“நாங்கள் பேச்சுத்தொடர்பு கொள்ளவே முடியாதெனத் தோன்றுகிறது!”
ஒரு வழக்கறிஞராகிய மைக்கல், ஓர் ஊக்கமான பேச்சுத்தொடர்பாளராக இருக்கவேண்டியவர். அவருடைய வேலை அதைத் தேவைப்படுத்தியது. ஆனால், அவர் வீட்டிற்குத் தன் மனைவி ஏட்ரியனிடம் வந்தபோது, அவருடைய பேச்சுத்தொடர்பு திறமைகள் மறைந்துவிடுவதாகத் தோன்றிற்று என்று திருமணமாகி 16 வருடங்களுக்குப்பின், அவர் கட்டாயமாக ஒத்துக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. “இடக்குப் பேச்சுகள், குற்றங்காணுதல், சிறு குத்தல் பேச்சுகள்,” இவ்வாறு மைக்கல் நினைவுகூருகிறார், “ஏட்ரியனும் நானும் எப்போதும் ஒருவரையொருவர் எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்; அது எங்களை முழுவதும் சோர்வடையச் செய்யப்போகிறது என்று நான் நினைத்தேன். அதிருப்தி மற்றும் கோபமூட்டுதலின் தொடர்ச்சியான வார்த்தைகளின் தாக்குதலே திருமணமா என்று நான் யோசித்தேன். நாங்கள் சேர்ந்து வாழப்போகும் மீதமுள்ள நாளெல்லாம் அதுவே எங்கள் பங்காக இருக்கும் என்றால், நான் விடுபட விரும்பினேன்—விளையாட்டல்ல. அந்த வகையான நிலையான கோபமூட்டுதலையும் அழுத்தத்தையும் 20, 30, 40 வருடங்களுக்கு என்னால் எதிர்ப்படவே முடியாது.”
இது போன்ற உணர்ச்சிகள் மைக்கலுக்கும் ஏட்ரியனுக்கும் மட்டும் தனிப்பட்டவையாக எவ்விதத்திலும் இல்லை. சண்டையிடுதலுக்கும் சண்டைநிறுத்தங்களுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் உறவையுடைய அநேக தம்பதிகளுக்கு அவை நிஜமானவை. மிக எளிய சம்பாஷணைகள் சொற்போராக வெடித்துவிடுகின்றன. சொல்லப்படாத காரியங்களை அவர்கள் “கேட்கின்றனர்.” அவர்கள் அர்த்தப்படுத்தாத காரியங்களைப் பேசுகின்றனர். அவர்கள் தாக்கி, குற்றஞ்சாட்டி, பின்னர் வன்மங்கொண்டிருக்கும் அமைதிக்குள் பின்னடைகின்றனர். அவர்கள் பிரிவதும் இல்லை, ஆனால் உண்மையில் “ஒரே மாம்சமாய்” இருப்பதும் இல்லை. (ஆதியாகமம் 2:24) அந்த உறவில் இக்கட்டான நிலை உருவாகிறது. பின்நோக்கிச் செல்வது பிரிவதை அர்த்தப்படுத்தும்; முன்னோக்கிச் செல்லுதல் வேறுபாடுகளை நேருக்குநேர் எதிர்ப்படுவதை அர்த்தப்படுத்தும். எந்தத் தெரிவின் வேதனையையும் தவிர்ப்பதற்கு, இந்தத் தம்பதிகள் ஒரு பாதுகாப்பான உணர்ச்சி தொலைவை ஒருவரிலிருந்து ஒருவர் வைத்துக்கொள்ளும்படி தங்களுக்குள்ளேயே அமைந்தடங்குகின்றனர்.
அத்தகைய தம்பதிகள், தங்களுடைய திருமணத்தில் ‘திறம்பட்ட ஆலோசனையைப் பெறுவது’ அவசியம். (நீதிமொழிகள் 1:5, NW) இந்த ஆலோசனை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் கிடைக்கிறது. தீமோத்தேயுவுக்கு எழுதிய பவுலின் இரண்டாம் கடிதம், பைபிள் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் . . . பிரயோஜனமுள்ளது” என்று உறுதி செய்கிறது. (2 தீமோத்தேயு 3:16) நாம் பார்க்கப் போகிறபடி, திருமண உறவில் பேச்சுத்தொடர்பின் முறிவைக் குணப்படுத்துவதிலும் இது உண்மையாக இருக்கிறது.