தேவாட்சியோடு நெருங்கியிருங்கள்
“யெகோவாவே நமக்கு நீதிபதி, யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர், யெகோவாவே நமக்கு ராஜா.”—ஏசாயா 33:22, NW.
1. அரசாங்கத்தைப் பற்றி ஏன் பெரும்பாலான ஜனங்கள் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர்?
அரசாங்கம் என்றாலே அனைவருக்கும் அதைப் பற்றி அக்கறை இருக்கிறது. நல்ல அரசாங்கம் ஆண்டால் சமாதானமும் செழுமையும் கொழிக்கும். பைபிள் இவ்விதம் சொல்கிறது: ‘நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலை நிறுத்துகிறார்.’ (நீதிமொழிகள் 29:4) மறுபட்சத்தில், கெட்ட அரசாங்கத்திலோ அநியாயமும், ஊழலும், அடக்குமுறையுமே தழைத்தோங்கும். “பொல்லாதவன் ஆட்சி செலுத்தினால் ஜனங்கள் பெருமூச்சு விடுவார்கள்.” (நீதிமொழிகள் 29:2, NW) மனிதர்கள் பலவிதமான அரசாங்கங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்டனர் என்பதை சரித்திரம் காட்டுகிறது. ஆட்சியாளர்களின் அடக்குமுறை மனிதர்களை பலதருணங்களில் ‘பெருமூச்சு விட’ வைத்திருக்கிறது. (பிரசங்கி 8:9) இனி எந்த அரசாங்கமாவது தன்னுடைய ஜனங்களுக்கு நிலையான திருப்தியை தருமா?
2. பூர்வ இஸ்ரவேலின் அரசாங்கத்தை “தேவாட்சி” என்று குறிப்பிடுவது ஏன் பொருத்தமாக இருக்கும்?
2 சரித்திர ஆசிரியனாகிய ஜொசிபஸ் ஒப்பற்ற ஓர் அரசாங்கத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்: “சிலர், மேம்பட்ட அரசியல் சக்தியை மன்னராட்சியிடமும், வேறுசிலர் குழு ஆட்சியிடமும், மற்றவர்கள் மக்களாட்சியிடமும் ஒப்படைத்துவிட்டனர். ஆனால் எங்களுக்கு சட்டத்தை வழங்கியவரோ [மோசே] இப்படிப்பட்ட எந்த அரசியல் அம்சத்தாலும் வசீகரிக்கப்படவில்லை. அவர் கொடுத்த சட்டத்தை விளக்குவதற்கு வரம்புக்கு மீறிய ஒரு வார்த்தையை உபயோகிக்க அனுமதிக்கப்பட்டால், அதை ‘தேவாட்சி’ என்று சொல்லலாம். இதன் மூலம் எல்லா பேரரசுரிமையையும் அதிகாரத்தையும் கடவுளுக்கு கொடுத்துவிட்டார்.” (அகைன்ஸ்ட் எபியன், II, 164-5) கன்சைஸ் ஆக்ஸ்ஃபர்டு டிக்ஷ்னரியின்படி, தேவாட்சியென்றால் “தேவனால் ஆளப்படும் ஓர் அரசாங்கம்.” இந்த வார்த்தை பைபிளில் காணப்படுவதில்லை; ஆனால் இது பூர்வ இஸ்ரவேலின் அரசாங்கத்தை தெள்ளத்தெளிவாக விவரிக்கிறது. இஸ்ரவேலருக்கு ஒரு காணக்கூடிய ராஜா இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவர்களுடைய உண்மையான ராஜா யெகோவா தேவனே. இஸ்ரவேலின் தீர்க்கதரிசி ஏசாயா இவ்விதம் சொன்னார்: “யெகோவாவே நமக்கு நீதிபதி, யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர், யெகோவாவே நமக்கு ராஜா.”—ஏசாயா 33:22, NW.
உண்மையான தேவாட்சியென்றால் என்ன?
3, 4. (அ) உண்மையான தேவாட்சி என்றால் என்ன? (ஆ) விரைவில் மனிதகுலத்திற்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தை தேவாட்சி அளிக்கும்?
3 ஜொசிபஸ் இந்த வார்த்தையை புதிதாக புனைந்து உருவாக்கியபின் அநேக சமுதாயங்கள் தங்களை தேவாட்சிகள் என அழைத்துக் கொண்டன. அவற்றில் சில சகிப்புத்தன்மையற்றவையாக, மதவெறி பிடித்தவையாக, கொடூரமான முறையில் அடக்கியாள்பவையாக இருந்தன. அவை உண்மையான தேவாட்சிகளா? ஜொசிபஸ் உபயோகித்த அந்த வார்த்தையின் அர்த்தத்தில் பார்த்தால் இல்லை. இதில் பிரச்சினை என்னவென்றால் ‘தேவாட்சி’ என்ற வார்த்தையின் பொருள் விரிவாக்கப்பட்டு விட்டது. த உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா அதை இவ்விதம் விவரிக்கிறது “மதகுருவால் அல்லது மதகுருக்களால் ஆளப்படும் ஒரு அரசாங்கம்; அதில் சமுதாய, மத சம்பந்தமான காரியங்களில் குருக்களுக்கு அதிகாரம் இருக்கிறது.” உண்மையான தேவாட்சியோ குருக்களால் ஆளப்படும் அரசாங்கம் அல்ல. அது உண்மையில் கடவுளாட்சி, பிரபஞ்சத்தின் படைப்பாளராகிய யெகோவாவின் அரசாங்கம்.
4 அந்த நாள் விரைவில் வரும். அப்போது இந்த முழு உலகமும் தேவாட்சியின் கீழிருக்கும். அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! ‘கடவுள்தாமே [மனிதரோடு] இருப்பார்; அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது; துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன.’ (வெளிப்படுத்துதல் 21:3, 4, பொது மொழிபெயர்ப்பு) இப்படிப்பட்ட சந்தோஷத்தை அபூரண மனிதரால் ஆளப்படும் எந்த குருக்களாட்சியும் கொடுக்க முடியாது. தேவனுடைய அரசாங்கத்தால் மட்டுமே கொடுக்க முடியும். ஆகவே தேவாட்சியை அரசியல் அமைப்பின் வாயிலாக அமைப்பதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் முயற்சிப்பதில்லை. ஆகவே தேவாட்சியை பொருத்தவரை, கடவுள் நிர்ணயித்திருக்கும் நேரத்தில், அவருடைய வழியில் அதை அவர் ஸ்தாபிப்பதற்காக அவர்கள் பொறுமையோடு காத்திருக்கிறார்கள்.—தானியேல் 2:44.
5. இன்று உண்மையான தேவாட்சி எங்கே செயல்படுகிறது, அதைப் பற்றி என்ன கேள்விகள் எழும்புகின்றன?
5 இத்தகைய நேரத்திலும்கூட உண்மையான தேவாட்சி செயல்படுகிறது. எங்கே? யாரெல்லாம் தேவனுடைய ஆட்சிக்கு தாங்களாகவே கீழ்ப்படிந்து, தேவனுடைய சித்தத்தை செய்வதற்கு மற்றவர்களோடு ஒத்துழைக்கிறார்களோ, அவர்கள் மத்தியில் செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட உண்மையுள்ள ஆட்கள் ஓர் உலகளாவிய ஆவிக்குரிய “ஜனமாக” ஒரு ஆவிக்குரிய “தேசத்தில்” சேர்க்கப்பட்டு வருகின்றனர். அவர்கள்தான் “தேவனுடைய இஸ்ரவேலரின்” மீதியானோரும் அதோடு 55 லட்சத்திற்கும் அதிகமான அவர்களுடைய தோழர்களும். (ஏசாயா 66:8; கலாத்தியர் 6:16) “நித்தியத்தின் ராஜாவாகிய” யெகோவா தேவனால் அரியணையில் அமர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவிற்கு இவர்கள் கீழ்ப்படிகின்றனர். (1 தீமோத்தேயு 1:17, NW; வெளிப்படுத்துதல் 11:15) இந்த அமைப்பு எந்த விதத்தில் தேவாட்சிக்கு உட்பட்டது என்று சொல்லலாம்? இதன் அங்கத்தினர் இவ்வுலகின் அரசாங்கங்களை எவ்விதம் நோக்குகின்றனர்? இந்த அமைப்பில் அதிகாரத்திலுள்ள ஆட்கள் தங்களுடைய ஆவிக்குரிய சமூகத்தினரிடம் தேவாட்சிக்குரிய நியமத்தை எவ்வாறு காட்டுகின்றனர்?
ஒரு தேவாட்சிக்குரிய அமைப்பு
6. எவ்விதம் காணக்கூடிய ஒரு மனித அமைப்பை கடவுள் ஆட்சி செய்ய முடியும்?
6 காணக்கூடாத பரலோகத்தில் வாசம் செய்யும் யெகோவா எவ்வாறு ஒரு மனித அமைப்பை ஆள முடியும்? (சங்கீதம் 103:19) எப்படியென்றால் அதின் உறுப்பினர்கள் ஏவப்பட்டு எழுதப்பட்ட கீழ்க்காணும் ஆலோசனையை தங்களுடைய வாழ்க்கையில் பொருத்துகின்றனர்: “உன் சொந்த அறிவாற்றலில் சார்ந்து நிற்காமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவின் மேல் நம்பிக்கையாக இரு.” (நீதிமொழிகள் 2:6; 3:5, NW) அவர்கள் “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை” நிறைவேற்றுவதன் மூலம் கடவுள் தங்களை ஆட்சி செய்ய அனுமதிக்கின்றனர், மேலும், ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிள் நியமங்களை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பொருத்துகின்றனர். (கலாத்தியர் 6:2; 1 கொரிந்தியர் 9:21; 2 தீமோத்தேயு 3:16; காண்க: மத்தேயு 5:22, 28, 39; 6:24, 33; 7:12, 21.) இதைச் செய்வதற்கு அவர்கள் நல்ல பைபிள் மாணவர்களாக இருக்க வேண்டும். (சங்கீதம் 1:1-3) அவர்கள் பண்டைய பெரோயா பட்டணத்தாரைப்போல “பரந்த மனப்பான்மை” உள்ளவர்களாக இருக்கின்றனர்; அதாவது, மனிதர்களை பின்பற்றுவதற்கு பதில் தாங்கள் கற்கும் காரியங்கள் இவ்விதம் இருக்கின்றனவா என்று எப்போதும் பைபிளில் ஒத்துப் பார்க்கின்றனர். (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 17:10, 11, பொ.மொ.; சங்கீதம் 119:33-36) சங்கீதக்காரனைப்போல் இவ்விதம் ஜெபம் செய்கின்றனர்: “நல்லதையும் விவேகத்தையும் அறிவையும் எனக்கு கற்றுக்கொடுப்பீராக, ஏனென்றால் உமது கட்டளைகள்மீது என் விசுவாசத்தை வளர்த்து என்னை பயிற்றுவித்திருக்கிறேன்.”—சங்கீதம் 119:66, NW.
7. தேவாட்சியில் அதிகாரம் எவ்விதம் ஒரே சீராக செலுத்தப்படுகிறது?
7 எந்த அமைப்பாயிருந்தாலும்சரி, யாராவது சிலர் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதோ வழிநடத்துவதோ அவசியம். இதற்கு யெகோவாவின் சாட்சிகளும் விதிவிலக்கல்ல, அவர்கள் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு விவரித்த அதிகார அமைப்பு முறையை பின்பற்றுகின்றனர்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) இதற்கு இசைவாக, தகுதிபெற்ற ஆண்களே சபைகளில் மூப்பர்களாக சேவை செய்கின்றனர். ‘ஒவ்வொரு புருஷனுக்கும் தலையாக’ இருக்கும் கிறிஸ்து பரலோகத்தில் இருக்கிறார். ஆனாலும் அபிஷேகம் செய்யப்பட்ட அவருடைய சகோதரர்களில் “மீதியானோர்” பூமியில் இருக்கின்றனர்; இவர்கள் அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கையுடையவர்கள். (வெளிப்படுத்துதல் 12:17; 20:6) இவர்கள்தான் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார். இந்த “அடிமையின்” மேற்பார்வையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு கீழ்ப்படிகின்றனர், அதன் மூலம் இயேசுவின் தலையாகிய யெகோவாவுக்கு கீழ்ப்படிதலைக் காட்டுகின்றனர். (மத்தேயு 24:45-47, NW; 25:40) இவ்வாறு தேவாட்சி ஒரே சீராக இயங்குகிறது. “கடவுள் குழப்பத்தை ஏற்படுத்துபவரல்ல; அமைதியை ஏற்படுத்துபவர்.”—1 கொரிந்தியர் 14:33, பொ.மொ.
8. தேவாட்சியின் நியமத்தை எவ்வாறு கிறிஸ்தவ மூப்பர்கள் பின்பற்றுகின்றனர்?
8 கிறிஸ்தவ மூப்பர்கள் தேவாட்சியின் நியமத்தை ஆதரிக்கின்றனர்; ஏனெனில் தங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரத்திற்கு யெகோவாவிடம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றனர். (எபிரெயர் 13:17) அதேபோல் தீர்மானங்களை எடுக்கையில் தங்களுடைய ஞானத்தையல்ல கடவுளுடைய ஞானத்தையே சார்ந்திருக்கின்றனர். இவ்விதத்தில் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்தான் இதுவரை வாழ்ந்த மனிதர்களிலேயே ஞானவான். (மத்தேயு 12:42) ஆனாலும் அவர் யூதர்களிடம் பின்வருமாறு கூறினார்: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்.” (யோவான் 5:19, பொ.மொ.) ராஜாவாகிய தாவீதுக்கு இருந்த அதே மனநிலைதான் மூப்பர்களுக்கும் இருக்கிறது. தேவாட்சியில் அவருக்கு பெரிய அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் தன்னுடைய வழியை அல்ல யெகோவாவின் வழியையே பின்பற்ற விரும்பினார். அவர் பின்வருமாறு ஜெபித்தார்: “யெகோவாவே உமது வழியை எனக்கு கற்பித்தருளும்; நேர்மையான வழியில் என்னை நடத்தும்.”—சங்கீதம் 27:11, NW.
9. வித்தியாசமான எதிர்கால நம்பிக்கைகள், வித்தியாசமான ஊழிய பொறுப்புகள் ஆகியவற்றைக் குறித்து ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் சமநிலையான நோக்கு என்ன?
9 தகுதிபெற்ற சில ஆண்கள் மட்டுமே சபையில் அதிகாரத்தை பிரயோகிக்கின்றனர்; கிறிஸ்தவர்களில் சிலருக்கு மட்டுமே பரலோக நம்பிக்கை இருக்கிறது, மற்றவர்களுக்கோ பூமிக்குரிய நம்பிக்கைதான். இவையெல்லாம் சரிதானா என சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். (சங்கீதம் 37:29; பிலிப்பியர் 3:20) ஆனால் இந்த ஏற்பாடுகளெல்லாம் தேவனுடைய வார்த்தையில் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் போற்றுகின்றனர். அவை யாவும் தேவாட்சிக்கு உட்பட்டவை. இவற்றைக் குறித்து சந்தேகத்துடன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றாலே, அவை பைபிள் நியமங்களை ஏற்றுக்கொள்ளாதவராலேயே சாதாரணமாக எழுப்பப்படுகின்றன. இதைத்தவிர, இரட்சிப்பைப் பொருத்தவரை ஆண்களும் பெண்களும் யெகோவாவின் பார்வையில் சமமே என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர். (கலாத்தியர் 3:28) உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு, சர்வலோகத்தையும் சிருஷ்டித்தவரை வணங்குவதே எல்லாவற்றையும்விட பெரிய சிறப்புரிமை, ஆகவே எப்படிப்பட்ட பாகத்தை யெகோவா அவர்களுக்கு அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதில் சந்தோஷமடைகின்றனர். (சங்கீதம் 31:23; 84:10; 1 கொரிந்தியர் 12:12, 13, 18) பரலோகத்திலோ அல்லது பூமியிலோ நித்திய ஜீவன் என்பதே உண்மையில் ஒரு அருமையான நம்பிக்கை.
10. (அ) எப்படிப்பட்ட நல்ல மனநிலையை யோனத்தான் காட்டினார்? (ஆ) இன்று யோனத்தானைப் போன்ற மனநிலையை கிறிஸ்தவர்கள் எவ்வாறு காட்டுகின்றனர்?
10 இதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் சவுல் அரசனின் தேவபக்தியுள்ள குமாரனாகிய யோனத்தானைப்போல் இருக்கின்றனர். ஒருவேளை யோனத்தான் ஒரு தலைசிறந்த அரசனாக ஆகியிருக்கலாம். ஆனால் சவுலின் உண்மையற்ற போக்கின் காரணமாக யெகோவா தாவீதை இஸ்ரவேலின் இரண்டாம் அரசராக தேர்ந்தெடுத்தார். அதற்காக யோனத்தான் மனக்கசப்படைந்தாரா? இல்லை. அதற்கு மாறாக அவர் தாவீதின் உயிர்த் தோழனானார், இவ்வளவு ஏன், அவர் தாவீதை சவுலிடமிருந்து காப்பாற்றவும் செய்தார். (1 சாமுவேல் 18:1; 20:1-42) இதைப்போலவே பரலோக நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்து பூமிக்குரிய நம்பிக்கையுள்ளவர்களுக்கு பொறாமை இல்லை. மேலும் சபையில் தேவாட்சிக்குரிய அதிகாரமுடையவர்களைப் பார்த்து உண்மை கிறிஸ்தவர்கள் பொறாமை அடைவது கிடையாது. அதற்கு பதில் அவர்கள் அப்படிப்பட்டவர்களை ‘அன்பில் மிகவும் அதிகமாய் மதிக்கின்றனர்.’ ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் நிமித்தம் அவர்கள் செய்யும் கடின வேலையை உயர்வாய் மதிக்கின்றனர்.—1 தெசலோனிக்கேயர் 5:12, 13, தி.மொ.
அரசாங்கங்களைக் குறித்து தேவாட்சிக்குரிய நோக்குநிலை
11. தேவாட்சிக்கு தங்களை கீழ்ப்படுத்தும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு அரசியல் ஆட்சியாளர்களை நோக்குகின்றனர்?
11 யெகோவாவின் சாட்சிகள் தேவாட்சியில் அல்லது கடவுளின் ஆட்சியில் இருப்பதால், அவர்கள் அரசியல் ஆட்சியாளர்களை எவ்வாறு நோக்குகின்றனர்? தம்முடைய சீஷர்கள் “உலகைச் சார்ந்தவர்கள் அல்ல” என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 17:16, பொ.மொ.) ஆனாலும் தாங்கள் “ராயனுக்கு” கடன்பட்டவர்கள் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் ‘ராயனுடையதை ராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்த வேண்டும்’ என்பதை இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 22:21) மனித அரசாங்கங்கள் ‘தேவனிடமிருந்து சம்பந்தப்பட்ட [அதிகாரத்தை பெற்ற] நிலையில் நிற்கின்றன’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. எல்லா அதிகாரங்களுக்கும் மூலகாரணரான யெகோவா அரசாங்கங்களை ஆட்சி செய்ய அனுமதித்திருக்கிறார்; தங்களுடைய அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவை நன்மையளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவ்வாறு செய்தால் அது ‘தேவ ஊழியக்காரனாக’ இருக்கும். ‘தங்களுடைய மனசாட்சியின் நிமித்தம்’ கிறிஸ்தவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு கீழ்ப்படிகிறார்கள். (ரோமர் 13:1-7, NW) ஒருவேளை அரசாங்கம் தேவனுடைய சட்டத்திற்கு விரோதமான ஒன்றைச் செய்யும்படி கேட்டால் கிறிஸ்தவர்கள் ‘மனுஷருக்கு கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிவது’ அவசியம் என்பதை உணருகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.—அப்போஸ்தலர் 5:29.
12. கிறிஸ்தவர்களை அதிகாரங்கள் துன்புறுத்தும்போது யாருடைய உதாரணத்தை அவர்கள் பின்பற்றுகின்றனர்?
12 ஒருவேளை அரசாங்க அதிகாரத்தில் உள்ளவர்கள் துன்புறுத்தினால் கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்? கடும் துன்புறுத்தலை சகித்துநின்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களின் உதாரணத்தை அப்போது பின்பற்றுவார்கள். (அப்போஸ்தலர் 8:1; 13:50) இப்படிப்பட்ட விசுவாசத்தின் சோதனைகள் எதிர்பாராதவை அல்ல; ஏனெனில் அவை வரும் என்பதாக இயேசு எச்சரித்திருந்தார். (மத்தேயு 5:10-12; மாற்கு 4:17) இருப்பினும் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தியவர்களை எதிர்த்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை; அப்படிப்பட்ட பிரச்சினைகளால் அவர்களது விசுவாசம் பலம் இழக்கவுமில்லை. மாறாக, அவர்கள் இயேசுவின் மாதிரியை பின்பற்றினர்: “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பேதுரு 2:21-23) ஆம், சாத்தான் தூண்டிவிட்ட செயல்களை கிறிஸ்தவ நியமங்கள் வெற்றி கொண்டன.—ரோமர் 12:21.
13. துன்புறுத்துதலுக்கும், தங்களுக்கு விரோதமாக எழுப்பப்படும் பொய் பிரச்சாரத்திற்கும் யெகோவாவின் சாட்சிகள் எவ்விதம் பிரதிபலிக்கின்றனர்?
13 இன்றும் இது உண்மையாக இருக்கிறது. இயேசு முன்னுரைத்த விதமாகவே, இந்த நூற்றாண்டில் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்தியிருக்கின்றனர். (மத்தேயு 24:9, 13) சில நாடுகளில் இந்த நேர்மையான கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களைப் பற்றி பொய்களையும் தவறான கருத்துக்களையும் பரப்பினார்கள். சாட்சிகளைப்பற்றி இப்படிப்பட்ட “பொய் அறிக்கை” இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நன்னடத்தையின் மூலம் தேவனுடைய ஊழியக்காரர்களாக தங்களை காட்டுகின்றனர். (2 கொரிந்தியர் 6:4, 8) சந்தர்ப்பம் கிடைத்தால், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கு தங்களுடைய வழக்குகளை அதிகாரிகளிடத்திலும் நீதிமன்றங்களிலும் சமர்ப்பிக்கின்றனர். நற்செய்தியை மக்கள் முன் நிலைநாட்டுவதற்காக அவர்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். (பிலிப்பியர் 1:7) சட்டப்படி தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்தபின் அவர்கள் காரியங்களை யெகோவாவின் கரங்களில் ஒப்படைத்து விடுகின்றனர். (சங்கீதம் 5:8-12; நீதிமொழிகள் 20:22) தேவை ஏற்பட்டால், பூர்வ கிறிஸ்தவர்களைப்போல நீதியின் நிமித்தம் துன்பப்படுவதற்கு அவர்கள் பயப்படுவது இல்லை.—1 பேதுரு 3:14-17; 4:12-14, 16.
கடவுளின் மகிமையை முதலாவதாக தேடுங்கள்
14, 15. (அ) தேவாட்சியின் நியமத்தை ஆதரிப்பவர்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் இருப்பதென்ன? (ஆ) உயர்ந்த அதிகாரத்தில் இருந்த சாலொமோன் எந்த தருணத்தில் மனத்தாழ்மையைக் காட்டினார்?
14 தேவனுடைய பெயர் மகிமையடைய வேண்டும் என்பதே இயேசு தம் சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தபோது முதலாவதாக சொன்ன விஷயம். (மத்தேயு 6:9) அதற்கு இசைவாக, தேவாட்சியில் வாழ்பவர்கள் முதலாவதாக தேவனுடைய மகிமையைத் தேடுகிறார்கள், தங்களுடைய மகிமையை அல்ல. (சங்கீதம் 29:1, 2) முதல் நூற்றாண்டில் சிலர், ‘மனிதர்கள் அளிக்கும் புகழை அதிகமாக விரும்பினார்கள்’ என்று பைபிள் அறிவிக்கிறது; அவர்கள் ஜனங்களால் புகழப்பட விரும்பினார்கள். இதனால் சிலர் இயேசுவை பின்பற்ற மறுத்தனர், இது அவர்களுக்கு இடறும் கல்லாக இருந்தது. (யோவான் 12:42, 43, NW) தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட யெகோவாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஒருவருக்கு மனத்தாழ்மை தேவை.
15 இந்த விஷயத்தில் சாலொமோன் சிறந்த மனநிலையைக் காட்டினார். பிரமாண்டமான ஆலயத்தை கட்டி முடித்த பிறகு அவர் சொன்ன வார்த்தைகளை நேபுகாத்நேச்சார் தான் கட்டிய மாளிகைகளைக் குறித்து சொன்ன வார்த்தைகளோடு ஒப்பிட்டு பாருங்கள். பெரும் அகந்தையுடன் நேபுகாத்நேச்சார் பின்வருமாறு பெருமையடித்தார்: “என் வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியின் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்!” (தானியேல் 4:30, பொ.மொ) இதற்கு முற்றிலும் மாறாக, சாலொமோன் தன்னுடைய சாதனையை பணிவுடன் பின்வருமாறு குறிப்பிட்டார்: “கடவுள் உண்மையில் மனிதரோடு பூமியில் வாழ்வது கூடியகாரியமா? வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதிருக்க நான் கட்டிய இந்த வீடு எம்மாத்திரம்?” (2 நாளாகமம் 6:14, 15, 18, NW; சங்கீதம் 127:1) சாலொமோன் தன்னை உயர்த்தவில்லை. தான் யெகோவாவின் ஒரு சாதாரண பிரதிநிதி என்பதை அறிந்தவராக பின்வருமாறு எழுதினார்: “இறுமாப்பு வந்துவிட்டதா? அப்படியென்றால் அவமானமும் வரும்; ஆனால் தன்னடக்கம் உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.”—நீதிமொழிகள் 11:2, NW.
16. தங்களைத் தாங்களே மகிமைப்படுத்தாமல் இருப்பதால் மூப்பர்கள் எவ்வாறு உண்மையான ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்?
16 அதுபோலவே கிறிஸ்தவ மூப்பர்களும் தங்களை அல்ல யெகோவாவையே மேன்மைபடுத்துகின்றனர். அவர்கள் பேதுருவின் பின்வரும் புத்திமதியைப் பின்பற்றுகின்றனர்: “யாராவது ஒருவர் ஊழியம் செய்தால், தேவன் அளிக்கும் ஆற்றலை சார்ந்து ஊழியம் செய்யட்டும்; இதன் மூலம் எல்லாவற்றிலும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் மகிமையடைவார்.” (1 பேதுரு 4:11, NW) அப்போஸ்தலனாகிய பவுல் “கண்காணிக்கும் பொறுப்பை” முதலிடத்தை வகிக்கிற பதவியாக குறிப்பிடவில்லை. மாறாக அது “மேன்மையானதொரு பணி” என்று குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 3:1, பொ.மொ.) மூப்பர்கள் சேவை செய்வதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்; ஆட்சி செய்வதற்கல்ல. அவர்கள் தேவனுடைய மந்தைக்கு கற்றுக் கொடுப்பவர்களாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28; யாக்கோபு 3:1) மனத்தாழ்மையுள்ள, தியாக குணமுள்ள மூப்பர்கள் சபைக்கு உண்மையான ஆசீர்வாதமாக இருக்கின்றனர். (1 பேதுரு 5:2, 3) “இப்படிப்பட்டவர்களை மதிப்பாய் எண்ணுங்கள்.” மேலும் இந்தக் “கடைசிநாட்களில்” தேவாட்சியை உறுதியாக கடைப்பிடிப்பதற்கென தகுதிவாய்ந்த இத்தனையநேக மூப்பர்களை தந்ததற்காக யெகோவா தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.—பிலிப்பியர் 2:29, தி.மொ.; 2 தீமோத்தேயு 3:1.
“தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்”
17. தேவாட்சிக்கு கீழ்ப்பட்டவர்கள் எந்த முறைகளில் கடவுளை பின்பற்றுகின்றனர்?
17 அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு ஊக்குவித்தார்: ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.’ (எபேசியர் 5:1) அபூரண மனிதராக, ஒருவரால் எந்த அளவிற்கு தேவனைப் பின்பற்ற முடியுமோ அந்த அளவிற்கு பின்பற்ற தேவாட்சிக்கு கீழ்ப்பட்டவர்கள் முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, யெகோவாவைப் பற்றி பைபிள் இவ்விதம் கூறுகிறது: “அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!” (உபாகமம் [இணைச் சட்டம்] 32:3, 4, பொ.மொ.) இந்த வழியில் தேவனை பின்பற்றுவதற்காக கிறிஸ்தவர்கள் உண்மைத்தன்மை, நேர்மை, சமநிலையுள்ள நீதி ஆகியவற்றை நாடுகிறார்கள். (மீகா 6:8; 1 தெசலோனிக்கேயர் 3:6; 1 யோவான் 3:7) உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒழுக்கக்கேடு, பொருளாசை, பேராசை போன்ற அநேக காரியங்களை அவர்கள் தவிர்க்கின்றனர். (எபேசியர் 5:5) யெகோவாவின் ஊழியர்கள் மனிதருடைய மாதிரியை அல்ல, தேவனுடைய மாதிரியைப் பின்பற்றுவதால் அவருடைய அமைப்பு தேவாட்சிக்குரியதாக, சுத்தமுள்ளதாக, ஆரோக்கியமாக இருக்கிறது.
18. தேவனுடைய முதன்மையான குணம் என்ன, கிறிஸ்தவர்கள் இந்தக் குணத்தை எவ்வாறு காட்டுகின்றனர்?
18 யெகோவா தேவனுடைய முதன்மையான குணம் அன்பே. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதாக அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். (1 யோவான் 4:8) தேவாட்சியென்றால் தேவனால் ஆளப்படும் ஆட்சி; அப்படியென்றால் அது அன்பால் ஆளப்படுவதை சுட்டிக்காட்டுகிறது. இயேசு பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) இந்தக் கொடிய கடைசி நாட்களில் தேவாட்சியின் அமைப்பு தலைசிறந்த அன்பை காண்பித்திருக்கிறது. ஆப்பிரிக்காவில் நடந்த இனப்படுகொலையின்போது யெகோவாவின் சாட்சிகள் எந்தத் தொகுதியினர் என்று பார்க்காமல் எல்லாரிடமும் அன்பை காட்டினர். முன்னாள் யுகோஸ்லாவியாவில் நடந்த யுத்தத்தின்போது எல்லா இடத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளும் ஒருவருக்கொருவர் உதவினர்; ஆனால் மற்ற மதத்தொகுதியினரோ இனத்தை பூண்டோடு அழிக்கும் (Ethnic cleansing) செயலில் இறங்கினர். தனிப்பட்ட முறையில் யெகோவாவின் சாட்சிகள் பவுலின் பின்வரும் புத்திமதியைப் பின்பற்ற விரும்புகின்றனர்: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:31, 32.
19. தாங்களாகவே தேவாட்சிக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு எப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் இப்போதும் எதிர்காலத்திலும் இருக்கும்?
19 தேவாட்சிக்குக் கீழ்ப்படிகிறவர்கள் பெறும் ஆசீர்வாதங்களுக்கு அளவே இல்லை. அவர்களுக்கு கடவுளிடத்திலும் உடன் கிறிஸ்தவர்களிடத்திலும் சமாதானம் உண்டு. (எபிரெயர் 12:14; யாக்கோபு 3:17) அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உண்டு. (பிரசங்கி 12:13) அவர்களுக்கு ஆவிக்குரிய பாதுகாப்பும் எதிர்காலத்திற்கான உறுதியான நம்பிக்கையும் இருக்கிறது. (சங்கீதம் 59:9) மனிதவர்க்கம் முழுவதும் தேவாட்சியில் இருந்தால் என்னே அருமையான நிலைமை இருக்கும் என்பதை இப்பொழுதே சுவைக்கின்றனர். எதிர்காலத்தில் நிலைமைகள் இவ்விதம் மாறும் என்பதாக பைபிள் சொல்கிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) அது எப்பேர்ப்பட்ட மகத்தான காலம்! அப்படிப்பட்ட எதிர்கால பரதீஸில் நாமும் வாழ்வதற்காக இப்போதே தேவாட்சியோடு நெருங்கியிருப்போமாக.
உங்களால் விளக்க முடியுமா?
◻ உண்மையான தேவாட்சி என்றால் என்ன, அதை எங்கே காணலாம்?
◻ மனிதர்கள் எவ்வாறு தங்களை தேவாட்சிக்கு கீழ்ப்படுத்துகின்றனர்?
◻ எந்த வழிகளில் தேவாட்சியில் உள்ள அனைவரும் தங்களுடைய மகிமையைத் தேடாமல் தேவனுடைய மகிமையை தேடுகின்றனர்?
◻ தேவாட்சியை ஆதரிப்பவர்களிடம் உள்ள சில நல்ல குணங்கள் யாவை?
[பக்கம் 17-ன் படம்]
சுய மகிமையைவிட தேவனுடைய மகிமைக்கு சாலொமோன் முக்கியத்துவம் அளித்தார்