தென் ஆப்பிரிக்காவில் நெருக்கடி நிலை
பின்வரும் மூன்று கட்டுரைகளில், தென் ஆப்பிரிக்காவிலுள்ள “விழித்தெழு!” பத்திரிகை நிருபர் இந்த நெருக்கடி நிலையையும் அதைத் தீர்க்கும் பரிகாரத்தையும் ஆலோசிக்கிறார்.
நகர் ஆட்சி வட்டாரக் கலகத்தில் 26 பேர் மாண்டனர்.” “கலகத்தில் மாண்ட 15 ஆட்களின் சவ அடக்கத்தின்போது மனங்குழம்பிய உணர்ச்சிகள்.” “வன்முறைச் செயல்கள் மிகப் பரவலாய்த் தொடருகின்றன.” “10 நாட்கள் SA விமானக் குண்டு வீச்சுவில் உயிர்ச்சேதம் 13-ஐ எட்டுகிறது.” தினசரி தலைவரிகளும் அச்சு அறிவிப்புகளும் திடுக்கிடச் செய்யும், விசனகரமான கதையைச் சொல்லுகின்றன. உரையாசிரியர் ஒருவர் சொன்ன பிரகாரம்: “தென் ஆப்பிரிக்கா, நாட்டுக்கு உள்ளேயும் புறம்பேயும், அதன் சரித்திரத்திலேயே மிக மோசமான நெருக்கடியை எதிர்ப்பட்டிருக்கிறது.”
உயிர்ப்புள்ள காட்சிகளும் செய்திக் குறிப்புகளும் உலகமெங்கும் இலட்சக்கணக்கானோரின் வீடுகளுக்குள் தோன்றும்படி பரவச் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, தென் ஆப்பிரிக்கா முழுவதுமே பெருங்குழப்பத்தில் இருக்கிறதென பலர் எண்ணுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. வெள்ளையர் இருக்கும் பெரும் பகுதிகளிலும் கறுப்பர் இருக்கும் கிராமப் புறங்களிலும், வாழ்க்கை எப்போதும்போல் சென்றுகொண்டிருக்கிறது.
இருப்பினும், கறுப்பர் இருக்கும் நகர வட்டாரங்கள் சிலவற்றில், பயங்கர காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. டெலிவிஷன் காண்பவர்கள் பலர், கறுப்பரில் ஓர் இளம் பெண், போலீஸுக்குத் தகவல் கொடுப்பவளெனக் குற்றஞ்சாட்டி, உதைத்து, மிதித்து, உயிரோடு எரிக்கப்படுவதைக் கண்டு கடுந்திகிலடைந்தனர். அநேகமாய்க் கலகக் கும்பலின் கொடிய பகை, அரசாங்க சேவையில் இருப்போருக்கு அல்லது அரசாங்கத்தோடு சேர்ந்துழைப்போருக்கு விரோதமாகச் செலுத்தப்படுகிறது. கறுப்பரான காவல் துறையினர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோரின் வீடுகள் எரிக்கப்பட்டன அல்லது பாழாக்கப்பட்டன.
கலகத்தில் ஈடுபட்டிருப்போரில் பெரும்பான்மையர் 13-லிருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அவர்களிலும் இளைஞர். அவர்களுக்கு வன்முறைச் செயல்கள் வாழ்க்கை முறையாகிக் கொண்டிருக்கிறது. மேலும் கொள்ளைக்காரர், குற்றமற்ற மக்களைத் தாக்கிக் கொள்ளையிட இந்தக் குழப்பநிலையைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
இந்தக் குழப்பநிலை தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார நிலையைப் பாதித்திருக்கிறது. உள்ளூர் நடப்புப் பணத்தின் மதிப்பு மிக மோசமாய்க் குறைந்துவிட்டது. பல கூட்டு வாணிக நிலையங்களை மூடிவிட வேண்டியதாய்விட்டது, இதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச நன்மதிப்புக் குறைந்துவிட்டது. வெளி நாட்டு முதலீட்டுச் சேமங்களின் மீட்பையும் தடுப்பு நடவடிக்கைகளையும் பற்றிய பயமுறுத்தல்கள் முன்னொருபோதும் இராதவண்ணம் பெருத்துத் தெளிவின்றி தோன்றுகின்றன.
இது—ஸ்வாஸிலாண்ட், போட்ஸ்வானா, பெஸோத்தோ, தென் மேற்கு ஆப்பிரிக்கா/நமீபியா—ஆகிய அடுத்துள்ள நாடுகளையும் பாதிக்கிறது, இவற்றின் பொருளாதாரங்கள் மிக அதிகமாய்த் தென் ஆப்பிரிக்காவின் பேரில் சார்ந்திருக்கின்றன. அடுத்துள்ள பெரிய நாடுகளாகிய மோஸாம்பிக்கும் அங்கோலாவும் பல ஆண்டுகளாகக் கடுமையான உள்நாட்டுச் சண்டைகளால் தென் ஆப்பிரிக்காவைப் பார்க்கிலும் மிக மோசமான நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன, அவற்றின் பொருளாதாரங்கள் கடுமையாய்ச் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தென் ஆப்பிரிக்கா அழகிய நாடு, இயற்கை வள ஆதாரங்கள் பல—பயிரிடுவதற்குகந்தச் சிறந்த நிலம், பொன், வைரக்கற்கள், நிலக்கரி, செம்பு, மற்றும் பல விலைமதிப்புள்ள உலோகங்கள்—நிறைவாய் அமைந்துள்ள நாடு. மேலும் அதன் பற்பல வகையான ஜனத் தொகுதிகளுக்குள்—கறுப்பர், வெள்ளையர், வேறு நிறமுள்ளோர் (கலப்பு இனத்தவர்), இந்தியர் ஆகியோரில் சிறந்த தயவுள்ள ஆட்கள் பலர் இருக்கின்றனர்.
மேலும், தென் ஆப்பிரிக்கா வெகு மதபக்தியுள்ள நாடு. வெள்ளையராயினும் கறுப்பராயினும் பெரும்பான்மையர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். எனினும் அந்நாடு ஒன்றுமையில்லாமல் பயங்கரமாய்ப் பிரிவுற்றிருக்கிறது. மதம் ஓரளவு குற்றப் பொறுப்புள்ளதா? வருத்தந்தரும் இந்நிலைமையைக் கொண்டுவந்தது எது? இதைவிட முக்கியமாய், இதைத் தீர்ப்பதற்குப் பரிகாரம் உண்டா? (g86 7/22)