ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
தென் ஆப்பிரிக்காவில் பல்வேறு இனத்தவர் ஒன்று சேருகின்றனர்
கறுப்பர் குடியிருப்பாகிய இம்பாலி, தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலைச் சேர்ந்த பியட்டர்மேரிட்ஸ்பர்க்குக்கு சற்று வெளியே உள்ளது. இரண்டு இம்பாலி யெகோவாவின் சாட்சிகளின் சபைகளுக்கு, ஒரு சிறிய நிலம் வழங்கப்பட்டபோது, பியட்டர்மேரிட்ஸ்பர்க்கைச் சேர்ந்த வெள்ளையர் சபையின் மூப்பர்களும், வெள்ளையரல்லாத சபையின் மூப்பர்களும் ஒன்று சேர்ந்து தங்களின் கறுப்புச் சகோதரர்களுக்குக் கூடியவரை குறைந்த நேரத்துக்குள் ராஜ்ய மன்றத்தை எவ்விதமாகக் கட்ட உதவி செய்யலாம் என்பதை திட்டமிட கூடிவந்தார்கள். கட்டட வேலைக்கு ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ஆனபோதிலும் வேலையை முடிக்க அவர்களுக்கு 48 வேலை நாட்களே தேவைப்பட்டது. வேலை பெரும்பாலும் சனிக்கிழமைகளில் செய்யப்பட்டது.
ராஜ்ய மன்ற கட்டட வேலை இம்பாலியில் வசித்த ஜனங்கள் சாத்தியமற்றதாகக் கருதிய ஒன்றாக இருந்தது. வெள்ளையர்கள், வெள்ளையரல்லாதவர்கள், இந்தியர் ஆகிய சாட்சிகள் பியட்டர்மேரிட்ஸ்பர்க் நகரத்திலிருந்தும் டர்பனிலிருந்தும் ஏராளமாக வந்து, கறுப்பர் குடியிருப்புப் பகுதியில், ஆப்பிரிக்க சபைகளிலுள்ள கறுப்பு நிறத்தாருடன் தோளோடு தோள் நின்று வேலை செய்ததைக் கற்பனை செய்து பாருங்கள்! (செப்பனியா 3:9 ஒப்பிடவும்) ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் பொருட்களையும் கருவிகளையும் ஒருவருக்கொருவர் மாறிமாறி கொடுத்தார்கள். பொது மேசையிலே உணவருந்தினார்கள். விசேஷமாக, குழப்பமான இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட இன ஒற்றுமை ஆப்பிரிக்கக் குடியிருப்புப் பகுதிகளில் கேட்கப்படாத காரியமாக இருந்தது. நிச்சயமாகவே யெகோவாவின் சாட்சிகள் ஒருவரிலொருவர் அக்கறையுள்ள, ஐக்கியப்பட்ட ஜனங்கள் என்பதற்கு இது சந்தேகத்திற்கிடமில்லாத சாட்சியாக இருந்தது.
இந்த ஐக்கியத்தைக் குறித்து அந்த ஊரிலுள்ள ஒருவர் பின்வருமாறு சொன்னார்: “வெள்ளையர், கறுப்பர், வெள்ளையரல்லாதவர் மற்றும் இந்தியர் ஒத்திசைந்து வேலை செய்வதைப் பார்ப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. எங்களுடைய சர்ச்சுகளில் இப்படிப்பட்ட ஒற்றுமையை நாங்கள் பார்ப்பதில்லை.” இம்பாலின் மேயர் திரு. பக்கீஸ், நவம்பர் 10, 1985-ல் நடந்த ராஜ்ய மன்ற பிரதிஷ்டையின்போது, சாட்சிகள் தாங்களாகவே இத்தனை பிரமாண்டமான கட்டட வேலையை ஐக்கியமாகவும், மன உறுதியுடனும் செய்ததைப்பற்றி தம்முடைய வியப்பை வெளியிட்டார். எவ்விதமாக அது கட்டப்பட்டது என்பதை அவர் சுருக்கமாகச் சொல்கையில், “அன்பின் மூலமாக மட்டுமே இது கூடிய காரியம்” என்றார். எவ்வளவு உண்மை! இயேசு கிறிஸ்துவும் இவ்விதமாக சொல்லவில்லையா: “நீங்கள் ஒருவரிலொருவர் வைக்கும் இந்த அன்பினாலே, நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்?”—யோவான் 13:35, எருசலேம் பைபிள்.
இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கையில், தென் ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், கறுப்பர் நகரங்களிலும் கிராமப் புறங்களிலும் கூடியவரை விரைவில் ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். சோவிட்டோவின் முதல் ராஜ்ய மன்றம் 1985 பிப்ரவரி மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மற்ற அநேக மன்றங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 700 சபைகளைக் கொண்ட கறுப்பர்களின் பகுதியில் 70 சபைகள் தங்களின் சொந்த ராஜ்ய மன்றங்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதன் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தத் தேவையை இம்பாலி ராஜ்ய மன்றம் பூர்த்தி செய்துவருகிறது. இங்கு பரிமாறப்படும் முக்கியமான ஆவிக்குரிய உணவை உட்கொள்ள 400 ஆட்கள் அமருவதற்கு வசதியுள்ளது. ஆம், பைபிள் கல்விக்கான இப்படிப்பட்ட மையங்களில், நீதியை நேசிப்பவர்கள், மனிதவர்க்கத்தின் எல்லா இனத்தாரும் என்றுமாக ஒரு ஐக்கியப்பட்ட குடும்பமாக வாழப்போகும் கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனை அடைய, இந்த ஒழுங்குமுறையின் முடிவை எவ்விதமாக தப்பிப் பிழைக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்! (w86 7/1)