வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கெனேசரேத்து—‘அதிசயமானது, அழகானது’
“கெனேசரேத்து ஏரி பக்கமாக, அதன் தனிச்சிறப்பு பண்புகளிலும் அதன் அழகிலும் அதிசயமாக, அதே பெயருடன் பரந்துகிடக்கிறது ஒரு தேசம். வளமான மண்ணின் காரணமாக, அங்கே விருத்தியாகாத தாவரமே கிடையாது. அங்கு வசிப்பவர்கள் அனைத்தையும் பயிர் செய்கிறார்கள்; காற்று அத்தனை மிதமானதாக இருப்பதால், மிகப் பலவிதமான இனங்களுக்கும் அது உகந்ததாயிருக்கிறது. . . . அதிக வியப்பூட்டும் வகையில் பல பழ வகைகளை அது விளைவிப்பது மட்டுமல்லாமல் அது தொடர்ந்து தேவையைப் பூர்த்தி செய்துகொண்டே இருக்கிறது. . . . அதிக உரமூட்டும் சக்தியுடன் கூடிய நீரூற்றினாலும் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சப்படுகிறது.”
சரித்திராசிரியர் ஜோசிஃபஸ், பொதுவாக கலிலேயா கடல் என்றறியப்படும் வடமேற்கு முனையிலுள்ள முக்கோண வடிவ சமவெளியை இவ்வாறே வருணித்தார். மேலே காணப்படும் புகைப்படம், கலிலேயாவில் மிக அதிக செழிப்பாக இருந்த இந்தச் சமவெளி எத்தனை விளைச்சல் வளமிக்கதாய் இருந்தது என்பதை கற்பனை செய்ய உங்களுக்கு உதவக்கூடும்.a பூர்வக் காலங்களில் இந்தப் பகுதி அத்தனை முக்கியமானதாக இருந்தபடியால், சுவிசேஷ எழுத்தாளனாகிய லூக்கா பக்கத்திலுள்ள உப்பற்ற நீர்க் கடலை “கெனேசரேத்துக் கடல்” என்றழைத்தார்.—லூக்கா 5:1.
இயேசு இந்தப் பகுதிக்கு வந்து அப்போஸ்தலர்களாக ஆன நான்கு மனிதர்களைக் கண்டதைப் பற்றி கூறுகையில் அவர் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார். இவர்கள் செழிப்பான மண்ணிருந்த இடத்துக்கு அப்பால் திராட்சை, வாதுமை, ஒலிவப் பழங்கள் மற்றும் அத்திப் பழங்களை பயிர் செய்துகொண்டிருந்த விவசாயிகளா? இல்லை. இப்படிப்பட்ட பயிர்கள் கெனேசரேத்து சமவெளியில் மிகுந்திருந்தன, ஆனால் இந்த மனிதர்கள் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஏன் அங்கிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எளிதாகவே இருக்கிறது.
சமவெளியினூடாக பாய்ந்து வந்த நீரோட்டம் மீன்களுக்கு விருந்தாக இருக்கக்கூடிய தாவர வளர்ச்சியைச் சுமந்து வந்தன. ஆகவே தண்ணீர்கள் பல்வகைப்பட்ட மீன்களால் நிறைந்திருந்தன. இது பெரிய அளவு மீன் தொழிலுக்கு வழிசெய்தது. மீன்பிடிக்கிறவனாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபையும் யோவானையும் போலவே பேதுருவும் அந்திரேயாவும் அங்கு மீன் வியாபாரிகளாக இருந்தனர்.—மத்தேயு 4:18-22; லூக்கா 5:2-11.
அநேகமாக படவிலிருந்தவாறே வலையைப் பரப்புவதன் மூலம் மீன் பிடிக்கப்பட்டது. இயேசு அவர்களை அணுகிய போது பேதுருவும் அந்திரேயாவும் அதைத்தான் செய்து கொண்டிருந்தனர், ஒரு நீளமான பாரவலை அல்லது வலை ஓர் அரை வட்டத்தில் பரப்பப்பட்டது. மரத்தாலான மிதவை மேற்பரப்பை தாங்கியிருக்க, அடிபரப்பு முழுவதுமாக காணப்பட்ட எடைக்கற்கள் வலையை, கடலின் அடிப்பரப்பில் விரிந்து கிடக்கும்படிச் செய்தது. இப்படிப்பட்ட ஒரு வலையில் எண்ணிறந்த மீன்களை பிடிக்க முடியும். பின்னர் கரையில் கொண்டு அவற்றை கொட்டும்படிக்கு, அது படகிற்குள் மெல்ல இழுக்கப்பட்டு அல்லது ஆழமில்லாத தண்ணீருக்குள் இழுத்து வரப்படுகிறது. உணவுக்கு உகந்த மீன் ஏற்கத்தகாத மீன்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. லூக்கா 5:4-7 மற்றும் யோவான் 21:6-11-லுள்ள துல்லியமான விவரங்களை கவனியுங்கள். இயேசு வலையைப் பற்றிய தம்முடைய உவமையில் மீன்பிடிக்கும் இந்த முறையையே குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? (மத்தேயு 13:47, 48) மேலுமாக மத்தேயு 4:21, பாறைகளில் சிக்கியோ அல்லது மீன்களினாலோ கிழிந்து போகும் வலைகளைப் பழுதுபார்ப்பதில் மீனவர்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்ததை உயர்த்திக் காண்பிக்கிறது.
இந்தக் கரையோரமாக நீங்கள் பிரயாணம் செய்தீர்களானால், இயேசுவின் ஊழியக்காலத்தின் போது ஓரிரண்டு சம்பவங்கள் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இடங்களை நீங்கள் காண்பீர்கள். பாரம்பரியத்தின் பிரகாரம், இங்குள்ள ஒரு பச்சை நிற குன்றின் மீதிருந்து தானே இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தார். சுவிசேஷ பதிவுகளோடு இந்த இடம் முரண்பட்டு இல்லை, ஏனென்றால் இயேசு அந்தப் பிரசங்கத்தைக் கொடுக்கையில் கெனேசரேத்து சமவெளியின் அருகாமையில்தானே இருந்தார்.—மத்தேயு 5:1-7:29; லூக்கா 6:17-7:1.
நம்பத்தக்கது என்பதாக உரிமைபாராட்டப்படும் மற்றொரு இடம் பைபிள்பூர்வ உண்மைகளோடு ஒத்தில்லை. ஏழு அப்பங்களையும் ஒரு சில மீன்களையும் கொண்டு 4,000 பேரை இயேசு போஷித்த அந்த இடத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் ஒரு சர்ச்சை நீங்கள் காண்பீர்கள். (மத்தேயு 15:32-38; மாற்கு 8:1-9) மாற்குவின் பதிவு இது நடந்த இடம் கெனேசரேத்து சமவெளி என்று சொல்வதற்குப் பதிலாக, கடலுக்கு குறுக்காக பதினொரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த “தெக்கப்போலியின் எல்லைகளைப்” பற்றி அங்கு பேசுகிறது.—மாற்கு 7:31.
இந்த அற்புதத்தை நடப்பித்தப் பிறகு, மத்தேயுவும் மாற்குவும், இயேசு படகில் ஏறி மக்தலா அல்லது தல்மனூத்தாவுக்குப் பிரயாணப்பட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். (மத்தேயு 15:39; மாற்கு 8:10) கல்விமான்கள் இப்பகுதியைத் திபேரியா பக்கமாக கெனேசரேத்து சமவெளியின் தெற்கேயுள்ள மக்தாலோடு தொடர்புபடுத்துகிறார்கள். மக்மில்லன் பைபிள் நிலப்படம்-ன் பிரகாரம், மக்தால், “மீனை-பதப்படுத்திப் பாதுகாக்கும் தொழிலுக்குப் பிரசித்திப் பெற்றிருந்தது.” ஏரியின் இப்பகுதியிலுள்ள ஏராளமான மீன்கள் நிச்சயமாகவே இப்படிப்பட்ட ஒரு தொழிலை பயனுள்ளதாயும் ஆதாயம் மிகுந்ததாயும் ஆக்கமுடியும்.
1985/86-ல் ஏற்பட்ட ஒரு வறட்சி, கலிலேயா கடலின் நீர் மட்டத்தை குறைத்துவிட்டதால் ஏரியின் அடிபரப்பு வெளியில் தெரிந்தது அக்கறையூட்டுவதாய் இருந்தது. கெனேசரேத்து சமவெளி அருகே இரண்டு மனிதர்கள் பண்டைய காலத்தைச் சேர்ந்த ஒரு படகின் உடைந்தப் பாகங்களை கண்டனர். புதைப்பொருள் ஆய்வாளர்கள், இயேசு கெனேசரேத்து ஏரியையும் சமவெளியையும் விஜயம் செய்த அந்தக் காலத்திற்குரிய இந்த மரத்தாலான மீன்பிடிக்கும் படகை கண்டெடுக்கக்கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். (w92 1/1)
[அடிக்குறிப்புகள்]
a 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியில் பெரிய வண்ண புகைப்படத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.