கடவுளுடைய பொறுமை எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஞானி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.” (பிரசங்கி 8:9) அந்தக் கருத்தை அவர் சொன்னது முதற்கொண்டு, நிலைமைகள் முன்னேறிவிடவில்லை. சரித்திரம் முழுவதிலுமாக, ஒன்றன்பின் ஒன்றாக தனிநபர்கள் அல்லது கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மற்ற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியும் சுயநலத்துக்காக அவர்களைப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள். யெகோவா தேவன் இதைப் பொறுமையோடு சகித்து வந்திருக்கிறார்.
அரசாங்கங்கள், போர்க் காலங்களில் ஏற்படும் லட்சக்கணக்கான மரணங்களுக்கு பொறுப்புள்ளவர்களாக இருந்து, மிதமிஞ்சிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அனுமதித்திருக்கையில் யெகோவா பொறுமையாக இருந்திருக்கிறார். இன்று, மனிதர்கள் ஓசோன் அடுக்கை அழித்து, வளிமண்டலத்தையும் சமுத்திரத்தையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கையில் அவர் இன்னும் பொறுமையைக் கையாண்டு வருகிறார். விளைச்சல் வளமுள்ள நிலங்கள் கெடுக்கப்படுவதையும், வேண்டுமென்றே காடுகளும் வனவாழ் விலங்குகளும் அழிக்கப்படுவதையும் காண்கையில் அவருக்கு எத்தனை வேதனையாக இருக்கும்!
கடவுள் ஏன் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்?
எளிய ஓர் உதாரணம் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நமக்கு உதவக்கூடும். ஒரு தொழிலாளி எப்போதும் தாமதமாக வேவைலைக்கு வருவானேயானால் தொழிலுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சொந்தக்காரர் என்ன செய்ய வேண்டும்? அவர் உடனடியாக தொழிலாளியை வேலைநீக்கம் செய்வதை அடிப்படையான நீதி தேவைப்படுத்தலாம். ஆனால் அவர் ஒருவேளை பைபிள் நீதிமொழியை நினைவுகூறலாம்: “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 14:29) நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக புத்தி அவரைக் காத்திருக்கும்படிச் செய்யக்கூடும். தொழில் இன்னுமதிகமாக தடைபடாதபடிக்கு அவனுக்குப் பதிலாக மற்றொருவனைப் பயிற்றுவிப்பதற்குக் காலத்தை அனுமதிக்க அவர் தீர்மானம் செய்யக்கூடும்.
ஒத்த உணர்வும்கூட அவரைக் காத்திருக்கும்படிச் செய்யக்கூடும். அவன் தன் நடத்தையைச் சீர்செய்துகொள்வானா என்பதைப் பார்ப்பதற்காக கவனக்குறைவாக இருக்கும் தொழிலாளியை எச்சரிப்பது பற்றி என்ன? அவன் வழக்கமாக தாமதமாக வருவது, தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்னையினாலா அல்லது திருத்தமுடியாத மோசமான மனநிலையினாலா என்பதை ஏன் அவனோடு பேசி தெரிந்து கொள்ளக்கூடாது? முதலாளி பொறுமையைக் கையாள தீர்மானித்தாலும், அவருடைய பொறுமை எல்லையற்றதாக இருக்காது. தொழிலாளி தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது கடைசியாக வேலை நீக்கத்தை எதிர்பட வேண்டும். அதுவே தொழிலுக்கும் சட்டங்களைப் பின்பற்றும் தொழிலாளிகளுக்கும் நியாயமாக இருக்கும்.
அதேவிதமாகவே, யெகோவா தேவன் ஒரு சில பிரச்னைகளுக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண்பதற்கு நேரத்தை அனுமதிப்பதற்காக தவறை எதிர்படும்போது பொறுமையை கையாளுகிறார். மேலும் அவருடைய பொறுமை தவறிழைத்தவர்களுக்குத் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவும் நித்திய நன்மைகளைப் பெறவும் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஆகவே, கடவுளுடைய பொறுமைக்காக வருத்தப்படாதிருக்கும்படியாக பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. மாறாக, அது சொல்கிறது: “நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.”—2 பேதுரு 3:15.
கடவுளுடைய பொறுமைக்கு ஓர் உதாரணம்
நோவாவின் நாளைய மகா ஜலப்பிரளயத்துக்கு முன்பாக யெகோவா தேவன் பொறுமையாயிருந்தார். அந்நாளைய உலகம் வன்முறை நிறைந்ததாயும் மிகவும் பொல்லாப்பானதாயும் இருந்தது. நாம் வாசிக்கிறோம்: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்று . . . கர்த்தர் [யெகோவா, NW] கண்டு, . . . நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின் மேல் வைக்காமல் நிக்கிரகம்பண்ணுவேன்,” என்று அவர் சொன்னார். (ஆதியாகமம் 6:5, 7) ஆம், அப்போதிருந்த அக்கிரமத்தின் பிரச்னைக்கு ஒரு முடிவான பரிகாரத்தை யெகோவா மனதில் கொண்டிருந்தார்: பொல்லாத மக்களை அகற்றுவது. ஆனால் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்வை. ஏன் எடுக்கவில்லை?
ஏனென்றால் அனைவருமே பொல்லாதவர்களாக இருக்கவில்லை. நோவாவும் அவனுடைய குடும்பமும் கடவுளுடைய பார்வையில் நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். ஆகவே யெகோவா அவர்களுடைய நன்மைக்காக, ஒரு சில நீதியான ஆட்கள் இரட்சிக்கப்படுவதற்கு ஆயத்தங்கள் செய்வதை அனுமதிப்பதற்காக பொறுமையாக காத்திருந்தார். மேலுமாக அந்த நீண்ட கால காத்திருப்பு நேரம், நோவாவுக்கு “நீதியின் பிரசங்கி”யாக இருக்க ஒரு வாய்ப்பை, பொல்லாத மக்களுக்குத் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பை அளித்தது. பைபிள் சொல்லுகிறது: “சிலராகிய எட்டுப் பேர் மாத்திரம் ஜலத்தினாலே காக்கப்பட்ட அந்தப் பேழையை நோவா ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவனுடைய பொறுமை காத்திருந்தது.”—2 பேதுரு 2:5; 1 பேதுரு 3:20.
கடவுள் ஏன் இப்பொழுது பொறுமையாயிருக்கிறார்
இன்று, நிலைமை அதேவிதமாக இருக்கிறது. உலகம் மறுபடியும் வன்முறை நிறைந்ததாய் இருக்கிறது. நோவாவின் நாளில் செய்தது போலவே, கடவுள் ஏற்கெனவே இந்த உலகத்தை நியாயந்தீர்த்துவிட்டார். இந்த உலகம், “தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்பதாக பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:7) அது சம்பவிக்கும் போது, இனிமேலும் சுற்றுப்புறச்சூழல் கெடுக்கப்படுவதோ, நலிந்தவர்கள் ஒடுக்கப்படுவதோ, பேராசையோடு அதிகாரம் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதோ இருக்காது.
அப்படியென்றால் கடவுள் ஏன் வெகு காலத்துக்கு முன்பாகவே தேவபக்தியில்லாதவர்களை அழித்துப் போடவில்லை? ஏனென்றால் தீர்க்கப்படுவதற்குப் பிரச்னைகளும், ஏற்பாடு செய்வதற்கு முக்கியமான காரியங்களும் இருந்திருக்கின்றன. ஆம், அக்கிரமத்தின் பிரச்னைக்கு நிரந்தரமான ஒரு பரிகாரத்தை நோக்கி யெகோவா முன்சென்று கொண்டிருக்கிறார். இந்தப் பரிகாரம், நீதியான இருதயமுள்ள மனிதர்களை வியாதி மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து பாதுகாப்பது உட்பட அநேக காரியங்களை உட்படுத்துகிறது.
பின்னால் கூறப்பட்ட முடிவை மனதில் கொண்டு, நம்முடைய பாவங்களுக்கு மீட்பை அளிக்கக்கூடிய ஓர் இரட்சகருக்கு ஏற்பாடு செய்ய யெகோவா நோக்கங் கொண்டார். அவரைக் குறித்து பைபிள் சொல்வதாவது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசு பூமிக்கு வந்து மனிதவர்க்கத்துக்காக தம்முடைய ஜீவனை பலியாகக் கொடுப்பதற்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்தன. இந்த எல்லா ஆண்டுகளின் போதும் கடவுள் அன்போடு பொறுமையாயிருந்தார். ஆனால் இப்பேர்ப்பட்ட ஓர் ஏற்பாடு காத்திருப்பதற்குத் தகுதியுள்ளதாக இருந்ததல்லவா?
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயேசு மனிதவர்க்கத்துக்கு மீட்கும் பொருளை அளித்துவிட்டார். அப்படியென்றால் ஏன் கடவுள் இன்னும் பொறுமையைக் கையாளுகிறார்? ஒரு காரணம், இயேசுவின் மரணம் கல்வி சம்பந்தமான ஒரு திட்டத்தின் ஆரம்பத்தை அறிவிப்பதாக இருந்தது. மனிதவர்க்கம் இந்த அன்பான ஏற்பாட்டைக் குறித்து கற்றறிய வேண்டியதாக இருந்தது, அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது தள்ளிவிடவோ வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அது நேரத்தை எடுக்கும், ஆனால் அது நல்ல விதமாக செலவிடப்பட்டதாக இருக்கும். பைபிள் சொல்கிறது: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் (யெகோவா, NW) தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”—2 பேதுரு 3:9.
அரசாங்கம் பற்றிய பிரச்னை
மற்றொரு முக்கியமான விஷயமும்கூட நேரத்தை எடுத்துக்கொள்ளும். மனிதவர்க்கத்தின் அரசாங்க பிரச்னையைத் தீர்ப்பது தேவையாயிருந்தது. ஆரம்பத்தில் மனிதன் தெய்வீக அரசாங்கத்தின் கீழ் இருந்தான். ஆனால் ஏதேன் தோட்டத்தில் நம்முடைய முதல் பெற்றோர், அதை உதறித் தள்ளினர். அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள விரும்பி கடவுளை சார்ந்திராமல் இருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். (ஆதியாகமம் 3:1–5) ஆனால் உண்மையில், மனிதன் தன்னைத்தான் ஆண்டு கொள்ளும்படியாக சிருஷ்டிக்கப்படவில்லை. எரேமியா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, (யெகோவாவே, NW) மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23; நீதிமொழிகள் 20:24.
இருந்தபோதிலும், அரசாங்க பிரச்னை எழுப்பப்பட்டிருந்ததன் காரணமாக, யெகோவா அதை தீர்ப்பதற்கு பொறுமையோடு நேரத்தை அனுமதித்திருக்கிறார். ஆம், எண்ணிப்பார்க்கக்கூடிய எல்லா வகையான அரசாங்கத்தையும் முயன்று பார்க்க மனிதனுக்கு அவர் தாராளமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை அனுமதித்திருக்கிறார். என்ன விளைவோடு? எந்த மனித அரசாங்கமும் ஒடுக்குதலை, நேர்மையின்மையை, அல்லது வருத்தத்திற்குரிய மற்ற காரணங்களை நீக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது.
ஆம், மனித சரித்திரத்தை முன்னிட்டுப் பார்க்கையில், எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கி அதற்குப் பதிலாக தம்முடைய சொந்த அரசாங்கத்தை ஏற்படுத்த போகும் அவருடைய நோக்கத்தை அவர் அறிவிக்கையில் கடவுள் அநீதியுள்ளவர் என்பதாக எவராவது உண்மையில் சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை! நாம் இந்தப் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நிச்சயமாகவே வரவேற்கிறோம்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவே அந்த ராஜ்யத்தின் பரலோக அரசர். அந்த ஸ்தானத்துக்கு அவரைத் தயார் செய்வதும்—அவரோடு ஆளுகைச் செய்ய மனிதர்களைத் தெரிந்தெடுப்பதும்—நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அந்த எல்லா காலத்திலும் கடவுள் பொறுமையை கையாண்டு வந்திருக்கிறார்.
கடவுளுடைய பொறுமையிலிருந்து இப்பொழுது பயனடையுங்கள்
இன்று குறைந்தபட்சம் 212 தேசங்களில் லட்சக்கணக்கான ஆட்கள் கடவுளுடைய பொறுமையிலிலிருந்து பயனடைந்து வருகிறார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய பரலோக அரசாங்கத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தங்கள் ஆசையில் அவர்கள் ஒன்றுபட்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ராஜ்ய மன்றங்களில் கூடிவரும் போது, பைபிள் நியமங்களைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவது எத்தனை மேலானது என்பதை கற்றுக்கொள்கிறார்கள். கடவுள் மனித அரசாங்கங்களை செயலாற்றும்படியாக பொறுமையோடு அனுமதிக்கும் வரையாக அவர்கள் தங்களை அதற்குக் கீழ்ப்படுத்தினாலும், இந்த உலகினுடைய பிரிவினை உண்டாக்கும் அரசியலில் பங்கு கொள்வதில்லை.—மத்தேயு 22:21; ரோமர் 13:1–5.
இத்தனை அநேகர் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட ஒத்துழைப்பு, அவரை நேசிக்க கற்றுக்கொண்டு அவரை சேவிக்க விரும்புகிற, சுயாதீனமுள்ள மக்களின் மத்தியில் ஒத்திசைவைக் கொண்டுவரக்கூடியவராக யெகோவாவை நியாயநிரூபணம் செய்கிறது. இயேசுதாமே ஆரம்பித்து வைத்த, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் இந்தப் பிரசங்க வேலையை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் போது இவர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இயேசு இவ்வாறு சொல்லும் போது, இந்த வேலையின் உச்சக்கட்டத்தை முன்னுரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
இன்னும் நீண்ட காலம் இல்லை!
கடவுளுடைய நீதியுள்ள அரசாங்கம், பூமியின் அன்றாட ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன என்பதைக் காணக்கூடிய அத்தாட்சி நிரூபிக்கிறது. இந்த நூற்றாண்டின் போது நாம் பார்த்திருக்கும் மனித அரசாங்கங்களுடைய தோல்வியின் பயங்கர விளைவுகளை வருணித்தப் பிறகு, இயேசு சொன்னார்: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.”—லூக்கா 21:10, 11, 31.
வெகு சீக்கிரமாக, கடவுள் பொல்லாதவர்களை பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடுவார். சங்கீதக்காரனின் வார்த்தைகள் சொல்லர்த்தமான பொருத்தத்தைக் கொண்டிருக்கும்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள். . . . இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான். அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” (சங்கீதம் 37:9, 10) அக்கிரமம் இல்லாத ஓர் உலகை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? யார் காரியங்களை அப்போது நிர்வாகம் பண்ணுவார்? பைபிள் சொல்கிறது: “இதோ, ஒரு ராஜா [பரலோகங்களில் சிங்காசனத்திலேற்றப்பட்ட கிறிஸ்து இயேசு] நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் [பூமியின் மீது நியமிக்கப்படும் அவருடைய உண்மையுள்ள ஆட்கள்] நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.”—ஏசாயா 32:1, 17, 18.
இவ்விதமாக கடவுளுடைய பரலோக அரசாங்கம் மனிதனின் தவறுகளின் மோசமான பாதிப்புகளை துடைத்தழித்து அவரில் நம்பிக்கையாயிருப்பவர்களை ஒத்திசைவான ஒரு மனித சமுதாயமாக ஒழுங்குபடுத்தி அமைப்பார். இந்த ஒத்திசைவை விவரிப்பதாய் பைபிள் சொல்கிறது: “அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான் . . . என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை (யெகோவாவை, NW) அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:6–9.
கடவுள் பொறுமையைக் கையாளுவதால் என்னே மகத்தான விளைவு! ஆகவே கடவுள் வெகு நீண்டகாலமாக காத்திருந்துவிட்டார் என்பதாக குறைகூறுவதற்குப் பதிலாக, அவருடைய ராஜ்யத்துக்கு உங்களை கீழ்ப்படுத்துவதற்கு அவருடைய பொறுமையை ஏன் அனுகூலப்படுத்திக் கொள்ளக்கூடாது? பைபிளிலிலிருந்து அவருடைய தராதரங்கள் என்ன என்பதைக் கற்றுக்கொண்டு அவைகளைப் பின்பற்றுங்கள். ஒத்திசைவோடு அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் மற்றவர்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள். அப்பொழுது, கடவுளுடைய பொறுமை உங்களுக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும். (w91 10/1)