கடவுளைச் சேவிப்பதில் நான் திருப்தியைக் கண்டடைந்தேன்
ஜாஷ்வா டாங்வானா கூறியபடி
நான் 1942-ல் மிகவும் குழப்பமடைந்தவனாய் இருந்தேன். செவந்த்-டே அட்வென்டிஸ்ட்களின் பிரசுரங்களையும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களையும் படித்துக்கொண்டிருந்தேன். பண்டைய இஸ்ரவேலரைப் போலவே, நான் ‘இரு நினைவுகளால் குந்திக்குந்தி நடந்துகொண்டிருந்தேன்.’—1 இராஜாக்கள் 18:21.
செவந்த்-டே அட்வென்டிஸ்ட்டினர் “வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி” என்ற அச்சடிக்கப்பட்ட விரிவுரைகளை எனக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதை நான் அனுபவித்துக் களித்துக்கொண்டிருந்தேன்; என்னுடைய எல்லா தேர்வுகளிலும் நான் வெற்றிபெற்றால் ஓர் அழகான சான்றிதழைத் தருவதாக அவர்கள் வாக்களித்தனர். “வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி” மற்றும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்கள் இரண்டுமே தென் ஆப்பிரிக்க நகரமாகிய கேப் டெளனிலிருந்து அனுப்பப்பட்டன என்பதை நான் கவனித்தேன். ‘இந்த அமைப்புகள் ஒன்றையொன்று அறிந்திருக்கின்றனவா? அவர்களுடைய போதனைகள் ஒத்துப்போகிறதா? இல்லை என்றால், யாருடையது சரியானது?’ என்று நான் வியந்தேன்.
இந்தக் காரியத்தை முடிவுசெய்ய, ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒரேவிதமான கடிதங்களை அனுப்பினேன். உதாரணமாக, உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு, “நீங்கள் ‘வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி,’ என்பதுடன் தொடர்புடைய மக்களை அறிந்திருக்கிறீர்களா, அறிந்திருந்தால், அவர்களுடைய போதனைகளைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டு எழுதினேன். சிறிது காலத்தில், நான் இரண்டு தொகுதிகளிடமிருந்தும் பதில்களைப் பெற்றேன். உவாட்ச் டவர் சொஸையிட்டியிலிருந்து வந்த கடிதம், அவர்கள் “வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி”யைப்பற்றி அறிந்திருப்பதாகவும், ஆனால் திருத்துவம், மாம்சத்தில் கிறிஸ்து பூமிக்குத் திரும்பிவருதல் போன்ற அதன் போதகங்கள் வேதப்பூர்வமற்றது என்பதாக விவரித்தது. இந்தக் கோட்பாடுகள் தவறானதென நிரூபிக்க அவர்களுடைய கடிதம் வேதவசனங்களைக் கொண்டிருந்தது.—யோவான் 14:19, 28.
“வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி” வெறுமனே அவர்கள் “உவாட்ச் டவர் மக்களை” அறிந்திருப்பதாகவும், ஆனால் அவர்களுடைய போதனைகளுடன் அவர்கள் ஒத்துச்செல்வதில்லை எனவும் பதிலளித்தது. எந்தக் காரணமும் கொடுக்கப்படவில்லை. ஆகவே யெகோவாவின் சாட்சிகளின் சட்டப்பூர்வ நிறுவனமாக பயன்படுத்தப்படும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் ஆதரவாக நான் தீர்மானித்தேன். இன்று, 50 வருடங்கள் சாட்சிகளுடன் தொடர்பு கொண்டபின், நான் சரியான தீர்மானத்தைச் செய்ததற்காக எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்!
மத பின்னணி
தென் ஆப்பிரிக்க நகரமாகிய பீட்டர்ஸ்பர்க்கின் கிழக்கே உள்ள மக்கன்யா என்ற ஒரு நாட்டுப்புற பகுதியில், 1912-ல், நான் பிறந்தேன். அப்போது மக்கன்யா ஆங்கிலிக்கன் சர்ச்சின் மத ஆதிக்கத்தின்கீழ் இருந்ததால், நான் அந்தச் சர்ச்சின் அங்கத்தினனானேன். நான் பத்து வயதாய் இருந்தபோது, எங்கள் குடும்பம் லுத்தரன் பெர்லின் மிஷன் சர்ச்சால் ஆதிக்கம் செய்யப்பட்ட ஒரு பகுதிக்குச் சென்றது; என் பெற்றோர் அந்தச் சர்ச்சை சேர்ந்துகொண்டனர். சீக்கிரத்தில் நான் நற்கருணை ஆராதனைக்கும், ஒரு துண்டு அப்பத்தை எடுக்கவும், திராட்சரசத்தை ஒருதடவை உறிஞ்சி அருந்தவும் தகுதிபெற்றேன், ஆனால் அது என்னுடைய ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்யவில்லை.
எட்டு வருட பள்ளிபடிப்பை முடித்தபின், என்னுடைய தகப்பனால் கீல்னெர்டன் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டேன்; 1935-ல் ஆசிரியருக்கான மூன்றுவருட பயிற்சி பெற்ற சான்றிதழைப் பெற்றேன். நான் சேர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களில் ஒருவர், ஓர் இளம் பெண்ணான காரெலின். நாங்கள் மணம் புரிந்துகொண்டோம்; பின்னர் காரெலின் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள்; அவளுக்கு நாங்கள் தாமாரிஸ் என்று பெயரிட்டோம். சில வருடங்களுக்குப் பின்னர், மாமாட்சே என்ற நாட்டுப்புற கிராமத்தின் சேத்லாலே பள்ளியில் நான் தலைமை ஆசிரியரானேன். அந்தப் பள்ளி டச் ரீஃபார்ம்ட் சர்ச்சால் நடத்தப்பட்டதால், நாங்கள் அந்தச் சர்ச்சைச் சேர்ந்து அதன் ஆராதனைகளுக்கு ஒழுங்காகச் சென்றோம். அது எல்லாராலும் பின்பற்றப்பட்ட பாணியாக இருந்ததால் அவ்வாறு செய்தோமேயல்லாமல், அது எனக்குத் திருப்தியைக் கொண்டுவரவில்லை.
ஒரு திருப்பம்
ஒரு ஞாயிற்றுக்கிழமை, 1942-ல், நாங்கள் சர்ச்சில் பாட்டுகளைப் பழகிக்கொண்டிருந்தோம்; அப்போது ஓர் இளம் வெள்ளை வாலிபன், உவாட்ச் டவர் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட மூன்று (ஆங்கில) புத்தகங்களுடன்—சிருஷ்டிப்பு, நியாயநிரூபணம், தயாரிப்பு—தோன்றினார். என்னுடைய நூலக நிலையடுக்கில் அவை அழகாகக் காட்சியளிக்கும் என்று நான் நினைத்ததால் அவற்றை மூன்று ஷில்லிங்குகளுக்கு வாங்கினேன். பின்னர், அந்த மனிதனாகிய டீனீ பேசடென்ஹோட் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், அந்தப் பகுதியில் ஒரே ஒருவர் என்றும் அறிந்தேன். டீனீயின் அடுத்த சந்திப்பில், அவர் ஓர் இசைப்பெட்டியைக் கொண்டுவந்து நீதிபதி ரதர்ஃபோர்ட்டின் சில பேச்சுகளைப் போட்டு கவனிக்க வைத்தார். “கண்ணியும் மோசடியும்,” என்ற பேச்சை நான் மிகவும் அனுபவித்தேன், ஆனால் காரெலினும் எங்களுடன் தங்கியிருந்த என் தங்கை பிரிஸில்லாவும் அதை விரும்பவில்லை. டீனீயின் மூன்றாவது சந்திப்பில், நான் மற்ற நண்பர்களுக்கு அந்த ரெக்கார்ட்டுகளைப் போட்டுக்காண்பிப்பதற்காக அந்த இசைப்பெட்டியை என்னிடம் கொடுத்தார்.
ஒரு நாள் நான் சிருஷ்டிப்பு என்ற புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியபோது, “மரித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற அதிகாரத்தைப் பார்த்தேன். பிரிந்துபோன ஆத்துமாக்கள் பரலோகத்தில் அனுபவிக்கிற சந்தோஷங்களைக்குறித்து படிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் நான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, மரித்தவர்கள் அவர்களுடைய பிரேதக்குழிகளில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்தப் புத்தகம் குறிப்பிட்டது. அதற்கு ஆதாரமாக பிரசங்கி 9:5, 10 போன்ற பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. இன்னொரு அதிகாரம், “மரித்தோரை எழுப்புதல்,” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது; மரித்தவர்கள் ஒன்றும் அறியாதவர்களாய், ஓர் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்பதற்கு யோவான் 5:28, 29 அத்தாட்சியாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. இது அர்த்தமுடையதாக இருந்தது. திருப்தியளிப்பதாய் இருந்தது.
அந்தச் சமயத்தில்தானே, 1942-ல், “வாய்ஸ் ஆஃப் ப்ராஃபஸி”யோடு என்னுடைய உறவை நான் துண்டித்துக்கொண்டு, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களிலிருந்து படிப்பவற்றை மற்றவர்களுக்குச் சொல்லத் துவங்கினேன். முதலில் பிரதிபலித்தவர்களில் ஒருவர், கீல்னெர்டன் பயிற்சி நிறுவனத்தில் என்னுடைய வகுப்பில் ஒருவராக இருந்த என் நண்பன் ஜூடா லெட்ஸ்வாலா.
பீட்டர்ஸ்பர்க்கில் ஆப்பிரிக்க சாட்சிகளின் ஓர் அசெம்பளிக்காக ஜூடாவும் நானும் 51 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றோம். அதற்குப்பின், என்னுடைய அயலாருக்கு ராஜ்ய செய்தியை அளிப்பதற்கு எனக்கு உதவி செய்வதற்காக பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து நண்பர்கள் மாமாட்சேவரைக்கும் வந்தார்கள். காலப்போக்கில், பீட்டர்ஸ்பர்க்கில் இன்னொரு அசெம்பிளியில், டிசம்பர் 1944-ல், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக நான் முழுக்காட்டப்பட்டேன்.
என்னுடைய குடும்பமும் மற்றவர்களும் பிரதிபலிக்கின்றனர்
காரெலின், பிரிஸில்லா, என் மகள் தாமாரிஸ் ஆகியோர் தொடர்ந்து டச் ரீஃபார்ம்ட் சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தனர். பின்னர் பெரிய துன்பம் தாக்கியது. காரெலின் எங்களுடைய இரண்டாம் குழந்தையைப் பெற்றாள்—பார்வைக்கு ஆரோக்கியமான அந்த ஆண் குழந்தைக்கு சாமுயல் என்று பெயரிட்டோம். ஆனால் திடீரென்று அவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். காரெலினின் சர்ச் நண்பர்கள் எந்த ஆறுதலும் அளிக்கவில்லை; பரலோகத்தில் தன்னுடன் இருக்கும்படி கடவுள் எங்கள் மகனை விரும்பினார் என்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். துயரத்தில், காரெலின் கேட்டுக்கொண்டே இருந்தாள்: “கடவுள் ஏன் எங்கள் மகனை எடுத்துக்கொள்ள வேண்டும்?”
எங்கள் பெருந்துயரமான செய்தி பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள சாட்சிகளைச் சென்றெட்டியதும், அவர்கள் வந்து, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் உண்மையான ஆறுதலை அளித்தனர். காரெலின் பின்னர் கூறினாள்: “மரணத்தின் காரணம், இறந்தவர்களின் நிலை, உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஆகியவற்றைப்பற்றி பைபிள் என்ன சொன்னதோ அது அர்த்தமுடையதாய் இருந்தது, நான் பெரிதும் ஆறுதலடைந்தேன். நான் புதிய உலகத்திலிருக்கவும் என் மகனைப் பிரேதக்குழியிலிருந்து திரும்ப பெறவும் விரும்பினேன்.”
காரெலின் சர்ச்சுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள்; 1946-ல் அவள், பிரிஸில்லா, ஜூடா ஆகியோர் முழுக்காட்டப்பட்டனர். ஜூடா, தன்னுடைய முழுக்காட்டுதலுக்குப்பின், மாமாத்லோலே என்ற நாட்டுப்புற பகுதியில் பிரசங்க வேலையைத் துவங்குவதற்காகச் சென்று, 1991-ல் அவருடைய மரணம்வரையாக உண்மையுள்ளவராய் நிலைத்திருந்தார்.
ஜூடா சென்றபின், பாய்னீ என்றழைக்கப்பட்ட எங்கள் சபையைக் கவனிப்பதற்கு ஆணாக நான் ஒருவனே இருந்தேன். பின்னர் கிரேஸ்லீ மாத்லாடையீ எங்கள் பிராந்தியத்திற்கு வந்தார்; காலப்போக்கில் அவர் பிரிஸில்லாவை மணந்து கொண்டார். உள்ளூர் ஆப்பிரிக்க மொழியாகிய செபிடியில் பொதுப் பேச்சுகளை ஒவ்வொரு வாரமும் கிரேஸ்லீயும் நானும் மாறிமாறி கொடுப்போம். மக்களுக்குப் பிரசுரங்களைக் கிடைக்க செய்வதற்காக, சங்கம் என்னை செபிடி மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னது. இந்தப் பிரசுரங்களிலிருந்து மக்கள் பயனடைவதைக் காண்பது எனக்கு அதிக திருப்தி அளித்தது.
எங்களுடைய பொதுக் கூட்ட ஏற்பாட்டை விளம்பரப்படுத்துவதற்காக, எங்கள் பிராந்தியமெங்கும் பைபிள் பேச்சுகளைக் கேட்கச்செய்யும்படியாக ஒரு பெரிய ஒலிபெருக்கியுடன்கூடிய ஓர் இசைப்பெட்டியை வாங்கினோம். இந்தக் கனமான கருவியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டுச்செல்வதற்காக கழுதைகளால் இழுக்கப்பட்ட ஒரு வண்டியை நாங்கள் கடன்வாங்கினோம். அதன் விளைவாக, எங்கள் அயலகத்தார் எங்களுக்கு “கழுதைச் சர்ச்சைச் சேர்ந்த மக்கள்” என்று கேலிப்பெயரிட்டனர்.
இதற்கிடையில், எங்களுடைய சிறிய சபை வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. காலப்போக்கில், என்னுடைய இரண்டு அக்காமாரும் அவர்களுடைய கணவன்களும் சாட்சிகளாக மாறி தங்கள் மரணம் வரையாக உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தனர். இதோடு, பாய்னீ சபையிலிருந்து (இப்போது பாகாடீபா என்றழைக்கப்படுகிறது) அநேகர் முழுநேர சுவிசேஷ வேலையைத் தேர்ந்தெடுத்தனர்; அவர்களில் அநேகர் இன்று வரையாக அந்தச் சேவையில் இருக்கின்றனர். இப்போது, ஆங்காங்கே சிதறியிருக்கும் நாட்டுப்புற கிராமங்களின் இந்தப் பெரிய பரப்பில் இரண்டு சபைகள் இருக்கின்றன; மொத்தமாக 70-ற்கும் மேலான பிரஸ்தாபிகள் பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.
ஒரு புதிய தொழில்
நான் 1949-ல், பள்ளியில் கற்பிப்பதை நிறுத்திவிட்டு ஓர் ஒழுங்கான பயனியரானேன். டிரான்ஸ்வாலிலுள்ள வால்வாடர் என்ற இடத்தைச் சுற்றியுள்ள வெள்ளையரின் தோட்டங்களில் வாழும் கறுப்பர்களான தோட்டத் தொழிலாளிகளைச் சந்திப்பதே என்னுடைய முதல் நியமிப்பாக இருந்தது. சில தோட்ட உரிமையாளர்கள் தற்போது ஏற்கப்பட்டிருக்கிற இனஒதுக்கீட்டுக் கொள்கைகளை ஆதரித்து, கறுப்பர்கள் தாங்கள் வெள்ளையர்களைவிட தாழ்த்தப்பட்டவர்களாக எண்ணப்படும் நிலையை அங்கீகரித்து வெள்ளை எஜமான்களை சேவிக்க வேண்டும் என்பதில் உறுதிபூண்டவர்களாய் இருந்தனர். ஆகவே நான் கறுப்பு தொழிலாளிகளிடம் பிரசங்கித்தபோது, அவர்கள் கீழ்ப்படிந்திராதபடி நான் பிரசிங்கிப்பதாக சில வெள்ளையர்கள் தப்பெண்ணம் கொண்டனர். சிலர் என்னை ஒரு கம்யூனிஸ கொள்கையினன் என்றும்கூட குற்றஞ்சாட்டி என்னை சுடப்போவதாக அச்சுறுத்தினர்.
நான் இந்த நிலைமையை உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளைஅலுவலகத்திற்கு அறிவித்தேன்; ஒரு நாட்டுப்புற பகுதியாகிய டாவெல்ஸ்க்லூஃப் என்ற மற்றொரு நியமிப்பிற்கு மாற்றலானேன். இந்தச் சமயத்தில் என்னுடைய மனைவியும் தன்னுடைய ஆசிரியை வேலையை விட்டுவிட்டு, என்னுடன் பயனியர் சேவையில் சேர்ந்துகொண்டாள். ஒரு மதியம், 1950-ல், நாங்கள் வெளி ஊழியத்திலிருந்து திரும்பியபோது சங்கத்திலிருந்து வந்திருந்த ஒரு பெரிய கடித கவரைக் கண்டோம். எங்களுக்கு ஆச்சரியமளிக்கும்விதத்தில், நான் ஒரு பயணக் கண்காணியாகும்படி பயிற்சியைப் பெறுவதற்கான ஓர் அழைப்பை அது கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபைகளை விஜயம் செய்தோம்; பின்னர் 1953-ல் தென் ஆப்பிரிக்காவின் நடுவிலுள்ள நிலத்தால் சூழப்பட்ட நாடாகிய லெசோதோவிற்குச் செல்லும்படியான நியமனத்தைப் பெற்றோம்.
லெசோதோ மற்றும் போட்ஸ்வானாவில் ஊழியம்
நாங்கள் லெசோதோவில் ஊழியத்தை ஆரம்பித்தபோது, பெரும்பாலும் அந்நியர்கள் சடங்காச்சார கொலைக்கு குறியிலக்காக இருப்பார்கள் என்பதாக பல வதந்திகள் இருந்தன. என் மனைவியும் நானுமாக இருவருமே கவலையுற்றோம், ஆனால் சோதோ சகோதரர்களின் அன்பும் அவர்களுடைய உபசரிப்பும் விரைவில் அத்தகைய பயங்களைப் போக்குவதற்கு உதவியாக இருந்தது.
லெசோதோவின் மல்யூட்டீ மலைகளிலுள்ள சபைகளை சேவிப்பதற்காக, நான் விமானத்தில் செல்வேன்; நான் திரும்பி வரும்வரையாக பயனியர் சேவையைத் தொடர்வதற்காக என் மனைவியைத் தாழ்நிலத்தில் விட்டுச்செல்வேன். அந்த மலைகளில் காணாமற்போவதைத் தவிர்ப்பதற்காக நண்பர்கள் ஒரு சபையிலிருந்து மறுசபைக்கு எனக்குத் துணையாக வந்தனர்.
ஒருமுறை, நான் அடுத்த சபையைச் சென்றெட்டுவதற்கு, ஒரு குதிரைமீதேறி ஆரஞ் ஆற்றைக் கடக்கவேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. என்னுடைய குதிரை சாந்தமானது என்று எனக்கு உறுதிசெய்யப்பட்டாலும், தண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அடிக்கடி குதிரைகள் தங்கள் பாரங்களை அகற்ற முயலுகின்றன என்றும் எனக்கு எச்சரிக்கப்பட்டது. நான் ஒரு நல்ல சவாரி செய்பவனுமல்ல, நல்ல நீச்சலடிப்பவனும் அல்ல என்பதால் நான் கவலையுற்றேன். சீக்கிரத்தில் நாங்கள் அந்த ஆற்றில் இருந்தோம், தண்ணீர் சேணம் வரைக்கும் உயர்ந்தது. நான் மிகவும் பயந்ததால், கடிவாள வாரை விட்டுவிட்டு, குதிரையின் பிடரி மயிரைப் பற்றிக்கொண்டேன். ஆற்றின் அக்கரையைப் பத்திரமாகச் சென்றடைந்ததும் என்னே ஒரு நிம்மதி!
குதிரையில் சவாரி செய்ததால் என் உடல் மிகவும் வேதனை எடுத்ததால் என்னால் அன்றிரவு தூங்கவே முடியவில்லை. ஆனால் அத்தனை அசெளகரியமும் பயனுள்ளதாய் இருந்தது, ஏனென்றால் நண்பர்கள் அந்த விஜயத்தைப் பெரிதும் போற்றினார்கள். நான் வட்டார வேலையை லெசோதோவில் துவங்கியபோது, அங்குள்ள பிரஸ்தாபிகளின் உச்சநிலை 113. இன்று, அந்த எண்ணிக்கை 1,649-ஆக உயர்ந்திருக்கிறது.
அடுத்ததாக, 1956-ல் எங்களுடைய பிரசங்க நியமிப்பு, தற்போது போட்ஸ்வானா என்றழைக்கப்படும் பெச்சுயானாலாந்து காப்பாட்சிக்கு மாற்றப்பட்டது. போட்ஸ்வானா இதைவிட பெரிய நாடாக இருக்கிறது, எல்லா பிரஸ்தாபிகளையும் சென்றெட்டுவதற்கு அதிக நீண்ட தூரங்கள் பயணப்படவேண்டும். நாங்கள் ரயிலில் அல்லது திறந்த லாரியில் பிரயாணம் செய்தோம். அங்கு இருக்கைகள் இல்லை; ஆகையால் நாங்கள் எங்களுடைய சாமான்களுடன் தரையில் உட்கார வேண்டியதிருந்தது. பெரும்பாலும் நாங்கள் சேருமிடத்தை மிக அழுக்காகவும் சோர்வாகவும் போய் சேருவோம். நம் கிறிஸ்தவ சகோதரர்கள் எப்போதும் எங்களை வரவேற்றனர், அவர்களுடைய மகிழ்ச்சியான முகங்கள் எங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்தன.
அந்தச் சமயத்தில், போட்ஸ்வானாவில் நமது சங்கத்தின் பிரசுரங்களின்மேல் தடை விதிக்கப்பட்டிருந்ததால், நம்முடைய வீட்டுக்கு வீடு பிரசங்கம் எச்சரிப்புடனும் சங்கத்தின் பிரசுரங்கள் இல்லாமலும் செய்யப்பட்டது. ஒருமுறை மாபாஷாலாலே என்ற கிராமத்திற்கு அருகில் நாங்கள் வேலை செய்யும்போது, பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டோம். எங்களுடைய பாதுகாப்பிற்காக, நாங்கள் பைபிளிலிருந்து எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைக்குறித்து மத்தேயு 28:19, 20-ல் பதிவு செய்யப்பட்டபடி வாசித்தோம். மன்ற அதிகாரிகளில் சிலர் கவரப்பட்டபோதிலும், அந்தத் தலைவர் உள்ளூர் சாட்சிகள் அடிக்கப்படும்படி கட்டளையிட்டார். பின்னர், எங்களுக்கு ஆச்சரியமளிக்கும்விதத்தில், மதகுரு அந்தத் தலைவரிடம் எங்களிடம் தளர்வான முறையில் நடந்துகொண்டு எங்களை மன்னிக்கும்படியாகக் கெஞ்சினார். அந்தத் தலைவர் இதற்கு இசைந்தார், நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
துன்புறுத்தல் மற்றும் நம்முடைய பிரசுரங்களின்மீது தடையுத்தரவு இருந்தபோதிலும், ராஜ்ய வேலை தொடர்ந்து முன்னேறியது. நான் போட்ஸ்வானாவுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கு பிரஸ்தாபிகளின் உச்சநிலை 154. மூன்று வருடங்கள் கழித்து, தடையுத்தரவு நீக்கப்பட்டபின், இந்த எண்ணிக்கை 192-ஆக உயர்ந்திருக்கிறது. இன்று, அந்தத் தேசத்தில் 777 யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்துக்கொண்டு இருக்கின்றனர்.
போதித்தலும் மொழிபெயர்த்தலும்
சில காலத்திற்குப்பின், கிறிஸ்தவ மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளியின் போதனையாளராக நான் பயன்படுத்தப்பட்டேன். பின்னர் பயனியர் ஊழியப் பள்ளியின் போதனையாளராக இருக்கும் சிலாக்கியத்தையும் அனுபவித்தேன். குறிப்பிட்ட இடைவெளிகளில் என் மனைவியும் நானும் தென் ஆப்பிரிக்க கிளைஅலுவலகத்திலும் சேவித்தோம். அவ்விதமான சமயங்களில் நான் மொழிபெயர்ப்பில் உதவிசெய்தேன், காரெலின் சமையலறையில் வேலை செய்தாள்.
ஒரு நாள், 1969-ல், கிளைஅலுவலக கண்காணியான ஃபிரான்ஸ் மெலர், என்னை அணுகி, கூறினார்: “சகோதரர் டாங்வானா, நான் உங்களையும் உங்கள் மனைவியையும் என்னுடைய அலுவலகத்தில் சந்திக்க விரும்புகிறேன்.” லண்டனில் 1969-ல் நடக்கும் “பூமியில் சமாதானம்” என்ற மாநாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் நாங்களும் இருப்பதாக அவர் அங்கு விவரித்தார். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்திலுள்ள சகோதரர்களின் அன்பான உபசரிப்பை நாங்கள் அனுபவித்தோம்; அது உலகளாவிய சகோதரத்துவத்தின்மீதுள்ள எங்களுடைய போற்றுதலைப் பெரிதும் அதிகரித்தது.
கடந்த நான்கு பத்தாண்டுகளாக, முழு நேர சுவிசேஷகரான எங்கள் தொழிலில் காரெலின் ஓர் உண்மைதவறாத துணையாக இருந்திருக்கிறாள். நாங்கள் அநேக சந்தோஷங்களையும் சில துக்கங்களையும் சேர்ந்து பகிர்ந்திருக்கிறோம். நாங்கள் எங்களுடைய இரு குழந்தைகளை மரணத்தில் இழந்தபோதிலும், எங்கள் மகளாகிய தாமாரிஸ் ஒரு நல்ல சாட்சியாக வளர்ந்து, அவளும் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு வேலையில் பங்கெடுத்தாள்.
எங்கள் உடல்நலம், இனிமேலும் நாங்கள் பிரயாணவேலையில் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை; ஆகவே கடந்த சில வருடங்களாக, நாங்கள் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ஓர் ஆப்பிரிக்க நகராகிய செஷீகோ என்ற சபையில் விசேஷித்த பயனியர்களாக இருந்துகொண்டிருக்கிறோம். நான் நடத்தும் கண்காணியாக சேவிக்கிறேன். “[யெகோவாவின்] சமுகத்தில் பரிபூரண ஆனந்தம்” உண்டென்று பைபிள் குறிப்பிடுகிறது; நான் தென் ஆப்பிரிக்காவில் கடவுளைச் சேவிப்பதில் நிச்சயமாகவே சந்தோஷத்தையும் திருப்தியையும் கண்டடைந்திருக்கிறேன்.—சங்கீதம் 16:11.
[பக்கம் 26-ன் படம்]
தென் ஆப்பிரிக்காவிலுள்ள செஷீகோ நகரத்தில் சாட்சிகொடுத்தல்