ஒரு தேவாட்சியில் மேய்ப்பர்களும் செம்மறியாடுகளும்
“யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர்தாமே நம்மைப் பாதுகாப்பார்.”—ஏசாயா 33:22, NW.
1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இன்றைய கிறிஸ்தவர்களும் ஒரு தேவாட்சி என்று எவ்வாறு சொல்லப்படலாம்?
தேவாட்சி என்றால் கடவுள் மூலமாக ஓர் ஆட்சி. நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய மற்றும் சிறிய தீர்மானங்களில் யெகோவாவின் அதிகாரத்தை ஏற்று, அவருடைய வழிநடத்துதல்களையும் போதனைகளையும் பின்பற்றுவதை அது உட்படுத்துகிறது. முதல் நூற்றாண்டு சபை ஓர் உண்மையான தேவாட்சியாக இருந்தது. அப்போதிருந்த கிறிஸ்தவர்களால் நேர்மையாகப் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா.” (ஏசாயா 33:22, NW) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரை அதன் மையமாகக் கொண்டு, இன்று யெகோவா தேவனுடைய அமைப்பு அதேவிதமாகவே ஒரு நிஜமான தேவாட்சியாக இருக்கிறது.
இன்று நாம் எந்த வழிகளில் தேவாட்சிக்குரியவர்களாக இருக்கிறோம்?
2. யெகோவாவின் ஆட்சிக்கு யெகோவாவின் சாட்சிகள் கீழ்ப்பட்டிருக்கும் ஒரு வழி என்ன?
2 யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு ஒரு தேவாட்சி என்று நாம் எவ்வாறு சொல்லலாம்? ஏனென்றால், அதைச் சேர்ந்தவர்கள் உண்மையில் யெகோவாவின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் யெகோவா, அரசராக சிங்காசனத்தில் அமர்த்தியிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, முடிவு காலத்தில், மிகப் பெரிய தேவாட்சியாளரிடமிருந்து வந்த இந்த நேரடியான கட்டளை இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டது: “பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும்.” (வெளிப்படுத்துதல் 14:15) இயேசு கீழ்ப்படிந்து, பூமியை அறுவடைசெய்வதற்குப் பொறுப்பேற்கிறார். நற்செய்தியை வைராக்கியமாகப் பிரசங்கித்து, சீஷர்களை உண்டுபண்ணுவதன்மூலம் இந்தப் பெரிய வேலையில் கிறிஸ்தவர்கள் தங்கள் அரசரை ஆதரிக்கின்றனர். (மத்தேயு 28:19; மாற்கு 13:10; அப்போஸ்தலர் 1:8) அவ்வாறு செய்வதில், மிகப் பெரிய தேவாட்சியாளரான யெகோவாவோடும் அவர்கள் உடன் வேலையாட்களாக இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 3:9.
3. ஒழுக்கம் சம்பந்தமான காரியங்களில் கிறிஸ்தவர்கள் எப்படி தேவாட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர்?
3 நடத்தையிலும்கூட, கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ஆட்சிக்கு கீழ்ப்பட்டிருக்கின்றனர். இயேசு சொன்னார்: “சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.” (யோவான் 3:21) இன்று, ஒழுக்கத் தராதரங்களைக் குறித்து முடிவுறாத வாதங்கள் நடைபெறுகின்றன; ஆனால் கிறிஸ்தவர்களின் மத்தியில் இந்த விவாதங்களுக்கு எந்த இடமுமில்லை. யெகோவா ஒழுக்கமற்றது என்று சொல்கிறதை அவர்கள் ஒழுக்கமற்றதாகக் கருதுகின்றனர்; தொற்றக்கூடிய கொள்ளைநோயைப்போல் அவர்கள் அதைத் தவிர்க்கின்றனர்! மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பராமரிக்கின்றனர், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிகின்றனர், மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர். (எபேசியர் 5:3-5, 22-33; 6:1-4; 1 தீமோத்தேயு 5:8; தீத்து 3:1) இவ்வாறு, அவர்கள் தேவாட்சிக்குரியவிதத்தில், கடவுளுடன் இசைந்து செயல்படுகின்றனர்.
4. ஆதாம் ஏவாள், மற்றும் சவுலால் என்ன தவறான மனநிலைகள் வெளிக்காட்டப்பட்டன, கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு வித்தியாசப்பட்ட மனநிலையைக் காட்டுகின்றனர்?
4 ஆதாமும் ஏவாளும் எது சரி, எது தவறு என்பதைக் குறித்துத் தங்கள் சொந்தத் தீர்மானங்களை தாங்களே எடுக்க விரும்பியதால் பரதீஸை இழந்தனர். இயேசு அதன் நேர் எதிர்மாறானதை விரும்பினார். அவர் சொன்னார்: ‘எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறேன்.’ கிறிஸ்தவர்களும் அதையே தேடுகின்றனர். (யோவான் 5:30; லூக்கா 22:42; ரோமர் 12:2; எபிரெயர் 10:7) இஸ்ரவேலின் முதல் அரசனாகிய சவுல் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்—ஆனால் முழுமையாக அல்ல. இதற்காக அவர் நிராகரிக்கப்பட்டார். சாமுவேல் அவரிடம் சொன்னார்: “பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.” (1 சாமுவேல் 15:22) ஒருவேளை, பிரசங்கவேலையில் அல்லது கூட்டங்களுக்கு வருவதில் ஒழுங்காக இருந்துவிட்டு, ஒழுக்கசம்பந்தமான காரியங்களில் அல்லது வேறு ஏதாவது வழியில் விட்டுக்கொடுப்பது போன்று, ஒரு குறிப்பிட்ட அளவுவரையாக யெகோவாவின் சித்தத்தைப் பின்பற்றுவது தேவாட்சிக்குரியதாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! நாம் ‘கடவுளுடைய சித்தத்தை முழு ஆத்துமாவோடும் செய்ய’ முயலுகிறோம். (எபேசியர் 6:6; 1 பேதுரு 4:1, 2) சவுல் போல இல்லாமல், நாம் கடவுளுடைய ஆட்சிக்கு முழுமையாகக் கீழ்ப்பட்டிருக்கிறோம்.
ஒரு நவீன தேவாட்சி
5, 6. இன்று மனிதவர்க்கத்திடம் யெகோவா எவ்வாறு செயல்படுகிறார், இந்த ஏற்பாட்டுடன் ஒத்துழைப்பது எதில் விளைவடைகிறது?
5 கடந்த காலங்களில், யெகோவா ஆட்சிசெய்து, தீர்க்கதரிசிகள், அரசர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் போன்ற தனிநபர்கள் வழியாகச் சத்தியங்களை வெளிப்படுத்தினார். இன்று, இனிமேலும் அவ்வாறு இல்லை; ஏவப்பட்ட எந்தத் தீர்க்கதரிசிகளோ அப்போஸ்தலர்களோ இல்லை. மாறாக, இயேசு, தம்முடைய ஆட்சிக்குரிய வந்திருத்தலின்போது, தம்மைப் பின்பற்றக்கூடிய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ என்ற ஓர் உண்மையுள்ள குழுவை அடையாளம் கண்டு தம் எல்லா சொத்துக்களின்மேலும் அதை நியமிப்பார் என்று சொன்னார். (மத்தேயு 24:45-47; ஏசாயா 43:10) 1919-ல் அந்த அடிமை அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலான மீதியானோர் என்று அடையாளம் காணப்பட்டது. அப்போது முதற்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டபடி, அது பூமியில் தேவாட்சியின் மையமாக இருந்துவருகிறது. உலகெங்கும், கிளை அலுவலக ஆலோசனைக் குழுக்கள், பயணக் கண்காணிகள், மற்றும் சபை மூப்பர்களால் அந்த ஆளும் குழு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது.
6 தேவாட்சிக்குரிய அமைப்புடன் ஒத்துழைத்தல் தேவாட்சிக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் மிக அத்தியாவசியமான பாகமாகும். அப்படிப்பட்ட ஒத்துழைப்பு ‘முழு சகோதர கூட்டமைப்பில்’ உலகளாவிய ஒருமைப்பாட்டிலும் ஒழுங்கிலும் விளைவடைகிறது. (1 பேதுரு 2:17) இது, “கலகத்திற்குத் தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிற” யெகோவாவை மகிழ்விக்கிறது.—1 கொரிந்தியர் 14:33.
ஒரு தேவாட்சியில் மூப்பர்கள்
7. கிறிஸ்தவ மூப்பர்கள் தேவாட்சி சார்ந்த முறையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
7 நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அனைவரும், அவர்களுடைய அதிகாரத்திற்குரிய ஸ்தானம் என்னவாக இருந்தாலும், கண்காணிப்பிற்கு, அல்லது மூப்பகளுக்கென்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நிறைவேற்றுகின்றனர். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) மேலுமாக, எபேசிய மூப்பர்களுக்கான பவுலின் வார்த்தைகள் எல்லா மூப்பர்களுக்கும் பொருந்தும்: ‘உங்களைக்குறித்தும் தேவன் . . . தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும் [கவனம் செலுத்துங்கள், NW].’ (அப்போஸ்தலர் 20:28) ஆம், மூப்பர்கள் யெகோவா தேவனிடமிருந்து வரும் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 14:26) அவர்களுடைய நியமிப்பு தேவாட்சி சார்ந்தது. மேலும், அவர்கள் கடவுளின் மந்தையை மேய்க்கின்றனர். மந்தை யெகோவாவைச் சேர்ந்தது, மூப்பர்களைச் சேர்ந்ததல்ல. அது ஒரு தேவாட்சி.
8. இன்றைய மூப்பர்களின் பொதுவான உத்தரவாதங்கள் யாவை?
8 எபேசியருக்கான தன் கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல், மூப்பர்களின் பொதுவான உத்தரவாதங்களை இவ்வாறு சொல்வதன்மூலம் விவரிக்கிறார்: “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.” (எபேசியர் 4:12, 13) ‘கிறிஸ்துவின் சரீரத்தின்’ குழந்தைப் பருவத்திற்குப்பின் அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் இருக்கவில்லை. (ஒப்பிடவும் 1 கொரிந்தியர் 13:8.) ஆனால் சுவிசேஷ வேலையில், மேய்த்தலில், போதித்தலில் மூப்பர்கள் இன்னும் மிகவும் சுறுசுறுப்பாய் இருக்கின்றனர்.—2 தீமோத்தேயு 4:2; தீத்து 1:9.
9. சபையில் கடவுளுடைய சித்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்ய மூப்பர்கள் எப்படி தங்களைத்தாங்களே தயார் செய்யவேண்டும்?
9 தேவாட்சி என்பது கடவுள் ஆளுகையாக இருப்பதால், திறம்பட்ட மூப்பர்கள் கடவுளின் சித்தத்தை முழுமையாக நன்கு அறிந்தவர்களாய் இருக்கின்றனர். யோசுவா நியாயப்பிரமாணத்தை தினமும் வாசிக்கும்படி கட்டளையிடப்பட்டார். மூப்பர்களும் ஒழுங்காக வேத எழுத்துக்களைப் படித்து, அவற்றின் அறிவுரையை நாடி, உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் பிரசுரங்களை முழுமையாக நன்கு அறிந்திருக்கவேண்டும். (2 தீமோத்தேயு 3:14, 15) இது பைபிள் நியமங்கள் எப்படி குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குப் பொருந்துகின்றன என காண்பிக்கும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் உட்படுத்துகிறது.a எனினும், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்களில் பிரசுரிக்கப்பட்ட வழிகாட்டும் குறிப்புகளை ஒரு மூப்பர் அறிந்து பின்பற்றவேண்டியது முக்கியமாக இருக்கையில், அவர் அவற்றின் அடிப்படையில் இருக்கும் வேதப்பூர்வ நியமங்களையும் முழுமையாக நன்கு அறிந்திருக்கவேண்டும். அப்போது அவர் வேதப்பூர்வ வழிகாட்டும் குறிப்புகளைப் புரிந்துகொள்ளுதலுடனும் பரிவுடனும் பொருத்தும் நிலையில் இருப்பார்.—ஒப்பிடவும் மீகா 6:8.
ஒரு கிறிஸ்தவ ஆவியோடு சேவித்தல்
10. மூப்பர்கள் என்ன தவறான மனநிலைக்கு எதிராக காத்துக்கொள்ளவேண்டும், எப்படி?
10 சுமார் பொ.ச. 55-ம் வருடம், அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவிலுள்ள சபைக்கு தனது முதல் கடிதத்தை எழுதினார். அவர் கையாண்ட பிரச்னைகளில் ஒன்று, ஒருசில மனிதர் சபையில் பிரபலமானவர்களாக இருக்க விரும்பியதன் சம்பந்தப்பட்டதாய் இருந்தது. பவுல் எழுதினார்: “இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.” (1 கொரிந்தியர் 4:8) பொ.ச. முதல் நூற்றாண்டில், இயேசுவுடன் பரலோக அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்யும் நம்பிக்கை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இருந்தது. (வெளிப்படுத்துதல் 20:4, 6) என்றாலும், தெளிவாகவே, கிறிஸ்தவ தேவாட்சியில் பூமியில் எந்த அரசர்களும் இல்லை என்பதைக் கொரிந்துவில் சிலர் மறந்துவிட்டனர். இந்த உலகின் அரசர்களைப்போல செயல்படுவதற்கு மாறாக, கிறிஸ்தவ மேய்ப்பர்கள், யெகோவாவை மகிழ்விக்கும் ஒரு குணமாகிய மனத்தாழ்மையை வளர்க்கின்றனர்.—சங்கீதம் 138:6; லூக்கா 22:25-27.
11. (அ) மனத்தாழ்மையின் சில மேம்பட்ட முன்மாதிரிகள் யாவை? (ஆ) மூப்பர்களும் மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் தங்களைப்பற்றி என்ன நோக்குநிலையைக் கொண்டிருக்கவேண்டும்?
11 மனத்தாழ்மை என்பது ஒரு பலவீனமா? எவ்விதத்திலும் இல்லை! யெகோவா தாமே மனத்தாழ்மை உள்ளவராக விவரிக்கப்படுகிறார். (சங்கீதம் 18:35, NW) இஸ்ரவேலின் அரசர்கள் படைகளைப் போருக்கு வழிநடத்தி, தேசத்தை யெகோவாவின்கீழ் ஆட்சி செய்தனர். இருந்தாலும், ஒவ்வொருவரும் ‘தன்னுடைய இருதயம் தன் சகோதரருக்குமேல் தன்னை உயர்த்தாதபடி’ கவனமாக இருக்கவேண்டியிருந்தது. (உபாகமம் 17:20) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு ஒரு பரலோக அரசர். இருந்தாலும், பூமியில் இருந்தபோது, அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவினார். எவ்வளவு மனத்தாழ்மை! தம்முடைய அப்போஸ்தலர்கள் அதேவிதமாக மனத்தாழ்மை உள்ளவர்களாக இருக்கவேண்டுமென அவர் விரும்பினார் என்பதைக் காண்பித்து, அவர் சொன்னார்: “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.” (யோவான் 13:14; பிலிப்பியர் 2:5-8) எல்லா மகிமையும் துதியும் எந்த மனிதனுக்கும் அல்ல, யெகோவாவுக்குச் செல்ல வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) எல்லா கிறிஸ்தவர்களும், தாங்கள் மூப்பர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இயேசுவின் இந்த வார்த்தைகளின் அடிப்படையில் தங்களைக்குறித்துச் சிந்திக்க வேண்டும்: “நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர் செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்.” (லூக்கா 17:10) வேறு எந்த நோக்குநிலையும் தேவாட்சிக்குரியதல்ல.
12. அன்பு ஏன் கிறிஸ்தவ மூப்பர்கள் வளர்க்கவேண்டிய ஓர் அத்தியாவசியமான தன்மையாக இருக்கிறது?
12 மனத்தாழ்மையோடுகூட, கிறிஸ்தவ மூப்பர்கள் அன்பை வளர்க்கவேண்டும். பின்வருமாறு சொல்லுகையில், அப்போஸ்தலன் யோவான் அன்பின் முக்கியத்துவத்தைக் காண்பித்தார்: “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) அன்பற்ற நபர்கள் தேவாட்சிக்குரியவர்கள் அல்லர். அவர்கள் யெகோவாவை அறியவில்லை. கடவுளுடைய குமாரனைப்பற்றி பைபிள் சொல்கிறது: “இயேசு . . . இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவான் 13:1) கிறிஸ்தவ சபையில் ஆளும் குழுவின் பாகமாக இருக்கப்போகும் 11 மனிதரிடம் பேசும்போது, இயேசு சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 15:12) அன்பே உண்மை கிறிஸ்தவத்திற்கு அடையாளக்குறியாக இருக்கிறது. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களை, வருத்தப்படுகிறவர்களை, விடுதலைக்காக ஏங்கும் ஆவிக்குரியவிதத்தில் சிறைப்பட்டவர்களையும் அது கவர்கிறது. (ஏசாயா 61:1, 2; யோவான் 13:35) அதைக் காண்பிப்பதில் மூப்பர்கள் மிகச் சிறந்த மாதிரிகளாய் இருக்கவேண்டும்.
13. இன்றைய பிரச்னைகள் கடினமாக இருக்கக்கூடும் என்றாலும், ஒரு மூப்பர் எப்படி எல்லா சூழ்நிலைகளிலும் நன்மைக்கேதுவாக செல்வாக்குச் செலுத்தமுடியும்?
13 இன்று, மூப்பர்கள் அடிக்கடி சிக்கலான பிரச்னைகளைக் கையாளும்படி கேட்கப்படுகின்றனர். திருமணப் பிரச்னைகள் ஆழமாக வேரூன்றப்பட்டவையாயும் தொடர்ந்து நீடிப்பவையாயும் இருக்கலாம். பெரியவர்கள் புரிந்துகொள்ளக் கடினமாகக் காணக்கூடிய பிரச்னைகளை இளைஞர் கொண்டிருக்கின்றனர். உணர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்கள் பெரும்பாலும் கிரகித்துக்கொள்ள கடினமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட காரியங்களை எதிர்ப்படும் ஒரு மூப்பர் என்ன செய்வது என்பதைக்குறித்து நிச்சயமற்றவராய் இருக்கக்கூடும். ஆனால், அவர் ஜெப சிந்தையுடன் யெகோவாவின் ஞானத்தில் சார்ந்திருந்தால், பைபிளிலும் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால் பிரசுரிக்கப்பட்ட தகவலிலும் அவர் ஆராய்ச்சி செய்தால், செம்மறியாடுகளிடம் மனத்தாழ்மையுடனும் அன்புடனும் செயல்பட்டால், மிகக் கடினமான சூழ்நிலையில்கூட அவர் நன்மைக்கேதுவான ஒரு செல்வாக்குச் செலுத்த முடியும் என்று உறுதியாக நம்பலாம்.
14, 15. யெகோவா தம் மக்களை அநேக சிறந்த மூப்பர்களால் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைக் காட்டும் சில வெளிப்படையான கூற்றுகள் யாவை?
14 “மனுஷர்களுக்கு வரங்களை” அளித்து யெகோவா தம்முடைய அமைப்பைச் செழுமையாக ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 4:8) கடவுளுடைய செம்மறியாடுகளைப் பரிவுடன் மேய்க்கும் மனத்தாழ்மையுள்ள மூப்பர்களால் காண்பிக்கப்பட்ட அன்பிற்குச் சான்று பகரும் உள்ளம் கனியவைக்கும் கடிதங்களை அவ்வப்போது உவாட்ச் டவர் சொஸையிட்டி பெறுகிறது. உதாரணமாக, ஒரு சபை மூப்பர் எழுதுகிறார்: “என்னை அதிகம் தொட்ட அல்லது சபையில் இன்னும் பேசப்பட்டு வருகிற வட்டாரக் கண்காணியின் சந்திப்பு ஒன்றை என்னால் நினைவுகூர முடியாது. சகோதர்களைக் கையாளும்போது பாராட்டுதலுக்கும் ஓர் அழுத்தத்தைக் கொடுத்து, ஒரு நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைக் காணும்படி அந்த வட்டாரக் கண்காணி எனக்கு உதவி செய்தார்.”
15 சிகிச்சை பெறுவதற்குத் தூரத்திலுள்ள மருத்துவமனைக்குப் பயணம் செய்யவேண்டியிருந்த ஒரு சகோதரி எழுதுகிறாள்: “வீட்டைவிட்டு அவ்வளவு தூரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அந்த முதல் கவலைக்குரிய இரவில் ஒரு மூப்பரைச் சந்திக்க முடிந்தது எவ்வளவு நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது! அவரும் மற்ற சகோதரர்களும் அதிக நேரத்தை என்னுடன் செலவிட்டனர். அந்த அன்பும் பற்றுமுள்ள சகோதரர்களின் ஆறுதல், கவனிப்பு, மற்றும் ஜெபங்கள் இன்றி நான் ஒருபோதும் பிழைத்திருக்கமாட்டேன் என்று என்னுடைய நிலையை நன்கு அறிந்திருந்த உலகப்பிரகாரமான ஆட்கள்கூட உணர்ந்தார்கள்.” மற்றொரு சகோதரி எழுதுகிறாள்: “மிகுந்த மனச்சோர்வோடு நான் கொண்டிருந்த போராட்டத்தினூடே மூப்பர் குழு என்னைப் பொறுமையாக வழிநடத்தியதால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன். . . . ஒரு சகோதரருக்கும் அவருடைய மனைவிக்கும் என்னிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. . . . ஆனால், என்னை மிகவும் தொட்டது என்னவென்றால், நான் இருக்கும் நிலையை அவர்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அவர்கள் என்னைப்பற்றி அன்பான அக்கறையைக் கொண்டிருந்தனர்.”
16. பேதுரு மூப்பர்களுக்கு என்ன அறிவுரையைக் கொடுக்கிறார்?
16 ஆம், அநேக மூப்பர்கள் அப்போஸ்தலன் பேதுருவின் அறிவுரையைப் பொருத்திப் பிரயோகிக்கின்றனர்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.” (1 பேதுரு 5:1-3) அப்படிப்பட்ட தேவாட்சிக்குரிய மூப்பர்கள் என்னே ஓர் ஆசீர்வாதமாக இருக்கின்றனர்!
தேவாட்சியில் செம்மறியாடுகள்
17. சபையிலுள்ள எல்லா அங்கத்தினர்களும் வளர்க்க வேண்டிய சில குணங்களைக் குறிப்பிடவும்.
17 இருந்தாலும், தேவாட்சி என்பது வெறும் மூப்பர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. மேய்ப்பர்கள் தேவாட்சிக்குரியவர்களாய் இருக்கவேண்டுமானால், செம்மறியாடுகளும் அவ்வாறு இருக்கவேண்டும். என்ன வழிகளில்? மேய்ப்பர்களை வழிநடத்தக்கூடிய அதே நியமங்களே செம்மறியாடுகளையும் வழிநடத்தவேண்டும். தாங்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டுமானால் மூப்பர்கள் மட்டுமல்ல, எல்லா கிறிஸ்தவர்களும் மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (யாக்கோபு 4:6) எல்லாரும் அன்பை வளர்க்கவேண்டும்; ஏனென்றால் அது இல்லாமல் யெகோவாவுக்கு நாம் கொடுக்கும் பலிகள் அவரை மகிழ்விப்பவையாய் இல்லை. (1 கொரிந்தியர் 13:1-3) மேலும், வெறும் மூப்பர்கள் மட்டுமல்ல, நாம் எல்லாரும் “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் [யெகோவாவுடைய] சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட”வேண்டும்.—கொலோசெயர் 1:9.
18. (அ) சத்தியத்தைப்பற்றிய வெறும் ஒரு மேலோட்டமான அறிவு ஏன் போதாது? (ஆ) நாம் எல்லாரும் எப்படி திருத்தமான அறிவால் நிரப்பப்பட முடியும்?
18 சாத்தானின் உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் உண்மையுடன் நிலைத்திருக்க அவர்கள் முயற்சி செய்யும்போது, இளைஞரும் அதேபோன்று முதியோரும் கஷ்டமான தீர்மானங்கள் எடுப்பதை எப்போதும் எதிர்ப்படுகின்றனர். உடை, இசை, திரைப்படங்கள், மற்றும் இலக்கியங்களில் உலகின் போக்குகள் சிலருடைய ஆவிக்குரிய தன்மைக்குச் சவாலாக இருக்கின்றன. சத்தியத்தைப்பற்றிய ஒரு மேலோட்டமான அறிவு நம்முடைய சமநிலையைக் காத்துக்கொள்ள போதுமானதல்ல. உண்மையுடன் நிலைத்திருப்பதைக் குறித்து நிச்சயமாய் இருக்க, நாம் திருத்தமான அறிவால் நிரப்பப்படுவது அவசியம். கடவுளுடைய வார்த்தை மட்டுமே கொடுக்கக்கூடிய பகுத்துணர்வும் ஞானமும் நமக்குத் தேவை. (நீதிமொழிகள் 2:1-5) இது நல்ல படிப்புப் பழக்கங்களை வளர்ப்பதையும், நாம் கற்றுக்கொள்பவற்றின்பேரில் தியானிப்பதையும், அதை நடைமுறையில் அப்பியாசிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. (சங்கீதம் 1:1-3; வெளிப்படுத்துதல் 1:3) பவுல் பின்வருமாறு சொன்னபோது வெறும் மூப்பர்களுக்கு அல்ல, எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எழுதிக்கொண்டிருந்தார்: “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.”—எபிரெயர் 5:14.
மேய்ப்பர்களும் செம்மறியாடுகளும் ஒன்றாகச்சேர்ந்து வேலை செய்கின்றனர்
19, 20. மூப்பர்களுடன் ஒத்துழைப்பதற்காக என்ன அறிவுரைகள் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றன, ஏன்?
19 கடைசியாக, மூப்பர்களுடன் ஒத்துழைப்பவர்களால் ஓர் உண்மையான தேவாட்சிக்குரிய ஆவி காட்டப்படுகிறது என்று சொல்லப்படவேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார்: “நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.” (1 தீமோத்தேயு 5:17; 1 பேதுரு 5:5, 6) மூப்பராக இருத்தல், ஒரு நல்ல சிலாக்கியம்; ஆனால் பெரும்பாலான மூப்பர்கள் தினசரி தங்கள் உலகப்பிரகாரமான வேலைக்குச் செல்பவர்களாக, பராமரிப்பதற்கு மனைவிகளையும் பிள்ளைகளையும் உடைய குடும்பஸ்தர்களாக இருக்கின்றனர். அவர்கள் சேவிப்பதற்கு மகிழ்ச்சி உள்ளவர்களாக இருக்கையில், சபையானது அளவுக்கதிகமாக குறைகூறுவதாயும் அதிகத்தைக் கேட்பதாயும் இல்லாமல் ஆதரவளிப்பதாய் இருந்தால், அவர்களுடைய சேவை எளிதாகவும் அதிக பலனளிப்பதாயும் இருக்கிறது.—எபிரெயர் 13:17.
20 அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” (எபிரெயர் 13:7) இல்லை, மூப்பர்களைப் பின்பற்றும்படியாக பவுல் சகோதரர்களை உற்சாகப்படுத்தவில்லை. (1 கொரிந்தியர் 1:12) ஒரு மனிதனைப் பின்பற்றுவது தேவாட்சிக்குரியதல்ல. ஆனால் சுவிசேஷ வேலையில் சுறுசுறுப்பாகவும், கூட்டங்களுக்கு வருவதில் ஒழுங்காகவும், சபையுடன் மனத்தாழ்மையாகவும் அன்பாகவும் நடந்துகொள்பவராக இருக்கும் ஒரு தேவாட்சிக்குரிய மூப்பரின் நிரூபிக்கப்பட்ட விசுவாசத்தைப் பின்பற்றுவது நிச்சயமாக ஞானமானது.
விசுவாசத்திற்கு ஒரு சான்று
21. மோசேயைப் போன்ற ஒரு பலமான விசுவாசத்தை கிறிஸ்தவர்கள் எப்படி வெளிக்காட்டுகின்றனர்?
21 உண்மையில், மனித சரித்திரத்தின் இந்த மிகச் சீரழிந்த காலத்தில், ஒரு தேவாட்சிக்குரிய அமைப்பு இருப்பது, மிகப் பெரிய தேவாட்சியாளரின் வல்லமைக்கு ஒரு சான்றாக இருக்கிறது. (ஏசாயா 2:2-5) தங்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளுடன் போராடிக்கொண்டு, ஆனால் யெகோவா தங்களுடைய ஆட்சியாளர் என்பதை ஒருபோதும் மறக்காத ஏறக்குறைய 50 லட்சம் கிறிஸ்தவ ஆண்கள், பெண்கள், மற்றும் பிள்ளைகளின் விசுவாசத்திற்கும் சான்றாக இருக்கிறது. உண்மையுள்ள மோசே ‘காணக்கூடாதவரைக் காண்பதுபோல தொடர்ந்து உறுதியாய் நிலைத்திருந்த’ விதமாகவே இன்றைய கிறிஸ்தவர்களும் அப்படிப்பட்ட பலமான விசுவாசத்தைக் கொண்டிருக்கின்றனர். (எபிரெயர் 11:27) ஒரு தேவாட்சியில் வாழ அவர்கள் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர், அதற்காக அவர்கள் தினமும் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகின்றனர். (சங்கீதம் 100:4, 5) யெகோவாவின் பாதுகாக்கும் வல்லமையை அவர்கள் அனுபவிக்கும்போது, இவ்வாறு அறிவிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்: “யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர்தாமே நம்மைப் பாதுகாப்பார்.”—ஏசாயா 33:22, NW.
பைபிள் என்ன காட்டுகிறது?
◻ கிறிஸ்தவர்கள் என்ன வழியில் தேவாட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றனர்?
◻ இன்று எப்படி தேவாட்சி ஒழுங்கமைக்கப்படுகிறது?
◻ மூப்பர்கள் தங்களுடைய உத்தரவாதங்களை நிறைவேற்ற என்ன வழிகளில் தங்களைத் தயார் செய்யவேண்டும்?
◻ மூப்பர்கள் என்ன கிறிஸ்தவ குணங்களை வளர்த்து, வெளிக்காட்டுவது அத்தியாவசியமாக இருக்கிறது?
◻ தேவாட்சியில், செம்மறியாடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் இடையில் என்ன உறவு நிலவவேண்டும்?
[அடிக்குறிப்புகள்]
a அப்படிப்பட்ட பிரசுரங்களில்தான், வேதப்பூர்வ வழிகாட்டும் குறிப்புகளை உடைய “உங்களுக்கும் மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துங்கள்” என்ற புத்தகம் இருக்கிறது; அது நியமிக்கப்பட்ட சபை கண்காணிகளுக்கு, அல்லது மூப்பர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
[பக்கம் 16-ன் படம்]
ஆதாமும் ஏவாளும் நன்மை தீமையைப்பற்றி தங்கள் சொந்தத் தீர்மானங்களை எடுக்க விரும்பியதால் பரதீஸை இழந்தனர்
[பக்கம் 18-ன் படம்]
ஒரு மூப்பர் செம்மறியாடுகளிடம் மனத்தாழ்மையுடனும் அன்புடனும் செயல்பட்டால், அவர் எப்போதும் நன்மைக்கேதுவான ஒரு செல்வாக்குச் செலுத்தமுடியும்