ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“சாரி, இது ராங் நம்பர்”
பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க் என்ற இடத்தில் ஒரு ஏரியாவில் வசிக்கிறார்கள். அங்கு செக்யூரிட்டி போடப்பட்டிருப்பதால் யாரும் உள்ளே எளிதில் நுழைய முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் வாழும் ஆட்களிடம் லெஸ்லியும் கேரலைனும் மாறி மாறி தொலைபேசியில் சாட்சிகொடுத்து வந்தார்கள். வெகு சிலரே வீட்டிலிருந்தார்கள், அவர்களுக்கும் கிறிஸ்தவ செய்தியைக் கேட்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஆகவே ஒரு பெண்மணி பேசியபோது கேரலைனுக்கு உற்சாகமாக இருந்தது.
“நீங்கள் திருமதி. பீ—தானே?” என்று கேரலைன் கேட்டார்.
“இல்லை. நான் திருமதி ஜீ—, சாரி, இது ராங் நம்பர்” என்று மறுமுனையிலிருந்து கனிவான குரலில் பதில் வந்தது.
சிநேகப்பான்மையான குரலை கேட்டு கேரலைன் இவ்வாறு கூறினார்: “அப்படின்னா, நான் திருமதி பீ—-யிடம் என்ன சொல்ல விரும்பினேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.” அதன் பிறகு வரப்போகிற கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றி சொன்னார். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை வீட்டுக்கு போய் கொடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்த பின்பு, திருமதி ஜீ—, “ஆமாம், நீங்க எந்த மதத்தைச் சேர்ந்தவங்க?” என்று கேட்டார்கள்.
“நாங்க யெகோவாவின் சாட்சிகள்” என்று கேரலைன் பதில் சொன்னார்.
“ஓ, அந்த மதமா, மன்னிக்கவும்! எனக்கு உங்களைச் சந்திப்பதில் விருப்பமில்லை.”
“ஆனால் திருமதி ஜீ—, கிட்டத்தட்ட 20 நிமிஷமா ஒரு அருமையான நம்பிக்கையை பற்றி உங்ககிட்ட பேசினேன்; சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பைபிளிலிருந்து காட்டினேன். இந்தக் காரியங்களை கேட்டு நீங்க ரொம்ப சந்தோஷப்பட்டீங்க, அதவிட பூரிச்சுப்போனீங்கன்னு சொல்லணும். இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவும் விரும்பினீங்க. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி உண்மையிலேயே உங்களுக்கு என்னதான் தெரியும்? உங்களுக்கு ஏதாவது நோய் வந்துச்சுன்னா மெக்கானிக்கிடமா போவீங்க? யெகோவாவின் சாட்சிகள் என்ன நம்புகிறாங்கன்னு சொல்ல எனக்கு ஏன் நீங்க வாய்ப்பு தரக்கூடாது?” என்று தயவாக கேட்டுக்கொண்டார் கேரலைன்.
சிறிது நேர அமைதிக்குப்பின் பதில் வந்தது: “நீங்க சொல்றதும் நியாயந்தான். சரி வாங்க. ஆனால் நீங்க என்னை மாற்றவே முடியாது என்பதை ஞாபகம் வைச்சுக்கோங்க!”
“திருமதி ஜீ—, நான் விரும்பினாகூட என்னால ஒருபோதும் உங்கள மாற்ற முடியாது; யெகோவாவால் மட்டும்தான் அதை செய்ய முடியும்” என்று பதிலளித்தார் கேரலைன்.
நேரில் பார்த்து நல்லபடியாக சிற்றேட்டை கொடுத்தார், திருமதி ஜீ— (பெட்டி) மற்றொரு முறை சந்திப்பதற்கும் ஒப்புக்கொண்டார்கள். கேரலைன் மறுபடியும் சந்தித்தபோது திருமதி பெட்டி, யெகோவாவின் சாட்சிகளோடு தான் உரையாடியதை சாப்பாட்டு மேசையில் மற்ற பெண்களிடம் சொன்னதாகவும் “அவர்களிடம் போய் எப்படி பேசினாய்?” என்று கேட்டு அவர்கள் மிகவும் கோபப்பட்டதாகவும் சொன்னார்கள். “அவர்கள் இயேசுவை நம்புவதுகூட கிடையாது” என்று அங்கலாய்த்துக் கொண்டார்களாம்.
கேரலைன் உடனடியாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசியபோது சொன்ன ஒரு முக்கியமான குறிப்பை பெட்டிக்கு மீண்டும் ஞாபகப்படுத்தினார்.
“யார் ராஜாவாக இருப்பார்?” என்று கேரலைன் கேட்டார்.
“அதில் என்ன சந்தேகம், இயேசுதானே” என்று பெட்டி பதில் கூறினார்கள்.
“சரியாக சொன்னீர்கள்” என்றார் கேரலைன். அதன் பிறகு, கடவுளுடைய குமாரனே இயேசு என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புவதை தொடர்ந்து விளக்கினார். இயேசு திரித்துவத்தின் பாகமாக, கடவுளுக்கு சமமானவராக இல்லை என்றும் விளக்கினார்.—மாற்கு 13:32; லூக்கா 22:42; யோவான் 14:28.
பெட்டிக்கு சந்தோஷமான, நம்பிக்கையான மனநிலை இருந்தது உண்மைதான்; ஆனால் அவர்களுடைய உடல்நிலை மோசமாக இருந்த விஷயம் சில சந்திப்புகளுக்குப்பின் தெரிய வந்தது. அவர்களுக்கு கேன்சர் வந்திருந்தது, ஆகவே மரண பயம் வாட்டியெடுத்தது. “பல வருடங்களுக்கு முன்னால் இதெல்லாம் எனக்கு தெரிந்திருந்தால், உங்களுடைய நம்பிக்கை எனக்கும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்” என்று அவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மரணம் ஆழ்ந்த உறக்கத்துக்கு சமம் என்றும் உயிர்த்தெழுதலின்போது ஒருவர் அதிலிருந்து எழுந்துவர முடியும் என்றும் விளக்குகிற வேத வசனங்களை எடுத்துக்காட்டி கேரலைன் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். (யோவான் 11:11, 25) இது பெட்டிக்கு மிகவும் உற்சாகமளித்தது. அவர்கள் இப்போது தவறாமல் பைபிள் படிப்பை அனுபவித்து மகிழுகிறார்கள். ஆனால் மோசமாகிவரும் உடல்நிலையின் காரணமாக ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு வர முடியாததுதான் ஒரு குறை.
கேரலைன் கூறுவதை கவனியுங்கள்: “இந்த ஊழியத்தை தேவதூதர்கள் வழிநடத்துகின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை. ‘ராங் நம்பரை’ சுழற்றியல்லவா பெட்டியை தற்செயலாக சந்தித்தேன்! அதோடு அவர்களுக்கு என்ன வயது தெரியுமா?—89!”—வெளிப்படுத்துதல் 14:6.