ஒரு மேம்பட்ட உலகம்—வெறும் ஒரு கனவா?
ஈரானிய தீர்க்கதரிசியாகிய ஸோரவாஸ்டரால் பிரசங்கிக்கப்பட்டபடி, பார்சி சமயத்தைப் பின்பற்றும் ஒருவராக நீங்கள் இருந்திருந்தால், பூமி தன்னுடைய ஆரம்ப அழகிற்குத் திரும்பும் நாளுக்காக காத்திருந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கில் நீங்கள் வாழ்ந்திருந்தால், வனப்புமிக்க வளம்பொருந்திய தீவுகளை அடைவதை அல்லது பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஹிஸியட் என்ற கவிஞரால் வருணிக்கப்பட்ட பொற்காலம் திரும்பிவருதலைப் பார்ப்பதைக் குறித்து ஒருவேளை கனவு கண்டிருந்திருப்பீர்கள். தென் அமெரிக்காவிலுள்ள குவாரானி இந்தியன் தீமை இல்லாத தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கலாம். நம்முடைய நாளில் வாழ்ந்துகொண்டிருப்பதால், ஏதாவது ஓர் அரசியல் கருத்துப்போக்கின் மூலமாக அல்லது நவீன நாளைய சூழல் உணர்வின் காரணமாக உலகம் முன்னேறும் என்று ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
பொற்காலம், வளம்பொருந்திய தீவுகள், தீமை இல்லாத தேசம்—இவை ஒரேவிதமான ஏக்கத்தை, ஒரு மேம்பட்ட உலகிற்கான எதிர்பார்ப்பை வருணிக்க பயன்படுத்தப்படும் அநேக பெயர்களில் உட்பட்டவை.
இந்த உலகம், நம்முடைய உலகம், நிச்சயமாக ஒரு மிகச் சிறந்த இடம் அல்ல. அதிகரித்துக்கொண்டே செல்லும் கொடூர குற்றச்செயல், முன்னொருபோதும் நிகழாத வன்முறையுடைய உடன்பிறப்புக் கொலை செய்யும் போர்கள், இன ஒழிப்பு, மற்றவர்களின் துன்பங்களைக் குறித்து ஏனோதானோவென்று இருத்தல், வறுமை மற்றும் பசி, வேலையின்மை மற்றும் ஒருமைப்பாட்டுணர்ச்சி குறைவு, சூழியல் பிரச்னைகள், லட்சக்கணக்கானோரைப் பாதிக்கும் குணப்படுத்த முடியாத நோய்கள்—தற்கால கஷ்டங்களின் பட்டியல் முடிவு பெறாததாகத் தோன்றுகிறது. தற்போது போரிடப்பட்டுவரும் போர்களைக்குறித்துச் சிந்திப்பவராய், இத்தாலிய இதழாசிரியர் ஒருவர் சொன்னார்: “பகைமை நம்முடைய நாளில் மிகவும் பலமான உணர்ச்சியாக இல்லையா என்பது இயல்பாகவே எழும்புகிற கேள்வியாக இருக்கிறது.” நிலைமையை எண்ணிப்பார்க்கையில், வித்தியாசமான ஒன்றை, மேம்பட்ட ஒன்றை அடைய விரும்புவது நடைமுறையானதாக இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட ஒரு பேரவா வெறுமனே ஒரு கற்பனை உலகிற்கான (Utopia) ஏக்கமாக, ஒருபோதும் நனவாகாத ஒரு கனவாக இருக்கிறதா? சாத்தியமான எல்லா உலகங்களின் மிகச் சிறந்ததில் நாம் வாழ்கிறோமா?
இவை புதிய அக்கறைகள் அல்ல. இசைவு, நியாயம், செழுமை, அன்பு ஆகியவை ஆட்கொள்ளும் ஓர் உலகைக் குறித்து மனிதர் நூற்றாண்டுகளாக கனவுகண்டுவந்திருக்கின்றனர். காலப்போக்கில், மிகச் சிறந்த அரசாங்கங்கள், மேம்பட்ட உலகங்கள் பற்றிய கருத்துக்களை எண்ணற்ற தத்துவ அறிஞர்கள் விளக்கினார்கள். ஆனால், வருந்தத்தக்கவிதத்தில், அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துவதைக்குறித்து அவர்களால் ஒருபோதும் விவரிக்க முடியவில்லை.
ஒரு மேம்பட்ட சமுதாயத்திற்கான நூற்றாண்டுகள் சென்ற இந்தக் கனவுகள், கற்பனை உலகங்கள், மற்றும் மனித பேரவாக்களின் பட்டியல் நமக்கு எதையாவது கற்பிக்க முடியுமா?
[பக்கம் 3-ன் படம்]
சாத்தியமான எல்லா உலகங்களிலும் இது மிகச் சிறந்ததாக இருக்கிறதா?