வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கமுடியாத யோர்தான்
யோர்தான் நதியின் பெயர் குறிப்பிடப்பட்டவுடனே, நன்றாகத் தெரிந்த காட்சிகள் உங்கள் மனதுக்கு வரக்கூடும்: யோசுவாவின் தலைமையின் கீழ் இஸ்ரவேலர் எரிகோவுக்கு அருகே தண்ணீரில்லாத அதன் தரையில் கடந்து செல்வது; நாகமான் குஷ்டரோகம் நீங்கிச் சுத்தமடைவதற்காக அதன் தண்ணீர்களில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணுவது; யூதர்களில் அநேகரும், பின்னர் இயேசுவும் யோவானால் முழுக்காட்டப்படும்படிக்கு அங்கே வருவது.—யோசுவா 3:5–17; 2 இராஜாக்கள் 5:10–14; மத்தேயு 3:3–5, 13.
பிரசித்திப் பெற்ற இந்த எல்லாச் சம்பவங்களும் கலிலேயாக் கடலுக்குத் தெற்கேயிருந்து சவக்கடல் வரையாக உள்ள இடைப்பட்டப் பகுதியில், யோர்தானின் நீளமான மற்றும் நன்றாக அறியப்பட்டப் பகுதியில் நடந்தேறின. ஆனால் கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்கும் மாணாக்கர்கள் யோர்தானின் மற்றொரு நிலப்பரப்பை—நதிக்கு வடக்கேயும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் கவனிக்கத் தவறிவிடக்கூடும். நிலப்படத்தைப் பார்க்கவும்.a நடுவிலுள்ள தாழ்வானப் பகுதி, சீரியாவிலிருந்து ஆப்பிரிக்கா வரையாக பரந்து கிடக்கும் மண்ணியல் இடைமுறிவான, மாபெரும் செங்குத்தானப் பள்ளத்தாக்கின் ஒரு பாகமாக இருக்கிறது.
யோர்தான் நதியின் மூன்று முக்கிய ஊற்றுமூலங்கள் எர்மோன் மலையின் மேலிருந்து உருகி ஓடையாக ஓடிவரும் பனிக்கட்டியாகும். (பக்கம் 17, மேலே) கிழக்கு கோடியிலுள்ள ஓடை, மலையின் அடிப்புறத்திலுள்ள செங்குத்தான ஒரு சுண்ணாம்புக் கற்பாறையிலிருந்து வெளிப்பட்டு வருகிறது. இங்குதானே செசரியா பிலிப்பி இருந்தது; “உயர்ந்த மலையின் மேல்” இயேசு மறுரூபமாவதற்குச் சற்று முன்பாக அவர் இங்கே வந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். (மத்தேயு 16:13–17:2) மற்றொரு ஓடை, ஒரு மண்மேட்டிலிருந்து வெளிப்பட்டு வருகிறது. இங்கு தானே தாண் பட்டணம் கட்டப்பட்டிருந்தது. வடராஜ்யத்தின் இஸ்ரவேலர் ஒரு பொன் கன்றுகுட்டியை நிறுத்தியிருந்த இடமும் இதுவாகவே இருந்தது. (நியாயாதிபதிகள் 18:27–31; 1 இராஜாக்கள் 12:25–30) மூன்றாம் ஓடையின் தண்ணீர்கள் இவை இரண்டோடு சேர்ந்து யோர்தான் நதியை உண்டுபண்ணுகிறது. இது ஆயிரம் அடிகளுக்கு மேல் கீழிறங்கி 7 மைல்களுக்குச் செல்கிறது.
பின்னர் பள்ளத்தாக்கு ஹுலா நீர்தேக்கமாகத் தட்டையாகி, யோர்தானின் தண்ணீர்களைப் பரவச் செய்து ஓர் அகன்ற சதுப்பு நிலத்தை உருவாக்குகிறது. பூர்வக் காலங்களில் பெரும்பகுதியான தண்ணீர்கள் ஹுலா (அல்லது ஹுலே) ஏரி என்றறியப்பட்ட ஆழமில்லாத ஒரு நீர்த் தேக்கமாகச் சேர்ந்தது. ஆனால் ஹுலா ஏரி இனிமேலும் அங்கு இல்லை. ஏனென்றால் அண்மைக் காலங்களில், யோர்தானின் மேற்பகுதி நேராக்கப்பட்டு, சதுப்பு நிலப்பகுதியிலுள்ள தண்ணீரை வடிகட்டுவதற்காக கால்வாய்கள் சேர்க்கப்பட்டு, ஏரியின் புறமதகின் ஆழம் மிகுதியாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அப்பகுதியின் நிலப்படத்தைப் பார்த்து கலிலேயாக் கடலுக்கு வடக்கே, ஓர் ஏரியை (ஹுலா) கவனிப்பீர்களேயானால், அது இப்பொழுது நீங்கள் காணும்விதமாக இல்லாமல், பூர்வக்காலத்திலிருந்த நிலப்படமாக இருப்பதை தெரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் அங்கு சென்றால், அங்கே செடிகொடிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஓரிடத்தைக் காண்பீர்கள். பைபிள் காலங்களில், நாணல் புல் மற்றும் கோரைப் புல் போன்ற விசேஷித்த வகையான தாவரங்கள் தோன்றிய இடமாக இருந்தபோது, அப்பகுதி எவ்விதமாக இருந்தது என்பதைப் பற்றிய ஓர் அபிப்பிராயம் கிடைக்கும்.—யோபு 8:11.
இப்பகுதி எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் பறவைகளின் தொகுதிக்கு இருப்பிடமாக இருந்திருக்கிறது. கொக்கு, நாரை, நீர்க்கோழி, கரும்புறா இன்னும் மற்ற பறவைகளும் ஏராளமாகக் காணப்பட்டன. ஐரோப்பாவுக்கும் ஆப்பிரிக்காவுக்குமிடையே இடப்பெயர்ச்சி மார்க்கத்தில் சதுப்பு நிலமும் ஏரியும் மிகச் சிறந்த ஓய்விடமாக இருந்தது இதற்கு ஓரளவு காரணமாயிருந்தது. (உபாகமம் 14:18; சங்கீதம் 102:6; எரேமியா 8:7) இப்பகுதிக்குப் பொருத்தமான மற்ற உயிரினங்கள் அவ்வளவாக வெளியில் காணப்படாதவையாக இருந்தன. ஆனால் இவைகள் அங்கிருந்ததுதானே, ஹுலா நீர்த்தேக்கத்தினூடாகக் கடந்து செல்வதை விரும்பத்தகாததாகச் செய்தது. சிங்கம், நீர்யானை, நரி மற்றும் காட்டுப்பன்றி இவைகளில் அடங்கும். (யோபு 40:15–24; எரேமியா 49:19; 50:44; ஆபகூக் 1:8) சில காலப்பகுதிகளில் கொசுவினால் பரவும் மலேரியா அவ்விடத்திலிருந்தது. இது பைபிளில் குறிப்பிடப்படும் காய்ச்சல்களில் ஒன்றாகும்.
தனியாகப் பயணம் செய்பவர்களும் பெரிய கூட்டமாகப் பயணம் செய்பவர்களும் இந்தச் சதுப்பு நிலப்பகுதி விளிம்பினைச் சுற்றிச் சென்றதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆகவே கலிலேயாக் கடலின் வடக்கே பள்ளத்தாக்கில் அவர்கள் எங்கே யோர்தான் நதியைக் கடக்க முடியும்?
கலிலேயாக் கடலின் அருகே எரிமலைப் பாறையிலிருந்து கனிப்பொருள் வெளிப்பட்டுத்தோன்றியது; இந்த அணைப்போன்ற அமைப்பினால்தானே தண்ணீர் பின்னோக்கி வந்து ஹுலா ஏரியை உண்டுபண்ணினது. பக்கம் 16-ல் பாறையிலிருந்து வெளிப்பட்டு தோன்றும் கனிப்பொருளின் ஒரு பாகத்தைக் காணலாம். கலிலேயாக் கடலுக்குத் தெற்கே யோர்தான் அதனூடாகப் பாய்ந்து வருகையில் (தூரத்தில் தெரிவது) அது அத்தனை விரைவாக ஓடுவதால் தண்ணீர் வெள்ளையாகத் தெரிகிறது. பூர்வக் காலங்களில் பயணம் செய்தவர்கள் நீர் அரித்த ஆழமானச் சந்துக்குள் இறங்கி யோர்தானைக் கடப்பதை ஆபத்தானதாக உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஹுலா நீர்த்தேக்க சதுப்பு நிலப்பகுதிக்கும் சந்துக்குமிடையே தண்ணீர் அமைதியாக வந்து பாய்ந்த குறுகிய சமதள நிலப்பரப்பு இருந்தது. பூர்வ காலத்துப் பயணிகள் இங்கே ஆற்றை ஆபத்தில்லாமல் கடந்து சென்றிருக்கக்கூடும். இது வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் செல்வதற்கு முக்கிய பயணமார்க்கத்தின் பாகமாக ஆனது. இப்பொழுது இவ்விடத்தில் ஒரு பாலம் இருக்கிறது. இதுவே இன்னும் யோர்தானைக் கடப்பதற்கு முக்கிய இடமாக இருந்துவருகிறது.
ஹுலா நீர்த்தேக்கம் இன்று செழிப்பான ஒரு வேளாண்மைப் பகுதியாக இருக்கிறது; அங்கே மீன் வளர்க்கும் குளங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் சாத்தியமாக இருப்பதற்கு யோர்தான் நதியின் இப்பகுதியில் பாய்ந்துவரும் ஏராளமானத் தண்ணீரே காரணமாக இருக்கிறது. (w90 7/1)
[அடிக்குறிப்புகள்]
a 1990 யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டியிலே உள்ள பெரிய நிலப்படத்தையும், படத்தையும் ஒப்பிடவும்.
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஹுலா
கலிலேயாக் கடல்
[படத்திற்கான நன்றி]
Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel.
[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
Animal photos: Safari-Zoo of Ramat-Gan, Tel Aviv