கல்கத்தா—வேறுபாடுகள் மிகுந்த விறுவிறுப்பான நகரம்
இந்தியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கிற்கு, அது “திகிலூட்டின இரவின் நகரம்,” “ஜனநெருக்கமும் காவுகொள்ளும் நோய்களும் கைகோர்த்து உலாவிய நகரம்.” ஆனால் புகழ்பெற்ற உருது கவிஞர் மிர்சா காலிப்புக்கோ அது, “பெரும் புத்துணர்ச்சியூட்டின நகரம்.” “சொர்க்கலோகம்.” இவர் மட்டுமல்ல, எழுத்தாளர் டாமினிக் லாபையர், இந்த நகருக்கு ஒவ்வொரு முறை சென்றபோதும், “மனதை வயப்படுத்துகிற புதிய அனுபவத்தை” உணர்ந்தார். மறுபட்சத்தில், பீட்டர் டி. வைட், நேஷனல் ஜியாகிரஃபிக்-ல் எழுதும்போது, “பயங்கரமான, அதிர்ச்சியூட்டுகிற, திகிலூட்டுகிற” ஒன்றாகவும், “உலகின் மிகப்பெரிய சேரி” எனவும் சிலர் அழைத்ததை மேற்கோள் காட்டினார். சந்தேகமில்லாமல், கல்கத்தா (பெங்காலியில் காலிகட்டா) வேறுபாடுகள் மிகுந்த நகரமாக இருக்கிறது.
நகரம் உருவான கதை
இந்தியாவின் வடகிழக்குக் கரையோரத்தில், மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்திருக்கும் கல்கத்தா இந்தியாவின் பண்டையகால சரித்திரத்தில் இல்லை. தில்லி, தஞ்சாவூர் போன்ற நகரங்களோடு ஒப்பிடும்போது, கல்கத்தாவின் வயது கம்மிதான். நதிக்கரைகள் நகரங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளன. அதேபோல் பிரவாகித்து பொங்கியெழும் மகாகங்கை நதிக்கரை கல்கத்தா நகரை உருவாக்கியுள்ளது. வங்காள விரிகுடாவுக்கு அருகில், கங்கைநதி, இரண்டு கிளைநதிகளாக பிரிகிறது. பின்பு, அவை இன்னும் நிறைய கிளைகளாக பிரிந்து, உலகின் மிகப்பெரிய கழிமுகத்தை (delta) அமைக்கின்றன. கழிமுகத்தின் மேற்கு முனையில் ஹூக்ளி நதி உள்ளது. இது முன்னர் பாகீரதி-கங்கா என அழைக்கப்பட்டது. அது தெற்கே சென்று கடலில் கலக்கிறது.
பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில், போர்த்துகீஸ், டச், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து வணிகர்கள் ஹூக்ளிக்கு கடல்மார்க்கமாக வந்து, உள்ளூர் அரசர்களின் அனுமதியுடன் வணிகத் தலங்களை நிறுவினர். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளில் ஒருவரான ஜோப் சார்னக், சூடானூட்டி கிராமத்தை வணிக மையமாக தேர்ந்தெடுத்தார். சில பின்னடைவுகளுக்கு பிறகு, அவர் கடல்மார்க்கமாக சூடானூட்டிக்குள் சென்றார். அங்கிருந்து கோவிந்பூர், காலிகட்டா கிராமங்களுக்குச் சென்று வணிகத் தலத்தை மட்டுமல்ல, ஆங்கிலேய குடியேற்றத்திற்கான அடித்தளத்தையும் நிறுவினார். இவ்வாறாக, 1690, ஆகஸ்டு திங்கள் 24-ம் நாள் கல்கத்தா நகரம் உருவானது!
1698-ல் குடியிருப்பு உரிமை சட்டப்படி பெறப்பட்டது. அதோடு 1757-ம் ஆண்டு வரையாக ஆங்கிலேயர் மொகலாய மன்னர்களுக்கு வாடகைப் பணத்தை செலுத்தினர். ஆங்கிலேயர், வளர்ந்துவரும் கல்கத்தா நகருக்கு ராணுவ பாதுகாப்பை அளிப்பதற்காக வில்லியம் கோட்டையைக் கட்டினர். வில்லியம் கோட்டையின் பாதுகாப்பு அரணைக் கண்ட வணிகர்கள், அந்நகரில் மிகப்பெரிய மாளிகைகளை கட்டத் தொடங்கினர். அதற்குள்ளாக, அந்த நகரிலும், அதை சுற்றியிருந்த கிராமங்களிலும் மக்கள் தொகை 4,00,000-ஐ எட்டிவிட்டது. வியாபார விஷயமாக ஒரு வருடத்தில் ஹூக்ளிக்கு கிட்டத்தட்ட 50 கப்பல்கள் வந்தன.
கல்கத்தாவின் இருட்டறை
1756-ம் ஆண்டில், சிராஜ்-உத்-தௌலா கல்கத்தாவை நோக்கி படையெடுத்தார். இவர் யோசனையற்ற இளம் உள்ளூர் அரசர். அப்போது பெருவாரியான மக்கள் தப்பியோடினர். ஆனால், வில்லியம் கோட்டையில் அடைக்கலம் புகுந்திருந்த சில ஐரோப்பியர்கள் சரணடைந்தனர். சுட்டெரிக்கும் ஜூன் மாத கடும் வெயிலில் சிறிய சிறையறை ஒன்றில் இவர்கள் அடைக்கப்பட்டனர். அடுத்தநாள், அங்கிருந்த அநேகர் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர் என தெரிய வந்தது. அந்தச் சிறையறையே கல்கத்தாவின் இருட்டறை என அழைக்கப்படலாயிற்று.
இந்நிகழ்ச்சியால் கிழக்கிந்திய கம்பெனியினர் கடும் சீற்றம் அடைந்தனர். எனவே, 1757-ல் ராபர்ட் கிளைவ் தலைமையில், ஆங்கிலேய சிப்பாய்கள் நகரை மறுபடியும் கைப்பற்றுவதற்காக வந்தனர். அதை பின்தொடர்ந்த பிளாசிப் போர், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலியது. அதனால் கல்கத்தாவுக்கு என்ன நேர்ந்தது? 1773-ல் அது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரானது. 1911-ம் ஆண்டு வரையாக அவ்வாறு இருந்தது.
புதுப்பொலிவு பெறும் கல்கத்தா
நகரத்தில் பணப்புழக்கம் அதிகம் இருந்ததால், பிரமிப்பூட்டும் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதனால் கல்கத்தா அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படலாயிற்று. அகலமான சாலைகள் போடப்பட்டன. மியூசியங்களும் நூலகங்களும் நிறுவப்பட்டன. இன்றும்கூட, கம்பீரமாக காட்சியளிக்கும் அநேக கட்டடங்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
190 வருட ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு, மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் தலைமையில் இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அதோடு பிரிவினையும் ஏற்பட்டது. முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் நாடான பாகிஸ்தான் (கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான்) உருவானது. பிறகு, 1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாக ஆனது. இதனால் கல்கத்தாவுக்குள் ஏராளமான அகதிகள் வந்து குவிந்தனர். இன்று, இப்பெருநகர் 1,20,00,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைச் சுமந்துக்கொண்டு இருக்கிறது.
அன்று, வயிற்றுப் பிழைப்புக்கே வழியில்லாமல் திடீரென்று வந்து குவிந்த அகதிகளால் ஏராளமான பிரச்சினைகள் முளைத்தன. குடியிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டதால் லட்சக்கணக்கானோர் மிகமோசமான சேரிப்பகுதிகளில் வாழ்ந்தனர். சணலாலும், அட்டைகளாலும் கட்டப்பட்ட குடிசைகளில் வாழ்ந்தனர். அதோடு சுகாதாரம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றிற்காக திண்டாடினர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் வாழ்ந்தனர். “பொருளாதாரம், வீட்டுவசதி, சுகாதாரம், போக்குவரத்து, அதோடு வாழ்க்கைக்கு அவசியமான மற்றவற்றில், படுவேகமாக சீர்குலைந்து வருகிறது” என்பதாக 1967-ல் சர்வதேச நகரத் திட்டமைப்பாளர்கள் ஒன்பது பேர், கல்கத்தாவின் நிலைமையைக் குறித்த தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டனர். எதிர்காலம் இருண்டு காட்சியளித்தது.
குறிப்பாக, குறைந்த வருமானமுள்ள மக்கள் குடியிருப்பதற்கென, வீடுகளின் எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியில், மிகப் பரந்த சதுப்பு உவர் நிலப்பகுதி பண்படுத்தப்பட்டது. அதோடு, ஆற்றிலிருந்து தூர் எடுத்து, தாழ்நிலப் பகுதி மேடாக்கப்பட்டது. ஆற்றுவழி போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டது.
1990-களின் ஆரம்பத்தில் சர்வதேச அளவில் இந்தியாவுக்குள் ஏராளமான முதலீடுகள் வந்தன. இதில் கல்கத்தாவும் விட்டுவைக்கப்படவில்லை. எனவே, ஒரு மாபெரும் சுத்தப்படுத்தும் வேலை துவங்கப்பட்டது. சேரிகளில் வாழ்பவர்கள் நகரத்திற்கு வெளியே குடியேற்றப்பட்டனர். மின்சாரமும் உரமும் தயாரிப்பதற்கு குப்பைகூளங்கள் பயன்படுத்தப்பட்டன. சுற்றுப்புற தூய்மைக்கேட்டை உண்டாக்கும் வாகனங்களும் புகை-கக்கும் திறந்த வெளி அடுப்புகளும் தடை விதிக்கப்பட்டன. சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. ஷாப்பிங் சென்டர்கள் கட்டப்பட்டன. இச்சுத்தப்படுத்தும் வேலையில் சாதாரண மக்களும்கூட மனமுவந்து வேலை செய்தனர். இவர்கள் வேண்டாத பொருட்களை எல்லா இடங்களிலிருந்தும் நீக்கி, அழுத்திதுடைத்து, சுத்தம் செய்தனர். பெயின்டும் அடித்தனர். அழியும் தறுவாயில் இருந்த கல்கத்தா காப்பாற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. ஒருசமயம் ‘செத்துக்கொண்டிருந்த,’ ‘சீரழிந்துகொண்டிருந்த’ இந்நகரம் மீண்டும் உயிர்த்துடிப்பு பெற்றது. மேம்பாட்டிலும், குடிமக்களின் வசதிவாய்ப்புகளிலும், இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களைக் காட்டிலும் கல்கத்தா முதன்மை நிலையில் இருந்ததாக 1997-ன் அறிக்கை காட்டியது.
வணிகப் பெருநகர்
அயல்நாடுகளிலிருந்து வரும் அகதிகள், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து குடியேறியவர்கள், உள்ளூர் பெங்காலி மக்கள், சீனாவிலிருந்தும், அர்மேனியாவிலிருந்தும் நீண்டகாலத்துக்கு முன்னரே வந்து தங்கிவிட்டவர்கள் என இப்பெருநகர் மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், சமையற்கலை ஆகியவற்றின் சங்கமமாக திகழ்கிறது. இத்தகைய லட்சக்கணக்கான மக்கள் கல்கத்தாவுக்கு வரக்காரணம் என்ன? வணிகம்! கிழக்கும் மேற்கும் சந்திக்கிற இத்துறைமுகத்திற்கு உலக முழுவதிலுமிருந்தும் கப்பல்கள் வந்தன. வெடியுப்பு (saltpeter), சணல், தேயிலை, சர்க்கரை, அவுரி (indigo), பருத்தி, பட்டு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. நிலம், நீர், ரயில் போக்குவரத்துக்களின் வாயிலாக ஏராளமான பொருட்கள் கல்கத்தாவுக்குள் வந்தவாரும் போனவாரும் இருந்தன. சுதந்திரத்திற்கு பின்பு, மிகப்பெரிய இரும்பு, ஸ்டீல் வார்ப்பாலைகள் (foundries) அமைக்கப்பட்டன. நாட்டில் பயன்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் அரிய கனிமப் பொருட்கள் வெட்டியெடுக்கப்பட்டன.
துறைமுகம்தான் வியாபாரத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. ஆரம்பத்தில், ஆங்கிலேயர் தங்களுடைய கப்பல்களை ஹூக்ளி நதியின் ஆழமான பகுதியில் நங்கூரமிட்டு, பொருட்களை சிறிய படகுகளின் வாயிலாக நதிக்கரைக்கு கொண்டு சென்றனர். இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகத்திற்கான அடித்தளம் 1758-ம் வருடத்திலேயே கல்கத்தாவில் போடப்பட்டது. கல்கத்தாவின் சர்வதேச நீர்வழிப் போக்குவரத்தையும், அதன் கரையோர உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தையும் விரிவுபடுத்த தொடர்ச்சியான நவீனமயமாக்குதலும், கங்கை நதியின் அணையிலிருந்து வரும் தண்ணீரின் அதிகரிப்பும் உதவி புரிகின்றன.
பழங்கால மற்றும் நவீன போக்குவரத்துக்கள்
1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரத்தில், போக்குவரத்து மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால், ஒரு நவீன நகரத்தில் இருக்கவேண்டிய போக்குவரத்து வசதிகளும், அதைவிட அதிக வசதிகளும் கல்கத்தாவில் இருக்கின்றனவே! போக்குவரத்து நெரிசலில்கூட லாவகமாகவும் விரைவாகவும் ஓட்டிச் செல்லும் கை-ரிக்ஷாக்காரர்களைப் பார்த்து புதிதாக வருபவர்கள் வியக்கின்றனர். பெரும்பாலும் தங்களுடைய வேகத்துக்கு முட்டுக்கட்டையிடுகிற பஸ்ஸையோ டாக்ஸியையோ காட்டிலும் வேகமாக பயணிகளை செல்லவேண்டிய இடத்தில் சேர்க்கின்றனர். 1900-ல் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரிக்ஷாக்கள், சீக்கிரத்தில் மக்கள் செல்லும் வாகனமாக மாறின. அந்நகரத்தின் வீதிகளில் சுமார் 25,000 கை-ரிக்ஷாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது! அவை போக்குவரத்தை தாமதப்படுத்தினாலும்கூட, சுமார் 50,000 ஆண்களுக்கு வேலைவாய்ப்பையும் இன்னும் அதிகமானோருக்கு போக்குவரத்தையும் அளிக்கின்றன.
தினமும், கல்கத்தாவின் மெயின் ரயில்நிலையத்திற்கும் வியாபார ஸ்தலத்திற்கும் செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளை சிறிய பரிசல்கள் சுமந்து செல்கின்றன. உலகிலேயே பெருமளவில் பயன்படுத்தப்படும் ஹௌரா பிரிட்ஜில், ஒவ்வொரு நாளும் 50,000-க்கும் அதிகமான கார்களும் ஆயிரக்கணக்கான டிரக்குகளும் செல்வதற்கே அரும்பாடு படுவதால், சாலைப் போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்காக நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
கல்கத்தாவில் மிகவும் நேசிக்கப்படுகிற அம்சம் அங்குள்ள எலக்ட்ரிக் டிராம்வண்டிகளாக இருக்கலாம். சுற்றுப்புறத் தூய்மைக்கு கேடு விளைவிக்காதவையாகவும், நிறைய மக்களை ஏற்றிக்கொள்ளும் வசதியுள்ளவையாயும், குறைந்த மின்னாற்றலில் சிறப்பாக செயல்படுபவையாயும் இருப்பதால், இந்த வாகனங்கள் ஒவ்வொரு நாளும் நகரத்தின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு லட்சக்கணக்கான மக்களை கொண்டு செல்கின்றன. ஆனால் அவற்றில் பயணம் செய்வது எப்போதுமே சௌகரியமாக இருக்காது. டிராம்வண்டிகளின் ஓரத்தில் தொற்றிக்கொண்டு பயணம் செய்வதற்கு விசேஷ திறமை அவசியம்! சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ (சுரங்க) ரயில் அமைப்பால் அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது நகரத்தின் மையப்பகுதி வழியாக ஒரு மணிநேரத்திற்கு 60,000-க்கும் அதிகமான பயணிகளை குளுகுளு வசதியுடன் கொண்டு செல்கிறது.
கல்கத்தாவின் பல்வகை கலாச்சாரம்
கல்கத்தாவில் இருக்கும் கல்வி வசதிகள் விஞ்ஞானம், சட்டம் ஆகிய துறைகளில் நுழைய அநேகருக்கு வாய்ப்பு அளித்திருக்கின்றன. மேலும் இங்கு கலைகள் செழித்தோங்குகின்றன. அதனால்தான் இது இந்திய துணைக்கண்டத்தின் கலாச்சார மையமாக திகழ்கிறது. 140 வருட பழமைவாய்ந்த, உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்தியாவில் கமர்ஷியல் படங்கள் உருவாகும் இடம் மும்பை என்றால், உயர்தரமான ஆர்ட் படங்கள் உருவாகும் இடம் கல்கத்தா. சத்யஜித் ரே, மிரினால் சென் போன்றவர்கள் கலைப்பணியில் ஆற்றிய பங்கின் காரணமான உலகமுழுவதும் அறியப்பட்டவர்கள். ரோமிலும் பாரீஸிலும் வாழ்ந்த கவிஞர்களைவிட அதிகமான கவிஞர்கள் வாழ்ந்த பெருமையும், நியூ யார்க்கிலும் லண்டனிலும் உருவானதைவிட அதிக இலக்கியங்கள், பத்திரிகைகள் உருவான பெருமையும் கல்கத்தாவுக்கு உண்டு. அதோடு காலேஜ் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், உலகிலுள்ள மிகப்பெரிய செகண்ட்-ஹேண்ட் புத்தக கடைகளில் ஒன்று இருக்கும் பெருமையும் கல்கத்தாவையே சேரும்.
கண்டுகளிக்க அரிய காட்சிகள்
இத்தாலிய மறுமலர்ச்சி காலத்து கட்டடக் கலை வடிவில், சலவைக் கற்களால் கட்டப்பட்ட விக்டோரியா மெமோரியல் தனிச்சிறப்புவாய்ந்த நினைவுச்சின்னங்களில் ஒன்று. இது இந்தியாவில் ஆங்கிலேயருடைய ஆட்சியின் நினைவுச்சின்னங்களை உடைய மிகப்பெரிய மியூசியம். இது 1921-ல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. மிகப்பெரிய இந்தியன் மியூசியமும், அதோடு 30-க்கும் அதிகமான மியூசியங்களும் கல்கத்தாவில் உள்ளன. 400 மீட்டருக்குமேல் சுற்றளவுள்ள 240 வயதான ஆலமரத்தை உடைய இந்தியன் பொட்டானிக்கல் கார்டன்களும் விலங்கியல் பூங்காக்களும் (Zoological Gardens) சுற்றிப் பார்ப்பதற்கு உகந்தவை. பரந்து விரிந்திருக்கும் 1,280 ஏக்கர் நிலப்பரப்பை உடைய மெதான் கல்கத்தாவின் திறந்தவெளி என அழைக்கப்படுகிறது. மேலும் அது இந்தியாவின் மிகப்பெரிய கிராம சதுக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கோளரங்கங்களில் ஒன்றான பிர்லா கோளரங்கத்தை (Birla Planetarium) உடைய பெருமையும் கல்கத்தாவையே சேரும். கிரிக்கெட் பிரியர்களுக்கு ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. அங்கே இண்டர்நேஷனல் மாட்ச்சுகள் நடக்கையில் 1,00,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் உற்சாகமிகுதியால் கூச்சலிட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதை காணலாம்.
உண்மையிலேயே மிக அழகிய கட்டடம் அறிவியல் சிட்டிதான். இது ஆசியாவின் இண்டராக்டிவ் (interactive) வசதியுள்ள மிகப்பெரிய அறிவியல் மையமாக உள்ளது. அங்கே பார்வையாளர்கள் பூமியதிர்ச்சி ஏற்படுவதை போன்று உணர முடியும். தீவு மூழ்குவதை காண முடியும். சூறைக்காற்று உருவாவதை பார்க்க முடியும். அதோடு சுற்றுச்சூழலையும் அநேக உயிரினங்களின் பழக்கவழக்கங்களைப் பற்றிய ஆர்வமூட்டும் உண்மைகளையும் கற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும்விட இந்துக்கள் ஆவலோடு எதிர்நோக்குவது அங்கு நடக்கும் துர்கை பூஜையைத்தான். அது நடைபெறும் அந்த ஐந்து நாட்களும் முழு நகரமுமே பக்திப் பரவசத்தில் திளைத்திருக்கும். சகஜ வாழ்க்கையை விட்டு அனைவரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருப்பர்.
நீங்கள் கல்கத்தாவில் ஷாப்பிங் செய்வீர்களென்றால் என்ன கிடைக்கும்? உங்களுக்கு வேண்டிய எல்லாமே! ஆனால், இரைச்சல் மிகுந்த கூட்டத்தில் நெருக்கித்தள்ளிக் கொண்டு நடப்பதற்கு தயாராய் இருங்கள். அழகிய கலர்கலர் புடவைகளில் பெண்கள் உலாவருவதை பார்க்க முடியும். சீனர்களின் கடைகளில் கிடைக்கும் தரமான லெதர் ஷூக்கள் உட்பட, லெதர் பொருட்களை நியாயமான விலையில் வாங்கலாம். அதோடு எவர்சில்வர் பொருட்கள், ஜவுளிகள், நேர்த்தியாக செய்யப்பட்ட மண்பாண்டங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவையெல்லாம் பொறுமையோடு ஷாப்பிங் செய்வோருக்கு கிடைக்கும் பொருட்களில் ஒருசிலதான். இந்நகரின் மிகப்பெரிய கடைவீதிகள் “வாங்குவோரின் பொன்னுலகமாக” திகழ்கிறது.
உணவுப்பிரியர்களின் உலகம்
கல்கத்தா உணவுப்பிரியர்களின் பொன்னுலகம் என்றும்கூட விவரிக்கப்படுகிறது. எனவே அதைப் பற்றிய வர்ணனையில் அதன் சுவைமிக்க உணவு வகைகளில் சிலவற்றை குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பெங்காலி மக்கள் உணவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் என்றும் ஒருவரின் சமையல் திறமையைக் கொண்டுதான் மக்களை எடைபோடுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது! கல்கத்தாவின் உணவில் மீன் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. பெரிய மார்க்கெட்டுகளில் பலதரப்பட்ட மீன்கள், இறைச்சிகள், காய்கறிகள் கிடைக்கும். மசாலா பொருட்களை எல்லாம் எடுத்து, பக்குவமாக சேர்த்து, அரைத்து சமைத்தால் சாதாரண காய்கறிகளுக்கும்கூட ருசி கூடுகிறது. சீன உணவுவகைக்கு அங்குப் பஞ்சமேயில்லை. கல்கத்தாவின் உணவுப் பொருட்களின் ராணியாக திகழ்வது பிரபலமான இனிப்புகள்தான். ரசகுல்லாக்கள்—திரிந்த பாலை உருண்டையாக உருட்டி, வாசனையூட்டி, சர்க்கரை பாகில் ஊறவைத்த இனிப்பு பண்டம். கல்கத்தா என்றாலே நினைவுக்கு வருவது இந்த ரசகுல்லாக்கள்தான். அதோடு மிஷ்டி டோ-வையும் சாப்பிடத் தவறாதீர்கள். அது சாப்பாட்டுக்கு பின்பு விசேஷமாக கொடுக்கப்படும் இனிப்புமிக்க யோகர்ட். என்ன, வாயில் எச்சி ஊறுகிறதா? ரெஸ்டாரண்டுகளிலிருந்து வரும் கமகம மணம் மூக்கை துளைக்கிறதா? ஆம், கல்கத்தா, உண்மையிலேயே, வேறுபாடுகள் மிகுந்த, விறுவிறுப்பான, மனதை ஈர்க்கும் நகரம்!
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication.)
இலங்கை
இந்தியா
கல்கத்தா
வங்காள தேசம்
[வரைப்படம்]
கல்கத்தா
இந்தியன் பொட்டானிக்கல் கார்டன்ஸ்
மெதான்
விலங்கியல் பூங்காக்கள்
பிர்லா கோளரங்கம்
விக்டோரியா மெமோரியல்
இந்தியன் மியூசியம்
ஹூக்ளி நதி
உப்பு நீர் ஏரி
டம் டம் சர்வதேச விமான நிலையம்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 15-ன் படம்]
அறிவியல் சிட்டி
[பக்கம் 16-ன் படம்]
விக்டோரியா மெமோரியல்
[பக்கம் 17-ன் படம்]
விறுவிறுப்பான கடைவீதிகளின் காட்சி
[பக்கம் 17-ன் படம்]
நடைபாதை சலூன்