உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 2/15 பக். 3-4
  • எங்கும் வன்முறை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எங்கும் வன்முறை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வீட்டில் வன்முறை
  • வேலைசெய்யுமிடத்தில் வன்முறை
  • விளையாட்டுக்களிலும் பொழுதுபோக்கிலும் வன்முறை
  • பள்ளிக்கூடத்தில் வன்முறை
  • ஒரு வன்முறை கலாச்சாரம்
  • வன்முறையை கடவுள் எப்படி கருதுகிறார்?
    விழித்தெழு!—2002
  • வன்முறை இல்லாத உலகம் வருமா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • குடும்பத்தில் வன்முறையைத் தூண்டுவது எது?
    விழித்தெழு!—1993
  • வன்முறை
    விழித்தெழு!—2015
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 2/15 பக். 3-4

எங்கும் வன்முறை

போக்குவரத்து விளக்கின் சின்னம் மாறுவதற்காகத் தன்னுடைய காரில் அமர்ந்து காத்துக்கொண்டிருந்த ஓட்டுநர், தன்னை நோக்கி வாட்டசாட்டமான ஒரு நபர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, கோபத்தினால் முஷ்டியை ஓங்கிக்கொண்டு வருவதைத் திடீரென கவனித்தார். அந்த ஓட்டுநர் தன்னுடைய கதவுகளைப் பூட்டுவதற்கும் சன்னல்களை மூடுவதற்கும் வேகவேகமாகச் செயல்பட்டார், ஆனால் அந்த வாட்டசாட்டமான மனிதன் வந்துகொண்டே இருந்தான். அதன் அருகே வந்தவுடன் அந்த மனிதன் காரை குலுக்கினான், காரின் கதவை இழுத்தான். கடைசியில், வெறுப்பின் காரணமாக முன்கண்ணாடியைத் தன்னுடைய பெரிய முஷ்டியால் ஓங்கி அடித்து தூள்தூளாக நொறுக்கினான்.

சண்டைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சியா இது? இல்லை! ஹவாயிலுள்ள ஓஹு தீவு அதன் அமைதிக்கும், நிம்மதியாக ஓய்வெடுக்கும் சூழலுக்கும் பேர்போனது; இவ்விடத்தில் போக்குவரத்தின் காரணமாக நிகழ்ந்த சண்டைதான் இது.

இதில் வியப்படைய ஒன்றுமில்லை. கதவில் தொங்கும் பூட்டுகள், சன்னலிலிருக்கும் கம்பிகள், கட்டடங்களில் அமர்த்தப்பட்டுள்ள காவலாளிகள், மேலும் பேருந்துகளில் இருக்கும் “ஓட்டுநர் பணம் கொண்டு செல்வதில்லை” என்ற வாசகங்கள்—இவை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்ற ஒரே காரியம்: எங்கும் வன்முறை!

வீட்டில் வன்முறை

வீடு ஒரு நபரின் பாதுகாப்பான புகலிடமாக நீண்ட காலமாகவே போற்றப்பட்டுள்ளது. ஆயினும் இந்த வனப்புமிக்க சொல்லோவியம் விரைவாக மாறி வருகிறது. குடும்ப வன்முறையில் பிள்ளைத் துர்ப்பிரயோகம், துணைவரை அடித்தல், மனித கொலை ஆகியவை உள்ளடக்குகின்றன, அவை உலகம் முழுவதிலும் செய்தித்தாள்களுக்குத் தலைப்புச் செய்திகளாக ஆகிவிடுகின்றன.

உதாரணத்திற்கு, மேன்செஸ்டர் கார்டியன் வீக்லி பத்திரிகை கூறுகிறதாவது: “பிரிட்டனில் குறைந்தது 7,50,000 பிள்ளைகள் நீண்ட நாளுக்கு மனப்புண்ணால் அவதிப்படுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் குடும்ப வன்முறைக்கு ஆட்படுகின்றனர்.” அந்த அறிக்கை ஒரு சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டது, “கேள்வி கேட்கப்பட்ட நான்கு பெண்களில் மூவர், தங்களுடைய பிள்ளைகள் வன்முறை சம்பவங்களைக் கண்டிருப்பதாகக் கூறினார்கள், மற்றும் கிட்டத்தட்ட மூன்றுக்கு இரண்டு பிள்ளைகள் தங்களுடைய அம்மாமார்கள் அடிவாங்கியதைக் கண்டிருந்திருக்கிறார்கள்,” என்பதையும் அது கண்டுபிடித்தது. அதேபோன்று, ஐ.மா.செய்தி & உலக அறிக்கை என்னும் ஆங்கில பத்திரிகையின் பிரகாரம், பிள்ளைத் துர்ப்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு பேரிலான ஐ.மா. அறிவுரைக் குழுமம் கணக்கிடுகிறது: “ஒவ்வொரு வருடமும் 2,000 பிள்ளைகளில், பெரும்பான்மையினர் 4 வயதுக்கும் குறைவானவர்கள், தங்களுடைய பெற்றோரின் கைகளினாலோ பாதுகாவலரின் கைகளினாலோ மரிக்கிறார்கள்.” சாலை விபத்துக்களாலும் தண்ணீரில் மூழ்குவதாலும் அல்லது கீழே விழுவதாலும் ஏற்படும் மரணங்களை இது மிஞ்சிவிடுகிறது என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது.

துணைவரை அடிப்பதையும் குடும்ப வன்முறை உட்படுத்துகிறது; கீழேப்பிடித்து தள்ளப்படுவது அல்லது முழங்கையினால் இடித்துத்தள்ளப்படுவது முதற்கொண்டு அறையப்படுவது, எட்டி உதைக்கப்படுவது, மூச்சு திணறடிக்கப்படுவது, அடிக்கப்படுவது, கத்தியாலோ துப்பாக்கியாலோ பயமுறுத்தப்படுவது அல்லது கொன்றும்விடுவது வரை அதில் அடங்கியிருக்கின்றன. இந்த விதமான வன்முறை இருசாராருக்கும் பொருந்துகிறது. தம்பதியருக்கிடையே நடந்த அறிக்கைசெய்யப்பட்ட வன்முறை வழக்குகளில், சுமார் ஒரு காற்பகுதி ஆண்களாலும் மற்றொரு காற்பகுதி பெண்களாலும் ஆரம்பிக்கப்பட்டது, மீதமிருப்பதை பூசல் என்று விவரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும், அதில் இரு சாராரும் குற்றத்தை ஏற்கவேண்டும் என்பதாக ஒரு சுற்றாய்வு காண்கிறது.

வேலைசெய்யுமிடத்தில் வன்முறை

பாரம்பரியமாகவே, வேலைசெய்யும் இடமானது, வீட்டிற்கு வெளியே ஒரு நபர் ஒழுங்கையும் மரியாதையையும் பண்புநயத்தையும் கண்டடையக்கூடிய இடமென இருந்துவந்திருக்கிறது. ஆனால், அது இனிமேலும் அவ்விதமாக இல்லை. எடுத்துக்காட்டாக, ஐ.மா. நீதி துறையால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் காட்டுகிறபடி, ஒவ்வொரு வருடமும் 9,70,000 ஆட்கள் வேலைசெய்யும் இடத்தில் நடக்கும் வன்முறைக்குப் பலியாகிறார்கள். தொழில்முறை பாதுகாப்பு—அமெரிக்க பொறியாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் இதழ் (ஆங்கிலம்), அதன் அறிக்கையின்படி வேறுவார்த்தைகளில் சொல்வோமானால், “வேலைசெய்யும் இடத்தில் நடக்கும் ஏதேனும் ஒருவகை வன்முறைக்குத் தொழிலாளர்களில் நான்கு பேரில் ஒருவர் பலியாகிறார்.”

வேலைசெய்யும் இடத்தில் நடக்கும் வன்முறை வாய்ச்சண்டையோடு, அவமதிப்பான வார்த்தைகளை உதிர்ப்பதோடு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே அதிக கவலையைக் கொடுக்கிறது. “குறிப்பாக முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிராக மற்ற தொழிலாளிகளால் ஏவிவிடப்படும் வன்முறைதான், ஐ.மா.-ல் வெகுவிரைவாகப் பரவிவரும் மனிதகொலையின் வகை,” என்பதாக அதே அறிக்கை தெரிவிக்கிறது. 1992-ல் வேலையோடு தொடர்புடைய உயிரிழப்புகளில் 6-க்கு 1 என்ற விகிதத்தில் மனித கொலை இருந்தது; பெண்களுக்கு இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2-க்கு 1 என்று இருந்தது. ஒரு காலத்தில் ஒழுங்கு நிலவிய வேலைசெய்யும் இடத்தை இன்று வன்முறையின் அலைகள் அடித்துக்கொண்டு செல்வதை மறுப்பு சொல்வதற்கில்லை.

விளையாட்டுக்களிலும் பொழுதுபோக்கிலும் வன்முறை

ஒருவர் வாழ்க்கையில் கருத்தூன்றி செய்யும் முயற்சிகளிலிருந்து ஒரு மாறுதலை அல்லது ஓய்வாக இருந்து புத்துயிரைப் பெறும் வழிகளாக விளையாட்டுக்களும் பொழுதுபோக்கும் கடைப்பிடிக்கப்பட்டன. இன்றோ, பலகோடி டாலரை உட்படுத்தும் ஒரு தொழிற்சாலையாகப் பொழுதுபோக்கு இருக்கிறது. பொழுதுபோக்கிற்காகப் பொருட்களைத் தருவிப்பவர்கள், இந்த லாபம்தரும் தொழிலிலிருந்து லாபத்தின் மிகப் பெரிய அளவைப் பெறுவதற்கென்றே, தங்கள் கைவசம் இருக்கும் பொருட்களை விற்பனை செய்ய எந்தவொரு முறையானாலும் அதைப் பயன்படுத்த தயங்குவதில்லை. அத்தகைய வழிகளில் ஒன்று வன்முறை.

உதாரணமாக, ஃபார்பிஸ் என்னும் ஆங்கில தொழில் துறை பத்திரிகை அறிக்கையிட்டதில், வீடியோ கேம் உற்பத்தியாளர் ஒருவர் பிரபலமான ஒரு போர் விளையாட்டை தோற்றுவித்துள்ளார், அதில் போர்வீரன் தன் பகைவனின் தலையையும் முதுகெலும்பையும் பிய்த்து எறிகையில், பார்த்துக்கொண்டிருப்பவர்கள், “அவனைத் தீர்த்துவிடு! அவனைத் தீர்த்துவிடு!” என்று ஓயாது கத்துகிறார்கள். அதே விளையாட்டின் சற்று வித்தியாசமான பதிப்பை ஒரு போட்டி தொழிற்சாலை தயாரித்தது, ஆயினும் அதில் இரத்தம் சிந்தும் காட்சிகள் அவ்வளவாக இல்லை. அதன் விளைவு? அதிக வன்முறை நிறைந்த பதிப்பானது போட்டியாளரின் பதிப்பைவிட 3-க்கு 2 என்ற விகிதத்தில் விற்பனையில் மிஞ்சிவிடுகிறது. அது பெரும் பணத்தொகையை அர்த்தப்படுத்துகிறது. இந்த விளையாட்டுக்களின் பதிப்புகள் வீட்டு உபயோகத்திற்காகத் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்தபோது, சர்வதேச அளவில் முதல் இரண்டே வாரங்களில் $650 லட்சத்தை மொத்த இலாபமாக இந்தத் தொழிற்சாலைகள் திரட்டின! இலாபம் என்று வரும்போது வாடிக்கையாளர்களை மாட்டவைக்கும் வெறும் தூண்டில்தான் வன்முறை.

விளையாட்டில் வன்முறை என்றால் சிந்திக்க வேண்டிய ஒரு காரியமாகும். ஆட்டக்காரர்கள் ஒரு எல்லையை எட்டுவதற்காகத் தாங்கள் விளைவிக்கும் சேதத்தில் அடிக்கடி பெருமைப்படுகிறார்கள். உதாரணமாக, 1990-ல் நடந்த ஒரு ஹாக்கி விளையாட்டில் என்றுமே இல்லாதளவில், ஆட்ட விதிகளை மீறியதனால் 86 தடவை தண்டனை விதிக்கப்பட்டது. வன்முறையினால் மூன்றரை மணிநேரங்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது. ஒரு ஆட்டக்காரருக்கு உடைந்த முக எலும்புக்காகவும் உராய்ந்துபோன விழிவெண்படலத்திற்காகவும் ஆழமான வெட்டுக்காயத்திற்காகவும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏன் அத்தகைய வன்முறை? ஒரு ஆட்டக்காரர் விளக்கினார்: “உண்மையிலேயே ஓர் ஆவேசமான விளையாட்டில் அதிகமாகச் சண்டையிட்டு வெற்றிபெற்று வீட்டுக்குச் செல்கையில் உங்களுடைய விளையாட்டு தோழர்களோடு சற்று நெருங்கி இருப்பதை நீங்கள் உணருவீர்கள். சண்டைகள்தான் உண்மையில் விளையாட்டை உயிர்த்துடிப்புள்ளதாய் ஆக்கியது என்று நான் நினைத்தேன்.” இன்று பெருவாரியான விளையாட்டுக்களில் இலக்கை அடைவதற்காக வன்முறை பயன்படுத்தப்படவில்லை, வன்முறையே இலக்காக மாறியிருப்பதாகத் தெரிகிறது.

பள்ளிக்கூடத்தில் வன்முறை

பள்ளிக்கூடம், இளம் வயதினர் தங்கள் கவலைகளையெல்லாம் மறந்து தங்கள் உள்ளங்களையும் உடல்களையும் பேணிவளர்க்க முழு கவனத்தையும் செலுத்தும் ஒரு அரணாக எப்போதும் நோக்கப்பட்டது. ஆயினும், இன்று பள்ளிக்கூடம் இனிமேலும் அத்தகைய ஒரு பாதுகாப்பான இடமாக இல்லை. ஐக்கிய மாகாணங்களிலுள்ள அரசாங்க பள்ளிக்கூடங்களில் வன்முறையும் கும்பல்களாக செயல்படுவதும் முக்கிய பிரச்சினையாக உருப்பெறுகின்றன, அவை பள்ளி நிதியெல்லாவற்றையும் சுரண்டிவிடுகின்றன, அவை கடந்த வருட பட்டியலில் முதலிடத்தில் இருந்தன என்பதாக 1994-ல் நடத்தப்பட்ட ஒரு பொது சுற்றாய்வு கண்டது. வெறுமனே நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது?

ஒரு சுற்றாய்வில் “பள்ளியிலோ அதனைச் சுற்றியோ நடந்த வன்முறைக்கு எப்போதாவது நீங்கள் பலியாகியிருக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு ஒவ்வொரு நான்கு மாணாக்கரில் கிட்டத்தட்ட ஒருவர் ஆம் என்ற பதிலை அளித்தனர். பத்தில் ஒரு பங்குக்கும் மேலான ஆசிரியர்கள் உடன்பாடான பதிலைக் கொடுத்தார்கள். 13 சதவிகித மாணாக்கரில் பையன்களும் பெண்களும் என்றாவது ஒருமுறை தங்களுடன் ஆயுதத்தைப் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டுபோயிருக்கிறார்கள் என்பதை அதே சுற்றாய்வு கண்டுபிடித்தது. அவர்கள் அவ்வாறு செய்தது மற்றவர்களின் அபிமானத்தை பெறுவதற்காக அல்லது தங்களைப் பாதுகாப்பதற்காக என்று வாதிட்டனர். ஆனால், 17 வயது மாணவன் ஒருவனிடத்திலிருந்து அவனுடைய துப்பாக்கியைப் பறிக்க முயன்ற ஆசிரியரின் நெஞ்சில் அவன் சுட்டுவிட்டான்.

ஒரு வன்முறை கலாச்சாரம்

வன்முறையானது இன்றும் எங்கும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. வீட்டில், வேலைசெய்யுமிடத்தில், பள்ளிக்கூடத்தில், பொழுதுபோக்கில் என நாம் ஒரு வன்முறையான கலாச்சாரத்தையே எதிர்ப்படுகிறோம். நித்தம் அதை எதிர்ப்படுவதால் பலர் அதற்கு தாங்கள் பலியாகும் வரை அதை இயல்பானதாக ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது அவர்கள் கேட்கின்றனர், அது எப்போதாவது முடிவுறுமா? விடையைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் தயவுசெய்து பின்வரும் கட்டுரையை வாசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்