மனிதன்மீது மனிதனின் கொடுங்கோன்மை
வரலாறு, பிரசங்கி 8:9-ல் சொல்லப்பட்ட கூற்றின் உண்மையை உறுதி செய்கிறது. அது சொல்வதாவது: ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’ அல்லது கத்தோலிக்க ஜெரூசலம் பைபிள் சொல்லுகிறபடி, ‘மனிதன் தனக்கே தீங்கிழைக்கும் வகையில் மனிதன்மீது கொடுங்கோன்மை செய்கிறான்.’ கோடிக்கணக்கான மக்கள் அநியாயத்தால் துன்பப்பட்டிருக்கின்றனர்; மனிதன் அனுபவித்துள்ள கிட்டத்தட்ட எல்லா விதமான அரசாங்கங்களின்கீழும் நிலைமை இவ்வாறே இருந்திருக்கிறது. இந்திய விவகார அலுவலகம் நிறுவப்பட்டதன் 175-வது ஆண்டு விழாவின்போது ஆற்றிய பேச்சில், ஐ.மா. உள்நாட்டு துறையின் இந்திய விவகாரங்களுக்கான உதவி செயலர் இந்த துன்ப நிலையை மீண்டும் நினைவுபடுத்தினார்.
கொண்டாடுவதற்கு பதிலாக “கசப்பான உண்மைகளை பேசுவதற்கும், மன்னிப்பு கேட்பதற்குமான நேரமே” அது என்றார் அவர். 1830-களில் செரக்கி, க்ரிக், சாக்டா, சிக்கஸா, செமனோல் ஆகிய தென்கிழக்கு பழங்குடியினரை அவர்களுடைய நாடுகளிலிருந்து விரட்டுவதே அந்த நிறுவனம் மேற்கொண்ட முதல் பணி என்று அவர் ஒத்துக்கொண்டார். “அச்சுறுத்தலுக்கும், ஏமாற்றத்துக்கும், வற்புறுத்துதலுக்கும் உள்ளாக்கி இந்த பெரும் பழங்குடியினரை மேற்கு நோக்கி 1,600 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கச் செய்தனர். அப்போது அவர்கள் அந்தக் கண்ணீர் பாதை நெடுக, உயிரிழந்த ஆயிரக்கணக்கான வயதானவர்களையும் இளையவர்களையும் பலவீனமானவர்களையும் புதைத்துக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது.”
அவர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “என்றாலும், வேண்டுமென்றே நோயைப் பரப்பியதும், வலுமிக்க பைசன் கூட்டங்களின் பெரும்பகுதியை அழித்ததும், மனதையும் உடலையும் கெடுக்க ஆல்கஹால் என்னும் விஷத்தை பயன்படுத்தியதும், பெண்கள்மீதும் பிள்ளைகள்மீதும் தங்கள் பலத்தைக் காட்டி கொன்றதும் மிகக் கோரமான பேரவலத்தில் விளைவடைந்தது; ஆகவே வித்தியாசமான வாழ்க்கை முறைகளின் காரணமாக எழுந்த, தவிர்க்க முடியாத பூசல்களால் ஏற்பட்டவையே இவை என்று சொல்லி விட்டுவிட முடியாது என்பதை இந்த அறிவொளியூட்டப்பட்ட காலங்களில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.”a “இந்தியருக்கு உரிய அனைத்தையும் அழிக்க முற்பட்டது இந்த ஏஜன்ஸி. இந்திய மொழிகள் பேசுவதை தடுத்தது . . . இந்திய மக்கள் தங்களைக் குறித்தே தலைகுனியும்படி செய்தது. மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்திய விவகார செயலகம் அதன் பள்ளிகளின் விடுதிகளில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிள்ளைகளுக்கு விரோதமாகவும் இப்படி செயல்பட்டது; உணர்ச்சி, மனம், உடல், மற்றும் ஆன்மீக ரீதியில் அவர்களை கொடுமைப்படுத்தியது” என்பதாகவும் அவர் ஒத்துக்கொண்டார்.
அவர் பின்வருமாறு சொல்லி முடித்தார்: “முதலாவதாக, இந்த ஏஜன்ஸி கடந்த காலத்தில் செய்தவற்றிற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்போமாக. . . . இந்திய உடைமைகளை திருடுவதற்கு இனி ஒருபோதும் உடந்தையாய் இருக்க மாட்டோம். . . . உங்கள் மதங்களையோ, உங்கள் மொழிகளையோ, உங்கள் சடங்காச்சாரங்களையோ, உங்கள் பழங்குடி சார்ந்த எதையும் இனி நாங்கள் ஒருபோதும் தாக்க மாட்டோம்.” குறிப்பிடத்தக்க வகையில் அவர் மேலும் சொன்னதாவது: “ஏழு தலைமுறைகள் வடித்த கண்ணீரை நாம் ஒன்றுசேர்ந்து துடைக்க வேண்டும். நாம் ஒன்றுசேர்ந்து, உடைந்துபோன நம் இதயங்கள் குணமடைய அனுமதிக்க வேண்டும்.”—அந்நாளின் முக்கிய பேச்சுகள் (ஆங்கிலம்), அக்டோபர் 1, 2000.
மனிதனே மனிதனிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கு ஒரே உண்மையான நிரந்தர தீர்வு கடவுளுடைய ராஜ்யமே. அதுவே எல்லாருக்கும் நியாயத்தை மீண்டும் வழங்கும்; ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைக்கும்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.’—வெளிப்படுத்துதல் 21:3, 4.(g01 11/8)
[அடிக்குறிப்பு]
a அந்த பழங்குடிகள் மத்தியில் பெரும்பாலும் பூசல்கள் இருந்ததையும், “நிலப்பகுதி, குதிரைகள், எருமை ஆகியவற்றிற்காக எப்போதுமே” சண்டை நிலவியதையும் அமெரிக்க இந்தியர்களின் வரலாறு உறுதி செய்கிறது.—அப்பாச்சி எனப்பட்ட மக்கள் (ஆங்கிலம்).
[பக்கம் 22-ன் படங்களுக்கான நன்றி]
இந்தியன்: Artwork based on photograph by Edward S. Curtis; வரைபடம்: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.; இந்தியக் குடியிருப்புகள்: Leslie’s