யெகோவா ஆளுகிறார்—தேவாட்சியின் மூலமாக
“யெகோவா எல்லா காலத்திற்கும் ராஜாவாக இருப்பார்.”—சங்கீதம் 146:10, NW.
1, 2. (அ) ஆட்சியிடமாக மனிதருடைய முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்திருக்கின்றன? (ஆ) உண்மையில் வெற்றிகரமான ஒரே வகையான அரசாங்கம் எதுவாக இருந்திருக்கிறது?
மனித சமுதாயத்தை ஆட்சிபுரிவதற்கு, நிம்ரோதின் காலம் முதற்கொண்டு மனிதர் வித்தியாசமான வழிகளை முயன்றிருக்கின்றனர். சர்வாதிகாரங்கள், முடியரசுகள், சிறுகுழு ஆட்சிகள், மற்றும் பல்வேறு வகைகளான மக்களாட்சியும் இருந்திருக்கின்றன. யெகோவா அவை எல்லாவற்றையும் அனுமதித்திருக்கிறார். உண்மையில், எல்லா அதிகாரத்திற்கும் கடவுளே ஆதி ஊற்றுமூலராக இருப்பதால், ஒருவிதத்தில் வெவ்வேறு ஆட்சியாளர்களை அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் அவரே அமர்த்தினார். (ரோமர் 13:1) இருந்தபோதிலும், அரசாங்கத்திடமாக மனிதனுடைய முயற்சிகள் யாவும் தோல்வி அடைந்திருக்கின்றன. எந்த மனித ஆட்சியாளரும் ஒரு நீடித்து நிலைக்கும், நிரந்தரமான, நியாயமான சமுதாயத்தை உருவாக்கவில்லை. பெரும்பாலாக, “தனக்கே கேடுண்டாக மனிதன் மனிதனை ஆளுகைசெய்திருக்கிறான்.”
—பிரசங்கி 8:9, NW.
2 இது நம்மை ஆச்சரியப்படுத்தவேண்டுமா? நிச்சயமாக இல்லை! அபூரண மனிதன் தன்னைத்தானே ஆண்டுகொள்ளும்படி உண்டாக்கப்படவில்லை. ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல. தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.’ (எரேமியா 10:23) ஆகவேதான், மனித சரித்திரம் முழுவதிலும், ஒரே ஒரு வகையான அரசாங்கமே உண்மையில் வெற்றிகரமாக இருந்திருக்கிறது. அது எது? யெகோவா தேவனின்கீழ் தேவாட்சி. பைபிள்பூர்வ கிரேக்கில், “தேவாட்சி” என்பது, தேவன் [தியாஸ் (the·osʹ)] மூலமாக ஆட்சி [க்ரேடாஸ் (kraʹtos)]. யெகோவா தேவனுடையதையேவிட சிறந்த அரசாங்கம் ஏதாவது இருக்க முடியுமா?—சங்கீதம் 146:10.
3. பூமியில் தேவாட்சி இருந்ததற்கான சில பூர்வ உதாரணங்கள் யாவை?
3 ஏதேனில் சிறிது காலம், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்தது வரையாக தேவாட்சி ஆளுகை செய்தது. (ஆதியாகமம் 3:1-6, 23) ஆபிரகாமின் காலத்தில், மெல்கிசேதேக்கை ராஜாவும் ஆசாரியனுமாகக் கொண்டு, சாலேம் நகரில் ஒரு தேவாட்சி இருந்ததாகத் தோன்றுகிறது. (ஆதியாகமம் 14:18-20; எபிரெயர் 7:1-3) இருந்தாலும், யெகோவா தேவனின்கீழ் முதல் தேசிய தேவாட்சி, சீனாய் வனாந்தரத்தில் பொ.ச.மு. 16-ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. அது எவ்வாறு ஏற்பட்டது? அந்தத் தேவாட்சிக்குரிய அரசாங்கம் எப்படிச் செயல்பட்டது?
ஒரு தேவாட்சி பிறக்கிறது
4. தேவாட்சிக்குரிய இஸ்ரவேல் தேசத்தை யெகோவா எவ்வாறு அமைத்தார்?
4 பொ.ச.மு. 1513-ல், யெகோவா இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பின்தொடர்ந்துவந்த பார்வோனின் சேனைகளைச் சிவந்த சமுத்திரத்தில் அழித்தார். பின்னர், அவர் இஸ்ரவேலரைச் சீனாய் மலைக்கு வழிநடத்தினார். மலை அடிவாரத்தில் அவர்கள் கூடாரமிட்டுத் தங்கியபோது, மோசேயின்மூலம் கடவுள் அவர்களிடம் சொன்னார்: “நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்.” அதற்கு இஸ்ரவேலர், “கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம்,” என்று பதிலளித்தனர். (யாத்திராகமம் 19:4, 5, 8) ஓர் உடன்படிக்கை செய்யப்பட்டது; தேவாட்சிக்குரிய இஸ்ரவேல் தேசம் பிறந்தது.—உபாகமம் 26:18, 19.
5. யெகோவா இஸ்ரவேலில் ஆட்சி செய்தார் என்று எவ்வாறு சொல்லப்பட முடியும்?
5 என்றபோதிலும், மனித கண்களுக்குக் காணக்கூடாதவராக இருக்கும் யெகோவாவால் எப்படி இஸ்ரவேல் ஆளப்பட்டது? (யாத்திராகமம் 33:20) அந்தத் தேசத்தின் சட்டங்களும் ஆசாரியத்துவமும் யெகோவாவால் கொடுக்கப்பட்டதனாலேயே. சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து தெய்வீக கட்டளையிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப வணங்கியவர்கள் மிகப் பெரிய தேவாட்சியாளரான யெகோவாவைச் சேவித்தனர். கூடுதலாக, பிரதான ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் கொண்டிருந்தான்; அவற்றின் மூலமாக, அவசர நேரங்களில் யெகோவா தேவன் வழிநடத்துதலைக் கொடுத்தார். (யாத்திராகமம் 28:29, 30) மேலும், தகுதிபெற்ற மூப்பர்கள் அந்தத் தேவாட்சியில் யெகோவாவின் பிரதிநிதிகளாக இருந்து, கடவுளுடைய சட்டம் பொருத்திப் பிரயோகிக்கப்படும்படி பார்த்துக்கொண்டனர். இந்த மனிதரில் சிலருடைய பதிவை நாம் கவனித்தால், மனிதர் எப்படிக் கடவுளுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொள்வோம்.
தேவாட்சியின்கீழ் அதிகாரம்
6. ஒரு தேவாட்சியில் அதிகாரம் வகிப்பது ஏன் மனிதருக்கு ஒரு சவாலாக இருந்தது, இந்தப் பொறுப்பிற்கு என்ன வகையான மனிதர் தேவைப்பட்டனர்?
6 இஸ்ரவேலில் அதிகார ஸ்தானங்களில் இருந்தவர்கள் அதிக சிலாக்கியம் பெற்றவர்களாய் இருந்தனர்; ஆனால் தங்கள் சமநிலையைக் காத்துக்கொள்வது அவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. தங்கள் சொந்த, தான் என்ற எண்ணம், ஒருபோதும் யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதைவிட அதிக முக்கியமானதாகி விடாதபடி அவர்கள் கவனமாய் இருக்க வேண்டியிருந்தது. “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல” என்ற ஏவப்பட்டு எழுதப்பட்ட கூற்று, மீதி மனிதவர்க்கத்தைக் குறித்து இருந்ததைப்போலவே இஸ்ரவேலரைக்குறித்தும் உண்மையாய் இருந்தது. இஸ்ரவேல் ஒரு தேவாட்சி என்றும், அவர்கள் தங்கள் சொந்த சித்தத்தை அல்ல யெகோவாவின் சித்தத்தையே செய்ய வேண்டும் என்றும் மூப்பர்கள் நினைவில்கொண்டிருந்தபோது மட்டுமே இஸ்ரவேல் செழித்தோங்கியது. இஸ்ரவேல் தோற்றுவிக்கப்பட்டு சிறிது காலத்திற்குப்பின், அவர்கள் என்ன வகையான மனிதர்களாய் இருக்க வேண்டும் என்று மோசேயின் மாமனாரான எத்திரோ நன்கு விளக்கினார்; அதாவது அவர்கள் ‘தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதராக’ இருக்கவேண்டும்.—யாத்திராகமம் 18:21.
7. யெகோவா தேவனின்கீழ் அதிகாரம் வகிக்கும் ஒருவருக்கு மோசே என்ன வழிகளில் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார்?
7 இஸ்ரவேலில் உயர்ந்த அதிகாரத்தைச் செலுத்த முதலாக இருந்தவர் மோசே. தேவாட்சிக்குரிய அதிகாரமுடைய ஓர் ஆளுக்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு முறை மனித பலவீனம் வெளிக்காட்டப்பட்டது என்பது உண்மைதான். இருந்தாலும், மோசே எப்போதும் யெகோவாவைச் சார்ந்திருந்தார். ஏற்கெனவே முடிவெடுக்கப்படாத கேள்விகள் எழும்பியபோது, அவர் யெகோவாவின் வழிநடத்துதலை நாடினார். (ஒப்பிடவும் எண்ணாகமம் 15:32-36.) தன் சொந்த மகிமைக்காக தன் உயர்ந்த ஸ்தானத்தைப் பயன்படுத்துவதற்கான சோதனையை மோசே எவ்வாறு எதிர்த்தார்? இலட்சக்கணக்கானோரை உடைய ஒரு தேசத்தை வழிநடத்தியபோதும், அவர் ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார்.’ (எண்ணாகமம் 12:3) அவருக்கு எந்தத் தனிப்பட்ட இலட்சியங்களும் இருக்கவில்லை; ஆனால் அவர் கடவுளின் மகிமையைக் குறித்து அக்கறை கொண்டிருந்தார். (யாத்திராகமம் 32:7-14) மேலும் மோசேக்குப் பலமான விசுவாசம் இருந்தது. அவர் ஒரு தேசிய தலைவராக ஆவதற்கு முன்பிருந்ததைக்குறித்துப் பேசுகையில், அப்போஸ்தலன் பவுல், ‘அவர் காணக்கூடாதவரைக் காண்பதுபோல தொடர்ந்து உறுதியாய் நிலைத்திருந்தார்’ என்று சொன்னார். (எபிரெயர் 11:27) தெளிவாகவே, தேசத்தின் நிஜமான ஆட்சியாளர் யெகோவா என்பதை மோசே ஒருபோதும் மறக்கவில்லை. (சங்கீதம் 90:1, 2) இன்று நமக்கு என்னே ஒரு நல்ல முன்மாதிரி!
8. யெகோவா யோசுவாவுக்கு என்ன கட்டளையைக் கொடுத்தார், இது ஏன் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது?
8 இஸ்ரவேலைக் கண்காணிப்பது தனியாக மோசேக்கு மிகக் கூடுதலான வேலையாக நிரூபித்தபோது, தேசத்தை நியாயம் விசாரிப்பதில் அவருக்கு ஆதரவளிக்கும் 70 மூப்பர்மேல் யெகோவா தம்முடைய ஆவியை வைத்தார். (எண்ணாகமம் 11:16-25) பின்னான வருடங்களில் ஒவ்வொரு பட்டணமும் அதன் மூப்பர்களைக் கொண்டிருக்கும். (ஒப்பிடவும்: உபாகமம் 19:12; 22:15-18; 25:7-9.) மோசே இறந்த பிறகு, யெகோவா யோசுவாவை தேசத்தின் தலைவராக்கினார். இந்தச் சிலாக்கியத்துடன், யோசுவா செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருந்தார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க முடியும். இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் விட்டுவிடக் கூடாத ஒரு காரியம் இருந்ததென்று யெகோவா சொன்னார்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக.” (யோசுவா 1:8) யோசுவா 40 வருடங்களுக்கு மேலாக சேவித்திருந்தபோதிலும், அவர் நியாயப்பிரமாணத்தைத் தொடர்ந்து வாசிக்கவேண்டிய தேவை இருந்தது என்பதைக் கவனியுங்கள். நாம் எவ்வளவு நீண்ட கால சேவையின் பதிவைக் கொண்டிருந்தாலும் சரி, எவ்வளவு சிலாக்கியங்களை உடையவர்களாய் இருந்தாலும் சரி—நாமும்கூட பைபிளைப் படித்து, யெகோவாவின் சட்டங்கள் மற்றும் நியமங்களால் நம் மனங்களைப் புத்துயிரளித்துக்கொண்டிருப்பது அவசியம்.—சங்கீதம் 119:111, 112.
9. நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலில் என்ன நடந்தது?
9 யோசுவாவைப் பின்தொடர்ந்து அநேக நியாயாதிபதிகள் வந்தனர். கவலைக்குரிய விதத்தில், அவர்களுடைய சமயத்தில், இஸ்ரவேலர் அடிக்கடி ‘யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்.’ (நியாயாதிபதிகள் 2:11) நியாயாதிபதிகளின் காலத்தைக் குறித்து பதிவு சொல்கிறது: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.” (நியாயாதிபதிகள் 21:25) நடத்தை மற்றும் வணக்கத்தைக் குறித்து ஒவ்வொருவரும் தன் சொந்த தீர்மானங்களை எடுத்தனர்; அநேக இஸ்ரவேலர் கெட்ட தீர்மானங்களை எடுத்ததாக சரித்திரம் காண்பிக்கிறது. அவர்கள் விக்கிரக வணக்கத்திற்குத் திரும்பினர்; சிலநேரங்களில் பயங்கரமான குற்றச்செயல்களைச் செய்தனர். (நியாயாதிபதிகள் 19:25-30) இருந்தாலும், சிலர் மிகச் சிறந்த விசுவாசத்தை வெளிக்காட்டினர்.—எபிரெயர் 11:32-38.
10. சாமுவேலின் காலத்தில், எவ்வாறு இஸ்ரவேலில் அரசாங்கம் முழுமையாக மாற்றம் அடைந்தது, இதற்கு எது வழிநடத்தியது?
10 கடைசி நியாயாதிபதியாகிய சாமுவேலின் வாழ்நாள் காலத்தில், அரசாங்கத்தைக் குறித்து இஸ்ரவேல் ஒரு நெருக்கடியை அனுபவித்தது. ராஜாக்களால் ஆளப்படும் சுற்றியிருந்த பகைமை தேசங்களால் செல்வாக்குச் செலுத்தப்பட்டு, இஸ்ரவேலர் தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென வாதாடினர். தங்களுக்கு ஏற்கெனவே ஒரு ராஜா இருப்பதையும், தங்கள் அரசாங்கம் ஒரு தேவாட்சி என்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். யெகோவா சாமுவேலிடம் சொன்னார்: “அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” (1 சாமுவேல் 8:7) நம்முடைய ஆவிக்குரிய காட்சியை இழந்து நம்மைச் சுற்றியுள்ள உலகால் செல்வாக்குச் செலுத்தப்படுவது எவ்வளவு எளிது என்பதை அவர்களுடைய உதாரணம் நமக்கு நினைவுபடுத்துகிறது.—ஒப்பிடவும் 1 கொரிந்தியர் 2:14-16.
11. (அ) அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டபோதும், ராஜாக்களின்கீழ் இஸ்ரவேல் தொடர்ந்து ஒரு தேவாட்சியாக இருந்தது என்று எவ்வாறு சொல்லப்படலாம்? (ஆ) யெகோவா இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார், என்ன நோக்கத்துடன்?
11 என்றபோதிலும், யெகோவா இஸ்ரவேலரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களுடைய முதல் இரண்டு ராஜாக்கள் சவுலையும் தாவீதையும் தெரிந்தெடுத்தார். இஸ்ரவேல் யெகோவாவால் ஆளப்பட்ட தேவாட்சியாகத் தொடர்ந்தது. அவளுடைய ராஜாக்கள் இதை நினைவில் கொள்ளும்படி, அவர்களில் ஒவ்வொருவரும் நியாயப்பிரமாண நூலை தனக்காக ஒரு பிரதி எடுத்து “அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், . . . இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு” அதைத் தினசரி வாசிக்கக் கடமைப்பட்டிருந்தனர். (உபாகமம் 17:18-20) ஆம், தம்முடைய தேவாட்சியில் அதிகாரத்தை உடையவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தக்கூடாதென்றும் அவர்களுடைய செயல்கள் தம்முடைய நியாயப்பிரமாணத்தைப் பிரதிபலிக்கவேண்டும் என்றும் யெகோவா விரும்பினார்.
12. தாவீது ராஜா விசுவாசத்தின் என்ன பதிவை உண்டாக்கினார்?
12 தாவீது ராஜா யெகோவாவில் மிகச் சிறந்த விசுவாசத்தைக் கொண்டிருந்தார்; என்றென்றும் நிலைத்திருக்கும் ராஜாக்களின் வரிசை ஒன்றிற்கு அவர் ஒரு தகப்பனாக இருப்பார் என்று கடவுள் உடன்படிக்கை செய்தார். (2 சாமுவேல் 7:16; 1 இராஜாக்கள் 9:5; சங்கீதம் 89:29) யெகோவாவிடம் தாவீதின் மனத்தாழ்மையான கீழ்ப்பட்டிருத்தல் பின்பற்றுவதற்குத் தகுதியானது. அவர் சொன்னார்: “கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!” (சங்கீதம் 21:1) மாம்சப்பிரகாரமான பலவீனத்தின் காரணமாக சிலநேரங்களில் தாவீது தவறியபோதும், ஒரு நியதியாக அவர் யெகோவாவின் பலத்தில் சார்ந்திருந்தார், தன் சொந்த பலத்தில் அல்ல.
தேவாட்சிக்குரியதாய் இல்லாத செயல்களும் மனநிலைகளும்
13, 14. தாவீதுக்குப் பின்வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட சில தேவாட்சிக்குரியதல்லாத செயல்கள் யாவை?
13 எல்லா இஸ்ரவேல் தலைவர்களும் மோசேயையும் தாவீதையும்போல் இருக்கவில்லை. இஸ்ரவேலில் பொய் வணக்கத்தை அனுமதித்து, அநேகர் தேவாட்சிக்குரிய ஏற்பாட்டிற்கு முழுவதுமாக அவமரியாதையைக் காண்பித்தனர். சில உண்மையுள்ள ஆட்சியாளர்கள்கூட சில நேரங்களில் தேவாட்சிக்குரியதாய் இல்லாத முறையில் செயல்பட்டனர். அதிக ஞானமும் செழுமையும் அளிக்கப்பட்ட சாலொமோனுடைய காரியம் மிகக் கவலைக்குரியதாக இருந்தது. (1 இராஜாக்கள் 4:2, 5, 29) இருப்பினும், யெகோவாவின் சட்டத்திற்கு அவமதிப்பாக, அவர் பல மனைவிகளைத் திருமணம் செய்து இஸ்ரவேலில் விக்கிர வணக்கத்தை அனுமதித்தார். தெளிவாகவே, சாலொமோனின் பின்னான வருடங்களில் அவருடைய ஆட்சி ஒடுக்கியாளுவதாய் இருந்தது.—உபாகமம் 17:14-17; 1 இராஜாக்கள் 11:1-8; 12:4.
14 சாலொமோனின் மகன் ரெகொபெயாம் தன் குடிமக்களுடைய சுமையைக் குறைக்கும்படியாகக் கேட்கப்பட்டான். அந்த நிலைமையைச் சாந்தமாகக் கையாளுவதற்குப் பதிலாக, அவன் மூர்க்கத்தனமாகத் தன் அதிகாரத்தை வற்புறுத்தினான்—12 கோத்திரங்களில் 10-ஐ இழந்தான். (2 நாளாகமம் 10:4-17) பிரிந்துசென்ற பத்துக் கோத்திர ராஜ்யத்தின் முதல் ராஜா யெரொபெயாம். தன்னுடைய ராஜ்யம் தன் சகோதரி ராஜ்யத்துடன் மறுபடியும் ஒருபோதும் சேர்ந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த, அவன் கன்றுக்குட்டி வணக்கத்தை ஏற்படுத்தினான். இது அரசியல்பூர்வமாக ஒரு புத்திசாலித்தனமான படியாகத் தோன்றி இருக்கலாம்; ஆனால் அது தேவாட்சிக்கு மிகத் தெளிவான அவமதிப்பைக் காண்பித்தது. (1 இராஜாக்கள் 12:26-30) பின்னர், நீண்ட நாட்கள் உண்மையுடன் சேவித்து, கடைசியில் ஆசா ராஜா, பெருமை தன்னுடைய பதிவைக் கறைப்படுத்தும்படி அனுமதித்தான். யெகோவாவிடமிருந்துவந்த புத்திமதியுடன் தன்னிடம் வந்த தீர்க்கதரிசியை அவன் தவறாக நடத்தினான். (2 நாளாகமம் 16:7-11) ஆம், நீண்ட நாள் சேவித்தவர்களுக்குக்கூட சில சமயங்களில் புத்திமதி தேவைப்படுகிறது.
ஒரு தேவாட்சியின் முடிவு
15. இயேசு பூமியில் இருந்தபோது, யூதத் தலைவர்கள் ஒரு தேவாட்சியில் அதிகாரத்திற்குரிய நபர்களாக இருக்கத் தவறியது எப்படி?
15 இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, இஸ்ரவேல் இன்னும் ஒரு தேவாட்சியாக இருந்தது. எனினும், கவலைக்கிடமாக, அவளுடைய பொறுப்புள்ள மூப்பர்கள் அநேகர் ஆவிக்குரிய மனநிலை உடையவர்களாய் இருக்கவில்லை. நிச்சயமாகவே அவர்கள் மோசே வெளிக்காட்டிய சாந்தகுணத்தை வளர்க்கத் தவறினர். இயேசு பின்வருமாறு சொல்லுகையில் அவர்களுடைய ஆவிக்குரிய கறைப்பட்டிருத்தலைச் சுட்டிக்காட்டினார்: “வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.”—மத்தேயு 23:2, 3.
16. முதல் நூற்றாண்டு யூதத் தலைவர்கள் தேவாட்சிக்கு எந்த மதிப்பையும் கொண்டில்லை என்று எவ்வாறு காண்பித்தனர்?
16 பொந்தியு பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தபின், யூத தலைவர்கள் எந்த அளவிற்கு தேவாட்சிக்குரிய கீழ்ப்பட்டிருத்தலிலிருந்து தாங்கள் வழிவிலகிச் சென்றிருந்தனர் என்பதைக் காண்பித்தனர். பிலாத்து இயேசுவை விசாரித்து, அவர் குற்றமற்றவர் என்று முடிவு செய்தான். யூதரின் முன்னிலையில் இயேசுவை வெளியே கொண்டுவந்து, பிலாத்து சொன்னான்: “இதோ, உங்கள் ராஜா.” யூதர்கள் இயேசுவின் மரணத்திற்காக ஆரவாரம் செய்தபோது, பிலாத்து கேட்டான்: “உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா.” பிரதான ஆசாரியர்கள் பதிலளித்தனர்: “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை.” (யோவான் 19:14, 15) அவர்கள் ‘யெகோவாவின் நாமத்திலே வந்த’ இயேசுவை அல்ல, இராயனை ராஜாவாக ஏற்றுக்கொண்டனர்!—மத்தேயு 21:9.
17. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் ஒரு தேவாட்சிக்குரிய தேசமாக இருப்பது ஏன் முடிவுக்கு வந்தது?
17 இயேசுவை நிராகரிப்பதில், யூதர்கள் தேவாட்சியை நிராகரித்தனர்; ஏனென்றால், எதிர்கால தேவாட்சிக்குரிய ஏற்பாடுகளில் அவர்தாமே முக்கிய ஆளாக இருப்பார். இயேசுவே என்றென்றும் அரசாளப்போகும் தாவீதின் அரச பரம்பரைக்குரிய மகனாக இருந்தார். (ஏசாயா 9:6, 7; லூக்கா 1:33; 3:23, 31) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேல் கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட தேசமாக இருப்பது இவ்வாறு முடிவுக்கு வந்தது.—ரோமர் 9:31-33.
ஒரு புதிய தேவாட்சி
18. முதல் நூற்றாண்டில் என்ன புதிய தேவாட்சி பிறந்தது? விளக்கவும்.
18 எனினும், மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலைக் கடவுள் நிராகரித்ததுதானே பூமியில் தேவாட்சியின் முடிவாக இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின்மூலமாக யெகோவா ஒரு புதிய தேவாட்சியை ஸ்தாபித்தார். இது உண்மையில் ஒரு புதிய தேசமாகிய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையாக இருந்தது. (1 பேதுரு 2:9) அப்போஸ்தலன் பவுல் அதை ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்று அழைத்தார்; முடிவில் அதன் அங்கத்தினர் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வந்தனர். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 5:9, 10) தாங்கள் எந்த மனித அரசாங்கங்களின்கீழ் வாழ்ந்து வந்தார்களோ அவற்றிற்குக் கீழ்ப்பட்டு இருந்தாலும், இந்தப் புதிய தேவாட்சியின் அங்கத்தினர் உண்மையில் கடவுளால் ஆளப்பட்டனர். (1 பேதுரு 2:13, 14, 17) புதிய தேவாட்சி பிறந்தவுடன், இயேசு அவர்களுக்குக் கொடுத்திருந்த ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும்படி மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலின் ஆட்சியாளர்கள் சில சீஷர்களை வற்புறுத்த முயன்றனர். அதன் பிரதிபலிப்பு? “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (அப்போஸ்தலர் 5:29) உண்மையில் ஒரு தேவாட்சிக்குரிய நோக்குநிலை!
19. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபை என்ன அர்த்தத்தில் ஒரு தேவாட்சி என்று அழைக்கப்படலாம்?
19 என்றாலும், அந்தப் புதிய தேவாட்சி எவ்வாறு செயல்பட்டது? மிகப் பெரிய தேவாட்சியாளராகிய யெகோவா தேவனைப் பிரதிநிதித்துவம் செய்து ஓர் அரசர் இயேசு கிறிஸ்து இருந்தார். (கொலோசெயர் 1:13) அந்த அரசர் பரலோகத்தில் காணக்கூடாதவராக இருந்தபோதிலும், அவருடைய குடிமக்களுக்கு அவருடைய ஆட்சி நிஜமானதாக இருந்தது; அவருடைய வார்த்தைகள் அவர்களுடைய வாழ்க்கையை ஆட்கொண்டன. காணக்கூடிய கண்காணிப்பிற்காக, ஆவிக்குரிய தகுதிவாய்ந்த மூப்பர்கள் நியமிக்கப்பட்டனர். எருசலேமில் அப்படிப்பட்ட ஒரு தொகுதியான மனிதர் ஓர் ஆளும் குழுவாகச் செயல்பட்டனர். பவுல், தீமோத்தேயு, தீத்து போன்ற பயணம் செய்யும் மூப்பர்கள் அந்தக் குழுவைப் பிரதிநிதித்துவம் செய்வோராய் இருந்தனர். மேலும் ஒவ்வொரு சபையும் ஒரு மூப்பர் குழுவால் கவனிக்கப்பட்டது. (தீத்து 1:5) ஒரு கஷ்டமான பிரச்னை எழும்பியபோது, அந்த மூப்பர்கள் ஆளும் குழுவை அல்லது பவுலைப் போன்ற அதன் பிரதிநிதிகளில் ஒருவரிடம் ஆலோசனை கேட்டனர். (ஒப்பிடவும்: அப்போஸ்தலர் 15:2; 1 கொரிந்தியர் 7:1; 8:1; 12:1.) மேலும், தேவாட்சியை ஆதரிப்பதில் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் ஒரு பங்கை வகித்தனர். ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் வேதப்பூர்வ நியமங்களைப் பொருத்திப் பிரயோகிக்க யெகோவாவின் முன் பொறுப்புள்ளவராய் இருந்தார்.—ரோமர் 14:4, 12.
20. அப்போஸ்தலருக்குப் பின்னான காலங்களில் தேவாட்சியைப்பற்றி என்ன சொல்லப்படலாம்?
20 அப்போஸ்தலரின் மரணத்திற்குப்பின் விசுவாச துரோகம் தோன்றும் என்று பவுல் எச்சரித்தார்; சரியாக அதுவே சம்பவித்தது. (2 தெசலோனிக்கேயர் 2:3) காலம் கடந்து சென்றபோது, கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காகவும் பின்னர் கோடிக்கணக்காகவும் அதிகரித்தது. திருச்சபை படிநிலைசார்ந்த, பொது ஆட்சிமுறை சமயக்கிளைசார்ந்த, சபைசார்ந்தவை போன்ற வெவ்வேறு வகைகளான சர்ச் அரசாங்கத்தை அவர்கள் உருவாக்கினர். என்றாலும், இந்தச் சர்ச்சுகளின் நடத்தையோ நம்பிக்கைகளோ, எதுவும் யெகோவாவின் ஆட்சியைப் பிரதிபலிக்கவில்லை. அவை தேவாட்சிகள் அல்லவே!
21, 22. (அ) முடிவு காலத்தின்போது யெகோவா எப்படி தேவாட்சியைத் திரும்ப நிலைநாட்டினார்? (ஆ) அடுத்ததாக தேவாட்சியைப்பற்றிய என்ன கேள்விகள் பதிலளிக்கப்படும்?
21 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவின்போது, பொய் கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களைப் பிரிக்கவேண்டியதாய் இருந்தது. (மத்தேயு 13:37-43) தேவாட்சியின் சரித்திரத்தில் மைய வருடமான 1919-ல் இது சம்பவித்தது. அந்தச் சமயத்தில் ஏசாயா 66:8-ன் மகிமையான தீர்க்கதரிசனம் நிறைவேறியது: “இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு [ஜனம், NW] ஒருமிக்கப் பிறக்குமோ?” அந்தக் கேள்விகளுக்கான பதில், ஒரு முழக்கமான ஆம் என்பதே! 1919-ல் கிறிஸ்தவ சபை திரும்பவுமாக ஒரு தனிப்பட்ட ‘ஜனமாக’ இருந்தது. ஒரு தேவாட்சிக்குரிய ‘தேசம்’ ஒரே நாளில் பிறப்பதைப்போல் உண்மையில் பிறந்தது! முடிவு காலம் தொடர்ந்தபோது, இந்தப் புதிய ஜனத்தின் அமைப்பு, முதல் நூற்றாண்டில் இருந்ததற்கு எவ்வளவு நெருங்க கொண்டுவரப்பட முடியுமோ அந்தளவிற்குச் சரிசெய்யப்பட்டது. (ஏசாயா 60:17) ஆனால் அது எப்போதுமே ஒரு தேவாட்சியாக இருந்தது. நடத்தையிலும் நம்பிக்கையிலும், அது எப்போதும் வேத எழுத்துக்களிலுள்ள தெய்வீக ஏவுதலாலான சட்டங்களையும் நியமங்களையும் பிரதிபலித்தது. மேலும் அது எப்போதும் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட அரசராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருந்தது.—சங்கீதம் 45:17; 72:1, 2.
22 இந்தத் தேவாட்சியோடு நீங்கள் தொடர்பு கொண்டிருக்கிறீர்களா? அதில் ஓர் அதிகாரத்திற்குரிய ஸ்தானத்தைக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், தேவாட்சிக்குரிய விதத்தில் செயல்படுவது எதை அர்த்தப்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? என்ன கண்ணிகளைத் தவிர்க்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? கடைசி இரண்டு கேள்விகளும் பின்தொடரும் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ தேவாட்சி என்றால் என்ன?
◻ என்ன வழியில் இஸ்ரவேல் ஒரு தேவாட்சியாக இருந்தது?
◻ இஸ்ரவேல் ஒரு தேவாட்சி என்று அந்த அரசர்களுக்கு நினைவுபடுத்த யெகோவா என்ன ஏற்பாட்டைச் செய்தார்?
◻ கிறிஸ்தவ சபை என்ன வழியில் ஒரு தேவாட்சியாக இருந்தது, அது எப்படி ஒழுங்கமைக்கப்பட்டது?
◻ நம்முடைய காலத்தில் என்ன தேவராஜ்ய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது?
[பக்கம் 12-ன் படம்]
பொந்தியு பிலாத்துவுக்கு முன்பாக, யூத ஆட்சியாளர்கள் யெகோவாவால் தேவாட்சிக்குரிய விதத்தில் நியமிக்கப்பட்ட அரசரைவிட இராயனை ஏற்றுக்கொண்டனர்