்றார்கள்.”
அப்பாச்சியுடன் போர் என்பது அரிஜோனா மாகாணத்திற்கு ஒரு சமயத்தில் லாபமாக இருந்தது. சார்ல்ஸ் லமஸ் பின்வருமாறு சொல்கிறார்: “தொடர்ந்து அப்பாச்சியுடன் போரிடுவது என்பது எதை [அர்த்தப்படுத்தியது] என்றால், ஒரு வருடத்திற்கு 20 லட்சம் டாலருக்கும் அதிகமான பணத்தை இராணுவத் துறை அரிஜோனாவின் எல்லையில் விநியோகித்தது.” த்ராப் சொல்கிறார்: “பழிபாவங்களுக்கு அஞ்சாத சக்திவாய்ந்த ஆட்கள், அப்பாச்சிகளுடன் சமாதானத்தை விரும்பவில்லை; சமாதானம் வரும் சமயத்தில் ராணுவத்தால் செலவிடப்படும் பணத்தின் வருமானம் நின்று போகும்.”
தனி ஒதுக்கீட்டுப்பகுதிகள்தான் பிரச்சினைக்கான தீர்வா?
அப்பாச்சி குடியிருப்புகளுக்கும் அங்கே குடியேறிய வெள்ளையர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்ததால், இதற்கு தீர்வு காண கூட்டரசு கொண்டுவந்த பரிகாரமே இந்தியர்களுக்கு தனி ஒதுக்கீடு என்ற முடிவு. எவ்விதத்திலும் பிரயோஜனமில்லாத நிலம் ஒதுக்கப்பட்டது; அதை வைத்து அவர்கள் பிழைத்துக்கொள்ளும்படி எதிர்பார்க்கப்பட்டனர். 1871-72-ல் அப்பாச்சிக்கு தனி ஒதுக்கீட்டுப்பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன.
1872 முதல் 1876-வரை ச்சிரிகாஹுவா அப்பாச்சிக்கு சொந்தமாக ஒதுக்கீட்டுப்பகுதிகள் வழங்கப்பட்டன. சுதந்திரமாக திரியும் இந்த நாடோடி மரபினர் சிறையில் அடைக்கப்பட்டதாக உணர்ந்தனர். அவர்களுக்கு, 400 முதல் 600 பேருக்கு 27,36,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், வேட்டையாடுவதன் மூலமும் சேகரிப்பதன் மூலமும், தேவையான உணவைப்பெற இந்தத் தரிசு நிலம் போதிய இடவசதியை அவர்களுக்கு அளிக்கவில்லை. இவர்கள் பட்டினியிலிருந்து தப்பிப்பதற்காக அரசாங்கம் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவுப்படி வழங்க நேரிட்டது.
இந்நிலையிலும் குடியேறிய வெள்ளையர், இவர்களுக்கென்று தனியே கொடுக்கப்பட்ட ச்சிரிகாஹுவா ஒதுக்கீட்டுப்பகுதிகள் ஒரு பிரயோஜனமில்லா இடமென்றும் அப்பாச்சி இனத்தவர் எல்லாரையும் ஒரே ஒதுக்கீட்டுப்பகுதியில் ஒதுக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். மதிப்பு வாய்ந்த தலைவர் காக்ச்சைஸ் 1874-ல் மரித்தப்பின் குடியேறிய வெள்ளையரின் வெறுப்பெண்ணம் அதிகரித்தது. அவர்களுக்கு ச்சிரிகாஹுவா அப்பாச்சியை ஒதுக்கீட்டுப்பகுதியிலிருந்து துரத்த ஏதாவது சாக்குப்போக்கு கிடைக்காதா என்று காத்திருந்தார்கள். என்ன நடந்தது? “அவர்கள் எதிர்பார்த்ததைப்போல சாக்குச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு 1876-ல் உருவானது. சட்டத்திற்கு விரோதமாக விஸ்கி விற்ற இருவரிடம் இன்னும் அதிகமாக [விஸ்கி] வேண்டும் என்று இரு ச்சிரிகாஹுவாக்கள் கேட்க, இவர்கள் மறுக்க, இதன் விளைவு அவ்விருவரும் கொல்லப்பட்டார்கள். சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்வதற்கு பதில், சான் கார்லெஸ் ஒதுக்கீட்டுப்பகுதியின் [அரசாங்க] பிரதிநிதி ஒரு ஆயுதப் படையுடன் வந்து ச்சிரிகாஹுவா [பழங்குடியினரை] சான் கார்லெஸுக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார். ச்சிரிகாஹுவா ஒதுக்கீட்டுப்பகுதி மூடப்பட்டது.”
ஆயினும், ஒதுக்கீட்டுப்பகுதிக்கு வெளியே இந்தியர்கள் சுதந்திரமாக அலைவதற்கு இன்னும்கூட அனுமதி இருந்தது. குடியேறிய வெள்ளையருக்கு இந்தச் செயல்முறை பிடிக்கவில்லை. “குடியேறிய வெள்ளையரின் வற்புறுத்தலுக்கிணங்க அரசாங்கம், சான் கார்லெஸ், வெள்ளை மலை, சிபிக்வெ, டொன்டொ, மற்றும் ச்சிரிகாஹுவா அப்பாச்சியிலுள்ள அநேக குழுக்கள் ஆகியோரை சான் கார்லெஸ் நிர்வாகத் துறையிடம் அனுப்பிவிட்டது.”—கிரியேஷன்ஸ் ஜர்னி—நேட்டிவ் அமெரிக்கன் ஐடென்டிடி அண்ட் பிலிஃப்.
ஒரு சமயத்தில் ஆயிரக்கணக்கான யாவாபை, ச்சிரிகாஹுவா, மேற்கு அப்பாச்சி ஆகியோரை ஒதுக்கீட்டுப்பகுதிக்குள் காவலில் வைத்தனர். இவர்களுக்குள் ஏற்கெனவே நீண்ட நாள் பகை இருந்ததால், இந்நிலை அவர்கள் மத்தியில் அழுத்தத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. ஒதுக்கீட்டுப்பகுதியில் இருந்த கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் எவ்விதம் பிரதிபலித்தார்கள்? இதற்கு அப்பாச்சியின் பதில் என்னவென்றால், “எங்களுடைய பாரம்பரிய வாழ்க்கையை இழந்தபடியால் நாங்கள் உடல், உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய ரீதியில் பட்டினி கிடந்தோம். எங்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டது.”
ஆயினும், ஒதுக்கீட்டுப்பகுதியிலிருந்து 1885-ஆம் ஆண்டு பிரபலமான யுத்தத் தலைவர் ஜரானமோவின் தலைமையில், ச்சிரிகாஹுவாவின் ஒரு தொகுதியினர், மெக்ஸிகோவிற்கு தப்பி ஓடினர். ஜெனரல் நெல்சன் மைல்ஸ்ஸும் 5,000 ராணுவ வீரர்களும் 400 அப்பாச்சி ஒற்றர்களும், ஓடிப்போன நபர்களை துரத்தி சென்றனர். அந்தச் சமயத்தில் அவர்கள் எண்ணிக்கை 16 போர்வீரர்கள், 12 பெண்கள், 6 பிள்ளைகள் மட்டுமே!
கடைசியாக செப்டம்பர் 4, 1886-ல் ஜரானமோ சரணடைந்தார். அவர் சான் கார்லெஸ் ஒதுக்கீட்டிற்கு திரும்புவதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. அங்கிருந்த எல்லா அப்பாச்சியும் கிழக்கே ஃப்ளாரிடாவிற்கு கைதிகளாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அங்கே அவரும் செல்லவேண்டும் என்றும் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அப்பாச்சி மொழியில் இவ்விதம் கூறினார்: “லான் டாட்சாயு நகிக்காய் லே நி நெய்லி கெகே” இதன் அர்த்தம், “ஒரு காலத்தில் நாங்கள் காற்றைப்போல் சுதந்திரமாக அலைந்தோம்.” பெருமையும் தந்திரமும் நிறைந்த ஜரானமோ இப்பொழுது ஒரு கைதியாக, காற்றைப்போல் சுதந்திரமாக செல்ல முடியாதவரானார்.
காலப்போக்கில் மேற்கு திசையில் செல்வதற்கு அவர் அனுமதிக்கப்பட்டார், ஃபோர்ட் ஸில் ஓக்லஹாமா என்ற இடத்தில் 1909-ஆம் ஆண்டில் இறந்தார். இந்த அப்பாச்சி தலைவரும் மற்ற பூர்வீக அமெரிக்க தலைவர்களைப்போல் சிறைகளுக்கும் ஒதுக்கீட்டுப்பகுதிகளில் திணறடிக்கும் நிலைகளுக்கும் அடிபணிய வற்புறுத்தப்பட்டார்.
இன்று என்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்?
அரிஜோனாவிலும் நியூ மெக்ஸிகோவிலும் அப்பாச்சி இனத்தவர் அநேக ஒதுக்கீட்டுப்பகுதிகளில் குடியிருக்கிறார்கள். சான் கார்லெஸ் ஒதுக்கீட்டிற்கு சென்று அங்கிருந்த அநேக அப்பாச்சி தலைவர்களை விழித்தெழு! பேட்டிகண்டது. அதன் தொகுப்பு பின்வருமாறு.
மே மாதம் அனலான நேரத்தில் நாங்கள் ஒதுக்கீட்டுப்பகுதிக்கு வந்த கொஞ்ச நேரத்தில் ஹேரிஸன் டால்கோ மற்றும் அவரது மனைவியால் நாங்கள் அன்புடன் வரவேற்கப்பட்டோம். ஹேரிஸன் தெளிவாகப் பேசக்கூடியவர், 1.8 மீட்டருக்கும் அதிக உயரமுடையவர், பெரிய மீசையுடன் காட்சியளித்த அவர், சான் கார்லெஸ் பழங்குடியினரின் மன்ற உறுப்பினர். நாங்கள் அவரிடம் பின்வருமாறு கேட்டோம்: “இன்று அப்பாச்சி இனத்தவரை பாதிக்கும் சில பிரச்சினைகள் யாவை?”
“நாங்கள் எங்களுடைய பழம்பெரும் மதிப்பீடுகளை இழந்துகொண்டிருக்கிறோம். டிவி மிகப்பெரிய பாதிப்பை, முக்கியமாக எங்களுடைய இளைஞர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு உதாரணம் என்னவென்றால் அவர்கள் எங்கள் மொழியை கற்பது கிடையாது. இன்னொரு பெரும் பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம், சில இடங்களில் அது 60 சதவீதத்தை எட்டியிருக்கிறது. நாங்கள் சூதாட்ட காஸினோக்களை வைத்திருக்கிறோம் என்பது உண்மைதான், ஆனால் அவை அநேகருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. அதற்கு நேர்மாறாக எங்களில் அநேகர் அங்கே சென்று, வாடகை மற்றும் உணவுக்காக தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உதவித்தொகை செக்குகளையும்கூட சூதாடித் தொலைத்துவிடுகின்றனர்.”
அங்கிருப்போரின் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி கேட்டபொழுது ஹேரிஸன் பதில் சொல்லத் தயங்கவில்லை. அவர் இவ்வாறு குறிப்பிட்டார், “எங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவருக்கு சர்க்கரை வியாதியிருக்கிறது. சில இடங்களில் இது 50 சதவீதத்திற்கும் அதிகம்.” அவர் குறிப்பிட்ட இன்னொரு பெரிய பிரச்சினை, 100-க்கும் அதிக வருடங்களுக்கு முன்பு வெள்ளையர் அறிமுகப்படுத்திய கொடுமை—மதுபானம். “எங்களுடைய மக்களை போதைப் பழக்கமும் பாதிக்கின்றது.” ஒதுக்கீட்டுப்பகுதியில் சாலையோர அறிவிப்புகள் இதற்கு சான்றளித்தன, அவை இவ்விதம் அறிவித்தன: “நிதானமே நம் குணத்தை ஆளட்டும்,” “போதை வஸ்துக்களை மறுப்போம்,” “நம் நிலத்தைக் காப்போம். நம் ஆரோக்கியத்தைக் காப்போம். நம் சொத்துக்களை குப்பையாக்காதீர்.”
அவர்களுடைய சமுதாயத்தை எய்ட்ஸ் தாக்கியிருக்கிறதா என்று விசாரித்தோம். வெறுப்புடன் இவ்விதம் பதிலளித்தார்: “ஓரினப்புணர்ச்சியின் மூலம் அந்த அபாயம் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஓரினப்புணர்ச்சி ஒதுக்கீட்டிற்குள் மெதுவாக நுழைந்து கொண்டிருக்கிறது. டிவியும் மற்றும் சில வெள்ளையர்களின் கெட்டப் பழக்கங்களும் எங்களுடைய அப்பாச்சி வாலிபர்களில் சிலரை பலவீனப்படுத்தியிருக்கிறது.”
ஒதுக்கீட்டுப்பகுதிகளில் சமீபத்திய ஆண்டுகளில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கேட்டோம். ஹேரிஸன் இவ்விதம் குறிப்பிட்டார்: “1950-களில் முன்னுரிமைகளும் வாழ்க்கையின் செல்வாக்குகளும் கீழ்க்கண்ட வரிசையில் இருந்தன, முதலாவது மதம்; இரண்டாவது குடும்பம்; மூன்றாவது கல்வி; நான்காவது சகாக்களின் அழுத்தம்; கடைசியாக டிவி. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது; டிவி முதலாவதாக செல்வாக்கு செலுத்துகின்றது. சகாக்களின் அழுத்தம் இரண்டாவதாகவும்—அது அப்பாச்சி முறைகளை தூக்கியெறிந்துவிட்டு அமெரிக்காவிலுள்ள மற்றவர்களைப் பின்பற்றும்படியான அழுத்தங்களை முன்வைக்கிறது. கல்வி இப்பொழுதும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது, அநேக அப்பாச்சி இனத்தவர், கல்லூரி மற்றும் ஒதுக்கீட்டுப்பகுதியில் அதிகரிக்கும் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.”
“குடும்பத்தின் செல்வாக்கைப் பற்றியென்ன?” என்று நாங்கள் கேட்டோம்.
“விசனகரமாக, குடும்பம் இப்பொழுது நான்காவது இடத்திற்கும், மதம், அதாவது எங்களுடைய பூர்வீக அப்பாச்சி மதமானாலும் சரி வெள்ளையர்களின் மதமானாலும் சரி, கடைசி இடத்திற்கும் சென்றுவிட்டது.”
“கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களை எவ்விதம் கருதுகிறீர்கள்?”
“சர்ச்சுகள் எங்கள் மக்களை பூர்வீக நம்பிக்கையிலிருந்து மாற்ற முயற்சிப்பது எங்களுக்கு விருப்பமில்லை. c லூத்தரன் மற்றும் கத்தோலிக்க மிஷன்கள் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இங்கே இருக்கின்றன. சில உணர்ச்சிவயப்பட்ட பெந்தெகொஸ்தே பிரிவுகளும் இருக்கின்றன.
“எங்களுக்கு இருக்கும் சமூக தனித்துவத்தை எங்களுடைய குடும்பத்தைக்கொண்டு நிலைநாட்ட வேண்டும், எங்களுடைய அப்பாச்சி மொழியை மறுபடியும் புழக்கத்தில் கொண்டு வரவேண்டும். தற்சமயம் அது புழக்கத்தில் இல்லை.”
அப்பாச்சியின் பொருளாதார முன்னேற்றம்
நாங்கள் இன்னொரு அப்பாச்சி அதிகாரியை சந்தித்தோம் அவர் சான் கார்லெஸ் ஒதுக்கீட்டின் பொருளாதாரத்தைக் குறித்து நம்பிக்கையோடு பேசினார். ஆனால், முதலீடு செய்பவர்களை இங்கே சில திட்டங்களுக்காக அதிக பணத்தை முதலீடு செய்ய வைக்க இயலாது என்று விவரித்தார். ஒரு நல்ல அறிகுறி என்னவென்றால் ஒரு பெரிய டெலிபோன் கம்பெனியுடன் சான் கார்லெஸ் அப்பாச்சி டெலிகம்யூனிகேஷன் கம்பெனியை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம். இது கிராம பொருளாதார அமைப்பால் பொருளுதவி செய்யப்படுகிறது, இது அப்பாச்சி வேலையாட்களுக்கு அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் மேலும் ஒதுக்கீட்டில் உள்ள மோசமான டெலிபோன் ஒழுங்கமைப்பை மாற்றும்.
இந்த அதிகாரி, சீக்கிரத்தில் ஒதுக்கீட்டு மருத்துவமனையில் நிறுவப்பட இருக்கும் டையலிஸிஸ் மையத்தைப்பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இது மேம்பட்ட மற்றும் துல்லியமான மருத்துவ கவனிப்பிற்கு உதவும். சான் கார்லெஸ்ஸில் வியாபார மையத்தை மறுபடியும் உருவாக்குவதற்கான திட்டத்தை காண்பித்தார்; அது சீக்கிரத்தில் கட்டப்படும் நிலையில் இருக்க வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி அவர் அதிக நம்பிக்கையோடு பேசினார், ஆனால் கல்வியே மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ‘படிப்பிருந்தா நல்லா சம்பாதிக்கலாம், அது மேம்பட்ட வாழ்க்கை தராதரத்துக்கு உதவும்.’
அப்பாச்சி பெண்கள் கூடைபின்னுவதில் பெயர் பெற்றவர்கள். ஒரு டூரிஸ்ட் கைட் புத்தகம் பின்வருமாறு சொல்கிறது: “வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பண்ணை வேலை, மரம் வெட்டுதல், சுரங்கம் வெட்டுதல், வெளியிடங்களில் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா” ஆகியவை பொருளாதாரத்திற்கு முக்கிய காரணிகள்.
அப்பாச்சி இனத்தவர் தங்களுக்கு இருக்கும் இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் வெளி உலகத்தாரைப்போல் முன்னேற முயற்சி செய்கிறார்கள். எல்லா ஜனங்களைப்போல அவர்களும் நீதி, மரியாதை, நல்ல வாழ்க்கை ஆகியவற்றை விரும்புகிறார்கள்.
உண்மையான நீதி நிலைத்திருக்கும் சமயம்
யெகோவாவின் சாட்சிகள் அப்பாச்சி ஜனங்களை சந்தித்து, யெகோவா இந்த உலகத்திற்கு வாக்கு கொடுத்திருக்கிற புதிய பூமியைப்பற்றி எடுத்துச்சொல்கிறார்கள். அதைப்பற்றி பைபிளில் ஏசாயாவின் பதிவில் மிக அழகாக இவ்விதம் விளக்கப்பட்டிருக்கிறது: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை.”—ஏசாயா 65:17, 21, 23; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1-4.
யெகோவா தேவன் இந்த உலகத்தின் எல்லா சுயநலத்தையும் முறைகேட்டையும் பூமியைப் பாழாக்குவதையும் சுத்திகரிப்பதற்கான நேரம் வெகு அருகில் இருக்கிறது. (மத்தேயு 24; மாற்கு 13; லூக்கா 21 ஆகியவற்றைக் காண்க.) எல்லா தேசத்தாரும், பூர்வீக அமெரிக்க இந்திய பழங்குடிகள் உட்பட யெகோவா தேவனிடத்திற்கு இயேசு கிறிஸ்து மூலமாக திரும்புவதன் மூலம் தங்களை ஆசீர்வதித்துக் கொள்ளலாம். (ஆதியாகமம் 22:17, 18) யெகோவாவின் சாட்சிகள், திரும்பவும் சரிசெய்யப்படபோகிற பூமியில் வாழவிரும்பும், கடவுளுக்கு கீழ்ப்படிவதற்கு விரும்பக்கூடிய சாந்த குணமுள்ள எல்லா ஆட்களுக்கும் இலவசமாக பைபிள் படிப்பை நடத்த முன்வருகிறார்கள்.—சங்கீதம் 37:11, 19.
[அடிக்குறிப்புகள்]
a சில எழுத்தாளர்கள், பன்மையைக் குறிப்பிட “அப்பாச்சிகள்” என்று எழுதுகிறார்கள், நாங்கள் ஒருமைக்கும் பன்மைக்கும் “அப்பாச்சி” என்ற வார்த்தையை உபயோகிக்கும் முறையை பின்பற்றுகிறோம்.
b அப்பாச்சி இனத்தவர், சிறு பழங்குடிப் பிரிவுகளாக மேற்கு அப்பாச்சி என்றும், அதற்குள் வடக்கு மற்றும் தெற்கு டொன்டொ, மிம்ப்ரென்யொ, கோயோடிரொ என்றும் பல்வேறு விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு அப்பாச்சியில் ச்சிரிகாஹுவா, மெஸ்கலெரொ, ஹெகெரியெ, லெபான், கியொவா என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளை மலை அப்பாச்சி மற்றும் சான் கார்லெஸ் அப்பாச்சி என்ற பிரிவுகளும் இருக்கின்றன. இன்று இந்தப் பழங்குடியினர் தென்கிழக்கு அரிஜோனா மற்றும் நியூ மெக்ஸிகோ போன்ற இடங்களில் அதிகமாக வாழ்கிறார்கள்.—பக்கம் 15-லுள்ள வரைபடத்தைக் காண்க.
c இனி வரும் விழித்தெழு! வெளியீடு பூர்வீக அமெரிக்க இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் மதத்தைப்பற்றி விவரிக்கும்.
[பக்கம் 13-ன் குறிப்பு]
Courtesy of the Arizona Historical Society/Tucson, AHS#78167
[பக்கம் 15-ன் படம்/வரைப்படம்]
அப்பாச்சி ஒதுக்கீட்டுப்பகுதிகள்
அரிஜோனா
நியூ மெக்ஸிகோ
வடஅமெரிக்கா
ஃபோர்ட் அப்பாச்சி (வெள்ளை மலை)
சான் கார்லெஸ்
மெஸ்கலெரொ
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 13-ன் படம்]
ஜரானமோ
[படத்திற்கான நன்றி]
ஹேரிஸன் டால்கோ, பழங்குடியினரின் மன்ற உறுப்பினர்
[பக்கம் 17-ன் படம்]
தலைவர் காக்ச்சைஸ் அவருடைய ச்சிரிகாஹுவா காப்பிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்
ஒதுக்கீட்டுப்பகுதியில் சாட்டிலைட் டிஷ்கள் மூலம் டிவி பார்க்க முடிகிறது
[பக்கம் 18-ன் குறிப்பு]
அப்பாச்சியின் சவ அடக்கத்தில் உறவினர் கல்லறையை சுற்றி கற்கள் வைக்கிறார்கள். காற்றில் அசையும் ரிப்பன்கள் நான்கு திசைகளை குறிக்கின்றன